Sunday, April 18, 2021
முகப்பு செய்தி ஒரு வரிச் செய்திகள் - 12/11/2012

ஒரு வரிச் செய்திகள் – 12/11/2012

-

செய்தி: மத்தியில் ஆளும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு, வெளியிலிருந்து ஆதரவு தரும், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர், மாயாவதிக்கு, பிரதமர் மன்மோகன் சிங் நேற்று விருந்தளித்தார். இதன்மூலம், வரும், 22ம் தேதி கூடவுள்ள, பார்லிமென்டின் குளிர்கால கூட்டத்தொடரை, எந்த விதமான பிரச்னையும் இல்லாமல், சுமுகமாக நடத்தி செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

நீதி: ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கான ஆதரவைப் பெற ஒரு விருந்து மட்டும் போதும் என்பதை நீங்கள் நம்புகிறீர்களா? விருந்தின் பின்னே மறைந்துள்ள ‘மருந்தின்’ மதிப்பு மிக அதிகமில்லையா?

______

செய்தி: லண்டனில் இருந்து ஞாயிற்றுக்கிழமை சென்னை திரும்பிய மு.க.ஸ்டாலினை தி.மு.க. தலைவர் கருணாநிதி விமான நிலையத்துக்கு நேரடியாக சென்று வரவேற்றார். விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கில் திரண்டிருந்த திமுக தொண்டர்கள், ஸ்டாலினை உற்சாகமாக வரவேற்றனர்.

நீதி: காகிதத்தின் மதிப்பு கூட இல்லாத டெசோ தீர்மானங்கள் கொண்டு சேர்க்கப்பட்டதை “கங்கை வென்றான் கடாரம் கொண்டான்” ரேஞ்சுக்கு கொண்டாடுவதை தி.மு.கவைத்தவிர யார் செய்ய முடியும்?

______

செய்தி: அரசு மேல்நிலைப் பள்ளிகளில் புதிதாக 1,591 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை தோற்றுவிக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

நீதி: ஒரே கையெழுத்தில் ஐந்து இலட்சம் அரசு ஊழியரை வீட்டுக்கு அனுப்பிய சாதனையோடு ஒப்பிடும் போது இதெல்லாம் தூசு!

______

செய்தி: மத்திய கணக்கு தணிக்கை அலுவலகமான, சி.ஏ.ஜி.,யை, மூன்று உறுப்பினர்கள் அடங்கிய அமைப்பாக மாற்றுவது குறித்து, மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது,” என, செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியின் போது, சொன்ன தகவலை, பிரதமர் அலுவலக இணை அமைச்சர், நாராயணசாமி நேற்று திடீரென மறுத்தார்.

நீதி: சிஏஜி மேல் நாறவாய் நாராயணசாமிக்கே இவ்வளவு வெறுப்பு இருக்குமென்றால் மன்மோகன் சிங்கிற்கு எவ்வளவு கொலை வெறி இருக்கும்?

______

செய்தி: இலங்கைப் பிரச்னைக்குத் தீர்வு காண ஐ.நா. மூலம் பொதுவாக்கெடுப்பு நடத்துவதற்கு மத்திய அரசு உறுதுணையாக இருந்தால்தான் திமுகவும் மத்திய அரசுக்கு உறுதுணையாக இருக்கும் என்றார் கருணாநிதி.

நீதி: இதன்மூலம் தி.மு.க மத்திய அரசை மிரட்டுகிறது என்று எண்ணி விடாதீர்கள். அடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்கு என்னென்ன கண்டிஷன்கள் இருக்கும் என்ற டிரைலர்தான் இந்த உறுதுணை, உற்ற துணை, வழித்துணை, இறுதி வரை துணை வார்த்தை விளையாட்டு!

_______

செய்தி: “நிலம்’ புயலில் சிக்கி சென்னை மெரினா அருகே தரை தட்டிய எம்.டி.பிரதிபா காவேரி என்ற எண்ணெய்க் கப்பல் 12 நாள்களுக்குப் பிறகு வெற்றிகரமாக மீட்கப்பட்டது.

நீதி: கப்பலை மீட்டது முதலாளிக்கு இனிய சேதி. ஆனால் முதலாளிகள், அதிகார வர்க்கத்தின் அலட்சியத்தினால் உயிரிழந்த அந்த கப்பலைச் சேர்ந்த ஆறு ஊழியர்களின் உயிர் திரும்புமா?

______

செய்தி: நிதின் கட்காரிக்கு எதிரான பிரசாரத்தில் குஜராத் முதல்-மந்திரி நரேந்திர மோடி செயல்படுகிறார் என்று ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் மூத்த தலைவர் வைத்யா குற்றம் சாட்டியுள்ளார்.

நீதி: அவ்வளவுதானா, நாங்கள் என்னவோ ஐ.எஸ்.ஐ சதி என்று நினைத்தோம்!

______

செய்தி: “வெங்கடேச பெருமாள் கோவில் அமைந்துள்ள, திருப்பதி திருமலை மீது, விமானங்கள் பறக்க தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை, பல ஆண்டுகளாக உள்ளது. அந்த கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்,” என, பா.ஜ., மூத்த தலைவர், வெங்கையா நாயுடு வலியுறுத்தினார்.

நீதி: இந்தத் தடை விதித்தால் அம்பானி, டாடா முதலான முதலாளிகள் எப்படி பெருமாளை சேவித்து கருப்புப் பணத்தை காணிக்கையாக்க முடியும் மிஸ்டர் நாயுடு?

______

செய்தி: நவம்பர் 26ஆம் தேதி அரசியல் கட்சியைத் தொடங்கிய பிறகு, “ஊழலுக்கு எதிரான இந்தியா’ என்ற பெயரைப் பயன்படுத்த மாட்டோம் என கேஜரிவால் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

நீதி: அப்படியா? இந்தப் பெயருக்கான பேடன் ரைட் சண்டையில் அண்ணா ஹசாரே, அரவிந்த் கேஜ்ரிவால் கும்பல்களுக்கிடையே ஒரு சமாதான ஒப்பந்தம் ஏற்பட்டிருக்கிறதா? ஏற்பட்டிருந்தால் வந்தே மாதரம்!

______

செய்தி: அமெரிக்காவில் கடந்த 6-ந்தேதி ஜனாதிபதிக்கான தேர்தல் நடந்தது.. அப்போது நடந்த கென்சாஸ் மாநில சட்டசபைக்கான தேர்தலில் மகாத்மா காந்தியின் பெரிய பேரன் சாந்தி காந்தி குடியரசு கட்சி சார்பாக போட்டியிட்டு வெற்றிபெற்றார். இதன் மூலம் அவர் கென்சாஸ் மாநிலத்தின் 52-வது மாவட்ட சட்டசபைக்கு தேர்வானார்.

நீதி: காந்தி ‘வாங்கிய’ சுதந்திரத்தின் விலை மதிப்பு இப்போதாவது புரிகிறதா? இதற்குத்தானே ஆசைப்பட்டீர்கள் மிஸ்டர் சாந்தி காந்தி?

______

செய்தி: வரும் 2014ஆம் ஆண்டுக்குள் வலுவான லோக்பால் மசோதாவை நிறைவேற்றாவிட்டால் மீண்டும் உண்ணாவிரதம் இருப்பேன் என்று சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

நீதி: கழிப்பறையில் புத்தகம் வாசிக்கும் பழக்கமுடையோர் கூட அந்த நேரத்தில் அண்ணாவைச் சீண்டுவதில்லை என்றால் என்ன செய்ய?

_______

செய்தி: தனிக்கட்சி ஆரம்பித்து இருக்கும் முன்னாள் முதல்வர் எடியூரப்பாவை சமாதானப்படுத்த, கடைசியாக, பா.ஜ., மூத்த தலைவர் அருண் ஜெட்லி எடுத்த முயற்சி, தோல்வியில் முடிந்தது.

நீதி: எடியூரப்பா போன்ற கட்டுப்பாடான ஸ்வயம் சேவக்குகளை அப்படி ஆசை காட்டி வீழ்த்த முடியுமா என்ன?

 1. வினவுவே!!! படையெடுத்தான்,இடம்பிடித்தான்,வென்றான்,கொண்டான்,தனதுஆட்சியின் கீழ் கொணர்ந்தான்,மக்களுக்கு நல் வாழ்வு அளித்தான் என்பது அன்றைய அரசர்கள் காலம். இன்று ச்சீனி மாவுக்கு கதைவசனமெழுதிய நாடகக்கூத்தாடிகளின் நாடகம் போடும்,படம் காட்டும் காலம் கண்னிருந்தும் பார்க்கமுடியாமல்.செவியிருந்தும் கேக்கமுடியாமல் உள்ளதமிழ் நாட்டில் நீங்கள் தொடர்ந்து எழுதுங்கள்.இவன் வழியில் இப்பொழுது மாநில,மாவட்ட,வட்ட,குட்ட…வரைக்கும் குடும்பங்கள் தான் அடிவருடல்தான்?சரியான த்ரோவ்டெ…ஒட்டம் தான் இவர்கள் வீழும் நாள்? என்னாள்? கட்சி சனநாயகத்தை காப்பாற்றாத இவன் தன் பிள்ளைக்காக எவ்வளவு பெரிய கொலையும் செய்துள்ளான். எம்.எல்.ஏ யில்தோற்றது போல எம்.பியிலும் தோற்க்கட்டும்.

 2. //செய்தி: லண்டனில் இருந்து ஞாயிற்றுக்கிழமை சென்னை திரும்பிய மு.க.ஸ்டாலினை தி.மு.க. தலைவர் கருணாநிதி விமான நிலையத்துக்கு நேரடியாக சென்று வரவேற்றார். விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கில் திரண்டிருந்த திமுக தொண்டர்கள், ஸ்டாலினை உற்சாகமாக வரவேற்றனர்.

  நீதி: காகிதத்தின் மதிப்பு கூட இல்லாத டெசோ தீர்மானங்கள் கொண்டு சேர்க்கப்பட்டதை “கங்கை வென்றான் கடாரம் கொண்டான்” ரேஞ்சுக்கு கொண்டாடுவதை தி.மு.கவைத்தவிர யார் செய்ய முடியும்?
  //
  மனசாட்சி இல்லாத மனிதர்கள். இந்த வார ஜூவி செய்தி இதோ.

  //”விமான நிலையத்துக்கு கருணாநிதியே வர ஒப்புக்​கொண்டார். கருணாநிதியின் இந்த ஆர்வத்துக்கு காரணம் ஒன்று சொல்லப்படுகிறது. ஐ.நா-வுக்கு டெசோ மாநாட்டுத் தீர்மானத்தைக் கொடுக்க ஸ்டாலினை அனுப்பிய கருணாநிதி, அதன் நகலை கனிமொழியிடம் கொடுத்து பிரதமரிடம் கொடுக்கச் சொன்னார். நாளிதழ்களில் இந்தச் செய்திகள் அடுத்தடுத்த நாட்கள் வெளியாகின. அமெரிக்காவில் இருந்த ஸ்டாலினுக்கு, இந்தச் செய்தி அதிகக் கொந்தளிப்பை ஏற்படுத்தியதாம். ‘என்னை இங்கே அனுப்பிவிட்டு, டெல்லிக்கு கனிமொழியை அனுப்பினால் தேவை இல்லாத சர்ச்சை உண்டாகும் அல்லவா?’ என்று போனில் கொதிப்பைக் காட்டி​னார். ஸ்டாலினின் கோபத்தை உணர்ந்துகொண்ட கருணாநிதி, அவரைச் சமாதானப்படுத்தும் வகையில் விமான நிலையம் செல்வதற்கு முடிவு எடுத்தாராம். அன்றைய தினம் அறிவாலயத்தில் பிரமாண்டமான பாராட்டுக் கூட்டம் நடத்துவதற்கும் கருணாநிதி அதன் பிறகுதான் முடிவு எடுத்தாராம்.”
  //

 3. TN has lot of Vaithericchal Vaithiyalingams.They will not do anything and they will not allow others also to do anything.In the same JV,there were reports about non-participation of Vaiko and Nedumaran in the Tamil Conference at London and suspected reasons for the same.

 4. //ய்தி: வரும் 2014ஆம் ஆண்டுக்குள் வலுவான லோக்பால் மசோதாவை நிறைவேற்றாவிட்டால் மீண்டும் உண்ணாவிரதம் இருப்பேன் என்று சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

  நீதி: கழிப்பறையில் புத்தகம் வாசிக்கும் பழக்கமுடையோர் கூட அந்த நேரத்தில் அண்ணாவைச் சீண்டுவதில்லை என்றால் என்ன செய்ய?//

  உங்களையும் கூட யாரும் சீந்துவதில்லை என்பதை அநீதியாகக் கருதுகிறீர்களா? மற்ற நேரங்களில் அண்ணாவை சீந்துவோர் அளவுக்குக் கூட உங்களைச் சீந்த ஆளில்லை என்பதை அறிவீரா?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க