Thursday, May 13, 2021
முகப்பு கட்சிகள் அ.தி.மு.க பன்னாட்டு நிறுவனங்களுக்கு தடையற்ற மின்சாரத்தை வெட்டு !

பன்னாட்டு நிறுவனங்களுக்கு தடையற்ற மின்சாரத்தை வெட்டு !

-

 உள்நாட்டு மக்களின் தேவைகளான உணவு, உடை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை உற்பத்தி செய்யும் தேசிய சிறு தொழில் நிறுவனங்களை 14, 15 மணி நேரம் இருளில் மூழ்கடித்துள்ள பாசிச ஜெயா அரசு நாட்டின் செல்வங்களை எல்லாம் தட்டிக்கேட்பாரின்றி சூறையாடும் பன்னாட்டு கம்பெனிகளுக்கு ஒரு நொடி கூட தடையில்லாத மின்சாரத்தை வழங்கி வருகிறது.

ம.க.இ.க உள்ளிட்ட நக்சல்பாரி புரட்சிகர அமைப்புகள் தமிழகம் முழுவதும் மின்வெட்டை கண்டித்தும் அதற்கான காரணங்களை விளக்கியும் தொடர் பிரச்சாரம் செய்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக கடந்த மாதம் 10 தேதி தருமபுரியில் ‘விவசாயிகள் விடுதலை முன்னணி’ பன்னாட்டு கம்பெனிகளுக்கு வழங்குகின்ற தடையற்ற மின்சாரத்தை இரத்து செய் ! என்கிற முழக்கத்துடன் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.

ஆர்ப்பாட்டத்திற்கு வி.வி.மு வட்டக்குழு உறுப்பினர் தோழர் சிவா தலைமை தாங்கினார். தோழர் கோபிநாத்தும், முத்துக்குமாரும் கண்டன உரையாற்றினர்.  தோழர்கள் தமது உரையில்.

“உணவு, உடை உற்பத்தி விவசாயம், கைத்தறி, விசைத்தறி சிறு தொழில் நிறுவனங்களுக்கு 14 மணி நேரம் மின்வெட்டை அமல்படுத்தும் அரசு நோக்கியா, சாம்சங் போன்ற செல்போன் கம்பெனிகளுக்கும், ஹீண்டாய், போர்ட் போன்ற கார் கம்பெனிகளுக்கும் தடையற்ற மின்சாரத்தை வாரி வழங்குகிறது. தமிழகத்தில் நிலவும் மின்வெட்டிற்கு காரணம் இது தான்.”         

“அதே போல சென்னையிலுள்ள பிரம்மாண்டமான ஆடம்பர பங்களாக்கள், ஷாப்பிங் மால்களுக்கு வழங்கப்படும் மின்சாரத்தின் அளவையும் குறைத்து வழங்க வேண்டும்.  மின் இழப்புக்கு காரணமான கம்பி வடங்களை முறையாக பராமரிக்க வேண்டும்.  மேலும் சென்ற ஆட்சியில் மின் உற்பத்திக்காக திட்டமிடப்பட்டிருந்த ஏழு மின்னுற்பத்தி நிலையங்களை செயல்படுத்தாமல் முடக்கி வைத்திருப்பதும் மின்பற்றாக்குறைக்கு காரணமாக இருக்கிறது”

என்று மின்வெட்டிற்கான காரணங்களை தமது உரையின் மூலம் தோழர்கள் எளிமையாக விளக்கிக் கூறினர்.

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தருகின்ற
1200 மெகாவாட் மின்சாரத்தை நிறுத்து ! 

சென்னையில் ஆடம்பர பங்களாக்கள்,
மெகா மால்களுக்கு தருகின்ற மின்சாரத்தின்
அளவை குறை !

காற்றாலை, சூரிய ஒளி உற்பத்தி நிலையங்களை
ஊக்குவித்து அதிகரிப்பு செய் !

கூடங்குளம் அணு உலையை மூடு !

என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ‘விவசாயிகள் விடுதலை முன்னணி’ தோழர்கள் முழக்கமிடடனர். ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டனர்.

எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் உண்மையில் நடப்பது பன்னாட்டு கம்பெனிகளின் ஆட்சி தான். தி.மு.க அ.தி.மு.க கும்பலிடமோ, பா.ஜ.க காங்கிரஸ் கும்பலிடமோ இந்த கொள்கையில் மட்டும் சண்டையோ சச்சரவோ வருவதில்லை. நாட்டை கூறுகட்டி விற்பதில் அனைத்து ஓட்டுப்பொறுக்கிகளும் ஒத்த கருத்துடன் ஒன்று கலந்திருப்பதால் தான் மக்களை இருளில் மூழ்கடித்துவிட்டு பன்னாட்டு கம்பெனிகளுக்கு முன்னூற்று அறுபத்து ஐந்து நாட்களும் நொடிபொழுது கூட தடையற்ற மின்சாரத்தை வழங்கும் தமிழக அரசை எதிர்த்து எந்த ஓட்டுக்கட்சியும் வாயைக் கூட திறக்கவில்லை. இவர்கள் அனைவரும் வெவ்வேறு அணிகள் அல்ல, ஒரே அணி. ஓட்டுப்பொறுக்கிகள் இடையே நடக்கும் போட்டிகள் அனைத்தும் பொறுக்கித்தின்பதற்கான போட்டிகள் தான். இத்தகைய பிழைப்புவாதிகளை புறக்கணித்து மக்கள் ஊர் ஊராக வீதிகளில் இறங்கும் போது தான் ஒளி கிடைக்கும்.

_____________________________________________________________________

–    தகவல்: விவசாயிகள் விடுதலை முன்னணி, தரும்புரி.

______________________________________________________________

 1. நாள் முழுதும் தடையில்லா மின்சாரம் கிடைக்க வேண்டுமென்றால் பின்பற்ற வேண்டியவை,

  1) நீங்கள் அமெரிக்க அடிமைகளை (உ.ம்: மன்மோகன், சிதம்பரம் மற்றும் அலுவாலியா கும்பல்) மிரட்டத் தெரிந்தவர்களாக இருக்க வேண்டும்..

  2) சுவிஸ் வங்கியில் அல்லது அதற்க்கு ஈடான ஓரிடத்தில், கணக்கில் காட்டாத பணத்தை இருப்பு வைத்திருக்க வேண்டும்..

  3) இந்த நாட்டின் சட்ட திட்டங்களுக்கு சவால் விடுபவர்கலாக இருக்க வேண்டும்..

  4) வங்கியில் காசு / லோன் வாங்கியிருந்தால், திருப்பிச் செலுத்தக் கூடாது..

  5) வரி ஏய்ப்பு செய்வதில் கை தேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்..

  6) ஏலைகளைப் பிளிபவர்களாக இருக்க வேண்டும்..

  7) நாட்டின் வளங்களைக் கொள்ளையடிக்கத் தெரிந்திருக்க வேண்டும்..

  இது போல் இன்னும் பல…………

  இதுவெல்லாம் காரணமாக இருக்கலாமென்று நினைக்கிறேன்..

Leave a Reply to rizwan பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க