Friday, August 12, 2022
முகப்பு போலி ஜனநாயகம் அதிகார வர்க்கம் மண்ணை கவ்விய பிரஸ்பார்ம் முதலாளி!

மண்ணை கவ்விய பிரஸ்பார்ம் முதலாளி!

-

புரட்சிகர தொழிற்சங்கமான ’புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி’ தமிழக தொழிலாளர்கள் மத்தியில் மிக வேகமாக வளர்ந்து வரும் நக்சல்பாரி தொழிற்சங்கமாகும். தொழிலாளர்களின் இந்த சங்கத்தை கண்டு முதலாளி வர்க்கம் நடுங்கிச் சாகிறது. எனவே தான் டைம்ஸ் ஆப் இந்தியா போன்ற கார்ப்பரேட் பத்திரிக்கைகளின் மூலம் அவதூறு செய்திகளை வெளியிட்டு தொழிலாளர்களை பீதியூட்டுகிறது. ஆனாலும் தொழிலாளிகளை அணி திரட்டுவதிலும், முதலாளிகளுக்கு பாடம் புகட்டுவதிலும் தொடர்ந்து முன்னேறி வருகிறது பு.ஜ.தொ.மு. அத்தகைய வெற்றிச் செய்தி ஒன்று இங்கே தரப்படுகிறது.

பிரஸ்பார்ம் முதலாளி

press-form-industriesசென்னை அம்பத்தூரில் இயங்கி வருகிறது ஃபிரஸ்பார்ம் நிறுவனம். இந்நிறுவனம் சிறியளவிலான ஹைட்ராலிக் இயந்திரங்களை (Hydraulic machines) தயாரிக்கிறது. இவற்றை இந்தியாவிற்கு உள்ளேயும் சப்ளை செய்கிறது. வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறது. வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் போது வெறுமனே இயந்திரங்களை மட்டும் ஏற்றுமதி செய்யாமல் அவற்றை பொருத்தி அமைப்பதற்காக (installation) தொழில்நுட்ப அறிவும், அனுபவமும் கொண்ட தொழிலாளர்களையும் பாஸ்போர்ட் விசா எடுத்துக் கொடுத்து அனுப்பி வைக்கிறது. சட்டப்படி இவ்வாறு செய்வது தவறு. ஒரு தொழிலாளியை ஆலைக்குள் மட்டும் தான் வேலை வாங்க வேண்டும். இயந்திரங்களை நிறுவுவது போன்ற பணிகளுக்காகவே இருக்கும் பொறியாளர்களை தான் இது போன்ற வேலைகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும். ஆனால் பொறியாளர்களை அனுப்பினால் கூடுதல் செலவாகும் என்பதால் ஆயிரம், இர‌ண்டாயிரத்தோடு செலவை முடிக்க தொழிலாளிகளை அனுப்பி வைக்கிறது நிர்வாகம். தொழிலாளிகளும் கூடுதல் வருமானத்திற்காக இந்த வேலையை மறுக்காமல் செய்கிறார்கள்.

இந்நிறுவனத்திலுள்ள மொத்த தொழிலாளிகளின் எண்ணிக்கை நூறு. இவர்களில் வெறும் முப்பத்தி எட்டு பேர் மட்டும் தான் நிரந்தரத் தொழிலாளிகள். இத்தொழிலாளர்களுக்கு நிறுவனம் வழங்கும் அதிகபட்ச மாத ஊதியமே எட்டாயிரம் ரூபாய் தான். ஆண்டுக்கு இருபது கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டும் இந்நிறுவனம் தொழிலாளிகளின் தொழில்நுட்ப அறிவை பயன்படுத்திக் கொண்டு அவர்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து சம்பாதிக்கும் நிறுவனம் மாத சம்பளமாக ஒரு தொழிலாளிக்கு தருவது வெறும் எட்டாயிரம் ரூபாய் ! நிரந்தரத் தொழிலாளிக்கே எட்டாயிரம் ரூபாய் தான் என்றால் தற்காலிகத் தொழிலாளிகளுக்கு என்ன கிடைக்கும் ? அதற்கும் கீழே எவ்வளவு இருக்கும் ?

புரட்சிகர தொழிற்சங்கத்தின் தேவை

தமது நியாயமான சம்பள உயர்வு கோரிக்கைகளை நிர்வாகத்திடம் முன்வைத்து அவை கண்டுகொள்ளப்படாமல் புறக்கணிக்கப்பட்ட நிலையில் தான் தங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்ற அனைவரும் சங்கமாக இணைய வேண்டியதன் அவசியத்தை உணர்கிறார்கள் தொழிலாளிகள். உடனே பு.ஜ.தொ.மு வை தொடர்புகொண்ட தொழிலாளர்கள் தங்களுடைய பிரச்சினைகளை கூறி தங்களுக்கு சங்கம் அமைக்க உதவுமாறு கோருகிறார்கள். உடனடியாக அதற்கான வேலைகள்  துவங்கி முப்பத்தி எட்டு நிரந்தரத் தொழிலாளர்களுடன் ஃபிரஸ்பார்ம் தொழிலாளர்களின் சங்கம் 2008-ம் ஆண்டு துவங்கப்பட்டது.

தொழிலாளர்களின் சங்கத்தை நிர்வாகம் ஏற்கவில்லை, அங்கீகரிக்கவில்லை என்பதுடன் ஆரம்பம் முதலே சங்கத்தை உடைக்க பல்வேறு முயற்சிகளையும் மேற்கொண்டது. தொழிலாளர்களின் முதல் கோரிக்கை ஊதிய உயர்வு. ஆயிரத்து ஐநூறு முதல் மூவாயிரம் ரூபாய் வரை ஊதிய உயர்வு கேட்டனர். இந்நிறுவனத்தின் முதலாளி சற்று வித்தியாசமானவர். சினிமாவில் வரும் முதலாளிகளை போல என்று கூட சொல்லலாம். ஊதிய உயர்வு கேட்ட தொழிலாளிகளிடம் முதலாளி கூறினார். “இப்போ தான் பத்து கோடி ரூபாய்க்கு ஒரு சின்ன குடிசை வாங்கியிருக்கேன் அதனால் சம்பளத்தை எல்லாம் இப்ப உயர்த்த முடியாது” (ஃபிரஸ்பார்ம் முதலாளி கூறிய அதே வார்த்தையை அப்படியே குறிப்பிடுகிறோம்)

சங்கம் அமைப்பது தொழிலாளர்களின் உரிமை, அதை அங்கீகரிப்பது தான் ஜனநாயகம். ஆனால் முதலாளிகள் ஜனநாயகவாதிகளா ? முதலாளித்துவ சர்வாதிகாரம் என்றால் என்ன என்பதை அறிந்துகொள்ள விரும்புபவர்கள் இது போன்ற நிறுவனங்களில் சங்கம் கட்ட முயற்சித்த தொழிலாளர்களை சந்தித்து பேசிப் பார்க்கலாம்.

தொழிலாளர் உதவி ஆணையரின் சமரசம்

பு.ஜ.தொ.மு சங்கத்தையும் அதன் நிர்வாகிகளையும் எப்படியாவது ஒழித்துக்கட்டிவிட துடித்தது நிர்வாகம். சங்கத்திற்கும் நிர்வாகத்திற்குமிடையிலான முரண்பாடு ஒவ்வொரு நாளும் அதிகரித்துக்கொண்டே வந்த  நிலையில் மேற்கொண்டு இப்பிரச்சினையை நிர்வாகத்தோடு பேசி தீர்க்க முடியாது என்கிற நிலையில் சங்கம் ‘தொழிலாளர் உதவி ஆணையர் – சமரசம் 2’ என்கிற அதிகாரியை (ACL – Assistant commissioner of labour – consultation 2)  அணுகி தொழிற்தாவா எழுப்புகின்றனர்.

தொ.உ.ஆ.ச 2 என்கிற இந்த அதிகாரியின் வேலை என்ன என்றால் நிர்வாகத்திற்கும் சங்கத்திற்கும், அதாவது தொழிலாளர்களுக்கும் முதலாளிகளுக்கும் இடையில் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டால் அவற்றை பேசி தீர்த்து வைப்பது தான் இவருடைய வேலை. இவருடைய பெயர் சமரச அதிகாரி.  அந்த வகையில் இவர் முதலாளிகளுக்கு ஆதரவாக தொழிலாளர்களை சமரசம் செய்பவர்.

தொழிற்தாவா எழுப்பிய பிறகு முதல் முறை பேச்சு வார்த்தைக்கு வரும் நிர்வாகத் தரப்பு அடுத்த ஒன்பது முறைக்கு வராது.  சட்டத்தின் மீதும், ஜனநாயகத்தின் மீதும், பேச்சுவார்த்தையின் மீதும் நம்பிக்கை வைத்திருப்பதாக கூறிக்கொள்ளும் முதலாளிகளின் தரப்பு தொடர்ச்சியாக பதினைந்து இருபது முறை கூட பேச்சுவார்த்தைக்கு வராமல் இழுத்தடித்திருக்கிறார்கள்.  ஆனால் தொழிலாளர்கள் அன்று பேச்சுவார்த்தை இருக்கிறது என்பதால் விடுமுறை எடுத்துக்கொண்டு தொ.உ.ஆணையர் அலுவலகத்தில் வந்து உட்கார்ந்து கொண்டிருப்பார்கள்.

முதலாளி எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் வராமல் இருக்கலாம் அதனால் அவனுக்கு ஒன்றும் ஆகப்போவதில்லை. ஆனால் ஒரு தொழிலாளிக்கு ஓர் ஆண்டுக்கு வெறும் எட்டு நாட்கள் மட்டுமே இலவச விடுமுறை நாட்களாக கிடைக்கின்றன. இதை அறிந்துள்ள முதலாளி வேண்டுமென்றே தான் தொழிலாளியை இவ்வாறு இழுத்தடிக்கிறான். தன்னை எதிர்த்து நிற்கும் தொழிலாளியை வெறுத்து ஓட வைக்கவே, சோர்வுற்று அவநம்பிக்கைக்குள் விழ வைப்பதற்காகவே முதலாளி இவ்வாறு செய்கிறான்.

ஆண்டு விடுமுறை நாட்களான எட்டு நாள் விடுமுறை முடிந்த பிறகு தொழிலாளி அடுத்ததாக தன்னுடைய அன்றாட கூலியை விட்டுக்கொடுத்து தான் முதலாளியோடு பேச்சு வார்த்தைக்கு வரவேண்டும். அப்போதும் கூட அவர்கள் தரப்பில் சொன்னபடி வந்துவிடுவார்கள் என்றெல்லாம் உத்திரவாதமாக சொல்ல முடியாது. தொழிலாளியை இவ்வாறெல்லாம் இழுத்தடிப்பதன் மூலம் அவருடைய உறுதியை குலைத்து சோர்வடைய வைப்பதன் மூலமும் மற்றொரு பக்கம் சோரம் போகக்கூடியவர்களை விலைபேசி பணிய வைப்பதன் மூலமும் தன்னை எதிர்த்து போராடுவதையும், தொழிற்சங்கம் கட்டுவதையும் முறியத்துவிடலாம் என்று நினைக்கிறார்கள் முதலாளிகள். ஆனால் பு.ஜ.தொ.மு விடம் இந்த வேலைகள் எல்லாம் செல்லுபடியாகவில்லை. அவர்களை பேச்சுவார்த்தைக்கு இழுத்தார்கள் தொழிலாளிகள். பேச்சு வார்த்தையின் இறுதியில் என்னால் பத்து பைசா கூட தர முடியாது  என்று கூறிவிட்டது நிர்வாகம். தொழிலாளிகளும் அதை ஏற்க மறுத்து விடாப்பிடியாக நின்றனர்.

உள்விசாரணை

அடுத்தக்கட்ட தாக்குதலாக சங்க நிர்வாகிகளான சசிக்குமார், பாபு, உதயக்குமார் உள்ளிட்ட ஐந்து தொழிலாளிகள் மீதும் சில பொய் குற்றச்சாட்டுகளை சுமத்தி அவர்களுக்கு  குற்ற அறிக்கை  (Charge sheet)  அனுப்பி உள் விசாரணைக்கு அழைக்கிறது நிர்வாகம். அமைதியாக இருந்த மற்ற தொழிலாளிகளை போராட தூண்டியதாகவும், அப்பாவி தொழிலாளிகளை கூட சங்க நிர்வாகிகள் தான் நிர்வாகத்திற்கெதிராக உணர்வூட்டி கலகம் செய்யவும், வன்முறையை தூண்டவும் காரணமாக இருந்தார்கள் என்பது தான் குற்றச்சாட்டு. இதற்காக தான் இந்த உள்விசாரணை.

இந்த விசாரணைக்கு ஒரு வயதான வழக்குரைஞர் தலைமை தாங்கினார். இதற்கான ஏற்பாடுகளை நிர்வாகம் எவ்வளவு ஜனநாயகப்பூர்வமாக செய்திருந்தது என்கிற கேலிக்கூத்தை கேட்டால் தான் விசாரணை எப்படி நடந்தது என்பதை அறிந்து கொள்ளாமலே அதன் லட்சணத்தை நீங்கள் அறிந்துகொள்ள முடியும்.  நடு நிலையாக விசாரிக்க வேண்டிய விசாரணை அதிகாரி என்பவர் நிர்வாகத்தால் நியமிக்கப்பட்டவர்! நிர்வாகத்தால் விலைபேசப்பட்டு தனக்காக மட்டுமே வாயை திறக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தவர்.  எனினும் விசாரணையின் போது அவர் ஒரு முறை இரு முறை அல்ல பல முறை தொழிலாளிகளின் முன்பாகவே அம்பலப்பட்டுப் போனார்.

பாட்டாளி வர்க்க போராளி

நிர்வாகத்திற்கு சங்கத்தின் தலைவர் தோழர் சசிக்குமார் தான் மிகப்பெரிய சிம்மசொப்பனமாக திகழ்ந்தார். தொழிலாளிகளை விசாரிக்க வந்த அதிகாரியை  பு.ஜ.தொ.மு தொழிலாளிகள், குறிப்பாக தோழர் சசிக்குமார் தான் திறமையான முறையில் குறுக்கு விசாரணை செய்து இந்த விசாரணை அமைப்பே மோசடியானது என்பதையும், அதற்கு விசாரணை அதிகாரியாக இருக்கும் கில்பர்ட் என்கிற இவர் நிர்வாகத்திற்கு ஆதாரவானவர் என்பதையும் உள்விசாரணையிலேயே அம்பலமாக்கினார்.

விசாரணை அதிகாரியையே அம்பலமாக்கிய பிறகும் அந்த விசாரணை அமைப்பிற்குள் நடக்கும் விசாரணை மிக மோசமானதாக தான் இருக்கும், அது தங்களை குறி வைத்து தாக்குவதாகவும், பழிவாங்குவதாகவும் தான் இருக்கும் என்பதை அறிந்த தொழிலாளிகள் உடனடியாக தங்களை பாதுகாக்கப்பட்ட தொழிலாளியாக அறிவிக்கக்கோரி தொ.உ.ஆணையரை அனுகினர்.

தொழிற்தகராறு சட்டம் 1947 தொழிலாளிகளின் பாதுகாப்பிற்கு ஒரு சிறிய வாய்ப்பை அளிக்கிறது. அந்த சட்டத்தின் பிரிவு 33ன் கீழ் சங்கம் துவங்கினால் பாதிக்கப்படுவோம், நிர்வாகத்தால் தண்டிக்கப்படுவோம், பழி தீர்க்கப்படுவோம் என்று தொழிலாளிகள் அஞ்சினால், ஆலைக்குள் அத்தகைய நிலைமை இருந்தால் தங்களை உடனடியாக பாதுகாக்கப்பட்ட தொழிலாளிகளாக (protected Workman) அறிவிக்க வேண்டும் என்று தொ.உ.ஆணையரிடம் (ACL) முறையிடலாம்.  அவர் அதை ஏற்றுக்கொண்டு இரு தரப்பிடமும் கருத்துகேட்டு சோதித்தறிந்து அத்தகைய நிலைமை இருந்தால் அந்த ஆலையின் தொழிலாளர்களை பாதுகாக்கப்பட்ட தொழிலாளிகளாக அறிவிப்பார்.

அந்த வகையில் சங்கத்தின் ஐந்து நிர்வாகிகளையும் பாதுகாக்கப்பட்ட தொழிலாளிகளாக அறிவிக்கக்கோரி தொ.உ.ஆணையரிடம் பு.ஜ.தொ.மு முறையிட்டது. அவரும் அவ்வாறே அறிவித்துவிட்டார். ஆக இப்போது இரண்டு வழக்குகள் நடக்கிறன ஒன்று சம்பள உயர்வுக்கான தொழிற்தாவா, இரண்டு பாதுகாக்கப்பட்ட தொழிலாளிகளாக அறிவிக்கப்பட்ட தொழிற்தாவா. இதற்கிடையில் நிர்வாகத்தின் உள்விசாரணையும் நடந்துகொண்டிருக்கிறது.

அதிரடியான வேலை நீக்கம்

நிர்வாகம் நடத்தும் உள்விசாரணையில் ஒரு தொழிலாளி குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் (!) அவர் மீது எத்தகைய நடவடிக்கையையும் நிர்வாகம் எடுக்க முடியும், வேலையிலிருந்து கூட நீக்கலாம். அதற்கு சட்ட்த்தில் இடம் உள்ளது. ஆனால் அந்த தொழிலாளி பாதுகாக்கப்பட்ட தொழிலாளியாக அறிவிக்கப்பட்டிருந்தால் அவர் மீது எந்த நடவடிக்கையை எடுப்பதாக இருந்தாலும் அதற்கு முன்பாக அவர் இத்தகைய குற்றத்தை செய்திருக்கிறார், அதற்காக நாங்கள் அவரிடம் உள்விசாரணை நடத்தினோம் எங்களுடைய உள்விசாரணையில் அவருடைய குற்றம் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. எனவே அவர் மீது நாங்கள் இத்தகைய நடவடிக்கையை எடுக்கப் போகிறோம் அதற்கு உங்களுடைய அனுமதி வேண்டும் என்று ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கு முன்பாக தொ.உ.ஆணையரிடம் நிர்வாகம் முறையாக முன் அனுமதி வாங்க வேண்டும். ஆனால் எவ்வித முன் அனுமதியுமின்றி ஐந்து நிர்வாகிகளையும் 2008-ம் டிசம்பரில் நிரந்தரமாக வேலை நீக்கம் செய்து உத்தரவிட்டது நிர்வாகம்.

வேலை நீக்கம் தொழிலாளிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பயத்தையும் உருவாக்கியது. இந்த நிலைமையை நிர்வாகம் சரியாக பயன்படுத்திக்கொண்டது. நிர்வாகம் தன்னுடைய கலைப்பு வேலையில் வெற்றி கண்டது. சங்கத்தை உடைக்க ஆரம்பம் முதலே முயற்சித்து வந்த நிர்வாகத்தின் சூழ்ச்சி இங்கே வென்றது. தொழிலாளிகள் மத்தியில் வேலை நீக்கம் வேலை நீக்கம் என்கிற பீதியையூட்டி பயமுறுத்தியது. அத்துடன் முதலாளி பெரிய கோடீஸ்வரன் கூலிக்கு வேலை செய்யும் நாம் அவனோடு போட்டி போட்டு ஜெயிக்க முடியாது என்கிற அவநம்பிக்கையும் தொழிலாளர்கள் மத்தியில் பரவலாக தலைதூக்கியது. நிர்வாகத்தின் இழுத்தடிப்புகளாலும், உருட்டல் மிரட்டல்களாலும் போராட்டத்தில் வெற்றி தோல்வியை காணும் முன்பே தொழிலாளிகள் விரக்தியடைந்திருந்தனர். அனைவரும் சங்கத்தை விட்டு விலகத் துவங்கினர். அதில் சங்க நிர்வாகிகளும் அடக்கம். தலைமையிலிருந்த நிர்வாகிகளில் சசிக்குமாரை தவிர மற்ற நான்கு பேரும் நிர்வாகத்திடம் வெறும் ஐம்பதாயிரம் ரூபாயை வாங்கிக்கொண்டு சோரம் போய்விட்டனர். ஆனால் அந்த நிலையிலும் தோழர் சசிக்குமார் தன்னந்தனி ஆளாக உறுதி குலையாமல் நின்றார்.

வேலையிலிருந்து நீக்கப்பட்டதை அறிவிக்கும் கடிதம் சங்கத் தலைவர் சசிக்குமாருக்கு வந்தது. அதற்கு அவர் கீழ்கண்டவாறு பதில் கடிதம் எழுதினார். 1947 தொழிற்தகராறு சட்டத்தின் பிரிவு 33ன் படி பாதுகாக்கப்பட்ட தொழிலாளியாக அறிவிக்கப்பட்ட ஒருவர் மீது நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதற்கு முன்பாக தொ.உ.ஆணையரிடம் முன் அனுமதி வாங்க வேண்டும் என்பதை சுட்டிக்காட்டி நீங்கள் அவ்வாறு நடந்துகொள்ளாததால் இந்த வேலை நீக்க அறிவிப்பு சட்டப்படி செல்லாதது என்று எழுதினார். உடனே சுதாரித்துக்கொண்ட நிர்வாகம் பின்னேற்பு அனுமதி வாங்க முயற்சித்து தொ.உ.ஆணையரை அனுகியது.

நிர்வாகத்தின் நடவடிக்கை தவறானது, சட்டவிரோதமானது என்பதால் பு.ஜ.தொ.மு அதை எதிர்த்து தொழிலாளர் நீதிமன்றத்திற்கு செல்ல முயன்ற போது நான் பின்னேற்பு அனுமதிக்காக காத்திருக்கும் போது நீங்கள் அதற்கு மேல் உள்ள அமைப்பான கோர்ட்டுக்கு போக முடியாது என்று தடுத்து நிறுத்தியது. பிறகு தொ.உ.ஆணையரிடம் பின்னேற்பு அனுமதிக்கு மனு அளித்துவிட்டு அதை அத்தோடு விட்டுவிட்டார்கள். வழக்கை இழுத்தடிக்க வேண்டும் என்கிற நோக்கத்திற்காக தான் இந்த பின்னேற்பு மனுவை போட்டனர். அடுத்த ஆறுமாதங்களுக்கு தான் போட்ட பின்னேற்பு அனுமதி மனு என்ன ஆனது ஏதானது என்று தெரிந்துகொள்ளக்கூட நிர்வாகம் தொ.உ.ஆணையரை நாடவில்லை.

பின்னேற்பு அனுமதி தள்ளுபடி

நிர்வாகம் வழக்கை இழுத்தடிக்கும் நோக்கத்துடன் செயல்படுவதால் அதை அனுமதிக்காமல் நிராகரிக்கவேண்டும் என்று கூறியது பு.ஜ.தொ.மு.  தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்தது சட்டவிரோதமானது, அந்நடவடிக்கையையும் தொ.உ.ஆணையரின் முன் அனுமதியின்றி எடுக்கப்பட்ட சட்டவிரோத நடவடிக்கையாகும். அடுத்ததாக தனது தவறான நடவடிக்கைக்கு பின்னேற்பு அனுமதி கோரி மனுத் தாக்கல் செய்திருந்த நிர்வாகம் அந்த அனுமதி கோரும் மனுவை அளித்து ஆறு மாதங்களாகிறது தனது சொந்த மனுவுக்காக ஆஜராகி அனுமதி கூட கோரவில்லை. எனவே இவர்களுடைய நடவடிக்கைகள் தொழிலாளர்களை இழுக்கடித்து அலைக்கழிக்கும் தீய நோக்கம் கொண்ட்தாக இருக்கிறது என்று கருதுகிறோம் எனவே நிர்வாகத்தின் இந்த மனுவை உடனடியாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம் என்று பு.ஜ.தொ.மு தனது வாதத்தை முன்வைத்தது. தொ.உ.ஆணையர் உமாதேவி அதை ஏற்று நிர்வாகத்தின் மனுவை தள்ளுபடி செய்தார்.

தொழிலாளர் நீதிமன்றத்தில்

அடுத்ததாக வழக்கு தொழிலாளர் நீதிமன்றத்திற்குள் நுழைகிறது.  நிர்வாகத்தை பு.ஜ.தொ.மு தான் நீதிமன்றத்திற்குள் இழுத்துச்செல்கிறது. நிர்வாகம் இழுத்தடித்ததால் தொ.உ.ஆணையரிடம் நடந்த சமரச முயற்சியிலேயே ஓராண்டு கடந்துவிட்டது. தொ.நீதிமன்றத்தில் வழக்கு நடக்கும் போது 2009-ம் ஆண்டு ஆகிவிட்டது. பாதுகாக்கப்பட்ட தொழிலாளிகளாக அறிவிக்கப்பட்டவர்களை வேலை நீக்கம் செய்தது தவறு என்று பு.ஜ.தொ.மு தனது வாதத்தை முன்வைத்தது. நிர்வாகம் அதற்கு பதில் மனு போடாமல் ஓராண்டாக இழுத்தடித்து பிறகு 2010-ல் தொ.உ.ஆணையர் எங்களுடைய பின்னேற்பு மனுவைப் பற்றி எங்களிடம் கேட்காமலே உத்தரவிட்டுவிட்டார் எனவே மீண்டும் தொ.உ.ஆனையரிடம் பின்னேற்பு மனுவிற்கு அனுமதி வாங்கி வர எங்களை அனுமதிக்க வேண்டும் என்று ஒரு அனுமதி கோரும் மனுவை போட்டார்கள். இதை அனுமதிக்கக்கூடாது என்று மறுத்தது பு.ஜ.தொ.மு. ஆனால் அவர்களுக்கு அனுமதி வழங்கியது நீதிமன்றம்..

நிர்வாகம் பின்னேற்பிற்காக சென்றிருந்த போது பழைய தொ.உ.ஆணையர் மாறி புதியவர் பதவிக்கு வந்திருக்கிறார். அவர் நிர்வாகத்தின் தரப்பில் நியாயம் இருந்தாலும் இங்கிருந்து நீதிமன்றத்திற்கு சென்ற ஒரு வழக்கில், முந்தைய தொ.உ.ஆணையர் தள்ளுபடி செய்த ஒரு வழக்கில் மறு தீர்ப்பளிக்க தனக்கு அதிகாரம் இல்லை என்று அந்த மனுவை தள்ளுபடி செய்துவிட்டார். அதில் மூன்று மாதங்களை இழுக்கடித்து அதன் பிறகும் தொ.நீதிமன்றத்தில் பதில் மனுவை தாக்கல் செய்யவில்லை.

மனுவை ஏற்காமலே காறித்துப்பிய உயர்நீதிமன்றம்

அதன் பிறகு 2011 ஜனவரியில் பு.ஜ.தொ.மு வின் மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்துவிட்டு பிறகு வாய்தா வாய்தா என்று ஒரு ஏழெட்டு மாதங்கள் இழுக்கடித்துவிட்டு திடீரென்று சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு ரிட் மனுவை தாக்கல் செய்தார்கள். அந்த ரிட்டில் நிர்வாகம் வைத்த வாதம். எமது தரப்பை தொ.உ.ஆணையர் நியாயமானது என்றும் ஆனால் தான் புதிதாக பதவிக்கு வந்ததால் தீர்ப்பளிக்க தனக்கு அதிகாரம் இல்லை என்றும் கூறியுள்ளார். தொ.உ.ஆணையரே எமது தரப்பு நியாயமானது என்று கூறியுள்ளதால் உயர்நீதிமன்றமும் எமது தரப்பை ஏற்று தீர்ப்பளிக்க வேண்டும் என்று கோரினர்.

தலைமை நீதிபதி இக்பால் நீதிபதி சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. வழக்கு ஏற்கப்பட்டு வரிசைப்படுத்தப்படும் இடத்திலேயே இந்த மனு நிராகரிக்கப்பட்டு தள்ளுபடி செய்யப்படுகிறது அத்துடன் நிர்வாகத்திற்கு ஒரு உத்தரவும் போடப்படுகிறது.

சசிக்குமார் வேலை நீக்கம் செய்யப்பட்ட 2008-ம் ஆண்டிலிருந்து இன்று வரை அவரை வேலையிலிருந்ததாக எடுத்துக்கொண்டு முழுமையான பின் சம்பளத்தையும், அனைத்து சலுகைகளையும் அவருக்கு வழங்க வேண்டும். அத்துடன் தொழிலாளர் நீதிமன்றத்தில் இந்த வழக்கை நிர்வாகம் எத்தனை ஆண்டுகள் நடத்துகிறதோ அத்தனை ஆண்டுகளுக்கு தொழிலாளி சசிக்குமாருக்கு ஒவ்வொரு மாதமும் அவர் வேலையில் இருப்பதாக எடுத்துக் கொண்டு ஊதியம் அளிக்க வேண்டும். மேற்கொண்டு இந்த வழக்கை தொ. நீதிமன்றத்தில் நடத்திக்கொள்ளலாம் என்கிற உத்தரவுடன் நிர்வாகத்தின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இத்தீர்ப்பின்படி தோழர் சசிக்குமாருக்கு மொத்தமாக 1,39,400 ரூபாய்க்கான காசோலை வழங்கப்பட்டது.

மேலும் இந்த தீர்ப்பின் மூலம் வழக்கை இழுக்கடித்து தொழிலாளியை சோர்வுக்குள்ளாக்கும் நிர்வாகத்தின் இழுத்தடிப்பு வேலைகளுக்கும் ஒரு முட்டுக்கட்டை போடப்பட்டது. மேற்கொண்டு வழக்கு தொ. நீதிமன்றத்தில் நடக்கவிருக்கிறது.

இந்த வெற்றிச் செய்தியை தொழிலாளிகளாலும், தோல்வியை முதலாளியாலும் நம்ப முடியவில்லை. போராட்டத்தில் பங்கேற்காமல் ஒதுங்கிக்கொண்ட தொழிலாளிகள்  தற்போது கிடைத்துள்ள வெற்றிக்காக மகிழ்ச்சியடைகிறார்கள். தங்களுடைய செயலை எண்ணி குற்றவுணர்வும் கொள்கிறார்கள்.

தீர்ப்பு வந்த பிறகு ஆலையின் வாயிலருகே சென்ற தோழர் சசிக்குமார் தனது சக தொழிலாளிகளை சந்தித்து பேசினார். தொழிலாளிகள் சசிக்குமாரின் கைகளை பிடித்துக் கொண்டு தமது வாழ்த்துக்களையும், மகிழ்ச்சியையும் தெரிவித்தார்கள். அவர்களிடம் சசிக்குமார் கூறினார் நானும் இந்த ஆலையில் உங்களோடு ஒருவனாக வேலை செய்தேன் நாம் அனைவரும் சேர்ந்து தான் சங்கத்தை கட்டினோம். அந்த சங்கத்தில் நான் உங்களுக்கெல்லாம் தலைவனாக இருந்தேன். முதலாளிக்கு எதிரான போராட்டம் என்று வந்த போது நீங்கள் எல்லாம் அச்சத்தின் காரணமாக விலகிவிட்டீர்கள் நானோ இறுதி வரை உறுதியாக நின்றேன் இப்போது வெற்றி பெற்றிருக்கிறேன். இந்த வெற்றிக்கு என்னுடைய உறுதி மட்டும் காரணம் அல்ல எனக்கு வழிகாட்டிய ’புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி’யின் தோழர்கள் தான் காரணம். இனிவரும் காலத்திலும் நீங்கள் போராட வேண்டியிருக்கும் அப்போது இது போல பின்வாங்கிவிடாதீர்கள் தோழர்களே என்றார்.

சசிக்குமார் ஆலைக்கு வந்ததும் வழக்கில் வெற்றி பெற்ற செய்தியும் தொழிலாளிகள் மத்தியில் தீயாக பரவியது. நாம் தப்பு செய்துவிட்டோம், ஏமாந்துவிட்டோம், பயந்துபோய்விட்டோம் எனவே தான் தோற்றுவிட்டோம் நாம் மறுபடியும் சங்கத்தை ஆரம்பிக்க வேண்டும் என்கிற உணர்வும் உத்வேகமும் தற்போது ஃபிரஸ்பார்ம் தொழிலாளிகளிடம் நிரம்பி வழிகிறது.

சட்டம், நீதிமன்றம் போன்றவையே தொழிலாளிகளுக்கும், நாட்டிற்கும் விடுதலையையோ, நிவாரணத்தையோ வழங்கி விடாது. அது தொழிலாளர்களின் அரசியல் போராட்டத்திலேயே சாத்தியம். எனினும் இருக்கும் குறைந்த பட்ச சட்ட வாய்ப்புகளை முடிந்த அளவு பயன்படுத்திக் கொண்டு தொழிலாளிகளை அணிதிரட்டும் வேலையையும், அரசியல் படுத்தும் வேலையையும் செய்ய வேண்டும். இந்த தீர்ப்பை அப்படித்தான் பு.ஜ.தொ.மு கருதுகிறது.

சங்கம் கட்டினால் நீக்கம் என்று ஆட்டம் போட்ட இந்த முதலாளிக்கு தற்போது நீதிமன்றத்தின் மூலம் ஆப்பு வைத்திருக்கிறது புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி. ஃபிரஸ்பார்ம் தொழிலாளர் சங்கத்தின் சிவப்புக்கொடி அந்த ஆலையின் வாயிலில் நடப்படும் நாள் விரைவில் வரும். தொழிலாளிகளை ஒடுக்கிவிடலாம் என்று மனப்பால் குடிக்கும் முதலாளிகளின் திமிரை ஒடுக்கும் நாளும் கூடவே வரும்.

___________________________________________

– வினவு செய்தியாளர்.
________________________________

 1. புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி தோழர்களுக்கு, ஹூண்டாய் தொழிலாளர்கள் சார்பாக செவ் வணக்கம் மற்றும் வாழ்த்துக்கள்.

 2. புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி தோழர்களுக்கு மற்றும் தோழர் சசிக்குமாருக்கு வாழ்த்துக்கள்

 3. 2 years time and energy spent for what? 1.4 lakhs?
  What about legal costs? Is this really a victory?
  A auto driver will earn more than 500Rs a day. Small mobile hotel person will earn 2000Rs a day.

  • திரு.AAR
   வழக்கு இன்னும் முடியவில்லை தொ. நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளது. 50000 ரூபாய் வாங்கிக்கொண்டு வழக்கை விட்டு ஓடியுள்ளவர்களை ஒப்பிடும் போது தோழர் சசி அடைந்தது வெற்றி தான். இது தெழிலாளிகள் சங்கம் அமைத்தால் வேலை போகும் என்ற கண்னோட்டத்தை தகர்துள்ளது அது தான் உண்மையான வெற்றி.நீங்கள் குறிப்பிட்டுள்ள ஆட்டோ ஓட்டுநர் மற்றும் கையேந்திபவன் சம்பளத்தை ஒப்பிடுவது என்பது ஏற்ப்புடையத அல்ல இது நடுத்தர வர்கத்தின் எண்ணம் அவர்களின் வருவாய் என்பது நிலையானது கிடையாது.

   • Shocking that you do not consider the 2 years of non-productive life of a worker as a loss.

    If a worker does not gets the compensation he think he deserves, its better for him to come out and do productive work like auto driving or mobile hotel.

 4. ஒரு விவரப்பிழை. முதலில் நிர்வாகம் ரிட் மனு தாக்கல் செய்து அது நீதிபதி ராமசுப்பிரமணியத்தினால் தள்ளுபடி செய்யப்பட்டது. அதனை எதிர்த்து நிர்வாகம் இரு நீதிபதிகள் ஆயத்தில் மேல்முறையீடு செய்து அதுதான் தற்போது டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க