Saturday, May 3, 2025
முகப்புகட்சிகள்இதர கட்சிகள்வன்னி அரசு: பொய் மேல் பொய்!

வன்னி அரசு: பொய் மேல் பொய்!

-

வம்பர் 7 நாயக்கன் கொட்டாய் சாதிவெறித் தாக்குதல் குறித்து விடுதலைச் சிறுத்தை கட்சியின் மாநிலச் செய்தித் தொடர்பாளர் வன்னி அரசு, கீற்று தளத்தில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதில், தலித்துக்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களில் ம.க.இ.கவைச் சேர்ந்த வன்னியர்களும் உண்டு என்றொரு அவதூறை எழுதியிருந்தார். அதற்கு பதிலளிக்கும் முகமாக “வன்னி அரசு வகையறாக்களின் வன்னிய சேவை “ என்றொரு கட்டுரை வெளியிட்டிருந்தோம்.

அதில் ” அறிவு நாணயம் என்ற சொல்லை அவர் குறைந்தபட்சம் கேள்விப்பட்டிருப்பாரேயானால், தாக்குதலில் ஈடுபட்டதாக அவர் குற்றம் சாட்டும் மகஇக காரர்கள் யார் என்பதை சொல்லட்டும். அல்லது அவரது கட்டுரையை பெருமகிழ்ச்சியோடு பிரசுரித்திருக்கும் கீற்று, பெரியார் தளம் வலைத்தளங்களுக்கு கொஞ்சமாவது நேர்மை இருக்குமானால் வன்னி அரசுவை விளக்கமளிக்குமாறு கோரட்டும். ” என்று குறிப்பிட்டிருந்தோம். நிறைய வாசகர்களும் கீற்று தளத்தில் இதையே கோரியிருந்தனர்.

தனது பொய் குறித்து பதிலளிக்காமல் இருக்க முடியாது என்ற நிலை உருவான காரணத்தினால், மீண்டும் கீற்று தளத்தில் முழுப்பிதற்றலாக ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.  அக்கட்டுரையில் “இத்தாக்குதலுக்கு பின்னிருந்து அனைத்து எடுபிடி வேலைகளையும் செய்தவர் தோழர் கிருஷ்ணன். இவர் அண்ணாநகர் பகுதியைச் சார்ந்த வன்னியர், ம.க.இ.க.வைச் சேர்ந்தவர்.” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

வன்னி அரசு குறிப்பிட்டிருக்கும் அண்ணாநகர் என்பது முழுக்க முழுக்க தலித்துக்கள் மட்டும் வாழும் கிராமம். அந்த ஊரில் வன்னியர் சாதியைச் சேர்ந்தவர்களே கிடையாது. மேலும் அக்கிராமத்தில் ம.க.இ.கவோ அதன் தோழமை அமைப்புகளோ கிடையாது. எமது முந்தைய கட்டுரையிலேயே நாயக்கன் கொட்டாய் வட்டாரத்தில் எமக்கு அமைப்பு கிளைகள் இல்லை என்பதால் பென்னாகரம் பகுதி தோழர்கள் சென்று உதவியிருக்கின்றனர் என்று தெளிவாகவே குறிப்பிட்டிருந்தோம்.

இருப்பினும் தான் சொன்ன அபாண்டமான அவதூறை நியாயப்படுத்துவதற்காக இன்னொரு பச்சைப்பொய்யை அவிழ்த்து விட்டிருக்கிறார் வன்னி அரசு. அரசியல் ரீதியான விமரிசனங்களை விடுத்து பொய்களையும், அவதூறுகளையும் வெளியிடுவதில் கீற்று தளத்திற்கு என்ன மகிழ்ச்சியோ தெரியவில்லை.

வன்னி அரசுவின் இந்தக் கட்டுரையில் அவர் தெரிவித்திருக்கும் ‘ஆதாரத்தின்’ யோக்கியதையை மட்டுமே இங்கே அம்பலப்படுத்தியிருக்கிறோம். ம.க.இ.க குறித்து அவருடைய கட்டுரையில் கூறப்பட்டிருக்கும் மற்ற உளறல்கள் பதிலளிக்கத்தக்கவை அல்ல. கட்டப்பஞ்சாயத்தில் வயிறு வளர்த்து, ஓரிரு நாற்காலிகளுக்காக தலித் மக்களின் வாக்குகளை ஆண்டைக் கட்சிகளிடம் விலை பேசும் தரகர்கள், புரட்சி எப்படி செய்வது என்று விளக்குகிறார்களாம்.

வன்னி அரசுவின் கட்டுரைகளை கீற்று தளம் தொடர்ந்து வெளியிடுவதில் நமக்கு ஆட்சேபமில்லை. அவற்றை சிரிப்பூ என்ற தலைப்பின் கீழ் வெளியிடுவது பொருத்தமாக இருக்குமென்பது எம் பரிந்துரை.