privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

வளர்ச்சியின் வன்முறை!

-

சென்னை அசோக் நகர் குடிசை தீவிபத்து
சென்னை அசோக் நகரையொட்டி அமைந்துள்ள அம்பேத்கர் நகரில் ஏற்பட்ட திடீர் தீ ‘விபத்தில்’ 500க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து போன அவலம்

சென்னையிலுள்ள கிரீம்ஸ் சாலைக்கு அருகே அமைந்துள்ள மர்கீஸ் கார்டன்  பகுதியில், கடந்த ஜூன் 26 அன்று 70 குடிசை வீடுகளும்; ஜூலை-2 அன்று 45 வீடுகளும்; எஞ்சியிருந்த குடிசைகள் ஜூலை 11 அன்றும் எனத் தவணை முறையில், சுமார் ஒரு மாத காலத்திற்குள் ஒன்றன் பின் ஒன்றாக ஏற்பட்ட தீ விபத்தில் அங்கிருந்த 130 குடிசைகளும் எரிந்து சாம்பலாகின. இப்பகுதியினை அடுத்து, ஜூலை 29 அன்று சென்னை – அசோக் நகரையொட்டி அமைந்துள்ள அம்பேத்கர் நகரில் ஏற்பட்ட தீ விபத்தில் 500-க்கும் மேற்பட்ட குடிசைகள் தீக்கிரையாகின. இதனைத் தொடர்ந்து பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் குடிசைப்பகுதியில் ஏற்பட்ட தீவிபத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து சாம்பலானது மட்டுமின்றி, உடல்கருகி ஒருவர் இறந்தும் போனார்.

கூவம் கரையில் கட்டப்பட்டு வரும் அதிவேக நெடுஞ்சாலைப் பணியை காரணம் காட்டி, மர்கீஸ் கார்டன் பகுதி மக்களையும்; மெட்ரோ ரயில் பணியைக் காரணம் காட்டி அம்பேத்கர் நகர் பகுதி மக்களையும் அவ்விடத்தைக் காலிசெய்துவிட்டு கிளம்புமாறு அதிகாரிகளும், அமைச்சர்களும் அவர்களின் அல்லக்கைகளான உள்ளூர் கரைவேட்டிகளும்  இப்பகுதி மக்களை  தொடர்ந்து மிரட்டி வந்ததோடு, நகருக்கு வெளியே செம்மஞ்சேரியில் மாற்று இடம் தருவதாகவும் நைச்சியமாகப் பேசிவந்தனர். இந்த நிலையில் இப்பகுதிகளில் நடைபெற்றுள்ள இத்தீவிபத்துக்களைத் திடீர் தீவிபத்துக்கள் என அவ்வளவு சாதாரணமாக ஒதுக்கித்தள்ளிவிட முடியாது. எனினும், இவற்றைத் தற்செயலான தீ விபத்துகள்தான் என்று கூறி வழக்கை முடித்துவிட்டன, போலீசும் தீயணைப்புத்துறையும்.

இப்படிபட்ட மர்மமான தீவிபத்துகளில் சிக்கித் தமது குடிசைகளையும், உடைமைகளையும் பறிகொடுத்துவிட்டு நிராதராவாய் நடுத்தெருவில் நிற்கும் அம்மக்களுக்கு பெயரளவிலான நிவாரணங்களையும் இழப்பீடுகளையும் வழங்கக்கூட, அரசு இப்பொழுதெல்லாம் முன்வருவதில்லை. மாறாக, அப்பகுதிகளில் இருந்து அவர்களைக் காலி செய்து, புறநகர்ப் பகுதிகளுக்குத் துரத்தியடிப்பதில்தான் குறியாக இருக்கிறது.

மர்கீஸ் கார்டன் தீ விபத்து நடந்தவுடன், ஜூனியர் விகடன் இதழுக்குப் பேட்டியளித்த சென்னை மாநகரத் ‘தந்தை’ சைதை சா.துரைசாமி,  “இந்த மக்கள் ஒவ்வொரு மழைக்காலத்திலும் வெள்ளம் பெருகி சிரமப்படுகிறார்கள். இப்போது அடிக்கடி தீ விபத்தும் ஏற்படுகிறது… அவர்களுடைய ஆரோக்கியத்துக்காகவும் நலனுக்காகவுமே செம்மஞ்சேரிக்குக் குடிபெயரச்சொல்கிறோம்…. இவர்கள் செம்மஞ்சேரியிலிருந்து நகருக்குள் வந்து போவதற்கு இலவச பஸ் பாஸ் வேண்டுமானால் ஏற்பாடு செய்யலாம்” (ஜூ.வி, ஜூலை-25) எனக் கூறியிருக்கிறார். இம்மக்களின்பால் அரசு கொண்டிருக்கும் ‘நல்லெண்ணத்தை’ இந்த பேட்டி ஒன்றே புரிய வைத்துவிடும்.

இவ்வாறு அடிக்கடி குடிசைகள் எரிந்து சாம்பலாகும் சம்பவங்கள் சென்னைக்குப் புதிய தொன்றும் அல்ல. மாநகர வளர்ச்சித் திட்டங்களும், சென்னையை அழகுபடுத்தும் திட்டங்களும் அறிமுகப்படுத்தப்பட்ட நாளிலிருந்தே சென்னை நகரில் குடிசைப் பகுதிகள் எரியத் தொடங்கிவிட்டன. வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த பி.எஸ். மூர்த்தி நகர், பி.கே.புரம், புதுநகர், சேத்துப்பட்டு ஷெனாய் நகர் அவ்வைபுரம், நந்தம்பாக்கம் எம்.ஜி.ஆர். நகர் மற்றும் எம்.ஜி.ஆர்.நகர் விரிவு, கொருக்குப்பேட்டை ஜே.ஜே.நகர், மர்கீஸ் கார்டன் மற்றும் அம்பேத்கர் நகர் குடிசைகள் எனக் கடந்த பத்தாண்டுகளில் எரிந்துபோன குடிசைப் பகுதிகளின் பட்டியலை அடுக்கிக்கொண்டே போகலாம்.

வியாசர்பாடி-பேசின்பிரிட்ஜ் சாலையை அகலப்படுத்துதல்; வியாசர்பாடி மேம்பாலம்; அடையாறு ஆற்றின் மேலும் அதன் கரையை ஒட்டியும் அமைக்கப்படும் மலர் மருத்துவமனை தொடங்கி போரூர் நந்தம்பாக்கம் பாலம் வரையிலான அதிவேக நெடுஞ்சாலை; சென்னை துறைமுகத்திலிருந்து மதுரவாயல் வரையில் கூவம் நதிக்கு மேலாகச் செல்லும் அதிவேக நெடுஞ்சாலை; எண்ணூர்-பேசின் பிரிட்ஜ் – வால்டாக்ஸ் ரோடு வழியாக பக்கிங்காம் கால்வாய் மீது அமைக்கப்படும் அதிவேக நெடுஞ்சாலை; பறக்கும் ரயில்பாதைக்கு இணையான சாலை, மெட்ரோ ரயில் என ‘சிங்காரச் சென்னை’ யின் கனவுத் திட்டங்கள் நடைபெறும் இடங்களில் இருந்த குடிசைகளெல்லாம் பலவந்தமாக அப்புறப்படுத்தப்பட்டுள்ளன அல்லது மர்மமான முறையில் எரிந்து போயுள்ளன.  உலக வங்கி அளித்துள்ள தமிழ்நாடு நகர வளர்ச்சித் திட்டம்-2, 2005 என்ற ஆவறிக்கை, சென்னையிலுள்ள 122 குடிசைப் பகுதிகளை அப்புறப்படுத்த வேண்டுமென தமிழக அரசுக்கு ஆலோசனை வழங்கியிருப்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

குடிசைப்பகுதிகள் அப்புறப்படுத்தப்படுவதென்பது, ‘சர்வதேச தரம் வாய்ந்த சிங்கார சென்னை’ என்ற கனவுத் திட்டங்களை நிறைவேற்றுவதற்குரிய அவசியமான நடவடிக்கை என்பதாக ஆளும் வர்க்கம் சித்தரிக்கிறது. நடுத்தர வர்க்கமும் மகுடிக்குத் தலையாட்டும் பாம்பு போல இக்கருத்தை தீவிரமாக ஆதரிக்கிறது. ஒரு தெருவிலிருந்து மற்றோர் தெருவிற்கு வீட்டை மாற்றிக் கொள்வதைப் போன்றதல்ல இந்த இடப்பெயர்வு.  நகர்ப்புற குடிசைப் பகுதிகளில் வாழ்ந்து வரும் உழைக்கும் மக்கள், சென்னை நகரத்திலிருந்து 30 – 40 கி.மீ. தொலைவுக்கு அப்பால் உள்ள செம்மஞ்சேரி, கண்ணகி நகர், ஒக்கியம், கார்கில் நகர், எர்ணாவூர், நல்லூர், கன்னடபாளையம் போன்ற இடங்களுக்கு விரட்டியடிக்கப்படுகின்றனர்.  இதனை அம்மக்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் நடவடிக்கையாக இவர்கள் பார்ப்பதில்லை.

நகர், நகர் என்று அழைப்பதால், இவைகளெல்லாம் சென்னையின் அண்ணாநகர், பெசன்ட் நகர் போன்ற ‘தரமான’ நகர்களில்லை. சென்னை நகருக்குள் சேரும் குப்பைகளைக் கொட்ட பள்ளிக்கரணை மற்றும் கொடுங்கையூரில் திறந்தவெளிக் குப்பைக் கிடங்குகளை அரசு வைத்திருப்பது போல, நகரிலிருந்து அப்புறப்படுத்தப்படும் ஏழை மக்களை நகருக்கு வெளியே கொண்டுபோய்க் கொட்டுவதற்கென்றே உருவாக்கப்பட்ட குப்பை கிடங்கை போன்றதுதான் செம்மஞ்சேரியும், மற்ற நகர்களும்!

செம்மஞ்சேரியில் கட்டப்பட்டுள்ள கான்கிரீட் வீடுகளை, 160 சதுர அடியில் கட்டப்பட்ட கான்கிரீட் பொந்துகள் என்றுதான் சொல்ல முடியும்.  சாலை வசதி, குடிநீர் வசதி, பள்ளிக்கூட வசதி என மக்கள் வாழ்வதற்குத் தேவையான அடிப்படை வசதிகள் எதுவுமே செம்மஞ்சேரியில் கிடையாது. சிறுமழைக்கே வீடுகளின் முன்பு குளம் போல் தேங்கிக் கிடக்கிறது, கழிவுநீருடன் கலந்த மழைநீர். இச்சுகாதாரமற்ற சூழலிலும் பாம்புகள் படையெடுக்கும் ஆபத்திற்கு மத்தியிலும் அங்கு குடியமர்த்தப்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

செம்மஞ்சேரியில் அரசு இரண்டு ‘வசதிகளை’ அக்கறையோடு ஏற்படுத்தித் தந்திருக்கிறது. ஒன்று டாஸ்மாக் சாராயக் கடை. மற்றொன்று போலீசு நிலையம். அரைமணி நேரத்திற்கு ஒரு முறை ரோந்து வந்து இக்குடியிருப்பை கண்காணிக்கிறது, போலீசு. “இருவருக்கு மேல் கூடி நின்று பேசக்கூடாது; இரவு 10 மணிக்கு மேல் எவரும் நடமாடக்கூடாது” என்பது போன்ற போலீசின் வாய்மொழி உத்திரவுகளே இங்கே சட்டமாக்கப்பட்டிருக்கின்றன. இவை மட்டுமின்றி, மழிக்காத முகத்தையோ, ஒழுங்காக வாராத தலையையோ கண்டால் அவரைக் குற்றவாளியாக்குவது; எவரையும் சந்தேகக் கேசு எனத் தள்ளிக்கொண்டு போய், விடிய விடிய போலீசு நிலையத்தில் அடைப்பது; அவர்களின் கைரேகை மற்றும் விழிரேகையைப் பதிவு செய்து பீதியூட்டுவது என எந்நேரமும் போலீசின் கண்காணிப்பிலேயே இறுத்தப்பட்டிருக்கும் வதைமுகாமாகவே உள்ளது செம்மஞ்சேரி.

சென்னை நகரத்தில் நிலவும் இரண்டு மணி நேர மின்வெட்டைக்கூடச் சகித்துக்கொள்ள முடியாமல் புலம்பும் நடுத்தர வர்க்கத்திற்கு, செம்மஞ்சேரியில் உள்ள 7000 குடியிருப்புகளில் 5000-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மின் இணைப்பே இல்லை என்ற உண்மையும்; நகரத்திலிருந்து செம்மஞ்சேரிக்கு விசிறி எறியப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள், தமது படிப்பைத் தொடரப் போதுமான பள்ளிக்கூட வசதி குடியிருப்புக்கு அருகிலேயே ஏற்படுத்தித் தரப்படாததால், படிப்பைக் கைவிட்டுக் குழந்தைத் தொழிலாளர்களாகப் போக வேண்டிய அவல நிலையை எதிர்கொண்டுள்ளனர் என்பதும் தெரியுமா? தெரிந்தாலும், அவர்களுக்கு உரைக்குமா?

நகரத்திலிருந்து விரட்டப்பட்டு, செம்மஞ்சேரியில் குடியமர்த்தப்பட்டவர்களுள் பெரும்பாலோர் கொத்துவேலை, வீட்டு வேலை, பெயிண்டிங் வேலை போன்ற தொழில்களில் ஈடுபடும் உதிரித் தொழிலாளர்கள்.  இவர்களது பிழைப்பு நகரத்தைச் சார்ந்ததாக இருக்கிறது.  இக்கூலித் தொழிலாளர்கள் செம்மஞ்சேரியிலிருந்து கிட்டதட்ட இரண்டு மணி நேரம் பேருந்து பயணம் செய்தால்தான் நகரத்திற்கு போய்ச்சேர முடியும்.  அவர்கள் காலையில் எட்டு மணிக்குள்ளாக நகரிலுள்ள குறிப்பிட்ட மையங்களுக்குச் சென்றால்தான், வேலை தரும் தரகர்களை அணுகி அன்றைய பிழைப்பைப் பெறமுடியும். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு வேலை நடக்குமிடத்திற்குச் செல்ல வேண்டும்  எனவே, அதிகாலையே வீட்டைவிட்டுக் கிளம்பியாக வேண்டும்; பேருந்துக்கான கட்டணம், டீ, பீடிச் செலவுக்கு எனக் கையில்  நூறு ரூபா வைத்துக்கொள்ள வேண்டும்; தாமதமாகச் செல்ல நேரிட்டாலோ, அல்லது வேலையில்லையென்றாலோ, பேருந்துக்குக் கொடுத்த காசு அரசுக்குப் போட்ட வாய்க்கரிசி என்றெண்ணி வந்த வழி திரும்புவதைத் தவிர வேறுவழியில்லை.

தினமும் இவ்வாறு வேலைதேடிச் செல்வதில்  உள்ள சிக்கல்; பயணச்செலவு; தொடர்ச்சியாக வேலை கிடைப்பதில் ஏற்படும் இடர்ப்பாடுகள் ஆகியவற்றின் காரணமாக, வடமாநில மற்றும் வெளிமாவட்டத் தொழிலாளர்களைப் போலவே, இவர்களும் வேலைநடக்கும் இடங்களிலே நான்கைந்து நாட்கள் தங்கி வேலைசெய்துவிட்டு, பின்னர் வீடு திரும்பும் அகதி வாழ்க்கைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

நகர்ப்புறக் குடிசைகளில் வாழ்ந்தபோது, வீட்டு வேலைகளுக்குச் சென்றுவந்த பெண்களுள் பலர், இடப்பெயர்விற்குப் பின்னர் அந்த வேலைவாப்பை இழந்துள்ளனர். குடும்பச்சூழல் காரணமாக அந்த வேலையைத் தொடர வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள் அதிகாலை 5 மணிக்கே எழுந்து ஓடவேண்டிய நிலைமைக்கு ஆளாகியுள்ளனர். இதன் காரணமாகவே, குடும்பம் குட்டி என எதனையும் கவனிக்க முடியாத சூழலில் தள்ளப்பட்டுள்ளனர்.

நாற்றம் பிடித்த கூவத்துக்கு மத்தியிலும், சுகாதாரமற்ற நகர்ப்புறச் சேரிகளிலும் வாழ்ந்துவந்த போது, கூலி வேலையைத் தேடிக்கொள்வதற்கான வாய்ப்புகள் இவர்களுக்குக் கிடைத்து வந்தன; இவர்கள் மீது அரசு திணித்திருக்கும் இந்தக்  கட்டாய இடப்பெயர்வோ அவர்களின்  வேலைவாப்பைப் பறிப்பதாகவும்; பிள்ளைகளின் கல்வியைப் பறிப்பதாகவும் மாறிவிட்டது. மீனவக் கிராமங்களிலிருந்து செம்மஞ்சேரிக்கு விரட்டியடிக்கப்பட்ட மீனவப் பெண்கள் வயிற்றுப்பிழைப்புக்காக சிறுநீரகத்தை விற்ற சம்பவங்களும்; செம்மஞ்சேரியிலும் கண்ணகி நகரிலும் வாழ்வைத் தொடர முடியாமல் தற்கொலை செய்துகொண்டவர்களது பட்டியலுமே இவ்வுண்மையை விளங்கச் செய்யும்.

பன்னாட்டு மென்பொருள் நிறுவனங்களுக்கு அடிநிலம் முதற்கொண்டு அனைத்து வசதிகளையும் தாமாகவே செய்து தந்து நகரின் மையப்பகுதியில் அவர்களை அமர்த்தும் அரசு, தமது கடும் உழைப்பின் மூலம் இந்த நகரத்தையே உருவாக்கி, அதன் இயக்கத்திற்கும் ஆதாரமாய் அமைந்த உழைக்கும் மக்களை, இப்பொழுது வேண்டாத குப்பைகளைப் போல நகருக்கு வெளியே தூக்கி வீசுகிறது.

இது, உழைக்கும் மக்கள் மீது அரசு ஏவும் நவீன தீண்டாமை; மறுகாலனியாக்கக் கொள்கை உருவாக்கியிருக்கும் நவீன சேரிப்பகுதிகள் தான், இந்த செம்மஞ்சேரிகள்.

__________________________________________________

– புதிய ஜனநாயகம், நவம்பர் – 2012
__________________________________________________