Friday, December 2, 2022
முகப்புகட்சிகள்அ.தி.மு.ககாடுவெட்டி குருவை கைது செய் ! வன்னியர் சங்கத்தை தடை செய் !!

காடுவெட்டி குருவை கைது செய் ! வன்னியர் சங்கத்தை தடை செய் !!

-

ஆதிக்க சாதிவெறி சங்கங்கள் அனைத்தையும் தடை செய் !
– சென்னையில் தரும்புரி தலித் மக்கள்மீதான வன்னிய சாதிவெறித் தாக்குதலைக் கண்டித்து மனித உரிமைப் பாதுகாப்பு மையம் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் விரிவான செய்தித் தொகுப்பு.

நத்ததிலும், அண்ணா நகரிலும்,
கொண்டாம்பட்டி செங்கல் மேட்டிலும்
அழிச்சிட்டான் அழிச்சிட்டான்
தலித் மக்களின் சொத்துக்களை
,
இரண்டு தலைமுறை உழைப்பை

ஒன்னு விடாம அழிச்சிட்டான் !

பட்டா, சிட்டா, பாட புத்தகம்
கட்டில்
, பீரோ, துணியெல்லாம்
தீ
வச்சு கொளுத்திட்டான் !

கொள்ளை போச்சு கொள்ளை போச்சு
கஷ்டப்பட்டு சேத்து வச்ச
பணமும் நகையும் கொள்ளை போச்சு
!

தமிழக அரசே தமிழக அரசே !
தடை செய் தடை செய்
வன்னியர் சங்கம் உள்ளிட்ட
ஆதிக்க சாதி சங்கங்களை
உடனடியாக தடை செய் !

கைது செய் சிறையிலடை
சாதி வெறியை தூண்டி வரும்
காடு வெட்டி குருவை
வன்கொடுமை தடுப்பு சட்டத்தில்
கைது செய் சிறையிலடை !

மூச்சு விட்டாலும் போஸ்டர் ஒட்டினாலும்
மோப்பமிடும் உளவுத்துறையே
ஊரைக்கொளுத்தி சூறையாடியதை
வேடிக்கை பார்த்த மர்மம் என்ன ?

துணை போனாயே துணை போனாயே
உளவுத்துறையே
, காவல் துறையே
சாதி வெறிக்கு துணை போனாயே !

தாக்குதலை தடுக்காத
தருமபுரி போலீசாரை

கைது செய், டிஸ்மிஸ் செய் !

தஞ்சையிலே வெண்மனி,
மேலவளவு முருகேசன்,
திண்ணியம் கருப்பையா,
விருத்தாசலம் முருகேசன்,
கயர்லாஞ்சி போட்மாங்கே                              

ஆதிக்க சாதி வெறியாட்டத்தால்
எத்தனை இழப்பு எத்தனை இழப்பு
,
எத்தனை கொலைகள் எத்தனை கொலைகள் ?

தமிழக அரசே தமிழக அரசே
தடை செய் தடை செய்
வன்னியர் சங்கம் உள்ளிட்ட
ஆதிக்க சாதி சங்கங்களை
உடனடியாக தடை செய்
!

வை கடந்த 29-ம் தேதி மாலை சென்னை மெமோரியல் அரங்கம் முன்பு மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் சென்னை கிளை நடத்திய ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப்பட்ட முழக்கங்கள். தருமபுரியில் நிகழ்த்தப்பட்ட வன்னிய சாதிவெறியாட்டத்தை கண்டித்து நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சென்னை உயநீதிமன்ற வழக்குரைஞர்களும், பல்வேறு ஜனநாயக சக்திகளும் நூற்றுக்கணக்கில் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர். பாதிக்கப்பட்ட நத்தம் காலனி மக்கள் சம்பவத்தை நேரடியாக விளக்கினர். ம.உ.பா.மையத்தின் உண்மை அறியும் குழுவின் அறிக்கையும் வெளியிடப்பட்டது.

தோழர் மில்டன்
தோழர் மில்டன்

ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கிய ம.உ.பா.மையத்தின் சென்னை மாவட்ட செயலாளர் ஜிம்ராஜ் மில்டன்

தாக்குதல் சம்பவத்தை அறிந்த உடனே ம.உ.பா.மை தோழர்கள் களத்திற்கு சென்றதையும் இது திடீர் தாக்குதல் அல்ல பொருளாதார ரீதியாக சேதம் விளைவிக்க வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டு பொறுமையாக, நிதானமாக திட்டமிட்டு நடத்திய கொள்ளைச் சம்பவம்

என்பதை விரிவாக விளக்கினார்.

தலைமை உரையை அடுத்து பேச வந்த வழக்குரைஞர் அருள் மொழி

இந்த நாடு ஒரு புனித பூமி என்பதற்கோ, அல்லது வல்லரசு ஆவதற்கோ, முன்னேற்றத்தை பற்றி பேசுவதற்கோ எந்த தகுதியும் அற்றது. பேசுவதெல்லாம் பெரிய பேச்சு ஆனால் நடைமுறையில், மனசுக்குள் இருப்பதெல்லாம் கசடு, அழுக்கு, அயோக்கியத்தனம். அதை மறைத்துக்கொண்டு நாகரீக மனிதர்களைப் போல வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

அருள்மொழி
வழக்குறைஞர் அருள்மொழி

படிக்காதவனை விட படித்தவன் தான் அதிகமாக சாதி பார்க்கிறான். ஒவ்வொரு ஆதிக்க சாதியும் நாங்கள் அந்த மன்னர் பரம்பரையில் வந்தவர்கள், இந்த மன்னர் பரம்பரையில் வந்தவர்கள் என்று பெருமைபட்டுக் கொள்கிறார்கள்.

சென்னையிலுள்ள ஓட்டல்களில் வேலை செய்பவர்களில் அரியலூர், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் தான் பெரும்பான்மையானவர்களாக இருப்பார்கள். சொந்த ஊரில் ஊரும் சேரியுமாக இருப்பவர்கள் சென்னையில் ஒன்றாக டேபிள் துடைக்கிறார்கள், ஒன்றாக தங்கியிருக்கிறார்கள் இவர்களில் யார் உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி என்று கூற முடியும், அனைவருமே உழைப்பாளிகள் தான்

என்று சாதிவெறியை சாடினார்.

அவரையடுத்து பேசிய சென்னை உயர்நீதி மன்ற வழக்குரைஞர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் கிருஷ்ணகுமார்

எங்களுடைய சங்கம் பல ஆயிரக்கணக்கான வழக்குரைஞர்களை உறுப்பினர்களாக கொண்ட சங்கம் ஆனாலும் நாங்கள் இப்படி ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்தாமல், மக்களைப் பற்றி கவலை இல்லாமல் இருக்கிறோம் அது தவறு தான் இனிமேல் செய்ய வேண்டும் என்று கூறியவர். தருமபுரியில் யாருக்கும் யாருக்கும் கல்யாணம் நடந்தது மாட்டுக்கும் மனுசனுக்குமா நடந்தது ? ஆணுக்கும் பெண்ணுக்கும் தானே நடந்தது பிறகு எதுக்கு குதிக்கிறார்கள் ?

சாதி வெறியை தூண்டுவதற்கெல்லாம் சங்கம் வைத்திருக்கிறார்கள். சங்கம் என்பது எதற்காக உருவானது தெரியுமா ? பாதிக்கப்படும் ஒரு பிரிவு மக்கள் நமக்கெல்லாம் பிரச்சினை இருக்கு அதனால நாம் எல்லாம் ஒன்றாக சேருவோம் என்று பாதுகாப்பிற்காகவும், உரிமைக்காகவும் ஒன்று சேருவதற்காக உருவானது தான் சங்கம். ஆனால் காடுவெட்டி குருவும் மற்ற ஆதிக்க சாதிவெறியர்களும் வைத்திருக்கின்ற சங்கங்கள் எதற்காக ? ஆதிக்கம் செய்வதற்காக. எனவே அரசு உடனடியாக இது போன்ற ஆதிக்கசாதி சங்கங்களை எல்லாம் தடை செய்ய வேண்டும்

என்று கூறி தனது உரையை முடித்தார்.

அடுத்ததாக பேசிய தோழர் மதிமாறன்

சாதி என்பது மேலிருந்து கீழாக ஒரு படிநிலை அமைப்பை கொண்டிருக்கிறது. ஒரு தலித் பையன் வன்னியப் பெண்ணையோ, அல்லது வேறு ஒரு ஆதிக்க சாதி பெண்ணையோ திருமணம் செய்யும் போது தான் இவர்களுக்கு பிரச்சினையே வருகிறது, அதுவே வன்னியப்பெண் அல்லது பையன் அந்த சாதிக்கு மேல் நிலையில் உள்ள சாதி பையனையோ பெண்ணையோ திருமணம் செய்தால் நம்ம சாதி என்ன அவங்க சாதி என்ன நமக்கு இதெல்லாம் ஒத்து வருமாம்மா என்று குலைந்து குலைந்து பேசுவார்கள். சாதி அமைப்பு இப்படிப்பட்ட படிநிலையில் தான் இயங்குகிறது.

உண்மை அறியும் குழு அறிக்கை வெளியிடப்படுகிறது
உண்மை அறியும் குழு அறிக்கை வெளியிடப்படுகிறது

சாதி மறுப்பு திருமணத்திற்கு எதிராக பேசும் எவனாச்சும் தனது சொந்த சாதியை சேர்ந்த பெண்களை இனிமேல் எந்த சொந்த சாதிக்கார ஆணும் சொந்த சாதி பெண்ணை சுரண்டக்கூடாது, வரதட்சனை வாங்கக்கூடாது, இதுவரைக்கும் வாங்குன வரதட்சனையை கூட திருப்பி கொடுத்துடனும் இல்லைன்னா நடவடிக்கை எடுப்போம்னு சொல்லச் சொல்லுங்க பார்ப்போம். அப்படிச் சொன்னா வன்னியனே இவனுங்க வாயில குத்துவான்.

இந்த சாதி வெறியர்களை தண்டிக்க வேண்டுமானால் அவர்கள் கொள்ளையடித்த தலித் மக்களின் சொத்துக்களை எல்லாம் பறிமுதல் செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க வேண்டும். பொருளாதார ரீதியாக அவர்கள் இழக்கும் போது தான் இனி வரும் காலங்களில் இது போன்ற செயல்களில் ஈடுபட மாட்டார்கள்.

சாதி வெறியர்கள் எல்லோரும் இப்போது ஒன்று கூட ஆரம்பித்திருக்கிறார்கள். சாதி மறுப்பு திருமணங்கள் செய்தால் வெட்டிருவேன், கொளுத்திருவேன்னு பேசுறானுங்க. ஆனால் எனக்கு ஒரு நம்பிக்கை இருக்கு. இவனுங்க குடும்பத்தில் இருக்கின்ற பேரக்குழந்தைகள் இவங்களுக்கு தக்க பாடம் கற்பிப்பார்கள் என்கிற ஒரு நம்பிக்கை இருக்கு. அந்த குழந்தைகள் வளர்ந்து பெரியாளாகி காதல் திருமணம் செய்து கொள்ளும் போது அவர்களுடைய தாத்தாக்களிடமிருந்து அவர்களை காப்பாற்றி அவர்களுக்கு தோழர்கள் தான் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்

என்று கூறி முடித்தார்.

அடுத்ததாக ம.உ.பா.மையத்தின் உண்மை அறியும் குழு அறிக்கை வெளியிடப்பட்டது. அறிக்கையை ம.உ.பா.மை மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜு வெளியிட நத்தம் காலனியை சேர்ந்த முருகனும், அகஸ்டினும் பெற்றுக்கொண்டனர்.

அதையடுத்து பேச வந்த மூத்த வழக்குரைஞர் சங்கரசுப்பு

தருமபுரி மாவட்டத்தில் மிகவும் செல்வாக்குடன் இருந்த நகசல்பாரி இயக்கம் சிதறுண்டதால் தான் இன்று இந்த நிலை ஏற்பட்டிருப்பதாக அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள். அது உண்மை.1970 களில் அந்த பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலத்தை வைத்திருந்த கேசவரெட்டி என்கிற நிலச்சுவாந்தார் ஊரிலுள்ள எல்லா பொம்பளையும் என் பொண்டாட்டி தான் என்று சொன்னான். அந்த கொடுங்கோலன் நக்சல்பாரி இயக்கத்தால் அழித்தொழிக்கப்பட்டான். அதே போல கியூ பிராஞ்ச் போலீசாரால் நிலச்சுவாந்தார்கள் சங்கம் என்கிற பெயரில் ஒரு சங்கம் உருவாக்கப்பட்டு அதற்கு வெள்ளய குண்டன் என்கிற நிலச்சுவாந்தாரை தலைவனாக்கினார்கள். அவனும் நக்சல்பாரி தோழர்களால் அழித்தொழிக்கப்பட்டான். குறிப்பாக ரவுடி ரங்கன் என்பவனுடைய ஆதிக்கமும், அட்டகாசமும் தருமபுரி மாவட்டத்தில் அதிகமாக இருந்தது. அவனுக்கும் இயக்கத்தால் குறிவைக்கப்பட்டது ஆனால் அவன் தப்பி விட்டான்.

இப்படி உழைக்கும் மக்களின் காவலர்களாக இருந்தார்கள் நக்சல்பாரிகள். அவர்களை ஒழித்துக் கட்டுவதற்காக அரசு பல போலி மோதல்களை நடத்தி தோழர்களை கொன்று குவித்தது. இன்று தர்மபுரியில் நக்சல்பாரி இயக்கம் இல்லாமல் போனதன் விளைவுகளை தான் நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

ஆர்ப்பாட்டத்திற்கு வருகை தந்தோர்
ஆர்ப்பாட்டத்திற்கு வருகை தந்தோர்

இந்த அரசு மக்களுக்கு ஒன்றும் செய்யாது. இது ஒரு செத்துப்போன அரசு. ஐந்து மணி நேரமாக நடந்த தாக்குதலை தடுக்காமல் வேடிக்கை பார்த்த அரசு இது. இன்று வரை ஜெயலலிதா இதற்கு ஒரு சிறு வருத்தத்தை கூட தெரிவிக்கவில்லை. இந்த சம்பவத்துக்கு இந்த அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். எனவே ஜெயலலிதா தார்மீக ரீதியில் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும்.

சேதமடைந்த சொத்துக்களை பற்றி அரசு அளிக்கும் அறிக்கைகளை எல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது. தேசிய தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் ஆணையம் இதற்கு பொறுப்பேற்று உண்மையான ஆய்வை நடத்தி மக்களுக்கு பழைய நிலையை மீட்டுத் தர வேண்டும் என்று கூறி முடித்தார்.

அடுத்ததாக ஆதிக்க சாதிவெறியர்களின் தாக்குதல், கொள்ளையடித்தலை நேரில் பார்த்த நத்தம் காலனியை சேர்ந்த முருகனும், அகஸ்டினும் சம்பவத்தை பற்றி விளக்கினர். அகஸ்டின் எழுப்பிய கேள்விகள் மனிதாபிமானமுள்ள அனைவரையும் பிடித்து உலுக்குவதாக இருந்தது. ஏன் நாங்க வீடு கட்டக்கூடாதா ? நாங்க பைக்கு வாங்க கூடாதா ? நல்ல சட்டை போட்டுக்க கூடாதா ? ஏன் எங்களை மட்டும் வாழ விடமாட்டேங்குறீங்க, நாங்க என்ன பாவம் பன்னினோம் ? என்று கேட்கும் போதே உடைந்து அழுதார். அவருடைய கண்ணீராலும் விம்மலாலும் கூட்டம் குற்றவுணர்வில் அமைதியானது.

அவரையடுத்து தருமபுரி மாவட்ட ம.உ.பா.மையத்தின் செயலாளர் ஜானகிராமன் உரையாற்றினார்.

எல்லா பத்திரிகைக்காரனும், டி.விக்காரனும் இதை சாதிக்கலவரம், சாதிக்கலவரம்னு எழுதுறானுங்க. இரண்டு தரப்பு எதிரெதிராக மோதிக்கொள்வது தான் கலவரம், ஆனால் இங்கே நடந்திருப்பது என்ன ? ஒரு ஆதிக்க தரப்பின் திட்டமிட்ட தாக்குதல் நடந்திருகிறது. எனவே முதலில் இது கலவரமல்ல.

ராமதாசு அடிக்கடி தருமபுரிக்கு வந்து போவார். வன்னியர் சங்க கூட்டமும் அடிக்கடி நடக்கும். முதல்ல ஈழத்தமிழனை பத்தி பேசிப்பார்த்தாரு வேலைக்கு ஆகல, அப்புறம் தமிழ், தமிழன்னு பேசிப்பார்த்தாரு அதுவும் வேலைக்கு ஆகல இப்படி எதுவும் எடுபடாம செல்லாக் காசாகிப்போன ராமதாசு இப்ப சாதியை கையிலெடுத்திருக்கிறார். இது தான் அவருடைய புதிய பாதை, புதிய அரசியல், புதிய நம்பிக்கை.

நக்சல்பாரி என்கிற அந்த வார்த்தை தருமபுரி மாவட்டத்தில் சாதி ஒடுக்குமுறையை தடுத்து நிறுத்திக்கொண்டிருந்தது. இப்போதும் அது விவசாயிகள் விடுதலை முன்னணி போன்ற புரட்சிகர அமைப்புகளால் தடுக்கப்படுகிறது. இல்லை என்றால் அது இன்னமும் அதிகரித்திருக்கும்.

எந்த வன்னியனாவது அரசு அலுவலகங்களில் போய் லஞ்சம் கொடுக்காம நான் வன்னியன் உயர்ந்த சாதி எனக்கு சலுகை கொடுன்னா குடுத்துருவானா, இல்லை உலகமயமாக்கம் சாதி பார்த்து தான் தாக்குமா. மறுகாலனியாக்கத்துக்கு முன்னாடி எல்லோரும் தான் அழியனும்.

ம்க்கள் இப்படி சாதி ரீதியாக பிரிந்து கிடப்பது தான் அரசுக்கும் நல்லது. இல்லைன்னா அவனோட இவன் இவனோட அவன்னு சேர்ந்துக்கிட்டு விலைவாசி உயர்வுக்கெதிராவும், மின்வெட்டுக்கு எதிராவும் போராடுவானுங்க. சாதிவெறி அவர்களை பிரித்து வைத்திருப்பது அரசுக்கு நல்லது தானே. அரசு இந்த தாக்குதலை தடுக்காமல் வேடிக்கை பார்த்ததற்கு இதுவும் கூட ஒரு காரணம்.

தமிழகத்தில் சாதி சங்கங்களை தடை செய்தால் தான் மக்களை சாதி வெறியர்களிடமிருந்து மீட்க முடியும். எனவே ஆதிக்க சாதிவெறி சங்கங்கள் அனைத்தையும் உடனடியாக தடை செய்ய வேண்டும் என்று கூறி முடித்தார்.

அடுத்ததாக பேசிய பு.ஜ.தொ.மு மாநில பொருளாளர் தோழர் விஜயக்குமார்

திராவிடக்கட்சிகளுக்கும், தேசியக்கட்சிகளுக்கும் மாற்றாக நாம் ஆட்சியை பிடித்துவிடலாம் என்று ராமதாஸ் கனவு கண்டு கொண்டிருக்கிறார். அதுக்கு அவர் கண்டுபிடிச்ச வழி தான் இந்த வீடு கொளுத்துற வேலை.

தோழர் விஜயகுமார்
தோழர் விஜயகுமார்

இவனுங்க எதை மானக்கேடா நினைக்கிறானுங்க. திவ்யா ஒரு மாட்டை கல்யாணம் பண்ணிக்கிட்டா அது மானக்கேடு. நாமெல்லாம் ஆறறிவு கொண்ட மனிதர்களாச்சே நம்ம சாதிப்பொண்ணு திவ்யா போய் ஒரு ஐந்தறிவு கொண்ட மாட்டை கல்யாணம் பண்ணிக்கிச்சே இது மானக்கேடு இல்லையான்னு ராமதாசு தூக்குல கூட தொங்கிடுவாறு. ஏன்னா அவரு மான அவமானமெல்லாம் பாக்கக்கூடியவரு.

ஆனா ஒரு பொண்ணு ஒரு பையனை கல்யாணம் தானே கல்யாணம் பண்ணிக்கிட்டா இதில் என்னடா மானக்கேடு. ஜெயலலிதாகிட்ட செருப்படி வாங்குனப்ப வராத மானக்கேடா, கருணாநிதி காறித்துப்புன்னப்ப வராத மானக்கேடா ? அப்பல்லாம் வராத மானக்கேடு இவனுங்களுக்கு இப்ப மட்டும் வந்துருச்சாம்.

இந்த தாக்குதலில் போலீசின் பங்கு மிக முக்கியமானது. கடந்த இருபத்தி நான்காம் தேதி ஆவடியிலுள்ள டி.ஐ மெட்டல் பார்மிங் என்கிற நிறுவனத்தில் பு.ஜ.தொ.மு தொழிற்சங்கத்திலுள்ள தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 24 ம் தேதி மாலை நாலரை மணிக்கு உள்ளிருப்பு போராட்டத்தை நடத்துவது என்று முடிவு செய்கிறார்கள். மாலை நாலரை மணிக்கு நடக்கவிருக்கிற போராட்டத்தை மோப்பம் பிடித்துக் கொண்டு காலை எட்டு மணிக்கே ஆலைக்கு அருகில் வந்துவிட்ட உளவுத்துறை போலீசுக்கு தருமபுரியில் மிகப்பெரிய அளவுக்கு ஒரு தாக்குதலை நடத்த திட்டமிட்டிருப்பதை கண்டு பிடிக்க முடியவில்லையாம். இதில் போலீசுக்கும் பங்கு உண்டு.  இது உளவுத்துறையும், தமிழக போலீசும் சேர்ந்து நடத்திய வன்கொடுமை.

தர்மபுரி மாவட்டத்தில் அனைத்து சாதி மக்களும் தோளோடு தோள் கோர்த்து ஒன்றாக நின்றார்கள், சகோதரர்களாக வாழ்ந்தார்கள். எப்போது ? அங்கே நக்சல்பாரி இயக்கம் இருந்த போது அப்படி வாழ்ந்தார்கள். இன்று அது பின்னடைவுக்குள்ளாகியிருக்கிறது. இது தான் சாதித்திமிர் தலை தூக்க காரணம் என்று பிழைப்புவாத பத்திரிகைகளில் கூட எழுதுகிறார்கள்.

ஆம், நக்சல்பாரி இயக்கம் தான் சாதி வேறுபாடுகளை களைந்து அனைத்து சாதி மக்களையும் உழைக்கும் மக்களாக அணிதிரட்டும், அவர்களுடைய விடுதலைக்கு தலைமை தாங்கும் தகுதி நக்சல்பாரி இயக்கத்துக்கு மட்டும் தான் உண்டு என்கிற வகையில் தமிழர்களாய் அல்ல நக்சல்பாரிகளாய் அணிதிரள்வோம் என்று கூறி எனது உரையை நிறைவு செய்கிறேன் என்று முடித்தார்.

அடுத்ததாக ம.உ.பா மைய மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜு

கடந்த இரண்டு நாட்களாக மூன்று கிராம மக்களும் காலவரையரையற்ற உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள். ஏழாம் தேதி காலை ஐம்பது லட்சம் ரூபாய் வீட்டுக்கு சொந்தக்காரராக இருந்த ஒருவர் எட்டாம் தேதி காலை தான் வாழ்ந்த ஊரில், பிறந்த மண்ணில் அகதியாக்கப்பட்டு சுற்றிலும் போலீசு காவல் நிற்க சாப்பிடறதுக்காக தட்ட எடுத்துக்கிட்டு லைன்ல நிக்கிறாரு. இரவு சாப்பாட்டை மதியமே வாங்கி வச்சுக்கனும்.

மூனு வேலைக்கும் சோறு கிடைக்கமாட்டேங்குது. இந்த அரசால் அந்த மக்களுக்கு சோறு கூட போடமுடியவில்லை. இந்த நிலை யாரால் வந்தது ? பூகம்பத்தால் வந்ததா, புயலால் வந்ததா. அங்கு ஒரு திட்டமிடப்பட்ட குற்றம் நடந்திருக்கிறது அதுவும் காவல்துறை கண்ணெதிரே நடந்திருக்கிறது. சென்னையில் நடந்த வங்கி கொள்ளையில் துப்பு துலக்கி வட மாநிலத்தை சேர்ந்தவர்களை திரிபாதி தலைமையில் சுட்டுக்கொன்ற ஜெயலலிதாவின் வளர்ப்பு நாய்கள் தருமபுரியில் என்ன புடுங்கிக்கொண்டிருந்தன? காவல்துறையின் கண்ணெதிரிலேயே ஆறு மணி நேரத்திற்கு தீ வைக்க முடியும் என்றால், கொள்ளையடிக்க முடியும் என்றால் தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி எங்கே இருக்கிறது,  சமமான அணுகுமுறை எங்கே இருக்கிறது ?

குற்றவாளி ராமதாசு, குற்றவாளி காடுவெட்டி குரு என்று பாதிக்கப்பட்ட மக்கள் வீதிகளில் வந்து சாட்சி சொல்கிறார்கள். வீதிக்கு வருபவர்கள் நீதிமன்றத்தில் வந்து சொல்ல மாட்டார்களா ? எங்கே கைதி, எங்கே விசாரணை, எங்கே கொள்ளையடிக்கப்பட்ட பணம் நகைகள் எல்லாம் ? முடியுமா இந்த அரசால்.

நாலு பேர் கொள்ளையடித்த நகைகளையே கூட கண்டுபிடிக்கமுடியாமல் யாராவது நகைக்கடை வியாபாரியை மிரட்டி வாங்கிட்டு வந்து கண்டுபிடிக்கப்பட்ட நகைகள் என்று ஐ.ஜி, டி.ஜி.பி, ஏ.டி.ஜி.பி என்று எல்லோரும் நகைகளை மேஜையில் விரித்து வைத்துக்கொண்டு ஊடகங்களை அழைத்து பறிக்கப்பட்ட நகைகளை திருப்பி ஒப்படைக்கிறோம் என்று விழா எடுக்கிறீர்களே இன்று ஏழு கோடிக்கும் மேல் தலித் மக்களுடைய சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது இந்த காவல்துறையால் அதை மீட்க முடியுமா ? கொள்ளையடிக்கப்பட்ட சொத்துக்களை உங்களால் திருப்பி வாங்கித்தர முடியுமா ? இன்றைக்கு சவால் விடுகிறோம் கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்கே உதித்தால் கூட உங்களால் இந்த ஆதிக்க சாதி வெறியர்களின் மயிரைக்கூட பிடுங்க முடியாது.

நண்பர்களே இது விலைவாசி உயர்வு பிரச்சினை அல்ல, அந்நிய முதலீடு பிரச்சினை அல்ல, அல்லது குடிநீர் பிரச்சினை, மின்வெட்டு பிரச்சினை அல்ல இது மனித குல நாகரீகத்திற்கும் காட்டுமிராண்டுகளுக்குமிடையே நடக்கக்கூடிய போராட்டம்.  இவன் வச்சிருக்க கட்சிக்கு பேரு பாட்டாளி மக்கள் கட்சியாம். தொடப்பக்கட்டைக்கு பட்டுக்குஞ்சம் கட்டுன மாதிரி பாட்டாளிகளை ஒன்றினைய விடாமல் தடுக்கிறவனுக்கு பேரு பாட்டாளி மக்கள் கட்சியாம்.

சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து வந்து தாக்குதலில் ஈடுபட்டவர்கள் எல்லாம் ஒரே கல்லூரியில், ஒரே சினிமாவில், ஒரே கடைத்தெருவில், ஒரே திருமணத்தில், ஒரே விழாக்களில் எங்களோடு கலந்துகொண்டவர்கள் சார் அவங்க கூட எங்களை அடிக்க வந்தாங்க சார் என்கிறார்கள் நத்தம் காலனி மக்கள். இது எப்படி முடிந்தது ?

பாட்டாளிகளுக்குள் மோதவிட்டு இரத்தம் குடிக்கக்கூடிய ஓநாய்களாக இராமதாசும், காடுவெட்டி குருவும் இருப்பதால் தான் இது நடந்திருக்கிறது. இதை தட்டிக்கேட்க ஜெயலலிதாவுக்கு மனம் இல்லையா, அதிகாரம் இல்லையா, அல்லது முடியவில்லையா ? அப்படி கேட்டால் ராமதாஸ் திருப்பி கேட்பார் நீ பரமக்குடியில் என்ன செய்தாயோ, தேவர் ஜெயந்தியில் என்ன செய்தாயோ அதை தான் நானும் செய்றேன்னு திருப்பி கேட்பார். கேட்பதற்கும் ஒரு தகுதி வேண்டுமல்லவா ?

அரசுக்கும் இது சாதகமாகிவிட்டது. பரவாயில்ல தமிழகம் முழுவதும் விலைவாசி உயர்வுக்கெதிராகவும், மின்வெட்டிற்கெதிராகவும் போராடக்கூடிய அனைத்து அமைப்புகளும் இன்னைக்கு தர்மபுரி பிரச்சினைக்காக ஆர்ப்பாட்டம் பண்ணிக்கிட்ருக்காங்க, நமக்கும் பிரச்சினை இல்லைன்னு நினைக்கிறாங்க. இந்த பிரச்சினையில் இரண்டு குற்றவாளிகள் இருக்கிறார்கள். ஒன்று அரசாங்கம் இரண்டு பா.ம.க.வும் வன்னியர் சங்கமும். இந்த குற்றவாளிகளை எப்படி தண்டிப்பது ?

அனைத்து பிரச்சினைகளும், கியூ பிராஞ்ச், ஸ்பெஷல் பிராஞ்ச், நக்சலைட் ஒழிப்பு பிரிவு, மாவட்ட அளவிலான மேல் மட்ட அதிகாரிகளிலிருந்து எஸ்.பி முதல், கிருஷ்ணாபுரம் காவல் நிலையத்திலுள்ள காண்ஸ்டபிள் ஏட்டு வரை அனைவருக்கும் தெரியும். அரசுக்கும் இது நேரடியாக தெரியும். தருமபுரியில் என்ன நடக்கிறது, என்ன நடக்கப்போகிறது என்பது டி.ஜி.பி.வரைக்கும் தெரியும் என்று நாங்கள் பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறோம். தர்மபுரி தாக்குதலை தெரிந்தும் தடுக்கத்தவறியதும், அதற்கு பொறுப்பும் இந்த மாநிலத்தின் டி.ஜி.பி.க்கு உண்டு என்று நாங்கள் குற்றம் சாட்டுகிறோம்.

நாம் அம்பேத்கர் கருத்துக்களை பேசுகிறோம் ஆனால் கடைபிடிக்கிறது இல்ல, பெரியார் கருத்துக்களை பேசுகிறோம் ஆனால் கடைபிடிக்கிறது இல்ல, மார்க்சியம் கம்யூனிசம் எல்லாம் பேசுகிறோம் ஆனால் கடைபிடிக்கிறது இல்ல. அதனால வர்ற பிரச்சினை தான் இது.

அப்பு பாலன் இருந்தவரை அங்கு சாதிப் பிரச்சினைகள் தலைதூக்கவில்லை. என்றைக்கு அவர்கள் சிலைகளாக மாறினார்களோ அப்போது அங்கே சாதிக்கலவரம் வந்துவிட்டது. வீட்டுக்கு ஒரு அப்பு பாலன்கள் உருவாக வேண்டிய நிர்பந்த்தத்தை இந்த அரசு நாயக்கன்கொட்டாய்க்கு ஏற்படுத்தியிருக்கிறது. இது தான் தருமபுரியில் நாங்கள் கண்டறிந்த உண்மை. ’இதற்கு மட்டும் சரியான தீர்வு கிடைக்கவில்லை என்றால் நாங்கள் சும்மா இருக்க மாட்டோம்’ என்கிறார்கள் அங்குள்ள இளைஞர்கள்.

போலிஸ்காரனும் அதிகாரிகளும் கேட்கிறாங்களாம் எதுக்கு இவ்வளவு பெரிய வீடு கட்டுன, உன்னை யாரு பல்சர் வாங்கச் சொன்னது, உன்னை யாரு ஏ.சி வாங்கச்சொன்னது, உன்னை யாரு பிரிட்ஜ் வாங்கச்சொன்னது, உன்னை யாரு கட்டில் வாங்கச் சொன்னது, உன்னை யாரு பீரோ வாங்கச் சொன்னதுன்னு கேட்கிறானுங்களாம். இனிமேல் எந்த அதிகாரியாவது உங்க கிட்ட அப்படி கேட்டால், இங்கு வந்திருக்கும் முருகன், அகஸ்டின் போன்ற இளைஞர்களே உங்கள் ஊருக்கு போய் சொல்லுங்கள், நாங்களும் உங்களோடு வருகிறோம். அப்படி கேட்கும் அதிகாரிகளை  ஊரிலேயே புடிச்சி கட்டி வைங்க. யார் வாங்கச்சொன்னது என்பதை முடிவு செய்வோம், நாம் எப்படி வாழ வேண்டும் என்பதை சொல்ல எவனுக்கும் அதிகாரம் கிடையாது என்பதையும் அவர்களுக்கு புரியவைப்போம்.

அந்த மக்களுடைய வீடுகள் எல்லாம் உருகுலைந்த நிலையில் காட்சியளிக்கின்றன. ஒவ்வொரு வீடும் பாழடைந்த வீடுகளைப் போல அரைகுறையாக இடிந்த நிலையில் நிற்கின்றன. ஒவ்வொரு நாளும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் வந்து போகிறார்கள். இவங்களாவது ஏதாவது செய்யமாட்டாங்களான்னு மரத்து போன முகங்களுடன் அனைவரிடமும் வீட்டிற்கு அருகிலேயே நின்று கொண்டு இது தாங்க வீடு, இத பாருங்க, இது தாங்க வீடு, இத பாருங்க என்று காலை முதல் மாலை வரை சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். உள்ளே நுழைவதற்கே குற்ற உணர்வாக இருக்கிறது. இந்த மக்களுக்கு என்ன தீர்வை நம்மால் தர முடியும், என்ன நீதியை நம்மால் பெற்றுத்தர முடியும் ?

இந்த பிரச்சினைக்கு மற்ற பிரச்சினைகளுக்கு நடப்பதை போல அடையாளமாக நடத்தப்படும் போராட்டங்களால் தீர்வு வரப்போவதில்லை. எண்ணற்ற தலித் அமைப்புகள், சென்னை முழுவதும் போஸ்டர்கள். இந்த பிரச்சினைக்காக போஸ்டர் ஒட்டாத தலித் அமைப்புகளே இல்லை. தங்களுடைய அமைப்பு இந்த பிரச்சினைக்கு செய்ய வேண்டும் என்று செய்கிறார்கள் ஆனால் அவர்களுடைய செயல்பாடுகள், கோரிக்கைகள் அனைத்தும் வரம்புக்குட்பட்டது.

ராமதாசு, கொங்கு வேளாள கவுண்டர்கள் சங்கம் என்று ஆதிக்க சாதிவெறியர்கள் எல்லாம் இப்போது ஒன்று கூடி பேசுகிறார்கள். வன்கொடுமை சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறதாம். சாதி மறுப்புத் திருமணத்திற்கு எதிராக மாநாடு நடத்துகிறார்கள். சாதிவெறியை தூண்டும் இவர்களை ஏன் இந்த அரசு கைது செய்யக்கூடாது ?

கூடங்குளத்தில் சாதாரன பெண்கள் மீது நூற்றுகணக்கில் வழக்குகளை போட்டு குண்டர் சட்டத்தில் வைத்திருக்கும் அரசு, கடல் பாசிகளை எடுத்து விற்கும் எழுபது வயது முதியவரைக் கூட குண்டர் சட்டத்தில் கைது செய்யும் அரசாங்கத்திற்கு ஏன் காடுவெட்டி குருவையும், ராமதாசையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய துணிச்சல் இல்லை, என்ன பயம் ? அது தான் ஆதிக்க சாதி உணர்வு. அவர்களுக்குள் ஒரு ஒற்றுமை இருக்கிறது. எனவே நாம் சாதி இந்துக்களிடம் பேச வேண்டும்.

பி.ஜே.பி. எப்படி முசுலீம்களுக்கு எதிரான கலவரங்களைத் தூண்டி ஆட்சியை கைப்பற்ற துடிக்கிறதோ அப்படி தலித் மக்களுக்கு எதிராக ஒரு கலவரத்தை நடத்தி ஆதிக்கசாதிகள் எல்லாம் அதிகாரத்திற்கு வரத்துடிக்கிறார்கள் அல்லது அதிகாரத்தை தங்கள் கைகளில் வைத்திருக்க நினைக்கிறார்கள். இதனால் தலித் மக்கள் மட்டும் பாதிக்கப்படப் போவதில்லை. ஜனநாயகத்திற்காக பேசக்கூடியவர்கள், உரிமைகளுக்காக பேசக்கூடியவர்கள், புரட்சிக்காக பேசக்கூடியவர்கள், தான் உண்டு தன் வேலை உண்டு என்று நேர்மையாக வாழக்கூடிய அனைவரும் தான் பாதிக்கப்படுவார்கள். இது சமூகத்திற்கு ஏற்பட்டுள்ள புற்று நோய். இதற்கு அறுவை சிகிச்சை செய்தே தீர வேண்டும். முடியாதா ? முடியும், நாம் வீதிகளில் இறங்கி மக்களிடம் வேலை செய்தால் முடியும்.

பா.ம.க. முன் நின்று நடத்திய கண்ணகி-முருகேசன் கொலை வழக்கில் இழுத்துக்கிட்டே போய் சமாதானம் பன்றது தான் அரசாங்கம். கொலைக்கே அப்படின்னா தர்மபுரி பிரச்சினைலையும் விசாரிக்கிறேன் விசாரிக்கிறேன்னு நாலஞ்சு வருசம் சார்ஜ் ஷீட் போட்டு, அப்புறம் சி.பி.சி.ஐ.டி விசாரிச்சி சி.பி.ஐ விசாரிச்சி. அஞ்சு பேர் கொள்ளையடிச்சதையே கண்டுபிடிக்க முடியாத போலீசு ஐநூறு பேரை விசாரிச்சு கண்டுபிடிக்கப்போறானா. ஒவ்வொருத்தனையா நிக்க வச்சு அடையாளம் காட்டி சாட்சி சொல்லி அப்புறம் கீழ்கோர்ட்ல தண்டனை கொடுத்து உடனே மேல் கோர்ட்ல பெயில் வாங்கி அப்புறம் சுப்ரீம் கோர்ட்ல கேஸ் முடிஞ்சு போயிரும் அவ்வளவு தான். அப்புறம் அனைவரும் மறந்துவிடுவார்கள். இது தான் இவர்களுடைய திட்டம்.

நாங்கள் இன்னொரு சந்தேகத்தையும் ஆணித்தரமாக முன் வைக்கிறோம். இந்த தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கிறது. இதற்கு பின்னால் அதிகார வர்க்கத்தின் உயர்பதவிகளில் உள்ள வன்னிய சாதியை சேர்ந்தவர்கள் மூளையாக செயல்பட்டிருக்க வாய்ப்பு உண்டு. ஏனென்றால் உணர்சிவசப்பட்ட ஒரு கும்பல் என்ன செய்யும், கையில் கிடைப்பதையெல்லாம் எடுத்து அடிக்கும், தாக்கும். அவ்ர்கள் நினைத்திருந்தால் ஐம்பது பேரைக்கூட கொன்றிருக்க முடியும். ஒரு சில வீடுகளில் குழந்தைகளையும் பெண்களைளையும் வைத்து பூட்டியிருக்கிறார்கள், ஆனால் யார் மீதும் ஒரு சின்ன அடி கூட விழவில்லை. எனவே தெளிவாக ஒரு முடிவை எடுத்து ஆளுக்கு எந்த சேதாரமும் வரக்கூடாது என்று திட்டமிட்டு ஊரை கொள்ளையடித்திருக்கிறார்கள்.

குருவி சேர்ப்பது போல கொஞ்சம் கொஞ்சமாக, கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் சேர்த்து வைத்த பணங்களையும், நகைகளையும் திருடிக்கொண்டார்கள். அதையெல்லாம் மொத்தமாக சேர்த்தால் பா.ம.க ஒரு ஓட்டுக்கு ஐயாயிரம் கொடுத்து தருமபுரியில் ஜெயிக்க முடியும். அல்லது சுப்ரீம் கோர்டில் பல ஆண்டுகளுக்கு வழக்கு நடத்த முடியும். அல்லது கொள்ளையடித்தவர்களை எல்லாம் ’தியாகி’களாக்கி அவர்களுக்கு சாகும் வரை பென்ஷன் தொகை கொடுக்க முடியும்.

தோழர் ராஜு
தோழர் ராஜு

இப்போதைக்கு நமக்கு அரசு தான் குற்றவாளி. குற்றவாளிகளை இந்த அரசு என்ன செய்தது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு என்ன நிவாரணம் வழங்கப்பட்டது ? நாங்கள் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் சார்பில் கோரிக்கை வைத்திருக்கிறோம். இந்த பிரச்சினையில் சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று. போலீசின் வேலை கிரைமை விசாரிப்பது மட்டும் தான். அதாவது கொள்ளையடிக்கப்பட்டது, வீடுகள் கொழுத்தப்பட்டது அதற்கு என்ன தண்டனை அத்தோடு போலீசின் வேலை முடிந்துவிட்டது.

தாக்குதலில் ஈடுபட்டவர்களின் நோக்கம், பின்னணி, இதில் யார் என்ன நோக்கத்திற்காக செயல்பட்டார்கள், எதிர்காலத்தில் இது போல நடைபெறாமல் இருக்க என்ன மாதிரியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதை பற்றியெல்லாம் முழுமையாக விசாரிக்க வேண்டும். இந்த சம்பவத்தில் மாநிலத்தின் பெரிய சாதிக்கட்சி தலைவர் ராமதாஸ், காடுவெட்டி குரு போன்றோர் முன் நின்று செயல்பட்டிருக்கின்றனர் என்கிற போது ஒரு ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதியின் தலைமையிலான விசாரணை கமிஷன் தான் இந்த தாக்குதலை பற்றி முழுமையாக விசாரித்து, இது யாருடைய மூளையில் யாருடைய நலன்களுக்காக செய்யப்பட்டது என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க முடியும்.

மும்பை கலவரத்தில் சிறீ கிருஷ்ணா கமிஷன் பால்தாக்ரேவை குற்றவாளி என்று அறிவித்தது. சதாசிவம் கமிஷன் அதிரடிப்படையின் அட்டூழியங்களை பட்டியலிட்டு ஐந்து கோடி ரூபாய் இழப்பீட்டை வழங்க வேண்டும் என்று அறிவித்தது. அதைப் போல இழப்பீடுகளை முடிவு செய்ய இந்த கலவரத்தினுடைய பயணாளி யார், யாருக்காக இந்த தாழ்த்தப்பட்ட மக்கள் அடித்து நொறுக்கப்பட்டார்கள், எது சாதாரண மனிதனை கூட கொள்ளையில் ஈடுபட தூண்டியது உள்ளிட்ட அனைத்தையும் முழுமையாக விசாரிக்க வேண்டும். அதை ஒரு தலைமை நீதிபதியின் கீழ் அமைக்கப்பட்ட குழு தான் செய்ய வேண்டும் என்று கோரியுள்ளோம்.

அதே நேரத்தில் சி.பி.ஐ யும் ஒரு போஸ்ட் பாக்ஸ்தான். போலீசு கூட பரவாயில்லைன்னு சொல்ற அளவுக்கு சி.பி.ஐ ரொம்ப மட்டம். வழக்கறிஞர் சங்கர சுப்பு மகன் கொலை வழக்கில் அவரே பிளாடால் அறுத்துக்கொண்டு இறந்துட்டதா கேசை முடிச்சிட்டானுங்க. ஹைகோர்ட்ல வழக்கு நடந்த போது ஜட்ஜ் கேட்ட கேள்விக்கு சி.பி.ஐ வழகறிஞரால பதில் சொல்ல முடியல. சி.பி.ஐ அப்படித்தான் இருக்கிறது.

நிலப்பிரச்சினையில வீரபாண்டி ஆறுமுகத்தை ஆறுமாதம் சிறையிலடைத்த இந்த அரசாங்கத்துக்கு ஒரு நிலத்தையே அழித்த ராமதாசையும், காடுவெட்டி குருவையும் ரெண்டு மாசம் தூக்கி உள்ள வச்சா என்ன ஆதரவு கொறைஞ்சிறப்போவுது. இவனுங்களை புடிச்சு உள்ள போட்டா தலித் மக்கள் எல்லாம் உங்கள் பின்னால் அணிதிரளுவார்களே. ஏன் அச்சம் ? எனினும் அச்சப்படுகிறார்கள்

வன்னியர் சங்கத்தை தடை செய் என்று நாம் பிரசுரத்தை கொடுத்த உடன் அ.தி.மு.க வழக்கறிஞர், தி.மு.க வழக்கறிஞர், ம.தி.மு.க வழக்கறிஞர் எல்லோரும் ஒன்று சேர்ந்து கொண்டு அதெப்படி அப்படி சொல்லலாம் என்கிறார்கள்.

அதை நாங்கள் சொல்வதால் தான் வாதிடுகிறார்கள். ஏனென்றால் அதை சொல்லுகின்ற தகுதியும், ஆற்றலும், அறிவும் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்திற்கு இருக்கிறது. இவர்கள் சொன்னால் இறுதி வரை பின்வாங்க மாட்டார்கள். உறுதியாக நிற்பார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும். அவர்கள் மிரட்டினால் பயந்து கொண்டு ஓடுவதற்கு நாங்கள் ஒன்றும் பிழைப்புவாதிகள் அல்ல. நாங்கள் ஆதாயத்திற்காக யாருடனாவது கூட்டு சேர்வதற்காக காலம் பார்த்துக்கொண்டிருப்பவர்களும் அல்ல.

கருணாநிதி உயர்நீதி மன்றத்திற்கு வந்த போது வெறும் ஆறே ஆறு பேர் வழக்கறிஞர்களை அடித்து நொறுக்கிய காவல் துறைக்கு எதிராக கருணாநிதிக்கு கருப்புக்கொடி காட்டிய போது தி.மு.க வழக்கறிஞர்கள் எல்லாம் சூழ்ந்துகொண்டு கடுமையாக தாக்கிய போதும் போலீசை எதிர்த்து முழக்கமிட்டனர். கருணாநிதி மறுநாள் எங்கே கருப்புக் கொடி காட்டலாம், எங்கே காட்டக்கூடாது, சொல்லிட்டு காட்டனுமா, சொல்லாம காட்டனுமான்னு ஒன்றரை பக்கத்திற்கு சட்டமன்றத்தில் விளக்கம் கொடுத்தார்.

அப்போது அ.தி.மு.க அமைச்சர்கள் உங்களை பார்க்க ஜெயலலிதாவை நாங்கள் அழைத்து வருகிறோம் நீங்கள் போய் மருத்துவமனையில் படுத்துக்கொள்ளுங்கள் என்று எங்களிடம் பேசினார்கள். நாங்கள் இதை ஜெயலலிதாவுக்காக செய்யவில்லை, வழக்கறிஞர்களின் உரிமைக்காக செய்தோம் என்று கூறி ஜெயலலிதாவை சந்திக்க மறுத்துவிட்டோம். நாங்கள் அன்று மருத்துவமனையில் படுத்திருந்தால் அரசு வழக்கறிஞராகவோ, வாரியத்தலைவராகவோ ஏதோ ஒரு பதவிக்கு சென்றிருக்க முடியும். அதற்கு அ.தி.மு.க வில் வாய்ப்புண்டு ஆனால் நாங்கள் சாதாரண மக்களுக்காக எத்தகைய அடக்குமுறைகளையும் எதிர்கொள்ளக்கூடிய துணிவோடும், ஆற்றலோடும் இயங்கிக்கொண்டிருக்கிறோம்.

இப்படிப்பட்ட அரசு எப்படி சாதிவெறியர்கள் மீது கை வைக்கும். வைக்காது. சாதி வெறியர்களையும் அவர்களுடைய சங்கங்களையும் ஒழித்துக்கட்ட வேண்டுமானால் தர்மபுரி மாவட்டத்தில் மீண்டும் நக்சல்பாரிகள் பிறக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டிலிருந்தும்  மீண்டும் அப்பு, பாலன்கள் பிறக்க வேண்டும். என்று கூறி தனது கண்டன உரையை நிறைவு செய்தார்.

மூத்த வழக்குரைஞர் என்.ஜி.ஆர் பிரசாத் உடல்நிலை சரியில்லாததாலும், பேரா.கருணானந்தம் வெளியூர் சென்று திரும்ப முடியாத காரணத்தாலும் பங்கேற்க முடியவில்லை என்று தகவல் அனுப்பியிருந்தனர்.

ஆதிக்க சாதிவெறியர்களுக்கு எதிராக வடிக்கப்பட்ட முழக்கங்கள் சாலைகளில் கடந்து செல்லக்கூடியவர்களை சற்று நேரம் நின்று கவனிக்க வைக்கும் விதத்தில் இருந்தது. நானூறு பேருக்கும் அதிகமானவர்கள் கலந்துகொண்ட இந்த ஆர்ப்பாட்டம் சாதி ஆதிக்க வெறியர்களிடமிருந்து தமிழக உழைக்கும் மக்களை மீட்டெடுக்க என்ன செய்ய வேண்டும் என்பதை அனைவருக்கும் உணர்த்தியது.

________________________

– வினவு செய்தியாளர்
___________________________

 1. தமிழ் நாட்டில்,அபாயகரமாக ஆதிக்க சாதியினர் ஒடுக்கப்படுகின்ற மக்களுக்கு எதிராக ஒன்றிணைந்து செயல்பட திட்டமிட்டிருக்கின்றனர். ஆதிக்க சாதி ஒருங்கிணைப்பை மனதில் வைத்தே ராமதாஸ் ‘புதிய பாதை, புதிய அரசியல’ என்று சில மாதங்களுக்கு முன்பு சொல்லியிருக்க வேண்டும். இந்த அபாயத்தை புரிந்து கொண்டு எதிர் செயல்பாட்டை வகுக்க யாரும் முன்வரவில்லை. இந்து மதவெறி எதிர்ப்பிலும் இப்படித் தான் சி.பி.எம்., சி.பி.ஐ மற்றும் தி மு க ஆகியவை விருப்பார்வம அற்று இருந்தன. அந்த அலட்சியமே இப்போதும் தெரிகிறது.

  இந்த ஆர்ப்பாட்டமும், அதில் கலந்து கொண்டவர்களின் உரையும் நம்பிக்கையளிக்கும் விதமாக இருக்கிறது.

 2. Every one comments very bad about non dalits . why dont you look at the other side of the coin???In most of the cases ,PCR act is being misused by a group of dalits to rule over the other caste people for making money and they are targeting other caste girls to take revenge.just like that dont blame non dalits and because of you people they are doing all nonsense and insulting the non dalits!!!!!

 3. சாதி,மதம் என்ற தோரனையில் வலம்வந்த அனைத்து இந்து மதவாதிகளின் முகத்தில் கரியை வாரி பூசியது குஜராத் படுகொலை சம்பவம்.தருமபுரியிலும் வன்னிய சாதியின் முகத்திலும் மலத்தை வரி பூசியுள்ளதை அனைத்து பத்திரிக்கைகளும் ஊடகங்களும் வெளிகொணர்ந்த போதும் இந்த அரசு மவுனம் சாதிப்பதில் இருந்து தெரிகிறதல்லவா ?
  ஈமெயிலில் தகவல் கொடுத்த பைத்தியகாரனை கூட பிடித்த இந்த அரசும்,போலிசும் மேடைபோட்டு சதிவெறியூட்டி தாக்குதல் தொடுத்து ஊரையே சூரையாடிய இந்த விசகிருமிகளை ஏன் கைது செய்ய முடியவிலை?
  இதுதான் இந்த அரசும்,இந்திய ஜனநாயகமும்,இந்துமதமும் செய்கின்ற யோக்கிதை.
  இனிமேலும் சாதி ,மதவதியாகவும்,இன மொழிவதியாகவும் அணிதிரள்வதை விடுத்து,உழைக்கும் வர்க்கமாக திரள்வோம்.சதிவெறியர்களிடம் இருந்து மானுடத்தை காப்பது நம்முன் உள்ள கடமையாகும்.

 4. சாதியாதிக்க வெறியர்களை அறுத்தெறியும் போர்வாளாய் .இருந்தது தோழர்களின் உரை .சாதி வெறியங்கள் ராமதாஸ் .கடுவேட்டிகுரு .இவர்களை உழைக்கும் பாட்டாளி வர்க்கம் ,விடாது ….அதுவரை பிரசார போர் ஓயாது.

 5. vinavu-ku dharmapuri sambavam pothum pola.innum evolavu nalaiku than ippudiea usupeathuvinga.neenga intha mathiri ealuthi ealuthi than intha naatta piruchu vachirukeenga.

 6. சாதியை ஒழிக்கும் முன், தலித் மக்களுக்கு ஒழுக்கத்தையும், சுத்தத்தையும் சொல்லி குடுங்க…. ஏற்றத்தாழ்வு இறைவன் படைப்பிலேயே உண்டு, அதை யாராலும் மாற்ற முடியாது. ஆனானப்பட்ட காந்தியாலேயே இந்த விசயத்தில ஒன்னும் பண்ண முடியல…நீங்க எல்லாம் எம்மாத்திரம்????

  • பிறப்பிலேயே என்னய்யா ஏற்றத்தாழ்வு இருக்கு.எல்லோரும் பத்து மாசம்தான்.ஒசந்த சாதின்னு சொல்லிக்கிற பன்னாடைங்களுக்கு எல்லாம் ஒரு வருசமா.இன்னும் அசிங்கமா சொல்லிறுவேன் .வினவுல மாடரேட் பண்ணிருவாங்கன்னு இத்தோட உடுறேன்.உங்க கடவுளே அப்படித்தான் படைக்கிறான்னா தேவநாதனை ஜெயேந்திரனை மேல்சாதியில பொறக்க வச்சிருக்கானே அவனும் உன்னை போல கூறு கெட்டவனா.தலித்கள் ஒழுக்கமில்லாதவர்களா.எப்படி சொல்ற.ஒழுக்கமில்லாதவங்க எல்லா சாதிலயும் இருப்பானுங்க.அவனுங்களை தலித்கள் யாரும் அய்யா சாமி புனிதறேன்னு கும்புடுரதில்லை.உங்க யோக்கியதை என்ன.மடத்துக்கு வர்ற பெண்கள் மீது கை வைத்த ஜெயேந்திரனை இன்னும் குடும்பத்தோட போய் கும்புடுரீங்களே.இதுதான் உங்களுக்கு ஒழுக்கமா தெரியுதா.காந்தி என்னவோ சாதியை ஒழிக்க பாடுபட்ட மாதிரி உளராத.நாங்கல்லாம் எம்மாத்திரம்னு தெரிஞ்சுக்க கடந்த காலத்தை கொஞ்சம் திரும்பிப்பார். அம்பது அறுபது வருசத்துக்கு முன்னால உங்க மேல்சாதி திமிர் தாழ்த்தப்பட்ட மக்களை டேய் போட்டுத்தான் கூப்பிடும்.இப்போ அப்படி கூப்பிடு பார்க்கலாம்.ஆமா அவுங்க சுத்தமில்லாதவங்கன்னு சொல்ல உனக்கு என்ன யோக்கியதை.அவுங்க அழுக்கு உழைப்பதால் வந்தது. ஆனா உங்க ஆளுங்க தெனமும் தயிர் சாதத்த தின்னு தின்னு கிட்ட வந்தாலே அந்த கவுச்சி நாத்தம் குடல புரட்டுது. நீயெல்லாம் சுத்தத்த பத்தி பேச வந்துட்ட.

   • Haha,enna oru frustration.

    Only dalits work,everyone else eats off.

    Eppudi ippadi vaai koosama poi solreenga neenga,Most people never gave Jayendran or Vijayendran any respect.

    Curd rice cleans the stomach in the morning,beef is what stinks.

  • உண்மைய சொல்லனும்னா , தலித்துகள் தான் சுத்தமாக இருக்கிறார்கள். சுத்தம் இல்லாதவனுங்க இந்த பாப்பானுங்க தான்..நம்ம ஊத்தவாயன் ஜெயேந்திரன் பல்லே தேக்க மாட்டான் போல.

    • நானும் அதே தான் சொல்லுறேன். எல்லோருக்கும் உண்மை தெரியும். நான் எழுதிய பார்பனர்களை பற்றிய சில உண்மைகள் மட்டுரத்தப்பட்டுள்ளது.

   • அடேயப்பா…. சென்னையின் சைதாபேட்டை சேரியையும் – மேற்கு மாம்ழம் பகுதிகளை சுற்றிபார்த்து யார் சுத்தமானவர்கள் முடிவுக்கு வாருங்கள்.

 7. இந்தியனே!
  சாதி ஒடுக்கு முறையில் காந்தி கடைபிடித்த அயோக்கியதனத்தை எல்லாம் படித்துவிட்டு பிறகு வினவில் கமெண்ட் போடுங்க.
  ஏற்றத்தாழ்வு இறைவன் படைப்பிலே உண்டு என்கிறீர்கள்.
  சைவர்,வைணவர்,சத்திரியர்,சூத்திரர்,பஜ்சமர் இதையெல்லாம் எப்படிவச்சானுங்க தெரியுமா?.ஒன்னும் தெரியாம வந்து அளக்காதீங்க.

  • பாலாதான் சைவர்,வைணவர்,சத்திரியர்,சூத்திரர்,பஜ்சமர் இதையெல்லாம் எப்படிவச்சானுங்கனு நேரா பாத்துட்டு வந்து இருக்காரு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க