Sunday, April 18, 2021
முகப்பு கட்சிகள் அ.தி.மு.க பாராளுமன்றம்: எதிர்க்கிற கைதான் ஆதரிக்கும்!

பாராளுமன்றம்: எதிர்க்கிற கைதான் ஆதரிக்கும்!

-

நாங்கள் சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை எதிர்க்கிறோம்; ஆனால்  அதைக் கொண்டு வரும் மத்திய காங்கிரசு அரசை ஆதரிக்கிறோம்” – தி.மு.க

“நாங்கள் சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை எதிர்க்கிறோம்; ஆனால் அதைக் கொண்டு வரும் மத்திய காங்கிரசு அரசையும் எதிர்க்கிறோம்; ஆனால் எதிர்த்து ஓட்டுப் போட மாட்டோம்” – பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாடி.

“நாங்கள் சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை எதிர்க்கிறோமா இல்லையா என்பதை எமது மகாராஷ்டிர நிலையை ஒட்டியே முடிவு செய்வோம். அது எப்படியிருப்பினும் நாங்கள் அரசை எதிர்க்கவில்லை” தேசியவாத காங்கிரசு.

“நாங்கள் அந்நிய முதலீட்டை எப்போதுமே ஆதரிக்கிறோம்; சில்லறை வர்த்தகத்திலும் முன்பு ஆதரித்தோம் ஆனால் இப்போதைக்கு எதிர்க்கிறோம். (எப்போதுமே எதிர்ப்போமா இல்லையா என்பதை இப்போது சொல்ல முடியாது –  மைண்ட் வாய்ஸ்) ” –  இது பாரதிய ஜனதா, அ.தி.மு.க மற்றும் மமதா பானர்ஜி.

சி.பி.ஐ சி.பி.எம் மற்றும் அதையொத்த நண்டு சிண்டுகள், துண்டு துக்காணிகள், பழசு பட்டைகள் மற்றும் ஓட்டை உடைசல்களின் நிலைப்பாடுகள் மேலே உள்ளவற்றில் இருக்கும் வார்த்தைகளை மட்டும் அங்கேயும் இங்கேயுமாக இடம் மாற்றிப் போட்டால் வந்து விடும். இவ்வாறாக ஓட்டுக் கட்சிகள் அனைத்தும் “மாப்பிள்ளை இவரு தான்… ஆனா அந்த சட்டையப் பத்தி எனக்குத் தெரியாது” என்கிற பாணியில் சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு பற்றி வழவழாவென்று பேசிக் கொண்டிருந்த இடைவெளியில் இதைப் பற்றிய தீர்மானத்தை பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றியுள்ளது காங்கிரசு தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு.

545 பேர் கொண்ட லோக்சபையில் ‘கொள்கை ரீதியில்’ வெளிநடப்பு செய்தவர்களைத் தவிர்த்த 471 பேர் வாக்களித்துள்ளனர். இதில் அரசுக்கு ஆதரவாக 253 பேரும் எதிராக 218 பேரும் வாக்களித்துள்ளனர். இதில் வெளிநடப்பு செய்த 45 எம்.பிகள் அந்நிய முதலீட்டை எதிர்த்து விவாதங்களில் சூடுபறக்கப் பேசியுள்ளனர். ஆதரித்து வாக்களித்தவர்களில், தி.மு.க எம்.பி இளங்கோவனின் பேச்சு இது – “சில்லறை வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள 30 கோடி பேரை பாதிக்கும்  என்பதால் கடுமையாக எதிர்க்கிறோம்” என்று தெரிவித்து விட்டு அரசை ஆதரித்துள்ளார்.

வெளிநடப்பு செய்த பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாடி கட்சி எம்.பிக்கள் பேசியவைகளைக் கேட்டால் மரித்துப் போன  சேகுவேராவே மீண்டும் உயிர்த்தெழுந்து வந்து அமெரிக்காவையும் பன்னாட்டுக் கம்பெனிகளையும் விட்டு விளாசுவது போலவே விளாசியுள்ளனர். ஆனால், இவையணைத்துமே பச்சையாக நடத்தப்பட்ட நாடகங்கள்.

சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை ஆதரிப்பதும் எதிர்ப்பதும் தொடர்பான முடிவை எடுப்பது இவர்கள் கையில் இல்லை. அதற்கான அதிகாரமும் இவர்களிடம் இல்லை. 2008-ம் ஆண்டு துவங்கிய சர்வதேச பொருளாதார கட்டமைப்பு நெருக்கடி தேசங்கடந்த தொழிற்கழகங்களை புதிய சந்தைகளை வெறி கொண்ட முறையில் தேட வைத்துள்ளது. சூதாட்டப் பொருளாதாரத்தின் விளைவாய் வீங்கிப் பெருத்துப் போயுள்ள தனது பிரம்மாண்டமான மூலதனத்தை சுழற்சிக்கு விட உலகளவிலான சந்தைகளை வெறிகொண்ட முறையில் தேடியலைந்து கொண்டிருக்கிறது ஏகாதிபத்திய நாடுகளைச் சேர்ந்த பன்னாட்டுத் தொழிற்கழகங்கள். உலகளவில் சுழற்சியில் உள்ள மூலதனத்தில் மூன்றில் இரண்டு பங்கு சூதாட்ட பொருளாதாரத்தின் விளைவாய் வீங்கிப் பெருத்துப் போயுள்ளது.

இந்த பிரம்மாண்டமான மூலதனம் சுழலாமல் தேங்கி நிற்பது என்பது முதலாளித்துவமே மொத்தமாக செத்துப் போவதற்கு ஒப்பானது. ஏகாதிபத்திய நாடுகளின் சந்தைகளோ இதற்கு மேலும் சுரண்ட முடியாது எனும் அளவிற்கு ஏற்கனவே ஒட்டச் சுரண்டப்பட்டு விட்டது. அந்நாடுகளின் தொழிற்சாலை உற்பத்தி அலகுகள் குறைந்த கூலியைத் தேடி மூன்றாம் உலக நாடுகளுக்குக் கடத்தப்பட்டு விட்டன. வேலையும் வாழ்க்கையும் சமூக பாதுபாப்பையும் இழந்த மக்களோ தெருவிலிறங்கிப் போராடி வருகிறார்கள். இந்தப் பின்னணியில் தான் மூன்றாம் உலக நாடுகளைக் குறிவைத்து இரண்டாம் தலைமுறை பொருளாதாரச் சீர்திருத்தங்களை மேற்கொள்ள உலக வங்கி நிர்பந்தித்து வருகிறது. சில்லறை வர்த்தகம் என்றில்லாமல் விமானப் போக்குவரத்து, வங்கித்துறை, இன்சுரென்ஸ், தபால் துறை என்று லாபம் கொழிக்கும் துறைகளில் பொதுத்துறையை ஒழித்து விட்டு அந்நிய மூலதனத்தை அதிகரிக்க வேண்டுமென்ற கோரிக்கைகளை வலுவாக முன்தள்ளுகிறார்கள்.

இதைத் தாமதிக்கும் நாடுகளை பல்வேறு வகைகளில் மிரட்டியும் வருகிறார்கள். சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிப்பது தொடர்பான விவாதங்கள் சுமார் ஓராண்டுகளுக்கு முன்பாகவே துவங்கி விட்டது. இதை எந்த விவாதமும் இன்றி திடீரென்று திணிப்பது மக்களிடமே கொந்தளிப்பை ஏற்படுத்தி விடும் என்பதாலேயே இதற்கு ‘எதிர்ப்பான’ குரல்களை சில காலத்துக்கு ஒலிக்க விட்டிருந்தனர். நடந்த நாடகத்தில் இந்த ‘அடுத்துக் கெடுக்கும்’ பாத்திரத்தை திறம்பட ஏற்று நடித்த கட்சி தான் பாரதிய ஜனதா. உலகின் எந்த நாட்டிலுமே இல்லாத ஒரு வழக்கமாக பாரதிய ஜனதாவின் ஆட்சிக் காலத்தில் தான் அரசுக்குச் சொந்தமான பொதுத்துறைகளைக் கூறு போட்டு உள்நாட்டுத் தரகு முதலாளிகளுக்கும் பன்னாட்டுக் கம்பேனிகளுக்கும் விற்க தனியாக ஒரு அமைச்சரவையே ஏற்படுத்தப்பட்டது என்பதிலிருந்தே இவர்களின் விசுவாசம் யாரிடம் உள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும்.

எனினும், அமெரிக்கா எந்தவகையான சந்தேகத்துக்கும் இடம் கொடுக்க விரும்பவில்லை. நாடகத்தின் பாத்திரங்கள் எழுதித் தரப்பட்ட திரைக்கதை வசனத்தைத் தாண்டி சொந்த வசனங்களைப் பேசினால் என்னவாகும் என்பதைக் குறிப்பாலுணர்த்தத் தவறவில்லை. அந்த வகையில் தான், அக்டோபரில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை 6.9 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாகக் குறைத்து மதிப்பிட்டது. அதைத் தொடர்ந்து அக்டோபர் 10ம் தேதியன்று பொருளாதாரத்துக்கான தரநிர்ணய நிறுவனமான எஸ் & பி, இந்தியாவுக்கான பொருளாதார மதிப்பீட்டை BBBயில் இருந்து BBB-(எதிர்மறை)யாக குறைத்தது. இதற்கான காரணங்களாக, இந்தியா இரண்டாம் தலைமுறை பொருளாதார சீர்திருத்தங்களை அமுல்படுத்துவதில் ஏற்படும் தாமதங்களைச் சுட்டிக்காட்டியிருந்தது அந்நிறுவனம்.

இதற்கும் முன்பாகவே கடந்த ஜூலை மாதத்தில் இந்தியாவில் இரண்டாம் தலைமுறை பொருளாதார சீர்திருத்தங்களை முன்னெடுப்பதில் ஏற்பட்டுள்ள சுணங்கிய நிலை குறித்து டைம் பத்திரிகை ஒரு கட்டுரை வெளியிடுகிறது. அதன் முகப்பு அட்டையிலேயே மன்மோகனின் படத்தைப் போட்டு “உதவாக்கரை”என்று தலைப்பிட்டிருந்தது. அதே மாதத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியாவின் இரண்டாம் கட்ட பொருளாதார சீர்திருத்தங்கள் அமுல்படுத்தப்படுவதில் ஏற்பட்டுள்ள சுணக்கத்தைப் பற்றி கருத்துத் தெரிவித்திருந்தார்.  இருநாடுகளின் நலனை உத்தேசித்து இந்தியா சில்லறை வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் அந்நிய முதலீட்டை அனுமதிப்பதில் இந்தியா ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்று நேரடியாகவே மிரட்டியிருந்தார்.

உடனடியாக ஒபாமாவின் இந்தக் கருத்துக்கு பதிலடி கொடுத்த மத்திய தொழில்துறை அமைச்சர் ஆனந்த் சர்மா, “கொள்கை ரீதியிலான முடிவுகளை எடுப்பது இந்தியாவின் இறையாண்மை சம்பந்தப்பட்டதாகும்” என்று தெரிவித்திருந்தார். அந்த ‘டக்கு’ தான் இந்த ‘டக்கு’. காங்கிரசு மட்டுமல்ல, பாரதிய ஜனதாவிலிருந்து சகல கட்சிகளும் அன்று ஒபாமாவின் கருத்துக்கு ‘எதிராக’ சவடால் அடித்திருந்தனர். ஆனால், அவையணைத்துமே வெறும் வெற்றுக் கூச்சல்கள் என்பதைக் கடந்த வாரம் பாராளுமன்றத்தில் நடந்த கூத்துகளில் இருந்து புரிந்து கொள்ளலாம்.

பாரதிய ஜனதா, காங்கிரசு, சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், தி.மு.க, அ.தி.மு.க உள்ளிட்ட அனைத்து ஓட்டுக்கட்சிகளுமே கொள்கையளவில் தனியார்மயம் தாராளமயம் உலகமயம் உள்ளிட்ட பொருளாதார சீர்திருத்தங்களையும் காட் ஒப்பந்தத்தையும் அதன் ஷரத்துகளையும் முழுமனதாக ஏற்றுக் கொண்டுள்ள கட்சிகள் தாம்.  அமெரிக்க -இந்தியாவின் அணுசக்தி ஒப்பந்தத்தை ஆதரிக்கிறோம் – கூடங்குளத்தை மாத்திரம் எதிர்க்கிறோம் என்று சொல்வது எப்படி முரண்பாடானதோ அதே போலத் தான் மறுகாலனியாக்கப் பொருளாதாரக் கொள்கைகளை ஏற்றுக் கொண்டே அதை எதிர்ப்பதாகப் பேசுவதும். இவர்கள் கொள்கையளவில் அந்நிய முதலீட்டை ஏற்றுக் கொண்டனர். எனவே பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவது என்பது ஒரு சடங்கு தான்.  அது தான் இப்போது நிறைவேறியுள்ளது.

எனினும், இதில் எந்தவிதமான சந்தேகங்களுக்கும் இடம் கொடுக்கக் கூடாது என்பதில் வால்மார்ட் தெளிவாகவே இருந்துள்ளது. வால்மார்ட் இந்தியாவில் நுழைவதற்காக கடந்த 2008-ம் ஆண்டிலிருந்து சுமார் 125 கோடி வரை அமெரிக்க செனேட்டர்கள் மத்தியிலும் அரசுத் துறைகளின் மட்டத்திலும் லாபி செய்ய மட்டும் செலவழித்துள்ளது. இது அதிகாரப்பூர்வமாக அமெரிக்க செனேட்டில் தாக்கல் செய்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தொகை. வால்மார்ட்டின் வரலாறையும் பிற அமெரிக்க கார்ப்பரேட்டுகளின் சந்தை வெறியைப் பற்றியும் ஓரளவுக்குத் தெரிந்தவர்கள் கூட அவர்கள் தமது நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள எந்த எல்லைகளுக்குச் செல்வார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

மறுகாலனியாதிக்கம் நமது நாட்டின் மேல் ஒரு பேரிருள் போல மெல்ல மெல்லக் கவிந்து வருகிறது. நாட்டின் இயற்கை வளங்கள்,  தொழில்கள், மனித வளம் என்று சகலமும் ஏகாதிபத்திய நாடுகளின் லாப வேட்டைக்கு இரையாக்கப் படுவதை நமது கண் முன்னே காண்கிறோம். ஓட்டுப் பொறுக்கிக் கட்சிகளின் பின்னே செல்வதால் எந்தப் பலனும் இல்லையென்பதையும் அவர்களே நிரூபித்துக் காட்டி விட்டனர். இதற்கு மேலும் மக்கள் இந்த மண் குதிரைகளை நம்பியிராமல் நேரடியாய்த் தாமே தெருவிலிறங்கினால் மட்டுமே நாட்டைக் காக்க முடியும். தேசத்தின் மேல் அக்கறை கொண்டவர்கள் சிந்திக்கட்டும்.

________________________

– தமிழரசன்
_____________________

  1. முதல் நான்கு வாய்ஸ்களும் வெளிப்படையாக அவர்கள் வாயாலேயே சொல்லப்பட்டவை. அதாவது தங்கள் கோவணத்தை தாங்களே உருவிக்கொண்டு தாங்கள் ‘கலீஜ்ஜு’தான் என்று வாக்குமூலம் கொடுத்துள்ளனர். வேறொன்றும் வேண்டுமோ ஒட்டுமொத்த அரசியலாளர்களின் யோக்கியதையை பறைசாற்றுவதற்கு.

  2. இனி உலக சந்தையில் யார்? பெரிய பணக்காரன்.வலிமை,அதிகாரம் படைத்தவன்,என்பதை வினவு தெரியப்படுத்தவும்.1 அமெரிக்கா,2.சைனா 3.யுரோப்பா யூனியன் இவர்களில் யாரையும் இந்தியா விட்டு வைக்கவில்லை நல்ல நட்புறவு கொண்டுள்ளது இதன் வரிசையில் உலக நாடுகள் சவுதாப்பிரிக்கா,ஆசுத்திரெலியா,சப்பான்,அரபுநாடுகள் எம்மாதிரியான முடிவுகளை எடுக்கின்றனர்? மேலும் இந்தியாவின் பொருளாதாரம் சம்பந்தமான [அரசியல் வியாதிகளை]தவிர்த்து உள்நாட்டு அதிகாரிகள்,படித்தமேதைகள்,பணக்காரர்களின் நிலை என்ன?விளக்கவும்.மேலும் நம் வெளிவிவகாரம் பொருளியல்சம்பந்தமாக முதலிலேயே தீர்மானித்து இது சம்பந்தமான நடவடிக்கைகளுக்கு இந்திய உளவுத்துறையை அனுமதிக்காதா???ஏன்?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க