Thursday, April 15, 2021
முகப்பு வாழ்க்கை அனுபவம் நாவிதரை ஊர் விலக்கம் செய்த ஆதிக்க சாதிவெறி!

நாவிதரை ஊர் விலக்கம் செய்த ஆதிக்க சாதிவெறி!

-

துரை மாவட்டம் சின்னப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சிதம்பரம், வயது 80. கடந்த செவ்வாய் முதல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். நாவிதர் சமூகத்தை சேர்ந்த இவர் ஊரில் ஒரு சலூன் கடை ஒன்றை நடத்தி வந்தார். சிறு கிராமம் என்பதால் ஆண்டுக் கூலி முறையிலும் கடை தொடர்ந்திருக்கிறது.  வேறு வேலைக்கு சென்று விட்ட காரணத்தால் மகனை இத்தொழிலில் அவர் ஈடுபடுத்தவில்லை.

த‌னக்கு வயதாகி விட்ட காரணத்தால் இனி சலூன் நடத்த இயலாது என ஊரிலுள்ள பெரிய மனிதர்களிடம் தெரிவித்தார் சிதம்பரம். அவரது மகனை அத்தொழிலில் ஈடுபடுத்துமாறு ஊர் மக்கள் தெரிவித்துள்ளனர். அவரது மகன் மறுத்து விடவே முதியவரையே மீண்டும் வேலையை துவங்குமாறு வலியுறுத்தி உள்ளனர். தன்னால் இயலவில்லை, வயதாகி விட்டது என அவர் கூறியவுடன் ஊரைக் காலி செய்யுமாறும், ஊரில் சவரத் தொழிலாளி ஒருவர் இருப்பதால் தாங்கள் வர முடியாது என பிற சவரத் தொழிலாளிகள் தயங்குவதாகவும் தெரிவித்தனர். இதனை அவரால் நிறைவேற்ற முடியவில்லை. எனவே ஊர் விலக்கம் செய்யப்பட்டார் சிதம்பரம்.

சிதம்பரம் இதற்கு பரிகாரம் தேட காவல் துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தை அணுகியுள்ளார். ஆத்திரமடைந்த ஆதிக்க சாதி மக்கள் அவரது வீட்டையும், அங்குள்ள பொருட்களையும் அடித்து உடைத்து நாசப்படுத்தி உள்ளனர். அவர் தெரிவித்த புகாரை அரசு தரப்பில் ஏற்கவில்லை. ஊர் மக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக ஊரார் தரப்பில் சிதம்பரம் குடும்பத்தினர் மீது கொடுக்கப்பட்ட புகார்களை ஏற்று காவல் துறையினர் அவரை கூப்பிட்டு மிரட்டி அனுப்பி உள்ளனர்.

தற்போது நிவாரணம் மற்றும் வாழ்வாதார உதவி கேட்டு 80 வயது முதியவர் உண்ணாவிரதம் துவங்கி உள்ளார். படித்து முன்னேறினாலும் குலத்தொழிலை விடுவது என்பது ஆதிக்க சாதிகளுக்கு அவ்வளவு உவப்பாக இருப்பதில்லை தான். தமிழகத்தின் சவரத் தொழிலாளிகள் பல கிராமங்களில் சாதிக்கு ஒருவராக இருக்கின்றனர். ஆண்டுக் கூலியாக ரூ.100 மட்டுமே ஒரு கிராமம் தரும். அத்துடன் எல்லா வீடுகளிலும் உள்ள பழைய சோற்றை வீடு வீடாக வந்து பிச்சை கேட்பது போல கூவி வாங்க வேண்டும். சவரத் தொழிலில் வந்துள்ள‌ ஆதிக்க‌ சாதியின் ஆண்டைக‌ள் உட‌ம்பின் எந்த‌ப் ப‌குதியில் ம‌ழிக்க‌ சொன்னாலும் செய்ய‌ வேண்டும். ப‌ர‌வும் தீராத‌ வியாதிக‌ளை உடைய‌வ‌ர்களாக‌ இருந்தாலும் அசூசைய‌டையாம‌ல் தொழிலை செய்ய‌ வேண்டும்.

திரும‌ண‌ வீடுக‌ளில் துவ‌ங்கி கருமாதி வ‌ரை இவ‌ர்க‌ளுக்கு அடிமை வேலைக‌ள் ச‌ற்று அதிக‌ம் தான். ஊரின் புற‌ம்போக்கு நில‌த்தில் குடிசை போட‌ அனும‌தி த‌ரும் இந்த‌ ஆதிக்க‌ சாதிக‌ள் வ‌ய‌தான‌ காளை மாடுக‌ளை இனி உழ‌வுக்கு ஆகாது என‌த் தெரிந்தால் அடி மாட்டுக்கு அனுப்புவ‌து போல‌ வ‌ய‌து முதிர்ந்த‌ நாவித‌ர்க‌ளை விர‌ட்டி விட‌த் துவ‌ங்குகின்ற‌ன•

எண்ப‌துக‌ளில் எங்க‌ள் ஊர் நாவித‌ரின் ம‌க‌ன் ப‌த்தாம் வ‌குப்பு பாஸ் ப‌ண்ணி விட்டு, ச‌த்துண‌வுத் திட்ட‌ அமைப்பாள‌ராக‌ வேலைக்கு சேர்ந்தார். எப்போது வெள்ளை வேட்டி, ச‌ட்டை என‌ வ‌ல‌ம் வ‌ரும் அவ‌ரை என் ஊரின் ஆதிக்க‌ சாதி ஆண்க‌ளுக்கு அவ்வ‌ள‌வாக‌ பிடிக்காது. போதாத‌ குறைக்கு ச‌ம‌ வ‌ய‌துள்ள‌ ஆதிக்க‌ சாதி ஆண்க‌ளில் ப‌டித்த‌வ‌ர்க‌ளை அவ‌ர் பெய‌ர் சொல்லியும் கூப்பிடுவார்.               இளைஞ‌ர்க‌ளிடையே அவ‌ருக்கு ந‌ல்ல‌ ந‌ட்பு வ‌ட்ட‌ம் உண்டு. ஏற்கென‌வே நாடார் சாதியைச் சேர்ந்த‌ வித‌வைப் பெண் ஒருவ‌ர் ச‌மைத்த‌ கார‌ண‌த்தால் ச‌த்துண‌வே வேண்டாம் என‌ ஆதிக்க‌ சாதி ஏழைக‌ள் கூட‌ ஒதுங்கிக் கொண்ட‌ன‌ர். இந்த‌ நிலையில் த‌ன‌து ம‌னைவியை ச‌மைக்க‌ அழைத்து வ‌ந்தார் நாவித‌ர் ம‌க‌ன். பாதி ஊர் ப‌ள்ளிப் ப‌க்க‌ம் வ‌ருவ‌தையே நிறுத்திக் கொண்ட‌து.

ப‌தினைந்து ஆண்டுக‌ளுக்கு முன் அவ‌ர‌து ம‌க‌ளுக்கு திரும‌ண‌ம் ந‌ட‌ந்த‌து. ம‌ரும‌க‌ன் ப‌க்க‌த்து சிறு ந‌க‌ர‌த்தில் ச‌லூன் க‌டை ஒன்று வைத்திருந்தார். ம‌க‌னை ஆங்கில‌ மீடிய‌த்தில் ப‌டிக்க‌ வைத்தார். செல‌வு க‌ட்டுப‌டியாகாத‌ கார‌ண‌த்தால் ஊரில் பகுதி நேரமாக ஒரு ச‌லூன் க‌டை ஆர‌ம்பித்தார். குடும்ப‌ பொருளாதார‌ நிலைமையால் த‌ந்தைக்கு கிடைத்து வ‌ந்த‌ ஆண்டுக் கூலி போல‌ அல்லாம‌ல் அன்றாட‌க் கூலியாக‌ ப‌ண‌ம் கிடைத்த‌ சூழ்நிலைமையால் இத்தொழிலை 50 வ‌ய‌துக்கு மேற் க‌ற்க‌  ஆர‌ம்பித்தார். சிறு வ‌ய‌தில் அவ‌ரிட‌ம் டியூச‌ன் எல்லாம் ப‌டித்திருக்கிறேன். என்னால் அவ‌ர் மீண்டும் க‌த்திரிக்கோல் பிடிப்ப‌தை நினைத்துக் கூட‌ பார்க்க‌ முடிய‌வில்லை.

சில‌ ஆண்டுக‌ளுக்கு முன் அவ‌ருக்கு திடீரென‌ மார‌டைப்பு ஏற்ப‌ட்டு  ம‌ர‌ண‌ம‌டைந்தார். அவ‌ர‌து ம‌க‌ன‌து ப‌டிப்பும் அதோடு முடிந்த‌து. இப்போது அந்த‌ இளைஞ‌ன் த‌ன் தாத்தாவோடு இருந்து தொழில் க‌ற்றுக் கொள்கிறான். பிண‌ம் எரிக்க‌ சுடுகாடு செல்கிறான். ஊரில் நாய் கூட‌ சீந்தாத‌ இட‌த்தில் ஊர் ம‌னித‌ர்கள் ஒதுக்கிய‌தாக‌ சொல்லிக் கொள்ளும் அவ‌ர‌து குடிசை போட்ட‌ இட‌த்தில் அந்த‌ முதிய‌ நாவித‌ர் த‌ன‌து பேர‌னுக்கு விருப்ப‌மில்லாவிட்டாலும் தொழிலைக் க‌ற்றுத் த‌ருகிறார்.

அந்த‌ முதிய‌வ‌ர் த‌ன் ம‌க‌னுக்கு ஐம்ப‌துக‌ளிலேயே வைத்த‌ பெய‌ர் ராம‌சாமி. ஊரின் ஆதிக்க‌ சாதிக‌ள் ம‌ற‌ந்தும் அந்த‌ப் பெய‌ரை உச்ச‌ரித்து அவ‌ரை சாமியாக்க‌ துணியார். முற்போக்கு பேசி ஊரில் நாங்க‌ள் திரிந்து கொண்டிருந்த‌ கால‌ம் அது. ஒருமுறை தேநீர்க்க‌டையில் ந‌ண்ப‌னொருவ‌னை போடா ம‌யிராண்டி என்று திட்டி விட்டேன். திரும்பிப் பார்த்தால் அந்த‌ வ‌ய‌து முதிர்ந்த‌ நாவித‌ர். எல்லோரும் போன‌ பின்பு, நீங்க‌ளே இப்ப‌டி சொல்ல‌லாமா என‌ மிக‌ அமைதியாக‌ கேட்டார். அதை அப்போதைக்கு ஒரு விம‌ர்ச‌ன‌ம் என்ற‌ முறையில் ஏற்றுக் கொண்டு ம‌ன்னிப்பு கேட்டேன். ஆனால், ஏன்டா இப்ப‌டி சொன்னே! அறிவு கெட்ட‌ முண்ட‌ம் என‌ அவ‌ர் என் காதைப் பிடித்து திருகி, அத‌ட்டும் கால‌ம் எப்போது வ‌ரும்?!

________________

– வசந்தன்.
______________

 1. “ஆனால், ஏன்டா இப்ப‌டி சொன்னே! அறிவு கெட்ட‌ முண்ட‌ம் என‌ அவ‌ர் என் காதைப் பிடித்து திருகி, அத‌ட்டும் கால‌ம் எப்போது வ‌ரும்?!”
  Nowadays lot of people are giving important to their castes which is a shameful act. Even educated persons also spreading this … So, the time you have mentioned about never come.

 2. ஆனால், ஏன்டா இப்ப‌டி சொன்னே! அறிவு கெட்ட‌ முண்ட‌ம் என‌ அவ‌ர் என் காதைப் பிடித்து திருகி, அத‌ட்டும் கால‌ம் எப்போது வ‌ரும்?!”—– வராமலா போய்விடும் காலம்.

 3. உலக முதளாலிதுவத்தையே புரட்டிபோட்டு, மண்டியிட வைத்த பாட்டாளி மக்களின் வரலாரையும் சின்னப்பட்டி கிராம ஆதிக்க வக்கிரபுத்தி கொண்டவர்கள் படித்து கொள்வது மிக அவசியம்.

  • நல்ல சட்டி.. இல்ல சுட்டி.. கதையை நகைச்சுவையா கொண்டு போனாலும் நச்சுன்னு முடிச்சுருக்கீங்க..

 4. கீழ்வெண்மணி கொடூரத்திற்கு எதிர்வினையாக இன்குலாபின் கவிதை இப்படி முடியும் ‘யாரு மசிர புடுங்க போனீங்க’.இந்த வார்த்தை எனக்கு ஓர் உறுத்தலாக இருந்தது என் தந்தை ஒரு முடிதிருத்துபவர் என்கிற அடிப்படையில்.ஒரு சமயத்தில் கவிஞர் இன்குலாபிடம் இது பற்றி கேட்க ஒரு வாய்ப்பு கிடைத்தது.அவர் அந்த வார்த்தை தம் இதயத்திலிருந்த்து வந்தது என்பதல்ல என்பதை விளக்கும் விதமாக அவருடைய தந்தையும் அதே தொழில் புரிந்தவர் என்பதைக் கூறிவிட்டு நம் மொழி வர்ணாசிரம கறைபட்டுள்ளது, அதனை சலவை செய்யவேண்டும் என்றார். இந்த பொருளிலேயே பெரியார் தமிழை காட்டுமிராண்டி பாஷை என்றாரோ எனநினைக்க தூண்டியது. ஒரு தலைமுறைக்கு முன்னரே எம் தந்தை நகர்புறத்திற்கு வந்து அதே தொழிலை செய்தாலும் பெரியாரின் சிந்தனைகளின் தாக்கத்தில் சுயமரியாதை உணர்வோடு வாழ்ந்து மறைந்தும் விட்டார். இந்த தலைமுறையில் நாங்கள் படித்த தொழில்நுட்ப கல்வியின் பயனால் வெளிநாடொன்றில் பணிபுரிகிறேன். இந்த பின்புலத்தில் எனக்கு இந்த செய்தி மிகுந்த அதிர்சியும், வேதனையும் தருகிறது. என்னால் சொல்லக்கூடிய வழி பெரியார் சொன்னது போல பட்டணம்(நகரம்)போவது , இரண்டாவது படிப்பு. அடிமை வேலை செய்ய மறுத்து அங்கே சாதி இழிவுக்கு எதிராக போராடுவதை விட இது மேல் என்பதே. ஏறக்குறைய நாடார்கள் வழி. எக்காரணம் கொண்டும் வரும் தலைமுறைக்கு சவர,சலவை தொழிலை கற்று தரக் கூடாதென்பதே என் கருத்து. வேறொரு சமூகம் இப்படியான தொழில்களை செய்ய வரும் போதுதான் அந்த தொழிலில் உள்ள இழிவு போகும்

  • // கீழ்வெண்மணி கொடூரத்திற்கு எதிர்வினையாக இன்குலாபின் கவிதை இப்படி முடியும் ‘யாரு மசிர புடுங்க போனீங்க’.இந்த வார்த்தை எனக்கு ஓர் உறுத்தலாக இருந்தது என் தந்தை ஒரு முடிதிருத்துபவர் என்கிற அடிப்படையில்.ஒரு சமயத்தில் கவிஞர் இன்குலாபிடம் இது பற்றி கேட்க ஒரு வாய்ப்பு கிடைத்தது.அவர் அந்த வார்த்தை தம் இதயத்திலிருந்த்து வந்தது என்பதல்ல என்பதை விளக்கும் விதமாக அவருடைய தந்தையும் அதே தொழில் புரிந்தவர் என்பதைக் கூறிவிட்டு நம் மொழி வர்ணாசிரம கறைபட்டுள்ளது, அதனை சலவை செய்யவேண்டும் என்றார்.இந்த பொருளிலேயே பெரியார் தமிழை காட்டுமிராண்டி பாஷை என்றாரோ எனநினைக்க தூண்டியது. //

   என்ன பேசுகிறோம், எதற்குப் பேசுகிறோம் என்று தெரியாமலேயே பேசிவிட்டு தமிழைக் காட்டுமிராண்டி பாஷை என்பது சரியா..?! ‘மயிர்’ தொடர்பான சொற்பிரயோகங்களை பெரியாரின் சீஷ்யகோடிகள் அளவுக்கு வேறு யாரேனும் செய்திருப்பார்களா என்று தெரியவில்லை..

  • // எக்காரணம் கொண்டும் வரும் தலைமுறைக்கு சவர,சலவை தொழிலை கற்று தரக் கூடாதென்பதே என் கருத்து. //

   சரியான முடிவு.. நாவிதர்கள் சமூகத்தில் மதிக்கப்பட்ட காலங்களும் உண்டு.. முடிதிருத்துவது மட்டுமல்ல, அறுவை சிகிச்சைகள், பிரசவம் முதலிய மருத்துவப் பணிகளையும் செய்துகொண்டிருந்தவர்கள் சீமைச் சிகிச்சை வசதிகள் வந்த பிறகு முடிதிருத்துவதை மட்டுமே மேற்கொள்ளவேண்டிய நிலை வந்ததால் சவரம் செய்வோரன்று குறுக்கப்பட்டனர்..

   // வேறொரு சமூகம் இப்படியான தொழில்களை செய்ய வரும் போதுதான் அந்த தொழிலில் உள்ள இழிவு போகும் //

   நகரங்களில் எல்லா சமூகத்தினரும் அழகு நிலையம், சலூன் என்று ஆரம்பித்து விட்டனர்.. கிராமங்களிலும் கிளைகள் தொடங்கினாலும் தொடங்கலாம்..

  • நாடார்கள் வழி – நடைமுறை சாத்தியத்துடன் கூடியது. மேலும் நீ யார் என்னை அளக்க? முன்னேறிக்காட்டுகிறோம் பார் என்ற வகை.
   இன்குலாப்பின் கவிதையின் முடிவு வரி மட்டும் கொண்டு தவறாக பொருள் கொள்ளல் வேண்டாம்.
   மேலும் : இசையமைப்பாளர் திரு. எம்.எஸ்.வி. அவர்களது பேரன் சென்னையில் முடி திருத்தல் நிலையம் (எ) சலூன் வைத்திருக்கிறார்

   • நாடார்கள் பற்றி ஒரு செய்தி . பெரும்பாலான நகர்களில் நாடார்கள் சங்கத்தில் நாவிதர்,வண்ணார் சமூகத்தினரை ஈமச்சடங்கில் பணிசெய்ய அமர்த்துவர். நாடார்கள் முன்னர் கடந்து வந்த இழிவை மனதில் வைத்தோ என்னவோ அவர்களை மிகவும் கண்ணியமாக நடத்துவர். மற்ற சமூகத்தினரின் நடவடிக்கை அனைவரும் அறிந்ததே.(நாடார்கள் போல வேறெந்த சாதியினராவது மரியாதை தரக்கூடும் என்னிடம் தகவல் இல்லை)

 5. அன்புடன் ராவணன் அவர்களுக்கு
  மனுதர்மம் உறுவாக்கிய குலத்தொழில் முறையை ஒழிப்பதில் மாற்றுக்கருத்தில்லை அதேசமயத்தில் சலவைத்தொழில்,சவரத்தொழில்,துப்பரவுபணி,சுடுகரட்டில் வேலை செய்தல் போன்றவற்றின் தொழில் மதிப்பை உயர்த்துவது பொருளாதார மதிப்பை உயர்த்துவது இவைகளுக்காக வர்க்க ரீதியாக போராடுவதன் மூலம் சமூக ஒடுக்கு முறைகளை வேறருக்க முடியும் என்பது அன்பான கருத்து..

  • “வர்க்க ரீதியாக போராடுவதன் மூலம் சமூக ஒடுக்கு முறைகளை வேறருக்க முடியும்” நன்று. ஆனால் அப்படியான போராட்டம் ஒருங்கிணைக்கப் படுவதற்கே இந்த சாதி பிரிவினை பெரும் மனத்தடையாக இருக்கிறதே. இதில் தாழ்த்தப்பட்ட சமூகம் கணிசமான திரளாக இருக்கின்ற வாய்ப்பின் காரணமாக ஓர் எழுச்சியுற்றநிலையும், தம்மை தற்காக்கும் ஆற்றலும் பெற்றுள்ளது. நாவிதர்,வண்ணார் சமூகமோ பெரும்பாலும் ஊருக்கு ஒரு குடும்பமாக சிதறி பல்வேறு இழிவுகளை எதிர்க்க வழியற்று தவிக்கிறது. பெரியாரின் வழி வந்ததாக அறிவித்துக் கொள்ளும் திராவிட இயக்கங்களின் பிற்படுத்தப்பட்ட சாதியினர் தம்மை ஆண்டபரம்பரையினராக அகம் மகிழும் போக்கே நிலவுகிறது. இதில் கொடுமை என்னவெனில் அப்படிப்பட்ட ஆண்டபரம்பரையே இடஒதுக்கீட்டின் பலன்களுக்காக தம்மை மிகப்பிற்படுத்கப்பட்டவராக அறிவிக்க முண்டியடிக்கின்றனர். பல்வேறு படிநிலைகள் கொண்டதாலேயே ஒவ்வொருவரும் தம்மை யாருக்கோ உயர்வானவராக திருப்தியடைந்து இந்த சாதி கட்டுமானம் சிதையாமல் வழுவி வருகின்றனர்.பார்ப்பனர், சூத்திரர் என்கிற இரு படிநிலை மட்டுமிருந்தால் சாதியை என்றோ துடைத்தொழித்திருக்க முடியும். உங்களது கருத்து சரியானதென நம்புகிறேன் ஆனாலும் அது சிக்கலான சூத்திரம்.நான் சொன்னது உடனடி சாத்தியம்.நன்றி stalin.

 6. http://baranikarai-pannaiyar.blogspot.in/2012/11/blog-post_7310.html
  இஸ்லாமியராக பிறந்த இன்குலாப் இதனால் இஸ்லாத்தை விட்டு வெளியேறி விமர்சித்தார் .வரவேற்போம் .ஆனால் அவரது பிள்ளைகளுக்கு திருமணம் செய்தது யாரிடம் அவர் சொல்லுவாரா?

 7. அம்பிகளின் குடுமி சும்மா ஆடுமா

  தந்தை பெரியார் சும்மாவா சொன்னார்
  பாம்பை விட பார்பினியம் பயங்கரமானதென்று

   • //பாம்பும் பயங்கரமானதென்று சொன்னாரா..?! ஏன்..?!//

    ரெண்டுக்கும் நாக்கு வழியாத்தானே நஞ்சு வெளிவருகிறது

    • பாம்புக்கு இந்த கண்டுபிடிப்பு தெரிஞ்சுதுன்னா வருத்தப்படாதோ..?!

     • படம் காட்ட முடியாமல் ஸ்னேக் பாபு வருத்தமாத்தான் இருக்காறாம் :))

      • ஏன்.. பாம்புகளெல்லாம் கடிக்கிறத நிறுத்திட்டு, நாக்கால் நக்கியே கொல்ல ஆரம்பிச்சுடுத்துகளாமா..? ஸ்னேக் பாபுவுக்கு நாக்கில் நஞ்சு இருக்கோ இல்லையோ நாக்காலேயே நைஞ்சு போறது வழக்கமாயிடுத்து..

  • மருத்துவர் புரட்சி அப்படி இப்படி என கனவு வேண்டாம். சாதிய ரீதியான எந்த புரட்சியும் வராது.புரட்சியல்ல ஒரு கலகம் செய்வதற்கு கூட நமக்கு தெம்பில்லை என்பதை உணர்க.இங்கேயே பாருங்கள் தாழ்த்தப்பட்டவர் பாதிக்கப்படும் பிரச்சினைகளில் வந்து குவியும் கருத்துக்களோடு ஒப்ப இங்கே ஒரிருவர் மட்டுமே. நான் முன்னரே கூறியவாறு படித்தே மேன்மை அடையலாம்.அனைவருமே மெத்த படித்துவிட முடியாது என்பது சரியே. உடலுழைப்பு என்றாலும் கூட இழிவேதுமில்லை குலத்தொழில் மறுத்து ஒரு தொழில்நுட்பம் சார்ந்து கற்று சுயமரியாதையுடன் வாழமுடியும்.

 8. இராவணன் அவர்களே உங்கள் கருத்தே மிகச்சரியானது. தொழில் மதிப்பை உயர்த்துவதைவிட குலத்தொழிலை மறுத்து வெளியேறுவதே இப்போதைக்கு உடனடி தீர்வாக அமையும். அதற்கும் புரட்சிகர அமைப்புகளில் காலம் தாழ்த்தாது இணைதலும், இணைந்து எதிர்வினைகளை எதிர்கொள்ளுதலும் அவசியம். அப்பொழுதுதான் “, ஏன்டா இப்ப‌டி சொன்னே! அறிவு கெட்ட‌ முண்ட‌ம்” என‌ அவ‌ர் சொன்னவரை காதைப் பிடித்து திருகி, அத‌ட்டும் கால‌ம் வரும்.

  • காதைப்பிடித்து திருகும்நிலை கூட அல்ல அந்த வார்த்தையை எளிதாக எந்த குறுகுறுப்புமின்றி கடந்து செல்லக் கூடிய நிலை வர வேண்டும். பள்ளி காலத்தில் ஆசிரியர் முக்கியமான எதையாவது மறந்து பள்ளி வரும் சகமாணவர்களை ஏசும் வார்த்தை “சிரைக்க போனா…….” என்பது.அப்போது வரும் உணர்ச்சியை இப்போதும் நினைக்காமலிருக்க முடியவில்லை

 9. இபுராகிம்,
  நூஹ் என்ற ஒருவரர் இருந்தாராம் தெரியுமா உங்களுக்கு? அதாங்க கடவுளின் ஏஜென்ட்டாக (தூதர்) கப்பல் எல்லாம் உட்டாருல்ல அவருதாங்க. அவரு பொட்டாட்டியும் புள்ளையும் போடா நீயும் உன் புழுகினி ஆட்டமும் என்று அல்லவா கொடுத்தது தெரியுமா உங்களுக்கு? முகம்மதுடைய பெரியப்பா அப்துல் முத்தலிபும் சாகக் கிடந்தபோது முகம்மது எவ்வளவோ கெஞ்சிகூத்தாடியும் இசுலாத்திற்கு வரமாட்டேன்னு அல்வா கொடுத்தாரே. அதுகூடவா மறந்துபோச்சு. முகம்மது மகள் ரூஹையா, அவருடைய கணவரை முகம்மது வழிப்பறி செய்து புடிச்சிக்கிட்டு போனப்புரம்தானே விடுதலை செய்யச்சொல்லி இசுலாத்திற்கு வந்தாக. இப்பிடிலாம் கடவுளின் ஏஜென்ட்களுக்கே அல்வா கொடுக்கும்போது இன்குலாப் போன்ற ஒரு சாதாரண மனிதனுக்கு அவரது குடும்பம் ஒத்துழைக்காததை புடிச்சிக்கிட்டு தொங்கலாமா.

  • நந்தன் ,பொதுவாக ஒருவருக்கொருவர் ஒரு கொள்கை இருக்கும் .அதில் இறைதூதர்கள் குடும்பங்கள் விலக்கு என்று இஸ்லாம் சொல்லிதரவில்லை .ஒரு நபித்தோழர்தனது தந்தை நரகத்திற்கு செல்வார் என்றுஅறிந்து கண்ணீர் சிந்திய பொழுது நபி[ஸல்] அவர்கள் எனது தந்தையும் தான் என்றார்கள் அவர் ஆறுதல் அடைந்தார் .
   இன்குலாப் ,இது பற்றி அதிகம் பேசினாரே அவருக்கு அவரது குடும்பம் ஒத்துழைப்பு கொடுத்தா?என்ற ஆவல்,
   எனக்கு கூட தொழிலை கைவிட்ட முஸ்லிம் நாவிதர் வீட்டு பெண்ணை எனது மகனுக்கு திருமணம் செய்து வைக்க ஆசைதான் .அனால் எனது மனைவியும் மகனும் ஒத்துளைக்கமாட்டார்கள் என்பது அறிந்த விஷயம்

 10. “தொழிலை கைவிட்ட முஸ்லிம் நாவிதர் வீட்டு பெண்ணை ” ஏன் அப்படி?நீங்களே தொழில் செய்பவர்களை ஏன் வெறுக்க வேண்டும்? இது நீங்கள் பின்பற்றும் இசுலாமா? அல்லது வர்ணாசிரமம் உங்கள் கிளை வேதமா?

 11. இந்தக்கட்டுரைய இன்குலாப்பா எழுதியுள்ளார்? அல்லது அவரது பின்னோடொடம் ஏதாவது உள்ளதா? உங்களின் இந்தக் கேள்வி இங்கே எதற்கு? உங்களின் நக்கல் புரியாததல்ல. திசைதிரும்பியதும் நபி என்றால் சாதாரமனிதர்கள்தான் அது இது என்று சொதப்பல்.

  “தொழிலை கைவிட்ட முஸ்லிம் நாவிதர் வீட்டு பெண்ணை ” ஏன் அப்படி?நீங்களே தொழில் செய்பவர்களை ஏன் வெறுக்க வேண்டும்? இது நீங்கள் பின்பற்றும் இசுலாமா? அல்லது வர்ணாசிரமம் உங்கள் கிளை வேதமா?”

  இராவனின் இந்தக் கேள்விக்கு பதில் சொல்லுங்கள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க