Thursday, June 20, 2024
முகப்புஅரசியல்ஊடகம்ஜெசிந்தாவைக் கொன்றவர்கள் யார்?

ஜெசிந்தாவைக் கொன்றவர்கள் யார்?

-

சென்ற வாரம் செவ்வாய்க் கிழமை காலை 5:30 மணிக்கு அவர் பணிபுரியும் மருத்துவமனையில் அடித்த தொலை பேசியை எடுக்காமல் இருந்திருந்தால் 46 வயதான நர்ஸ் ஜெசிந்தா சல்தானா இன்று உயிருடன் இருந்திருப்பார்.

ஜெசிந்தா கடந்த 4 ஆண்டுகளாக லண்டனில் இருக்கும் கிங் எட்வர்ட் VII மருத்துவமனையில் பணி புரிந்து வந்தார். இந்தியாவின் மங்களூர் தான் சொந்த ஊர். கணவன், 14 வயது மகள், 17 வயது மகனுடன் லண்டனில் உள்ள சவுத் பிரிஸ்டல் பகுதியில் வசித்து வந்தார்.

தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு அவரை உருக்குலையச் செய்தது, இன்னொருவர் போல பேசி, பரிகாச முறையில், மனித உணர்வுகளை கொச்சைப்படுத்தும் ஒரு “ஏமாற்று தொலைபேசி அழைப்பு”.

சென்ற வாரம் உலமெங்கும் ஊடகவியலாளர்களின் கவனம் பிரிட்டிஷ் இளவரசர் வில்லியம்ஸின் மனைவி கேத்தி மிடில்டன் கர்ப்பமாக இருக்கும் செய்தியில் குவிந்திருந்தது. அது தொடர்பான தகவல்களை எப்படியாவது சேகரித்து பரபரப்பை ஏற்படுத்துவதுதான் அவர்களின் அயராத பணியாக இருந்தது.

கேத்தி கர்ப்பகால தலைச்சுற்றல், வாந்தி தொடர்பாக சென்ற வாரம் கிங் எட்வர்ட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 2டே பண்பலை வானொலி அறிவிப்பாளர்கள் மெல் கிரெய்க் மற்றும் மிஷெய்ல் கிறிஸ்டியன் தங்களுடைய ‘ஏமாற்று தொலைபேசி அழைப்பு’ அடிப்படையிலான நிகழ்ச்சிக்காக கேத்தி அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனையை தொடர்பு கொண்டுள்ளனர்.

அதிகாலையில் நோயாளிகளை கவனித்துக் கொண்டிருந்த தலைமை நர்ஸ் ஜெசிந்தா ஆள் இல்லாத வரவேற்பு அறையில் அடித்த தொலைபேசியை எடுத்துள்ளார். வானொலி அறிவிப்பாளர்கள் அரண்மனையிலிருந்து பிரிட்டிஷ் மகாராணி எலிசபெத் II மற்றும் இளவரசர் சார்லஸ் பேசுவது போல பேசி உள்ளனர். ஜெசிந்தாவுக்கு மறுமுனையில் இருப்பவர்கள் யார், அவர்களின் பின்புலம் என்ன என்று புரிந்து கொள்ள முடியாத சூழல். ஜெசிந்தா தொலைபேசி இணைப்பை இளவரசி கேத்தியின் அறைக்கு தந்துள்ளார். அவ்வறையில் பொறுப்பிலிருந்த நர்ஸ் கேத்தியின் கர்ப்பம் பற்றி சொன்ன தகவல்களை உலகத்திலே எந்த ஊடகத்துக்கும் கிடைக்காத பரபரப்பானவை என்ற பெருமிதத்தில் ஒலிபரப்பியது 2டே எப்எம் வானொலி.

விஷயம் வெளிவந்ததுதான் தாமதம், பிற பத்திரிகை மற்றும் செய்தி ஊடகங்கள் மருத்துவமனையை ஈக்களைப்போல மொய்த்தனர். எங்கும் இதே செய்திதான்.

தன் மூலம் நிகழ்ந்த தவறின் விளைவுகளை எதிர் கொள்ள முடியாமல் தனது உயிரை மாய்த்து கொண்டிருக்கிறார் நர்ஸ் ஜெசிந்தா.

நோயாளியின் உடல் நலனையும், மன உணர்வுகளையும் புரிந்து கொண்டு அவர்களுடன் தங்களை இணைத்துக் கொண்டு கவனிப்பவர்கள்தான் செவிலியர்கள். அப்படி ஒரு குணாதிசயம் இல்லாதவர்களால் இப்பணியை செய்யவே முடியாது. அப்படிப்பட்ட ஒரு வேலையில் தன்னை இணைத்துக் கொண்டுள்ள ஜெசிந்தாவுக்கு மனித உணர்வுகளுடனான இந்த விளையாட்டு கசப்பான அனுபவத்தை அளித்திருக்கிறது.

தனது இத்தனை ஆண்டு வேலை ஒழுங்கை, விஷயங்களை புரிந்து கொள்வதை, முடிவெடுக்கும் திறனை கேள்விக்குள்ளாக்கிய சம்பவத்தை ஏற்க முடியாமல், தன் குடும்பத்தையும், குழந்தைகளையும் விட்டு நிரந்தரமாகப் பிரியும் இம்முடிவை சம்பவம் நடந்து 3 நாட்கள் கழித்து  அமல்படுத்தி இருக்கிறார்.

இந்தச் செய்தி பிரபலம் அடைந்து அந்த வானொலி அறிவிப்பாளர்களை எதிர்த்து சமூக வலைத்தளங்களிலும் பலர் தமது குமுறலை பதிவு செய்தனர்.

‘எங்கள் வேலையைத்தான் செய்தோம்’ என்று அழுகின்றனர் வானொலி அறிவிப்பாளர்கள் மிகெய்ல் மற்றும் மெல். ‘தொலைபேசியை எடுத்தவர் எங்களை திட்டி விட்டு தொலைபேசியை வைத்து விடுவார் என்று நினைத்திருந்த நாங்கள் எதிர்பாராமல் கேட்ட தகவல்களை பெற்றோம். அதன் விளைவுகள் இப்படி போகும்’ என்று நினைக்கவில்லை என்று புலம்புகின்றனர். 2டே வானொலி அறிவிப்பாளர்களின் நிகழ்ச்சி ஒலிபரப்பை நிறுத்தி வைத்திருக்கிறது, ஜெசிந்தா குடும்பத்தினருக்கு நன்கொடை வழங்குவதாக அறிவித்திருக்கிறது.

ஜெசிந்தா சல்தானா
ஜெசிந்தா சல்தானா

அதுவும் பிரபல செய்தியாகியிருக்கிறது. நடந்தவைகள், நடப்பவைகள் எல்லாம் செய்திகளாகத்தான் இருக்கின்றன, இழப்பு என்பது நர்ஸ் ஜெசிந்தாவின் குடும்பத்தினருக்கு மட்டும்தான்.

பேஸ்புக்கிலும் மற்ற சமூக வலைத்தளங்களிலும் வானொலி அறிவிப்பாளர்களை பழிப்பவர்கள் ஒரு நிமிடம் யோசிக்கவேண்டியது ‘இவ்வாறான நிகழ்ச்சிகள் யாருக்காக உருவாக்கப்படுகின்றன’ என்பதைத்தான்.

இன்றைக்கு 2டே அறிவிப்பாளர்களை நோக்கி குமுறுபவர்கள் இத்தகைய குப்பை நிகழ்ச்சிகளை உருவாக்குபவர்கள் அல்லது ரசித்து ஊக்குவிப்பவர்கள்.

ஊடகங்களுக்கிடையேயான ரேட்டிங் அதிகரிக்கும் போட்டியில் சாதாரண நிகழ்ச்சிகள் போதுமானதாக இருப்பதில்லை. ரேட்டிங் அதிகமாக்கவேண்டும் என்றால், நிகழ்ச்சியில் ஒரு விறுவிறுப்பு தேவை. அதற்கு பலரது உணர்வுகள் நசுக்கப்படவேண்டும், அந்தரங்கங்கள் அம்பலப்படுத்தப்பட வேண்டும். இதில் பிரபலங்கள் மட்டுமல்ல சாதாராண மக்களின் கதைகள் கூட அழுது ஆர்ப்பாட்டம் செய்யும் வண்ணம் இருக்க வேண்டும்.

நர்ஸ் ஜெசிந்தா சல்தானாவின் உயிர் இழப்பிற்கு காரணம் அந்த இரண்டு அறிவிப்பாளர்கள் மட்டும் அல்ல, இத்தகைய நிகழ்சிகளை மக்கள் மத்தியில் பிரபலமாக்கி காசு சம்பாதிக்கும் ஊடக கலாச்சாரமும் அந்த வக்கிரங்களைப் பார்த்து கேளிக்கை அடையும் மக்களின் ரசனையும்தான்.

படிக்க:

  1. வர்த்தக ஊடகங்களின் வக்கிரமத்தின் உச்சகட்டத்தின் விளைவு சாதாரண மக்களின் உயிரை குடிப்பதும் ,எடுப்பதும் தானே.

  2. //அதுவும் பிரபல செய்தியாகியிருக்கிறது. நடந்தவைகள், நடப்பவைகள் எல்லாம் செய்திகளாகத்தான் இருக்கின்றன, இழப்பு என்பது நர்ஸ் ஜெசிந்தாவின் குடும்பத்தினருக்கு மட்டும்தான்.//
    //நர்ஸ் ஜெசிந்தா சல்தானாவின் உயிர் இழப்பிற்கு காரணம் அந்த இரண்டு அறிவிப்பாளர்கள் மட்டும் அல்ல, இத்தகைய நிகழ்சிகளை மக்கள் மத்தியில் பிரபலமாக்கி காசு சம்பாதிக்கும் ஊடக கலாச்சாரமும் அந்த வக்கிரங்களைப் பார்த்து கேளிக்கை அடையும் மக்களின் ரசனையும்தான்.//

    உண்மை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க