privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காடாலர் வேண்டுமா? கொலை செய்!

டாலர் வேண்டுமா? கொலை செய்!

-

மெரிக்காவின் பென்சில்வானியாவிலுள்ள கிங் ஆப் புருசியா என்ற பகுதியிலுள்ள மோன்ட்கோமேரி கவுன்டியின் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும், வெங்கட வென்னா, செஞ்சு லதா புனுரு தம்பதியரின் பத்து மாதக் பெண் குழந்தை சான்வி. கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் செல்வதால், இந்தியாவிலிருந்து போயிருந்த பாட்டி சத்யதி வென்னா வீட்டில் பேத்தி சான்வியை பராமரித்து வந்துள்ளார்.

ரகுநந்தன் எண்டமூரி அதே குடியிருப்பில் வசித்து வந்தவர், வெங்கட வென்னா குடும்பத்தினரிடம் ஒரு வருட காலமாக பழகி வந்துள்ளார். அவரும் ஆந்திராவைச் சேர்ந்தவராதலால் அவரை ஓரிரு முறை சாப்பிடுவதற்கு வீட்டுக்கு அழைத்துள்ளனர் வென்னா குடும்பத்தினர்.

பண நெருக்கடியில் இருந்த ரகுநந்தன் குழந்தை சான்வியை கடத்தி வென்னா தம்பதியரிடமிருந்து பிணையத் தொகை பெற திட்டமிட்டுள்ளார். அக்டோபர் மாதம் 22 ஆம் தேதி குழந்தையின் பெற்றோர் வேலைக்கு சென்று இருந்த நேரம் பார்த்து வீட்டுக்கு போயிருக்கிறார் ரகுநந்தன். குழந்தையை தர மறுத்த பாட்டியை கத்தியால் தாக்கி கொன்றிருக்கிறார். நடப்பது என்னவென்று தெரியாமல் அலறிய பிஞ்சுக் குழந்தையின் வாயை கைக்குட்டையால் அடைத்து, கைக்குட்டை கீழே விழாமல் இருக்க ஒரு டவலை தலையில் சுற்றியிருக்கிறார். வீட்டில் இருந்த ஒரு சூட்கேஸில் குழந்தையை வைத்து அங்கு கிடைத்த நகைகளையும் எடுத்துக் கொண்டிருக்கிறார்.

குழந்தை சூட்கேசினுள் மூச்சுத் திணறி இறந்து விட குழந்தையின் உடலை அடுக்குமாடி குடியிருப்பின் கீழ்த்தளத்திலுள்ள நீராவிக்குளியல் அறையில் மறைத்து வைத்திருக்கிறார். சூட்கேசையும், கத்தியையும், அவரது சில உடைகளையும் நகரத்தின் குப்பை குவிக்கும் இடத்தில் எறிந்து விட்டு நகைகளை மறைத்து விட்டு ஒன்றும் தெரியாதவர் போல வீட்டுக்குத் திரும்பியிருக்கிறார்.

குழந்தை காணாமல் போன புகார் போலீசுக்கு வந்ததும் தேடும் முயற்சி தீவிரப் படுத்தப்பட்டது. கடத்தல் கும்பலைப் பற்றி துப்பு கொடுப்பவர்க்கு 50 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் பரிசுத்தொகையாக அளிக்கப்படும் என்றும் அமெரிக்க போலீசும் தெலுங்கு அமைப்பும் இணைந்து அறிவித்தன.

சான்விக்காகவும், இறந்து போன சத்யவதிக்காகவும் அப்பகுதியை சேர்ந்த மக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம் வந்துள்ளனர். ரகுநந்தன் அதில் கலந்து கொண்டதோடு சான்வியின் புகைப்படத்தோடு கடத்தல் பற்றி 200 துண்டு பிரசுரங்களை அச்சிட்டு நண்பர்கள், பகுதி மக்கள் அனைவருக்கும் வினியோகித்துள்ளார்.

இதற்கிடையே குழந்தையின் தந்தையை ஷிவா என்று அழைத்து எழுதப்பட்ட 10 மிரட்டல் கடிதங்கள் குடியிருப்பின் அருகில் கிடைத்திருக்கின்றன. அவற்றில் ‘சான்வியை பணயக்கைதியாக கடத்தியுள்ளதாகவும், குழந்தை வேண்டுமெனில், லதாவை 50 ஆயிரம் அமெரிக்க டாலர்களை மாலைக்குள் அருகில் இருக்கும் கடை வளாகத்திற்கு கொண்டு வரச் சொல்’ என்றும் எழுதப்பட்டிருக்கிறது.

ரகுநந்தன்
போலீசாரின் பிடியில் ரகுநந்தன்.

மிரட்டல் கடிதத்தில் குழந்தையின் பெற்றோரை அழைக்க நெருங்கிய நண்பர்கள் வட்டத்தில் பயன்படுத்தும் ஷிவா, லதா போன்ற பெயர்கள் இருந்ததால் போலீசின் தேடுதல் வேட்டை நண்பர்களின் வட்டத்திற்குள் சுருங்கியது, அதனூடாகவே ரகுநந்தன் கைது செய்யப்பட்டார்.

விசாரணையின் போது முதலில் மறுத்தாலும், பின்பு குற்றங்களை ஒப்புக் கொள்கிறார் ரகு. சத்யவதி இறந்து போன நிலையிலும், குழந்தையாவது உயிருடன் இருக்கும் என்ற நம்பிக்கையில் இருந்த குடும்பத்தினருக்கு, 5 நாள் கழித்துதான், சான்வி உயிரிழந்த உண்மை தெரிந்திருக்கிறது. தங்கள் கூடவே இருந்து வந்த ஒருவன் தான் அதை செய்து இருக்கிறான் என்பது குடும்பத்தினருக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும்.

ரகுநாதனுக்கு சூதாட்டக் கூடங்களில் சென்று சூதாடும் பழக்கம் இருந்துள்ளது. முன்பு கலிபோர்னியாவில் இருந்த போதும், ஊதாரித்தனமான இப்போக்கினால் கடன் சுமை ஏறி மஞ்சள் கடுதாசி கொடுத்துள்ளார். புதிய வாழ்க்கையை துவங்கும் நோக்கத்தில் அவர் பென்சில்வேனியாவிற்கு வந்திருக்கிறார். இங்கு வந்தும் தொடர்ந்த இப்பழக்கம், அவருக்கு 50 ஆயிரம் அமெரிக்க டாலர் கடனை உருவாக்கியிருக்கிறது. அவர் 9 கடன் அட்டைகளை பயன்படுத்தி கடன்களை ஏற்றி குவித்திருக்கிறார்.

விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த படித்த இளைஞன் ரகுநந்தன் 2007-ம் ஆண்டு அமெரிக்காவுக்கு போயிருக்கிறார். ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் ஆகி அமெரிக்காவில் மனைவியுடன் வாழ்ந்திருக்கிறார். தேவைக்கு அதிகமான சம்பளம் கிடைத்தும் அதை மேலும் பலமடங்காக்க விரும்பும் வெறித்தனம் தான் அவர் சூதாட்டத்தில் ஈடுபடுவதற்கான முகாந்திரம்.

வென்னா தம்பதியினர் இருவரும் வேலை பார்ப்பதால் அவர்களிடமிருந்து தனக்குத் தேவையான பணத்தைக் கறந்து விடலாம் என்ற எண்ணம் ரகுவுக்கு தோன்றியிருக்கிறது. பார்த்த எண்ணற்ற திரைப்படங்களில் நடப்பதைப் போல தவறான வழி என்றாலும் சிக்கல் இல்லாமல் முடித்து விடலாம் என்று தனது சுயலாபத்துக்காக பிஞ்சுக் குழந்தையை கடத்தி தான் நினைத்ததை சாதித்து விடலாம் என்று நினைத்திருக்கிறார். 10 வருடம் குழந்தை இல்லாமல் இருந்து பெற்ற குழந்தைக்காக பெற்றோர்கள் எதையும் செய்வார்கள் என்று கணக்கு போட்டிருக்கிறார்.

நட்பினை துச்சமாக மதித்து தான் தூக்கி கொஞ்சிய பிள்ளையை பணயக்கைதியாக்க முயற்சித்து கொலையாளி ஆனார். தன் தாயை நினைவு படுத்தும் வயதில் இருந்த சத்யவதியை கத்தியால் கதற கதற குத்தி கொலைச்செய்தார்.

மனிதத்தன்மையின்றி கொலை செய்துவிட்டு துளியும் உறுத்தல் இல்லாமல், சான்வியின் குடும்பத்தாருக்கு அனுதாபம் தெரிவிப்பதை அவர் செய்தது உணர்ச்சிகள் அனைத்தும் மரத்துப் போய் விட்ட ஒரு மனத்தின் செயல்பாடு என்றுதான் சொல்ல முடியும்.

தான் கைது ஆன போதும், தன் மனைவிதான் தன்னை காட்டிக் கொடுத்ததாக  தெரிவித்து, அவருக்கு 50 ஆயிரம் அமெரிக்க டாலர்களை பரிசாக கிடைக்க முயற்சித்திருக்கிறார் ரகுநந்தன். இதிலிருந்தே இவர் எவ்வளவு கேவலமான பிறவி என்பதைப் புரிந்து கொள்ள முடியும். அவரைப் பொறுத்த வரை டாலர்தான் கடவுள். அந்த கடவுளுக்காக எத்தகைய கொடூரத்தையும் அவர் செய்வார்.

பூலோக சொர்க்கமான அமெரிக்காவுக்கு படையெடுக்கும் இந்திய நடுத்தர வர்க்கத்திலிமிடருந்துதான் ரகுநந்தனும் உதித்திருக்கிறான். உயர் படிப்பு, அதிக சம்பளத்தில் வேலை, நுனி நாக்கு ஆங்கிலம் எல்லாம் அமெரிக்க நுகர்வுக் கலாச்சாரத்தில் மூழ்க வைத்து கொடூரமான கொலையாளியைத்தான் உருவாக்கியிருக்கிறது. பயிர்கள் பொய்த்துப் போய் வாங்கிய கடனை கட்ட முடியாமல் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளின் நாட்டிலிருந்துதான் குறுக்கு வழியில் பணத்தை சுருட்டுவதற்காக கொடூரமாக கொலைகள் செய்யும் ரகுநந்தனும் தோன்றியிருக்கிறான் என்பதை ஒப்பீட்டுப் பார்க்க வேண்டும். பரிசீலனையும் செய்ய வேண்டும்.

படிக்க: