Tuesday, April 13, 2021
முகப்பு உலகம் அமெரிக்கா காசா முனை : பேரழிவு ஆயுதங்களின் பரிசோதனைக் களம் !

காசா முனை : பேரழிவு ஆயுதங்களின் பரிசோதனைக் களம் !

-

பாலஸ்தீன சுயாட்சிப் பகுதியான காசா முனை மீது நவம்பர் 14 தொடங்கி 22 முடிய, ஒரு வார காலம் மீண்டும் ஒரு முழு அளவிலான இராணுவத் தாக்குதலைத் தொடுத்தது, இசுரேல். இப்போர் நடந்த ஒரே வாரத்திற்குள், காசா முனை மீது ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறை வான்வழித் தாக்குதல்களை நடத்தி, நூற்றுக்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்களைக் கொத்துக் கொத்தாகக் கொன்றது, யூத மதவெறி இசுரேல் அரசு. கொல்லப்பட்டவர்களுள் பெரும்பாலோர் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட சாதாரண பொதுமக்கள் என்பது தற்பொழுது உலகெங்கும் அம்பலமாகிவிட்டது. இதுவொருபுறமிருக்க, காசா முனைப் பகுதியினுள் நுழைந்து தரைவழிப் போரை நடத்துவதற்கு 75,000 சிப்பாகள் தயாராக இருப்பதாகவும் இசுரேல் அறிவித்தது.

‘‘காசா முனை சுயாட்சிப் பகுதியில் ஆட்சி நடத்தி வரும் ஹமாஸ் இயக்கம், கடந்த நவம்பர் 10 அன்று தன் மீது ராக்கெட் தாக்குதலை நடத்தியது. அதனால் தனது நாட்டையும் குடிமக்களையும் தற்காத்துக் கொள்ளும் நோக்கத்தில்தான் இந்த இராணுவத் தாக்குதலை நடத்தியதாக’’க் கூறித் தனது ஆக்கிரமிப்புப் போர் நடவடிக்கைகளை நியாயப்படுத்தி வருகிறது, இசுரேல். இதுவொரு புளித்துப் போன காரணம் மட்டுமல்ல, நவம்பர் 10 அன்று ஹமாஸ் இயக்கம் நடத்திய ராக்கெட் தாக்குதலை இசுரேலின் மீது தொடுக்கப்பட்ட போர் போலக் குற்றஞ்சுமத்துவதற்கு எந்தவொரு அடிப்படையும் கிடையாது.

1990-களில் இசுரேலுக்கும் பாலஸ்தீன விடுதலை இயக்கத்துக்கும் கையெழுத்தான ஆஸ்லோ ஒப்பந்தப்படி காசா முனை சுயாட்சிப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், உண்மையில் காசா முனை இன்றும் இசுரேலின் ஆக்கிரமிப்பு-முற்றுகையின் கீழ்தான் இருந்துவருகிறது. காசா முனைப் பகுதியில் செல்வாக்குடன் உள்ள ஹமாஸ் இயக்கத்தினரை ஓடுக்க வேண்டும் என்பதற்காகவே, அப்பகுதி மீது 2008-ஆம் அண்டு தொடங்கி ஒரு சட்டவிரோதமான பொருளாதாரத் தடையை விதித்து, அத்தியாவசிய உணவுப் பொருள் போக்குவரத்தைக்கூடத் தடுத்து வருகிறது, இசுரேல். இப்பொருளாதாரத் தடை இனப்படுகொலைக்குச் சமமானது எனக் குற்றஞ்சுமத்தப்பட்ட பின்னும் இத்தடையை நீக்க மறுக்கிறது, இசுரேல். இது மட்டுமின்றி, காசா முனை மீது பீரங்கி கொண்டு தாக்குவது உள்ளிட்டு ஒரு தாழ்நிலைப் போரைத் தொடர்ந்து நடத்தியும் வருகிறது, இசுரேல்.

இசுரேலின் இந்தச் சட்டவிரோத ஆக்கிரமிப்பைப் புறக்கணித்துவிட்டு, ஹமாஸ் நடத்தி வரும் ராக்கெட் தாக்குதல்களைப் பயங்கரவாதமெனக் குற்றஞ்சுமத்துவது ஒருதலைப்பட்சமானது. குறிப்பாக, நவம்பர் மாதத் தொடக்கத்தில் இசுரேல் காசா முனை மீது அடுத்தடுத்து நடத்திய இரண்டு தாக்குதல்களில், வீதிகளில் சுற்றித் திரிந்த ஒரு மனநோயாளியும், ஒரு 13 வயதுச் சிறுவனும் மாண்டு போனார்கள். இதற்குப் பதிலடியாகத்தான் ஹமாஸ் இசுரேலின் மீது நவம்பர் 10 அன்று ராக்கெட் தாக்குதலை நடத்தியது.

காசா முனை மீது மீண்டும் ஒரு முழுநிறைவான இராணுவத் தாக்குதலைத் தொடுப்பதற்குக் காரணம் தேடிக் கொண்டிருந்த யூத மதவெறி பாசிச ஆட்சியாளர்களுக்கு இந்த ராக்கெட் தாக்குதல் சாக்காகக் கிடைத்தது என்பதே உண்மை. இந்த ராக்கெட் தாக்குதல் நடந்திருக்காவிட்டாலும் காசா முனை மீது இத்தகைய தாக்குதலை நடத்துவதற்கு இசுரேல் வேறொரு புளுகை அவிழ்த்துவிடவும் தயங்கியிருக்காது. ஏனென்றால், இசுரேலும், அதன் எஜமானனான அமெரிக்காவும் சில அரசியல்-இராணுவ நோக்கங்களுக்காக காசா முனை மீது இப்படியானதொரு விரிந்த தாக்குதலைத் தொடுக்கக் காத்திருந்தனர் என்பதும் தற்பொழுது அம்பலமாகியிருக்கிறது. குறிப்பாக, இத்தாக்குதல் தொடங்குவதற்கு முன்பாக இசுரேலும் அமெரிக்காவும் கூட்டாக நடத்திய இராணுவ ஒத்திகையைத் தற்செயலானதாக ஒதுக்கித் தள்ளிவிடவும் முடியாது.

லெபனான் நாட்டில் இயங்கிவரும் ஹிஸ்புல்லா குழுவுக்கும் இசுரேலுக்கும் 2006-ஆம் ஆண்டு நடந்த போரின்பொழுது, ஹிஸ்புல்லா குழு நடத்திய ராக்கெட் தாக்குதல்களை இசுரேலால் சமாளிக்க முடியாமல் போனது. இப்படிபட்ட ராக்கெட் தாக்குதல்களிலிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்வதற்காக, ராக்கெட்டுகளை இடைமறித்து அழிக்கும் ஏவுகணை பாதுகாப்பு கேடயத் தொழில்நுட்பத்தை, அப்போருக்குப் பின் அமெரிக்காவின் உதவியோடு உருவாக்கி வருகிறது, இசுரேல். இரும்பு மாடம் என அழைக்கப்படும் இப்பாதுகாப்புக் கேடய செயல்திறனைப் பரிசோதித்துப் பார்ப்பதற்கான வாப்பாக இந்தத் தாக்குதலைப் பயன்படுத்தியது, இசுரேல். இரானின் அதிகதொலைவு சென்று தாக்கும் ராக்கெட்டுகளை இடைமறித்து அழிப்பதற்கு இந்த ஏவுகைணைத் தொழில்நுட்பம் அவசியமானது என அமெரிக்க-இசுரேல் கூட்டணி கருதுவதால், காசா முனை மீது நடத்தப்படும் இத்தாக்குதலை ஒரு ஒத்திகையாக, இரான் மீதான போர் தயாரிப்புக்கான முன்னோட்டமாகவே கருதி நடத்தியது, அமெரிக்க-இசுரேல் கூட்டணி.

பாலஸ்தீனக் குழந்தைகள்
பாலஸ்தீனக் குழந்தைகள்

ஹமாஸ் இயக்கம் இசுரேல் மீது ஏவும் ராக்கெட்டுகள், இசுரேலிடம் உள்ளது போன்ற பேரழிவு ஏற்படுத்தும் ஆயுதம் கிடையாது. இந்த ராக்கெட் ஒருவரைக் கொல்ல வேண்டும் என்றால், அது நேரடியாக அவர் தலை மீது விழ வேண்டும் என மதிப்பிடுகின்றனர், இராணுவ வல்லுநர்கள். இத்தகைய ராக்கெட்டுகளை ஏவுவதற்கு காசா முனையில் அமைக்கப்பட்டுள்ள ஏவுதளங்களை அழிப்பது மற்றும் ஹமாஸ் இயக்கத்தின் முக்கியத் தலைவர்களைக் குறிவைத்துத் தாக்கிக் கொன்று, அவ்வியக்கத்தை இராணுவரீதியாகப் பலவீனப்படுத்துவது இத்தாக்குதலின் முக்கிய நோக்கமாகும். இதன் அடிப்படையில், ஹமாஸ் இயக்கத்தின் முக்கிய தளபதியான அகமது ஜாபாரி காரில் சென்றுகொண்டிருந்தபொழுது, விமானக் குண்டுவீச்சு மூலம் கொல்லப்பட்டார். ஹமாஸின் இராணுவக் கிடங்குகளை அழிப்பது என்ற போர்வையில் காசா முனையின் பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட முக்கிய அரசு அலுவலகங்கள், பத்திரிகை அலுவலகங்கள் என கேந்திரமான மையங்கள் அனைத்தையும் விமானக் குண்டுவீச்சு மூலம் தரைமட்டமாக்கியிருக்கிறது, இசுரேல். பொது மக்களின் குடியிருப்புகள் மட்டுமின்றி, காசா முனையில் ஐ.நா. மன்றம் நடத்தும் அகதி முகாம்கூட இசுரேலின் விமானத் தாக்குதலுக்கு இலக்காகியிருக்கிறது.

2013 ஜனவரி மாதத்தில் இசுரேல் நாடாளுமன்றத்திற்கான தேர்தல்கள் நடைபெறவுள்ளன. தற்பொழுது அதிகாரத்திலுள்ள பிரதமர் நேதன்யாஹு, தனது அரசின் தோல்விகளை மூடிமறைக்கவும், எதிர்க்கட்சிகளின் வாயை அடைக்கவும், மீண்டும் ஆட்சியைப் பிடிக்கவும் தற்பொழுது காசா முனை மீது நடத்தப்பட்ட தாக்குதலைத்தான் முன்னிறுத்திப் பிரச்சாரம் செதுவருகிறார். இந்த வகையிலும் இசுரேலின் ஆளுங்கட்சிக்கு இத்தாக்குதல் அவசியமானதாக இருக்கிறது.

வழமை போலவே, அமெரிக்காவும் இங்கிலாந்தும் இசுரேல் நடத்திவரும் இந்த அடாவடித்தனமான தாக்குதலை, பாறை போல ஆதரித்து நிற்கின்றன. ஒபாமா, இரண்டாவது முறையாக அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற கையோடு, “இசுரேல் தன்னைத் தற்காத்துக் கொள்ள நடத்தும் போர் இது” என அறிக்கை விடுத்து, யூத மதவெறி பயங்கரவாதத்துக்குக் கொம்பு சீவிவிட்டார். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் இசுரேலின் ஒருதலைப்பட்சமான இத்தாக்குதலைக் கண்டித்து ஒரு காகிதத் தீர்மானம் இயற்ற முன்வந்ததைக்கூடப் பொறுத்துக் கொள்ள முடியாமல், தனது ரத்து அதிகாரத்தைப் பயன்படுத்தித் தடுத்து நிறுத்தியது, அமெரிக்கா. ஜார்ஜ் புஷ் இராக், ஆப்கானில் தொடங்கி வைத்த ஆக்கிரமிப்புப் போரை லிபியா, சிரியா என விஸ்தரித்த ஒபாமா என்ற ஓநாயிடமிருந்து இந்தப் போர் வெறியைத் தவிர, சமாதானத்தையோ, நல்லிணக்கத்தையோ எதிர்பார்க்க முடியாது.

ஒருபுறம் இசுரேல் காசா முனை மீது விதித்துள்ள பொருளாதாரத் தடையினையும், அதன் விமான மற்றும் கப்பற்படைத் தாக்குதலையும் ஆதரித்து நிற்கும் அமெரிக்க அரசு, மறுபுறம் இசுரேல் காசா முனை மீது தரைப்படை தாக்குதலை நடத்தக் கூடாது என உபதேசிக்கிறது. மேற்குலக ஏகாதிபத்திய நாடுகள் தரைவழித் தாக்குதலை ஆதரிக்க மறுப்பதால், இசுரேலும் எல்லைப்புறத்தில் படைகளைக் குவித்து உதார் விடுவதற்கு அப்பால் செல்லவில்லை.

அரபுலக நாடுகளில் ஏற்பட்டுள்ள சில அரசியல் மாற்றங்கள்தான் அமெரிக்க-இசுரேல் கூட்டணி காசா முனை மீது உடனடியாகத் தரைவழித் தாக்குதலை தொடங்க முடியாமல், அவற்றின் கைகளைக் கட்டிப் போட்டுள்ளன. அமெரிக்க அடிவருடியும் இராணுவ சர்வாதிகாரியுமான ஹோஸ்னி முபாரக் பதவியிறக்கப்பட்ட பின் எகிப்தில் நடைபெற்ற தேர்தலில் வென்று ஆட்சியைப் பிடித்துள்ள சன்னி பிரிவைச் சேர்ந்த முசுலீம் சகோதரத்துவக் கட்சிக் கூட்டணி, ஹமாஸ் இயக்கத்தை ஆதரிப்பதோடு, இசுரேல் தனது தாக்குதலை உடனடியாக நிறுத்திவிட்டு ஹமாஸுடன் ஒரு சமாதான ஒப்பந்தத்தைப் போட்டுக் கொள்ள வேண்டும் எனக் கோரியது. எகிப்தின் இக்கோரிக்கையை துனிசியா, துருக்கி, கத்தார் ஆகிய அரபு நாடுகள் மட்டுமின்றி, அரபு லீக் அமைப்பும் ஆதரித்தன.

அமெரிக்காவை எதிர்த்து வரும் இரான், சிரியா மற்றும் ஹிஸ்புல்லா இயக்கத்தோடு நெருக்கமாக இருந்துவரும் ஹமாஸ் இயக்கம், தற்பொழுது அமெரிக்காவின் நட்பு நாடுகளான எகிப்து, துருக்கி, கத்தார் ஆகியவற்றை நோக்கித் திரும்புவது ஒரு திருப்பு முனையாகக் கருதப்படுகிறது. எகிப்து அமெரிக்காவை மீறிச் செயல்படாது என்றபோதிலும், கடந்த இரண்டாண்டுகளில் அந்நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள், பாலஸ்தீனத்துக்கு எதிரான இசுரேலின் போர் நடவடிக்கைகளை முன்னைப் போல வெளிப்படையாக ஆதரித்து நிற்க முடியாத நிலைமைக்கு அந்நாட்டைத் தள்ளியிருக்கிறது. இந்த நிலைமைகளைக் கருத்தில்கொண்டுதான் அமெரிக்காவும் எகிப்தின் சமாதான முயற்சிகளுக்கு வெள்ளைக்கொடி காட்டியது.

காசா முனை மீது இசுரேல் விதித்துள்ள பொருளாதாரத் தடைகளை முற்றிலுமாக நீக்குவது, இசுரேலின் போர்க் குற்றங்களுக்காக அதனின் ஆட்சியாளர்களைத் தண்டிப்பது, காசா முனை மீது இசுரேல் இழைத்துள்ள நாசங்களுக்கு நட்ட ஈடு வழங்குவது, பாலஸ்தீன மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பது பற்றியெல்லாம் பேசாத எந்தவொரு சமாதான ஒப்பந்தமும் உண்மையானதாக, நியாயமானதாக இருக்கப் போவதில்லை. ஆனால், ஐ.நா.-எகிப்து-அமெரிக்கக் கூட்டணியோ, ஹமாஸ் தனது ராக்கெட் தாக்குதலை நிறுத்த வேண்டும்; இசுரேல் தனது வான்வழித் தாக்குதலை நிறுத்த வேண்டும்” என்ற மொன்னையான ஒப்பந்தத்தைத்தான் பாலஸ்தீன மக்களின் மீது திணித்தது. அதாவது, இசுரேல் தனது இராணுவத் தாக்குதல்களுக்குச் சற்று ஓவு கொடுப்பதையே மாபெரும் சமாதானமாகக் காட்டி ஏத்துவிட முயலுகின்றன. பாம்பும் சாகக் கூடாது; தடியும் நோகக் கூடாது” என்ற தந்திரத்தோடு தயாரிக்கப்பட்டு முன்வைக்கப்படும் இத்தகைய சமாதான ஒப்பந்தங்கள் யூத மதவெறி பாசிச இசுரேல் அரசை மேலும் மேலும் பலப்படுத்தவே பயன்பட்டுள்ளன என்பதுதான் கடந்த கால அனுபவங்கள் உணர்த்தும் உண்மை.

___________________________________________________

– புதிய ஜனநாயகம், டிசம்பர் – 2012
__________________________________________________________

 1. ஒபாமா என்ற
  ஓநாயிடமிருந்து இந்தப்
  போர் வெறியைத் தவிர,
  சமாதானத்தையோ,
  நல்லிணக்கத்தையோ
  எதிர்பார்க்க முடியாது.
  இந்த ஓநாய்கள்தான் ஈராக்கில் பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாக சொல்லி போர் தொடுத்து பலாயிரம் மக்களை கொன்று குவித்தது.
  இப்போது மீண்டும் அதே புலுகை உலகை நம்பச்சொல்லி ஈரான்,சிரியா மீதும் போர் தொடுக்க ரத்த வெறிபிடித்து அலைகிறது.

 2. Gaza occupied by hardcore Palestine terrorists danger to the world peace must be crushed ruthlessly.Women terrorists are groomed in Gaza strip and there is no harm in eliminating them in the interest of the peace.

  • மிஸ்டர். பல்லு, நீங்கள் ஒரு மனோதத்துவ நிபுணரைப் பார்த்து சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க