privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்இதர கட்சிகள்கீழ்வெண்மணி தியாகிகள் நினைவு நாள்

கீழ்வெண்மணி தியாகிகள் நினைவு நாள்

-

டிசம்பர் 25, கீழத் தஞ்சையின் கீழ்வெண்மணி கிராமத்தில், 1/2 படி நெல் கூட்டிக்கேட்ட கூலிவிவசாயிகளை, கோபாலகிருஷ்ண நாயுடு எனும் திருச்சூர் பண்ணையாரின் உத்தரவின்படி அடியாட்கள் கூரை வீட்டுக்குள் அடைத்து உயிருடன் எரித்துக் கொன்ற நாள். கொல்லப்பட்ட 44 தாழ்த்தப்பட்ட மக்களில்  பெண்கள் குழந்தைகளும் அடக்கம்.

கீழ்வெண்மணி தியாகிகளை நினைவு கூர்ந்தும், கடந்த நவம்பர் 7ம் தேதி தரும்புரி நத்தம், அண்ணா நகர், கொண்டம்பட்டி, செங்கல்மேடு உள்ளிட்ட தலித் மக்கள் வசிக்கும் பகுதியில் காதல் திருமணத்தைக் காரணமாக காட்டி ஆதிக்க சாதி வெறியர்கள் 250க்கும் மேற்பட்ட வீடுகளை கொளுத்தியும் நகை, பணம் வீட்டில் இருக்கும் அனைத்து அத்தியாவசியமான பொருள்களையும், பல தலைமுறை உழைத்து சேர்த்த சொத்துக்கள் அனைத்தையும் சூறையாடி வெறியாட்டம் போட்டதை கண்டித்தும் புரட்சிகர அமைப்புகளின் ஆர்ப்பாட்டங்கள் தமிழகத்தின் பல பகுதிகளில் நடத்திய ஆர்ப்பாட்டங்கள் பற்றிய சில விபரங்கள்:

திருச்சி

கீழ் வெண்மணி நாளை நினைவு கூறும் அதே சமயம், இன்று கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள ஆதிக்க சாதியின் வெறியாட்டத்தை கண்டித்தும் 25.12.12 அன்று காலை 10.30 மணி அளவில் திருச்சி ஜங்ஷன் காதிகிராப்ட் அருகில், மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டத்தை மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புகள் நடத்தின.

கீழ்வெண்மணி நினைவு நாள் - திருச்சி ஆர்ப்பாட்டம்
திருச்சியில் ம.க.இ.க., பு.மா.இ.மு., வி.வி.மு., பு.ஜ.தொ.மு., பெ.வி.மு. சார்பில் நடந்த ஆர்ப்பாட்டம்

பு.மா.இ.மு தோழர்.செழியன் தலைமையேற்று பேசும்போது

இன்று வெண்மணியின் படுகொலையை நினைவு கூறும் அதே சமயம் நாடு முழுவதும் ஆதிக்க சாதி வெறியாட்டம் தொடர்ந்துகொண்டுதான் வருகிறது. அன்று கீழ்வெண்மணி மக்கள் அனுபவித்த கொடுமை, பண்ணையார்களின் அடக்குமுறை அதை எதிர்த்து கம்யூனிஸ்ட் கட்சிகளின் போராட்டம் மக்களை தமது உரிமை கேட்டு கிளர்ந்தெழ வைத்தது. 44 பேரை கொளுத்தியவர்களை நக்சல்பாரி தோழர்கள் கணக்கு தீர்த்தனர்.

சாதி சங்கங்களை தடைசெய் எனும் கோரிக்கையுடன் தலைமை உரையை நிறைவுசெய்தார்.

கண்டன உரை யாற்றி தோழர்.பவானி (பெண்கள் விடுதலை முன்னணி) பேசும்போது

மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு, பார்ப்பனரின் பார்வையில் அனைவரும் வேசிமக்கள். இதை நாம் ஆமோதிக்கிறோமென்றால், அவரவர் சாதியில் ஆழமாக ஊன்றி நில்லுங்கள். கீழ்வெண்மணியின் கொடுமையை வார்த்தையால் மதிப்பிட முடியாது, சூரியன் உதிக்குமுன் வயலில் இறங்கி, சூரியன் மறைந்தபிறகு கரையேறுவது, அதுவும் குடும்பத்துடன் பண்ணையாருக்கு உழைக்க வேண்டும், குழந்தையை வயக்காட்டில் தொட்டி கட்டிப் போட்டுவிட்டு, குனிந்த இடுப்பு நிமிரமுடியாமல், குழந்தையின் பசியை போக்க முடியாமல் அவதிப்படும் கொடுமை, இதற்கு முடிவு கட்டவும், கூலியை கூட்டிக் கேட்டதுமே அவர்கள் செய்த குற்றம். தீக்கிரையாக்கி 44 உயிர்களை, பச்சிளம் குழந்தையை கூட இரக்கமில்லாமல் கொன்றொழித்தனர்.

அன்றைய சாதிக்கொடுமை என்பது, செருப்பு போட்டு நடக்க கூடாது, இடுப்பில் உள்ள துண்டை அவுத்து கக்கத்துக்குள் வைக்கனும், மாராப்பு போடக்கூடாது, இவையெல்லாம் ஓரளவு மறைந்தாலும் நவீன தீண்டாமை என்பது திண்ணியத்தில் மலத்தை வாயில் திணிப்பது, பரமக்குடி துப்பாக்கிசூடு, இப்போ தர்மபுரி, மக்களை ஒன்று சேரவிடாமல், தாய்க்குலங்களின் மாணிக்கம்(ஜெயலலிதா), கோவில்களில் அன்னதானம் 24 மணிநேர டாஸ்மார்க் கடை திறந்து மானமற்ற நடைப்பிணங்களாக ஆக்கியதை சாடினார்.

சிறப்புரையாற்றிய தோழர் தர்மராஜ் (ஆட்டோ ஓட்டுநர் பாதுகாப்பு சங்க சிறப்புத் தலைவர்) பேசும்போது

சாதிக் கலவரங்கள், சாதி தீண்டாமை பற்றி நிறைய சம்பவங்கள் நடந்துள்ளது. தர்ம்புரியில் தாழ்த்தப்பட்ட மக்கள் குருவி போல் சேர்த்த 10 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமாக்கப்பட்டது, ஓட்டை உடைத்து, டைல்ஸ்களை நொறுக்கி, வண்டிகளை தீவைத்து கொளுத்தி வெறியாட்டம் போட்டுள்ளது வன்னியர் சாதி வெறி கும்பல், காட்டுமிராண்டிகளுக்கும் நாகரீகமடைந்த மக்களுக்கான சண்டை, இது உருவாக யார் காரணம் பார்ப்பான் உருவாக்கிய மனுதர்மம். தலையில் பிறந்தவன் பிராமணன், தோளில் பிறந்தவன் சத்திரியன், தொடையில் பிறந்தவன் வைசியன், கால்ல பிறந்தவன் சூத்திரன், வேற எங்கயும் இடமில்லாததால், அரிக்குப் பொறந்தவர்கள் பஞ்சமர்கள் போன்ற சாதிகள். இந்த அடிமைகள் உரிமைபற்றி பேசுவதா, கால் கட்டைவிரல் பாத்து பேசுறவன், பண்ணையாரின் கண்ணைப் பார்த்து பேசுவதா? என்பதன் வெளிப்பாடே இந்தக் கலவரங்கள்.
வன்னியர்களின் தலைவன், தமிழ்குடி தாங்கி, டாக்டர் ராமதாசு கலப்பு மணம் செய்ததன் விளைவே இது என நியாப்படுத்துகிறார். இன்று கலப்பு மணம் மனிதர்களை விட உன் கடவுள் முருகனே செய்திருக்கானே, இந்திய ஆட்சியாளர்கள் எத்தனை பேர் கலப்பு மண தம்பதிகள். இந்த நியாயத்தையெல்லாம் பார்க்க தயாராகயில்லை. அவர்களின் பொருளாதார அடித்தளத்தை நசுக்குவதே நோக்கமாக கொண்டு சூரையாடியுள்ள கும்பலை காட்டுமிராண்டிகள் என்பதைவிட வேறென்ன சொல்வது.

தர்மபுரி மண்ணில் நக்சல்பாரி தோழர்கள் அப்பு, பாலன் கால்ப்பட்ட இடமெல்லாம் சாதிப்பேய் ஒழிந்து சமத்துவம் நிலைநாட்டினர். இன்று அதே மண்ணில் நக்சல்பாரிகளை கொன்றொழித்து வேட்டையாடிய ஆளும் வர்க்கம், சாதி வேற்றுமையை வளரவிட்டு, மக்களை மோத விட்டு சுகம் காண்கிறது இதை அங்கு இருந்த போலீசே கண்டுகொள்ளாமல் இருந்தது ஏன்?. மக்கள் பிளவுபட்டு சாதிக்கட்சிகளில் இணையாமல் வர்க்க சக்திகளாக நக்சல்பாரிகளின் பின்னே அணிசேரவேண்டும். கலப்பு மணங்களை ஊக்குவித்து, சாதிப்பேயை சவக்குழிக்கனுப்ப வேண்டும் என ஆத்திரத்துடன் சாடினார்.

இறுதியில், ம.க.இ.க மாவட்ட செயலாளர். தோழர்.சீனிவாசன் நன்றி உரையாற்றினார். பகுதி மக்கள் திரண்டு நின்று ஆதரவு கொடுத்தனர். நமது கருத்துகளை ஆழமாக கூர்ந்து கவனித்தனர். நூற்றுக் கணக்கான தோழர்கள், பெண்கள் குழந்தைகளுடன் கலந்து கொண்டனர். பத்திரிக்கையாளர்கள் வந்து ஆர்ப்பாட்டத்தை பதிவு செய்தனர்.

– செய்தி: ம.க.இ.க.திருச்சி

_____________________

மதுரை

கீழ் வெண்மணி தியாகிகள் நாள் ஆர்ப்பாட்டம் மாலை 6 மணிக்கு மகஇக மதுரை அமைப்பாளர் தோழர் ராமலிங்கம் தலைமையில், மதுரை ஜான்சி ராணி பூங்கா முன்பு நடைபேற்றது. உசிலை வி.வி.மு தோழர் ஆசை மற்றும் உசிலை வி.வி.மு செயலர் தோழர் குருசாமி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

கீழ்வெண்மணி நினைவு நாள் மதுரை ஆர்ப்பாட்டம்
மதுரையில் மக்கள் கலை இலக்கிய கழகத்தைச் சேர்ந்த தோழர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்

தோழர் ராமலிங்கம் தனது தலைமையுரையில்,

உழைக்கும் மக்களின் அன்றாட வாழ்வு, நாளுக்கு நாள் மோசமாகிவருகிறது.  இங்கே சாதிக்கு என்ன வேலை இருக்கிறது. சாதி மக்களை பிளக்கவும், வாழ்வை மேலும் மோசமாக்கவும், மக்களை பிரச்சனைகளிலிருந்து திசை திருப்பவுமே பயன்படுகிறது

என அம்பலப்படுத்தி பேசினார்.

தோழர் ஆசை தனது உரையில்,

உசிலை வட்டத்தில் உள்ள பன்னியான் என்ற கிராமத்தில் அரசு நிதியில் கட்டப்பட்ட நாடக மேடைக்கு முத்துராமலிங்கத்தேவர் பெயரை வைக்க தேவர் சாதியினர் கோரிவருகின்றனர். ஆனால் அந்த ஊரில் பெரும்பான்மையாக உள்ள தாழ்த்தப்பட்டவர்களோ, அப்படி தேவர் பெயரை வைத்து விட்டால் பின் எந்த காலத்திலும் தாழ்த்தப்பட்டவர்கள் அந்த மேடையை பயன்படுத்த முடியாதபடி ஆகிவிடும்.  மேடை தேவர் சாதியினரின் உடைமை யாகிவிடும் என்பதால் பொதுப் பெயர் (பன்னியான் நாடக மேடை) வைக்கவேண்டும்

என கோரிவருவதையும், ஆதிக்க சாதியினர் ஊர் சொத்தை அபகரிக்க போடும் நாடகங்களையும் அம்பலப்படுத்தி பேசினார்.

தோழர் குருசாமி தனது உரையில்,

நாய்ய தூக்கி மடில வெச்சுக்கிட்டு கொஞ்சரான், முத்தம் கொடுக்கரான்.. ஆனா சக மனுசன் கூட சேந்து டீ குடிக்க முடியாதுங்கரான். இந்த மாதிரி ஆட்கள மனுசன் கணக்குல சேக்குறதா இல்ல நாய் கணக்குல சேக்குறதா. மனுசனா நாயான்னு தெரியாத இந்த மாதிரி ஆட்கள் தான் ‘காதல் நாடகம்’ னு பேசறானுக. எதுடா நாடகம்.  நீ போடறதுதான் நாடகம்.

என்று ஆதிக்க சாதியினரின் இரட்டை வேடத்தை அம்மபப்படுத்தி பேசினார்.

* தில்லை அம்பல நடராசன்
வைத்த தீயில் நந்தன் செத்தான்
அயோத்தி ராமன் வைத்த தீயில்
வேடன் சம்புகன் செத்து மடிந்தான்
கோபால கிருஷ்ன நாயுடு தீயில்
வெந்து மடிந்தனர் வெண்மணியில்
வன்னிய சாதி வெறியாட்டத்தில்
எல்லாம் இழந்தனர் தருமபுரியில்
இரண்டாயிரம் ஆண்டுகளாக‌
பார்ப்பண பயங்கர வாதத்தின்
கொடுங்கோன்மை ஆட்டம் போடுது

* நாயும் பன்னியும் மேயும் தெருவில்
மனிதன் நுழையக் கூடாதா
கழுதைக்கு தாலி கட்டும் நாட்டில்
மனிதத் திருமணம் கூடாதா

* காதல் என்பதும் திருமணம் என்பதும்
ஜனநாயக உரிமையடா
ஜனநாயக உரிமை பறிக்கும்
ஆதிக்க சாதி வெறியர்களின்
ஓட்டுரிமை உள்ளிட்ட‌
ஜனநாயக உரிமைகளை
ரத்து செய்! ரத்து செய்!

* தீண்டாமை குற்றம் புரியும்
ஆதிக்க சாதிகளின்
இடஒதுக்கீட்டை ரத்து செய்!

* ஆதிக்க சாதிக் கட்சிகளை
தடை செய் தடை செய்

* ஆதிக்க சாதிச் சங்கங்களின்
தலைவர்களை கைது செய்
குண்டர் சட்டத்தில் கைது செய்

* தலித்தியமும் பெரியாரியமும்
பிழைப்பு வாத சகதியிலே
சாதி தீண்டாமையை ஒழித்துக்கட்டுவோம்
நக்கசல்பாரிப் பாதையிலே.

* திட்டமிட்டு சாதி பார்த்து
சாதி மறுப்பு திருமணங்களை
முன்னின்று நடத்தி வைப்போம்

* சாதி தீண்டாமையை ஒழித்துக்கட்ட‌
கீழவெண்மணி படுகொலை நாளில்
சபத்ம் ஏற்போம் சபதம் ஏற்போம்!

* வந்து பாரடா ராம்தாசே
வந்து பாரடா, மோதி பாரடா
ஆதிக்க சாதி வெறி நாயே!

என்ற ஆர்ப்பாட்ட முழக்கங்கள், மக்களை கவர்ந்தது.

செய்தி: ம.க.இ.க., மதுரை

__________________________

புதுச்சேரி

வெண்மணி தியாகிகளின் நினைவை நெஞ்சிலேந்துவோம் என்ற அடிப்படையில் புதுச்சேரியில் திருப்புவனையில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி-பொதுக்கூட்டம்- புரட்சிகர கலை நிகழ்ச்சி விடுதலைச் சிறுத்தைக் கட்சியினரின் அடாவடியால் காவல் துறை அனுமதி திரும்பப் பெறப்பட்டு முடக்கப்பட்டது.

ஆனால் தோழர்கள் பொதுக்கூட்டம் நடத்தாவிட்டாலும் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என முடிவு செய்து குடியிருப்பு பகுதியிலிருந்து ஊர்வலமாக திருபுவனை பேருந்து நிறுத்தம் அருகே செஞ்சட்டையுடன் தோழர்கள் கையில் “பா.ம.க வை தடை செய்”, “வன்னியர் சங்கத்தை தடை செய்”, ”காடு வெட்டி குருவை கைது செய்” போன்ற பல முழக்கங்கள் அடங்கிய தட்டிகளுடனும், செங்கொடிகளுடனும், ஆசான்களின் படங்களுடனும் பெண்கள், குழந்தைகள் என சுமார் 400 பேர் அளவுக்கு அணி திரண்டனர்.

காலையில் காவல் நிலையத்தில் இருந்த வி.சி கட்சியைச் சார்ந்தவர்கள் அனைவரும் தொழிற்சாலைகளில் உதவி ஒப்பந்ததாரராக உள்ளவர்கள். இவர்கள் அனைவரும் ஒரு தொழிற்சங்கத் தலைவர் என்ற போர்வையில் ஒளிந்து கொண்டு தொழிலாளர்களுக்கு விரோதமாக சங்கம் நடத்திவரும் ஆதிக்க சாதியைச் சார்ந்த உதயகுமார் என்பவரின் கீழ் ஒப்பந்ததாரர்களாக உள்ளவர்கள். இந்த உதயகுமாருக்கு வி.சி கட்சி மட்டுமின்றி திமுக, காங்கிரசு, என்.ஆர் காங்கிரசு, அதிமுக போன்ற ஓட்டுக் கட்சிகளில் உள்ளவர்களும் நெருக்கம். இப்படிப்பட்ட நபரின் தொழிலாளர் விரோதச் செயலை அம்பலப்படுத்தும் விதமாக நாம் இப்பகுதியில் இயக்கம் எடுப்பதும், நமது சங்கத்தை விரிவாக்கம் செய்வதும் இவரின் வளர்ச்சிக்குத் தடையாயிருப்பதால் சாதிப்பெயரால் நம்மைப் பழிதீர்க்க நினைக்கிறார். இதற்கு துணை போகும் உதவி ஒப்பந்ததாரர்களாக உள்ள வி சி கட்சியினர், பு.ஜ.தொ.மு பொதுக்கூட்டம் போடக்கூடாது என்கின்றனர்.

கீழ்வெண்மணி நினைவு நாள் - புதுச்சேரி
புதுச்சேரியில் பொதுக்கூட்டம் தடை செய்யப்பட்ட பிறகு புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி நடத்திய ஆர்ப்பாட்டம்

எதிர்த் திசையில் வி.சி.க வினர் என்று சொல்லிக் கொண்டு காலையில் காவல் நிலையம் வராத வேறு ஒரு நான்கு நபர்கள் வந்தார்கள். அவர்களிடம் சென்று ஆய்வாளர் பேசிய போது அவர்களுக்கு அனுமதி மறுத்தீர்கள், ஏன் நிற்கிறார்கள், கலைந்து போகச் சொல்லுங்கள் என போலீசுக்கு உத்தரவிட்டனர். எதையுமே நடத்தக் கூடாது என்றனர். ’வன்னியர் சங்கத்தைத் தடை செய்’ , ‘வன்னியர் சங்க சொத்துக்களைப் பறித்தெடு’ போன்ற முழக்கங்கள் அடங்கிய தட்டிகளையும், வெண்மணி தியாகிகளுக்கு வீர வணக்கம் என்கிற பெரிய பதாகைகளையும் பார்த்துக் கொண்டேதான் அவர்கள் ஒரு வார்த்தை கூடப் பேசக் கூடாது என்று போலீசுக்கு உத்தரவிட்டனர். காவல் துறை அதிகாரிகளும் அவர்களுடன் குழைந்து, குழைந்து பேசிக் கொண்டு நம்மிடம் ’இவர்கள் எந்தக் கட்டுப்பாடும் இல்லாத பொறுக்கிகள், அமைப்பாக உள்ள நீங்கள் கலைந்து சென்று விடுங்கள்’ என்று நைச்சியமாகப் பேசினர்.
கூட்டமோ, ஆர்ப்பாட்டமோ நடத்த விடக் கூடாது என்பதில் வி.சி.க வினரை விட போலீசே முனைப்பாக நின்றது. ஒப்பந்தக்காரர்களின் ,அடியாட்களாக இவர்கள் இருவரும் விசுவாசமாக இணைந்து செயல்பட்டுள்ளது பளிச்சென அம்பலமாகி உழைக்கும் மக்கள் காரித் துப்பிச் சென்றனர். வி.சி.க தலைமையைப் பற்றிய நமது விமர்சனம் சரிதான் என்பதை உள்ளூர்த் தலைமை தனது இந்த நடவடிக்கையால் அம்பலப்படுத்திக் கொண்டது.

பிரச்சனை செய்த வி.சி.க வில் உள்ள சிலரே, ‘கூட்டம் நடத்தக் கூடாது என்பது தவறு. நீங்கள் செய்வது சரியல்ல’ என அவர்களிடம் கூறி ஒதுங்கிக் கொண்டனர். மேலும் அவ்வழியே சென்ற வேறு சிலரை அவர்கள் அழைத்த போது ‘ஏழரை சனி கூப்பிடுது. நிற்காதே ஒடு’ என அவர்கள் ஓடினார்கள். கூட்டம் நடத்தக் கூடாது என அடாவடி செய்த சிலர், ’வெண்மணித் தியாகிகள் தினம் என்று தெரிந்திருந்தால், நாமும் போஸ்டர் போட்டிருக்கலாமே’ என்று தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.

நமது துண்டறிக்கையில் எந்த முழக்கம் முதன்மையாக உள்ளது? யாரை எதிர்த்துக் கூட்டம் நடத்தப் படுகிறது?  என்பதைக் கூடப் புரிந்து கொள்ளாமல் ஒப்பந்ததாரர்களின் கட்டளைக்கு விசுவாசமாக கூட்டத்தை நடத்த விடக் கூடாது என்று அடியாள் வேலை செய்வதிலேயே குறியாக இருந்தது இவர்களின் அரசியலற்ற தற்குறித்தனத்தை பளிச்சென அம்பலப்படுத்தியது.

மேலும் காலையில் காவல் நிலையத்தில் இருந்து வெளி வந்த ஒப்பந்தக்காரர்களான வி.சி.க வினர் பா.ம.க வினரிடம் சென்று ’நோட்டீசில் உங்களையும் திட்டி எழுதியுள்ளார்கள். போய் கூட்டம் நடத்தக் கூடாது என புகார் செய்யுங்கள்’ என்று தூண்டியுள்ளனர். தங்களது தலைவரைத் திட்டியதால் தான் கூட்டம் நடத்த விட மாட்டோம் என்று இவர்கள் சொல்வது உண்மையல்ல என்பதை இந்த செயல் அம்பலப்படுத்தி விட்டது.

கூட்டத்தைக் காண வந்த சிலரும் இவர்களிடம் பேசி ஒன்றும் பயனில்லை என்றும், இவர்களை யாராலும் காப்பாற்ற முடியாது என்றும், நமது தோழர்களிடம் கூறிவிட்டு வெறுப்புடன் சென்றனர். இவர்கள் முன்பு வி.சி.க வில் ஊக்கமாக செயல் பட்டு, தலைமையின் தவறான நடவடிக்கைகளால் அதிருப்தியுற்று விலகியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்று பெரியார், அம்பேத்கர் போன்றவர்கள் பார்ப்பனீயத்திற்கு எதிராகப் போராடினார்கள். அவர்களின் படங்களைப் போட்டுக் கொள்ளும், வி.சி.க  பார்ப்பனீயம் தோற்றுவித்த சாதியக் கட்டுமானத்திற்குள் நின்று கொண்டு சாதியைத் தகர்க்க முடியாது என்பதை உணர மறுக்கிறது.  நவீனமயமாக்கப் பட்ட பொருளுற்பத்தியில் ஈடுபடும் போது சாதிய உணர்வுகள் குறையும். வர்க்க சிந்தனை மேலோங்க வாய்ப்புள்ளது. இந்த வேலையை பு.ஜ.தொ.மு செய்வதால் தான் முதலாளிகள், பு.ஜ.தொ.மு உள்ளிட்ட புரட்சிகர அமைப்புகளை எதிர்க்கின்றனர். ஏகாதிபத்தியங்களின் நோக்கமும் இதுதான். ஏனெனில் சாதி ரீதியாக பிளவுபடுத்தி எந்த எதிர்ப்புமினறி உழைப்பாளிகளை கொடூரமாகச் சுரண்டுவதற்கு சாதி உணர்வை மங்கவிடாமல் பாதுகாக்க வேண்டிய தேவை இவர்களுக்கு உள்ளது. ஓட்டுக் கட்சிகள் இந்த சேவையை விசுவாசமாக செய்கின்றனர். பா.ம.க இன்று இதில் முன்னிற்கிறது. வி.சி.க வின் நடவடிக்கையும் இதற்குத் துணை நிற்கிறது.

இன்றைய மறுகாலனியாக்கச் சூழலில் முதலாளிகளின் கொள்ளை லாபத்திற்குத் தேவைப்படும் சாதிப் பிளவுகளை உயர்த்திப் பிடிக்கும் அனைத்து ஓட்டுக் கட்சிகளையும் புறக்கணிப்போம். ஏனெனில்

சொந்த சாதி மக்களைக் காவு கொடுக்கும்
சாதி அரசியல் அழிவைத் தரும்!
உழைப்பாளி மக்களை வர்க்கமாய்த் திரட்டும்
கம்யூனிச எழுச்சியே விடிவைத் தரும்!

செய்தி – புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி , புதுச்சேரி.

_________________________

கோவை

மக்கள்  கலை  இலக்கிய  கழகம்  மற்றும்  அதன்  தோழமை  அமைப்பான  புதிய  ஜனநாயகத்  தொழிலாளர்  முன்னணி  இரு அமைப்புகள்  சேர்ந்து  ஆதிக்க சாதி  வெறியாட்டத்தை  கண்டித்து கோவை  செஞசிலுவை  சங்கத்தின்  முன்பாக  மாலை  5.00 மணிக்கு   ஆர்ப்பாட்டம்  நடத்தப்பட்டது.

கீழ்வெண்மணி நினைவு நாள் - கோவை
கோவையில் மக்கள் கலை இலக்கிய கழகம் மற்றும் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ம.க.இ.க மாவட்டச் செயலாளர்  தோழர்  மணிவண்ணன் அவர்கள்  தலைமை  உரையாற்றினார். சிறப்புரையாக  புதிய  ஜனநாயகத்  தொழிலாளர்  முன்னணியின் மாவட்டச்  செயலாளர்  தோழர் விளவை  இராமசாமி  அவர்கள் உரையாற்றினார்.  தர்மபுரியில்  நடந்த  வன்  கொடுமையை  கண்டித்தும் , அதனை  தூண்டி  விட்டவர்களை  வன்  கொடுமை தடுப்பு  சட்டத்தின்கிழ்  கைது  செய்யவேண்டும்  என்றும்  பதிக்கப்பட்ட  மக்களுக்கு  உடனடியாக  நிவாரணம்  வழங்க  வேண்டும்  என்று  தனது உரையில்  குறிப்பிட்டார்.

இதில் திரளானபேர்  கலந்துகொண்டனர். பு .ஜ .தொ .மு  மாவட்ட  பொருளார்  தோழர் பூவண்ணன் நன்றி உரையாற்றினார்.

செய்தி : ம.க.இ.க., கோவை

_____________________

தருமபுரி

தருமபுரியில் டிசம்பர் 25ம் தேதியை ஒட்டி அனைத்து தாலுகா, நகர, கிராமப் பகுதிகளில் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணி அமைப்புகளைச் சேர்ந்த தோழர்கள் பிரச்சார இயக்கம் நடத்தினர்.

“தமிழகத்தை ஆக்கிரமிக்க வரும் ஆதிக்க சாதிவெறிக் கட்சிகளை விரட்டியடிப்போம்!

சாதிவெறியாட்டங்களுக்கு முடிவு கட்டுவோம்!”

என்ற முழக்கங்களுடன் துண்டு பிரசுரங்கள் வினியோகித்தும் ஆர்ப்பாட்டம் நடத்தியும் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்தனர்.

_________

கரூர்

டிசம்பர் 7 சம்பவத்தின் மூலம் தாழ்த்தப்பட்ட மக்கள் தமக்கு நிகரான பொருளாதார வளர்ச்சியை சகித்துக் கொள்ள முடியாது திட்டமிட்டே ஒழித்துக் கட்ட வேண்டும் என்ற சதித்திட்டம் தீட்டி இவற்றினை நடத்தியுள்ளனர். இதற்கு வன்னிய சாதியின் காடுவெட்டி குரு, ராமதாஸ் போன்ற சாதி சங்கத் தலைவர்களும் நியாயப்படுத்தியும் சாதிவெறியைத் தூண்டியும் வருகின்றனர், வளர்க்கின்றனர்.

கீழ்வெண்மணி நினைவுநாள் கரூர் ஆர்ப்பாட்டம்
கரூரில் பு.மா.இ.மு.வும் மனித உரிமைகள் பாதுகாப்பு மையமும் நடத்திய ஆர்ப்பாட்டம்
  • இவற்றினை தெரிந்தே தடுக்க மறுத்த காவல்துறை மற்றும் அரசும் இவற்றுக்கு அங்கீகாரம் வழங்குகின்றன என்பதை கண்டித்தும்
  • தஞ்சை கீழ் வெண்மணி முதல் தொடர்ந்து மேலவளவு முருகேசன், திண்ணியம் கருப்பையா, விருத்தாச்சலம் முருகேசன், கயர்லாஞ்சியின் போட்டமாங்கே தற்போது தரும்புரி இவ்வாறு தொடரும் இச்செயலைத் தடுக்க மக்களிடம் சாதி வெறியைத் தூண்டி வளர்க்கும் வன்னிய சாதி சங்கம் உள்ளிட்ட அனைத்து – ஆதிக்க சாதி சங்கங்களையும் தடை செய்ய வேண்டும்
  • பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்
  • காடு வெட்டி குருவை வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும்

கரூர் தாலுக்கா அலுவலகம் முன்பு புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர் பாக்கியராஜ் (செயலாளர்) தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மனித உரிமைகள் பாதுகாப்பு மையத்தின் தோழர் ஆதி நாராயணன் சிறப்புரையும், தோழர் ராமசாமி கண்டன உரையும் நிகழ்த்தினர். புரட்சிகர இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. புரட்சிகர மாணவர் இளைஞர் முனணி தோழர் பால முருகன் (இணைச் செயலாளர்) நன்றியுரை வழங்கினார்.

இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் பொது மக்களும் பிற ஜனநாயக சக்திகளும் கலந்து கொண்டனர்.

செய்தி : புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, கரூர்

_______________

கோத்தகிரி

  • கீழ்வெண்மணி நினைவு நாள் - கோத்தகிரி ஆர்ப்பாட்டம்
    கோத்தகிரியில் நீலமலை அனைத்துத் தொழிலாளர் சங்க தோழர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம்

    தருமபுரி தாக்குதலைத் தொடர்ந்து அடுத்தடுத்து அரங்கேறுகின்றன சாதிவெறி கொலைகள்! சாதிவெறி கிரிமினல்களை பாதுகாக்காதே!

  • கலவரத்தை தூண்டிய அனைவரையும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்!
  • பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்கு!
  • அனைத்து சாதி சங்கங்களையும் தடை செய்
  • மக்கள் அனைவரும் சாதிக் கட்சிகள், சங்கங்களை விட்டு வெளியேறுங்கள்
  • சாதி மறுப்புத் திருமணங்களை ஊக்குவிப்போம்

என்ற முழக்கங்களின் அடிப்படையில் 25-12-2012 அன்று காலை 10 மணிக்கு கோத்தகிரி ஜீப் நிலையத்தில் நீலமலை அனைத்துத் தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஆனந்த்ராஜ் தலைமை தாங்கினார். ராஜா, பாலன், மோகன், ரவி உட்பட பலர் கலந்து கொண்டனர், விஜயன் நன்றி கூறினார்.

செய்தி : நீலமலை அனைத்துத் தொழிலாளர் சங்கம்

______________________

வேலூர்

கீழ்வெண்மணி நினைவு நாள்

கீழ்வெண்மணி நினைவு நாள் - வேலூர் ஆர்ப்பாட்டம்
வேலூரில் மக்கள் கலை இலக்கிய கழகத்தைச் சேர்ந்த தோழர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்

அன்று தலித் மக்கள் மீது பெருகி வரும் ஆதிக்கச் சாதி வெறித் தாக்குதலை முறியடிப்போம் என்கிற முழக்கத்தினை முன் வைத்து வேலூர் மக்கள் கலை இலக்கியக் கழகம் சார்பில், வேலூர் தலைமை அஞ்சலகம் எதிரில் 25.12.2012 செவ்வாய்க்கிழமை மாலை 4.00 மணி முதல் 6.00 மணி வரை எழுச்சிமிகு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வேலூர் மாவட்ட  ம.க.இ.க செயலாளர் தோழர் த.இராவணன் தலைமை ஏற்று ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். ம.க.இ.க தோழர் இராஜன் சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் பெண்கள், குழந்தைகள உட்பட  30 பேர் கலந்து கொண்டனர்.

  • தருமபுரி தாக்குதலைத் தொடர்ந்து அடுத்து அடுத்து அரங்கேறுகின்ற சாதி வெறிக் கொலைகளை மற்றும் சாதி வெறி கிரிமினல்களை பாதுகாக்கும் தமிழக அரசைக் கண்டித்தும் வன்முறையில் ஈடுபட்ட சாதி வெறியர்களை வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வலியுறுத்தியும்
  • பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழு இழப்பீடு வழங்கக்கோரியும்
  • அனைத்து ஆதிக்கச் சாதிசங்கங்களை தடை செய்யக் கோரியும்

ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

உழைக்கும் மக்கள் சாதிக்கட்சிகள்-சாதிச்சங்கங்களைவிட்டு வெளியேறி உழைக்கும் வர்க்கமாய் ஒன்றிணையவும் அறைகூவல்விடுக்கப்பட்து.

செய்தி – ம.க.இ.க வேலூர்.

______________________________________________________________________________________________________________