Tuesday, September 28, 2021
முகப்பு கட்சிகள் இதர கட்சிகள் கீழ்வெண்மணி தியாகிகள் நினைவு நாள்

கீழ்வெண்மணி தியாகிகள் நினைவு நாள்

-

டிசம்பர் 25, கீழத் தஞ்சையின் கீழ்வெண்மணி கிராமத்தில், 1/2 படி நெல் கூட்டிக்கேட்ட கூலிவிவசாயிகளை, கோபாலகிருஷ்ண நாயுடு எனும் திருச்சூர் பண்ணையாரின் உத்தரவின்படி அடியாட்கள் கூரை வீட்டுக்குள் அடைத்து உயிருடன் எரித்துக் கொன்ற நாள். கொல்லப்பட்ட 44 தாழ்த்தப்பட்ட மக்களில்  பெண்கள் குழந்தைகளும் அடக்கம்.

கீழ்வெண்மணி தியாகிகளை நினைவு கூர்ந்தும், கடந்த நவம்பர் 7ம் தேதி தரும்புரி நத்தம், அண்ணா நகர், கொண்டம்பட்டி, செங்கல்மேடு உள்ளிட்ட தலித் மக்கள் வசிக்கும் பகுதியில் காதல் திருமணத்தைக் காரணமாக காட்டி ஆதிக்க சாதி வெறியர்கள் 250க்கும் மேற்பட்ட வீடுகளை கொளுத்தியும் நகை, பணம் வீட்டில் இருக்கும் அனைத்து அத்தியாவசியமான பொருள்களையும், பல தலைமுறை உழைத்து சேர்த்த சொத்துக்கள் அனைத்தையும் சூறையாடி வெறியாட்டம் போட்டதை கண்டித்தும் புரட்சிகர அமைப்புகளின் ஆர்ப்பாட்டங்கள் தமிழகத்தின் பல பகுதிகளில் நடத்திய ஆர்ப்பாட்டங்கள் பற்றிய சில விபரங்கள்:

திருச்சி

கீழ் வெண்மணி நாளை நினைவு கூறும் அதே சமயம், இன்று கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள ஆதிக்க சாதியின் வெறியாட்டத்தை கண்டித்தும் 25.12.12 அன்று காலை 10.30 மணி அளவில் திருச்சி ஜங்ஷன் காதிகிராப்ட் அருகில், மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டத்தை மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புகள் நடத்தின.

கீழ்வெண்மணி நினைவு நாள் - திருச்சி ஆர்ப்பாட்டம்
திருச்சியில் ம.க.இ.க., பு.மா.இ.மு., வி.வி.மு., பு.ஜ.தொ.மு., பெ.வி.மு. சார்பில் நடந்த ஆர்ப்பாட்டம்

பு.மா.இ.மு தோழர்.செழியன் தலைமையேற்று பேசும்போது

இன்று வெண்மணியின் படுகொலையை நினைவு கூறும் அதே சமயம் நாடு முழுவதும் ஆதிக்க சாதி வெறியாட்டம் தொடர்ந்துகொண்டுதான் வருகிறது. அன்று கீழ்வெண்மணி மக்கள் அனுபவித்த கொடுமை, பண்ணையார்களின் அடக்குமுறை அதை எதிர்த்து கம்யூனிஸ்ட் கட்சிகளின் போராட்டம் மக்களை தமது உரிமை கேட்டு கிளர்ந்தெழ வைத்தது. 44 பேரை கொளுத்தியவர்களை நக்சல்பாரி தோழர்கள் கணக்கு தீர்த்தனர்.

சாதி சங்கங்களை தடைசெய் எனும் கோரிக்கையுடன் தலைமை உரையை நிறைவுசெய்தார்.

கண்டன உரை யாற்றி தோழர்.பவானி (பெண்கள் விடுதலை முன்னணி) பேசும்போது

மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு, பார்ப்பனரின் பார்வையில் அனைவரும் வேசிமக்கள். இதை நாம் ஆமோதிக்கிறோமென்றால், அவரவர் சாதியில் ஆழமாக ஊன்றி நில்லுங்கள். கீழ்வெண்மணியின் கொடுமையை வார்த்தையால் மதிப்பிட முடியாது, சூரியன் உதிக்குமுன் வயலில் இறங்கி, சூரியன் மறைந்தபிறகு கரையேறுவது, அதுவும் குடும்பத்துடன் பண்ணையாருக்கு உழைக்க வேண்டும், குழந்தையை வயக்காட்டில் தொட்டி கட்டிப் போட்டுவிட்டு, குனிந்த இடுப்பு நிமிரமுடியாமல், குழந்தையின் பசியை போக்க முடியாமல் அவதிப்படும் கொடுமை, இதற்கு முடிவு கட்டவும், கூலியை கூட்டிக் கேட்டதுமே அவர்கள் செய்த குற்றம். தீக்கிரையாக்கி 44 உயிர்களை, பச்சிளம் குழந்தையை கூட இரக்கமில்லாமல் கொன்றொழித்தனர்.

அன்றைய சாதிக்கொடுமை என்பது, செருப்பு போட்டு நடக்க கூடாது, இடுப்பில் உள்ள துண்டை அவுத்து கக்கத்துக்குள் வைக்கனும், மாராப்பு போடக்கூடாது, இவையெல்லாம் ஓரளவு மறைந்தாலும் நவீன தீண்டாமை என்பது திண்ணியத்தில் மலத்தை வாயில் திணிப்பது, பரமக்குடி துப்பாக்கிசூடு, இப்போ தர்மபுரி, மக்களை ஒன்று சேரவிடாமல், தாய்க்குலங்களின் மாணிக்கம்(ஜெயலலிதா), கோவில்களில் அன்னதானம் 24 மணிநேர டாஸ்மார்க் கடை திறந்து மானமற்ற நடைப்பிணங்களாக ஆக்கியதை சாடினார்.

சிறப்புரையாற்றிய தோழர் தர்மராஜ் (ஆட்டோ ஓட்டுநர் பாதுகாப்பு சங்க சிறப்புத் தலைவர்) பேசும்போது

சாதிக் கலவரங்கள், சாதி தீண்டாமை பற்றி நிறைய சம்பவங்கள் நடந்துள்ளது. தர்ம்புரியில் தாழ்த்தப்பட்ட மக்கள் குருவி போல் சேர்த்த 10 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமாக்கப்பட்டது, ஓட்டை உடைத்து, டைல்ஸ்களை நொறுக்கி, வண்டிகளை தீவைத்து கொளுத்தி வெறியாட்டம் போட்டுள்ளது வன்னியர் சாதி வெறி கும்பல், காட்டுமிராண்டிகளுக்கும் நாகரீகமடைந்த மக்களுக்கான சண்டை, இது உருவாக யார் காரணம் பார்ப்பான் உருவாக்கிய மனுதர்மம். தலையில் பிறந்தவன் பிராமணன், தோளில் பிறந்தவன் சத்திரியன், தொடையில் பிறந்தவன் வைசியன், கால்ல பிறந்தவன் சூத்திரன், வேற எங்கயும் இடமில்லாததால், அரிக்குப் பொறந்தவர்கள் பஞ்சமர்கள் போன்ற சாதிகள். இந்த அடிமைகள் உரிமைபற்றி பேசுவதா, கால் கட்டைவிரல் பாத்து பேசுறவன், பண்ணையாரின் கண்ணைப் பார்த்து பேசுவதா? என்பதன் வெளிப்பாடே இந்தக் கலவரங்கள்.
வன்னியர்களின் தலைவன், தமிழ்குடி தாங்கி, டாக்டர் ராமதாசு கலப்பு மணம் செய்ததன் விளைவே இது என நியாப்படுத்துகிறார். இன்று கலப்பு மணம் மனிதர்களை விட உன் கடவுள் முருகனே செய்திருக்கானே, இந்திய ஆட்சியாளர்கள் எத்தனை பேர் கலப்பு மண தம்பதிகள். இந்த நியாயத்தையெல்லாம் பார்க்க தயாராகயில்லை. அவர்களின் பொருளாதார அடித்தளத்தை நசுக்குவதே நோக்கமாக கொண்டு சூரையாடியுள்ள கும்பலை காட்டுமிராண்டிகள் என்பதைவிட வேறென்ன சொல்வது.

தர்மபுரி மண்ணில் நக்சல்பாரி தோழர்கள் அப்பு, பாலன் கால்ப்பட்ட இடமெல்லாம் சாதிப்பேய் ஒழிந்து சமத்துவம் நிலைநாட்டினர். இன்று அதே மண்ணில் நக்சல்பாரிகளை கொன்றொழித்து வேட்டையாடிய ஆளும் வர்க்கம், சாதி வேற்றுமையை வளரவிட்டு, மக்களை மோத விட்டு சுகம் காண்கிறது இதை அங்கு இருந்த போலீசே கண்டுகொள்ளாமல் இருந்தது ஏன்?. மக்கள் பிளவுபட்டு சாதிக்கட்சிகளில் இணையாமல் வர்க்க சக்திகளாக நக்சல்பாரிகளின் பின்னே அணிசேரவேண்டும். கலப்பு மணங்களை ஊக்குவித்து, சாதிப்பேயை சவக்குழிக்கனுப்ப வேண்டும் என ஆத்திரத்துடன் சாடினார்.

இறுதியில், ம.க.இ.க மாவட்ட செயலாளர். தோழர்.சீனிவாசன் நன்றி உரையாற்றினார். பகுதி மக்கள் திரண்டு நின்று ஆதரவு கொடுத்தனர். நமது கருத்துகளை ஆழமாக கூர்ந்து கவனித்தனர். நூற்றுக் கணக்கான தோழர்கள், பெண்கள் குழந்தைகளுடன் கலந்து கொண்டனர். பத்திரிக்கையாளர்கள் வந்து ஆர்ப்பாட்டத்தை பதிவு செய்தனர்.

– செய்தி: ம.க.இ.க.திருச்சி

_____________________

மதுரை

கீழ் வெண்மணி தியாகிகள் நாள் ஆர்ப்பாட்டம் மாலை 6 மணிக்கு மகஇக மதுரை அமைப்பாளர் தோழர் ராமலிங்கம் தலைமையில், மதுரை ஜான்சி ராணி பூங்கா முன்பு நடைபேற்றது. உசிலை வி.வி.மு தோழர் ஆசை மற்றும் உசிலை வி.வி.மு செயலர் தோழர் குருசாமி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

கீழ்வெண்மணி நினைவு நாள் மதுரை ஆர்ப்பாட்டம்
மதுரையில் மக்கள் கலை இலக்கிய கழகத்தைச் சேர்ந்த தோழர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்

தோழர் ராமலிங்கம் தனது தலைமையுரையில்,

உழைக்கும் மக்களின் அன்றாட வாழ்வு, நாளுக்கு நாள் மோசமாகிவருகிறது.  இங்கே சாதிக்கு என்ன வேலை இருக்கிறது. சாதி மக்களை பிளக்கவும், வாழ்வை மேலும் மோசமாக்கவும், மக்களை பிரச்சனைகளிலிருந்து திசை திருப்பவுமே பயன்படுகிறது

என அம்பலப்படுத்தி பேசினார்.

தோழர் ஆசை தனது உரையில்,

உசிலை வட்டத்தில் உள்ள பன்னியான் என்ற கிராமத்தில் அரசு நிதியில் கட்டப்பட்ட நாடக மேடைக்கு முத்துராமலிங்கத்தேவர் பெயரை வைக்க தேவர் சாதியினர் கோரிவருகின்றனர். ஆனால் அந்த ஊரில் பெரும்பான்மையாக உள்ள தாழ்த்தப்பட்டவர்களோ, அப்படி தேவர் பெயரை வைத்து விட்டால் பின் எந்த காலத்திலும் தாழ்த்தப்பட்டவர்கள் அந்த மேடையை பயன்படுத்த முடியாதபடி ஆகிவிடும்.  மேடை தேவர் சாதியினரின் உடைமை யாகிவிடும் என்பதால் பொதுப் பெயர் (பன்னியான் நாடக மேடை) வைக்கவேண்டும்

என கோரிவருவதையும், ஆதிக்க சாதியினர் ஊர் சொத்தை அபகரிக்க போடும் நாடகங்களையும் அம்பலப்படுத்தி பேசினார்.

தோழர் குருசாமி தனது உரையில்,

நாய்ய தூக்கி மடில வெச்சுக்கிட்டு கொஞ்சரான், முத்தம் கொடுக்கரான்.. ஆனா சக மனுசன் கூட சேந்து டீ குடிக்க முடியாதுங்கரான். இந்த மாதிரி ஆட்கள மனுசன் கணக்குல சேக்குறதா இல்ல நாய் கணக்குல சேக்குறதா. மனுசனா நாயான்னு தெரியாத இந்த மாதிரி ஆட்கள் தான் ‘காதல் நாடகம்’ னு பேசறானுக. எதுடா நாடகம்.  நீ போடறதுதான் நாடகம்.

என்று ஆதிக்க சாதியினரின் இரட்டை வேடத்தை அம்மபப்படுத்தி பேசினார்.

* தில்லை அம்பல நடராசன்
வைத்த தீயில் நந்தன் செத்தான்
அயோத்தி ராமன் வைத்த தீயில்
வேடன் சம்புகன் செத்து மடிந்தான்
கோபால கிருஷ்ன நாயுடு தீயில்
வெந்து மடிந்தனர் வெண்மணியில்
வன்னிய சாதி வெறியாட்டத்தில்
எல்லாம் இழந்தனர் தருமபுரியில்
இரண்டாயிரம் ஆண்டுகளாக‌
பார்ப்பண பயங்கர வாதத்தின்
கொடுங்கோன்மை ஆட்டம் போடுது

* நாயும் பன்னியும் மேயும் தெருவில்
மனிதன் நுழையக் கூடாதா
கழுதைக்கு தாலி கட்டும் நாட்டில்
மனிதத் திருமணம் கூடாதா

* காதல் என்பதும் திருமணம் என்பதும்
ஜனநாயக உரிமையடா
ஜனநாயக உரிமை பறிக்கும்
ஆதிக்க சாதி வெறியர்களின்
ஓட்டுரிமை உள்ளிட்ட‌
ஜனநாயக உரிமைகளை
ரத்து செய்! ரத்து செய்!

* தீண்டாமை குற்றம் புரியும்
ஆதிக்க சாதிகளின்
இடஒதுக்கீட்டை ரத்து செய்!

* ஆதிக்க சாதிக் கட்சிகளை
தடை செய் தடை செய்

* ஆதிக்க சாதிச் சங்கங்களின்
தலைவர்களை கைது செய்
குண்டர் சட்டத்தில் கைது செய்

* தலித்தியமும் பெரியாரியமும்
பிழைப்பு வாத சகதியிலே
சாதி தீண்டாமையை ஒழித்துக்கட்டுவோம்
நக்கசல்பாரிப் பாதையிலே.

* திட்டமிட்டு சாதி பார்த்து
சாதி மறுப்பு திருமணங்களை
முன்னின்று நடத்தி வைப்போம்

* சாதி தீண்டாமையை ஒழித்துக்கட்ட‌
கீழவெண்மணி படுகொலை நாளில்
சபத்ம் ஏற்போம் சபதம் ஏற்போம்!

* வந்து பாரடா ராம்தாசே
வந்து பாரடா, மோதி பாரடா
ஆதிக்க சாதி வெறி நாயே!

என்ற ஆர்ப்பாட்ட முழக்கங்கள், மக்களை கவர்ந்தது.

செய்தி: ம.க.இ.க., மதுரை

__________________________

புதுச்சேரி

வெண்மணி தியாகிகளின் நினைவை நெஞ்சிலேந்துவோம் என்ற அடிப்படையில் புதுச்சேரியில் திருப்புவனையில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி-பொதுக்கூட்டம்- புரட்சிகர கலை நிகழ்ச்சி விடுதலைச் சிறுத்தைக் கட்சியினரின் அடாவடியால் காவல் துறை அனுமதி திரும்பப் பெறப்பட்டு முடக்கப்பட்டது.

ஆனால் தோழர்கள் பொதுக்கூட்டம் நடத்தாவிட்டாலும் ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என முடிவு செய்து குடியிருப்பு பகுதியிலிருந்து ஊர்வலமாக திருபுவனை பேருந்து நிறுத்தம் அருகே செஞ்சட்டையுடன் தோழர்கள் கையில் “பா.ம.க வை தடை செய்”, “வன்னியர் சங்கத்தை தடை செய்”, ”காடு வெட்டி குருவை கைது செய்” போன்ற பல முழக்கங்கள் அடங்கிய தட்டிகளுடனும், செங்கொடிகளுடனும், ஆசான்களின் படங்களுடனும் பெண்கள், குழந்தைகள் என சுமார் 400 பேர் அளவுக்கு அணி திரண்டனர்.

காலையில் காவல் நிலையத்தில் இருந்த வி.சி கட்சியைச் சார்ந்தவர்கள் அனைவரும் தொழிற்சாலைகளில் உதவி ஒப்பந்ததாரராக உள்ளவர்கள். இவர்கள் அனைவரும் ஒரு தொழிற்சங்கத் தலைவர் என்ற போர்வையில் ஒளிந்து கொண்டு தொழிலாளர்களுக்கு விரோதமாக சங்கம் நடத்திவரும் ஆதிக்க சாதியைச் சார்ந்த உதயகுமார் என்பவரின் கீழ் ஒப்பந்ததாரர்களாக உள்ளவர்கள். இந்த உதயகுமாருக்கு வி.சி கட்சி மட்டுமின்றி திமுக, காங்கிரசு, என்.ஆர் காங்கிரசு, அதிமுக போன்ற ஓட்டுக் கட்சிகளில் உள்ளவர்களும் நெருக்கம். இப்படிப்பட்ட நபரின் தொழிலாளர் விரோதச் செயலை அம்பலப்படுத்தும் விதமாக நாம் இப்பகுதியில் இயக்கம் எடுப்பதும், நமது சங்கத்தை விரிவாக்கம் செய்வதும் இவரின் வளர்ச்சிக்குத் தடையாயிருப்பதால் சாதிப்பெயரால் நம்மைப் பழிதீர்க்க நினைக்கிறார். இதற்கு துணை போகும் உதவி ஒப்பந்ததாரர்களாக உள்ள வி சி கட்சியினர், பு.ஜ.தொ.மு பொதுக்கூட்டம் போடக்கூடாது என்கின்றனர்.

கீழ்வெண்மணி நினைவு நாள் - புதுச்சேரி
புதுச்சேரியில் பொதுக்கூட்டம் தடை செய்யப்பட்ட பிறகு புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி நடத்திய ஆர்ப்பாட்டம்

எதிர்த் திசையில் வி.சி.க வினர் என்று சொல்லிக் கொண்டு காலையில் காவல் நிலையம் வராத வேறு ஒரு நான்கு நபர்கள் வந்தார்கள். அவர்களிடம் சென்று ஆய்வாளர் பேசிய போது அவர்களுக்கு அனுமதி மறுத்தீர்கள், ஏன் நிற்கிறார்கள், கலைந்து போகச் சொல்லுங்கள் என போலீசுக்கு உத்தரவிட்டனர். எதையுமே நடத்தக் கூடாது என்றனர். ’வன்னியர் சங்கத்தைத் தடை செய்’ , ‘வன்னியர் சங்க சொத்துக்களைப் பறித்தெடு’ போன்ற முழக்கங்கள் அடங்கிய தட்டிகளையும், வெண்மணி தியாகிகளுக்கு வீர வணக்கம் என்கிற பெரிய பதாகைகளையும் பார்த்துக் கொண்டேதான் அவர்கள் ஒரு வார்த்தை கூடப் பேசக் கூடாது என்று போலீசுக்கு உத்தரவிட்டனர். காவல் துறை அதிகாரிகளும் அவர்களுடன் குழைந்து, குழைந்து பேசிக் கொண்டு நம்மிடம் ’இவர்கள் எந்தக் கட்டுப்பாடும் இல்லாத பொறுக்கிகள், அமைப்பாக உள்ள நீங்கள் கலைந்து சென்று விடுங்கள்’ என்று நைச்சியமாகப் பேசினர்.
கூட்டமோ, ஆர்ப்பாட்டமோ நடத்த விடக் கூடாது என்பதில் வி.சி.க வினரை விட போலீசே முனைப்பாக நின்றது. ஒப்பந்தக்காரர்களின் ,அடியாட்களாக இவர்கள் இருவரும் விசுவாசமாக இணைந்து செயல்பட்டுள்ளது பளிச்சென அம்பலமாகி உழைக்கும் மக்கள் காரித் துப்பிச் சென்றனர். வி.சி.க தலைமையைப் பற்றிய நமது விமர்சனம் சரிதான் என்பதை உள்ளூர்த் தலைமை தனது இந்த நடவடிக்கையால் அம்பலப்படுத்திக் கொண்டது.

பிரச்சனை செய்த வி.சி.க வில் உள்ள சிலரே, ‘கூட்டம் நடத்தக் கூடாது என்பது தவறு. நீங்கள் செய்வது சரியல்ல’ என அவர்களிடம் கூறி ஒதுங்கிக் கொண்டனர். மேலும் அவ்வழியே சென்ற வேறு சிலரை அவர்கள் அழைத்த போது ‘ஏழரை சனி கூப்பிடுது. நிற்காதே ஒடு’ என அவர்கள் ஓடினார்கள். கூட்டம் நடத்தக் கூடாது என அடாவடி செய்த சிலர், ’வெண்மணித் தியாகிகள் தினம் என்று தெரிந்திருந்தால், நாமும் போஸ்டர் போட்டிருக்கலாமே’ என்று தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.

நமது துண்டறிக்கையில் எந்த முழக்கம் முதன்மையாக உள்ளது? யாரை எதிர்த்துக் கூட்டம் நடத்தப் படுகிறது?  என்பதைக் கூடப் புரிந்து கொள்ளாமல் ஒப்பந்ததாரர்களின் கட்டளைக்கு விசுவாசமாக கூட்டத்தை நடத்த விடக் கூடாது என்று அடியாள் வேலை செய்வதிலேயே குறியாக இருந்தது இவர்களின் அரசியலற்ற தற்குறித்தனத்தை பளிச்சென அம்பலப்படுத்தியது.

மேலும் காலையில் காவல் நிலையத்தில் இருந்து வெளி வந்த ஒப்பந்தக்காரர்களான வி.சி.க வினர் பா.ம.க வினரிடம் சென்று ’நோட்டீசில் உங்களையும் திட்டி எழுதியுள்ளார்கள். போய் கூட்டம் நடத்தக் கூடாது என புகார் செய்யுங்கள்’ என்று தூண்டியுள்ளனர். தங்களது தலைவரைத் திட்டியதால் தான் கூட்டம் நடத்த விட மாட்டோம் என்று இவர்கள் சொல்வது உண்மையல்ல என்பதை இந்த செயல் அம்பலப்படுத்தி விட்டது.

கூட்டத்தைக் காண வந்த சிலரும் இவர்களிடம் பேசி ஒன்றும் பயனில்லை என்றும், இவர்களை யாராலும் காப்பாற்ற முடியாது என்றும், நமது தோழர்களிடம் கூறிவிட்டு வெறுப்புடன் சென்றனர். இவர்கள் முன்பு வி.சி.க வில் ஊக்கமாக செயல் பட்டு, தலைமையின் தவறான நடவடிக்கைகளால் அதிருப்தியுற்று விலகியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அன்று பெரியார், அம்பேத்கர் போன்றவர்கள் பார்ப்பனீயத்திற்கு எதிராகப் போராடினார்கள். அவர்களின் படங்களைப் போட்டுக் கொள்ளும், வி.சி.க  பார்ப்பனீயம் தோற்றுவித்த சாதியக் கட்டுமானத்திற்குள் நின்று கொண்டு சாதியைத் தகர்க்க முடியாது என்பதை உணர மறுக்கிறது.  நவீனமயமாக்கப் பட்ட பொருளுற்பத்தியில் ஈடுபடும் போது சாதிய உணர்வுகள் குறையும். வர்க்க சிந்தனை மேலோங்க வாய்ப்புள்ளது. இந்த வேலையை பு.ஜ.தொ.மு செய்வதால் தான் முதலாளிகள், பு.ஜ.தொ.மு உள்ளிட்ட புரட்சிகர அமைப்புகளை எதிர்க்கின்றனர். ஏகாதிபத்தியங்களின் நோக்கமும் இதுதான். ஏனெனில் சாதி ரீதியாக பிளவுபடுத்தி எந்த எதிர்ப்புமினறி உழைப்பாளிகளை கொடூரமாகச் சுரண்டுவதற்கு சாதி உணர்வை மங்கவிடாமல் பாதுகாக்க வேண்டிய தேவை இவர்களுக்கு உள்ளது. ஓட்டுக் கட்சிகள் இந்த சேவையை விசுவாசமாக செய்கின்றனர். பா.ம.க இன்று இதில் முன்னிற்கிறது. வி.சி.க வின் நடவடிக்கையும் இதற்குத் துணை நிற்கிறது.

இன்றைய மறுகாலனியாக்கச் சூழலில் முதலாளிகளின் கொள்ளை லாபத்திற்குத் தேவைப்படும் சாதிப் பிளவுகளை உயர்த்திப் பிடிக்கும் அனைத்து ஓட்டுக் கட்சிகளையும் புறக்கணிப்போம். ஏனெனில்

சொந்த சாதி மக்களைக் காவு கொடுக்கும்
சாதி அரசியல் அழிவைத் தரும்!
உழைப்பாளி மக்களை வர்க்கமாய்த் திரட்டும்
கம்யூனிச எழுச்சியே விடிவைத் தரும்!

செய்தி – புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி , புதுச்சேரி.

_________________________

கோவை

மக்கள்  கலை  இலக்கிய  கழகம்  மற்றும்  அதன்  தோழமை  அமைப்பான  புதிய  ஜனநாயகத்  தொழிலாளர்  முன்னணி  இரு அமைப்புகள்  சேர்ந்து  ஆதிக்க சாதி  வெறியாட்டத்தை  கண்டித்து கோவை  செஞசிலுவை  சங்கத்தின்  முன்பாக  மாலை  5.00 மணிக்கு   ஆர்ப்பாட்டம்  நடத்தப்பட்டது.

கீழ்வெண்மணி நினைவு நாள் - கோவை
கோவையில் மக்கள் கலை இலக்கிய கழகம் மற்றும் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ம.க.இ.க மாவட்டச் செயலாளர்  தோழர்  மணிவண்ணன் அவர்கள்  தலைமை  உரையாற்றினார். சிறப்புரையாக  புதிய  ஜனநாயகத்  தொழிலாளர்  முன்னணியின் மாவட்டச்  செயலாளர்  தோழர் விளவை  இராமசாமி  அவர்கள் உரையாற்றினார்.  தர்மபுரியில்  நடந்த  வன்  கொடுமையை  கண்டித்தும் , அதனை  தூண்டி  விட்டவர்களை  வன்  கொடுமை தடுப்பு  சட்டத்தின்கிழ்  கைது  செய்யவேண்டும்  என்றும்  பதிக்கப்பட்ட  மக்களுக்கு  உடனடியாக  நிவாரணம்  வழங்க  வேண்டும்  என்று  தனது உரையில்  குறிப்பிட்டார்.

இதில் திரளானபேர்  கலந்துகொண்டனர். பு .ஜ .தொ .மு  மாவட்ட  பொருளார்  தோழர் பூவண்ணன் நன்றி உரையாற்றினார்.

செய்தி : ம.க.இ.க., கோவை

_____________________

தருமபுரி

தருமபுரியில் டிசம்பர் 25ம் தேதியை ஒட்டி அனைத்து தாலுகா, நகர, கிராமப் பகுதிகளில் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணி அமைப்புகளைச் சேர்ந்த தோழர்கள் பிரச்சார இயக்கம் நடத்தினர்.

“தமிழகத்தை ஆக்கிரமிக்க வரும் ஆதிக்க சாதிவெறிக் கட்சிகளை விரட்டியடிப்போம்!

சாதிவெறியாட்டங்களுக்கு முடிவு கட்டுவோம்!”

என்ற முழக்கங்களுடன் துண்டு பிரசுரங்கள் வினியோகித்தும் ஆர்ப்பாட்டம் நடத்தியும் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்தனர்.

_________

கரூர்

டிசம்பர் 7 சம்பவத்தின் மூலம் தாழ்த்தப்பட்ட மக்கள் தமக்கு நிகரான பொருளாதார வளர்ச்சியை சகித்துக் கொள்ள முடியாது திட்டமிட்டே ஒழித்துக் கட்ட வேண்டும் என்ற சதித்திட்டம் தீட்டி இவற்றினை நடத்தியுள்ளனர். இதற்கு வன்னிய சாதியின் காடுவெட்டி குரு, ராமதாஸ் போன்ற சாதி சங்கத் தலைவர்களும் நியாயப்படுத்தியும் சாதிவெறியைத் தூண்டியும் வருகின்றனர், வளர்க்கின்றனர்.

கீழ்வெண்மணி நினைவுநாள் கரூர் ஆர்ப்பாட்டம்
கரூரில் பு.மா.இ.மு.வும் மனித உரிமைகள் பாதுகாப்பு மையமும் நடத்திய ஆர்ப்பாட்டம்

 • இவற்றினை தெரிந்தே தடுக்க மறுத்த காவல்துறை மற்றும் அரசும் இவற்றுக்கு அங்கீகாரம் வழங்குகின்றன என்பதை கண்டித்தும்
 • தஞ்சை கீழ் வெண்மணி முதல் தொடர்ந்து மேலவளவு முருகேசன், திண்ணியம் கருப்பையா, விருத்தாச்சலம் முருகேசன், கயர்லாஞ்சியின் போட்டமாங்கே தற்போது தரும்புரி இவ்வாறு தொடரும் இச்செயலைத் தடுக்க மக்களிடம் சாதி வெறியைத் தூண்டி வளர்க்கும் வன்னிய சாதி சங்கம் உள்ளிட்ட அனைத்து – ஆதிக்க சாதி சங்கங்களையும் தடை செய்ய வேண்டும்
 • பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்
 • காடு வெட்டி குருவை வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும்

கரூர் தாலுக்கா அலுவலகம் முன்பு புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர் பாக்கியராஜ் (செயலாளர்) தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மனித உரிமைகள் பாதுகாப்பு மையத்தின் தோழர் ஆதி நாராயணன் சிறப்புரையும், தோழர் ராமசாமி கண்டன உரையும் நிகழ்த்தினர். புரட்சிகர இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. புரட்சிகர மாணவர் இளைஞர் முனணி தோழர் பால முருகன் (இணைச் செயலாளர்) நன்றியுரை வழங்கினார்.

இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் பொது மக்களும் பிற ஜனநாயக சக்திகளும் கலந்து கொண்டனர்.

செய்தி : புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, கரூர்

_______________

கோத்தகிரி

 • கீழ்வெண்மணி நினைவு நாள் - கோத்தகிரி ஆர்ப்பாட்டம்
  கோத்தகிரியில் நீலமலை அனைத்துத் தொழிலாளர் சங்க தோழர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம்

  தருமபுரி தாக்குதலைத் தொடர்ந்து அடுத்தடுத்து அரங்கேறுகின்றன சாதிவெறி கொலைகள்! சாதிவெறி கிரிமினல்களை பாதுகாக்காதே!

 • கலவரத்தை தூண்டிய அனைவரையும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்!
 • பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்கு!
 • அனைத்து சாதி சங்கங்களையும் தடை செய்
 • மக்கள் அனைவரும் சாதிக் கட்சிகள், சங்கங்களை விட்டு வெளியேறுங்கள்
 • சாதி மறுப்புத் திருமணங்களை ஊக்குவிப்போம்

என்ற முழக்கங்களின் அடிப்படையில் 25-12-2012 அன்று காலை 10 மணிக்கு கோத்தகிரி ஜீப் நிலையத்தில் நீலமலை அனைத்துத் தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஆனந்த்ராஜ் தலைமை தாங்கினார். ராஜா, பாலன், மோகன், ரவி உட்பட பலர் கலந்து கொண்டனர், விஜயன் நன்றி கூறினார்.

செய்தி : நீலமலை அனைத்துத் தொழிலாளர் சங்கம்

______________________

வேலூர்

கீழ்வெண்மணி நினைவு நாள்

கீழ்வெண்மணி நினைவு நாள் - வேலூர் ஆர்ப்பாட்டம்
வேலூரில் மக்கள் கலை இலக்கிய கழகத்தைச் சேர்ந்த தோழர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்

அன்று தலித் மக்கள் மீது பெருகி வரும் ஆதிக்கச் சாதி வெறித் தாக்குதலை முறியடிப்போம் என்கிற முழக்கத்தினை முன் வைத்து வேலூர் மக்கள் கலை இலக்கியக் கழகம் சார்பில், வேலூர் தலைமை அஞ்சலகம் எதிரில் 25.12.2012 செவ்வாய்க்கிழமை மாலை 4.00 மணி முதல் 6.00 மணி வரை எழுச்சிமிகு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வேலூர் மாவட்ட  ம.க.இ.க செயலாளர் தோழர் த.இராவணன் தலைமை ஏற்று ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். ம.க.இ.க தோழர் இராஜன் சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் பெண்கள், குழந்தைகள உட்பட  30 பேர் கலந்து கொண்டனர்.

 • தருமபுரி தாக்குதலைத் தொடர்ந்து அடுத்து அடுத்து அரங்கேறுகின்ற சாதி வெறிக் கொலைகளை மற்றும் சாதி வெறி கிரிமினல்களை பாதுகாக்கும் தமிழக அரசைக் கண்டித்தும் வன்முறையில் ஈடுபட்ட சாதி வெறியர்களை வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வலியுறுத்தியும்
 • பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழு இழப்பீடு வழங்கக்கோரியும்
 • அனைத்து ஆதிக்கச் சாதிசங்கங்களை தடை செய்யக் கோரியும்

ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

உழைக்கும் மக்கள் சாதிக்கட்சிகள்-சாதிச்சங்கங்களைவிட்டு வெளியேறி உழைக்கும் வர்க்கமாய் ஒன்றிணையவும் அறைகூவல்விடுக்கப்பட்து.

செய்தி – ம.க.இ.க வேலூர்.

______________________________________________________________________________________________________________

 1. கீழ்வெண்மணி..

  மறக்கக் கூடாத சில நினைவுகள்…

  கொத்தடிமைகளாக வாழ்ந்த கீழ்த் தஞ்சை விவசாயக் கூலிகளை பண்ணை முதலாளிகள் பச்சைப் படுகொலை செய்யப்பட்டது இதே கிறிஸ்துமஸ் தினத்தில்தான். ( 1968ம் ஆண்டு.)
  இந்த சோகம் பற்றி நினைவில் கொள்ள வேண்டிய சில தகவல்கள்..

  1.விவசாயக் கூலிகளுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு எதிராகப் போராடியவர் கம்யூனிஸ்ட் தலைவர் சீனிவாசராவ் கன்னடர்.

  2.பண்ணை முதலாளிகள் துப்பாக்கிகள் கொண்ட கூலிப் படை வைத்து, விவசாயக் கூலிகளை அடிமைப் படுத்தி வந்தார்கள். அந்த கூலிப் படைக்கு ஜீப் வழங்கும் விழா நடந்த்து. அந்த விழாவில் கலந்துகொண்டு ஜீப் சாவியை, பண்ணை முதலாளிகள் சங்க தலைவர் கோபாலகிருஸ்ணனிடம் அளித்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.

  3.பண்ணை முதலாளிகளின் கூலிப் படையால் தங்கள் உயிருக்கு ஆபத்து என்று அன்றைய தி.மு.க. அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்ற பிறகும் முன் எச்சரிக்கை நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. (பேரறிஞர் அண்ணா முதல்வராக இருந்தார்.)

  4.தங்கள் உரிமைக்காக போராடிய விவசாயிகளை, “அவர்களுக்கு கம்யூனிச பேய் பிடித்திருக்கிறது” என்றார் மூதறிஞர் ராஜாஜி.

  5.அந்த கொடூர சம்பவம் நிகழ்வதற்கு முன் பல ஆண்டுகளாகவே விவசாயக் கூலிகளின் போர்க்குரல் ஒலிக்க ஆரம்பித்தது. ஆனால் அப்போது ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசின் முதல்வர் பெருந்தலைவர் காமராஜர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

  6.ராமையா என்கிற விவசாயக் கூலியின் குடிசையில் பயந்து ஒதுங்கிய நாற்பதுக்கும் மேற்பட்டவர்களை தீ வைத்துக் கொளுத்தியது பண்ணையார் கும்பல். இந்த கலவரம் பற்றி இரவு 8 மணிக்கு கீவளூர் காவல் நிலையத்துக்குத் தகவல் சொல்லப்பட்டும், இரவு 12 மணிக்கே காவல் துறையினர் வந்தார்கள்.

  7.இந்தப் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்தவர்கள் கம்யூனிஸ்ட் கட்சியினரும், தந்தை பெரியாரும்.

  8. இந்தக் கொடுமைகளில் ஈடுபட்ட ஆகப் பெரும்பாலோர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள்.

  9.பண்ணை முதகளுக்கு தலைமை வகித்த கோபாலகிருஸ்ணனுக்கு நாகை அமர்வு நீதி மன்றம் பத்து ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து. மேல் முறையீட்டுக்காக சென்னை உயர் நீதி மன்றத்தை நாடினார் கோபாலகிருஸ்ணன். அங்கு, நீதிபதி மகராஜன், “குற்றம் சாட்டப்பட்ட கோபாலகிருஸ்ணன் மீது சந்தேகத்துக்கு இடமின்றி குற்றம் நிரூபிக்கப்படவில்லை” என்று சொல்லி விடுதலை செய்தார். அதோடு, “கோபாலகிருஸ்ணன் போன்று கார், நிலம் உடமை வைத்திருக்கும் பணக்கார்ர்கள் தாங்களே சென்று கொலை செய்திருப்பார்கள் என்பதை நம்ப முடியவில்லை” என்கிற அரிய கருத்தையும் உதிர்த்தார் மகராஜன்.

  10.கீழ்வெண்மணி கொடுமை நடந்து 12 ஆண்டுகளுக்குப் பிறகு 1980 டிசம்பர் மாத்த்தில் ஒரு நாள்… நினைவிடமாக்கப்பட்ட ராமையாவின் குடிசையில் கொலையுண்டு கிடந்தார் கோபாலகிருஸ்ணன். அருகில் நக்ஸல்பாரி இயக்க துண்டுப் பிரசுரங்கள் கிடந்தன.

  (1999 ம் ஆண்டு, அப்போதைய கீழ்வெண்மணி எப்படி இருக்கிறது என்ற நோக்கத்தில் செய்திக் கட்டுரைக்காக சென்றேன். அங்குள்ள மக்கள் கூறியது: “விவசாயத்தை அடிப்படையா வச்சுத்தான் பிரச்சினை வெடிச்சது. இப்போ விவசாயக் கூலிகளோட பிள்ளைகளும், நில உடைமையாளர்கள் வாரிசுகள் பலரும் வெளியூரில் கூலி வேலை பார்க்குறாங்க. இங்கே விவசாயம் அத்து போச்சு”)

  • டி.வி.எஸ். அவர்களே,

   // 2.பண்ணை முதலாளிகள் துப்பாக்கிகள் கொண்ட கூலிப் படை வைத்து, விவசாயக் கூலிகளை அடிமைப் படுத்தி வந்தார்கள். அந்த கூலிப் படைக்கு ஜீப் வழங்கும் விழா நடந்த்து. அந்த விழாவில் கலந்துகொண்டு ஜீப் சாவியை, பண்ணை முதலாளிகள் சங்க தலைவர் கோபாலகிருஸ்ணனிடம் அளித்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். //

   மேற்படி நெல் உற்பத்தியாளர்கள் சங்கம் நடத்திய விழாவில் புகழ் பெற்ற நடிகராய் இருந்ததாலும், தஞ்சையை சேர்ந்த நில உடமையாளர் – காங்கிரஸ்காரர் என்பதாலும் சிவாஜி கணேசனை அழைத்திருக்கிறார்கள்.. மற்றபடி கீழ்வெண்மனி படுகொலைகளுக்கும் சிவாஜிக்கும் முடிச்சு போடமுடியாது..

   // 7.இந்தப் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்தவர்கள் கம்யூனிஸ்ட் கட்சியினரும், தந்தை பெரியாரும்.//

   இதுவும் வேறு விதமான முடிச்சு..

 2. // தீண்டாமை குற்றம் புரியும்
  ஆதிக்க சாதிகளின்
  இடஒதுக்கீட்டை ரத்து செய்! //

  இந்த கோரிக்கையை முன்வைத்து கோர்ட்டில் வழக்கு தொடர்வீர்களா?

  • வெங்கடேசன்…முதல்ல எல்லா சாதிக்கும் சாதி முறையிலான இட ஒதுக்கீடை ரத்து செய்….
   SAY NO TO CASTE BASED RESERVATION
   Reservation is the worst Democracy S…top Divide and rule policy ABOLISH RESERVATION BASED ON CASTE SYSTEM AND REPLACE IT WITH RESERVATION BASED ONLY ON ECONOMIC CONDITION.

 3. //இந்தப் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்தவர்கள் கம்யூனிஸ்ட் கட்சியினரும், தந்தை பெரியாரும்//

  அப்படீங்கறீங்க? So called பெரியாரின் கீழ்வெண்மணி அறிக்கையை கீழே தருகிறேன்.

  “தஞ்சை மாவட்டத்தில் இடதுசாரி கம்யூனிஸ்ட்கள் விவசாய மக்களுக்கு நலன் செய்வதுபோல அவர்களுக்காகப் பாடுபடுவதுபோல ஏழை எளியவர்களின் வாழ்வை உயர்த்துவதுபோல மேடைகளிலே பேசுகிறார்கள். உங்கள் கூலியை உயர்த்துவது, வாழ்வை வளமாக்குவது எங்கள் கட்சியேயாகும் எனக்கூறி விவசாய மக்களை ஏமாற்றி அவர்களை பலிவாங்கிக் கொண்டு வருகிறார்கள். கூலி உயர்வு என்பது ஒரு கட்சியால் ஏற்படுவதல்ல. இதனைத் தொழிலாளர்கள் உணரவேண்டும். நாட்டில் ஏற்படுகின்ற பொருளாதார மாற்றம், விலைவாசி உயர்வு – பற்றாக்குறை இவைகளைக் கொண்டுதான் கூலிகள் உயர்கின்றதே தவிர கட்சிகளால் அல்ல.

  தொழிலாளர்கள் தங்களுக்கு கிடைக்கிற பொருளாதாரத்தில் எப்படி வாழவேண்டும் என்பதை கம்யூனிஸ்ட் தோழர்கள் உங்களுக்குக் கூறாமல் நாட்டிலே கலவரத்தையும், புரட்சியையும் ஏற்படுத்தி இன்றைய தினம் வலதானாலும் சரி, இடதானாலும் சரி, அதிதீவிர கம்யூனிஸ்ட்டுகளானாலும் சரி இந்த ஆட்சியினைக் கவிழ்த்துவிட வேண்டுமென்கின்ற முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர். அதற்கு விவசாயத் தோழர்களும் மற்ற தொழிலாள நண்பர்களும் இடம் கொடுக்கக்கூடாது என்று கேட்டுக்கொள்கின்றேன். நாகை தாலுக்காவிலே கலகம் செய்ய தூண்டியது கம்யூனிஸ்ட் கட்சி. அதன் காரணமாக 42 பேர் உயிரிழந்தனர். கம்யூனிஸ்ட் கட்சி நமக்கு ஒத்துழைத்த கட்சி என்று அரசாங்கம் சும்மா இருந்துவிடவில்லை. தேவையான நடவடிக்கையினை மேற்கொண்டிருக்கின்றது.

  நாட்டில் அராஜகத்தைத் தூண்டும் பணியில் கம்யூனிஸ்ட் கட்சி மிக தீவிரமாக ஈடுபட்டிருக்கின்றது. இதற்கு இடம்கொடுக்காமல் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். கம்யூனிஸ்ட்களின் குறி கீழத்தஞ்சைப் பகுதி பக்கம் திரும்ப இருக்கிறது. இங்குள்ள விவசாயத் தோழர்கள் இங்கு அந்த தீயசக்தி பரவ இடம் கொடுக்கக் கூடாது என்று கேட்டுக்கொள்கின்றேன். இந்த ஆட்சியை பலவீனப்படுத்தக் கம்யூனிஸ்ட் கட்சி ஈடுபட்டுள்ளது. அதற்கு நம்மக்கள் ஆதரவளிக்காமல் இவ்வாட்சிக்கு தங்களின் ஆதரவினைக் கொடுப்பதன் மூலம் இந்த அரசை மேலும் பலம் பொருந்தியதாக்க வேண்டும்.”

  இப்போது கூறுங்கள் உயிரிழந்த 42 பேர் யார் என்பதையாவது பெரியார் கூறினாரா? ஒப்புக்காவது வருத்தம் தெரிவித்தாரா?

  கொலை செய்வித்த கோபலகிருஷ்ண நாயுடுவின் பெயரைக்கூட கூறவில்லையே இந்த ஈ.வெ.ராமசாமி நாயக்கர் என்னும் பலீஜா நாயுடு? அவ்வளவு சுயசாதிபாசம் அவருக்கு.

  போய் ஒழுங்காக சரித்திரம் படித்துவிட்டு வாருங்கள்.

  அன்புடன்,
  டோண்டு ராகவன்

  • பெரியாரின் தேவையை முன் நிறுத்துபவர்கள் பெரியாரை விமர்சனக் கண்ணோட்டத்திலிருந்தே அதனை செய்கின்றனர். நீங்கள் குறிப்பிட்டிருக்கும் விஷயம் பெரியார் மீது ஏற்கனவே சொல்லப்பட்டது தான். அதனை சொன்னவர்களும் கம்யூனிஸ்ட்கள் மற்றும் பெரியாரிஸ்ட்கள் தான். அந்த நேர்மை எமது தரப்புக்கு உண்டு. புதிய ஜனநாயகத்தில் தொடர் கட்டுரையே வந்துள்ளது. ஆனால், பெரியாரை விமர்சிக்கும் உமது நோக்கம் வேறானது.

    • அவர் வேண்டாம் என்று தூக்கியெறிந்த ‘நாயக்கரை’ அவரோடு இணைத்து விடுவதில் தான் எத்துணை வன்மம். தாம் மட்டுமல்ல, தம் வழி நடப்பவர்கள் மட்டுமல்ல தமது எதிரிகளையும் மாற்றத்தை நோக்கி நெட்டித்தளியவர் அவர் . அதனால் தான் உமது பெயருக்குப் பின்னே தற்போது ஒரு அய்ய்ரோ,அய்யங்காரோ இல்லாமல் போனது.(அண்ணாசாலை என்று அரசாங்க ஆவணங்களெல்லாம் மாறி 3 மாமங்கமாகி விட்ட பின்னும் ஒரு மேதாவி ஜந்து தமது அலுவலக முகவரியில் மவுண்ட் ரோடு என்றே அச்சிட்டு வருகிறது)பெரியார் எவரும் தம்மை தெய்வமயாய் தொழ விரும்பியவரல்ல. நாமும் அவரை விமர்சனத்திற்கு பின்னரே அவர் தேவையை முன்னிறுத்துகிறோம்.முடிவதற்கு எம்மிடம் சிண்டில்லை நண்பரே!

      • பாலாவின் படமொன்றில் சொன்னது போல ‘கும்பிடுறேன் சாமி’ என்றோ, ‘கழுதை பயல்’ இப்படி எப்படி பெயர் வைத்துக்கொண்டாலும் பதிவு செய்து கொள்ளலாம். அதுவல்ல நான் கூறியது மாறாக சுந்தரம் அய்யங்காரோ என்றோ மெய்யப்ப செட்டியாரோ தத்தமது பிள்ளைகள் இப்படி மொட்டையாக ரவிசீனிவாசனாக, சரவணனாக, குமரனாக வலம் வரக்கூடும் என்று நினைத்திருப்பார்களா? அதனை செய்தவர் பெரியார். ஏன் நீங்களே விரும்பினாலும் உங்களது xyz சாதியை போட்டுக் கொள்ள முடியுமா என்ன? அதன்பின் உங்கள் அலுவலகத்தில் சகஜமாக நடமாட முடியுமா?

       • Even if someone doesn’t put their caste in their birth certificate,everyone knows the caste in office.

        I know a friend who got his son’s name as arun chettiar,the registar office tried saying we wont allow,this that but there is no law which bans u from taking any name u like with or without caste surname.

       • பெரியார் இயக்கத்திற்க்கு பல பத்தாண்டுகள் முன்பு பிறந்த என் தாத்தா / பாட்டி பெயரில் சாதி இல்லை… சுதந்திரத்திற்க்கு முன் பதிவு செய்யப்பட்ட ஆவனங்களிலும் இல்லை…

        கொஞ்சம் தென் தமிழகம், கொங்கு மாவட்டங்களில் எல்லாம் சென்று பாருங்கள்…நாடார், க வுண்டர், முதலியார் என்று சாதி பெயர் இன்னும் இருக்கத்தான் செய்கின்றது…

        வெறும் காகிதத்தில் அழித்தால் அது பம்மாத்து…

 4. டோண்டுவின் நோக்கம்தான் இங்கே பிரச்சினையா..?!

  எங்கள் தமிழ்நாட்டு மார்க்ஸ், பெரியார், எங்கள் மூக்கை எத்தனை முறை, எப்படி வேண்டுமானாலும் உடைக்கலாம், பாப்பான் அதைக் கேட்கக்கூடாது.. சாதிப்பாசம் பற்றியும் பேசக்கூடாது..

  இது காமெடி பாசிசமா இல்லையா..?!

  • அம்பி அவர்களே,
   இங்கு பல விவாதங்களில் ஜனநாயகப்பூர்வமாக கருத்துக்களை முன்வைத்த நீங்களுமா டோண்டு வின் வலையில் விழ வேண்டும். பெரியார் கீழ்வெண்மணி படுகொலைகளை கண்டிக்கவில்லை என்ற அவரது வாதத்தை ஏற்று பெரியாரும், மார்க்சும் தமிழர்கள் மூக்கை உடைக்க வந்தனர் [அந்த பதம் ஒரு idiom ஆக இருந்தாலும்] என்று சகட்டுமேனிக்கு எழுதியிருக்கிறீர்கள். நீங்கள் பெரியார் மற்றும் மார்க்சிய நூல்களை வாசிக்க கோருகிறேன். அதன் பிறகு சொந்தமாக ஒரு முடிவுக்கு வாருங்கள்.

   டோண்டுவுக்கு நேர்மையான நோக்கம் இருப்பின் கீழ்வெண்மணி படுகொலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி பெற்று தந்த கம்யூனிஸ்ட்கள் குறித்த அவரது கருத்து என்ன? மையமான விவாதப் பொருள் இங்கு கட்டுரை தானே. ஏன் அதில் இறுக்கம் காட்டுகிறார்.

  • ஆமாம் அம்பி,

   ஒருவரின் செயலைவிட அந்த செயலுக்கான நோக்கம் என்ன என்பதை தான் பார்க்க வேண்டும், அப்பொழுது தான் சரியான முடிவு எடுக்க முடியும்.

   சிலரின் செயல் சாதாரணமாக இருந்தாலும், அதன் நோக்கம் மிக உயர்வாக இருக்கும்.

   சிலரின் செயல் சாதாரணமாக இருந்தாலும் அதன் நோக்கம் படு கேவலமாக இருக்கும்.

   ஆகவே, ஒருவரின் நோக்கத்தை வைத்துத்தான் அவரின் செயலை எடைப்போட வேண்டும்.

   ‘ஒரு பெண் இரண்டு நபர்களை கொலை செய்தாள்’ என்ற செய்தியை கேள்விப்படுகிறீர்கள்,

   கொலை செய்தது பெரிய குற்றமாச்சே என்று அப்பெண்ணுக்கு தண்டனை கொடுத்தால் தப்பாகிவிடும்.
   அந்த பெண் ஏன் கொலைசெய்தாள்? அவளின் ”நோக்கம்” என்ன?
   என்று பார்த்தால், அப்பெண் தன் மகளை கற்பழிக்க வந்த இரண்டு கயவர்களை கொலை செய்தாள் என்ற உண்மை புரியும்.

   ஆகவே ஒருவரின் செயலை விட அந்த செயலின் நோக்கத்தை தான் பார்க்க வேண்டும்.

 5. சரித்திரம் படித்த ஒரு முதலையின் கண்ணீர் மெய் சிலிர்க்க வைக்கிறது.

 6. டோன்டு ராகவன் சார், மற்றும் அவரையொத்த கருத்தாளர்களின் கவனத்திற்காக…

  “பெரியாரது வழமையான பாணியில் இவ்விமர்சனமும், பொதுப்புத்தி சார்ந்தும் சற்றே உணர்ச்சி வசப்பட்ட நிலையிலும் அமைந்திருக்கிறது. சோவியத் இரஷ்யாவை பல்வேறு சந்தர்ப்பங்களில் விதந்தோதிய பெரியார், இந்திய கம்யுனிஸ்டுகளை எப்பொழுதுமே ‘பொறுக்கித் தின்பவர்களென்றே’ அழைத்து வந்தார். அதைப் போலவே இந்திய கம்யூனிஸ்டுகளும் பெரியாரையும் அவர் வலியுறுத்திய இன, பிராந்திய உணர்வுகளையும் கண்டு கொண்டதில்லை. ‘இந்தியாவில் சமதர்மமும் பொதுவுடைமைத் தத்துவமும் ஏற்பட வேண்டுமானால், வருணாசிரமமும், பரம்பரைத் தொழில் முறையும், கைத்தொழில் முறையும் முதலில் ஒழிய வேண்டும்’ (குடிஅரசு 14.6.1931). ‘வருணாசிரமத்தையும் பார்ப்பனியத்தையும் பத்திரப்படுத்தி விட்டு எப்படிப்பட்ட பொதுவுடைமையை ஏற்படுத்தி விட்டாலும், திரும்பவும் அந்த உடைமைகள் வருணாசிரமப்படி பார்ப்பானிடம் தானாகவே வந்துவிடும் என்றும், சாதி இருக்கிற வரையில் எப்படிப்பட்ட பொதுவுடைமைத் திட்டம் ஏற்பட்டாலும் பார்ப்பனர்களுக்கு ஒரு கடுகளவு மாறுதலும் ஏற்படாமல் அவர்கள் வாழ்வு – முன்போலவே நடைபெறும் என்றும் தைரியம் கொள்ளச் செய்யும்…’ (குடிஅரசு 25.3.1934). அதனால்தான் பார்ப்பனர்களுக்குப் பொதுவுடைமைப் பிரச்சாரத்தில் அவ்வளவு உற்சாகம் ஏற்படுகிறதென்ற பெரியாரின் அவதானிப்பு, காலம்கடந்தே நமக்கு உறைக்கிறது.

  ‘கம்யூனிஸ்ட் – எவன் காலை நக்கியாவது வயிறு வளர்க்கிறதுதான் அவன் வேலை; இன்னாரோடுதான் இருக்கணும் என்கிற எண்ணம் இல்லை; நாம் வலுத்தால் நம்கிட்டே; பார்ப்பான் வலுத்தால் அவன் கிட்டே; இன்னொருவன் வலுத்தால் அவன்கிட்டே; உலகத்திலே கொள்கையே இல்லாத ஒரு கூட்டம் நம் கம்யூனிஸ்ட்டுதான்’ (4.11.1973 திருச்சி தேவர் மன்றம் “திருச்சி சிந்தனையாளர் கழக விழா”வில் பேசியது) என்ற கணிப்பும் இன்றைய வரைக்கும் நீடிக்கும் நிலைதான் இருக்கிறதெனினும், சமீப காலமாக, கம்யூனிஸ்ட்டுகள் பெரியாரை ஏற்றுக்கொள்வதும்; இனம், மொழி குறித்தெல்லாம் கவனம் செலுத்தத் தொடங்கியிருப்பதும் மகிழ்ச்சியளிக்கிறது. இம்முடிவுகள் முன்னரே எடுக்கப்பட்டிருந்தால் அதனுடைய விளைவுகள் மிகச் சிறப்பாக இருந்திருக்குமே.

  கூலி உயர்வுக்கான தொழிலாளர்களின் கிளர்ச்சிகளைப் பெரியார் ஒருபோதும் ஆதரித்ததில்லை. இது ஏதோ வெண்மணி விஷயத்தில் மட்டும் எடுக்கப்பட்ட முடிவல்ல. 1933ஆம் ஆண்டிலேயே கொச்சி, ஆலப்புழை, திருநெல்வேலி ஆகியவிடங்களில் கீழ்க்கண்டவாறு பேசியிருக்கிறார்.

  “எந்தக் காரணத்தை முன்னிட்டாவது பாடுபடும் மக்கள் நிலை தாழ்ந்திருக்கவும் பாடுபடாத மக்கள் நிலை உயர்ந்திருக்கவும், ஆதிக்கம் செலுத்தவும் கூடாது என்பதுதான் தொழிலாளர்கள் கிளர்ச்சியின் முக்கியத்துவமாய் இருக்க வேண்டும். அப்படிக்கில்லாமல், ஏதோ 2 அணா 4 அணா கூலி உயர்த்தப்படுவதற்காகப் போராடுவதென்பது பயனற்றதேயாகும். ஏனெனில் நமது கிளர்ச்சியில் 2 அணா கூலி உயர்த்தித் தருவானேயானால், தொழிலாளிகளால் செய்யப்படும் சாமான்களின் பேரில் முதலாளிகள் ஒன்று சேர்ந்து நாலணா விலை அதிகப்படுத்திவிடுவார்கள். அந்த உயர்ந்த விலையைக் கொடுத்துச் சாமான் வாங்க வேண்டியவர்கள் தொழிலாளிகளேயாவார்கள். ஆகவே, முதலாளிகள் தொழிலாளிகளுக்கு வலது கையில் கூலி அதிகம் கொடுத்து, இடது கையில் அதைத் தட்டிப் பிடுங்கிக் கொள்வார்கள். முதலாளிகளுடன் கூலித்தகராறு என்பது முதலாளிகளுக்கும் தொழிலாளிகளுக்கும் இடையில் உள்ள புல்லுருவிக் கூட்டமான தரகர்களுடைய சூழ்ச்சியாகும்” (குடிஅரசு 01.10.1933).

  “நிலங்கள் அனைவருக்கும் பிரித்தளிக்கப்பட வேண்டும்; விவசாயத்தில் ஈடுபட்ட கூலியாட்களுக்குக் கூலி தவிர விவசாயத்தில் ஒரு பங்கு இருக்கும்படிச் செய்ய வேண்டும்” என்ற “பகுத்தறிவு” கட்டுரையும் (2.12.1934) ‘முதலாளிக்கு ஏற்படும் இலாபத்தில் தொழிலாளர்களுக்குப் பங்கும் நிர்வாகத்தில் உரிமையும் வேண்டும்’ என்ற 1944-ஆம் ஆண்டு சேலம் மாநாட்டுத் தீர்மானமும், ‘அரசாங்கத்தின் சலுகையால் முதலாளி வாழ முடிகிறது. ஆகையால் முதலாளி கூடாதென்றால் அவனைப் பாதுகாக்கும் அரசாங்கத்தின் மீது திரும்ப வேண்டு’மென்று பொன்மலையில் 27.9.1953 அன்று பேசியதும் இங்கு சேர்த்தெண்ணத்தக்கவை.

  பெரியாரின் செம்பனார் கோயில் பேச்சிலிருந்து திராவிடக் கட்சிகளின்மீது அவர் வைத்திருந்த நம்பிக்கையை விளங்கிக் கொள்ள இயல்கிறது. அந்த நம்பிக்கையும் சிதறுண்டு போய், அவர் ‘ஓட்டுகளுக்காகக் கூட்டிக்கொடுக்கவும் செய்வார்கள்’ என்று இறுதிக்காலத்தில் (19.12.1973) பேச வைத்துவிட்டது. காங்கிரஸ் கட்சியை ஆட்சியிலிருந்து அகற்றி திராவிடக் கட்சிகள் ஆட்சியிலமர்ந்ததைச் சுயமரியாதை இயக்கத்தின் வெற்றியென அவர் கருதிக் கொண்டதும், அவர்கள் ஆட்சியிலிருப்பது சுயமரியாதை இயக்கப் பணிகளுக்கு ஆதரவாக இருக்குமென்பதும் அவர் நம்பிக்கைகளுக்குக் காரணமாயிருந்தன.

  கம்யூனிஸ்ட்டுகளிடம் விவசாயக் கூலித் தொழிலாளிகள் எச்சரிக்கையாக இருக்கவேண்டுமென்ற பெரியாரின் அறிவுரையில், இப்பொழுது திராவிடக் கட்சிகளையும் தலித் அமைப்புகளையும் தயக்கமின்றி இணைத்துக் கொள்ளலாம். தலித் அமைப்புகள் பெரியாரை முற்றாகப் புறக்கணிப்பது பார்ப்பனியத்திற்குத் துணைசெய்வதே ஆகும். சாதி, மத ஒழிப்பிற்கான பெரியாரின் நுட்பமான அவதானிப்புகளைப் புறந்தள்ளுகிறபட்சத்தில், நெடிய காலம் தள்ளி அதன் பெருந்தீங்கை உணர வேண்டியிருக்கும்.

  நன்றி : “குதிரை வீரன் பயணம்”, 2006 சூன் இதழ் (கீற்று இணைய இதழில் வெளியான பதிவிலிருந்து)

 7. டோன்டு ராகவன் சார் மற்றும் அவரையொத்த கருத்து கொண்டவர்களுக்காக மேற்படி பதிவு. இது கீற்று இணைய இதழில் வெளியானது.

 8. திரு டி.வி.எஸ். அவர்களே.

  பெரியாரை எப்படியாவது பொய் சொல்லியாவது மட்டம் தட்ட வேண்டுபது தான் அவர்களுக்கு வேலை; இரண்டு காரனங்கள அதற்க்கு:சாமியை வைத்து பிழைக்கும் கூட்டத்தை சாடியதும்; எவனும் தலயில் இறந்து பிறக்கவில்லை எனபதையும்.

  ஓடு பொய்யை ஒருவன் சொல்லுவான்; அதை மேற்கோள் காட்டி மீதி பேர் எழுதுவான்; அது ஆதாரம் ஆகிவிடும்; இதை எளிதில அவர்கள் செய்ய முடிந்ததற்கு காரணம் அதிகாரம், ஊடங்கள் அவர்கள் கையில் இருந்தது; இன்றும் இருக்கிறது.

  பெரியார் தா பாண்டியன் பற்றி முன்பே அறிந்திருப்பார் போல!

 9. அம்பி சார், எனது இரண்டாவது பதிவிலேயே தங்களுக்கான பதில் உள்ளது.
  அதைப் படிக்காவிட்டால் உங்களுக்கு இருப்பது – அக்கறை இன்மை.
  அந்த எளிய விளக்கத்தைப் படித்தும் புரியாவிடடால்- அறிவின்மை.
  புரிந்தும் ஏற்றுக்கொள்ள முடியாவிட்டால் – நேர்மை இன்மை.
  இதில் எந்த காரணமாக இருந்தாலும் உங்களைப் போன்றவர்களின் சிந்தனையில் நல் மாற்றம் ஏற்பட வழியில்லை. மன்னிக்கவும்.

 10. According to sukdev,he is glad to make concessions for periyar’s behaviour as long peiryar agress with most of sukdev’s views,basically if periyar helps the political motives of this website,then it is okay to keep him where he is.

  What happened to all the idealism,has it melted like polar ice caps?

 11. சுகதேவ்,

  // தலித்திய சிந்தனையாளர்கள், செயல்பாட்டாளர்கள் தலித் மக்களை ஒரு சாதியாக திரட்டி, பின்னர், பிற்பட்ட அல்லது உயர்சாதியினரிடம் கூட்டமைத்து அதிகாரத்தில் பங்கு பெறுவது என்பதை நோக்கமாக கொண்டுள்ளனர். இந்த பாதை சாதியுணர்வு மேலும் கெட்டிதட்டி போய் தலித் மக்களுக்கு எதிராக முடியுமென்பதே தருமபுரி சம்பவம் சான்று பகர்கிறது. //

  சாதி உணர்வை, எங்கும், எதிர்பார்க்காத இடங்களில் கூட, கண்டதாலேயே, தலித்துகள் சாதியாகத் திரண்டு அரசியல் அதிகாரத்தை அடைய முயல வேண்டியதாயிருந்தது..

  // அதே நேரத்தில் கலப்பு திருமணங்கள் தலித் மக்களுடன் செய்து வைத்தார். முதுகுளத்தூர் தலித் மக்கள் மீதான தாக்குதலை கண்டித்ததோடு, பசும்பொன் ராமலிங்கம் மீது காமராஜர் நடவடிக்கை எடுக்க காரணமாகவும் இருந்தார். அம்பேத்கருடன் தோழமையாக இருந்தார். அவர் நடத்திய மாநாட்டிற்கு உவகையுடன் வாழ்த்து செய்தி அனுப்பினார். அம்பத்கர் குறித்த செய்திகள் குடியரசு ஏட்டில் பல வெளிஇட்டுள்ளார்.//

  கலப்புத் திருமணம் செய்து கொள்ள விரும்பிய இயக்கத் தோழர்களுக்கு செய்து வைத்தார்.. ஆன்மீக-தேசியவாதியான முத்துராமலிங்க தேவரை 1957-ல் கைது செய்ய வைப்பதில் பெரியாருக்கு குஷி ஏற்படாமல் இருந்தால்தான் அதிசயம்.. இதையும், அம்பேத்கருடன் 1956 வரை கொண்டிருந்த உறவையும் வைத்து அவரை இன்னும் நம்பிக் கொண்டிருந்த தலித்துகளுக்கும், ஏனையோருக்கும், 1968-ல் கீழ்வெண்மணி எதிர்வினை மூலம், ‘சாதிப்பாசம்’ எத்தனை ‘முக்கியம்’ என்று காட்டிவிட்டார்..

  // ஒருவரை அவரின் ஒட்டுமொத்த செயல்பாட்டை பரிசீலித்து ஒரு முடிவுக்கு வருவதே நேர்மையானது. //

  இது பொது விதியா இல்லை பெரியாருக்கு மட்டுமான சிறப்புச் சலுகையா..?!!

 12. அம்பி, ஹரி குமார்,

  நீங்கள் தவறான முறையில் புள்ளிகளை இணைக்கிறீர்கள். . முதுகுளத்தூர் தாக்குதலை கண்டித்து விட்டு, தலித் மக்கள் ஆதரவை பெற்ற பின்னர், கீழ்வெண்மணி விஷயத்தில் அவர்களை பெரியார் கைவிட்டுவிட்டதாக குறிப்பிட்டுள்ளீர்கள். உண்மை நிலவரமோ வேறாக உள்ளது. 1950 வரையிலும் நீதி கட்சி மற்றும் திராவிடர் கழகத்தின் பார்ப்பனர் அல்லாதார் வரையறையில் தலித் மக்கள் உள்ளடங்கவில்லை.[ இது குறித்து விரிவான தகவல்களை ‘புதிய ஜனநாயகம்’ தொடர் கட்டுரையாக வெளியிட்டுள்ளது. எனது மனப்பதிவிலிருந்து இதனை உரைக்கிறேன்.] அதன் பிறகு பெரியார் இயக்கத்தின் நடவடிக்கைகளில் விசால மாற்றங்கள் ஏற்பட்டன.

  கீழ்வெண்மணி படுகொலைகள் நடந்த போது, பெரியார் சிறுநீரகம் வெளியேற சிரமப்பட்டு, சென்னை பொது மருத்துவமனையில் உல் நோயாளியாக சிகிச்சை பெற்று கொண்டிருந்தார். 1968 டிசம்பர் 14 தேதி அட்மிட் ஆனார். அந்த மாதம் 28 –ஆம் தேதி தான் டிஸ்சார்ஜ் ஆனார். கீழ்வெண்மணி படுகொலைகள் 24–ஆம் தேதி நடந்தது. ஆனாலும் மருத்துவமனையில் இருந்தே ‘விடுதலையில்’ தலையங்கம் எழுதினர். ”இந்த சம்பவம் ஜனநாயகத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய கேடாகும். எத்தனையோ பல வன்செயல்கள் நடைபெற்று, இன்று கீழ்வெண்மணி போன்ற நடுங்கத்தக்க அக்கிரமம் வரை கொண்டுவந்து விட்டுவிட்டது. நமது நாடு அரச நாயகமாக போக வேண்டும். அல்லது தனித்தமிழ்நாடு பிரித்து தரப்பட வேண்டும்வேண்டும். ‘Patriotism is the last refuge of a scoundrel’ — ஜான்சன்” என்று எழுதியுள்ளார். [பக். 215, தந்தை பெரியார் வரலாறு, ஆசிரியர்– கருணானந்தம்]

  இங்கு நாம் ஒன்றை கவனிக்க வேண்டும். தனித்தமிழ்நாடு கோரிக்கையை முதன்முதலாக இதில் வைக்கிறார். இந்த கோரிக்கையின் சரி\தவறல்ல நாம் இப்போது பார்க்க வேண்டியது. கீழ்வெண்மணி படுகொலைகள் அவரை அந்தளவுக்கு பாதித்துள்ளன. தனித்தமிழ்நாடு கோரிக்கையை ஒடுக்கப்படுகின்ற அனைத்து பிரிவு மக்களுக்கும் விடுதலைக்கான தீர்வாக பார்க்கிறார்.

  அவர் சாதி ஒழிப்பையே முன்னிலைப்படுத்தினார். 1973–ல் அரசியல் சட்டம் –17 திருத்தப்பட வேண்டும். ‘தீண்டாமை’ அல்ல: சாதி பாராட்டுதலே கொடுங்குற்றமாக அறிவிக்கப்பட வேண்டும் என்று தீர்மானம் இயற்றியது தி.க. [ அதே நூல்] . தனது 93–வது வயது பிறந்த நாள் குறிப்பில் சாதி ஒழிய வேண்டும் என்பதற்காகவே இந்து மதம் முதலான பார்ப்பன நிறுவனங்களை எதிர்ப்பதாக கூறியுள்ளார். அவரது பார்ப்பன எதிர்ப்பு தலித் மக்கள் விடுதலையில் தழுவி நிற்கிறது. அப்போது ‘தலித்’ சொல்லாடல் இல்லை என்பதை புரிந்து கொள்க. எனவே பார்ப்பனர் vs சூத்திரர் dichotomy லே இதனை செய்கிறார்.

  எந்த பிற்பட்ட சாதி சங்கமும் பெரியாரின் படத்தை போடுவதில்லை. காமராஜர், பசும்பொன். வீரன் அழகு முத்து கோன் போன்றோர் சாதிய சங்கங்களின் கடவுளர்கள். பெரியார் இல்லை. விஜயகாந்த், வைகோ உட்பட, சாதியின் பெயரால் பிழைப்பு நடத்த நினைக்கும் எவரும் பெரியாரை நெருங்க முடியாது. இது ஒன்றே போதும் அவரை எளிய முறையி விளங்கிக் கொள்ள. எனவே பெரியாரை பிற்பட்டோர் தலைவராக காட்ட முயல்வதும், தலித் விரோதியாக கட்டமைப்பதும் கீழ்மையான செயல்பாடுகள்.

  அவரிடம் சாதிய சமூகம், அதன் பிரச்சினைகள் குறித்து ஒருங்கிணைந்த பார்வை இருந்தது. ஆனால் தீர்வை முன்வைப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்லவே. முதலில் சாதியை ஒழிப்போம்: அப்புறம் சமத்துவம் படைப்போம் என்ற பார்வை அவரிடம் இருந்தது. டி.கே ரங்கராஜன் மாதிரியான சி.பி.எம், சி.பி.ஐ தலைவர்களை மனதில் வைத்தே கம்யூநிஸ்ட்களை விமர்சித்தார். சில பத்தாண்டுகள் கூட வாழ நேர்ந்திருந்தால் ம.க.இ.க நடத்திய பார்ப்பன பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டை பார்த்திருப்பார். அந்த மாநாட்டின் வெற்றிக்காக இரவு பகலாக உழைத்த தோழர்களை ஒரு முறை ஆரத்தழுவி கண் அயர்ந்திருப்பார்.

  ‘வரலாறுக்கு நாம் தரும் மரியாதை என்பது அதனை விஞ்ஞானப்பூர்வமாகப் பார்த்து அதற்குரிய இடத்தை வழங்குவதாகும்’ என்றார் மார்க்சிய ஆசான் மாவோ. பெரியாரை அந்த வகையில் விமர்சனத்தோடு மதிப்பிட்டு கம்யூனிஸ்ட்கள் தமது சாதி ஒழிப்பு சமருக்கு பயன்படுத்துகின்றனர்.

  • //சில பத்தாண்டுகள் கூட வாழ நேர்ந்திருந்தால் ம.க.இ.க நடத்திய பார்ப்பன பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டை பார்த்திருப்பார். அந்த மாநாட்டின் வெற்றிக்காக இரவு பகலாக உழைத்த தோழர்களை ஒரு முறை ஆரத்தழுவி கண் அயர்ந்திருப்பார்.//

   these comments are irrational & speculative. this is how ‘rationalist’ movement has affected the thought process of tamils.

  • still whats the conenction between independent tamilnadu & Keezhvenmani?

   If TN was an independent country would the naidu landlords have not done the massacre?

   why did he not mention the caste of the oppressed and the oppressor here?

   Did he feel,it is not important here?

   If the landlord was a brahmin,would he have said the same thing in viduthalai?

   why do people like Satyaraj,Thangar Bachan etc do not condemn their caste groups such as Kongu vellala gounder/Vanniyar sangam?

   why did satyaraj not ask his fellow KVG Shivakumar not to do arranged marriage within the caste for Karthi and instead let him marry whoever he wants.

   Periyar and his allakais discuss everything with respect to caste,why not this time?

   what brought about a change in his attitude here?

  • //இந்த சம்பவம் ஜனநாயகத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய கேடாகும். எத்தனையோ பல வன்செயல்கள் நடைபெற்று, இன்று கீழ்வெண்மணி போன்ற நடுங்கத்தக்க அக்கிரமம் வரை கொண்டுவந்து விட்டுவிட்டது. நமது நாடு அரச நாயகமாக போக வேண்டும். அல்லது தனித்தமிழ்நாடு பிரித்து தரப்பட வேண்டும்வேண்டும்.//
   சட்டம் ஒழுங்கு மாநில அரசின் கையில்…
   அரசு ‘திராவிட’ கட்சி கையிலேயே இருந்தது…
   என்ன நடந்தது?
   திராவிட சித்தாந்தம் பயனளிக்காது…இந்த சித்தாந்தம் எல்லாம் ‘அவாள்’ செயல் என்று தப்பிப்பவர்களுக்கே உதவிடயது…பல சாதி சங்கங்கள் இவ்வியக்கத்திற்க்குப்பிறகு தான் தோன்றின…

  • // நீங்கள் தவறான முறையில் புள்ளிகளை இணைக்கிறீர்கள். . //

   நீங்கள்தான் பெரியாரின் சாதிப்பாசத்தை மறைப்பதற்காக, பல்வேறு புள்ளிகளை எடுத்துப் போட்டு இணைக்க அரும்பாடு படுகிறீர்கள்..!

   // எந்த பிற்பட்ட சாதி சங்கமும் பெரியாரின் படத்தை போடுவதில்லை. காமராஜர், பசும்பொன். வீரன் அழகு முத்து கோன் போன்றோர் சாதிய சங்கங்களின் கடவுளர்கள். பெரியார் இல்லை. //

   பெரியார் படத்தைப் போட்டு சாதிச் சங்கம் நடத்தினால் எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்று காட்டுவது போல்.. அது தவிர, அவர் வகுப்பில் அவரை விட பெரிய தலைவர்கள் உண்டு..

   // விஜயகாந்த், வைகோ உட்பட, சாதியின் பெயரால் பிழைப்பு நடத்த நினைக்கும் எவரும் பெரியாரை நெருங்க முடியாது. இது ஒன்றே போதும் அவரை எளிய முறையி விளங்கிக் கொள்ள. எனவே பெரியாரை பிற்பட்டோர் தலைவராக காட்ட முயல்வதும், தலித் விரோதியாக கட்டமைப்பதும் கீழ்மையான செயல்பாடுகள். //

   எதற்கு விஜயகாந்தையும், வைகோ-வையும் இழுக்கிறீர்கள் என்று புரியவில்லை.. கடவுள் நம்பிக்கையுள்ள விஜயகாந்த் பெரியாரை பயன்படுத்தினால் பெரியாரின் சீடர்களேகூட கோவித்துக் கொள்வார்கள்.. வைகோ பெரியாரையும், அண்ணாவையும் அடிக்கடி மேற்கோள் காட்டுபவர், அரசியல் அதிகாரத்தை கட்சித் தொண்டர்களுக்கு காட்டாமலேயே இத்தனை காலம் தமிழக அரசியலில் அவர் தாக்குப் பிடித்தது சாமானியமான விசயம் அல்ல.. தமிழக, ஈழத்தமிழர் உரிமை, மதுவிலக்கு என்று ஒருபக்கம் தூள் கிளப்பிக் கொண்டுதான் இருக்கிறார்.. அதிருக்கட்டும், பெரியாரை உயர்த்த எல்லோரையும் போட்டுத் தாக்குகிறீர்களே.. என்ன காரணம்..?! உங்கள் பெரியார் வழிபாட்டுக்கு கீழ்காணும் ஆதங்கமே உதாரணம் :

   // சில பத்தாண்டுகள் கூட வாழ நேர்ந்திருந்தால் ம.க.இ.க நடத்திய பார்ப்பன பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டை பார்த்திருப்பார். அந்த மாநாட்டின் வெற்றிக்காக இரவு பகலாக உழைத்த தோழர்களை ஒரு முறை ஆரத்தழுவி கண் அயர்ந்திருப்பார். //

   நிச்சயம்.. உங்கள் பார்ப்பன எதிர்ப்பைக் கண்டு புளகாங்கிதமடைந்திருப்பார்.. கண் அயர்வதற்கு முன், சிவப்புச் சட்டையைக் கழற்றிவிட்டு கருப்புச் சட்டை போட்டுக் கொள்ளுங்கள் என்று அன்புக் கட்டளையும் இட்டிருப்பார்.. 🙂

   • அம்பி,

    நீங்கள் ஒன்றிலிருந்து ஒன்றாக தாவுகிறீர்கள். பெரியார் குறித்து சிறந்த நூல்கள் தமிழிலும், ஆங்கிலத்திலும் வெளியாகி உள்ளன. பெரியார் சுயமரியாதை இயக்க வெளியீடாக பெரியாரின் அனைத்து செயல்பாடுகளும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இந்த புத்தக சந்தையில் கிடைக்கின்றன. சிலவற்றையாவது படியுங்கள். வேறொரு சந்தர்ப்பத்தில் கூட விவாதிக்கலாம். இணையத்தில் ‘பெரியார் ஆன் தலித்ஸ்’ என்று தேடினால் பெரும்பாலும் அரை உண்மைகளே கிடைக்கின்றன. நீங்கள் அவற்றை மட்டும் சார்ந்திருக்க வேண்டாம் என்று அன்புடன் கோருகிறேன். கீழே இருப்பது தோழர். மதிமாறனின் கவிதை. நன்றி.

    என்ன செய்து கிழித்தார் பெரியார்?
    ———————————————————
    —வே.மதிமாறன்

    “என்ன செய்து கிழித்து விட்டார் பெரியார்?”

    பனை ஏறும்

    தந்தை தொழிலில்

    இருந்து தப்பித்து

    தலைமைச் செயலகத்தில் வேலை செய்பவர் கேட்டார்

    “பெரியாரின்

    முரட்டுத்தனமான அணுகுமுறை

    அதெல்லாம் சரிபட்டு வராதுங்க

    ”இதுமுடி

    வெட்டும் தோழரின் மகனான

    எலக்ட்ரிக்கல் என்ஜினியர்.

    “என்னங்க

    பெரியார் சொல்லிட்டா சரியா?

    பிரமணனும் மனுசந்தாங்க.

    திராவிட இயக்கம்

    இலக்கியத்துல என்ன செஞ்சி கிழிச்சது?

    ” இப்படி ‘இந்தியா டுடே’

    பாணியில்கேட்டவர்

    அப்பன் இன்னும்

    பிணம் எரித்துக் கொண்டிருக

    இங்கே டெலிபோன் டிபார்மென்டில்

    சுபமங்களாவை விரித்தபடி

    சுஜாதா

    சுந்தர ராமசாமிக்கு

    இணையாக

    இலக்கிய சர்ச்சைசெய்து கொண்டிருக்கும்

    அவருடைய மகன்.

    ஆமாம்

    அப்படி என்னதான் செய்தார் பெரியார்?

    • அப்போ மகாராஷ்டிரத்திலும், வங்காளத்திலும் கூட தாழ்த்தப்பட்டவர்களின் வாரிசுகள் நல்லநிலைமையில் உள்ளார்களே இன்று?

     பிராமனரை மட்டும் எதிர்த்தபொழுது பிள்ளைமார், முதலியார்,நாயுடு, செட்டியார் மற்றும் இன்னபிற சாதியைச்சேர்ந்தவரும் நல்லநிலைமையில் இருந்துள்ளார்களே?

     தலித்களுக்கு என்னவோ போராட தி.க கற்றுக்கொடுத்ததைப்போன்ற மாயத்தோற்றத்தை உருவாக்காதீர்…

     ரெட்டைமலை சீனிவாசன், பன்டிதர் அயோத்திதாசர், அன்னல் அம்பேத்கர் – இவர்கள் சாதித்ததை விட யாரும் சாதிக்கவில்லை….ஜெய் பீம்…

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க