Thursday, April 15, 2021
முகப்பு உலகம் அமெரிக்கா அல்ஜீரிய பிணைக் கைதிகள் கொல்லப்பட்டது ஏன் ?

அல்ஜீரிய பிணைக் கைதிகள் கொல்லப்பட்டது ஏன் ?

-

அல்ஜீரியா இயற்கை வாயு ஆலைசென்ற வாரம் புதன் கிழமை (ஜனவரி 16, 2013) இசுலாமிய தீவிரவாதிகள், தென்கிழக்கு அல்ஜீரியாவின் அமெனாஸ் என்ற இடத்தில் இருக்கும் இயற்கை வாயு ஆலையில் வெளிநாட்டு ஊழியர்களை ஏற்றிச் சென்ற இரண்டு பேருந்துகளை தாக்கினார்கள். தாக்குதலில் ஒரு பிரிட்டிஷ் நாட்டவரும் ஒரு அல்ஜீரிய நாட்டவரும் கொல்லப்பட்டனர். அதைத் தொடர்ந்து ஊழியர்களின் இருப்பிடத்திலும் ஆலை வளாகத்திலும் அல்ஜீரிய மற்றும் வெளிநாட்டு ஊழியர்களை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்தனர்.

‘இயற்கை வாயு ஆலையின் மீதான தாக்குதல் மாலி நாட்டில் பிரெஞ்சு படைகளின் தலையீட்டை கண்டித்து நடத்தப்படுவதாக’ கடத்தல்காரர்கள் அறிவித்தனர். ஆப்கானிஸ்தானில் சோவியத் யூனியனின் ஆக்கிரமிப்பை எதிர்ப்பதற்காக அமெரிக்காவால் வளர்த்து விடப்பட்ட இசுலாமிய தீவிரவாதிகளில் ஒருவரான மொக்தார் பெல்மொக்தார் அல்ஜீரியாவின் இயற்கை வாயு வளாகத்தின் மீதான தாக்குதலை தலைமை வகித்து ஒருங்கிணைத்தார்.

17ம் தேதி, அல்ஜீரியாவின் பாதுகாப்புப் படைகளும் இராணுவமும் கடத்தல்காரர்களை சூழ்ந்து கொண்டனர். பிணைக் கைதிகளை வேறு இடத்துக்கு கொண்டு போக முயன்ற போராளிகள் மீது இராணுவம் தாக்குதலை துவங்கியது. சில பிணைக்கைதிகள் தப்பித்து விட மற்றவர்கள் கொல்லப்பட்டனர். சனிக்கிழமை அன்று கடைசி 11 கடத்தல்காரர்களை கொன்று இராணுவம் ‘தனது நடவடிக்கைகளை முடித்துக் கொண்டதாக’ அறிவித்தது. மொத்தத்தில் 48 பிணைக் கைதிகளும் 32 போராளிகளும் கொல்லப்பட்டனர்.

“பிணைக்கைதிகளின் சாவுக்கு பயங்கரவாதிகள்தான் பொறுப்பு” என்கிறார் பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் காமரூன். “பிணைக் கைதிகள் பிடிப்பு ஒரு போர் நடவடிக்கை” என்கிறார் பிரெஞ்சு வெளியுறவுத் துறை அமைச்சர்.

80க்கும் மேற்பட்ட உயிர்களை பலி வாங்கிய இந்தத் தாக்குதலுக்கு முழு பொறுப்பும் அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்திய நாடுகளைத்தான் சேரும். பெல்மொக்தார் பயிற்றுவிக்கப்பட்ட 1980களின் ஆப்கானிய போரில் ஆரம்பித்து ஆப்பிரிக்கா, மேற்கு ஆசியா மற்றும் உலகெங்கிலும் உள்ள மூன்றாம் உலக நாடுகளை தாக்கி தமது இராணுவ ஆதிக்கத்தை நிலைநாட்டி வருகின்றன அமெரிக்காவும் அதன் நேட்டோ கூட்டமைப்பு நாடுகளும்.

அல்ஜீரியா வரைபடம்2011ம் ஆண்டில் லிபியாவில் கடாபியை வீழ்த்துவதற்கு அல்-கொய்தாவுடன் தொடர்புடைய போராளிகளை நேட்டோ பயன்படுத்தியது. கடாபி கொல்லப்பட்ட பிறகு, லிபியாவின் எண்ணெய் வளங்களை மேற்கத்திய நிறுவனங்கள் கைப்பற்றுவதற்கு உதவியாக இசுலாமிய தீவிரவாத தலைவர்களை அங்கு அதிகாரத்தில் அமர்த்தியது.

லிபியாவிலிருந்து திரும்பிய இசுலாமிய போராளி குழுக்களுடன் சேர்ந்து மாலியின் வடக்குப் பகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருந்த இசுலாமிய அமைப்புகள் தெற்கு பகுதிகள் மீது தமது அதிகாரத்தை விரிவுபடுத்த முயன்றனர். இதை காரணமாக வைத்து மாலி மீது வான்வழி மற்றும் தரை வழி தாக்குதல்களை ஆரம்பித்தது பிரான்சு.

மாலியின் வட எல்லைக்கு அருகில் தென் கிழக்கு அல்ஜீரியாவின் அமனாஸ் பகுதி இசுலாமிய குழுக்களின் செல்வாக்கு மண்டலமாக உள்ளது. அங்கு இருக்கும் இயற்கை வாயு ஆலையின் மீது இந்தப் படுகொலை நிகழ்வை நடத்தியிருக்கின்றன, இசுலாமிய தீவிவாத குழுக்கள்.

நூறு ஆண்டுகளுக்கு மேல் தனது காலனியாக பிடித்து வைத்திருந்து கொள்ளையடித்து சுரண்டிய அல்ஜீரியாவுக்கு 1962ம் ஆண்டு பெயரளவில் சுதந்திரம் வழங்கியது பிரெஞ்சு ஏகாதிபத்தியம். காலனி ஆட்சியின் போது தனது இலாப வேட்டைக்காக, உள்நாட்டு பொருளாதாரத்தை வளர விடாமல் தடுத்து இசுலாமிய மதவாத குழுக்களை ஊக்குவித்தது பிரான்ஸ். 1962க்குப் பிறகு அல்ஜீரியா ‘தேசிய’ அரசு இசுலாமியக் கட்சிகளை முடக்கி, இராணுவ சர்வாதிகார ஆட்சியை நடத்தி வந்தது.

1991ல் நடந்த தேர்தலில் இசுலாமிய கட்சிகள் வெற்றி பெறும் நிலையை தவிர்க்க இராணுவம் தேர்தலையே ரத்து செய்தது. அதன் பிறகு 1990களின் இறுதியிலும் கடந்த 10 ஆண்டுகளிலும் நடத்தப்பட்ட தேர்தல்களில் இப்போதைய அதிபரான அப்துல்அஜீஸ் தொடர்ந்து அதிகாரத்தை தக்க வைத்திருக்கிறார்.

அப்துல்அஜீசின் அரசாங்கம் மாலியின் வட பகுதியின் மீது குண்டு வீசப் போகும் பிரெஞ்சு விமானங்கள் அல்ஜீரியா வழியாக பறக்கவும், அதன் விமான தளங்களை பயன்படுத்திக் கொள்ளவும் அனுமதி வழங்கியிருக்கிறது. இதைக் கண்டித்து இசுலாமிய தீவிரவாத குழுக்கள் பிணைக்கைதிகள் பிடிப்பு நடவடிக்கையில் இறங்கியிருக்கின்றனர்.

2013 ஆண்டில் அமெரிக்கா தனது படைகளை ஆப்பிரிக்காவுக்கு அனுப்புவதும் பிரான்சின் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பு போர்களும் ஆப்பிரிக்க கண்டத்தை அழிவின் பாதையில் கொண்டு போகின்றன.

ஆப்கானிஸ்தானில் தாலிபானாகவும், சவுதி அரேபியாவில் பின் லேடனின் அல்-கொய்தாவாகவும் தான் வளர்த்து விட்ட இசுலாமிய தீவிரவாதத்தின் பெயரைச் சொல்லியே ஈராக்கை, ஆப்கானிஸ்தான் மீது போர் தொடுத்த அமெரிக்கா இன்னும் பல நாடுகள் மீது தனது இராணுவ ஆதிக்கத்தை செலுத்தியிருக்கிறது.

லாபவேட்டைக்காக நடத்தப்படும். ஏகாதிபத்திய போர்களால் மக்களை பிற்போக்கு சக்திகளிடமிருந்து விடுவிக்க முடியாது என்பது நிதர்சனமான உண்மை. சொல்லப் போனால் இசுலாமிய மதவாதத்தை தனது நோக்கத்திற்கு ஏற்ப வளர்த்து விட்டதே ஏகாதிபத்தியங்கள்தான். ஆப்பிரிக்க, மேற்காசிய பகுதி நாடுகளின் உழைக்கும் மக்கள் பிற்போக்கு மதவாத மற்றும் ஏகாதிபத்திய சக்திகளை எதிர்த்து தூக்கி எறிந்து உண்மையான ஜனநாயகத்தை நிறுவுவதே முன்னேற்றத்துக்கான வழி.

மேலும் படிக்க

  • Algeria crisis: Hostage death toll ‘rises to 48’
  1. //ஆப்பிரிக்க, மேற்காசிய பகுதி நாடுகளின் உழைக்கும் மக்கள் பிற்போக்கு மதவாத மற்றும் ஏகாதிபத்திய சக்திகளை எதிர்த்து தூக்கி எறிந்து உண்மையான ஜனநாயகத்தை நிறுவுவதே முன்னேற்றத்துக்கான வழி.//

    100% correct. Islam/RSS/Pentecostals etc are the major tools used by corporates to exploit people.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க