Sunday, April 18, 2021
முகப்பு சமூகம் சாதி – மதம் தலித் அறிவுஜீவிகளின் அவதூறு அரசியல் !

தலித் அறிவுஜீவிகளின் அவதூறு அரசியல் !

-

கொடியங்குளம், திண்ணியம், உத்தப்புரம் தீண்டாமைச் சுவர், மேலவளவு முருகேசன் படுகொலை, விருத்தாசலம் கண்ணகி-முருகேசன் தம்பதி படுகொலை உள்ளிட்டுத் தாழ்த்தப்பட்டோர் மீது நடத்தப்பட்ட வன்கொடுமைத் தாக்குதல்களைக் கண்டித்து ம.க.இ.க. உள்ளிட்ட புரட்சிகர அமைப்புகளும், இடது, வலது கம்யூனிஸ்டுகளும் மற்றும் பிற ஜனநாயக அமைப்புகளும் போராடியதற்கு எண்ணற்ற சான்றுகள் உள்ளன. ஆதிக்க சாதிச் சங்கங்களோடு கூட்டணி வைத்துக் கொள்ளத் தயங்காத திராவிடக் கட்சிகளும்கூடத் தாழ்த்தப்பட்டோர் மீது நடத்தப்படும் வன்கொடுமைத் தாக்குதல்களைக் கண்டித்து வந்துள்ளன.

இப்படிபட்ட நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் சில “தலித்” அறிவுஜீவிகள் தருமபுரித் தாக்குதலைக் கண்டிக்கும் சாக்கில், தாழ்த்தப்பட்டோர் மீது நடத்தப்படும் வன்கொடுமைத் தாக்குதல்களை இடது, வலது கம்யூனிஸ்கள் உள்ளிட்ட ஓட்டுக்கட்சிகளும்; தேர்தல் அரசியலுக்கு வெளியே செயல்பட்டுவரும் புரட்சிகர-ஜனநாயக இயக்கங்களும் கண்டித்துப் போராடியதேயில்லை என்ற பச்சைப் பொய்யைத் திரும்பத்திரும்ப பேசியும் எழுதியும் வருகின்றனர். குறிப்பாக, தொல். திருமாவளவன், “நத்தம் தாக்குதலுக்கு முன்பாக இந்த அமைப்புகள் வன்கொடுமைகளைக் கண்டுகொண்டதேயில்லை” என்றவாறு ஒரு பொய்க் குற்றச்சாட்டைச் சுமத்தியிருக்கிறார்.

வன்கொடுமைகளை எதிர்த்துப் போராடி வருவதில் இவ்வமைப்புகளின் செயல்பாடுகள் குறிப்பிடத்தக்கதாக இருக்கும்பொழுது, இவர்கள் எப்படி நாக்கில் நரம்பில்லாமல் பேசியும், எழுதியும் வருகிறார்கள் என்பதைக் கீழே தொகுத்துக் கொடுத்திருக்கிறோம்; தாழ்த்தப்பட்ட மக்களை வேறு யாரும், குறிப்பாக நக்சல்பாரி புரட்சிகர இயக்கங்கள் அணிதிரட்டி விடக் கூடாது; அம்மக்களைத் தமது ஓட்டுவங்கியாகப் பயன்படுத்தும் சுயநல நோக்கத்திற்காகவே புரட்சிகர-ஜனநாயக இயக்கங்கள் மீது அபாண்டமாகப் பழிபோட்டு வருகிறார்கள் என்பதையும் அம்பலப்படுத்தியிருக்கிறோம். யார் பக்கம் உண்மை இருக்கிறது என்பதைத் தாழ்த்தப்பட்ட மக்கள் உணர வேண்டிய தருணமிது.

– ஆசிரியர் குழு

 • “தலித்துகள் மீது ஈவிரக்கமற்ற வன்கொடுமைகள் ஏவிவிடப்பட்ட எத்தனையோ சந்தர்ப்பங்களில் இவர்கள் மனசாட்சி இல்லாத அளவுக்கு அமைதி காத்திருக்கிறார்கள். ஆனால், தருமபுரி பிரச்சினையில் கம்யூனிஸ்டுகள் உடனே களத்துக்கு வந்தனர். தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் கூடத் துயர் துடைக்கும் நடவடிக்கைகளை எடுத்தன.”(விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், ஆனந்த விகடன்-நவ.28 இதழுக்கு அளித்த நேர்காணலில், “தருமபுரி பிரச்சினையில் தமிழ்த் தேசியவாதிகள், திராவிடக் கட்சிகள், கம்யூனிஸ்டுகள்… இவர்களின் நிலைப்பாடு உங்களுக்கு ஏற்புடையதாக இருக்கிறதா?” என்ற கேள்விக்கு அளித்த பதில்.)

  சாதி தீண்டாமை ஒழிப்பு நூல் முகப்பு
  1997-இல் தென்மாவட்டங்களில் நடந்த தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான தாக்குதல்களைக் கண்டித்து, ம.க.இ.க.வும் அதன் தோழமை அமைப்புகளும் தமிழகம் தழுவிய அளவில் நடத்திய சாதி-தீண்டாமை ஒழிப்பு இயக்கத்தையொட்டி வெளியிடப்பட்ட நூலின் முகப்பு அட்டை (வலது) மற்றும் அவ்வியக்க நடவடிக்கைகள் குறித்த விவரங்கள் (இடது)
 • “எதிர்வினையாற்ற வேண்டியவர்கள் தலித்துகள்தான். அதிலும் குறிப்பாக, அடங்க மறு! அத்து மீறு! திமிரி எழு! திருப்பி அடி! என்கிற முழக்கங்களை முன்வைத்த விடுதலைச் சிறுத்தைகள்தான் எதிர்வினையாற்ற வேண்டியவர்கள். ஆனால், சிறுத்தைகளோ அமைதி காக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டை தலித் இயக்கங்கள் எழுப்புகின்றன.”‘‘பெரியாரிய, மார்க்சிய, தமிழ்த்தேசிய சக்திகளும் மனித உரிமை ஆர்வலர்களும், இன்ன பிற சனநாயகச் சக்திகளும் இத்தகைய இக்கட்டான நிலைமையில் ஆற்றவிருக்கும் எதிர்வினைகளுக்காக – செயற்பாடுகளுக்காக விடுதலைச் சிறுத்தைகள் காத்திருப்பதையே தற்போதைய கடமையாகக் கருதுகிறது.”(வன்னி அரசு, செய்தித் தொடர்பாளர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி)
 • “அந்த தருமபுரியில் அதே நாய்க்கன்கொட்டாய் கிராமத்தில் 1984-ஆம் ஆண்டு தருமபுரி எதிரொலிகள் என்ற எனது முதல் கவிதைத் தொகுப்பு வெளியிடப்பட்டது. அப்பு, பாலன் சிலை திறப்பில் ஆயிரக்கணக்கில் திரண்டிருந்த தோழர்களை, அவர்கள் இசைத்த புரட்சிப் பாடல்களை எண்ணிப் பார்க்கிறேன். திரும்பிய திசையெல்லாம் செங்கொடிகள் அசைந்த ஊர்கள். இப்போது அதே கிராமங்களில் தலித்துகளின் வீடுகளை எரித்த நெருப்பு, செங்கொடிகளைவிடவும் சிவப்பாக மேலெழுந்துள்ளன. இந்த நாட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன மிச்சம் இருக்கிறது? அவர்களது போராட்ட வடிவங்களும் அமைப்பின் அங்கங்களாக மாறிவிடும்போது அவர்கள் தம்மைத்தாமே மாய்த்துக்கொண்டு அழிவது தவிர, வேறென்ன வழி இருக்கிறது?”(ரவிக்குமார், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர், பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் ஆற்றிய உரையின் ஒரு பகுதி)
 • “சாதி அமைப்பை எதிர்த்த போராட்டத்தில் தலித்துகளுக்கு சமூகக் கூட்டாளி என எவருமே இல்லை என்று அம்பேத்கர் சொன்னார். அது இப்போதும் பொருந்துகிற ஒன்றுதானா என்பதை மனசாட்சி உள்ளவர்களின் முடிவுக்கே விட்டுவிடுகிறேன்.”(ரவிக்குமார், தருமபுரி எதிரொலிகள், நிறப்பிரிகை வலைப்பூ)

  அன்னூர் போராட்டம்
  அன்னூர் பகுதியில் கடைப்பிடிக்கப்படும் தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராக, பெரியார் திராவிடர் கழகம் அருந்ததியின மக்களைத் அணி திரட்டி நடத்திய பொதுக்குழாயில் தண்ணீர் பிடிக்கும் போராட்டம் (கோப்பு படம்)
 • “தலித்துகள் தொடர்ந்து படுகொலைகளுக்கும் வாழ்வாதார கொள்ளைகளுக்கும் உட்படுத்தப்படும்போது, அவர்களுக்காகப் பொதுச் சமூகத்திலிருந்து உள்ளார்ந்த குரல் கொடுக்க யாரும் இல்லாத சூழல் நிலவுகிறது.மாற்று அரசியலை முன்வைக்கக்கூடியவர்கள் என்று தங்களை விளித்துக்கொள்ளும் நவீனகால அரசியல் ஆளுமைகள்கூட தலித்துகளுக்குக் குரல் கொடுக்காத இருட்சூழல் நிலவுகிறது.ஆக, சாதிய சமூகத்தின் வேர்களைக் கெல்லி எடுக்கத் தங்கள் கைகளைத் தருகின்ற ஆதரவு சக்திகள்தான் இன்றைக்கும் பெயரளவில் பொதுவாக இயங்குவதாகக் கூறுகின்றனர். அதற்கான உண்மையான முன்னெடுப்புகள் தலித்துகளால் மட்டுமே அல்லது சிறுபான்மையினரால் மட்டுமே எடுக்கப்படுகிறது என்பது வரலாற்று உண்மை.”(யாழன் ஆதி, சமநிலைச் சமுதாயம் – டிசம்பர் 2012)
 • “ஈழம், மூவர் தூக்கு தண்டனை எதிர்ப்பு, கூடங்குளம் அணு உலை, முல்லைப் பெரியாறு, பரமக்குடி, தாமிரபரணிப் படுகொலை என எல்லாப் பிரச்சினைக்கும் வலியச் சென்று போராடும் திருமாவளவன், தலித் பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரும்போது மட்டும் அரசியல் அனாதை போல தனித்துவிடப்படுகிறார். அரசியலிலும் தீண்டாமை இருப்பதை அவர் உணர வேண்டிய தருணம் இது.”(சுகிர்தராணி, காலச்சுவடு, டிசம்பர் 2012)

பின் குறிப்பு:

 1. தருமபுரி வன்கொடுமை தாக்குதல் பற்றி நாடாளுமன்றத்தில் திருமாவளவன் பேசுவதைக்கூட அனுமதிக்காமல் கூச்சல் போட்டு, கலாட்டா செய்தது, அ.தி.மு.க. கும்பல். அதனால், நாடாளுமன்ற அவை நடவடிக்கைகளை ஒத்திவைத்தார், சபாநாயகர். ஆனாலும், திருமாவளவன் தருமபுரி தாக்குதலுக்கு அ.தி.மு.க.வும் துயர் துடைக்கும் நடவடிக்கைகள் எடுத்ததாகக் குறிப்பிட்டுள்ளார். எப்பேர்பட்ட பெருந்தன்மை! எப்பேர்பட்ட பெருந்தகை!
 2. ஒண்ணுமே செய்யாமல் இருப்பதை, இனி யாரும் கையாலாகத்தனம், துரோகம் எனக் கூறக் கூடாது. அதற்கு கடமை, பொறுப்புணர்ச்சி, முதிர்ச்சி என்றவாறு மறுபெயர் இடலாம். இது குறித்து விளக்கம் வேண்டுவோர், வன்னி அரசை அணுகவும்.

________________________________________________________________________________
– புதிய ஜனநாயகம், ஜனவரி – 2013
________________________________________________________________________________

 1. திருமாவளவனை விட அவன்னியரசு மீதுதான், அதிக கோபம் வினவுக்கு இருப்பது போல தெரிகிறது.

 2. விடுங்க பாஸ், திருமாவும் கலைஞர் போல தினம் ஒன்று பேசினாலும் இந்த தமிழர்களுக்கு தெரிய போவது இல்லை என்று நினைத்து விட்டார் போலும்.

 3. பெரும்பாலான தலித் அறிவு ஜீவிகள் உங்க பட்டறையில் இருந்து வெளிய வந்தவங்கதானே அப்புறம் யேன் உங்களயே கலாய்க்குறாங்க எதோ இருக்கு உங்க கிட்ட ,எனக்கு என்னமோ உங்கள பாத்தா டவுட்டாவே இருக்கும் இசுலாமிய மதத்துக்கு தலித்துகளா ஆள் பிடிச்சு விடுற கூட்டமோனு….

 4. உங்கள மாதிரி தீவிர கம்மூனிஸ்டா இருந்த ஒரு தலித் ஆள் உங்க போதனையோ என்னமோ முஸ்லீம் ஆகிட்டாரு ,அப்புறம் இத மாரி தீவிர கம்மூனிஸ்டா இருந்த ஒரு பொண்ன முஸிலீம் ஆக்கி விட்டுட்டானுக இப்ப அந்த பொண்னு எங்க போச்சுனு தெரியல தீவிரவாதி ஆகிட்டதா ஊருக்குள்ள பேச்சு இருக்கு தாழ்த்தப்பட்ட மக்களே இவங்கட்ட கொஞ்சம் உசாரா இருகனும்…..

 5. //“எதிர்வினையாற்ற வேண்டியவர்கள் தலித்துகள்தான். அதிலும் குறிப்பாக, அடங்க மறு! அத்து மீறு! திமிரி எழு! திருப்பி அடி! என்கிற முழக்கங்களை முன்வைத்த விடுதலைச் சிறுத்தைகள்தான் எதிர்வினையாற்ற வேண்டியவர்கள்.//
  Whenever JJ not in power-they அடங்க மறு! அத்து மீறு! திமிரி எழு! திருப்பி அடி! .When she is in power these guy’s get into her”MUNTHAANAI”

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க