privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கபோஸ்டர் கிழிக்கும் மதுரை ( ஸ்காட்லாண்டு ) போலீசு !

போஸ்டர் கிழிக்கும் மதுரை ( ஸ்காட்லாண்டு ) போலீசு !

-

அனைத்துச் சாதியினரும்
அர்ச்சகராகும் சட்டத்திற்கு குழி பறிக்காதே!
தீண்டாமையை நிலைநாட்டும் பார்ப்பன சிவாச்சாரியார்களுடன்
உச்சநீதிமன்ற வழக்கில் சமரசம் பேசாதே!

என்ற தலைப்பில் தமிழக அரசைக் கண்டித்து 30-1-2013ல் சென்னையில் மனித உரிமை பாதுகாப்பு மையம் சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை அறிவித்து மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் அனைத்து மாவட்டக் கிளைகளும் சுவரொட்டி ஒட்ட வேண்டும் என்று அறிவுறுத்தப் பட்டிருந்தது.

அதன்படி 28.01.2013 இரவு மதுரையில் சுவரொட்டி ஒட்டுவதற்காகத் தோழர்கள் சென்றனர். சுவரொட்டிகளால் எப்போதும் நிரம்பி வழியும் சிம்மக்கல் பகுதியில், சுவரொட்டியை டூவீலரில் வைத்து விட்டு அருகிலுள்ள டீ கடையில் டீ குடித்துக் கொண்டிருக்கும் போது அந்த வழியாக வந்த திலகர்திடல் இன்ஸ்பெக்டர்,

“யார் இது? என்ன போஸ்டர், காட்டுங்க பார்ப்போம்” என்று கேட்டார். போஸ்டரைக் காட்டினோம். அதைப் படித்துப் பார்த்துவிட்டு

“போஸ்டர் ஒட்ட அனுமதி வாங்கியிருக்கீங்களா?”. அனுமதி வாங்கவில்லை.

“அப்படின்னா அனுமதி வாங்கிட்டுத்தான் ஒட்டனும்” என்று சொல்லிவிட்டு செல்போனில் மேலதிகாரியைக் கூட்பிட்டு சுவரொட்டி வாசகங்களைப் படித்துக்காட்டினார். திரும்பத்திரும்ப படித்துக் காட்டினார். இதை ஒட்ட அனுமதிக்கலாமா? கூடாதா என்று கேட்டு விட்டு கடைசியாக,

“ஒட்டக் கூடாது. வேண்டுமானால் நாளைக்கு என்னிடம் எழுத்து முலமாக அனுமதி வாங்கி விட்டு அப்புறம் ஒட்டுங்கள்” என்றார்.

“ஏன்சார், இவ்வளவு போஸ்டர் ஒட்டியிருக்காங்களே. இவங்களெல்லாம் அனுமதி வாங்கியா ஒட்டியிருக்காங்க?”

கூட இருந்த ஏட்டு சொன்னார். “அதெல்லாம் கல்யாணம், காதுகுத்து, கண்ணீர் அஞ்சலி போஸ்டர். நீங்க அரசாங்கத்த கண்டிச்சுல போஸ்டர் ஒட்றீங்க.”

இன்ஸ்பெக்டர் சொன்னார்: “போஸ்டர் ஒட்டக் கூடாதுன்னா ஒட்டக்கூடாது அதைமீறி ஒட்டுனா நாங்க கிழிச்சுடுவோம். உங்க மேல கேஸ் போடுவோம். உங்க பேரு, அட்ரஸ், செல்நம்பர் குடுங்க”
என்று வாங்கிக்கொண்டு உறுமி விட்டுப் போனார்.

அந்தப் பகுதியில் சில சுவரொட்டிகளை ஒட்டிவிட்டு ஆரப்பாளையம் பஸ்நிலையம் பகுதிக்கு வந்தோம். அங்கிருந்து அரசரடி வரும்போது போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். டிராபிக் சார்ஜென்ட் எங்களைக் கூப்பிட்டு “என்ன போஸ்டர்” என்றார். “போஸ்டர் ஒட்டக் கூடாது. இப்படி ஓரமா நில்லுங்க” என்று நிற்க வைத்துவிட்டு கரிமேடு காவல்நிலையத்துக்கு போன் செய்தார். அங்கிருந்து ஒரு பெண் சப் இன்ஸ்பெக்டர் வந்தார், டிராபிக் சார்ஜென்ட் நாங்கள் போஸ்டர் ஒட்ட வந்த விவரத்தைச் சொன்னார். அந்தப் பெண் சப் இன்ஸ்பெக்டர் புதிதாகப் பணியில் சேர்ந்துள்ளவர். அவருக்கு எதுவுமே தெரியவில்லை. பேந்தப் பேந்த விழித்தார்.

போலீஸ் ஜெயலலிதாடிராபிக் சார்ஜென்ட் “இவங்கள விசாரிங்க. என்ன பேசாம நிக்கிறீங்க” என்று கேட்க அவரோ,

“சார் நான் புதுசு இதுவரை ஒரு ரைடோ, டிரெயிலோ கூட வந்ததில்லை. பழக்கமில்ல” என்று சொன்னார். சார்ஜென்ட் பேசாமல் இருக்கவே, அந்தப் பெண் “இந்த ஏரியாவுல போஸ்டர் ஒட்டக் கூடாது. போஸ்டர்ல செல்போன் நம்பரல்லாம் இருக்கா” என்று கேட்டு குறித்துக் கொண்டு போனார்.

அங்கிருந்து பெரியார் பேருந்து நிலையம் பகுதிக்கு வந்தோம். அங்கே திரும்பிய பக்கம் எல்லாம் போலீஸ் காவல். கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிக் கொண்டு விழித்திருக்கிறார்கள். அந்த போலீஸ் போஸ்டரைப் பறித்துக் கொண்டு போய்விடும் என்பது தெரிந்திருந்ததால், மதுரைக் கல்லூரி பக்கம் போய் ஒட்டிவிடலாம் என்று போனால் அங்கேயும் இரண்டு காக்கிச் சட்டைகள் இருட்டில் குந்திக் கொண்டிருந்தனர். சந்து பொந்துகளுக்குள் சென்று போஸ்டரை ஒட்டி விட்டு திரும்பி வரும் போது இரண்டு போலீஸ்காரர்கள் போஸ்டரைக் கிழித்துக் கொண்டிருந்தார்கள்.

நாங்கள் ஒட்டிய போஸ்டரை மட்டுமல்ல. அஞ்சா நெஞ்சன், தென்மண்டலத் தளபதி, மத்திய ரசாயனம் மு.க.அழகிரியின் ஜனவரி 30 பிறந்தநாள் போஸ்டரையும் தான்.

அட எழவே, ஜெயலிதாவின் போலீசு என்னவெல்லாம் செய்கிறது. இதே போலீசு திமுக ஆட்சியிலிருந்த போது மு.க. அழகிரிக்கு முந்தானை விரித்தது. மொத்தத்தில் பாசிச ஜெயாவின் போலீசு ராஜியம் அடிப்படை ஜனநாயக உரிமைகள் அனைத்தையும் தீவிரமாகப் பறித்துக் கொண்டிருப்பதே உண்மை.

தகவல்: மனித உரிமை பாதுகாப்பு மையம் – தமிழ்நாடு, மதுரை மாவட்டக்கிளை.