Saturday, April 17, 2021
முகப்பு கட்சிகள் அ.தி.மு.க விஸ்வரூபமெடுத்தார் அம்மா !

விஸ்வரூபமெடுத்தார் அம்மா !

-

“சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கவே தடை” , என்று விசுவரூபம் படத்துக்கான தடை குறித்து விளக்கம் அளித்திருக்கிறார் முதலமைச்சர், இதயதெய்வம், புரட்சித்தலைவி, மாண்புமிகு அம்மா அவர்கள். திடீரென்று கூட்டப்பட்ட பத்திரிகையாளர் கூட்டத்தில் (un scheduled press conference – the hindu) இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.

நேற்று இரவு தனது இணையப் பதிப்பில் இந்த பேட்டி குறித்த செய்தியை வெளியிட்ட இந்து நாளேடு, “சட்டம் ஒழுங்குதான் என் முன்னுரிமை” என்று தலைப்பிட்டிருந்தது. இன்று இந்துவில் இதே செய்தியின் தலைப்பு “கமலும் முஸ்லீம் தலைவர்களும் ஒப்பந்தத்திற்கு வந்து விட்டால் படத்தை வெளியிட்டுக் கொள்ளலாம் – ஜெயலலிதா” என்று மாறியிருக்கிறது. என்னத்துக்கு தேவையில்லாம அம்மாவின் கோபத்துக்கு ஆளாகணும் என்பதுதான் காரணம்.

ஆனால் இன்றைய டைம்ஸ் ஆப் இந்தியா லேசாக உண்மையைச் சொல்ல முயன்றிருக்கிறது.

“உருவாகி வரும் புயலை அம்மா கவனித்து விட்டதுதான், அவர் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர விரும்புவதற்கு காரணம். கமலஹாசனுக்கு ஆதரவு தெரிவிக்கும் ரஜனிகாந்த், பாரதிராஜா போன்றவர்கள், நேரடியாக அரசுக்கு எதிராகப் பேசவில்லை என்ற போதிலும், ராஜ்கமல் அலுவலகத்துக்கு வந்து சேரும் திரையுலகத்தினரின் கூட்டம், அவர்களுடைய அடக்கி வைத்திருக்கும் ஆத்திரத்தையும் கமலஹாசனுக்குப் பெருகிவரும் அனுதாபத்தையும் காட்டிவிட்டது.

தாங்கள் அரசால் பாதுகாக்கப் படுவதாக, எதிர்ப்பு தெரிவிக்கும் முஸ்லிம்கள் எண்ணக் கூடும். ஆனால், இணையத்திலும், தெருவிலும் சராசரி குடிமக்கள் பொறுமை இழந்து கொண்டிருந்தனர். அரசின் உளவுத்துறை இதைத் தெளிவாக தனது உயர்மட்டத்துக்கு தெரிவித்து விட்டது. போலீசின் உயர் அதிகாரிகளுடன் வியாழக்கிழமை காலை பேசிய பின், நிலைமையை முடிவுக்கு கொண்டு வருவதென்றும், அப்படி முடித்ததற்கான பெருமையையும் தானே தேடிக்கொள்வது என்றும் ஜெயலலிதா முடிவு செய்திருப்பார் போலத் தெரிகிறது.”

டைம்ஸ் ஆப் இந்தியாவின் தகுதிக்கு, இது கொஞ்சம் அதிகமான வீரம்தான். வரப்போவது மான நட்ட வழக்கா, அல்லது இதனை சரிக்கட்டும் விதத்தில் நாளைக்கு ஏதேனும் ஒரு அம்மா துதியா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

நடந்தது என்ன என்பதை சாதாரண குடிமகனுக்குப் புரியும்படி சொல்வதென்றால், “அம்மா பய்ந்துட்டாங்கோ”.

இப்படி ஏத்தி வுட்டு ஏத்தி வுட்டு அம்மாவின் உடம்பை புண்ணாக்கி விட்ட குற்றத்துக்காக நேற்று யார் யாருக்கெல்லாம் கோட்டையில் கச்சேரி நடந்ததோ நமக்குத் தெரியாது.

“சண்டையில கிழியாத சட்டை எந்த ஊர்ல இருக்கு?” என்று கேட்ட வின்னருக்குப் பிறகு, என்றென்றும் நம் நினைவில் நிற்கக்கூடிய இன்னொரு “வின்னர்” அம்மாதான்.

அம்மாவின் விளக்கங்களை கவனியுங்கள்.

விஸ்வரூபம் வெளியாக இருந்த தியேட்டர்கள் முன்பாக இசுலாமிய அமைப்புகள் நடத்தவிருந்த போராட்டங்கள் வன்முறைச் சம்பவங்களாக மாற வாய்ப்பிருப்பதாக உளவுத்துறை தகவல்கள் தெரிவித்தனவாம். ஒரு சம்பவத்தை அனுமதித்துவிட்டு அது வன்முறையாக மாறிய பிறகு தடுப்பதற்கு பதிலாக, சம்பவமே ஏற்படாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் அரசு ஈடுபட்டதாம்…

“56,440 போலீசாரை, 524 தியேட்டர்களில் எவ்வாறு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த முடியும்? இது நடைமுறையில் சாத்தியமா” என்று தனது அறிக்கையில் கேள்வி எழுப்பியிருக்கிறார் முதல்வர். வகுத்தால் கிடைப்பது 107.7. ஒரு தியேட்டருக்கு 107.7 போலீசார். அவர்களை 3 ஷிப்டுகளாக வேறு கூறு கட்டவேண்டும்.

ரொம்ப கஷ்டம்தான். உயர்நீதிமன்றத்தில் வாதிடும்போது “சென்சார் போர்டு சர்டிபிகேட் ஊழல், போர்டு மெம்பர்களின் அப்பாயின்மென்ட்டே ஊழல்” என்று காரணங்களை அடுக்கினார் அட்வகேட் ஜெனரல். அப்புறம் ஆங்கிலத் தொலைக்காட்சி விவாதத்தின் போது, “இது 31 மாவட்ட ஆட்சியர்கள் போட்டிருக்கும் தடை உத்தரவு. அம்மாவுக்கும் இதற்கும் சம்மந்தமேயில்லை” என்று அடித்துப் பேசினார். ‘இப்படிப்பட்ட சில்லறை விவகாரங்களிலெல்லாம் அம்மாவை ஏன் இழுக்கிறீங்க’ என்ற தோரணையில் இருந்தது அவருடைய பதில்.

நேற்று, ‘போலீசு கணக்கை காட்டி சமாளித்து விடலாம்’ என்று போலீசு அதிகாரிகள் அம்மாவுக்கு ஐடியா கொடுத்திருப்பது போலத் தெரிகிறது.

பரமக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கும் சரி, முல்லைப்பெரியார் தாக்குதலுக்கும் சரி, கூடங்குளம் தடியடிக்கும் சரி.. எல்லா விவகாரங்களுக்கும் போலீசு அதிகாரிகள் என்ன எழுதிக் கொடுக்கிறார்களோ, அதை எந்திரக் குரலின் ஏற்ற இறக்கத்துடன் படித்து விடுவார் அம்மா.

இன்றைக்கு வேலை செய்யும் இந்த தத்துவம் பரமக்குடியில் ஏன் வேலை செய்யவில்லை? தேவர் சாதி வெறியர்களை முன்கூட்டியே கைது செய்து பரமக்குடி துப்பாக்கிச் சூட்டை தவிர்த்திருக்கலாமே.

கூடங்குளம் அணு உலைக்கு 144 போட்டிருக்கலாமே. அவர்கள் தம் மத உணர்வுக்காக போராடவில்லை. உயிரையும் வாழ்க்கையையும் பாதுகாத்துக் கொள்ளப் போராடுகிறார்கள். ஆனால்சுமார் 9 மாதங்களாக கூடங்குளம் வட்டாரம் முழுவதும் 144 போடப்பட்டுள்ளது. அணு உலையை எதிர்த்தவர்கள் மீது ராஜத்துரோகம் முதல் தேசப்பாதுகாப்பு சட்டம் வரை பாய்ச்சப்பட்டுள்ளது.

போலீசைக் குவிப்பதை விட, மக்கள் கோரிக்கைக்கு செவி மடுத்துவிடலாம் என்ற யோசனை கூடங்குளத்தில் ஏன் தோன்றவில்லை? அங்கே பிற மாநிலங்களிலிருந்தெல்லாம் போலீசு இறக்குமதி செய்யப்பட்டதே, அது ஏன்?

“தமிழ்நாடு சினிமா ரெகுலேசன் ஆக்ட் படி மாநில அரசு படத்தை நிரந்தரமாகவே தடுக்க முடியும்” என்று மாநிலத்தின் அதிகாரத்தை மனிஷ் திவாரிக்கு நினைவு படுத்தும் அம்மாவுக்கு, கூடங்குளம் விவகாரத்தில் மாநிலத்தின் உரிமை பற்றி மறந்து போனது ஏன்?

“நினைத்தால் நான் நிரந்தரமாகவே தடுத்திருக்க முடியும். ஆனால் தடுக்கவில்லை. அதிலிருந்தே தெரியவில்லையா இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை இல்லையென்று” -என மடக்கியிருக்கிறார் அம்மா. (“நெனச்சா கஞ்சா கேஸ்ல உள்ள வச்சிடுவேன்” என்ற போலீசின் குரலைப் போல இல்லை?)

மேலும் சில உண்மைகளையும் அம்மா இந்த அறிக்கையில் கூறியிருக்கிறார்.

ஜெயா டிவிக்கு படத்தை விற்க மறுத்த காரணத்திற்காகத்தான் இந்த பழிவாங்கும் நடவடிக்கை என்ற குற்றச்சாட்டை அம்மா ஆணித்தரமாக மறுத்திருக்கிறார்.

“ஜெயா டிவிக்கும் எனக்கும் சம்மந்தமில்லை. அந்த நிறுவனத்தில் ஒரே ஒரு பங்கு கூட எனக்கு இல்லை”  என்று ஐயந்திரிபற தெளிவு படுத்தியிருக்கிறார்.

போயஸ் தோட்டத்துக்கு உள்ளேயிருந்து கைப்பற்றப்பட்ட ஆயிரக்கணக்கான செருப்புகள், புடவைகள், நகைகள் ஆகியவையே தன்னுடையதில்லை என்று அம்மா தெளிவு படுத்தியிருக்கும்போது, போயஸ் தோடத்துக்கு வெளியே இருக்கும் ஜெயா டிவிக்கும் அவருக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்?

அம்மாவுடைய கால் அளவுக்குப் பொருத்தமான செருப்புகளையும், இடுப்புக்குப் பொருத்தமான ஒட்டியாணம், கைக்கு பொருத்தமான வளையல் உள்ளிட்ட நகைகளை செய்து எடுத்துக் கொண்டு வந்து, கஞ்சா பொட்டலத்தை வைத்து எடுப்பது போல, போயஸ் தோட்டத்தில் வைத்து எடுத்தவர் நல்லம நாயுடு. ( சொத்து குவிப்பு வழக்கின் போலீசு அதிகாரி)

அதே போல, யாரோ அம்மாவின் பெயரில் ஜெயா டிவி என்று நடத்திக் கொண்டிருந்தால் அதற்கு அம்மா பொறுப்பாக முடியுமா?

நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கூட வேண்டுமென்றே “ஜெயா டிவி” மைக்கை மட்டும் அம்மாவின் முன் வைத்திருந்தார்கள். அதற்கு அம்மா என்ன செய்ய முடியும்? நேற்றைய பத்திரிகையாளர் சந்திப்பில், ஒரு நிருபர் கூட அம்மாவை கேள்வியே கேட்கவில்லை. அதற்கும் கூட அம்மாவையே குற்றம் சாட்ட முடியுமா?

“வேட்டி கட்டிய தமிழன் பிரதமராக வேண்டும் என்று ப.சிதம்பரத்தை புகழ்ந்து கமலஹாசன் பேசியதனால் ஏற்பட்ட கோபம்தான், படத்தை தடை செய்யக் காரணமோ” என்று அவதூறு செய்திருக்கும் கருணாநிதிக்கும் சரியான பதிலடியைக் கொடுத்திருக்கிறார் அம்மா. “நாட்டின் பிரதமரை கமல்ஹாசன் தேர்வு செய்ய முடியாது. 100 கோடி வாக்காளர்கள்தான் தேர்வு செய்ய முடியும் எனும்போது, நான் ஏன் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்?” என்று கேட்டிருக்கிறார்.

சரியான கேள்வி. சபாநாயகர் ஜெயக்குமாரின் பிறந்தநாளில், வருங்கால முதல்வர் என்று அவருடைய அடிப்பொடிகள் போஸ்டர் அடித்து ஒட்டியதுதான் அவருடைய அகால அரசியல் மரணத்துக்கு காரணம் என்று பல பத்திரிகைகள் அவதூறாக எழுதியிருந்தார்கள். அதை ஜெயக்குமாரும் நம்பியிருக்க கூடும். தன்னுடைய மரணத்துக்கு இது காரணமல்ல என்ற உண்மையை இந்த அறிக்கையைப் பார்த்து அவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
அம்மாவிடம் அரசியல் பக்குவம் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே வருகிறது. “கமல் எனக்கு எதிரி அல்ல” என்று அம்மா கூறியிருப்பதாக தினமணி முதல் பக்கத்தில் கட்டம் கட்டிப் போட்டிருக்கிறது. ஆனால், “Kamalhasaan is not my rival in anyway” என்று அம்மா கூறியதாக ஆங்கில நாளேடுகளில் வந்துள்ளது. “கமலஹாசன் என் எதிரியாகமாட்டார் – எந்த விதத்திலும்” என்றே இதனை மொழிபெயர்க்க இயலும்.

நம்முடைய மொழி அறிவுக்கும், அம்மா வெளியிட்டிருக்கும் உணர்ச்சிக்கும் இந்த மொழி பெயர்ப்பே பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறோம்.

கமலஹாசன் என் எதிரியாக மாட்டார் – எந்த விதத்திலும் என்று தலைப்பு போட்டிருந்தால் அம்மா மேலும் மகிழ்ந்திருப்பார் என்பதை தினமணி ஆசிரியருக்கு சுட்டிக்காட்ட கடமைப் பட்டுள்ளோம்.

பின் குறிப்பு:

“அதுக்காக பத்து பேர் சத்தம் போட்டா உடனே அரசாங்கம் சரண்டர் ஆகிவிடுமா” என்ற கேள்வி எதிர்த்தரப்பினரால் எழுப்பப்படும்.

எனவே, “படத்தை வெளியிட்டால் வன்முறை வெடிக்கும் என்ற எங்கள் அச்சம் (apprehension) உண்மையானதே” என்று நிரூபிப்பதற்கான முயற்சியில் போலீசு இறங்கும். உளவுத்துறை ஒரு ஊகத்தை வெளியிடுகிறது என்றால் அப்படி நடக்க வேண்டும். நடக்காவிட்டால் நடத்தப்படும்.

இல்லையென்றால் உளவுத்துறையை அம்மா நம்புவாரா, அம்மாவைத்தான் மக்கள் நம்ப முடியுமா? அம்மாவை நம்பியவர்களுக்கு எங்களுடைய இந்த அச்சம் (apprehension) சமர்ப்பணம்.

 1. இணையத்திலும், தெருவிலும் சராசரி குடிமக்கள் பொறுமை இழந்து கொண்டிருந்தனர்

  100% True. Good job and Good Analysis.

 2. //டைம்ஸ் ஆப் இந்தியாவின் தகுதிக்கு, இது கொஞ்சம் அதிகமான வீரம்தான். வரப்போவது மான நட்ட வழக்கா, அல்லது இதனை சரிக்கட்டும் விதத்தில் நாளைக்கு ஏதேனும் ஒரு அம்மா துதியா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.//

  😀

 3. Though the single judge of the Madras High court vacated the stay on Viwarupam,district collectors not recalled 144 as directed by the Honorable High court and the police chased the public when buy tickets in theaters;besides ADMK hooligans damaging the theater properties in the silent presence of the police clearly shows that the Tamilnadu state administration not at all respected the order of the Honorable High court is the contempt of the court and it clearly shows the breakdown of the Constitution in Tamilnadu and no rule of law but only rule of jungle in Tamilnadu.

  Secondly when a single judge vacated the stay on Viswarupam after seen the film and found that nothing wrong in the film,I am unable to understand the Honorable division bench of the Madras High court stayed the screening of the film next day without seen the film.

 4. கலைஞர் ரிவி என்றால் முத்துவேல் கருணாநிதியுடையது, கப்ரன் ரிவி என்றால் அது விஜயகாந்த் அவர்களுடையது, ஜெயா ரிவியென்றால் அது முதலமைச்சர் ஜெயலலிதாவுடையது என்று தமிழ்நாட்டின் லூசு தமிழர்கள் எண்ணிக்கொண்டிருக்கின்றனர். ஆனால் பாவப்பட்டு வறுமைக்கோட்டின்கீழ் இருந்துகொண்டிருக்கும் இவர்கள் பெயர்களில் அந்த ரிவிக்களை யாரோ உள்நோக்கத்துடன் உருவாக்கி காசு பார்த்துக்கொண்டிருப்பதாக இப்போ அப்பட்டமாக தெரிய வந்திருக்கிறது.

  செய்யாத ஒரு குற்றத்துக்காக ஸ்பெக்ரம் குற்றவாளி கூட்டுச்சதியில் ஈடுபட்டவர் 1,76000,00 00 00 00 கோடி மோசடிக்கு முழுக்காரணகர்த்தா என்று டாக்டர், சொல்லின் செல்வர், வித்தமிழ் முத்தலர், மனுநீதி காவலர், ஈழத்தின் இதயம், கடமை கண்ணியம் கட்டுப்பாட்டின் கலங்கரை விளக்கம் நேர்மையின் சின்னம் நாக்குமுக்கா முத்துவேலு கருணாநிதியின் மூன்றாந்தாரத்தின் மகள் கனிமொழிமேல் குற்றஞ்சாட்டி அந்த ஊழலில் கிடைத்த திருட்டு பணத்தில் “கலைஞர் ரிவி என்று ஒன்றை உருவாக்கியதாக சிபிஐ கதை கட்டி வ்ழக்கு தொடுத்து குற்றஞ்சாட்டியிருந்தது. அது பச்சைப்பொய் என்பதை வாழும் அரிச்சந்திரன் திமுக தலைவர் சென்ற ஆண்டு தெளிவுபடுத்தினார். “கலைஞர் ரிவிக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனது பெயரின் யாரோ அந்த ரிவியை தொடங்கிவிட்டனர் என்று சொல்லியபிந்தான் தமிழ்நாட்டி லூசுத்தமிழன் உண்மையை உணர்ந்துகொண்டான்.

  அதுபோல அன்பின் இருப்பிடம், அறநெறியின் பிறப்பிடம், பணிவின் உறைவிடம், பகட்டில்லா பசும்பொன். ஜெயலலிதா அவர்களின் பெயரிலும் யாரோ ஒரு கறுப்பாடு “ஜெயா ரிவி” என்ற பெயரில் ஒரு தொல்லைக்காட்சியை தொடங்கி அம்மாவின் பெயருக்கு களங்கம் உண்டுபண்ணிவிட்டதை விஸ்வரூபம் சர்ச்சை வராதவரை லூசுத்தமிழர்கள் எவரும் உணர்ந்திருக்க முடியாது. இன்றைக்கு அம்மா அவர்கள் விஸ்வரூபம் சர்ச்சை வந்த காரணத்தால் உண்மை நிதர்சனத்தை தெளிவு படுத்தியிருக்கிறார்கள். இதற்கிடையில் கமலஹாசன் ஐயாவின் 58 வது பிறந்தநாளின்போது விஸ்வரூபம் படத்தின் சட்டலைற் உரிமையை ஜெயா ரீவிக்கு கொடுக்கும்படி இதய தெய்வம் அம்ம்மம்மா கேட்டதாக சொல்லியதில் எந்த உண்மையும் இருக்க முடியாது.

  அவைகளை உறுதிப்படுத்தும் வண்ணம் வினவு கட்டுரையில் வெளிவந்த கீழ்க்காணும் வரிகளையும் சான்றுபடுத்தி பார்த்துக்கொள்ளுமாறு லூசு தமிழர்கள் முன் வைக்கிறேன்.
  //அம்மாவுடைய கால் அளவுக்குப் பொருத்தமான செருப்புகளையும், இடுப்புக்குப் பொருத்தமான ஒட்டியாணம், கைக்கு பொருத்தமான வளையல் உள்ளிட்ட நகைகளை செய்து எடுத்துக் கொண்டு வந்து, கஞ்சா பொட்டலத்தை வைத்து எடுப்பது போல, போயஸ் தோட்டத்தில் வைத்து எடுத்தவர் நல்லம நாயுடு.
  அதே போல, யாரோ அம்மாவின் பெயரில் ஜெயா டிவி என்று நடத்திக் கொண்டிருந்தால் அதற்கு அம்மா பொறுப்பாக முடியுமா?//

  இன்னுமொரு தருணத்தில் “கப்ரன் ரீவி” ஐயா விஜயகாந்த் அவர்களுடையதல்ல என்பதையும் ஐயா சொல்லும்வரை பொறுத்திருக்கும்படி கேட்டுக்கொள்ளுகின்றேன்.

 5. நகைச்சுவையோடு எடுதப்பட்ட அரசியல் பதிவு. சிறப்பு. பாராட்டுகள்.

  தமிழகத்தில் உள்ள எந்தத் தொலைக்காட்சியும் தனிநபர் யாருக்கும் சொந்தமானதல்ல. ஒன்று ‘உங்கள் டி.வி’ யாக இருக்கும். இல்லை என்றால் ‘நமது டி.வி’யாக இருக்கும். இப்படித்தானே அவர்கள் விளம்பரம் செய்கிறார்கள். தொலைக்காட்சி நேயர்களும் இவற்றின் சொந்தக்காரர்கள்தானே. அப்படியானால் ‘ஜெ’ கூட தொலைக்காட்சி சொந்தக்கார்தானே?

 6. <<>>
  100 கோடி வாக்காளர்கள் இருப்பதைப்பற்றி “அம்மாதான் அடுத்த பிரதமர்” என்று தமாஷ் பண்ணும் ஓ.பன்னீர்செல்வம் உட்பட தமிழக அமைச்சர்களுக்கும் சிறிது கூறிவைக்கலாமே?

 7. அது சரி வாய்த்த ராணிக்கு, சப்ப கட்டு கட்ட சொல்லியா கொடுக்க வேண்டும்

 8. இரண்டு வியாபாரிகள் மோதிக்கொண்டிருக்கிறர்கள்.மக்கள் நடைபிணம் போல் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.கமல் ஆதரவாளர்களுக்கு கலைத் தாகம்.இசுலாமிய அமைப்பினருக்கு அதிமுக மோகம்.அனைத்து தீவிரவததுக்கும் ஊற்றுக்கண் எது என்பது பற்றி உலக நாயகனுக்குத் தெரியாதா?அதைக் கட்டவிழ்த்துக் காட்டும் வகையில் அவர் படம் எடுத்திருக்கிறாரா?அம்மா இசுலாமிய மக்களின் விடிவெள்ளியா?அம்மா இப்போது கமலை ஒரு கை பார்க்கிறார்.அடுத்து சமயம் வரும்போது யாரையும் பார்ப்பார். எல்லாவற்றிலிருந்தும் ஒரு பெருங்கூட்டம் விளிம்புக்குத் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறது.அதைப் பற்றி நாம் எல்லோரும் கவலைப் பட வேண்டும்.இந்தக் கட்டுரையில் இழையோடும் நையாண்டி அதன் வெளிப்பாடுதான்.ரசிப்பதற்கு மட்டுமல்ல சிந்திப்பதற்கும்.சினிமா கழிசடைகளை போலல்ல.

 9. //போயஸ் தோட்டத்துக்கு உள்ளேயிருந்து கைப்பற்றப்பட்ட ஆயிரக்கணக்கான செருப்புகள், புடவைகள், நகைகள் ஆகியவையே தன்னுடையதில்லை என்று அம்மா தெளிவு படுத்தியிருக்கும்போது, போயஸ் தோடத்துக்கு வெளியே இருக்கும் ஜெயா டிவிக்கும் அவருக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்?//

  செம செம…

 10. //ஜெயா டிவிக்கும் எனக்கும் சம்மந்தமில்லை. அந்த நிறுவனத்தில் ஒரே ஒரு பங்கு கூட எனக்கு இல்லை” என்று ஐயந்திரிபற தெளிவு படுத்தியிருக்கிறார்//– முன்பு பல முறை கொடனாடு பஙகளா தன்னுடயதல்ல என்று கூறிய ஜெயா இப்போதும் அப்படி கூறுவாரா? சட்டம் ஒழுஙகுதான் எனக்கு முக்கியம் என்கிறாரே, தமிழ்னாட்டில் அப்படி ஒன்று இன்னும் இருக்கிறதா?

 11. கொடனாடு பஙகளா தன்னுடையது அல்ல என்று முன்பு பலமுறை மறுத்தவர் அல்லவா! பரிதாபத்துக்கு உரியவர்கள்நமது இச்லாமிய நண்பர்களே!

 12. //“படத்தை வெளியிட்டால் வன்முறை வெடிக்கும் என்ற எங்கள் அச்சம் (அப்ப்ரெகென்சிஒன்) உண்மையானதே” என்று நிரூபிப்பதற்கான முயற்சியில் போலீசு இறங்கும். உளவுத்துறை ஒரு ஊகத்தை வெளியிடுகிறது என்றால் அப்படி நடக்க வேண்டும். நடக்காவிட்டால் நடத்தப்படும்”//

  என்னே தீர்க்கதரிசனம்! பல தியேட்டர்களில் கண்ணாடி உடைப்பு, தீ வைப்பு -நடக்கிறதே!

 13. உங்களுடைய தாக்குதல் நியாயம் அற்றவையாகத் தெரிகிறது. இஸ்லாமிய மக்களின் விரோதத்தை சம்பாதிப்து சுலபம். ஆனால் சமாளிப்பது மிகக் கடினம். எனவே வெள்ளம் வரும் முதலே அணை போடுவதுதான் அறிவுடமை. அமெரிக்கா பிரித்தானியா,ஐரொப்பிய நாடுகள் இஸ்லாமிய அதிருப்தியால் பாரிய விளைவுகளுக்கும் அழிவுகளுக்கும் முகம் கொடுக்க வேண்டி இருந்தது என்பதை நினைவில் கொள்வது அவசியம் என நம்புகிறேன். கூடங்குளம் விவகாரம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கட்டமைப்பு பற்றியது. அங்கே எந்த ஒரு கலவரம் உருவானாலும் மத்திய அரசு தமிழக அரசை கண்டிக்கவும் கலைக்கவும் வாய்ப்புகளை வழங்குவதாக அமையும். தி.மு.க.வும் காங்கிரஸ{ம் அ.தி.மு.க. அரசுக்கு பரம எதிரியாக இருப்பவை. அந்தக் கட்சிகளுக்கு அடுத்த தேர்தலில் தமிழகத்தை முழுமையாக கையகப்படுத்தினால் மட்டுமே அடுத்த முறையும் ஆட்சியைத் தக்கவைக்க முடியும். எனவே இது அவர்களுக்கு வாழ்வா சாவா என்ற போராட்டம். இன்று மத்திய அரசு பலவகையிலும் மாநில அரசுக்கும் மக்களுக்கும் பாதகமாகவே நடந்து அ.இ.தி.மு.க. அரசை தோல்வியுறச் செய்யும் வியூகத்தில் செயலாற்றி வருகிறதைக் காணமுடியும். அடுத்த தேர்தலுக்கு முன்பாகவே மாநில அரசைக் கலைத்து ஆளுநர் ஆட்சிவருவதையே மத்திய கூட்டணி அரசு விரும்பம். அதற்கு விஸ்வரூபம் ஒரு காரணியாகி விடக்கூடாது என்பது எனது கருத்தாகும். நன்றி

 14. 1. What is “intelligence”
  saying about to whom does

  ” Jaya TV” belongs to.

  2. Kamalahasan’s house – how come no one has given a complaint of land grabbing in 19xx when the land was sold to build the house.

  3. The police dogs must be smelling heroin and ganja in the house already.

 15. mr. mano- what does your statement mean in indian context? இஸ்லாமிய மக்களின் விரோதத்தை சம்பாதிப்து சுலபம். ஆனால் சமாளிப்பது மிகக் கடினம்.

  • எனது கருத்தை இலகு தமிழிலதானே தந்தேன். உங்கள் கேள்வியின் நியாயம் புரியவில்லை. உலக அளவில் காணப்படும் விடயம் இந்தியாவுக்கு ஏன் ஒத்து வராது என்பதற்கான காரணங்களை முன்வைத்தால் எனது கருத்தை மாற்றுவது பற்றி சிந்திப்பேன்.

 16. தன்மீது உள்ள சொத்து குவிப்பு வழக்குகளை விரைந்து நடத்த விரும்பாத இந்த அம்மையார் தன எதிரிகளை ஒழிக்க 24-மணி நேரமும் உழைக்கிறார்.

  //கூடங்குளம் அணு உலைக்கு 144 போட்டிருக்கலாமே//
  தமிழகத்தில் மட்டும் மின்வெட்டு இல்லை என்றால் என்றோ இவர் அதை செய்திருப்பார், அது வந்து தன்னை காக்கும் என்கின்ற அவரின் அடிமைகளின் சொல்லை நம்பி அவர் இருக்கிறார்.

 17. எங்கப்பன் குதிருக்குள்ள இல்லன்னு சொல்ற மாதிரியே ஜெயலலிதாவின் விளக்கமும் இருக்கு. நெத்தியடி உதாரணங்களுடன் கூடிய நல்ல கட்டுரை.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க