Friday, May 2, 2025
முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்விக்னேஷை காவு கொண்ட அரசு மருத்துவமனை !

விக்னேஷை காவு கொண்ட அரசு மருத்துவமனை !

-

பெரம்பூர் மருத்துவமனைரசு மருத்துவமனைகளை அலட்சியப்படுத்தும் அரசின் கொள்கையினால் ஒரு சிறுவன் கொல்லப்பட்டிருக்கிறான். பெரம்பூர் வெற்றி நகர் பகுதியைச் சேர்ந்த தண்டபாணி – சுஜாதா தம்பதியரின் மகனான 11 ஆம் வகுப்பு மாணவன் விக்னேஷின் உயிரை பலி வாங்கியிருக்கிறது பெரம்பூரில் உள்ள புறநகர் அரசு மருத்துவமனை.

பெரம்பூர் பெரியார் நகரில் உள்ள மருத்துவமனையில் விக்னேஷ் காய்ச்சலுக்காக அனுமதிக்கப்பட்டிருந்தான். வெள்ளிக்கிழமை (ஜனவரி 25ம் தேதி) இரவு கழிப்பறைக்கு செல்லும் போது, போதிய விளக்குகள் இல்லாத நிலையில், ஒரு பலகையை வைத்து மறைத்திருந்த சுவரில் இருந்த ஓட்டைக்குள் விழுந்து நான்காவது மாடியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்தான்.

100 படுக்கைகளைக்கொண்ட மருத்துவமனைக்கு ஏற்ற வசதிகள் இன்றி இருக்கிறது இந்த புறநகர் மருத்துவமனை. விக்னேஷ் அனுமதிக்கப்பட்டிருந்த வார்டிலிருந்து கழிவறைக்கு போகும் நடைபாதையின் இரு புறமும் புழுதி படிந்த மெத்தை விரிப்புகளும், துருப்பிடித்த கட்டில்களும் கொண்ட வார்டுகள் இருக்கின்றன. அந்த நீண்ட பகுதியில் இரண்டு குழல் விளக்குகள் மட்டுமே பொருத்தப்பட்டிருக்கின்றன.

நான்காவது மாடியில் இருந்த வார்டிலிருந்து இருட்டில் நடந்து தூக்கக் கலக்கத்தில் கழிப்பறைக்குள் நுழைந்த விக்னேஷ் திறந்திருந்த பகுதியில் விழுந்து சாவை தேடிக்கொண்டான்.

இந்த மருத்துவமனைக்கு ஒரு நாளைக்கு 300 – 500 வெளி நோயாளிகள் வருகிறார்கள், அதுவும் செவ்வாய்க் கிழமைகளில் சர்க்கரை நோய் முகாமும் வியாழக் கிழமைகளில் முதியோர் நல முகாமும் நடக்கும் போது 1,000க்கும் மேற்பட்ட வெளி நோயாளிகள் வருகின்றனர். முன்பு மருத்துவக் கல்வி இயக்ககத்தின் கீழ் இருந்து கடந்த ஆண்டு மருத்துவ சேவைகள் இயக்ககத்தின் கீழ் மாற்றப்பட்டது. அதிலிருந்து இந்த மருத்துவமனை புறக்கணிக்கப்பட்டு வருகிறது என்கிறார்கள் மருத்துவமனை ஊழியர்கள்.

மருத்துவக் கல்வி இயக்ககத்தின் கீழ் மெட்ராஸ் மருத்துவக் கல்லூரியின் மேற்பார்வையில் இருந்த வரை பட்ட மேற்படிப்பு மருத்துவ மாணவர்கள் வந்து நோயாளிகளை பார்ப்பார்கள். அது இப்போது நின்று விட்டது. தொடர்ந்து பணி மாற்றம் செய்யப்பட்டு மருத்துவர்களின் எண்ணிக்கை முன்பு இருந்த 16லிருந்து வெறும் 11ஆக குறைந்திருக்கிறது.

’45 மருத்துவமனை ஊழியர்கள் தேவைப்படும் இடத்தில் வெறும் 25 பேரைக் கொண்டு மருத்துவமனையை பராமரிப்பது முடியாத காரியமாக உள்ளது’ என்கிறார்கள் ஊழியர்கள். முதியோர் மருத்துவம், தாய்மை மருத்துவம், காது-மூக்கு-தொண்டை மருத்துவம், கண் மருத்துவம் போன்ற சிறப்பு பிரிவுகள் இருந்தும் சரியான பராமரிப்பு இல்லாமல், சீரழிக்கப்பட்டிருக்கிறது இந்த மருத்துவமனை.

புறநகர் மருத்துவமனையில் இந்த நிலையென்றால், சென்னை நகரின் வடபகுதியில் இயங்கும் 200 ஆண்டு கால பழைமை வாய்ந்த, புகழ்பெற்ற ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் இன்னொரு கொடுமையான நடைமுறை செயல்படுகிறது.

தினமும் இங்கு அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளில் பலர் குழந்தைகள் உட்பட  ஸ்ட்ரெச்சரிலோ அல்லது நடந்தோ பழைய ஜெயில் சாலையை தாண்டி எதிரில் இருக்கும் சமூக குழந்தை மருத்துவ நிலையத்திற்கு போக வேண்டியிருக்கிறது.

ஒவ்வொரு திங்கள் கிழமை, புதன் கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை சுமார் 100 நோயாளிகள் நரம்பியல் சிகிச்சைக்காக எட்டு மாடி சமூக குழந்தை நல மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். ஒரு சில நோயாளிகளை மட்டுமே உதவியாளர்கள் ஸ்ட்ரெச்சரில் தூக்கி செல்கின்றனர். மற்ற அனைவரும், அறுவை சிகிச்சைக்குப் பின் தேறி வருபவர்கள் கூட உதவியாளருடன் நடந்தே சாலையை கடந்து செல்ல வேண்டும்.

ஸ்டேன்லி மருத்துவமனை

அங்கு சிகிச்சை பெற்று வரும் விஜயலட்சுமி என்ற 48 வயது பெண், “வார்டுக்குள் நடக்கவே சிரமப்படும் நிலையில் சாலையைக் கடக்க வைத்து சமூக குழந்தை நல மருத்துவமனையின் 4வது மாடிக்கு ஏற வைக்கிறார்கள்.” என்று முறையிடுகிறார்.

1990 களில் கட்டப்பட்ட 8 மாடி சமூக குழந்தைகள் நல மருத்துவமனை, குழந்தை நலப் பிரிவு மற்றும் ஆராய்ச்சி பிரிவுகளுக்காக ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் இப்போது ஸ்டேன்லி மருத்துவமனையின் நரம்பியல், சிறுநீரகவியல், தோல் இயல் போன்ற பிரிவுகள் இங்கு மாற்றப்பட்டுள்ளன.

இரண்டு மருத்துவமனைகளையும் இணைக்கும் நடை மேம்பால கட்டுமானப் பணிக்கும் இரண்டு மின் தூக்கிகள் அமைக்கவும் 2006 ஆம் ஆண்டே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 2007ம் வருட மத்தியில் மின் தூக்கிகள் செயல்பட ஆரம்பித்தன. ஆனால், ஊழியர் பற்றாக்குறையினால் சில மாதங்களிலே தொடர்ந்து செயல்படுத்த முடியாமல் நிறுத்தி விட்டனர்.

‘நல்ல உடல் நிலையில் இருப்பவருக்கே சாலைகளில் நடக்கும் போது நோய்க் கிருமிகள் தாக்கும் அபாயம் இருக்கும் போது அறுவை சிகிச்சை செய்யப்பட்டவர்களையும் வயதான நோயாளிகளையும் அலைக்கழிக்கும் இந்த அலட்சியத்தை சரி செய்ய அரசிடம் பல முறை முறையிட்டும் பலன் இல்லை’ என்கிறார் ஸ்டான்லி மருத்துவமனையின் மூத்த அதிகாரி ஒருவர்.

டிப்படை மருத்துவ தேவைகளுக்காக அரசை நம்பியிருக்கும் மக்களுக்கு சிகிச்சை என்ற பெயரில் துயரத்தை திணிக்கிறது அரசாங்கம்.  மக்களுக்கு செய்ய வேண்டிய அடிப்படை வசதிகளை புறக்கணித்து விட்டு கோயில் யானைகளுக்கு புத்துணர்வு வழங்க 48 நாட்கள் முகாம் நடத்தி பல லட்சங்கள் செலவழிப்பதுதான் ஜெயா அரசின் நிர்வாகத் திறமை.

கட்டிடங்களை சரியாக பராமரிக்காமல், தேவையான அளவு மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவுத் தொழிலாளர்களை பணியில் அமர்த்தாமல், மருந்துகள் இல்லாமல்தான் அரசு மருத்துவமனைகள் இயங்குகின்றன.  மக்கள் தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள வட்டிக்கு கடன் வாங்கியாவது தனியார் மருத்துவமனைகளை நாடச் செய்வதே அரசாங்கத்தின் நோக்கம்.

மேலும் படிக்க