Friday, May 2, 2025
முகப்புகலைகவிதைஎங்கள் சாவுக்கு யாரும் காரணமில்லை !

எங்கள் சாவுக்கு யாரும் காரணமில்லை !

-

குடும்பம் தற்கொலைபால் தாக்கரே என்ற பாசிஸ்ட்டின் மரணம்
பலவந்தமாக நம்மீது திணிக்கப்படும் நாட்டில்
பாளையங்கோட்டை மாரியம்மாள், ரவிசங்கர் – எனும்
தொழிலாளர் குடும்பத்தின் தற்கொலை மரணம்
நம்மில் பலரை தொட்டிருக்குமா என்பது சந்தேகமே!

தொழிலாளர்கள் வாழ்வதைப் பற்றியே
கண்டுகொள்ளாத அளவுக்கு வளர்க்கப்பட்ட மனங்கள்
அவர்கள் சாவில் மட்டுமென்ன.. திடீரென
சலனப்பட்டு விடப் போகிறது?

‘உழைத்து வாழுங்கள்’ என சாதாரண மக்களை
நெறிப்படுத்தும் உத்தமர்களே!
பிழைத்து வாழ பிறிதொரு வழி தெரியாமல்
உழைத்து, உழைத்து
உழைப்பைத் தவிர வேறொன்றுமறியாத காரணத்தால்
உங்கள் கண் முன்னே யாரையும் சுரண்டாமல்
உழைத்த வறுமையில் ஆறு பிணங்கள்!

மணிகண்டன், மகாதேவன், மகாலெட்சுமி,
மகாராஜன், மலர்வனம் – என
பதினோரு வயதுக்குட்பட்ட ஐந்து பிள்ளைகளை
நஞ்சு கொடுத்துக் கொல்லுமளவுக்கு
அந்தத் தாயின், தந்தையின் மனதை கல்லாக்கியது எது?

ஒரு துளி உணவை ஊட்டும் முன்பு
தானருந்தி சோதித்து, பிள்ளைக்குத் தரும் தாய்…
குறுக்கிப் படுத்தால் குழந்தைக்கு நோவுமென்று
விரித்துப் படுத்து விதவிதமாய் வயிற்றில் பாதுகாத்த தாய்..
தன் கையாலேயே பிள்ளைக்கு நஞ்சூட்டுகிறாள் என்றால்!
எவ்வளவு கொடூரத்திற்கு தள்ளப்பட்டிருக்கும் அவளது வாழ்க்கை.

குலசை முத்தாரம்மன் கோயிலுக்கு மொட்டை போட்டு
குதூகலமாய் தெருவில் விளையாடிய பிள்ளைகளுக்கு
அன்று தெரிந்திருக்கவில்லை
இதுதான் நமக்கு கடைசி விளையாட்டென்று,
இதுதான் நமக்கு கடைசி இரவென்று.

ஏழைகள் என்பதால் முத்தாரம்மனும்
இறங்கி வரவில்லை போல.
வேண்டிக் கொண்ட பிள்ளைகளைத்
தோண்டிப் புதைக்கவே அவளும் துணையிருந்தாள்.

பட்ட கடன் பாக்கி இல்லை
நேர்த்திக் கடனையும் நேர்மையாக முடித்து விட்டு
வாழ்வை முடித்துக் கொண்ட அவர்களின் முகத்தில் விழிக்க
முத்தாரம்மனுக்கு சக்தி உண்டா?

முடிந்தால், நீங்கள் பாருங்கள் அந்த முகங்களை –
உதவிக்கு அழைத்தது போல கைகளை நீட்டியபடி ஒரு பிள்ளை…
உறக்கத்தில் உங்களிடம் நியாயம் கேட்பது போல
நெஞ்சைப் பிடித்தபடி ஒரு பிள்ளை…
வாழ்கிறோமா? சாகிறோமா? என்றறியும்
மூளை வளர்ச்சியின்றியே முடிந்து போன ஒரு பிள்ளை…

பீடி சுற்றிச் சுற்றியே தழும்பேறிய விரல்களும்
உழைப்பில் வாடி வதங்கி வெளிறிய விழிகளுமாய்..
அதோ… கிடக்கிறதே, அதுதான் தாயின் பிணம்.
காலமெல்லாம் வறுமை இழைத்த மரணக் கட்டையாய்
அதோ… தளர்ந்து கிடக்கிறதே… அதுதான் தந்தையின் உடல்.

“வாழ வழியாயில்லை… தற்கொலை கோழைத்தனம்” என
பிணத்தோடு விவாதிக்கும் பெரியோர்களே!
வாழும்போது நீங்கள் வந்திருந்தால்
உழைப்பாளிகளை வாழ விடாத சமூகக் காரணங்களை
சந்திக்க விரும்பாத உங்கள் கோழைத்தனம் தெரிந்திருக்கும்!

பாழும் உலகுதான், ஆனாலும் வாழும் ஆசையில்
எத்தனை முறை யோசித்து யோசித்து தள்ளிப் போட்டிருப்பார்கள்
தங்களது தற்கொலையை…
வாழ விரும்பாத அவர்களது ‘கோழைத்தனம்’
அவர்களது வாழ்விலிருந்து அல்ல,
வாளாவிருக்கும் உங்களது வாழ்விலிருந்தே
உருவானது அவர்களிடம் என்ற உண்மை புரியுமா உங்களுக்கு?

விதவிதமாய் வாழ ஆசைப்பட்டு
அது கிடைக்காமல் அவர்கள் சாகவில்லை,
அவர்கள் வேண்டியது இதுதான் –
சொந்த உழைப்பில் வாழும் சூழ்நிலை.
அடிப்படைத் தேவைகள், பிள்ளைகளுக்கு கல்வி.
மூளை வளர்ச்சியில்லாத பிள்ளைக்கு முறையான மருத்துவம்.

ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமையாகக் கிடைக்க வேண்டிய
சமூகத் தேவைகள் சரியாகக் கிடைத்திருந்தால்,
வாழ்வையே மறுக்கும் இந்த சமூக அமைப்பை மாற்றும்
சக்தி அவர்களுக்கு கிடைத்திருந்தால்…
அந்தத் தொழிலாளி குடும்பம் பிணமாகியிருக்காது.
செத்தவர்களால் சிந்திக்க முடியாது!
வாழ்பவர்களே யோசித்து சொல்லுங்கள்…
அவர்கள் தற்கொலைக்கும் உங்களுக்கும்
சம்மந்தமில்லையென நினைக்கலாம்.
அவர்கள் வர்க்கத்துக்கும் உங்களுக்கும்
சம்மந்தமேயில்லையோ?

தாமிரபரணிக் கரையில் தரிசான வாழ்க்கை
கோயம்புத்தூரில் துளிர் விடும் என்ற நம்பிக்கையில்
ஊர்விட்டு ஊர் ஓடி உழைத்துப் பார்த்து
களைத்துப் போய் கடைசியில் பாளையங்கோட்டைக்கே வந்து
பக்கத்து வீடுகளின் வசதிகளைப் பார்த்துக் கூட
பிள்ளைகள் ஏக்கமுறக் கூடாது எனப் பொத்திப் பொத்தி,
தன் வர்க்கமறிந்து உழைத்துப் போராடியும்
வாழ முடியாத சோகத்துக்கு யார் காரணம்?

“குளிர்பானத்தில் விசம் கலந்து குடித்து,
குடும்பமே தற்கொலை” என்று
பிரேதப் பரிசோதனை அறிக்கை சொல்கிறது..

’கண்ணே! மணியே! கருத்தே!’ எனக்
காத்து வளர்த்த பிள்ளைகளை
’எண்ணே, எழுத்தே!’ எனப் பள்ளியில் சேர்த்து
படிக்க வைக்க பணமில்லாமல்
மனம் வெடித்துச் செத்ததாய் அவர்கள் வாழ்க்கை சொல்கிறது..
குளிர்பானத்தில் விசம் கலந்ததை விடவும் கொடியது,
கல்வியை காசாக்கி கடைச் சரக்காக்கியது!

மூளை வளர்ச்சியில்லாத குழந்தைக்கு
முறையாக மருத்துவம் பார்க்க பணமின்றி..
சகலத்திற்கும் அவர்களுக்கு சாவே மருந்தாகிப் போனது.

கருவிகளும், மருந்துகளும், மருத்துவருமின்றி
அரசு மருத்துவமனைகளைக் கொன்ற
அந்த தனியார் மருத்துவம்தான்
அந்தத் தொழிலாளி குடும்பத்தையே
குலை நடுங்கக் கொன்றது.

தன்னைக் கண்டுகொள்ளாத இச்சமூகத்தின் மீது
எந்தத் தனிப்பட்ட கோபமும் ரவிசங்கருக்கில்லை.
விலையில்லா கலர் டி.வி. கூட
அலங்கரிக்காத தன் வீட்டில்,
தான் உழைத்துச் சேர்த்த ஓரிரு பொருட்களையும்
தன் சாவுக்குப் பிறகு,
தான் படித்த சி.எம்.எஸ். பள்ளி விடுதிக்கே
நன்கொடையாக அளித்துவிடுமாறு
கடிதம் எழுதிவிட்டு செத்திருக்கிறான் அந்தத் தொழிலாளி!
சாவுக்குப் பிறகும் சமூகத்தை நேசிக்கும்
அந்தத் தொழிலாளி உணர்வுக்கு நம் பதில் என்ன?

சோகமான தங்கள் வாழ்வை புதைத்துக் கொண்டும்
கேவலமான இச்சமூக அமைப்பை நமக்கு வெளிக்காட்டியும்
விழுந்திருக்கின்றன அவர்கள் பிணங்கள்…

பயப்பட வேண்டாம்!
எங்கேயும் அவர்கள் யாரையும்
காட்டிக் கொடுக்கவில்லை.
சாவிலும் கூட சமூகப் பொறுப்புடன்,
‘எங்கள் சாவுக்கு யாரும் காரணமில்லை’
என்று எழுதிவைத்து விட்டு இறந்திருக்கிறார்கள்!

– துரை.சண்முகம்

______________________________________________________________________________________

புதிய கலாச்சாரம் – ஜனவரி 2013
______________________________________________________________________________________

படிக்க :