Wednesday, May 7, 2025
முகப்புமறுகாலனியாக்கம்கார்ப்பரேட் முதலாளிகள்மாருதி சுசுகி தொழிலாளர்களுக்கு ஆதரவாக - திருச்சியில் ஆர்ப்பாட்டம் !

மாருதி சுசுகி தொழிலாளர்களுக்கு ஆதரவாக – திருச்சியில் ஆர்ப்பாட்டம் !

-

மாருதி சுசுகி நிர்வாகத்தின் கார்ப்பரேட் பயங்கரவாதத்துக்கு எதிராக பிப்ரவரி 5ம் தேதி தொழிலாளர் அமைப்புகள் நாடெங்கும் நடத்திய ஆர்ப்பாட்டங்களின் ஒரு பகுதியாக திருச்சியில் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருச்சியில் திருவரம்பூர் பகுதியில் 5/02/13 மாலை 6மணியளவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பாய்லர் பிளாண்ட் ஒர்க்கர்ஸ் யூனியன் செயலாளர் தலைமை வகித்தார்.

அனைத்து தரைக்கடை வியாபாரிகள் பாதுகாப்பு சங்க சிறப்புத் தலைவர் சேகர் கண்டன உரையாற்றினார்.

பயங்கரவாதத்திலேயே மிகக்கொடூரமானது முதலாளித்துவ பயங்கரமே என்றும் இது உலகம் முழுவதும் உழைப்பாளி மக்களின் உயிரையும், உடமைகளையும் சூறையாடி வருவது பற்றியும் விளக்கி பேசினார்.

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில இணைச்செயலாளர் தோழர்.காளியப்பன் சிறப்புரையாற்றினார்.

மாருதி ஆலை நிறுவனம் தொடர்ச்சியாக சட்ட விரோத போக்கை கடைபிடித்துள்ளது. சங்கம் வைக்க உரிமை மறுப்பு, பல ஆண்டுகள் வேலை செய்தாலும் நிரந்தரம் கிடையாது, கழிவறை போகும் இடங்களில் கூட கண்காணிப்பு கேமரா வைத்து வேவு பார்ப்பது என தொழிலாளர்களை கொத்தடிமை போல நடத்தியது. இந்த அநீதிக்கு தொழிலாளர்கள் நடத்திய சட்டபூர்வ போராட்டங்கள், அதனை தொடர்ந்து நிர்வாகம் அடியாள் மூலம் தொழிலாளர்களை தாக்கியது, தொழிலாளர்கள் திருப்பி தாக்கியது, இதனால் ஆலை அதிகாரி அஸ்வகோஸ் கொல்லப்பட்டது, அரசும் ஆலை நிர்வாகமும் கூட்டு சேர்ந்து தொடர்ந்து நடத்தி வரும் சட்டவிரோத தடுப்புக்காவல், வேலைநீக்கம் ஆகியவற்றை கண்டித்து பேசினார்.

தனியார் மயம்-தாராளமயம்-உலகமயத்தால் இன்று நாடு முழுவதும் மக்கள் பாதிக்கப்பட்டு வருவது பற்றியும் இதற்கு எதிராக மக்கள் ஒன்று திரண்டு போராட வேண்டியது பற்றியும் பேசினார்.

இறுதியாக ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கத்தின் மாவட்ட செயலாளர் தோழர்.மணலிதாஸ் நன்றி கூறினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள், குழந்தைகள், தொழிலாளர்கள் உள்பட 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மைய கலைக்குழு தோழர்கள் புரட்சிகர பாடல்கள் பாடி உணர்வூட்டினர்.

செய்தி: பு.ஜ.தொ.மு., திருச்சி.