privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்காங்கிரஸ்அப்சல் குரு தூக்கு : இந்திய அரசின் பயங்கரவாதத்தை கண்டிக்கிறோம் !

அப்சல் குரு தூக்கு : இந்திய அரசின் பயங்கரவாதத்தை கண்டிக்கிறோம் !

-

அப்சல் குரு
அப்சல் குரு

2001 – பாராளுமன்றத் தாக்குதல் வழக்கில் பொய்யாக குற்றம் சாட்டப்பட்ட அப்பாவி அப்சல் குரு இன்று காலை (9.2.2013) 8 மணிக்கு புதுதில்லி திகார் சிறையில் தூக்கிலடப்பட்டார். இந்தப் படுகொலை நடந்த உடன் இதை பெருமையாக உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டே காவி பயங்கரவாதிகள் மனம் குளிருமாறு தெரிவித்திருக்கிறார்.

2002 ஆம் ஆண்டு சிறப்பு நீதிமன்றத்தால் அப்சல் குருவின் மீதான வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் உச்சநீதிமன்றத்தால் 2004-ம் ஆண்டு உறுதி செய்யப்பட்டது. அப்சல் குரு மீதான கருணை மனுவினை சில நாட்கள் முன்புதான் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நிராகரித்தார். இதனையடுத்து காசாப்பை இரகசியமாக தூக்கிலட்டது போல அப்சல்குருவையும் இரகசியமாக தூக்கிலிட்டு கொன்றிருக்கின்றனர். குற்றமிழைத்த கசாப்பை தூக்கிலிட்ட போதே குற்றமிழைக்காத அப்சல் குருவையும் தூக்கிலிட வேண்டும் என்று இந்துத்தவ வெறியர்கள் வற்புறுத்தினர்.

அப்சல் குருவின் குடும்பம் வடக்கு காஷ்மீரில் வாழ்கிறது. கருணை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்தார் என்பதை குருவின் மனைவிக்கு தெரிவித்திருக்கிறார்கள். அப்சல் குருவின் உடலைக் கூட அவரது உறவினர்களிடம் ஒப்படைக்காமல் சிறையிலேயே புதைக்கப்படுவார் என்று ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

அப்சல் குருவை கொன்றிருப்பதால் காஷ்மீர் மாநிலம் மீண்டும் தீப்பற்றி எரியும். இதை எதிர்பார்த்து அங்கே ஊடரங்கு சட்டத்தை பிறப்பித்திருக்கிறார்கள்.

அப்சல் குரு ஒரு அப்பாவி என்பதை அருந்ததி ராய் முதல் பல்வேறு மனித உரிமை அமைப்புகள் வரை ஆதாரப் பூர்வமாக நிரூபித்திருக்கின்றனர். கீழே தொடர்புடைய இடுகைகளை வாசகர்கள் அவசியம் படியுங்கள். அதில் அப்சல் குரு தனிப்பட்ட முறையில் எழுதிய கடிதமும் இருக்கிறது. அதில் நாட்டில் நடக்கும் குண்டு வெடிப்புகளில் எல்லாம் தனது பெயர் வேண்டுமென்றே சேர்க்கப்படுவதை அவர் கண்டிக்கிறார். முக்கியமாக அந்த குண்டு வெடிப்புகளை வெளிப்படையாக கண்டிக்கிறார்.

மூவர் தூக்கு குறித்து அதிகம் அறிந்த தமிழகத்தில் அப்சல் குருவின் நியாயம் பலருக்கும் தெரியாது. பாராளுமன்றத் தாக்குதலில் அவருக்கு எந்தப் பங்கும் இல்லை என்பதும், அத்தகைய ஆதாரங்கள் ஒன்று கூட இல்லாத நிலையில் ‘தேசத்தின் மனசாட்சியை’ திருப்திப் படுத்துவதற்க்காக அவருக்கு மரண தண்டனை அளிப்பதாக வெட்கம் கெட்ட உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறது.

மேலும் பாராளுமன்றத் தாக்குதல் நிச்சயமாக இந்திய உளவுத்துறையின் சதி நடவடிக்கை என்பதை பல மனித உரிமை அமைப்புகள் உரிய காரணங்களுடன் முன்வைத்திருக்கின்றனர். இதை உண்மையாக விசாரித்துப் பார்த்தால் அன்று இருந்த பா.ஜ.க அரசும், உள்துறை அமைச்சராக இருந்த அத்வானியும் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்படுவார்கள். அதை மறைக்கவே இந்துத்வா கும்பல் அப்சல் குருவை அதிவிரைவாக தூக்கிலட வேண்டும் என்று துடித்தது. காங்கிரசு அரசு இன்று அதை நிறைவேற்றியிருக்கிறது.

இதை காஷ்மீரத்து மக்கள் அறிவார்கள். அப்சல் குரு அநியாயமாகத் தூக்கிலடப்பட்டிருப்பதால் காஷ்மீர் மீண்டும் தீப்பிடித்து எரியும்.  அப்சல் குருவை இரகசியமாக தூக்கிலட்ட இந்திய அரசுக்கு காஷ்மீர் மக்கள் தக்க  பதிலளிப்பார்கள்.

அப்சல் குருவை படுகொலை செய்த இந்திய அரசின் பயங்கரவாதத்தை வன்மையாக கண்டிக்கிறோம். பதிவர்கள், வாசகர்கள், அனைவரும் இந்த அநீதியை கண்டிக்க வேண்டுமென கோருகிறோம்.