privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.ககுமுதம் : ரிப்போர்ட்டரா , புரோக்கரா ?

குமுதம் : ரிப்போர்ட்டரா , புரோக்கரா ?

-

செட்டியார் – ஐயங்கார் கூட்டணியில் இருந்த குமுதம் நிறுவனம் தற்போது ஐயங்கார் கும்பலிடம் மட்டும் உள்ளது. செட்டியார் கும்பல் நீக்கம் நிறைவேற்றப்பட்டதற்கு அம்மாவின் அருளும் ஒரு காரணமென்பதால் சொத்தைக் கைப்பற்றிய ஐயங்கார் கும்பல் அதிமுகவின் அடிவருடி பத்திரிகையாக செயல்படுவதை அனைவரும் அறிந்திருக்கலாம். குமுதம் நிறுவனங்களில் வேலை செய்யும் அனைவரும் கையில் இரட்டை இலையை பச்சை குத்தியும், மூளையில் புரட்சித் தலைவியின் பொற்பாதங்களை வணங்கும் முத்திரையை பதித்தும் பத்திரிகைகளை நடத்துகிறார்கள், எழுதுகிறார்கள். இதில் ஓனர், வொர்க்கர் என்ற பேதமெல்லாம் இல்லை.

தமிழக அரசு அல்லது ஜெயாவிற்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் அனைத்து விதமான பிரச்சினைகளுக்கும் கருணாநிதியின் சதியே காரணமென்று ஜெயாவே யோசித்திராத கோணத்திலெல்லாம் சிந்தித்து எழுதுகின்றன குமுதம் குழும பத்திரிகைகள்.

விசவரூபம் பிரச்சினை வந்தபோது கூட மற்ற பத்திரிகைகளெல்லாம் சற்று பயந்து கொண்டு தமிழக அரசைக் கண்டிக்கவில்லை என்றாலும் மொக்கையான கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் கொஞ்சம் கமலை ஆதரித்தன. ஆனால் குமுதம் மட்டும் இந்தப்பிரச்சினைக்கு சதி செய்த காரணகர்த்தா கருணாநிதி என்று ஒரு திகில் நிறைந்த மர்மக்கதையை அட்டைப்படக் கட்டுரையாக எழுதி வெளியிட்டது. அதன்படி இவர்கள் தமிழக அரசை ஆதரிப்பதோடு கமலையும் ஆதரிக்கிறார்களாம். அப்பாவி கமல் ஒரு பகடைக்காயாக கருணாநிதியின் கையில் சிக்கிவிட்டதாக எழுதியது குமுதம்.

இதற்காக இவர்கள் உருவாக்கிய வரலாறு இன்னும் பயங்கரம். அதாவது இன்று கமல் பலியானது போல அன்று ரஜினி பலியானார் என்று ஒரு புதிய வரலாற்றை உருவாக்கியிருந்தார்கள். அதன்படி 1991இல் ஆட்சிக்கு வந்த ஜெயாவை தமிழக மக்கள் அமர்க்களமாக ஆதரித்து தள்ளினார்களாம். அந்த ஆட்சிக்காலத்தின் இறுதியில் பாட்சா பட விழாவில் மணிரத்தினம் வீட்டு குண்டு வீச்சு தொடர்பாகவும், டிராபிக் ஜாமில் தனது கார் நிற்பதற்காகவும் துக்கப்பட்ட ரஜினி தமிழக அரசைக் கண்டித்தது நினைவிருக்கிறதா? அதை ஊதிப்பெருக்கி ரஜினிக்கும் ஜெயாவுக்கும் ஒரு முரண்பாட்டை உருவாக்கி அடுத்த தேர்தலில் ரஜினியை ஒரு வாய்ஸ் கொடுக்க வைத்து அதிமுகவை தோற்க வைத்தவர் கருணாநிதி என்று போகிறது குமுதம் மாமாவின் வரலாறு.

அட மாமாக்களா! அந்த ஆட்சிக்காலத்தில் பாசிச ஜெயாவின் ஆட்சியில் முழு தமிழகமுமே மொட்டை அடிக்கப்பட்டதும், வளர்ப்பு மகன் திருமணம் முதல் டான்சி ஊழல் வரை பாசிச ஜெயாவின் முறைகேடுகளும்தான் அந்த தேர்தலில் தமிழக மக்கள் கொடுத்த செருப்படிக்கு முக்கியமான காரணம். உண்மையாகவே வாக்கு கேட்க வந்த அதிமுக அமைச்சர்கள் பலரை பெண்களின் விளக்குமாறுதான் அடித்தி விரட்டியதெல்லாம் வரலாறு. அதைக்கூட தனது அம்மா போற்றி அடிமைத்தனத்திற்காக இப்படி புரட்டி எழுவது என்றால் இவர்களின் நரித்தனம் எந்த அளவு அபாயகரமானது என்பதை புரிந்து கொள்ளலாம்.

இப்படி அந்தக் காலத்தில் ரஜினியை பயன்படுத்திய கருணாநிதி இன்று கமலை மோத வைத்து அடுத்த பாராளுமன்ற தேர்தலில் அவரை வாய்ஸ் கொடுக்க வைத்து வெற்றி பெற திட்டமிட்டிருக்கிறாராம். இதனாலாயே ப.சிதம்பரம் நூல் வெளியீட்டு விழாவில் வேட்டி கட்டிய தமிழர்தான் பிரதமர் ஆக வேண்டும் என்று கமல் விரும்புகிறாரே ஒழிய சேலை கட்டியவரை அல்ல என்று விசமத்தனம் செய்து பேசியவர் கருணாநிதியாம். இப்போதும் முழு தமிழக மக்களும் ஜெயாவை முழுமனதுடன் ஆதரிக்கிறார்களாம். ஒரு வேளை கமல் அப்படி குரல் கொடுத்தால் மக்கள் மாற வாய்ப்பிருக்கிறது என்பது திமுகவின் திட்டமாம்.

இதுதான் விசுவரூபம் கதையின் பின்னணி என்று நாக்கூசாமல் எழுதுகிறது குமுதம். சரி கருணாநிதி இப்படி சதி செய்து கமலை அப்படி பேசவைத்தால் அம்மா ஏன் கோபப்பட்டு கமலை எதிர்க்க வேண்டும்? அந்த சதியை முறியடிக்கும் வண்ணமாக அமைதியாக இருந்து விசுவரூபத்தை அனுமதித்திருக்கலாமே? இப்படியெல்லாம் நாம் கேட்டாலும் குமுதத்தைப் பொறுத்தவரை அம்மாவின் அதிகாரம் என்பது கேள்விகளுக்கு அப்பாற்பட்டது. அதை தெருவில் போகும் ஒரு குழந்தை கேட்டாலும் அவருக்கு கோபம் வரும். இந்த கோபத்தைப் பொறுத்துக் கொண்டு கேள்வி கேட்ட அந்த குழந்தையை ரெண்டு அடி போடுவதுதான் ஊடக தர்மம் என்று குமுதம் சொல்கிறது. அதாவது அந்த அறியாக் குழந்தையை கருணாநிதிதான் லாலிபாப் வாங்கி இப்படி அம்மாவுக்கு எதிராக பேசவைத்தார் என்று புரிந்து கொள்ள வேண்டுமாம். அடேங்கப்பா, இம்சை அரசனின் அரசவைக் கவிஞர்களெல்லாம் இவர்களிடம் பிச்சை வாங்க வேண்டும்.

தடை செய்யப்பட்ட காலத்தில் கூட கமலின் ரசிகர்கள் ஆந்திரா சென்றுதான் படத்தை பார்த்தார்களே அன்றி தமிழகத்தில் எந்த எதிர்ப்பும் காட்டவில்லை. இப்படிப்பட்ட ரசிகர்களை உசுப்பி விட்டு கமல் குரல் கொடுத்து திமுக வெற்றிபெறும் என்றால் பவர் ஸ்டாருக்கு இதைவிட வாய்ஸ் அதிகம் என்பதை நாம் ஒத்துக் கொள்ள வேண்டும். இது போக திமுக வாரிசுச் சண்டையை வைத்து ரிப்போர்ட்டர் எனும் இந்த நரி எழுதிய கதைகளை பிட்டு வைப்பதற்கு இந்த ஜென்மம் மட்டும் போதாது.

குமுதம்-ரிப்போர்ட்டர்-குஷ்பு-மணியம்மைஇதன் தொடர்ச்சியாக இன்று வந்த குமுதம் ரிப்போர்ட்டர் அட்டைப்படத்தில் பெரியார் படத்தில் மணியம்மையாக நடித்த குஷ்பு படத்தை போட்டு பக்கத்தில் பெரியாருக்கு பதில் கருணாநிதி அமர்ந்திருக்கும் படத்தை ஒட்ட வைத்து “இன்னொரு மணியம்மை?” என்று வெட்கம் கெட்ட விதத்தில் எழுதியிருக்கிறார்கள். குஷ்பு இப்படி மணியம்மை பெரியாரை மணந்தது போல கருணாநிதியிடம் நெருங்கி வர முயற்சி செய்கிறார் என்றும் இதை கருணாநிதியின் குடும்ப பெண்கள் கடுமையாக எதிர்க்கிறார்கள் என்றும் இந்த மஞ்சள் பத்திரிகை மாமா பச்சையாக வாந்தி எடுத்து வைத்திருக்கிறது.

ஆனந்த விகடனில் பேட்டி கொடுத்த குஷ்பு, திமுகவில் தலைவர் என்பவர் பொதுக்குழுவில் தேர்வு செய்யப்படுவார் என்பது போல கூறியதை அனைத்து பத்திரிகைகளும் ஊதிப்பெருக்கி ஒரு சென்சேஷன் நியூசை உருவாக்கின. இதன் தொடர்ச்சியாக குஷ்பு வீடு திமுகவினரால் தாக்கப்பட்டதும், கருணாநிதி அதை கண்டித்தாதாகவும் செய்திகளை படித்திருப்பீர்கள். குஷ்பு ஒரு மேட்டுக்குடி ரோட்டரி கிளப் பெண் அரசியலுக்கு வந்தால் எப்படி நடந்து கொள்வாரோ அப்படித்தான் பேசுகிறார். இவரது பிரபலம் தேர்தல் காலங்களில் வாக்கு கேட்க பயன்படும் என்பதால் திமுக இத்தகைய களப்பணி செய்து வந்த ‘போராளிகளை’ வெட்கமில்லாமல் ஏற்றுக் கொள்கிறது. பதிலுக்கு குஷ்புவும் தனது பிரபலத்தை வைத்து திமுகவில் இன்னும் செல்வாக்குமிக்க பதவிகளில் வரலாம் என்று முயற்சி செய்கிறார். பரஸ்பரம் காரியவாதம். அதே போல ஸ்டாலின், அழகிரி மற்றும் பல தளபதிகள் கொண்ட திமுகவின் மையங்கள் பல ஒரு நடிகையின் பிரபலத்தை எந்த அளவுக்கு மட்டும் பயன்படுத்திக் கொள்வது என்பதை எச்சரிக்கையாகவே கையாள்கிறார்கள்.

இதைத்தாண்டி குஷ்புவின் நேர்காணல்களுக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை. ஸ்டாலின், அழகிரி வாரிச் சண்டையின் பின்னணியில்தான் குஷ்புவின் நேர்காணல் பரபரப்பு செய்தியாக மாற்றப்பட்டது. இதை இன்னும் கொஞ்சம் பாலியல் கலந்த தளத்திற்கு கொண்டு சென்றது குமுதம் ரிப்போர்ட்டர் மட்டுமே.

குமுதத்தின் இலக்கு என்ன? கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்து பெண்களையெல்லாம் காலஞ்சென்ற எஸ்.எஸ்.சந்திரன் பொதுமேடையில் வாய் புழுக்க பேசிய போது குலுங்கி குலுங்கி சிரித்தவர்தான் இந்த ஜெயலலிதா. இன்று குமுதம் ரிப்போர்ட்டரை பார்த்தால் அப்படி சிரிப்பது உறுதி என்று குமுதம் மாமாவுக்கு தெரியும். இந்த ஒரு மேட்டருக்காகத்தான் இத்தகைய தரந்தாழ்ந்த கதையை படத்துடன் எழுதி வெளியிடக் காரணம்.

எனினும் தமது தலைவரை குமுதம் கேவலப்படுத்திவிட்டது, தனது கட்சிக்காரர் என்பதால் குஷ்புவை இழிவுபடுத்திவிட்டது என்று திமுகவின் ஒரு உடன்பிறப்புக்கு கோபம் வந்து குமுதம் அலுவலகத்தை அடிக்க சென்று கலவரமெல்லாம் நடக்காது. ஒன்று அம்மாவின் மீதான பயம். இரண்டு இப்படித்தான் திமுக மட்டுமல்ல அதிமுக மேடைகளிலும் இரண்டு கட்சி பேச்சாளர்களும் பாலியல் அநாகரிகத்தோடு பேசுவார்கள். வெற்றி கொண்டான், தீப்பொறி ஆறுமுகம், நாஞ்சில் சம்பத் பேச்சுக்களுக்கு கை தட்டும் இவர்கள் குமுதத்திற்காக கல்லை எடுக்க மாட்டார்கள் என்பதையும் நாம் ஒத்துக் கொள்ள வேண்டும்.

ஆனாலும் குமுதம் ரிப்போர்ட்டரின் இத்தகைய அயோக்கியத்தனத்தை நாம் அனைவரும் கண்டிக்க வேண்டும். தமிழகத்தை பிடித்த சாபக்கேடு பாசிச ஜெயா மட்டுமல்ல, அவருக்கு பல்லக்கு தூக்கும் இத்தகைய பத்திரிகை மாமாக்களும்தான் என்பதை உணர்வதோடு பொது அரங்கில் இவர்களை முறியடிப்பதற்கும் நாம் முன்வரவேண்டும்.