privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கமத்திய அரசு கெசட்டில் காவிரி தீர்ப்பு! ஆவதென்ன?

மத்திய அரசு கெசட்டில் காவிரி தீர்ப்பு! ஆவதென்ன?

-

காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பு மத்திய அரசிதழில் (கெசட்டில்) வெளியிடப்பட்டு விட்டது. ‘தனது 30 ஆண்டு அரசியல் வாழ்க்கையின் மகிழ்ச்சியான நாள்’ என்று தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா பூரித்திருக்கிறார். 22 ஆண்டு போராட்டத்துக்குப் பிறகு தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு நியாயம் வழங்கப்பட்டிருப்பதாகவும், அதற்காக தான் இடைவிடாமல் போராடியதாகவும், அந்த போராட்டத்துக்கு உதவி செய்த உச்ச நீதிமன்றத்துக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறியிருக்கிறார் ஜெயலலிதா. இதை நான் செய்தேன் நான் செய்தேன் என்று குறிப்பிட்டிருப்பதுதான் ஜெயலலிதாவின் முக்கியமான செய்தி. இதன்படி காவிரியில் வராதா நீரினை விட ஜெயாவின் சாதனை ஜால்ராக்கள் காட்டாற்று வெள்ளமாய் தமிழகத்தில் ஓடுவது உறுதி.
காவிரி
காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பின் படி பற்றாக்குறை இல்லாத ஆண்டுகளில் தமிழ்நாட்டுக்கு 419 டிஎம்சி, கர்நாடகாவுக்கு 270 டிஎம்சி கேரளாவுக்கு 30 டிஎம்சி, புதுச்சேரிக்கு 7 டிஎம்சி என்று காவிரியில் ஓடும் சராசரி அளவான 740 டிஎம்சி தண்ணீர் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும்; பற்றாக்குறை ஆண்டுகளில் எவ்வளவு தண்ணீர் குறைகிறதோ அந்த பற்றாக்குறை இதே வீதத்தில் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும்.

ஒரு நீர் ஆண்டு என்பது ஜூன் 1ம் தேதி முதல் அடுத்த ஆண்டு மே 31ம் தேதி வரை கணக்கிடப்படுவதாகும். இந்த தீர்ப்பின் படி ஒவ்வொரு மாதமும் கர்நாடகா-தமிழ்நாடு எல்லையில் இருக்கும் பில்லிகுண்டு நீரேற்று நிலையத்தில் கர்நாடகா சேர்க்க வேண்டிய நீரின் நிர்ணயித்திருக்கிறது நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பு. பருவ மழையின் அளவையும் நீர் வரத்தையும் மதிப்பிட்டு ஜூன் மாதம் 10 டிஎம்சியில் ஆரம்பித்து மாதா மாதம் அதிகரித்து ஆகஸ்டில் அதிக பட்சமாக 50 டிஎம்சி அளவை எட்டி அதன் பிறகு படிப்படியாக குறைந்து பிப்ரவரி மாதம் குறைந்த அளவான 2.5 டிஎம்சி விடப்பட வேண்டும் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறாக, சாதாரண ஆண்டுகளில் கர்நாடகா மொத்தம் 192 டிஎம்சி தண்ணீர் தமிழ்நாட்டு எல்லையில் வரும்படி தண்ணீர் விட வேண்டும். தமிழ்நாட்டுக்குள் கிடைக்கும் நீரையும் சேர்த்து தமிழ்நாடு தன் பங்கான 419 டிஎம்சி நீரை பயன்படுத்திக் கொள்ளலாம்.

பிப்ரவிர 5, 2007ம் ஆண்டு வழங்கப்பட்ட இந்த நடுவர் மன்ற தீர்ப்பு 5 ஆண்டுகள் தாமதத்துக்குப் பிறகு அரசின் சட்டங்களை பொதுமக்களுக்கு அறிவிக்கும் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம், காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு நாட்டின் சட்டங்களில் ஒன்றாகி விட்டது என்று சொல்லலாம்.

இனிமேல் காவிரி நதி நீர் ஆணையம், காவிரி கண்காணிப்பு குழு போன்ற அமைப்புகள் கலைக்கப்பட்டு விடும். காவிரி நிர்வாக வாரியம், காவிரி நீர் ஒழுங்குமுறை குழு போன்றவை அமைக்கப்படும். மாநிலங்களின் பிரதிநிதிகள், நீரியல் வல்லுனர்கள், விவசாயத் துறை வல்லுனர்கள் இந்த அமைப்புகளில் உறுப்பினர்களாக நியமிக்கப்படுவார்கள்.  மத்திய அரசு அதிகாரி ஒருவரின் தலைமையில் இயங்கும் இந்த அமைப்புகள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும்.

சமூகத்தில் நிலவும் நடைமுறைகளையும் பழக்கங்களையும் மாற்றுவதற்கு இயற்றப்பட்ட வரதட்சணை தடுப்புச் சட்டம் முதல், வன்கொடுமை தடுப்புச் சட்டம் வரை நடைமுறையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதையும் அத்தகைய சட்டங்கள் வருவதற்கு முன்பு பரவலாக கடைப்பிடிக்கப்பட்ட பழக்கங்களே சமூகத்தில் பெரும்பாலும் தொடர்கின்றன என்பதையும் இந்த சட்டங்களை மீறுபவர்களுக்கு எதிராக அரசு அமைப்போ, நீதிமன்றங்களோ எதையும் செய்து விட முடியவில்லை என்பதையும் நாம் நடைமுறையில் பார்த்துக் கொண்டிருக்கிறோம். பார்ப்பனிய நிலவுடமை சமூகத்தின் அடிப்படையை ஆளும் வர்க்கங்கள் பாதுக்காக்கும் போக்கில் முரண்பாடு வராத வரை இந்த சட்டங்களால் என்ன பயன்?

கடந்த 40 ஆண்டுகளாக தமிழ்நாட்டு விவசாயத்துக்கு உரிய நீரை மறுத்து வரும் கர்நாடக அரசு, ‘நியாயப்படி சேர வேண்டிய தண்ணீரை கொடுக்க வேண்டும்’ என்ற நடுவர் மன்றத் தீர்ப்பை சட்டப் புத்தகத்தில் சேர்த்து விட்டதும் தன்னை மாற்றிக் கொள்ளும் என்பதை நம்பி ஜெயலலிதா வேண்டுமானால் வெற்றி விழா கொண்டாடி விட்டு அவரது சிறுதாவூர் பங்களாவில் புகுந்து கொள்ளலாம்.

ஆனால், உச்சநீதி மன்ற உத்தரவுகளையோ காவிரி நதி நீர் ஆணையத்தின் ஆணையையோ கூட மதிக்காமல் திமிராக நடந்து கொள்ளும் கர்நாடக அரசு எதிர்காலத்தில் சட்ட விரோதமாக நடந்து கொண்டால் மத்திய அரசோ உச்ச நீதி மன்றமோ என்ன செய்து விட முடியும்? ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்தை கலைத்து விட்டு மறு தேர்தல் நடத்தினால் என்ன நடக்கும் என்று மத்தியில் ஆளும் கட்சிக்கும் தெரியும், கர்நாடக ஆளும் கட்சிக்கும் தெரியும். இல்லை, சட்டத்தின் ஆளுமை அனைத்தையும் விட உயர்ந்தது என்று ராணுவத்தை அனுப்பி அணையை கைப்பற்றி சட்டத்தை அமல்படுத்தி விடப் போகிறதா? மேலும் இதே அரசிதழில் காவிரி நடுவர் மன்றத்தின் 1991ம் ஆண்டு இடைக்காலத் தீர்ப்பு வெளியிடப்பட்ட பிறகும் அதை கர்நாடக அரசு மதித்ததோ இல்லை அமல்படுத்தியதோ இல்லை.

வரும் ஆண்டுகளிலும் காவிரி டெல்டா விவசாயிகள் நீருக்கு காவிரியை எதிர்பார்த்து நிற்கும் போது, ஜெயலலிதாவோ அவருக்கு பிறகு முதலமைச்சர் ஆகும் ஒருவரோ பிரதமருக்கு கடிதம், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு, டெல்லியில் மாநாடு என்று எதிர்காலத்திலும் ஸ்டண்ட் அடித்துக் கொண்டிருக்க மட்டும்தான் முடியும். லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்களில் கருகிப் போன பயிர்களையும் பயிரிட முடியாதபடி நிலங்களை தரிசாகவும் வைத்து நொந்து கொண்டிருக்கும் தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு இவர்களது சட்டங்களும் காகிதங்களும் வாய்ச்சவடால்களும் எந்த நிவாரணத்தையும் தந்து விடப் போவதில்லை.

அல்லது காவிரி நீரை மட்டுமல்ல நதியையே முழுக்க மேலாண்மை செய்யும் ஒரு தனி நிறுவனத்தை மத்திய அரசு உருவாக்க வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர். இதை உருவாக்க முடிவது சாத்தியமெனில் கர்நாடக அரசு முந்தைய தீர்ப்புகளை ஏற்றுக் கொண்டிருப்பதும் சாத்தியம். பொதுவான சட்ட, நீதிமன்ற அமைப்புகளை கர்நாடக அரசு மதிக்காத போதும், அதை மத்திய அரசோ இல்லை நீதிமன்றமோ தட்டிக் கேட்காத போது அப்படி ஒரு நிர்ப்பந்தத்தை தமிழக மக்கள்தான் உருவாக்க முடியும்.

தமிழகத்தில் இருக்கும் மத்திய அரசின் அதிகாரம் தமிழக மக்களால் முற்றுகையிடப்படும் போதுதான் கர்நாடக அரசை வழிக்கு கொண்டு வரும் செயலை மத்திய அரசு யோசிக்க முடியும். இதன்றி அரசிதழ், நீதிமன்றம் எதுவும் சாதித்து விடாது. நடுவர் மன்ற தீர்ப்பு வந்து இத்தனை ஆண்டுகள் ஆகியும் அரசிதழில் வருவதற்கே இத்தனை ஆண்டுகள் ஆன போது அதை அமல்படுத்த ஆண்டுகள் மட்டும் போதாது, தமிழக மக்கள் மத்திய அரசுக்கு கற்பிக்கும்படியான போராட்டமும் அவசியம். இந்தியா, இந்திய ஒற்றுமை எல்லாம் ஒருவழிப் பாதையல்ல. பரஸ்பரம் சமத்துவம் இல்லாத இந்தியாவின் நிலையை மத்திய அரசுக்கு புரியவைக்கும் படியான போராட்டங்கள் மட்டுமே காவரியை மீட்டுவரும். ஒருவேளை காவிரி நீர் வரவில்லை என்றாலும் நமது சுயமரியாதையை மீட்டுத் தரும்.

மேலும் படிக்க
Cauvery Water Dispute
Cauvery water disputes tribunal report gazette notification