Tuesday, April 13, 2021
முகப்பு போலி ஜனநாயகம் அதிகார வர்க்கம் பொய் வழக்குகளையும் அடக்குமுறைகளையும் தோலுரித்த புமாஇமு!

பொய் வழக்குகளையும் அடக்குமுறைகளையும் தோலுரித்த புமாஇமு!

-

பொய் வழக்குகளையும் அடக்குமுறைகளையும் தோலுரித்துக்காட்டிய புமாஇமு வின் பொதுக்கூட்டம்

உழைக்கும் மக்களின் உரிமைகள் மறுக்கப்படுவதை எதிர்த்து போராடுபவர்கள் மீதான போலீசின் பொய் வழக்குகளையும் அடக்குமுறைகளையும் முறியடிப்போம் !

பொதுக்கூட்டம் என்றாலே அதற்கு தலைப்பு என்று ஒன்று இருக்கும், அந்த தலைப்பினை ஒவ்வொரு நொடியும் நினைவு படுத்துவது போல, பொதுக் கூட்டம் நடத்த அனுமதி கேட்டது முதல் இறுதி வரை அனைத்து நிகழ்வுகளும் இருந்திருக்கின்றன என்பதற்கும் இந்த பாசிச சூழலில் எப்படி ஒரு பொதுக்கூட்டத்தை நடத்த வேண்டும் என்பதற்கும் ஒரு எடுத்துக்காட்டுதான் ”உழைக்கும் மக்களின் உரிமைகள் மறுக்கப்படுவதை எதிர்த்து போராடுபவர்கள் மீதான போலீசின் பொய் வழக்குகளையும் அடக்குமுறைகளையும் முறியடிப்போம் !” என்ற தலைப்பில் 23.02.13 அன்று மாலை ஆறு மணியளவில் மதுரவாயல், நெற்குன்றம் பகுதியில் ம.க.இ.க, புஜதொமு,புமாஇமு,விவிமு ஆகிய அமைப்புக்களின் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டம்.

இந்த பொதுக்கூட்டத்தின் நிகழ்ச்சியை தெரிந்து கொள்வதற்கு முன்னர் இந்த பொதுக்கூட்டம் இப்பகுதியில் இந்த தலைப்பில் ஏன் நடத்தப்பட்டது? என்பதை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

புமாஇமு-RSYF- புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி என்ற அமைப்பினை சேர்ந்த நாங்கள் மதுரவாயல் பிள்ளையார் கோயில் பகுதியில் 10 ஆண்டுகளுக்கு முன்பு அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவதற்கு எதிராக இப்பகுதி இளைஞர்களை அணிதிரட்டினோம். அன்று தொடங்கிய எங்கள் போராட்டம் எவ்வளவு சரியானது என்பதை மக்கள் தினமும் உணர்ந்து கொண்டு இருக்கிறார்கள். சாக்கடை அடைப்பு, சாலைகள் சீரமைப்பது முதல் ஊரின் பிரதான பிரச்சினையான கழிவறை இல்லாதது போன்றவற்றிற்காக இந்த ‘ஜனநாயக’ அமைப்பு முறைப்படி அனைத்து வழிகளிலும் போராடினோம். மனுக்களை எழுதி எழுதி எங்கள் கைகள் ஓய்ந்தன. அக்காள் – தம்பி, அப்பா- மகள் என அனைவருமே அருகருகில் இருட்டினில் உட்கார்ந்து கொண்டு மலம் கழிக்க வேண்டிய பல்லாயிரக்கணக்கான ஊர்களைப்போலவே சபிக்கப்பட்ட பகுதிதான் இதுவும். இந்த அவல நிலைக்காக ஓட்டு கேட்டு வரும் ஓட்டு கட்சிகளும் அரசும் இம்மியளவும் அவமானமாக உணரவில்லை. இதனை தட்டிக்கேட்காமல் இருப்பதுதான் அவமானம் என்று பதிய வைத்தோம் மக்களிடம், ஆறு ஆண்டுகள் இடைவிடாத போராட்டமே அரசின் எருமைமாட்டுத்தோலுக்கு சூடு கொடுத்து உறைக்க வைத்தது, கழிவறை கட்டப்பட்டது. சிலர் வியக்கலாம் கக்கூசுக்கு போய் இப்படி ஒரு போராட்டமா? என்று. கழிவறை மட்டுமல்ல எந்த ஒரு உரிமையும் போராடாமல் கிடைக்காது என்பது தான் இதிலிருந்து கிடைக்கும் அனுபவம்.

அதன் பிறகு எத்தனைப்போராட்டங்கள், கள்ளச்சாராயம், ரவுடியிசம் என அனைத்தையும் அமைப்போடு இணைந்து மக்கள் ஆதரவோடு ஒழித்துக்கட்டினார்கள் இளைஞர்கள். இப்படி கட்டாய நன்கொடைக்கு எதிராக தனியார் பள்ளிகளை முற்றுகையிட்டு பணத்தை திருப்பி கொடுக்க வைத்தது, சமச்சீர் பாடத்திட்டத்திற்கான போராட்டம், அனைத்து தனியார் பள்ளி கல்லூரிகளையும் அரசுடமையாக்கக் கோரி டிபிஐ முற்றுகை என மாணவர்கள் இளைஞர்களுக்கான போராடக்கூடிய அமைப்பாக சென்னை மக்கள் மத்தியில் அறிமுகமானது புமாஇமு. சிவப்புக் கொடி வைத்து இருப்பவர்கள், சிவப்பு உடை உடுத்தியிருப்பவர்கள், பேருந்து , ரயில்களில் பேசுபவர்கள், புமாஇமு, RSYF என்று மக்கள் தோழர்களை அடையாளம் கண்டார்கள். பிரச்சாரத்தின் போது சிவப்பு உடை அணியாமல் சென்ற தோழரிடம் வீட்டிலிருந்த ஒரு பெண்

“சமச்சீர் புத்தகத்துக்காக போராடுனவங்க RSYFதானே , நீங்க யாரு? சிவப்பு சட்டையும் போடலை, பேட்ஜ்ம் இல்லை”

என்று கூறியதே அதற்கு சாட்சி.

நாட்டின் மிகப்பெரிய எதிரியான இந்த அரசை எதிர்க்க ஒரு ஆள் இருந்து விட்டால் அவர்கள் அளவில் எவ்வளவு சிறியவர்களாக இருந்தாலும் அரசு சும்மா இருக்குமா என்ன? தனது அடியாட்களான போலீசு – சிறை – நீதிமன்றத்தின் கொடுங்கரங்கள் மூலம் எப்படி போராடுகின்ற ஜனநாயக சக்திகளை, புரட்சிகர சக்திகளை ஒடுக்குகிறதோ அதுபோலவே மக்களுக்காக போராடும் புமாஇமு அமைப்பையும் ஒடுக்க நினைத்தது. வெளிப்படையாக போலீசு அந்த வேலையை செய்ய ஆரம்பித்த நாள் ஆகஸ்டு 25, 2012. முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிப்போம் என்ற கருத்தரங்கிற்கு சென்றுவிட்டு திரும்பிய புமாஇமு தோழர்கள் திவாகர், குமரேசன் இருவருக்கும் “மதுரவாயல், ஏரிக்கரைப் பகுதியில் இளைஞர்களுக்கிடையில் ஏற்பட்ட சண்டையில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், இதில் கொஞ்சமும் தொடர்பில்லாத பள்ளி மாணவர்களை போலீசு காவல் வாகனத்தில் ஏற்றுவதாகவும்” தகவல் கிடைக்க, உடனே அங்கு சென்றார்கள். ‘ஏன் பள்ளி மாணவர்களை கைது செய்கிறீர்கள்?’ என்று அவர்கள் கேட்டதுதான், தாமதமின்றி அங்கு இருந்த SI கோபிநாத்அதிகாரத்தை கேள்வி கேட்டதற்காக தாக்கியதும் பின்னர் ஆய்வாளர் ஆனந்த பாபு இருவரையும் கடத்திக்கொண்டு போய் வைத்ததும் அவர்களை மீட்க காவல் நிலையத்திற்கு சென்ற புமாஇமு ஆண், பெண் தோழர்கள், தாய்மார்கள் என அனைவரையும் போலீசு அடித்து துவம்சம் செய்ததும், அதில் 3 தோழர்கள் படுகாயமுற்றதும், 50 பேர்கள் வேலூர் சிறையில் 17 நாட்கள் இருந்ததும் அடுத்தடுத்து நடந்தன.

இரண்டு பேர் குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது, 50 பேர் சிறை என்றால் இனி புமாஇமு ஒழிந்து விடும் அதுமட்டுமல்ல இதே பாணியில் புரட்சிகர அமைப்புக்களையும் ஜனநாயக சக்திகளையும் ஒடுக்க மனப்பால் குடித்தது போலீசு. ஆனால் முன்னைவிட சமூகப்பிரச்சினை அனைத்திலும் விரைவாகவும் தீவிரமாகவும் புரட்சிகர அமைப்புக்கள் தலையிட்டன. பாராளுமன்றத்தில் வெடிகுண்டு வீசினால் மரண தண்டனை கிடைக்கும் என்று தெரிந்தே செயலில் ஈடுபட்ட பகத் சிங்கின் வாரிசுகளை பொய் வழக்குகள் என்ன செய்யும்?

போலீசுக்கோ கோபம் தலைக்கேறியது, போலீசுக்கு கோபம் வந்தால் என்ன செய்யுமோ அதை மீண்டும் செய்தது. பிரச்சாரம் செய்தவர்களை விசாரணைக்கு அழைத்து செல்வது, சுவரொட்டி ஒட்டியவர்களை கைது செய்வது,புமாஇமுவினர் பயங்கரவாதிகள் என்று பொய்களை புனைந்து முகவரியற்ற பிரசுரத்தை கொடுப்பது என்று அடுத்தடுத்த காட்சிகள் அரங்கேறின. பிள்ளையார் கோயிலில் நுழைந்து அங்கு முன்னணியாளர்களை கைது செய்வதன் மூலம் அமைப்பை ஒடுக்க தக்க தருணம் எதிர்பார்த்தது போலீசு.

இப்போதுதான் பிற்பாதி கதையில் ஹீரோ தாஸ் அறிமுகமாகிறார். இவரை மதுரவாயலில் தாஸ் என்றால் தெரியாது, லூசு தாஸ் என்றால் உடனே தெரிந்து விடும். ஊரில் யாருடனும் எதற்கும் சேராமல் எல்லோரும் வடக்கு பக்கம் நடந்தால் தாசும் அவரது குடும்பமும் தெற்கு பக்கம் நடப்பார்கள். அப்படிப்பட்ட தாஸ் குடும்பத்திற்கும் அருகில் வசித்த தோழர் ஒருவரின் குடும்பத்திற்கும் ஏற்பட்ட வாய்ச்சண்டையை போலீசு பயன்படுத்தியதும், தாஸ் இப்போது புமாஇமுவை ஒடுக்க கிடைத்த துருப்புச்சீட்டு. தாஸ் கூறியதை விட்டு சொந்தமாக FIRல் கதை எழுதி தோழர் நெடுஞ்செழியனை முதல் குற்றவாளியாகியது போலீசு. இந்த இந்த சினிமாவை இயக்கும் போலீசு தாஸ் மூலம் சொந்த குடிசைக்கு தீவைத்தது. அப்போதும் மக்கள் தாசுக்கு ஆதரவாக வரவில்லை. இறுதியில் ஒரு நாள் தாஸ், அவரது குடும்பம் திடீரென பகுதி இளைஞர்களைத் தாக்கிவிட்டு தங்களை பகுதி தோழர்கள் தாக்கியதாக புகார் கொடுத்தது.உடனே வாய்ப்புக்கு காத்திருந்த போலீசு முன்னணியாளர்கள் உட்பட 17 பேர்கள் மீது கொலைமுயற்சி வழக்கு பதிவு செய்தது.

17 பேர்களையும் தேடுதல் வேட்டை நடத்துவது என்ற பெயரில் தாஸ் வீட்டில் சில நாட்கள் தங்கி இருந்து செலவு வைத்து விட்டுப் போனது போலீசு. இப்படித்தான் பவஸ்டார் போல லூசு தாஸ் சூப்பர் ஹீரோ ஆனார். இனி நம்மை கேள்வி கேட்க ஆளில்லை என்று தெருவில் வருபவர்களை அடிப்பது, உடனே பொய்ப்புகார் கொடுப்பது என்று இருந்தார். பகுதித் தோழர்களை கண்டவுடன் காதில் போனை வைத்து “வந்துட்டாங்க” என்பார், உடனே போலீசு வந்து ஆயிரக்கணக்கில் செலவு வைத்து விட்டுப் போகும்.

17 பேர்களையும் போலீசு தேடிக்கொண்டிருக்க, அவர்களோ யாரும் நெருங்க முடியாத, பாதுகாப்பான இடத்தில் இருந்தார்கள். ஆம் ஒவ்வொருவரும் தங்கள் வீடுகளிலேயே இருந்தார்கள்.

போலீசு ஒரு தெருவில் வந்து அணிவகுப்பு நடத்திக்கொண்டு இருக்கும் போது அடுத்த தெருவில் தோழர்கள் மக்களிடம் பிரச்சாம் செய்து கொண்டு இருப்பார்கள். இது தெரிந்த போதும், அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை என்றூ தனது பதிவேட்டில் பதிவு செய்யும் போலீசு.

இந்த நிலையில் பகுதியில் சாலையை சீரமைப்பது, சாக்கடை, குப்பயை தூர் வாருவது என்ற கோரிக்கைகளை முன்வைத்து தெருமுனைக்கூட்டம் நடத்த அனுமதி கேட்கப்பட்டது. அடுத்த நாளே ஆய்வாளர், கவுன்சிலருடன் வந்து மாநகராட்சி ஊழியர்களுடன் வந்து சாக்கடையை தூர்வாரவும் குப்பைகளை சுத்தம் செய்யவும் ,சாலையை செப்பனிடவும் ஆரம்பித்தார். பகுதியில் இருந்து யார் எந்த விசயமாக புகார் கொடுத்தாலும் உடனே தாஸ் வரவழைக்கப்படுவார். இவருக்கு பிடிக்காதவர்கள் எனில் இவன் அமைப்புக்காரன் என்று அடையாளம் காட்டுவார், உடனே போலீசு நிலையத்தில் புகார் வாங்க மாட்டார்கள் “நீ அமைப்பில் இல்லை என்று 50 பேர்களிடம் கையெழுத்து வாங்கிட்டு வா” என்று போலீசு சொல்லும், அப்படி மானமிழக்க வேண்டிய அவசியமில்லை என்று இளைஞர்கள் புமாஇமுவினரிடம் கூறுவார்கள். இந்த போலீசு அடக்குமுறைக்கு எதிராக போராட வேண்டியதன் அவசியத்தை மதுரவாயல் மட்டுமல்ல சென்னை முழுவதும் பிரச்சாம செய்தார்கள், மதுரவாயல் பகுதியில் பொதுக்கூட்டம் நடத்தவும் அனுமதி கோரப்பட்டது.

“இவர்கள் நக்சல்பாரிகள், மாவோயிஸ்டுகள், பஸ் டேவை ஆதரிப்பவர்கள், பயங்கரவாதிகள்” என்று காரணங்களைக் கூறி அனுமதி மறுக்கப்பட்டது. இதனை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டதும் அடுத்த 2 மாதங்களில் பல பூச்சாண்டிகளை ஒவ்வொரு நிமிடத்திற்கும் போலீசு நீதிமன்றத்தில் கூறியதும் இறுதியில் போராடி பொதுக்கூட்ட அனுமதி வாங்கியவுடன் அருகிலேயே ஜெயாவின் பிறந்த நாள்விழாவிற்கு அனுமதி கொடுத்தது போலீசு. அதுமட்டுமல்ல நூறு காவல்துறையினரை பயபீதியூட்ட குவித்தாலும் இந்த அடக்குமுறைகளே வெற்றிப்பொதுக்கூட்டமாக மாற்றியது

தோழர் முகுந்தன்
இப்பொதுக்கூட்டத்திற்கு தலைமையேற்ற புஜதொமுவின் மாநிலத்தலைவர், தோழர் முகுந்தன் பொருளாதார கோரிக்கைகளுக்காக மட்டுமே பல தொழிற்சங்கங்கள் உள்ள நிலையில் தொழிலாளர்களின் பொருளாதார கோரிக்கைகளுக்காக மட்டுமல்ல சமூகத்தில் உள்ள பிரச்சினைகளைத்தீர்க்காமல் தொழிலாளி தன்னுடைய எந்த ஒரு பிரச்சினையையும் தீர்க்க முடியாது என்று தொழிலாளர்களை ஒரு வர்க்கமாக அணி திரட்டும் பணிதான் புஜதொமுவுடையது என்று கூறினார்.

“வெள்ளையன் ஆட்சிக்கு எதிராகப் போராடியவர்களுக்கு அன்று பயங்கரவாதிகள் என்று பட்டம் கொடுக்கப்பட்டது. அது போல முதலாளிகளுக்கான இந்த அரசை எதிர்த்துப் போராடுபவர்களுக்கு தீவிரவாதி என்ற பெயரை போலீசும் அரசும் வைக்கிறது. அதை மக்கள் ஒருபோதும் மக்கள் ஏற்பதில்லை. புதிய ஜனநாயகப் புரட்சியை நடத்தி சமூகத்தை மாற்றும் போதுதான் முதலாளித்துவ கொடுமைகளுக்கு முடிவு கட்டமுடியும்” என்று தனது கருத்தைப் பதியவைத்தார்.

116-madhuravoyal அடுத்ததாக உரையாற்றிய சென்னைப்பகுதியின் புமாஇமு செயலர் தோழர் கார்த்திகேயன், கடந்த ஆகஸ்ட் 25 முதல் தற்போதைய சம்பவங்களை விளக்கிவிட்டு “குண்டாஸ் வழக்கு, பொதுக்கூட்ட வழக்கிற்கு நாங்கள் செய்த செலவை விட தாஸ் செய்த செலவு தான் அதிகம்” என்றும் தற்போதும் ஊரில் யாரும் மதிக்காத நபராக தாஸ் இருப்பதையும் கூறி இப்படி போலீசுக்கு உளவு வேலைகள் செய்வோரை போலீசு பயன்படுத்திவிட்டு தானே அழித்த சில சம்பவங்களையும் எடுத்துக்காட்டினார்.

புமாஇமு மீது பொய்ப்பிரசுரம் தயாரித்து முகவரி இல்லாமல் இருந்தவுடனே அது போலீசு வேலைதான் என்று மக்கள் கூறியதையும், 2000ம் ஆண்டு முதல் மக்களுடைய பிரச்சினைகளை எப்படித் தீர்க்க முடியும் என்பதை நடைமுறையில் உணர்த்தியதாலேதான் மக்கள் தங்களின் அரணாக இருந்தார்கள் என்றும் பொய் வழக்குகளும் அடக்குமுறைகளும் மேலும் மேலும் மக்களுடன் நெருக்கமாக்கியே உள்ளன என்றும் மறுகாலனியத்தாக்குதலுக்கு எதிராக போராடுபவர்கள் நக்சல்பாரிகள் மட்டும்தான் என்பதை போலீசின் பொய்ப்பிரச்சாரமே உறுதிபடுத்தியுள்ளது
என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார் கார்த்திகேயன்.

கண்டன உரையாற்றிய மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜூ
சட்டத்தை நிலை நாட்டுவதாக போலீசு கூறுகிறது, உண்மையாகவே சட்டத்தை நிலை நாட்ட வேண்டுமானால் எந்த ஒரு அரசியல் கட்சி நபரும் வெளியில் இருக்க முடியாது. ஆனால் போலீசு, உரிமைகளுக்காகப் போராடும் உழைக்கும் மக்கள் மீது பொய்வழக்குப் போடுகிறது, முதலாளிகள் மீது அல்ல. காவல்நிலையங்கள் இருக்கும் வரை பொய் வழக்குகள் இருந்தே தீரும்.ஏனெனில் காவல் துறை மக்களை ஒடுக்குவதற்காகவே உருவாக்கப்பட்டது. அதனால்தான் அடிப்பதற்குஎன்றே தனிப்பிரிவு, எண்கவுண்டருக்கென்றே தனிப்பிரிவு என்று போலீசுத்துறை ஆழப்படுத்துப்படுகிறது.”

தோழர் ராஜூ

“தண்ணீர் இல்லை, சாலை வசதி இல்லை என்று கேட்பது சட்டத்திற்கு எதிரானதா? மக்களுக்கு அடிப்படை உரிமைகளை செய்துதர வேண்டிய கடமை அரசுக்கு உள்ளதா இல்லையா?” என்று கேள்விகள் கேட்டு, ஒருவரை எந்த காரணத்திற்காக கைது செய்கிறோம் என்பதை தெரிவிக்க வேண்டிய கடமை காவல்துறைக்கு உள்ளது என்று சட்டம் சொல்கிறது. ஆனால் காவல் துறையை கேள்வி கேட்டதற்காக குண்டர் தடுப்புச்சட்டம் என்றால் ”சட்டப்படி நீங்கள் நடந்து கொள்ளுங்கள்” என்று போலீசு கூறுவதற்கு தகுதி இல்லை. கட்டப்பஞ்சாயத்து, வழிப்பறி, மாமூல், கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம் என்று குற்றவாளிகளாக நிரம்பி வழியும் இந்த போலீசுத்துறையை மறு சீரமைக்க எத்தனை கமிஷன்கள் போட்டாலும் அது நடைமுறைக்கு வராததற்கு காரணம் இந்தத்துறையே முதலாளிகளின் லாப நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டது.

போலீசு மட்டுமல்ல அரசின் உறுப்புக்களான சட்டம் – போலீசு – நீதி மன்றம் என எதுவும் மக்களுக்காக இல்லாமல் முதலாளிகள் நாட்டை கொள்ளையடிப்பதற்காக இருக்கின்றன. அதனால்தான் நாட்டையே சுரண்டி கொழுக்கும் எந்த முதலாளியின் மீதும் சட்டம் பாய்வதில்லை. இந்த கேவலமான சட்டத்தை, போலீசை, நீதிமன்றத்தை எதிர்ப்பதையும் அதனால் சிறைக்கு செல்வதையும் பெருமையாகக் கருதவேண்டும். அப்படி ஒவ்வொருவரும் சட்டத்தை எதிர்த்து ஒரு முறையேனும் சிறைக்கு செல்லும் போதுதான் இந்த அரசின் மீதான பயம் உடைக்கப்படும்.

தினமணி பத்திரிக்கையே இன்று மறுகாலனியாதிக்கம் என்று எழுதும் அளவுக்கு மறுகாலனியாக்கத் தாக்குதல்கள் சுழன்றுசுழன்று அடிக்கும் இந்த வேளையில் அதை காட் ஒப்பந்தம் வந்த காலம் முதற்கொண்டு களத்திலிறங்கி போராடிவரும் புரட்சிகர அமைப்புக்களே புதிய ஜனநாயகப்புரட்சியை சாதிக்கும் என்றும் அரசின் ஒடுக்குமுறைக்கு எதிராகவும் போலீசின் பொய்வழக்குகளுக்கு எதிராகவும் நமது தோழர்களின் தியாகத்தையும் வீரத்தையும் வரித்துக்கொண்டு முன்னேறிச்செல்வோம்” என்று தனது உரையை நிறைவு செய்தார்.

172-madhuravoyal
கடந்த ஆறு மாதங்களாக குண்டர் தடுப்புச்சட்டத்தில் சிறையிலிருந்த திவாகர், குமரேசன் ஆகிய இரு தோழர்களும் மேடையில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.

போலீசின் அடக்குமுறையை அம்பலப்படுத்தியும் மறுகாலனியத்தாக்குதலுக்கு எதிராக போராட வேண்டியதை வலியுறுத்தியும் மாணவர்கள் – இளைஞர்கள் நுகர்வு மோகத்தை கைவிட்டு சமூகத்திற்காக போராடுவதே ’கெத்’ என்பதை பதிய வைக்கும் வகையில் ம.க.இ.க மய்யக் கலைக் குழுவின் புரட்சிகர கலை நிகழ்ச்சி நடந்தது.

மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், தொழிலாளர்கள், உழைக்கும் மக்கள் என 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த பொதுக்கூட்டம் , அடக்குமுறைகளுக்கு எதிராக எப்படி போராட வேண்டுமென்பதையும், அரசு பாசிசமயமாகுவதை முறியடிக்க புரட்சிகர அமைப்புக்களே ஒரே மாற்று என்பதை பதிய வைக்கும் விதமாக இருந்தது.

 1. வாழ்த்துக்கள் தோழர்களே! வென்றே தீருவோம்! வேறேதும் முடிவில்லை!

 2. சட்டத்தை நிலை நாட்டுவதாக போலீசு கூறுகிறது, உண்மையாகவே சட்டத்தை நிலை நாட்ட வேண்டுமானால் எந்த ஒரு அரசியல் கட்சி நபரும் வெளியில் இருக்க முடியாது. ஆனால் போலீசு, உரிமைகளுக்காகப் போராடும் உழைக்கும் மக்கள் மீது பொய்வழக்குப் போடுகிறது, முதலாளிகள் மீது அல்ல. காவல்நிலையங்கள் இருக்கும் வரை பொய் வழக்குகள் இருந்தே தீரும்.ஏனெனில் காவல் துறை மக்களை ஒடுக்குவதற்காகவே உருவாக்கப்பட்டது. அதனால்தான் அடிப்பதற்குஎன்றே தனிப்பிரிவு, எண்கவுண்டருக்கென்றே தனிப்பிரிவு என்று போலீசுத்துறை ஆழப்படுத்துப்படுகிறது.”

  • போஸ்டர் கிழிப்பதெற்கென்று ஒரு தனிப்பிரிவு இருக்கு தோழர்!

 3. “அக்காள் – தம்பி, அப்பா- மகள் என அனைவருமே அருகருகில் இருட்டினில் உட்கார்ந்து கொண்டு மலம் கழிக்க வேண்டிய பல்லாயிரக்கணக்கான ஊர்களைப்போலவே சபிக்கப்பட்ட பகுதிதான் இதுவும். இந்த அவல நிலைக்காக ஓட்டு கேட்டு வரும் ஓட்டு கட்சிகளும் அரசும் இம்மியளவும் அவமானமாக உணரவில்லை. இதனை தட்டிக்கேட்காமல் இருப்பதுதான் அவமானம் என்று பதிய வைத்தோம் மக்களிடம்,…”

  இப்படித்தான் திருச்சியிலும் கக்கூசுக்காக ஒரு போராட்டம் நடந்தது. நகராட்சியே ஆடிப்போனது.

  “நகராட்சி கழிப்பிடங்கள் இருக்கத்தான் செய்கின்றன. உள்ளே செல்வதற்கே நீங்கள் நடை பயில வேண்டும் ஆங்காங்கே குவிந்து கிடக்கும் மலத்தில் கால் வைக்காமல், வழிந்தோடும் மலம் -மூத்திரத்தால் வழுக்கி விழாமல் செல்வது அவ்வளவு எளிதானதா என்ன? சில நேரங்களில் செல்லும் பாதையில் கால்வைக்கக்கூட முடியாது. மூடியிருக்கும் ‘செப்டிக் டேங்க்’ மீது போடப்பட்டுள்ள ‘சிமெண்ட் சிலாப்’ வழியாகச் செல்ல முயன்றால் அரைகுறையாக உடைந்து ஆ….வென வாயைப் பிளந்து நிற்கும் அடுத்த ‘சிலாப்பின்’ ஓட்டையினூடே பூகம்ப பேரழிவின் சகதி போல குவிந்து கிடக்கும் மலக் கழிவை பாக்காமல் செல்ல முயன்றால் உடைந்திருக்கும் அடுத்த ‘சிலாப்’ ஓட்டைக்குள் கால் மாட்டிக் கொண்டு மல ‘அபிஷேகம் ஜோராய்’ நடக்கும். இதையெல்லாம் மீறி ‘கக்கூசுக்குள்’ நுழைந்து விட்டாலும் உங்களது மானத்தைக் கப்பலேற்ற வேண்டியதுதான். கதவு இருக்காதே.. வேறென்ன செய்ய முடியும்? கதவு இல்லை என்று திரும்பவா முடியும்? கால் வைக்கவே இடமில்லை. கையில் உள்ள சொம்பை எங்கே வைப்பது? அதை ஒரு கையில் பிடித்துக் கொண்டே இருக்கவேண்டும். வெளிக்குப் போகத்தான் எத்தனை சூரத்தனங்கள்.

  இந்தக் கன்றாவிகளைக் கண்டு மனுமேல் மனுக் கொடுத்தும் செவி மடுக்காத நகராட்சியை உலுக்கியது நகராட்சி வாசலில் மலம் கழிக்கும் போராட்டம். இது திருச்சி தில்லை நகர், காந்திபுரம் ‘கக்கூசுக்காக’ சில ஆண்டுகளுக்கு முன்பு ம.க.இ.க வினர் நடத்திய போராட்டம். மலம் கழிக்க அணிதிரள்வதற்கு முன்பாகவே ஒரு பெரும் படை நகராட்சி அலுவலகத்திலிருந்து பறந்து வந்தது. வந்த வேகத்தில் அலசி அள்ளிச் சென்றது மலக்குவியல்களை. அதிரடிப் போராட்டங்களை அன்றாடமா நடத்த முடியும்?”

  கக்கூசுக்கு மக்கள் படும் பாட்டை கொஞ்சம் படித்துப்பாருங்கள்.
  மலத்தைக் கவ்வப் பன்றிகள் படையெடுப்பு!
  http://hooraan.blogspot.in/2011/03/blog-post_19.html

 4. தலைப்பு தேடி கூட்டம் நடத்தும் தருத்தலைகலுக்கு மத்தீயில் போராட்டத்தையே தலைப்பாக வைத்து காவல் ரவுடிகலுக்கு பாடம் கர்பித்த புமாஇமு போராலிகலுக்கு வாழ்த்தும் வரவேர்ப்பும் என்ட்ரும் உன்டு…

 5. வாழ்த்துகள், தொடரட்டும் தங்களது நற்பணி.
  வினவிற்கு ஒரு சிறிய வேண்டுகோள்:
  போராட்ட முறையை விட இத்தகைய நற்பணி வகை உதவிகள் மக்களின் இதயங்களில் உங்களின் கருத்துகளை எளிதில் கொண்டு செல்லும்.
  எல்லா பிரச்சினைக்கும் ஒரு போராட்ட முறை தீர்வு இருப்பதை போல ஆக்கபூர்வமான தீர்வும் இருக்கும். அதனை நாம் தான் கண்டுபிடிக்க வேண்டும்.
  உதாரணத்திற்கு இன, மத வேறுபாடுகளை ஒழிப்பதற்கு பிள்ளைகளுக்கு நல்ல கல்வி முறையை கற்று தர என்ன வழி என்று நாம் யோசிக்கலாம். இங்கு கல்வி என நான் குறிப்பிடுவது புத்தக கல்வி அல்ல, படிக்கும் பிள்ளைகளை மனப்பாடம் செய்யும் இயந்திரம் போல அல்லாமல் பகுத்தறிவுடன் யோசித்து ஆராயக்கூடிய அறிவை நாம் புகட்ட வேண்டும். மாணவர்களிடம் உணவு முதற்கொண்டு அனைத்தையும் நம் நண்பர்களுடன் பகிர்ந்து பழக கற்றுக்கொடுக்க வேண்டும். நம்மை விட உயர்ந்தவர் யாருமில்லை, நம்மை விட தாழ்ந்தவர் யாரும் இல்லை என்ற கோட்பாட்டினையும் அவர்களுக்கு தெளிவாக உணர்த்த வேண்டும். இந்த கருத்தை குழந்தைகள், மாணவர்களின் மத்தியில் பெற்றோரும் ஆசிரியர்களும் பதிய வைத்தால், அவர்கள் வளர்ந்த பின் சாதி வகையில் ஒருவரை கீழ்த்தரமாக பார்ப்பது, ஏழை பணக்காரர் என அனைவரையும் ஒரே சமமாக பாவிப்பது போன்ற குணங்களை வளர்க்க முடியும். பல சமயம் தீவிரவாதத்தின் வேர், போதிய கல்வியறிவு (புத்தக அறிவு அல்ல) இல்லாததாலும், ஆட்டு மந்தை புத்தியினாலும் தான் ஏற்படுகிறது. தெருவிளக்கு எரியவில்லை, சாக்கடை நீர் பிரச்சினைகளுக்கு மாநகராட்சியின் வலைதலத்திலோ, அல்லது மற்ற வகையிலோ புகார் செய்வதை பிள்ளைகளுக்கு தெரியப்படுத்த வேண்டும். அவர்களை சிறு வயது முதலே அநியாயத்தை கண்டு அடங்கி போகாமல் தைரியமாக தன் கருத்தினை பதிவு செய்ய ஊக்குவிக்க வேண்டும். எல்லா பிரச்சினைக்கும் அரசையே எதிர்பார்க்காமல் பொதுமக்களின் உதவியோடு தீர்வு காண அவர்களை யோசிக்க வைக்க வேண்டும். எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு என கற்று கொடுக்க வேண்டும். அப்போது தான் சாமியார்கள், சாதி தலைவர்கள், கட்சி தலைவர்கள் போன்றோர் மக்களை ஆட்டுமந்தையாக பாவித்து வசியம் செய்வதை தடுக்க முடியும். சிறு துளி பெருவெள்ளம். ஒவ்வொரு மனிதராக மதமாற்றம் செய்வது போல் மனமாற்றம் செய்தால் பிள்ளைகள் பகுத்தறிவுடன் யோசித்து பழகி பின்னர் பெரியவராகையில் ஒரு நல்ல மனிதனாக வருவார்கள். வாழ்த்துகள் தோழர்களே, தங்கள் பணி மேன்மேலும் தொடர என் வாழ்த்துகள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க