Thursday, August 11, 2022
முகப்பு போலி ஜனநாயகம் அதிகார வர்க்கம் 2ஜி ஊழல்: இதுதாண்டா சி.பி.ஐ!

2ஜி ஊழல்: இதுதாண்டா சி.பி.ஐ!

-

2ஜி அலைக்கற்றை வழக்கில் சி.பி.ஐ.யின் அரசு வழக்கறிஞர் ஏ.கே.சிங், குற்றம் சாட்டப்பட்ட யூனிடெக் நிர்வாக இயக்குநர் சஞ்சய் சந்திராவுடன் ‘வழக்கை எப்படி நீர்த்துப் போகச் செய்வது’ பற்றி பேசிய உரையாடல் பதிவு உண்மையானதுதான் என்று சி.பி.ஐ. உறுதி செய்திருக்கிறது.

’13 நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட 122 உரிமங்களில் 85 விதிமுறைகளுக்கு புறம்பாக வழங்கப்பட்டவை’ என்று தலைமை தணிக்கை அதிகாரியின் டிசம்பர் 2010 அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் விசாரணை, உரிமங்கள் ரத்து, சிறப்பு சி.பி.ஐ. நீதிமன்றத்தில் தினசரி வழக்காடல் என்று 2ஜி ஊழல் மீதான நடவடிக்கைகள் தொடர்ந்தன. மொத்தத்தில் இந்த வழக்கு நீர்த்துப் போகும் வண்ணம் அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது.

அரசுத் தரப்பில் வாதாடுவது போல நடித்து ‘கார்ப்பரேட்டு குற்றவாளிகளுக்கு உதவி செய்வதால் தனக்கு என்ன ஆதாயம் கிடைக்கும்’ என்பதில் மட்டுமே ஏ கே சிங் அக்கறை காட்டினார் என்பதும் இப்போது வெளியாகியுள்ள இந்த தொலைபேசி உரையாடலில் தெரிய வந்திருக்கிறது.

சஞ்சய் சந்திரா
சஞ்சய் சந்திரா

சிஏஜி அறிக்கையின் படி, “2007ம் ஆண்டு ஆகஸ்டு-செப்டம்பர் மாதங்களில் யூனிடெக் குழுமத்தைச் சேர்ந்த 8 நிறுவனங்கள் தலா ரூ 5 லட்சம் பங்கு மூலதனத்துடன் பதிவு செய்யப்பட்டன. இந்த 8 நிறுவனங்களும் செப்டம்பர் 20, 2007 அன்று மதியம் 2 மணி முதல் 5 மணி வரை நடந்த அதனதன் சிறப்பு பங்குதாரர் கூட்டத்தில் பங்கு மூலதனத்தின் மதிப்பை உயர்த்துவதற்கான தீர்மானங்களை நிறைவேற்றின. அதற்கான முத்திரைத் தீர்வை அக்டோபர் 3ம் தேதிதான் கட்டப்பட்டது.  மூலதனம் அதிகரிக்கப்பட்டதற்கான பதிவு சான்றிதழ்களை பதிவாளர் துறை அக்டோபர் 8ம் தேதிக்குப் பிறகுதான் வழங்கியிருந்தது.

எனவே, செப்டம்பர் 24ம் தேதி விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் போது குறிப்பிடப்பட்ட பங்கு மூலதன மதிப்பும் நிறுவனங்களின் தணிக்கை அதிகாரிகள் கொடுத்த சான்றிதழ்களும் பொய்யானவை, கற்பனையானவை”.

யூனிடெக் இன்ப்ரா
யூனிடெக் பில்டர்ஸ்&எஸ்டேட்ஸ்
அசாரே பிராப்பர்டீஸ்
ஹட்சன் பிராப்பர்டீஸ்
நாஹன் பிராப்பர்டீஸ்
அடோனிஸ் பிராப்பர்டீஸ்
அஸ்கா பிராப்பர்டீஸ்
வோல்கா பிராப்பர்டீஸ்

என்று விதவிதமாக பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த நிறுவனங்கள், விண்ணப்பித்திருந்த 22 உரிமங்களுக்கு தேவையான குறைந்த பட்ச பங்கு மூலதனம் ரூ 138 கோடி. ஆனால் விண்ணப்பித்த நாள் அன்று எட்டு நிறுவனங்களுக்கும் ரூ 30 லட்சம் மட்டுமே மூலதனம் இருந்தது.

விண்ணப்பங்களை 30 நாட்களுக்குள் பரிசீலித்து முடிவு எடுக்க வேண்டிய தொலைதொடர்புத் துறை அதிகாரிகள் 3-9 மாதங்களுக்கும் அதிகமாக இழுத்தடித்தும் தேவையான சரிபார்த்தலை செய்யவில்லை. வேறு 100 விண்ணப்பங்களை நிராகரித்த தொலைத்தொடர்புத் துறையின் துணை டைரக்டர் ஜெனரல் ஸ்ரீவத்சாவும் அவரது குழுவும் யூனிடெக் உள்ளிட்ட முறையற்ற 85 விண்ணப்பங்களுக்கு உரிமம் வழங்குவதற்கான ஒப்புதலை வழங்கினர். விண்ணப்பங்கள் விதிமுறைகளுக்கு புறம்பானவை என்று இன்னொரு பிரிவு துணை டைரக்டர் ஜெனரல் பி பி சிங் அனுப்பிய எச்சரிக்கையையும் மீறி இந்த ஒப்புதல்கள் வழங்கப்பட்டன.

‘கிரிமினல் சதி வழக்கில் அனைத்து அம்சங்களையும் விசாரிக்க வேண்டும்’ என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கேற்ப ஸ்ரீவத்சவ் ஒரு குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், சி.பி.ஐ. அவரை அப்ரூவராக ஏற்றுக் கொண்டு அரசுத் தரப்பு சாட்சியாக சேர்த்திருந்தது.

சி.பி.ஐ. நட்சத்திர சாட்சியமாக ஏற்றுக் கொண்டிருந்த இந்த ஸ்ரீவத்சாவைப் பற்றிதான் ஏ கே சிங் சஞ்சய் சந்திராவிடம் பேசியிருக்கிறார். ஸ்ரீவத்சவ் சொல்லும் சொல்லும் சாட்சியத்தின் மூலம்தான் வழக்கை தூள் தூளாக்கப் போவதாக உறுதியளிக்கிறார்.

‘2012 செப்டம்பர்-அக்டோபர் வாக்கில் வழக்கு தொடர்பான சி.பி.ஐ.யின் அணுகுமுறையை சஞ்சய் சந்திராவிடம் ஏ.கே.சிங் பகிர்ந்து கொள்ளும் உரையாடல் அறையில் இருந்த வேறு ஒருவரால் பதிவு செய்யப்பட்டிருக்கலாம்’ என்று இப்போது சி.பி.ஐ. சொல்கிறது. ‘நீதிமன்றத்துக்கு வெளியில் சி.பி.ஐ. வழக்கறிஞரை சந்தித்ததே இல்லை’ என்றும் ‘பதிவு செய்யப்பட்ட குரல் போலியானது’ என்றும் சஞ்சய் சந்திரா முதலில் சாதித்தார். இப்போது ‘டேப் பதிவு உண்மையானதுதான்’ என்று சி.பி.ஐ. உறுதி செய்திருக்கிறது.

வழக்கில் எதிர்த்தரப்புக்கு பாதகமாக (அரசுத் தரப்புக்கு சாதகமாக) நடந்து கொள்ளும் சாஹித் பல்வாவைப் பற்றி சஞ்சய் சந்திராவிடம் புகார் சொல்கிறார் சிங்.

“சாஹித் பல்வா வழக்கை டேமேஜ் செய்கிறார். கடவுள் அவருக்கு நல்ல புத்தியை கொடுக்கட்டும். தனக்குத் தானே சுருக்கு தயாரிக்கும் அவர் மற்றவர்களையும் டேமேஜ் செய்கிறார். ஒண்ணும் தெரியல…. அவர்கிட்ட ஆயிரம் தடவை சொல்லியாச்சு….!” என்கிறார் சிங்.

சந்திரா, “முன்ன விட அவர் இப்போது கொஞ்சம் பரவாயில்லைதான்” என்று சமாதானம் சொல்கிறார்.

சந்திரா உறுதி அளித்த பிறகும் ஏ கே சிங்குக்கு பல்வா மீது நம்பிக்கை வரவில்லை. அவர் தனது ‘வாடிக்கையாளர்களுக்கு’ சேதம் விளைவிப்பார் என்று பயப்படுகிறார்.

பல்வா கடுப்பாக இருந்ததற்கு காரணம் இருக்கிறது. 2011 ஏப்ரல் 2ம் தேதியிட்ட சி.பி.ஐ.யின் குற்றப் பத்திரிகையில் யூனிடெக் சந்திரா மீதும் ஸ்வானின் பல்வா மீதும்

  1. இறுதி தேதி குறித்த விசாரணை
  2. முதலில் வந்தவருக்கு முன்னுரிமை என்ற கொள்கை மீறல்
  3. இரட்டை தொழில்நுட்ப ஒப்புதல்களும் அலைக்கற்றை ஒதுக்கீடும்
  4. நிறுவனங்களின் தகுதி
  5. நுழைவுக் கட்டணத்தை உயர்த்தாமல் அரசு நிதித் துறையை ஏமாற்றியது

ஆகிய 5 வகை குற்றங்கள் சாட்டப்பட்டிருந்தன. ஆனால், பல்வா மீது குற்றவியல் சட்டத்தின் 420 (ஏமாற்று, நேர்மையின்மையின் மூலம் சொத்தை பெறுவது – 7 ஆண்டு சிறைத் தண்டனை), 468 (ஏமாற்றுவதற்காக போலி ஆவணங்களை தயாரிப்பது – 7 ஆண்டுகள் வரை சிறை), 471 (போலி ஆவணம் ஒன்றை பயன்படுத்துவது) ஆகிய பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. சந்திராவோ 420வது பிரிவின் கீழ் மட்டும் குற்றம் சாட்டப்பட்டிருந்தார். .

சஞ்சய் சந்திராவுடனான உரையாடலில் ஏ.கே.சிங் இன்னொரு முக்கிய தகவலையும் தெரிவிக்கிறார். ஸ்ரீவத்சவின் சாட்சியத்துக்குப் பிறகு பழைய தீர்ப்பு ஒன்றை சுட்டிக் காட்டினால் அது மற்ற எல்லா அரசு தரப்பு சாட்சியங்களையும் செல்லாததாக்கி விடுவதோடு வழக்கையே உடைத்து விடும் என்று உறுதியளிக்கிறார்.

“தொலை தொடர்பு துறையை பொறுத்த வரை விண்ணப்பிப்பதற்கு முன்பு பங்குதாரர்கள் ஒப்புதல் அளிப்பது போதுமானது என்று ஸ்ரீவத்சவ் சாட்சியளிப்பார். கம்பூஜின் (பதிவாளர் துறை அதிகாரி) கருத்துக்கள் தொலைதொடர்புத் துறையை கட்டுப்படுத்தாது.” என்று சொல்லி விட்டு

“அது தொடர்பாக ஒரு அட்டகாசமான தீர்ப்பு என்னிடம் இருக்கிறது. வேறு யார்கிட்டேயும் அது இருக்க முடியாது. ‘ஒரு வழிமுறையை உருவாக்கிய அரசுத் துறை அதற்கு 10 வேறுபட்ட விதங்களில் விளக்கம் சொல்லலாம்’ என்கிறது அந்த தீர்ப்பு. தொலைதொடர்புத் துறையின் விளக்கத்தை அதன் சாட்சியமே சொல்லும்போது அதுதான் செல்லுபடியாகும். இதே போன்ற ஒரு வழக்கை நான் உத்திர பிரதேசத்தில் கையாண்டிருக்கிறேன். ஆனா, எதிர்த் தரப்பு வழக்கறிஞர்களில் யாரும் இந்த தீர்ப்பை சுட்டிக் காட்ட முடியவில்லை. அந்த வழக்கு இந்தியன் ஆயிலின் பெட்ரோல் பம்ப் குறித்தது.”

இதன் மூலம் ‘நான்தான் உங்களுக்கு நல்லா உதவி செய்வேன். உங்க ஆளுங்களை விட எனக்கு நெறைய சட்டம் தெரியும். அதனால் என்னை சரியான முறையில் கவனிச்சுக்கணும்’ என்று தனது எஜமானர் சஞ்சய் சந்திராவிடம் நிறுவிக் கொள்கிறார் ஏ கே சிங்.

ரஞ்சித் சின்ஹா
சி.பி.ஐ. இயக்குனர் ரஞ்சித் சின்ஹா

‘ஏ.கே.சிங் இந்த வழக்கின் முதன்மை வழக்கறிஞர் இல்லை, இந்த தகவல் வெளியானதும் அவர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு விட்டார்’ என்று அரசுத் தரப்பு அடுத்த காட்சியை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது. ஆனால், கார்ப்பரேட்டுகள், அரசு அதிகாரிகள், நீதித் துறை என்று அனைத்துத் தரப்பினரும் சேர்ந்து மக்களை முட்டாள் ஆக்கும் நாடகம்தான் இந்த 2G வழக்கு என்பது நாளுக்கு நாள் தெளிவாகி வருகிறது.

யூனிடெக்கைத் தவிர்த்து அதே குற்றம் சாட்டப்பட்ட மற்ற நிறுவனங்கள் மீது சி.பி.ஐ. குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யவில்லை.

  • 21 உரிமங்களுக்கு விண்ணப்பித்திருந்த லூப் டெலிகாம் ரூ 128 கோடி மூலதனத்துக்கு பதிலாக ரூ 5.2 கோடி மட்டுமே வைத்திருந்தது.
  • இப்போது எடில்சாட் நிறுவனத்துன் இணைக்கப்பட்டு விட்ட அல்லையன்ஸ் இன்ப்ராடெக் 2 உரிமங்களுக்கு விண்ணப்பித்திருந்தது. அதற்குத் தேவையான ரூ 8 கோடி மூலதனத்துக்கு பதிலாக வெறும் ரூ 5 லட்சம் மட்டுமே அதன் பங்கு மூலதனமாக இருந்தது.
  • வீடியோகான் நிறுவனத்துக்கு சொந்தமான டேட்டாகாம் என்ற நிறுவனம் ரூ 1 லட்சம் மட்டுமே பங்கு மூலதனம் வைத்திருந்தும் ரூ 138 கோடி பங்கு மூலதனம் தேவைப்படும் 21 உரிமங்களுக்கு விண்ணப்பித்திருந்தது.
  • எஸ்டெல் என்ற நிறுவனம் உரிமங்களுக்கு விண்ணப்பித்த போது ரூ 10 லட்சம் மட்டுமே பங்கு மூலதனம் கொண்டிருந்தது. அதற்கு ரூ 18 கோடி மூலதனம் தேவைப்படும் 6 உரிமங்கள் வழங்கப்பட்டன.

லூப், அல்லையன்ஸ், டேட்டாகாம், எஸ்டெல் நிறுவனங்களுக்கு எதிராக சி.பி.ஐ. எந்த குற்றச்சாட்டையும் பதிவு செய்யாமல் விட்டிருக்கிறது.

சி.பி.ஐ.யின் பலவீனமான குற்றப் பத்திரிகை, தம் தரப்புக்கு துரோகமிழைக்கும் அரசு வழக்கறிஞர்கள், சாட்சிகள் என்று அரசுத் தரப்பு நொறுங்கிக் கொண்டிருக்கிறது.

‘ஊழலை ஒழிப்பதற்கான உறுதியான நடவடிக்கைகள் தொடங்கி விட்டன. நாட்டின் உச்ச்ச நீதிமன்றமே தினமும் கண்காணித்து, பத்திரிகைகள் தினமும் உற்று கவனித்து மக்களின் கவனிப்பில் வழக்கு நடத்தப்படுகிறது. யாரும் தப்பிக்க முடியாது. இனிமேல் யாருக்கும் இது போன்று ஊழல் செய்ய தைரியம் வராத அளவுக்கு இது ஒரு உதாரணமாக அமையும்’ என்றெல்லாம் விதந்தோதப்பட்ட 2ஜி அலைக்கற்றை வழக்கின் லட்சணம் இப்படி பல்லிளிக்கிறது.

மேலும் படிக்க
2G scam, CBI says Sanjay Chandra, A K Sing tape is genuine
More skeletons tumble out of leaked 2G call transcripts
Under supreme court’s nose conspiracy hatched to destroy 2G case

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க