Thursday, September 19, 2019
முகப்பு போலி ஜனநாயகம் அதிகார வர்க்கம் ஆணாதிக்கத்திற்கு வக்காலத்து வாங்கும் உச்சநீதிமன்றம் !

ஆணாதிக்கத்திற்கு வக்காலத்து வாங்கும் உச்சநீதிமன்றம் !

-

ந்தக் குழந்தையை வேண்டுமென்றே திட்டமிட்டு கடத்தியிருக்கிறான் குற்றவாளி. அந்த பெற்றோருக்கு 3 பெண் குழந்தைகளும் 1 ஆண் குழந்தையும் இருந்திருக்கின்றனர். ஒரே மகனை கடத்துவதன் மூலம் பெற்றோரின் மனதில் அதிக பட்ச பயத்தை உருவாக்க நினைத்திருக்கிறான். ஒரே ஆண் வாரிசை இழந்தது அவர்களை கடுமையாக பாதிக்கிறது. பரம்பரையை தொடர்வதற்கும் வயதான காலத்தில் பார்த்துக் கொள்வதற்குமான ஆண் குழந்தையை இழந்ததால் பெற்றோருக்கு ஏற்பட்ட மன உளைச்சல் அளவிட முடியாதது”

பணத்துக்காக 7 வயது குழந்தையை கடத்தி கொலை செய்த ஒருவனுக்கு தண்டனை வழங்கும் தீர்ப்பில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.உச்சநீதி மன்றம்

கொல்லப்பட்ட குழந்தை பெற்றோரின் ஒரே ஆண் வாரிசு என்பதை அடிக் கோடிட்டு காட்டியது ஏதோ படிக்காத, குடுமி வைத்த கிராமத்து நாட்டாமையின் தீர்ப்பு அல்ல. சட்டங்களை கற்று, வழக்கறிஞராக பல ஆண்டுகளாக அனுபவம் பெற்று, பல்வேறு நீதிமன்றங்களில் நீதிபதியாக பொறுப்பு வகித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள்தான் இப்படி தீர்ப்பு எழுதியிருக்கின்றனர்.

கற்குடல் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் விருதாச்சலத்திலுள்ள சக்தி மெட்ரிகுலேஷன் என்ற பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வந்தான். தினமும் கிராமத்திலிருந்து பள்ளிக்கு வேனில் போய் வருவான்.

2009ம் ஆண்டு ஜூலை 27ம் தேதி வழக்கம் போல பள்ளிக்குச் சென்ற சுரேஷ் வீட்டுக்கு திரும்பவே இல்லை. குடும்பத்துக்கு தெரிந்த நபரான சுந்தரராஜன் என்பவன், அந்தக் குழந்தையை கடத்தி 5 லட்சம் பணம் கேட்டு மிரட்டியிருக்கிறான். பணம் கிடைக்காததால் ஆத்திரமடைந்து சுரேஷைக் கொன்று, சாக்கு மூட்டையில் சடலத்தை வைத்து, மீரான்குளம் குளத்தில் வீசி விட்டிருக்கிறான்.

கொலையாளி கிரிமினல் வழக்கு தொடரப்பட்டு கடலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் இரண்டு ஆண்டுகள் வழக்கு நடந்தது. ‘ஈவு இரக்கமற்ற முறையில் நடந்து கொண்ட கொலையாளியின் செயல், மன்னிக்க முடியாத ஒன்று’ என்றும், ‘கடுமையான தண்டனைகள் கொடுப்பதுதான், கடத்தல் கொலைகளில் ஈடுபடும் கிரிமினல்களுக்கு பாடமாக அமையும்’ என்றும் கொலையாளிக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது.

செப்டம்பர் 2010ல் உயர்நீதி மன்றம் மரண தண்டனையை உறுதி செய்தது.  இறுதியாக, உச்சநீதிமன்ற மேல் முறையீடு மீதான விசாரணை, இரண்டு ஆண்டுகளாக நடந்து வந்தது. நீதி அரசர்கள் சதாசிவம் மற்றும் ஜெகதிஷ் சிங் கேஹர் அடங்கிய நீதிமன்ற அமர்வு தண்டனையை உறுதி செய்து வழங்கிய தீர்ப்பில்தான் ஆண் வாரிசு பற்றிய கருத்து சேர்க்கப்பட்டுள்ளது. ஒருவேளை இந்த வழக்கில் ஆண் குழந்தைக்குப் பதில் பெண் குழந்தை கொல்லப்பட்டிருந்தால் நமது நீதிபதிகள் பெரிய அளவுக்கு கவலைப்பட்டிருக்கமாட்டார்கள்.

பல சாட்சியங்கள் பற்றிய விபரங்களை பரிசீலித்து, சட்டங்களை மேற்கோள் காட்டி, இதற்கு முந்தைய எடுத்துக் காட்டி 40 பக்கங்களுக்கு எழுதப்பட்ட இந்த தீர்ப்பின் இறுதியில் தமது ஆணாதிக்க பிற்போக்கு கருத்துக்களை நீதிபதிகள் வெளிப்படுத்தியிருக்கின்றனர்.

குற்றங்களை கடுமையாக தண்டிப்பதன் மூலம் அவற்றை தடுத்து நிறுத்தி விடுவதாக நீதிபதிகள் நினைப்பதாகவும் சொல்ல முடியாது. தன் மகளை பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கிய தகப்பனுக்கு கீழ்நிலை நீதிமன்றங்கள் விதித்த மரணதண்டனையை இரண்டு வாரங்களுக்கு முன்பு ரத்து செய்தது இதே நீதிபதி சதாசிவம் பங்கேற்ற உச்சநீதிமன்ற அமர்வு. பரோலில் சென்ற அவன் மகளையும், மனைவியையும், கோடாரியால் வெட்டி கொன்றிருக்கிறான்.

படித்த ஜாம்பவான்களாக, நீதி புத்தகங்களுடன் வாசம் செய்யும் இம்மேன்மக்களின் உள்ளே பிற்போக்கு கருத்துகளும், நிலப்பிரபுத்துவ ஆணாதிக்க விழுமியங்களும் மறைந்திருக்கின்றன என்பது இந்தத் தீர்ப்பின் முலம் மீண்டும் ஒரு முறை வெளியாகியிருக்கிறது.

முதல் இந்திய நீதிபதியாகவும் சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும் நியமிக்கப்பட்ட முத்துசாமி அய்யர், ‘மனைவியை கணவன் அடிப்பது தவறல்ல’ என்றும் தீர்ப்பு வழங்கிய அதே அடிப்படையிலான சட்டங்களும் அரசு அமைப்புகளும்தான் இன்றும் நடைமுறையில் உள்ளன. 2009-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதிகளான எஸ்.பி.சின்காவும், சிரியாக் ஜோசப்பும் ‘மாமியார் மருமகளை அடிப்பது, கணவன் மனைவியை விவாகரத்து செய்வதாக மிரட்டுவது இவை எல்லாம் குற்றமல்ல’ என்று தீர்ப்பளித்தனர்.

பெண்ணடிமைத்தனத்தையும் பெண்கள் இரண்டாந்தர மக்களாக நடத்தப்படுவதையும் பேணிக்காக்கும் பார்ப்பனீய விழுமியங்களைத்தான் இந்திய சட்டங்கள் காத்து நிற்கின்றன என்பதை இந்த தீர்ப்புகள் தெளிவாக்குகின்றன.

மேலும் படிக்க
SC awards death for killing a male child

  1. இந்திய நீதிமன்றங்களின் ஆகப்பெரும்பான்மையான ’நீதியரசர்’கள் ஆணாதிக்கவாதிகளே!ஒருவேளை அவர் மனைவிக்குப் பயந்தவராயிருந்தால் கூட்.பெண்ணுக்கு சம உரிமையைப் பற்றி அவர்களால் எண்ணிப் பார்க்கக் கூட முடியவே முடியாது.ஏனென்றால் அவர்கள் எல்லோரும் [மத வேறுபாடின்றி] ஆகம விதிகளால் தயாரிக்கப்பட்டவர்கள்.[ஸ்வஸ்திக் மார்க் சுத்தம்]

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க