Tuesday, April 13, 2021
முகப்பு செய்தி 2013 பொருளாதார அறிக்கை: பட்ஜெட்டுக்கு முந்தைய சங்கு !

2013 பொருளாதார அறிக்கை: பட்ஜெட்டுக்கு முந்தைய சங்கு !

-

பொருளாதார ஆய்வறிக்கை எனும் வருடாந்திர சடங்கு நேற்று நிறைவேறி உள்ளது. ஒவ்வொரு ஆண்டு பட்ஜெட்டுக்கு முன்பும் பாராளுமன்றத்தில் நிதியமைச்சரால் தாக்கல் செய்யப்படும் இவ்வறிக்கையை, யானைக்கு முன்னே வரும் மணியோசையாகப் புரிந்து கொள்ளலாம். கடந்த ஆண்டு இதே போல் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வறிக்கையின் அடிப்படையில் நிறைவேற்றப்பட்ட பட்ஜெட்டின் விளைவால் இந்தியப் பொருளாதாரம் எப்படிச் சீரழிந்து சின்னா பின்னமாகியுள்ளது என்பதை அறிவோம். சர்வதேச பொருளாதாரப் பெருமந்தம் இந்தியப் பொருளாதாரத்தின் மேல் செலுத்தியிருக்கும் தாக்கம் பற்றியும் விரிவாக அலசி ஆராய்ந்துள்ள இவ்வறிக்கை, வரும் ஆண்டில் இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி நம்பிக்கையளிக்கும் வகையில் இருக்கும் என்று சாதிக்கிறது.

பொருளாதார ஆய்வறிக்கை

அதாவது, பொருளாதார வளர்ச்சி விகிதம் 6.1 சதவீதத்திலிருந்து 6.7 சதவீதம் அளவுக்குள் இருக்கலாம் என்கிற ஆருடம் தான் அந்த நம்பிக்கை. இந்த ஆருடம் பலிக்க வேண்டுமானால் அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்னவென்பதை இந்த ஆய்வறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது. பொருளாதார ஆய்வறிக்கை மத்திய அரசின் நிதி நிலை அறிக்கையின் உருவாக்கத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது என்கிற வகையில் அதன் பரிந்துரைகளும் முக்கியத்துவம் பெறுகின்றன.

முதலாவதாக, அரசு மானியங்களுக்காக செலவிடுவதை குறைப்பது; பெட்ரோல், டீசல், மண்ணெண்ணை, சமையல் எரிவாயு உள்ளிட்ட பெட்ரோலிய பெருட்களுக்கு அரசு அளித்து வரும் மானியத்தை வெட்டுவது, மேலும் உணவு தானியங்கள், மருத்துவம், குடிநீர், கல்வி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான மானியங்களை வெட்டியெறிவது தான் இந்த யோசனை. ஏற்கனவே பெட்ரோலியப் பொருட்களின் மேலான கட்டுப்பாட்டை மத்திய அரசு கைகழுவிய பின் பெட்ரோலியப் பொருட்களின் விலை வாராந்திரம் எகிறிக்கொண்டே இருக்கிறது.

இதே போல் உணவு தானியங்கள், சர்க்கரை, உரம் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் மேலான கட்டுப்பாடுகளையும் தளர்த்துவது பற்றி மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. உணவுப் பாதுகாப்புச் சட்டம் எனும் பெயரில் மசோதா ஒன்றை உருவாக்கியுள்ள மத்திய அரசு, இதன் அடிப்படையில் பொது வழங்கல் திட்டத்தின் முதுகெலும்பான ரேஷன் கடைகளை ஒழித்துக் கட்டும் முனைப்பில் உள்ளது. வெளிச் சந்தையின் விலையைக் கட்டுக்குள் வைப்பதில் ரேஷன் கடைகள் தான் முக்கியப் பங்காற்றுகின்றன. இவற்றை முற்றாக ஒழித்துக் கட்டுவதற்காகவே பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக மானியங்களை வரவாக வைக்கும் திட்டத்தையும் துவங்கியுள்ளனர்.

இரண்டாவதாக, வரி விகிதத்தை உயர்த்தாமல் புதிய புதிய வரிகளைப் போட்டு வரி வருவாயின் அடிப்படையை அதிகரிப்பதாகும். பொருளாதாரப் பெருமந்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள மேற்கத்திய முதலாளித்துவ நாடுகளில் பணக்காரர்களுக்கு வரி விகிதத்தை உயர்த்தி வரி வருவாயை அதிகரிக்கலாமா என்பது பற்றிய பரிசீலனைகளும் விவாதங்களும் நடந்து வருகின்றன. இந்தியாவிலோ அதற்கு நேர்மாறாக, இதுவரை வரிவிதிப்பிற்கு உட்படாத சேவைகளையும் வாய்ப்புகளையும் கண்டறிந்து அங்கெல்லாம் வரி விதிக்க வேண்டும் என்பதை இந்த ஆய்வறிக்கை பரிந்துரைத்துள்ளது.

நடுத்தர வர்க்க ‘அறிவாளிகளின்’ பத்திரிகை என்று சொல்லப்படும் தினமணியோ, இதற்கு “வரியை அதிகரிக்காமல் வரியாக வசூலிக்கப்படும் தொகையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று ஆய்வறிக்கை சொல்வதாக பொழிப்புரை எழுதியுள்ளது.

மூன்றாவதாக, வேளாண் துறையில் புதிய சீரமைப்புகள் அவசியம் என்பதை பொருளாதார ஆய்வறிக்கை வலியுறுத்தியுள்ளது. 11வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் வேளாண்துறை நிர்ணயிக்கப்பட்ட இலக்கிலிருந்து 4 சதவீத அளவுக்கு குறைவான வளர்ச்சியையே எட்டியுள்ளது. இந்த வீழ்ச்சியைத் தடுக்க அறிக்கை முன்வைத்துள்ள யோசனைகளில் நமது கவனத்துக்குரியவை, பொது வினியோக முறையைச் சீரமைப்பது மற்றும் வேளாண் பொருட்கள் சந்தைப்படுத்துவதை முறைப்படுத்துவது ஆகியவை தான்.

ஏற்கனவே புதிய பொருளாதாரக் கொள்கைகளின் அடிப்படையில் பொது வினியோக முறையான ரேஷன் கடைகளை திட்டமிட்ட ரீதியில் ஒழித்துக் கட்டி வரும் அரசு இன்னமும் அதை முற்றிலுமாகத் துடைத்தெறிந்து விட முடியவில்லை. அதே போல், சில்லறை வர்த்தகத்தில் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களையும் வால்மார்ட் போன்ற தேசங்கடந்த தொழிற்கழகங்களையும் அனுமதித்துள்ள அரசு, உணவு தானியங்களின் மேல் ஊக வணிகத்தை அனுமதித்து விவசாயப் பொருட்களின் விலைச் சந்தையை மீட்கவியலாத வகையில் அழிவுக்குள்ளாக்கி இருக்கிறது.

ஆளும் வர்க்கத்தின் தரப்பிலிருந்து தொடர்ச்சியாக வந்து கொண்டிருக்கும் திட்டமிட்ட ரீதியிலான தாக்குதல்களையும் இயற்கையான வறட்சிகளையும் மீறி சொற்ப அளவில் குற்றுயிரும் குலை உயிருமாக நடந்து வரும் விவசாயத்தை முற்றாக ஒழித்துக் கட்டுவது தான் அறிக்கை மறைமுகமாக சொல்லும் திட்டம்.  ஏற்கனவே விவசாயத்தின் எதிர்காலம் என்று அறிமுகப்படுத்தப்பட்ட ஒப்பந்த விவசாய முறை, விவசாயிகளின் நண்பன் என்று அறிமுகம் செய்யப்பட்ட பன்னாட்டு உரம் மற்றும் விதைக் கம்பெனிகள் பாரதூரமான தாக்கத்தை ஏற்படுத்தியாகி விட்டது.  இனி விவசாயத்தை அப்படியே உள்நாட்டுத் தரகு முதலாளிகள் கையிலும் பன்னாட்டுக் கம்பெனிகளிடமும் தாரைவார்த்துக் கொடுப்பது மட்டுமே எஞ்சியுள்ளது.

ஆக, அரசு மக்களுக்காக செலவிட்டு வருவதை கத்தரித்து அதை வளர்ச்சிக் கணக்கில் சேர்த்து விடுவதையே இந்த ஆய்வறிக்கை பொருளாதார வளர்ச்சி என்று முன்வைக்கிறது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க