Monday, August 15, 2022
முகப்பு மறுகாலனியாக்கம் தொழிலாளர்கள் உங்கள் நீதிமன்றத்தில் நியாயம் என்பதே இல்லை!

உங்கள் நீதிமன்றத்தில் நியாயம் என்பதே இல்லை!

-

பிரதிபா காவேரி என்ற சரக்கு கப்பல், சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் வீசிய நீலம் புயலில் சிக்கியது. கடுமையான புயல் காற்றில் சிக்கி, சென்னை பெசன்ட் நகர் கடற்கரை பகுதியில் தரை தட்டியது. கப்பலில் பணியாற்றிய 35 ஊழியர்களில் 22 பேர் கப்பலில் இருந்த ஒரே உயிர்க்காப்புப் படகில் தப்பிக்க முயன்றனர். கடல் அலைகளின் கொந்தளிப்பிலும், சீற்றத்திலும் சிக்கிய படகு கவிழ்ந்து, 6 ஊழியர்கள் உயிர் இழந்தனர்.

இறந்தவர்களில் ஒருவர் 24 வயதான மரைன் இன்ஜினியர் நிரஞ்சன். வேலூர் மாவட்டம் அரக்கோணத்துக்கு அடுத்துள்ள புளியமங்கலம், ஸ்ரீராம் நகரை சேர்ந்த விவசாயி கோதண்டபாணி, பாரதி தம்பதியரின் ஒரே மகன்.

மகனின் அகால மரணம், பொருளாதார நெருக்கடி, வறுமை, கடன் பிரச்சனை இவற்றில் சிக்கியிருந்த தம்பதியர் இருவரும் பிப்ரவரி 21 ஆம் தேதி, தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இறுதி வாக்குமூலத்தை, 3 கடிதங்களில் எழுதி வைத்து உள்ளனர்.

நீதிபதிக்கு எழுதிய கடிதத்தில் “உங்கள் நீதிமன்றத்தில் நியாயம் என்பதே இல்லை, நாங்கள் பெற்ற பிள்ளையை பறி கொடுத்து விட்டு துக்கத்தில், தனிமையில் வாடிக்கொண்டு இருக்கிறோம். தூக்கம் பறிபோய், என் மனைவி பாரதி நோய் வாய்ப்பட்டுள்ளார், அதற்கு வைத்தியம் பார்க்கக் கூட பணமில்லை. எங்களை பராமரிக்கவும் யாருமில்லை. சரியான உணவு கூட இல்லாமல் பிச்சைக்காரர்களாகி விட்டோம். பிள்ளைகளை இழந்த மற்ற 5 குடும்பங்களுக்காவது சேரவேண்டிய நிவாரணத் தொகை எங்கள் சாவின் மூலம் விரைவில் கிடைக்கவேண்டும். எங்கள் மகன் படிப்புக்கு கல்விக் கடன் கொடுக்க எந்த வங்கியும் முன்வராத நிலையில், பல லட்ச ரூபாய் கடன்பட்டுதான் அவனை படிக்கவைத்தோம், இன்று அக்கடன்கள் கட்டப்படாமல் உள்ளன. மத்திய வேளாண்மைத் துறை அமைச்சர் சரத் பவாரின் உறவினர் சுனில் பவார் கப்பல் கம்பெனியின் உரிமையாளராக இருப்பதால், இன்று வரை போலீஸ் ஒருவரை கூட கைது செய்யாமல் இருப்பது கண்டனத்துக்கு உரியது” என்று தங்கள் மனக்குமுறல்களை பதிவு செய்துள்ளனர்.

மருத்துவ அதிகாரிக்கான இரண்டாம் கடிதத்தில், உடல் உறுப்புகளை தானமாக கொடுக்கும் விருப்பத்தை பதிவு செய்திருக்கிறார்கள். காலம் தாழ்ந்து தகவல் கிடைத்ததால் அவர்களது கடைசி விருப்பம் நிறைவேறாமல் போய் விட்டது.

போலீஸ் அதிகாரிக்கான மூன்றாவது கடிதத்தில், விபத்து நிகழ்ந்து கடலில் தத்தளித்தவர்களை மீட்க தீயணைப்பு படைகளையும், மாநில, மத்திய அரசு மீட்பு குழுவினர்களையும் கொண்டு மீட்பு பணிகளை உடனே துவங்காமல் இருந்ததாகவும் புயலுக்கு முன்னர் கப்பலில் ஆதரவற்று இருந்த ஊழியர்களை காப்பாற்ற, அரசு தரப்பில் எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை என்றும் போலீஸ் தங்கள் கடமையை செய்ய தவறியுள்ளது என்றும் ஆதங்கங்களை பதிவு செய்துள்ளார்கள்.

விபத்தில் பலியான 6 பேரின் குடும்பங்கள், ‘கப்பல் உரிமையாளர்கள் தங்களுக்கு நஷ்ட ஈடாக தலா ரூ 25 லட்சம் வழங்கவேண்டும்’ என்றும், ‘மாவட்ட நீதிபதி விசாரணை நடத்தப்பட வேண்டும்’ என்றும் உயர்நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்கு பதிவு செய்தனர்.

‘பிரதிபா காவிரி கப்பலின் உரிமையாளர் , நஷ்ட ஈடாக ரூ 87.45 லட்சம் உயர்நீதி மன்றத்தின் பொறுப்பில் ஒப்படைக்க வேண்டும்’ என்றும், ‘பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணத் தொகையை நீதிமன்ற தலைமை பதிவாளர் வழங்க வேண்டும்’ என்றும் ‘பிரதிபா காவேரி கப்பல் சென்னையில் இருந்து வெளியே செல்ல தடை விதித்தும்’ டிசம்பர் மாதம் நீதிபதி பால் வசந்தகுமார் உத்தரவிட்டார்.

கப்பல் முதலாளிகளிடமிருந்து பணம் வருவது தாமதமானதால் இடைக்கால நஷ்ட ஈடு தொகையாக ரூ 30 லட்சம் தர உத்தரவு போடப்பட்டது. அதிலிருந்து முதல் தவணையாக தலா ரூ 5 லட்சம் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுக்க வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது. கப்பல் உரிமையாளர்கள் அத்தொகையை டிசம்பர் 3 அன்று உயர் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.

பணத்தை பெற நிரஞ்சனின் பெற்றோர், தலைமை பதிவாளரை மீண்டும் அணுகிய போது, ‘பணத்தை எந்த வீதத்தில் இறந்தவர்கள் குடும்பங்களுக்கு பிரித்து தருவது என்று சந்தேகம் நீடிக்கிறது’ என்று கூறியுள்ளார். அதற்கான விளக்கம் டிசம்பர் 21ம் தேதி நீதிபதி வசந்தகுமாரால் வழங்கப்பட்டது. இருப்பினும் பணம் பெற்றோர்களுக்கு போய் சேரவில்லை.

‘நிரஞ்சனின் சட்டப்படியான வாரிசுகளாக அப்பா, அம்மா இருவரும் இருப்பதால் நஷ்டஈட்டை இருவரில் யாரிடம் கொடுப்பது’ என்ற சந்தேகத்தை எழுப்பியிருக்கிறார், தலைமைப் பதிவாளர். நிரஞ்சனின் அம்மா பாரதி, பணத்தை அப்பா கோதண்டபாணியிடமே கொடுக்கக்கோரி ஒப்புதல் கடிதம் தந்துள்ளார்.

பிப்ரவரி 12ம் தேதி, நஷ்டஈட்டை கால தாமதம் செய்யாமல் விரைவில் வழங்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

‘நிரஞ்சன் ஒரு வேளை யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்திருந்தால், அந்தப் பெண் எதிர்காலத்தில் வந்து தானும் நிரஞ்சனின் சட்டப்படியான வாரிசு என்று நஷ்டஈடு பணத்தில் சொந்தம் கொண்டாடினால் என்ன செய்வது’ என்ற திமிர்த்தனமான கேள்வியை அடுத்து எழுப்பியுள்ளார் தலைமைப் பதிவாளர் சொக்கலிங்கம்.

பிப்ரவரி 22 ஆம் தேதி, உயர்நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாமல் அவமதிப்பு செய்தது குறித்து வழக்கறிஞர்கள் மனு தாக்கல் செய்ய திட்டமிட்டிருந்தனர்.

‘நீதிமன்ற நடவடிக்கைகள் மீண்டும் முதலிலிருந்து நடக்கும்’ என்று வழக்கறிஞர்களை கேட்டு தெரிந்துக் கொண்ட நிரஞ்சனின் பெற்றோர் விரக்தியின் உச்சத்தில் பிப்ரவரி 21ம் தேதி தங்கள் வாழ்க்கையை முடித்துக்கொண்டு அவர்களது போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.

விபத்தில் 6 ஊழியர்கள் உயிரிழப்புக்கும் நிரஞ்சனின் பெற்றோர் தற்கொலைக்கும் காரணமான கொலைகாரர்கள் “பிரதிபா காவேரியின்” கப்பல் கம்பெனி முதலாளிகளான பவார் குடும்பத்தினர்தான்.

செப்டம்பர் 28 2012, அன்று கொல்கத்தாவிலிருந்து, கச்சா எண்ணெய் ஏற்றி சென்னை துறைமுகத்திற்கு கொண்டு வந்த பிரதிபா காவேரி, இரண்டு நாட்களுக்குப் பிறகு மும்பைக்கு பயணமாகியது.  அக்டோபர் 8 ஆம் தேதி சென்னைக்கு திருப்பி அனுப்பப்பட்டு, சென்னை துறைமுகத்துக்கு வெளியில் நங்கூரமிட்டிருந்தது.

பிரதிபா காவேரி32 வருடங்கள் பழமையான இந்த கப்பலில் விபத்தின்போது 37 ஊழியர்கள் இருந்துள்ளனர். போதுமான உணவு, தண்ணீர் இல்லாமல், மழை நீரை சேகரித்து பயன்படுத்தும் நிலையில் இருந்துள்ளனர். கப்பலுக்கு தேவையான எரிபொருளும் தீர்ந்து விட்ட நிலைமையில், கப்பல் கம்பெனியிடமிருந்து தேவையான பொருட்கள் வந்து சேர்வதற்கு அக்டோபர் 31 வரை காத்துக் கொண்டிருந்தனர்.

கப்பலை புதுப்பிக்காமல், கடற் பயணத் தகுதிச்சான்றிதழ் கூட இல்லாத நிலையில் தான் இக்கப்பல் இயக்கப்பட்டு சரக்கு போக்குவரத்து நடந்துள்ளது. கப்பல் ஊழியர்களுக்கு பல மாதங்கள் சம்பளமும் கொடுக்கப்படவில்லை.

கேப்டன் கார்ல் பெர்னாண்டஸ் கப்பல் உரிமையாளர்களை தொடர்ந்து மின்னஞ்சல் மூலமும் பிற தகவல் தொடர்பு சாதனங்கள் மூலமும் தொடர்பு கொண்டு தேவையான பொருட்களை அனுப்புமாறு வலியுறுத்தி வந்திருக்கிறார்.

‘போதிய எரிபொருள் இல்லாமல் கப்பலை சென்னையிலிருந்து கிளப்ப முடியாத நிலை; ஆபத்து காலத்தில் பயன்படுத்த கைவசம் ஒரே ஒரு உயிர்க்காப்பு படகு; அதுவும் பழுதடைந்துள்ளது என்பதால் அனைவரின் உயிரும் ஆபத்தில் உள்ளது’ என்பதை மும்பாய், சென்னயிலுள்ள கிளை மேலாளர்களுக்கும், சென்னை துறைமுகத்திற்கும் தெரிவித்துள்ளார். ஆனால், இறுதிவரை உதவி வரவேயில்லை.

சரத்பவாரின் கட்சி அமைச்சர் வீட்டுத் திருமணத்திற்கு 22 ஹெலிபேடுகள் அமைத்து தின்று கொழுத்த பன்றிகளை வரவேற்க ஏற்பாடு செய்திருந்தார்கள். அத்தனை ஹெலிகாப்டர்களில் ஒன்று கூட நிராதரவாக விடப்பட்டிருந்த கப்பல் ஊழியர்களை மீட்க பயன்படவில்லை.

கப்பல் முதலாளிகளின் பாராமுகமும், அலட்சியமும்த்தான் இவர்கள் உயிர்களை காவு கொண்டது. இதை விபத்து என்பதை விட, திட்டமிட்ட கொலை என்றுதான் சொல்லவேண்டும்.

குற்றவாளிகளான கப்பல் முதலாளிகளை விட்டுவிட்டு, கப்பலையும் அதன் ஊழியர்களையும் சென்னை துறைமுகத்தில் நான்கு மாதமாக காவலில் வைத்துள்ளது நீதிமன்றம். கப்பல் கம்பெனியின் சென்னைக் கிளை மேலாளரும் உதவியாளர்களும் கைது செய்யப்பட்டு இந்திய குற்றவியல் சட்டம் பிரிவு 304 (II)ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

உயிர் தப்பித்த ஊழியர்களை சென்னை ஹோட்டலில் தங்கவைத்து, மத்திய தொழிற் பாதுகாப்பு படையினர் வைத்து விசாரித்து துன்புறுத்தியுள்ளனர். கப்பலில் காவலில் வைக்கப்பட்ட ஊழியர்களுக்கு அடிப்படை தேவைகள், மருத்துவ வசதிகள் வழங்கப்படாமல், உணவு, குடிநீர் பற்றகுறையில் வைக்கப்பட்டிருந்தனர்.

கப்பல் முதலாளிகளின் அரசியல் செல்வாக்கு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இடைக்கால நிவாரணத் தொகை வழங்கப்படாமல் தலைமை பதிவாளர் மூலம் முட்டுக் கட்டை போடவும் உதவியிருக்கிறது.

ஊழியர்களை வதைத்து, அவர்கள் சாவிற்கு காரணமான பவார் குடும்பத்தினரின் கப்பல் கம்பெனிக்கு 9 கப்பல்கள் உள்ளன, இப்போது அவை சான்றிதழ்கள் புதுப்பிக்கப்படாமல் பல்வேறு இடங்களில் ஊழியர்களுடன் சிறைவைக்கப்பட்டுள்ளன.

கப்பல் பெயர் காவலில் வைக்கப்படிருக்கம் இடம்
பிரதிபா கொய்னா பஹரைன்
பிரதிபா சந்திரபாகா சீனா கப்பல் பட்டறை
பிரதிபா நர்மதா சீனா கப்பல் பட்டறை
பிரதிபா காவேரி சென்னை துறைமுகம்
பிரதிபா தப்பி மும்பை கடற்கரை
பிரதிபா இந்திரயாணி மும்பை கடற்கரை
பிரதிபா பீமா கோவா துறைமுகம்
பிரதிபா வர்ணா சென்னை துறைமுகம்
பிரதிபா மீரா வைஷாக் துறைமுகம்

151 ஊழியர்கள் பராமரிப்பு இல்லாமல் கப்பல்களில் கஷ்டப்படுகின்றனர். அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்காமல் சுதந்திரமாக, குடும்பத்துடன் வாழ்ந்துக்கொண்டு இருக்கிறார் பிரதிபா ஷிப்பிங் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சுனில் பவார். இன்று வரை அவரை சட்டத்தாலும் போலீஸாலும் எதுவும் செய்ய முடிவில்லை.

நாட்டில் அரசியல் அதிகாரத்தையும், வியாபாரத்தையும் இணைத்து தரகு வேலை செய்யும் பெரிய மனிதர்கள், தமது லாபம் ஒன்றே குறியாக மனித உயிர்களை பலி கொடுக்கவும் தயங்க மாட்டார்கள் என்பதன் வெளிப்பாடுதான் பிரதிபா காவேரி கப்பல் ஊழியர்களின் நிலை.

கோதண்டபாணி, பாரதி என்ற இரண்டு பெற்றோரின் தற்கொலை இந்த சமூக அமைப்பை பார்த்து காறி உமிழ்கிறது. பச்சையான ஒரு படுகொலைக்கு நியாயம் கேட்டும், நீதிமன்றத்தில் போராடியும் எந்த பலனும் கிடைக்கவில்லை எனும் அவலமே அவர்களை தற்கொலைக்கு தூண்டியிருக்கிறது. அந்த வகையில் கப்பல் முதலாளிகளை மட்டுமல்ல, நீதிமன்றத்தையும் கூட தண்டிக்கவேண்டும். அப்படி தண்டிக்க முடியாது என்பதால்தான் அந்த முதியவர்கள் தங்கள் உயிரை விலையாக கொடுத்திருக்கிறார்கள். அப்படியாவது மற்றவர்களுக்கு நிவாரணம் கிடைக்கட்டுமே என்று அவர்கள் கடிதம் எழுதியிருக்கிறார்கள். உயிரை விட்டவர்களுக்கு இருக்கும் மனிதாபிமானம் கூட இந்த நாட்டு அதிகார அமைப்புகளுக்கு கிஞ்சித்தும் இல்லை என்பதற்கு மற்றுமொரு சான்று.

மேலும் படிக்க
Pratibha Cauvery suicide note
Madras HC orders arrest of MV Prathibha Cauvery
Pratibha Shipping
Ship owners deceased sailors vessel
Pratibha Cauvery – 2 of shipping agency arrested
Sailors stuck on two ships to be evacuated on Monday

 1. Where is the JUSTICE???, Courts and Judges are thinking that their duty is only to give Judgement….., what use, our courts and government’s useless procedures killed 2 innocent lives of citizens. No Mass media covered this news. Where are we going………, what is the solution………..?? they cannot make fool others always, do we need a Social Revolution again for our Country.

  • This was covered in Hindu and ToI.
   Also after the suicide, all the families got their money. Anyway, still it was very late.

   All kinds of atrocities happen in High Court. What can we do?
   If this was a fiction, then some hero will come and bomb all the Govt. establishments.

 2. “மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த ஐரோம் ஷர்மிளா ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை நீக்கக் கோரி நடத்தி வரும் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டம், கடந்த நவம்பர் 4-ஆம் தேதியன்று பத்தாவது ஆண்டைக் கடந்துவிட்டது.”

  இது “வெல்லட்டும் ஐரோம் ஷர்மிளாவின் போராட்டம்!” என்ற தலைப்பில் 07/12/2010 அன்று வெளிவந்த கட்டுரையின் முதல் பத்தி.
  அதிகாரத்தைக் கையில் வைத்துக் கொண்டு அக்கிரமம் புரியும் கயவாளிகளை விலக்கக்கோரி 12 ஆண்டுகளாக உண்ணாவிரதம் இருக்கும் வீரப் பெண்ணின் செயலை இழிவுபடுத்தும் வண்ணம் அவரின் மேல் நேற்று டெல்லியில் தற்கொலை முயற்சி வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பற்றிய செய்தியை கீழே படியுங்கள்.
  மரணமடைந்த (அல்லது கொலை) மரைன் என்சினியரின் பெற்றோரை தற்கொலைக்குத் தூண்டிய இந்த அயோக்கிய அதிகாரிகளின் மேல் இந்த நீதிமன்றங்கள் என்ன வழக்கைத் தொடுத்து விசாரிக்கும்?

  Indian activist Irom Sharmila faces charges

  Irom Sharmila refuses to plead guilty to attempting suicide

  New Delhi: Social activist Irom Sharmila, who has been on fast for about 12 years demanding the repeal of the Armed Forces Special Powers Act (AFSPA), on Monday refused to plead guilty to attempting suicide and a Delhi court framed charges against her.

  Metropolitan Magistrate Akash Jain framed charges against the activist from Manipur for attempting to commit suicide and issued show cause notice to Sharmila after she refused to plead guilty.

  She told the court that she “loves life and do not want to take my own life”.

  Sharmila, who was present in the court, denied that she attempted to commit suicide at Jantar Mantar here in 2006.

  She said: “I only want justice.”

  “If I wanted to commit suicide I might have died. My protest was non-violent for my demand, just to live as a human being,” she added.

  She appeared before the court under IPC 309 (attempt to commit suicide) for fasting at Jantar Mantar in Delhi.

  The court posted the matter for May 22 for recording of prosecution’s evidence in the case relating to her fast until death which started on October 4, 2006 at Jantar Mantar here to demand revocation of AFSPA.

  The court hearing the case told Sharmila: “We respect you but the law of land does not permit you to take your life.”

  Asked if she tried to commit suicide, she replied: “No”.

  The court earlier told her counsel to explain to her that maximum punishment in the case was a few months to a year and that she has been in custody for more than six years, so if she pleads guilty, the case would be settled on Monday.

  Sharmila, after discussions with her counsel, told the court: “If AFSPA will be repealed by the government then only I will take food and will throw the food pipe.”

  To this, the magistrate told her: “This is a political process. Here I am concerned with this case only.”

  The counsel told the court that Sharmila has been protesting for the last 12 years in the “most non-violent way like Mahatma Gandhi”.

  She is fasting for the people of Manipur as they are being neglected by the government, said the counsel, requesting the court that she should not be asked to appear in court again and again due to her medical condition.

  Meanwhile, her supporters staged a protest outside gate no 2 of Patiala House Court, which was closed by police.

  Sharmila’s supporters raised slogans demanding justice and repeal of AFSPA.

 3. தலைமைப் பதிவாளர் சொக்கலிங்கத்தின் குடும்பம் நாசமாகப்போகட்டும்.

 4. இது இன்று நேற்று நடக்கவில்லை. அரசு அதிகாரிக்ளின் கீழ்தரமான இந்த செயல் காலம் காலமாக நடக்கின்றது. அவ்வாரானவர்களை தடுப்பதை நாம் சினிமாவில் தான் கான முடிந்தது. இவர்களை ஏன் தூக்கில் இட கூடாது.

 5. நான், உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளுக்குக் கட்டுப்பட்டவனாக வேண்டுமானால் இருக்கலாம். ஆனால், அதே நேரத்தில் அந்தத் தீர்ப்பை மதிக்க வேண்டும் என்ற கட்டாயம் எனக்கு இல்லை. இது, ஒவ்வொரு தனி மனிதனுக்கும் உள்ள சுயேச்சையான உரிமை. இதை விட்டுவிட நான் தயாராக இல்லை. இதுவே என்னுடைய அழுத்தமான முடிவாகும். – அண்ணல் அம்பேத்கர்

 6. நன்றி மகிழ்னன் ! சரியான சமயத்தில் அம்பேத்கரின் கருத்தை கொடுத்தீர்கள்! உண்மையில் கோர்ட்டுகளும் மற்ற அரசு அலுவகங்கள் போலத்தான்! நீதிபதிகளும் மனிதர்கள் தானே! மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பாராளு மன்றத்தை விட, உச்சநீதி மன்றத்திற்கும், நியமன அதிகாரிகளுக்கும் அதிக இறையாண்மை இருப்பதாக, பார்ப்பன ஊடகஙகளே பம்முகின்றன! எல்லொரும் மக்களுக்கு பதில் சொல்லியாக வேண்டும்!

 7. அடுத்து, தனி மனித சுதந்திரம்; எதுவரை என்றால், அடுத்தவர் மூக்கை இடிக்கும்வரைதான்! ஆனால் இஙகோ, டாடா , அம்பானி போன்ற் பெருஙகுடிமக்களுக்கு மட்டுமே தனிமனித சுதந்திரம், வியாபார ரகசியம்(அயோக்கியத்தனம்) அஙகீகரிக்கபடுகிறது! பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரஙகள் (சட்டஙகள்) ?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க