Saturday, April 17, 2021
முகப்பு மறுகாலனியாக்கம் தொழிலாளர்கள் கட்டிட அழகிற்காக உடம்பை அழிக்கும் கொத்தடிமைகள்!

கட்டிட அழகிற்காக உடம்பை அழிக்கும் கொத்தடிமைகள்!

-

மெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான், வளைகுடா பகுதி போன்ற முன்னேறிய நாட்டு பணக்காரர்களின் வீடுகள், தோட்டங்கள், அடுக்குமாடி கட்டிடங்கள், உணவகங்கள், மால்கள் இவற்றை அலங்கரிக்க தேவைப்படும் மணற்கற்கள் (sandstone – இதை மணற்பாறை என்றும் அழைக்கலாம்) இராஜஸ்தான் மாநிலத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றன.மணற்கல்

தனியார் வாகனப் பாதை, சாலை மேல் பரப்பு, வீட்டு முற்றங்கள் போன்ற இடங்களில் இக்கற்கள் பயன்படுத்தப்படுகின்றன. கலை நயமுடையதாக காட்சியளிக்கும் சிறப்பு இருப்பதால், மேலை நாடுகளில் இவற்றிற்கு பெருமளவு வரவேற்பு உள்ளது. உலக அளவில் மணற்கற்கள் உற்பத்தியில் 27 சதவீதம் இந்தியாவில் நடைபெறுகிறது.

இந்தியா முழுவதும் 15 லட்சம் தொழிலாளர்கள் இந்த வேலையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்களில் 5ல் ஒருவர் குழந்தை தொழிலாளி. 20% குழந்தைகள் 6 வயது முதல் வேலையில் ஈடுபடுத்தப்படுகின்றனர்

கடந்த 15 – 20 வருடங்களில் 5 மடங்கு வளர்ந்துள்ள இத்தொழிலில் ஆண்டுக்கு ரூ 200 கோடிக்கு அதிக மதிப்பிலான மணற்கற்கள், இராஜஸ்தான் ஹிந்தோன் நகரத்திலிருந்து மட்டும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்த சிறுநகரத்தில் 25 மணற்கல் குவாரிகள் உள்ளன.

இராஜஸ்தானில் வேகமாக வளர்ந்து வரும் இந்த மணற்கல் வர்த்தகம் முதலாளிகளை செல்வம் கொழிக்கச் செய்வதோடு, கற்களை வெட்டி உருவாக்கும் உழைப்பாளிகளை ஈவு இரக்கமற்ற விதத்தில் சுரண்டுகிறது.

உழைப்புக்கு ஏற்ற ஊதியம் இல்லையென்பதே கொடுமையாக இருக்கும் போது, மணற்கல் குவாரிகளில் வேலை பார்க்கும் பல தொழிலாளிகளுக்கு ஊதியமே கிடையாது. கூலியில்லாத மனித உழைப்பில்தான் இக்கற்கள் உருவாகின்றன.

சின்ன மீனை போட்டு பெரிய மீனை பிடிப்பது போல தேவைப்படும் போது வட்டிக்கு கடன் கொடுத்து,  திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் சம்பளமில்லாத தொழிலாளர்களாக குவாரிகளில் குடும்பத்துடன் வேலை செய்யும் அடிமைநிலைக்கு தள்ளி விடுகின்றனர்.  குவாரி முதலாளிகளிடம் பெற்ற கடனை திருப்பித் தர முடியாத நிலையில் இருப்பவர்கள் வேலை செய்து கடனை  அடைக்கிறார்கள்.

இந்த கொத்தடிமை முறை குறித்து ஆய்வு செய்து வரும் அனுமேகா யாதவ் என்ற பத்திரிகையாளர் எழுதிய இந்து நாளிதழில் வெளியான கட்டுரையின் மொழிபெயர்ப்பை தந்துள்ளோம்.

பாபுலால் கைர்வாராஜஸ்தான் மாநிலத்திலுள்ள கோட்டா நகரத்தில் உள்ள ஒரு மணற்கல் குவாரியில்,  சூரியன் மறையப் போகும் நேரம். 38 வயதான பாபுலால் கைர்வா கையில் உளி, சுத்தியலுடன் நேர் கோட்டில் 2 அடிக்கு 10 அடி அளவிலான மணற்கல் பலகையை வெட்டுகிறார். அந்த கல்லுக்கு சந்தையில் ரூ 1,600 விலை கிடைக்கும், ஆனால், அதை வெட்டி எடுத்த பாபுலாலுக்கு கூலி எதுவும் கிடைக்காது.

பாபுலால் ஐந்து வருடங்களுக்கு முன் குவாரி உரிமையாளர் பகதூர் பாபுவிடம்,  வாங்கிய ரூ 10,000 கடன், வட்டியுடன் சேர்ந்து இருமடங்கு ஆகி இருக்கிறது. கடனை திருப்பி தரும் வரை கூலி இல்லாமல்தான் பாபுலாலும் அவருடைய குடும்பத்தினரும் வேலை செய்யவேண்டும்.

“குடும்பச் செலவுக்காக முதலாளி மாதம் ரூ 500 மட்டும் கொடுப்பார். ஆண்டு இறுதியில் முந்தைய கடனுக்கு ஈடாக அதை எடுத்துக் கொள்வார்” என்கிறார் பாபுலால்.

வெட்டப்பட்ட கல் நேர் கோட்டில் பிளக்கவில்லை என்றால் அவர் ஆரம்பத்திலிருந்து மீண்டும் வேலையை தொடங்க வேண்டும். அவரது மனைவி ஹீரா பாயும் மூன்று மகள்களும் கற்களை சுமந்து சென்று உதவுகிறார்கள்.

குடும்பத்துடன் உழைத்தும் வருடா வருடம், கடன் தொகை அதிகமாகிக் கொண்டுதான் போகிறது. கையில் ஒரு ரூபாய் கூட மிஞ்சுவதில்லை. இந்த இடத்தை விட்டு கிராமத்துக்கு ஓடி விடலாம் என்றால் சுரங்க உரிமையாளர்கள் ஜீப்பில் அல்லது மோட்டார் பைக்கில் வந்து மீண்டும் பிடித்து வந்து விடுவார்கள்.

தெற்கு ராஜஸ்தானில் இருக்கும் கோட்டா நகரத்தின் புறநகர் பகுதிகளான ராஜ்புரா மற்றும் தாபியில்100 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த மணற்குவாரிகள் விரிந்துள்ளன. ராஜஸ்தான், ஹரியானா மாநிலங்களில் கட்டிட வேலைக்கு பயன்படுத்தப்பட்ட மணற்கற்கள் இப்போது சவுதி அரேபியாவுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

“குவாரியின் அளவை பொறுத்து ஆண்டுக்கு ரூ 5 கோடி வரை இலாபம் வரும் வாய்ப்பு இருக்கிறது” என்கிறார் கோட்டாவிலிருந்து மணற்கல் வாங்க வந்துள்ள வாடிக்கையாளர் ்பத்தே சிங். “இந்தப் பகுதியில் கிடைக்கும் மணற்கல்லை கைகளால்தான் வெட்ட வேண்டும். இயந்திரங்களை பயன்படுத்த முடியாது” என்கிறார் வடக்கு இராஜஸ்தானைச் சேர்ந்த ஓம் பிரகாஷ் அகர்வால் என்ற வாடிக்கையாளர்.

பாபுலால் பணியாற்றும் குவாரியில் அவரைப் போலவே 5 குடும்பங்கள் வேலை செய்கின்றன. கோட்டா நகரத்தில் நேவாஜி குஜ்ஜர் என்பவருக்கு சொந்தமான மிகப் பெரிய மணற்கல் குவாரியில் மட்டும் 400 தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் இதே போன்று கொத்தடிமை கடன் சுழலில் மாட்டியவர்கள். அவர்களுக்கு முறையான கூலி கொடுக்கப்படுவதில்லை.

மங்கள ராமா என்ற தொழிலாளி, மத்திய பிரதேசத்திலுள்ள ஜாபூவா பகுதியைச் சேர்ந்தவர். “9 ஆண்டுகளுக்கு முன்பு முன்பணமாக ரூ 20,000 வாங்கிக் கொண்டு குடும்பத்துடன் இங்கு வேலை செய்ய வந்தேன். ஒரு வருடம் கழித்து தர வேண்டிய கடன் ரூ 24,000 ஆகியிருக்கிறது என்றார் குவாரி உரிமையாளர் ஜெட்கா சாஹிப். 2 – 3 வாரங்களுக்கு ஒரு முறை ரூ. 400 – 500 கைச்செலவுக்காக தருகிறார்” என்கிறார் அவர்.

ஹீரா பாய், பாபுலால்150 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் பாபுலால் கைர்வாவின் சொந்த கிராமம் இன்று ஆளரவமற்று இருக்கிறது. அந்த ஊரைச் சேர்ந்த 500 குடும்பங்களில் பெரும்பான்மையோர் நிலமற்ற ஏழைகள், தீபாவளி முடிந்ததும் பிழைப்புக்காக கோட்டாவில் இருக்கும் குவாரிகளுக்கு போகிறார்கள். மே மாதம்தான் திரும்புவார்கள்.

இன்று நாடோடிகள் போல, அலைக்கழிக்கப்படும் இந்த மக்களின் கடந்த காலம் இவ்வளவு மோசமாக இருக்கவில்லை. கைர் என்ற மரத்தின் பெயரில்தான் இந்த மக்கள் கைர்வா என்று அழைக்கப்படுவதாக கிராமத்துப் பெரியவர்கள் சொல்கிறார்கள். ‘கைர் மரப் பட்டையிலிருந்து சாறு எடுத்து, புளிக்க வைத்து, பதப்படுத்தி, கத்தா வியாபாரம் செய்து வந்தோம்’ என்கிறார் கணேஷ் ராம் கைர்வா.

கத்தா மருந்து தயாரிப்பிலும் பான் மசாலா, குட்காவில் கலக்கப்படும் பொருளாகவும் பயன்பட்டது. கைர்வாக்கள் இந்த தொழிலை செய்ய உதவியாக அரசு கூட்டுறவு சங்கங்களை ஏற்படுத்தியது. ஆனால், காடுகள் அழிக்கப்பட்டதும் கூட்டுறவு சங்கங்களும் சிதைந்து விட்டன.

மக்கள் நகரங்களுக்கு வேலை செய்ய துரத்தப்பட்டனர்.

“எனது ஒரே மகன் 20 ஆண்டுகள் குவாரியில் வேலை செய்தான். போன சங்கராந்தி சமயத்தில் ரூ 25,000 கடனாளியாக இறந்து போனான்” என்கிறார் கணேஷ் ராம். “கடனை அடைக்க வேலை செய்யும் நிலையில் நான் இல்லை, வயதாகி விட்டது என்று முதலாளியிடம் கெஞ்சி கேட்டு தப்பினேன்” என்கிறார் அவர்.

“என்னுடைய இரு மகன்களும் மணற்கல் குவாரியில் வேலை செய்தார்கள். இளையமகன் தேவராஜ் 18 வயதில் சென்றான். ஒரு நாள் குவாரி உரிமையாளர் அவனை ஜீப்பில் கொண்டு வந்து விட்டார். பின் சீட்டில் தேவராஜ் இரத்த வாந்தி எடுத்துக் கொண்டிருந்தான். பரானில் இருக்கும் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றும் பலனுமில்லாமல் அவன் விட்டான்” என்கிறார் ஜஷோதா பாய்.

கோட்டா அல்லது பாரனில் கட்டிட வேலைக்கு சென்றால் அதிக கூலி கிடைக்கும் என்றாலும் குவாரிகளில் ஒரு முறை வேலை செய்தவர்கள் கடனுக்காக மீண்டும் மீண்டும் போக வேண்டியிருக்கிறது என்கிறார்கள் கிராம மக்கள்.

“என் ஒரே மகன் மான்சிங் பல ஆண்டுகள் குவாரியில் வேலை செய்தான். ஒரு முறை கல்லை வெட்ட முயற்சிக்கும் போது இரண்டு கை விரல்கள் துண்டிக்கப்பட்டன. அவனுக்கு ரூ 40,000 கடன் இருந்தது. கிராமத்திற்கு திரும்பி வந்தும் குவாரி முதலாளி அவனை துரத்திக் கொண்டு வந்தார். விரல்கள் இல்லாமல் அவன் எப்படி வேலை செய்வான் என்று மன்றாடிய பிறகு அவனை விட்டு விட்டுப் போனார்கள்” என்கிறார். கோரே லால்.

தெற்கு ஆசியாவிலேயே இந்தியாவில்தான் கொத்தடிமை முறைக்கு எதிரான சட்டம் முதலில் இயற்றப்பட்டது. 1975-77 நெருக்கடி நிலையின் போது (சர்வாதிகார – மொ.பெ.) இந்திரா காந்தியின் 20 அம்ச பொருளாதாரத் திட்டத்தின் கீழ் விவசாய கூலிகளை கொத்தடிமை முறையில் வேலை வாங்குவதை ஒழிக்கும் சட்டம் போடப்பட்டது.

காந்தி அமைதி அறக்கட்டளை 1978ல் நடத்திய ஆய்வு ஒன்றில் 10 மாநிலங்களில் 26 லட்சம் கொத்தடிமை தொழிலாளர்கள் இருப்பதாக தெரிய வந்தது. அவர்களில் நான்கில் ஒரு பகுதியினர் பழங்குடி மக்கள், 60 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் தாழ்த்தப்பட்ட சாதியினர். ஆனால் அதே ஆண்டு வெளியான தேசிய மாதிரி கணக்கெடுப்பு நிறுவனம் 16 மாநிலங்களில் 3.43 லட்சம் கொத்தடிமை தொழிலாளர்கள் மட்டுமே இருப்பதாக கணக்கு சொன்னது.

அதன்பிறகு 34 ஆண்டுகளில் கொத்தடிமை தொழிலாளர்களின் கணக்கெடுப்பு தேசிய அளவில் செய்யப்படவில்லை. மாநில அரசுகள் தேசிய மனித உரிமைகள் பாதுகாப்பு மையத்துக்கு அனுப்பிய தகவல்களின் படி ராஜஸ்தான் உட்பட 18 மாநிலங்கள் கொத்தடிமை தொழிலாளர்களே இல்லை என்று தெரிவித்திருக்கின்றனர்.

“மக்களுக்கு அடிப்படை ஊதியமும் உணவு பாதுகாப்பும் உத்தரவாதம் செய்யப்பட்டு அவர்கள் கூட்டாக செயல்படும் போதுதான் கொத்தடிமை முறைக்கு முடிவு கட்ட முடியும்” என்கிறார் பொருளாதார வல்லுனர் ரவி ஸ்ரீவஸ்தவா. ‘அலஹபாதில், கொத்தடிமைகளாக குவாரிகளில் வேலை செய்து வந்த கோல் இன பழங்குடிகள் நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு சுரங்கத் தொழிலுக்கான கூட்டு உரிமத்தை பெற்றார்கள்’ என்கிறார் அவர்.

“தேசிய அளவில் குறைந்த பட்ச கூலிக்கான நிர்ணயம் இல்லாத சூழலில் குறைந்த பட்ச கூலியை கணக்கிடுவது பெரும்பாலான தொழிலாளர்களுக்கு சிரமமாக உள்ளது” என்கிறார் அவர். அனைத்து துறைகளிலும் தொழிலாளர்களுக்கான குறைந்த பட்ச ஊதியமாக ரூ 115 என்று நிர்ணயிக்க வேண்டும் என்ற மத்திய தொழிலாளர் அமைச்சகத்தின் பரிந்துரை 2009லிருந்தே கிடப்பில் போடப்பட்டுள்ளது.

கொத்தடிமை வாழ்வும், கடனும் சாகும்வரை தீராது என்பதை கோட்டாவிலுள்ள பிஞ்ச்னா கிராம மக்கள் புரிந்து வைத்துள்ளனர். “மணற்கல் குவாரியில் வேலை செய்யும் ஒருவர், கடனை அடைப்பததற்குள் இறக்க நேரிட்டால் குடும்பத்தில் இன்னொருவர் பொறுப்பு எடுத்துக்கொண்டு வேலை செய்ய போக வேண்டும். அவ்வாறு யாரும் இல்லாத நிலையில்தான் கடன் முடிவுக்கு வரும்” என்கிறார் கோரே லால்.

நன்றி: தி இந்து

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க