Sunday, April 18, 2021
முகப்பு உலகம் அமெரிக்கா முதலாளித்துவத்தின் வீழ்ச்சி! அனிமேஷன் வீடியோ!!

முதலாளித்துவத்தின் வீழ்ச்சி! அனிமேஷன் வீடியோ!!

-

முதலாளித்துவ பொருளாதாரம் (காபிடலிசம்) எப்படி வீழ்ச்சியடைகிறது? வீழ்ந்த பொருளாதாரத்தை மறு சீரமைக்கிறோம் என்று சொல்லி ஒரு நாட்டின் சுமை மற்ற நாடுகள் மீது எப்படி ஏற்றப்படுகிறது? உண்மையாக காபிடலிசத்தின் விளைவுகள் என்ன? இவற்றை எளிமையாக விளக்குகிறார் டேவிட் ஹார்வி எனும் இங்கிலாந்து பேராசிரியர்.

டேவிட் ஹார்வி2010ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வழங்கப்பட்ட ஹார்வியின் உரையை எளிமையாக புரிந்து கொள்ளும் வண்ணம் RSA எனும் நிறுவனம் அதை அனிமேஷன் யுத்தியுடன் அழகான படக் காட்சிகளில் விவரிக்கிறது. நீங்கள் இங்கே காண்பது அந்த உரையின் நேரடி மொழிபெயர்ப்பல்ல, மாறாக உரையின் எளிமையான குறிப்புகள் தான்.

அந்த வீடியோவை பாருங்கள். வீடியோவை  புரிந்து கொள்வதற்கு ஹார்வியின் உரையைக் குறிப்புகளாக தருகிறோம்.

“எல்லாம் சரி நாம் எப்படியோ இந்த முதலாளித்துவ பொருளாதார அழிவில் சிக்கியிருக்கிறோம். இதற்கு உலகளாவிய அறிஞர்கள் பல காரணங்களை சொல்லுகிறார்கள்,  குறிப்பாக சிலவற்றை பார்ப்போம்:

 1. மனித இயல்பு
  ஆலன் கிரீன் ஸ்பேன் கருத்துப்படி ‘இதற்கெல்லாம் காரணம் மனித இயல்பு தான், அதை நாம் ஒன்றுமே செய்ய முடியாது என்கிறார். அதாவது வியாபாரம் செய்கிறவர்களின் பேராசை, பங்கு வர்த்தகத்தில் ஈடுபடுவோரின் கற்பனைகள், அவர்களின் லாபவெறி இவைதான் பொருளாதார வீழ்ச்சிக்கான முக்கிய காரணம், நாம் ஒன்றும் செய்ய முடியாது’.
 2. ஒழுங்கு முறை நிறுவனங்களின் தோல்வி:
  ஒழுங்குமுறை ஆணையங்களின் அதிகாரிகள் தூங்கிக் கொண்டிருக்க அவர்களை கட்டுபடுத்த வேண்டிய அரசு கண்டு கொள்ளாமல் இருந்ததின் விளைவு. அதனால் உலக அளவில் ஜி-20 போன்ற அமைப்புகள், நிதி நிறுவன செயல்பாடுகளை கண்காணிப்பது தான் சரி என்ற ஒரு தீர்வும் முன்வைக்கப்படுகிறது.
 3. பொய்யான கோட்பாடுகள்
  எல்லாருமே அதிகமாக கற்பனை செய்துக்கொண்டார்கள். ஹயக் போன்றவர்களின் கோட்பாடுகளில் அதிகம் நம்பிக்கை வைத்து விட்டோம். கீன்ஸ், மீன்ஸ்கி போன்ற அறிஞர்களின் கோட்பாடுகளுக்கு திரும்ப வேண்டும்.
 4. கலாச்சார நிகழ்வுகள்
  இந்த மாதிரியான பொருளாதார வீழ்ச்சிக்கு பின்னால் கலாச்சாரக் காரணங்கள் இருப்பதாக பெரும்பாலான மக்கள் நம்புகிறார்கள். பிரெஞ்சுக்காரர்கள் இது ’ஆங்கிலோ சாக்ஸன் பிரச்சனை’ என்கிறார்கள். மாறாக தென் அமெரிக்கர்களோ ஒரு வழியாக அமெரிக்கா பாடம் கற்றுகொண்டதாக உற்சாகமடைகிறார்கள். இன்னொரு பக்கம் ‘கிரீஸ் நாட்டின் வீழ்ச்சி, அந்நாட்டின் ஒழுக்கமில்லாத நடத்தையால் வந்தது’ என ஜெர்மானியர்கள் நினைக்கிறார்கள்.
 5. கொள்கைகளின் தோல்விகள்
  பாக்ஸ் செய்தி நிறுவனத்தை சேர்ந்த க்ளேன் பெக் எளிமையாக் கூறுகிறார், இவை அளவுக்கு அதிகமான ஒழுங்கு முறை சட்டங்கள்தான் காரணம்.

இந்தக் காரணங்களை எல்லாம் வைத்துக்கொண்டு நான் என் பார்வையில் அதாவது மார்க்சிய பார்வையில் இதற்கான காரணம் சொல்ல முனைகிறேன்.

ஒன்றரை  வருடத்துக்கு முன்  இங்கிலாந்து அரசியார், லண்டன் ஸ்கூல் ஆப் எகனாமிக்சின் பொருளாதார அறிஞர்களிடம், “நீங்கள் யாரும் எப்படி இந்த நெருக்கடியை முன் கூட்டியே அறிவிக்கவில்லை?” என்று கேட்டார். ஒருவரும் சரியான பதில் சொல்லாத நிலையில் பேங்க் ஆப் இங்கிலாந்திடம் அதே கேள்வியை கேட்டார். அதற்கு பதிலாக அரசியாருக்கு ஒரு கடிதம் எழுதப்பட்டது, அதன்  சுருக்கம், “இங்கு பல அறிஞர்கள், மேதைகள் எல்லாம் இந்த துறையில் வேலை செய்கிறார்கள், கண்காணிக்கிறார்கள் ஆனால் எல்லருமே தவறவிட்ட ஒரு விஷயம் ‘அமைப்பு ரீதியான அபாயம்’”.

அமைப்பு ரீதியான அபாயம் என்பதை மார்க்சிய பார்வையில் “மூலதன குவிப்பின் உள் முரண்பாடு” என வைத்துக் கொள்ளலாம். இதன் அடிப்படையில் முதலாளித்துவ பொருளாதார வரலாற்றில் இத்தகைய நெருக்கடிகளை பற்றி பார்போம்.

1970களில் ஏற்பட்ட நெருக்கடி, தொழிலாளர் யூனியன்களின் அளவுக்கதிகமான அதிகாரத்தால் ஏற்பட்டது என்று சொல்லப்பட்டது. அமெரிக்காவில் அடக்கு முறை மூலம் தொழிலாளர் இயக்கங்கள் நசுக்கப்பட்டன, இந்தியாவிற்கும் சீனாவிற்க்கும் வேலைகள் ’அவுட்சோர்ஸ்’ செய்யப்பட்டன. தொழிலாளர்களின் பேரம் பேசும் திறன் குறைந்தது, சம்பள செலவும் வீழ்ந்தது.

1980 களில் தொழிலாளர் பிரச்சனை தீர்க்கப்பட்டு விட்டது. ஆனால், நெருக்கடி வேறு வடிவில் வெளிப்பட்டது.  தொடர்ந்து வீழ்ந்து வந்த ஊதிய வீதங்கள், மக்களின் வாங்கும் சக்தியை பாதித்தன. அதனால் சந்தையில் பொருட்களுக்கான தேவை குறைந்தது. அதற்கு தீர்வாக மக்களுக்கு அதிகமாக கடன் அட்டைகள் கொடுப்பதன் மூலம் வாங்கும் சக்தியை அதிகரிக்க முயற்சித்தார்கள்.

கடன் சார்ந்த பொருளாதாரம் வளரத் தொடங்கியது. அமெரிக்காவிலும், இங்கிலாங்திலும் தனிநபர்கள் கடன் சுமை அதிகரித்தது. இப்பொழுது கவனமாக ஒரு விஷயத்தை பாருங்கள் – காபிடலிசம் எந்த ஒரு பிரச்சினைக்குமே நிரந்தர தீர்வு சொல்லாமல் பிரச்சினையை புவியியல் ரீதியாக சுற்றுக்கு விடுகிறது. அதாவது ஒரு நாட்டின் சுமையை இன்னொரு நாட்டின் மீது ஏற்றி விடுவது.

அமெரிக்கா பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு விட்டதாக அனைவரும் நினைக்கிறார்கள். ஆனால் சுமையை உண்மையாக சுமந்து கொண்டிருந்த கிரீஸ், போர்ச்சுக்கல், அயர்லாந்து, ஸ்பெயின் போன்ற ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரங்கள் வீழ்ச்சியடைகின்றன. இப்பொழுது நெருக்கடி நாடுகள் கடன் கட்டத் தவறி திவாலாவதாக வெளிப்படுகிறது.

முதலாளித்துவ பொருளாதாரத்தையும், மூலதனம் என்பதையும் மார்க்சிய பார்வையில் பரிசீலிப்போம்.

நாம் கொஞ்சம் பணம் கொண்டு சந்தையில் உழைப்பையும், கச்சா பொருட்களையும் வாங்குகிறோம். அதனை ஒரு தொழிற்சாலையில் பொருட்களை உற்பத்தி செய்ய பயன்படுத்துகிறோம். உற்பத்தியான பொருளை சந்தையில் விற்று முதலில் போட்ட பணத்தையும் கூடுதல் லாபத்தையும் சம்பாதிக்கிறோம். இப்படியாக லாபம் என்பது உபரியாக சேர்ந்து, சேர்ந்து இன்னும் கொஞ்சம் முதலாகிறது. அந்த முதலை மீண்டும் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு போடுகிறோம். இப்படி வளர்ந்த நிறுவனம் இன்னும் அதிகமாக உற்பத்தி செய்ய அதிக லாபம் கொண்டு விற்கப்படுகிறது.

இந்த நடைமுறையில் மிக முக்கியமான சிக்கல்கள் இருக்கின்றன. ‘உற்பத்தியை நிகழ்த்துவதற்கு சரியான இடத்தில், சரியான நேரத்தில், சரியான அளவில் பணத்தை எப்படி கொண்டு சேர்ப்பது?’. அதற்கு நிதி நிர்வாக திறமை தேவைப்படுகிறது. நிதி நிர்வாக திறமை தேவைப்படுவதால் நிதி நிறுவனங்கள் பெருக்கின்றன.

அமெரிக்காவிலும் சரி, இங்கிலாந்திலும் சரி, நிதி நிறுவனங்கள் இப்படியாக ஒரு பக்கம் கொழுக்க இன்னொரு பக்கம் உற்பத்தியோ வீழ்ச்சியடைந்தது. இதை சரியாக கவனிக்கும் யாருமே காபிடலிசத்தை எதிர்க்கத்தான் செய்வார்கள். காரணம், காபிடலிசம் இருக்கும்வரை இந்தப் பிரச்சனைகள் சுழற்சியாக தொடர்ந்தபடி தான் இருக்குமே தவிர தீராது.

இந்தியாவைப் பாருங்கள் கடந்த ஒரு வருடத்தில் பில்லியனர்களின் எண்ணிக்கை (அதாவது ரூ 5,000 கோடி சொத்து மதிப்புள்ளவர்கள்) மூன்று மடங்காகியுள்ளது. முன்னணி வேலியிட்ட நிதி நிறுவனங்களின் தலைமை அதிகாரிகள் சம்பாதிக்கும் பணம் $250 மில்லியனிலிருந்து (ரூ 1,250 கோடி), $ 3 பில்லியனாக  (ரூ 15,000 கோடி) உயர்ந்துள்ளது.

நிச்சயமாக ஒரு சிலர் மட்டும் கொழுப்பதாக இந்த உலகம் இருக்கக் கூடாது. நாம் அனைவரும் வாழ வேண்டிய உலகம். இதை யாரும் விவாதிப்பதில்லை.

அரசியல்வாதிகள் ‘அடுத்த தேர்தலில் எனக்கு ஓட்டு போடுங்கள், அனைத்து பிரச்சனைகளையும் நான் தீர்த்து வைத்து விடுவேன்’ என்று சொல்லுவார்கள். ஆனால், உண்மையான பிரச்சினை என்னவென்று நமக்கு தெரியும், ஆனால் அதற்கான  தீர்வை பற்றி பேசாத அரசியல்வாதிகளை நம்புவது முட்டாள்தனம்.

அறிவுத் துறையில் இருக்கும் நமக்கு இதைப் பற்றி பேசுவதற்கான கடமை இருக்கிறது.”

 1. Humans have been experimenting with many systems over the period. There is no doubt that flaws in the capitalism has to be fixed.

  Whatever isam, humans will find a way to exploit fellow human.

  http://www.amazon.com/Marx-Beginners-Rius/dp/0375714618/ref=sr_1_1?s=books&ie=UTF8&qid=1363191113&sr=1-1&keywords=rius

  Could you guys translate the above book as well? It will be helpful for younger generation to understand the history and various isams in a fun way

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க