Thursday, June 13, 2024
முகப்புமறுகாலனியாக்கம்தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்பாலியல் வன்முறை - திருவாரூர் பொதுக்கூட்ட உரை - ஆடியோ!

பாலியல் வன்முறை – திருவாரூர் பொதுக்கூட்ட உரை – ஆடியோ!

-

பேரணிபெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு முடிவு கட்டுவோம்!
ஆணாதிக்கத் திமிரை ஒழிப்போம்!
மனித மதிப்பீடுகளை மழுங்கடிக்கும் மறுகாலனியாக்கக் கலாச்சாரத்தைத் துடைத்தெறிவோம்!

என்ற முழக்கங்களோடு பேரணியும், பொதுக்கூட்டமும், ம.க.இ.க.வின் மையக் கலைக்குழுவினர் நடத்திய புரட்சிகர கலைநிகழ்ச்சியும் மார்ச் மாதம் 2ஆம் தேதி திருவாரூரில் நடைபெற்றது. பேரணி திருவாரூர் பழைய ரயில் நிலையம் முன்பு மாலை 4.00 மணிக்குத் தொடங்கியது.

தோழர் கு.ம.பொன்னுசாமி (வி.வி.மு. திருவாரூர்) தலைமையேற்றார்.

பேரணியை துவக்கி வைத்து உரையாற்றினார் மக்கள் கலை இலக்கிய கழகத்தின் மாநில இணைச் செயலர் தோழர் காளியப்பன்:

ஒரு பெண்ணுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டிய சட்டமும், நீதித் துறையும், போலீசும், அதிகாரவர்க்கமும்தான் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், கொடுமைகள் இழைப்பதில் முதலிடத்தில் உள்ளனர்.

ஆனால் கணநேரப் பாலியல் தூண்டுதல்களால் வெறி கொண்டு வல்லுறவை ஏவும் சமுதாயத்தில் உள்ள உதிரிக் கிரிமினல்களால்தான் பெண்களுக்குப் பாதிப்பு ஏற்படுகிறது எனப் பலரும் நம்புகிறார்கள். பெண்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதாகக் கூறப்படும் அரசு எந்திரமே பெண்களுக்கு எதிராகத்தான் உள்ளது.

வங்கிப் பணத்துக்குப் பொறுப்பான காசளரே கொள்ளையில் ஈடுபடுவதைப் போலத்தான், சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகார வர்க்கத்தினரே, ஒழுங்கை நிலைநாட்டக் கடமைப்பட்டுள்ள காவலர்களை அக்குற்றத்தில் ஈடுபடுகிறார்கள்.

பெண்கள் மீதான இந்துத்துவ, சாதிய, ஆணாதிக்க அடக்குமுறைகளைப் பாதுகாப்பதாகவே அரசின் உறுப்புகள் உள்ளன.

இவர்களால் பெண்களுக்கு வரும் ஆபத்துகளை மிக மிக கொடியது. வரம்பற்ற அதிகாரம் பெற்றுள்ள சீருடை அணிந்த கிரிமினல்களைக் கொண்டுள்ள இத்தகைய அதிகார அமைப்புகளே முதன்மைக் குற்றவாளிகள்.

டெல்லி பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபட்ட கிரிமினல்களுக்குக் கூட உள்ளூர பயம் இருந்திருக்கும். எந்தவிதமான தடயங்களும் இன்றி தப்பிக்க வேண்டுமே என்கிற தவிப்பு இருந்திருக்கும். ஆனால், போலீசுக்கும், இராணுவத்திற்கும் இவ்விதப் பயமோ, பதற்றமோ இருப்பதில்லை. ஏனென்றால் இவர்கள் சீருடை அணிந்த கிரிமினல்கள், எவ்வித அச்சமும் இன்றி அட்டூழியங்களில் ஈடுபடுகிறார்கள். எங்களை யாரும் ஆட்டவோ அசைக்கவோ முடியாது என்று ஆணவத்தோடு கொட்டம் அடிக்கிறார்கள்.

விபச்சாரக் குற்றக்கும்பல்களின் அட்டூழியங்கள் அடுத்தடுத்து வெளிவந்த போதிலும், இவை எல்லாவற்றிலுமே அரசு உயர் அதிகாரிகள் போலீசு – இராணுவ அதிகாரிகள், ஓட்டுக்கட்சிப் பிரமுகர்கள், நீதித்துறையினர் சம்பந்தப்பட்டிருந்த போதிலும் இவர்கள் யாருமே தண்டிக்கப்படவில்லை.

இன்றைய தந்தை வழி ஆணாதிக்க – இந்துத்துவ சாதியாதிக்க அரசியலமைப்பு முறையை வீழ்த்தி விட்டு, புதிய ஜனநாயக அரசியலமைப்பை நிறுவும் திசையில் போராட்டங்களை வளர்த்தெடுப்பதே இன்றைய அவசரத் தேவையாக உள்ளது.

மாறாக போலீசுக்கு இன்னும் அதிக அதிகாரங்களைத் தருவதம் தண்டனைகளைக் கடுமையாக்குவதும், பாம்புக்குப் பால் வார்த்த கதையாகவே முடியும்.

மாலை 6.00 மணிக்குப் பனகல் சாலையில் பொதுக்கூட்டம் பு.மா.இ.மு. மாவட்ட அழைப்பாளர் தோழர் ஆசாத் தலைமையில் நடைபெற்றது. விவசாயிகள் விடுதலை முன்னணியின் பட்டுக்கோட்டை வட்டார அமைப்பாளர் தோழர் மாரிமுத்து கண்டன உரையாற்றினார்.

பதின்மூன்று வயது பள்ளி மாணவி தமிழ்த்தரணி உரையாற்றினார்:

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இதனை எதிர்த்து ஆங்காங்கே சில போராட்டங்கள் நடந்தாலும் ஒட்டுமொத்த சமூகமோ, ஆணாதிக்க மனோபாவத்தில் ஊறிப் போய் இருக்கிறது. பாதிக்கப்படும் பெண்ணையே குற்றவாளியாக்கி அவளது நடத்தையைச் சந்தேகத்துக்கு உள்ளாக்கும் ஆணாதிக்கத் திமிரை என்னவென்று சொல்வது?

ஆணாதிக்கவாதி என்றவுடன் பின்னால் திரும்பி பார்க்கவேண்டாம். இந்தக் கேள்விகள் அனைத்தையும் உங்களை நோக்கித்தான் கேட்கிறேன். நேர்மையிருந்தால் எனக்குப் பதில் கூறுங்கள்.

இளம்பெண்கள், பள்ளி செல்லும் சிறுமிகள், 4 வயதுக்குட்பட்ட குழந்தைகளைக் கூட பாலியல் வன்புணர்ச்சி செய்ததாக அன்றாடம் செய்தித்தாளில் படித்து எத்தனை பேர் மன உளைச்சலுக்கு ஆளானீர்கள்? உங்கள் வீட்டிலிருக்கும் ஒருவருக்கு அவ்வாறு நடந்திருந்தால் வெறுமனை உச்சுக் கொட்டி பரிதாபப்பட்டு விட்டு அடுத்த வேலையைப் பார்க்கப் போய் விடுவீர்களா? இல்லை என்றால் இது போன்ற சம்பவங்களைப் பற்றிக் கேள்விப்பட்ட பிறகும் உங்களுக்கு ஏன் கோபம் பீறிட்டு வரவில்லை? இது போலித்தனம் இல்லையா? ஆணாதிக்கப் புத்தி இல்லையா?.

கூட்டத்தில் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் தோழர் துரை சண்முகம் ஆற்றிய சிறப்புரையின் ஒலிப்பதிவை,  பேரணி, பொதுக்கூட்ட படங்களோடு வீடியோவில் கேட்கலாம்.

நிறைவாக விவசாயிகள் விடுதலை முன்னணி வேதாரண்ய வட்டாரச் செயலாளர் தோழர் தனியரசு நன்றி நவின்றார்.

தகவல்:
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, திருவாரூர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க