டெல்லி வல்லுறவுக் கொலையைத் தொடர்ந்து எழுந்த போராட்டத்தையும் அரசுக்கு எதிரான பொதுக்கருத்தையும் சமாளிக்கும் பொருட்டு நியமிக்கப்பட்ட வர்மா கமிசன், ஒரு மாதத்தில் தனது அறிக்கையைச் சமர்ப்பித்து விடும் என்று மத்திய அரசு எதிர்பார்க்கவில்லை போலும். பெண்கள் மீதான வன்கொடுமைகளைத் தடுப்பதற்கேற்ற வகையில் குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் தண்டனைச் சட்டத்தில் மாற்றங்கள் செய்வது உள்ளிட்ட பரிந்துரைகளை வழங்குவதே இந்தக் கமிசனுக்குத் தரப்பட்ட பணி. இதற்குத் தேவையான தரவுகளையும் ஆலோசனைகளையும் கொடுக்க வேண்டியவர்கள் போலீசு மற்றும் சமூக நலத்துறையின் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள்.
ஆனால் மத்திய அரசின் சார்பிலோ, எந்தவொரு மாநில அரசின் சார்பிலோ ஒருவர்கூட வர்மா கமிசன் முன் ஆஜராகவுமில்லை, கருத்தை அனுப்பவுமில்லை. நாடு முழுவதும் மட்டுமின்றி, உலகம் முழுவதும் சந்தி சிரித்துவிட்ட இப்பிரச்சினையின் மீது அரசாங்கமும் அதிகார வர்க்கமும் காட்டியிருக்கும் அலட்சியத்திற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை. இருப்பினும் இப்பிரச்சினையில் அக்கறை கொண்ட பெண்கள் அமைப்புகள், சட்டவல்லுநர்கள் மற்றும் தன்னார்வக் குழுக்களின் உதவியுடன் தனது அறிக்கையை இக்கமிசன் விரைந்து சமர்ப்பித்துவிட்டது.
அதன் பரிந்துரைகள் பல போலீசு, இராணுவம், அதிகாரவர்க்கம், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், “காப்” பஞ்சாயத்துத் தலைவர்கள் உள்ளிட்ட பலரையும் இக்கட்டில் ஆழ்த்துவதாக இருந்ததால், அத்தகைய பரிந்துரைகளை வடிகட்டிவிட்டு, ஒரு அவசரச் சட்டத்தையும் அரசு பிறப்பித்திருக்கிறது. தனது ‘அவசரத்துக்கு’ அரசு அளித்த விளக்கம் நகைப்புக்குரியது. கமிசன் அறிக்கையை நாடாளுமன்றத்தில் விவாதித்துச் சட்டமாக்கி அதற்கு அரசுத்தலைவரின் ஒப்புதலையும் பெற்ற பிறகுதான் சட்டம் அமலுக்கு வரும் என்பதால், இந்த இடைப்பட்ட காலத்தில் பல குற்றவாளிகள் பழைய சட்டத்தின் ஓட்டைக்குள் புகுந்து தப்பித்து விடுவார்கள் என்றும், அதனை அனுமதிக்கக் கூடாது என்பதற்காகத்தான் அவசரச் சட்டம் கொண்டு வந்திருப்பதாகவும் இதற்கு விளக்கமளித்தார், ப.சிதம்பரம்.
அவர் கூறியதற்கு மாறாக, எந்தெந்த வல்லுறவுக் குற்றவாளிகளெல்லாம் ‘சிக்கிக் கொள்ளக் கூடாது’ என்று அரசு கருதுகிறதோ, அவர்களையெல்லாம் தப்பிக்க வைப்பதற்காகவே இந்த அவசரச் சட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. வர்மா கமிசன் அறிக்கையையும் மத்திய அரசின் அவசரச் சட்டத்தையும் ஒப்பிட்டுப் பார்ப்பவர்கள் இந்த உண்மையைப் புரிந்து கொள்ள முடியும்.
முதலாவதாக, பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் இழைப்பதில் முதலிடத்தில் இருக்கும் இராணுவம், துணை இராணுவப் படைகள் மற்றும் போலீசாரைத் தப்பிக்க வைப்பது எப்படி என்பது அரசின் கவலை. 1958-இல் மத்திய அரசு இயற்றிய ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம் அமலில் இருக்கும் பகுதிகளில் – அதாவது 7 வடகிழக்கிந்திய மாநிலங்கள் மற்றும் காஷ்மீரில் – சந்தேகப்படுகின்ற யாரையும் சுட்டுக் கொல்லும் அதிகாரம், எந்த வீட்டுக்குள்ளும் நுழைந்து சோதனை போடும் அதிகாரம், யாரையும் கடத்திச் செல்லும் அதிகாரம் இராணுவத்துக்கும், துணை இராணுவப் படைகளுக்கும் இருக்கிறது. இந்தப் பகுதிகளில் கொலை, சித்திரவதை, பாலியல் வல்லுறவு, திருட்டு போன்ற எத்தகைய குற்றங்களை இராணுவத்தினரோ, துணை இராணுவப் படையினரோ இழைத்தாலும் அவர்கள் மீது அரசோ, நீதிமன்றமோ எவ்வித நடவடிக்கையையும் எடுக்க முடியாது. அதற்கான அதிகாரம் இராணுவத்தினருக்கு மட்டுமே உண்டு என்பதுதான் இச்சட்டம். இச்சட்டத்தின் பாதுகாப்புடன் இராணுவப்படைகள் நடத்தி வரும் கொலைகள், வல்லுறவுகளுக்கு கணக்கே இல்லை.
2004-ஆம் ஆண்டில் மக்கள் விடுதலைப் படையின் தீவிரவாதி என்று பொய்க்குற்றம் சாட்டி மணிப்பூரில் தங்ஜம் மனோரமா என்ற பெண்ணைக் கைது செய்து, கும்பல் வல்லுறவுக்கு ஆளாக்கி, பெண் உறுப்பிலேயே சுட்டுத் தெருவில் வீசினர் அசாம் துப்பாக்கிப் படையினர். இதனையொட்டி, இந்திய இராணுவமே எங்களையும் வல்லுறவுகொள்” என்று எழுதிய பதாகையைப் பிடித்தபடி மணிப்பூர் தாமார்கள் நடத்திய போராட்டம் இராணுவத்தின் யோக்கியதையை உலகுக்கே அம்பலப்படுத்தியது. ஆயுதப்படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்தை ரத்து செய வேண்டும்” என்று 2004-ஆம் ஆண்டு முதல் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தி வருகிறார், ஐரோம் சர்மிளா என்ற பெண்.
1991-இல் காஷ்மீரில் குனான் போஷ்பாரா கிராமத்தில் 18 வயது முதல் 80 வயது வரையிலான பெண்கள் அனைவரையும் வல்லுறவுக்கு ஆளாக்கியது ராஜஸ்தான் ரைபிள்ஸ் படை. 2009-இல் ஷோபியான் கிராமத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு பெண்களை வல்லுறவுக்கு ஆளாக்கி க் கொலையும் செதது இந்திய இராணுவம். தண்டனைக்கு அப்பாற்பட்டவர்களாக இராணுவக் கிரிமினல்களைப் பாதுகாக்கும் இக்கொடிய சட்டத்தை அகற்ற வேண்டுமென்று காஷ்மீர் மற்றும் வடகிழக்கிந்திய மாநிலங்களின் அரசுகள் பலமுறை குரல் கொடுத்திருக்கின்றன.
2004-இல் அரசு நியமித்த நீதிபதி ஜீவன்ரெட்டி கமிசன் முதல் முன்னாள் உளவுத்துறைத் தலைவர், மத்திய உள்துறைச் செயலர் உள்ளிட்ட பலரும் இராணுவத்தின் அத்துமீறல்களைப் பாதுகாக்கும் இச்சட்டத்தை எதிர்த்திருக்கின்றனர். எனினும், இச்சட்டம் அகற்றப்படவில்லை. “இச்சட்டத்தின் பாதுகாப்பை வல்லுறவுக் குற்றவாளிகளுக்கு வழங்கக் கூடாது; வல்லுறவுக் குற்றமிழைக்கும் இராணுவத்தினரை, மற்றெல்லா குற்றவாளிகளையும் போல நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தித் தண்டிக்க வேண்டும்” என்று கூறுகிறது வர்மா கமிசன் அறிக்கை.
இவ்வறிக்கை வெளியான மறுநாளே, “இராணுவத்தையெல்லாம் விசாரணைக்குட்படுத்த முடியாது” என்று அறிவித்தார் சட்ட அமைச்சர் அசுவினி குமார். “இராணுவத்துக்கு உடன்பாடு இல்லை என்பதால், வர்மா கமிசனின் இந்தச் சிபாரிசை அவசரச் சட்டத்தில் சேர்க்கவில்லை” என்று வெட்கமே இல்லாமல் கூறியிருக்கிறார், ப.சிதம்பரம்.
“சட்டம் ஒழுங்கைக் காக்கும் பொறுப்பில் உள்ள இராணுவம், போலீசு உள்ளிட்டோர் மற்றும் காப்பாளர் பொறுப்பில் இருக்கும் ஆசிரியர்கள், பெண்கள் இல்லங்களின் நிர்வாகிகள் போன்றவர்கள் வல்லுறவுக் குற்றத்தில் ஈடுபடும்போது, அவர்கள் மற்றவர்களை விடக் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும். இத்தகையோர் இழைக்கும் குற்றங்களுக்கு, சம்பந்தப்பட்ட குற்றவாளிகளின் மேலதிகாரிகளும் பொறுப்பாக்கப்பட வேண்டும். வல்லுறவினால் பாதிக்கப்பட்ட பெண்கள் அளிக்கும் புகாரைப் பதிவு செயத் தவறும் போலீசு அதிகாரிக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கவேண்டும்” என்று வர்மா அளித்துள்ள எல்லா சிபாரிசுகளையும் அரசு நிராகரித்து விட்டது. மொத்தத்தில், இராணுவம் முதல் போலீசு வரையிலான சீருடைக் கிரிமினல்களும் அதிகார வர்க்கத்தினரும் தனிவகைச் சாதியாக, மக்களை ஒடுக்கும் உரிமை பெற்றவர்களாக வழக்கம் போல நீடிப்பார்கள் என்பதையே அரசு கொண்டு வந்திருக்கும் அவசரச் சட்டம் மறுஉறுதி செகிறது.
கிரிமினல் அரசியல்வாதிகளையும் அவசரச் சட்டம் விட்டுக் கொடுக்கவில்லை. வல்லுறவுக் குற்றம் சாட்டப்பட்ட அரசியல்வாதிகளைத் தேர்தலில் நிற்க அனுமதிக்கக் கூடாது என்ற வர்மாவின் சிபாரிசும் நிராகரிக்கப்பட்டுவிட்டது. நாட்டிலுள்ள சட்டமன்ற – நாடாளுமன்ற உறுப்பினர்களில் 260 பேர் வல்லுறவுக் குற்றம் சாட்டப்பட்டவர்கள். சமீபத்தில் குஜராத் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் கொலை, ஆட்கடத்தல் அல்லது வல்லுறவுக் குற்றம் சாட்டப்பட்டவர்கள். அவ்வளவு ஏன், தற்போதைய மாநிலங்களவை துணைத்தலைவரும் காங்கிரசு எம்.பி.யுமான குரியன், சூரியநெல்லி வல்லுறவு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர். இவ்வழக்கு முழுவதையுமே மறுவிசாரணை செய வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளபோதும், பாதிக்கப்பட்ட பெண்ணே குரியனுக்கு எதிராகப் புகார் கொடுத்துள்ள போதும், குரியனை மாநிலங்களவைத் துணைத்தலைவர் பதவியிலிருந்து அகற்றுவதற்குக்கூட காங்கிரசு கட்சி மறுத்துவிட்டது. இலஞ்ச-ஊழல் குற்றவாளிகளைப் போலவே வல்லுறவுக் குற்றவாளிகளும் எல்லாக் கட்சிகளிலும் நிறைந்திருப்பதனால், தங்கள் இனத்தைத் தப்புவித்துக் கொள்ளும் பொருட்டு, இந்தப் பரிந்துரையையும் நிராகரித்து விட்டது அரசு.
“வல்லுறவு என்பது ஒரு பெண்ணின் மீது ஆண் நிகழ்த்தும் கொடிய வன்முறை. எனவே வல்லுறவு (Rape) என்பதைக் கற்பு அழித்தல் அல்லது மானபங்கம் செய்தல் (outraging the modesty) எனக் கூறக்கூடாது” என்கிறது வர்மா கமிசன். இந்தப் பரிந்துரையையும் அரசின் அவசரச் சட்டம் நிராகரித்துவிட்டது.
தன் மீது நிகழ்த்தப்பட்டது வல்லுறவு (கற்பழிப்பு) என்று ஒரு பெண் கூறவேண்டுமானால், தான் ஏற்கெனவே கற்புள்ளவள் என்று நிரூபிக்க வேண்டியிருக்கும் என்ற நிலைமையை இந்த அவசரச் சட்டம் வழிமொழிகிறது. இதன் மூலம் ஒரு பெண், தன் உடல் மீது கொண்டிருக்கும் தன்னாட்சி உரிமையும், அவளுடைய கண்ணியமும் நிராகரிக்கப்படுகிறது. கற்பு, கன்னித்தன்மை போன்ற நிலப்பிரபுத்துவக் கருத்துக்கள் பெண்ணின் மீது மட்டும் திணிக்கப்படுவதனால், சட்டப்படியே ஆணும் பெண்ணும் சமம் அல்ல என்றாகிறது.
1974-இல் மதுரா என்ற 16 வயது பழங்குடிப் பெண்ணை வல்லுறவுக்கு ஆளாக்கிய இரு போலீசார் விடுவிக்கப்பட்டது முதல் சமீபத்தில் சூரியநெல்லி வழக்கில் ஒரு 17 வயதுப் பெண்ணைக் குதறிய 34 குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டது வரையில் பல வழக்குகளில், பாதிக்கப்பட்ட பெண்ணை நடத்தை கெட்டவளாகச் சித்தரித்தோ, அல்லது அந்தப் பெண் தான் எதிர்த்துப் போராடியதை நிரூபிக்க முடியாவிட்டால் , அதனை பெண்ணின் சம்மதத்துடன் நடந்த உடலுறவாகவோ காட்டியோதான் குற்றவாளிகள் தப்பியிருக்கின்றனர்.
“பெண்ணின் தெளிவான சம்மதம் இல்லாமல் அவள் மீது ஏவப்படும் பாலியல் உறவு முயற்சி அனைத்தும் வல்லுறவுக் குற்றமே” என்றும், “மனைவியின் சம்மதமில்லாமல் கணவன் அவள் மீது பாலுறவைத் திணிப்பதும் வல்லுறவுக் குற்றமே” என்றும் வர்மா கமிசன் கூறுகிறது.
மத்திய அரசின் அவசரச் சட்டம் இதையும் நிராகரித்து, “திருமணம் என்பதே உடலுறவுக்கான சம்மதத்தைக் குறிப்பதுதான்” என்று சொல்லி, வல்லுறவுக்கான உரிமத்தை கணவனுக்கு வழங்குகிறது. திருமணம் என்ற ஏற்பாட்டை, சுதந்திரமான சம உரிமை கொண்ட இரு நபர்களுக்கு இடையிலான உறவாக அல்லாமல், ஆணின் உடைமையாகவும், போகப்பொருளாகவும் மாறுவதற்கு பெண் சம்மதிப்பது என்ற பொருளிலேயே மண உறவினை விளக்குகிறது இந்த அவசரச்சட்டம்.
“தொழிலாளி வேலைநிறுத்த உரிமை கேட்டாலே, கம்பெனியை மூடநேரிடும்” என்று அச்சுறுத்தும் முதலாளியைப் போல, “கணவனை வல்லுறவுக் குற்றம் சாட்டி சிறைக்கு அனுப்பிவிட்டால், மண உறவு அறுந்துவிடும்” என்று பூச்சாண்டி காட்டுகிறார்கள் ஆணாதிக்கவாதிகள். “மண உறவைப் பாதுகாக்க விரும்பும் ஆண் வல்லுறவில் ஈடுபடலாமா?” என்ற எளிய கேள்வி கூட அவர்கள் மண்டையில் எழுவதில்லை. தற்போதுள்ள சட்டங்களின்படி, “மனைவியைக் கணவன் அடிப்பது குற்றம்; ஆனால் வல்லுறவு கொள்வது அவன் உரிமை”.
இவையனைத்தையும் தொகுத்துப் பார்ப்போமானால், ‘குலமாதர்கள்’ எனப்படுவோர், ஆணுடைய விருப்பத்துக்கு இணங்கி நடக்கும் கற்புநெறி பிறழாதவர்கள் என்ற காரணத்தினால், உடலுறவுக்கு அவளுடைய சம்மதத்தை ஒரு ஆண் (கணவன்) பெறத் தேவையில்லை. எனவே, ஒரு மனைவி எனப்படுபவள், கணவன் தன்னை வல்லுறவு கொண்டதாகக் குற்றம் சாட்டவே முடியாது.
‘விலை மாதர்கள்’ எனப்படுவோர், ‘இயல்பிலேயே’ நடத்தை கெட்டவர்களாக இருப்பதால், அவர்களுடைய சம்மதத்தையும் ஒரு ஆண் பெறவேண்டியதில்லை. தனது சம்மதமின்மையையும் எதிர்ப்பையும் நிரூபிக்க முடிந்தால் மட்டுமே, ஒரு ஆண் மீது அவள் குற்றம் சாட்டமுடியும். ஆகவே, மனைவியும் விலைமாதுவும் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட முடியாதவர்கள் என்று ஆகிறது.
ஆசிட் வீசிய குற்றவாளியைத் தண்டிக்க வேண்டுமானால், தான் ஆசிட் வீச்சை எதிர்த்துப் போராடியதாக ஒரு பெண் நிரூபிக்க வேண்டியதில்லை. ஆனால், வல்லுறவுக் குற்றவாளியை தண்டிக்க வேண்டுமானால், தான் வல்லுறவை எதிர்த்துப் போராடியதை அவள் நிரூபிக்க வேண்டும் – இதுதான் தற்போதைய சட்டம் கூறும் நிலை.
“திருடனை எதிர்த்து நீங்கள் போராடியதை நிரூபித்தால் மட்டும்தான், திருட்டு நடந்திருப்பதாக ஒப்புக்கொள்ள முடியும். இல்லையேல், நீங்கள் மனம் விரும்பி உங்கள் பொருளை அவருக்கு வழங்கியதாகவே கருத முடியும்” என்று திருட்டுக்குச் சட்டவிளக்கம் கூறினால், அது அயோக்கியத்தனம் என்று நிராகரிக்கப்படும். ஆனால், சூரியநெல்லி வழக்கில், ஒரு 17 வயதுப் பெண்ணை 40-க்கும் மேற்பட்ட கயவர்கள் மாறிமாறிக் குதறி, அவளுடைய பெண்ணுறுப்பே சிதைந்துவிட்டதாக மருத்துவர்கள் சான்றளித்த பின்னரும், “அவள் எதிர்த்துப் போராடியதை நிரூபிக்கவில்லை என்பதால், அது சம்மதத்துடன் நிகழ்ந்த உடலுறவுதான்” என்று கூறி, குற்றம் சாட்டப்பட்ட 35 பேரில் 34 பேரை விடுவித்தது கேரள உயர் நீதிமன்றம்.
வல்லுறவுக்கெதிரான நடவடிக்கைகளை கடுமையாக்கப் போவதாக்க் கூறிக்கொண்டு கொண்டு வரப்பட்டிருக்கும் தற்போதைய அவசரச் சட்டம், வல்லுறவைப் பெண்ணின் கற்பின் மீதான தாக்குதலாக சித்தரிப்பதன் மூலம் வல்லுறவுக் குற்றவாளிகளுக்குக் கூடுதல் பாதுகாப்பையே வழங்கியிருக்கிறது.
இவை மட்டுமின்றி, “காப்” பஞ்சாயத்துகள் எனப்படும் சாதிய கட்டப் பஞ்சாயத்துகள், சாதி மறுப்பு – காதல் திருமணங்களில் தலையிடுவதற்கு எதிராகவும், கவுரவக் கொலைகள் எனப்படும் சாதிவெறிக் கொலைகளுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற வர்மா கமிசனின் பரிந்துரையையும் இந்த அவசரச் சட்டம் புறக்கணித்துவிட்டது.
“வல்லுறவு (Rape) என்ற குற்றத்தை இழைப்பவன் ஒரு ஆணாக மட்டுமே இருக்க முடியும். அதற்குப் பலியாவது ஒரு பெண்ணாகவோ, சிறுவனாகவோ, திருநங்கையாகவோ இருக்கலாம்” என்று கூறும் வர்மா கமிசன், இன்னொருவரின் ஒப்புதலின்றி ஒரு ஆணினால் திணிக்கப்படும் எந்த வடிவத்திலான உறவு முயற்சியும் (Any form of non-consensual penetration) வல்லுறவுதான் (rape) என்று கூறுகிறது.
ஆனால் மத்திய அரசின் அவசர சட்டமோ, வல்லுறவு என்ற சொல்லையே நீக்கிவிட்டு, அதனைப் ‘பாலியல் தாக்குதல்’ என்று குறிப்பிடுகிறது. இதன் மூலம் வல்லுறவுக் குற்றம் என்பது ஒரு ஆண் மட்டுமே இழைக்கக் கூடிய ஆணாதிக்க குற்றம் என்ற உண்மையை மறுத்து, ஆண்களுக்கு எதிராகப் பெண்களும் வல்லுறவுக் குற்றம் இழைத்து வருவது போன்ற சித்திரத்தை உருவாக்குகிறது. இச்சட்டத்தின் மிகவும் நயவஞ்சகமான இதயம் இதுதான். இவ்வகையில் இந்த அவசரச் சட்டம் முன்னிலும் பாதகமான நிலைமைக்கே பெண்களைத் தள்ளியிருக்கிறது.
வர்மா கமிசன் சிபாரிசுகளை ஒட்டி, அரசாங்கம் கொண்டு வந்திருக்கும் அவசரச் சட்டத்தில் எஞ்சியிருப்பவை – வல்லுறவுக் குற்றத்தை இரண்டாவது முறை செய்பவனுக்கு மரண தண்டனை. பெண்களைப் பின்தொடர்வது, தீண்டுவது என்பன போன்ற நடவடிக்கைகளைத் தண்டிக்கும் புதிய குற்றப்பிரிவுகள் போன்ற பம்மாத்து வேலைகள் மட்டுமே. பெண்கள் மீதான வன்கொடுமைகள் தீவிரப்படுவதற்குக் காரணமான தனியார்மய-தாராளமயக் கொள்கையையும், விழுமியங்கள் ஏதுமற்ற நுகர்வியத்தையும் முன்னேற்றம் என்ற பெயரில் பரப்பிக் கொண்டே, சில சட்டங்களின் மூலம் பெண்களைப் பாதுகாத்து விடலாம் என்று கருதுவது மாயை என்பதை, அதிகரித்துவரும் பாலியல் குற்றங்கள் மெய்ப்பித்து வருகின்றன.
புதிய சட்டத்திருத்தங்களைப் பயன்படுத்தி பெண்களைப் பாதுகாக்கும் பொறுப்பு, பெண்களுக்கு எதிராகக் குற்றமிழைப்பதில் முன்னிலை வகிக்கும் போலீசிடமும்; ஆணாதிக்க, சாதி ஆதிக்கத் தடித்தனத்தில் ஊறிப்போன நீதித்துறையிடமும்தான் தரப்பட்டிருக்கிறது.
வல்லுறவுத் தாக்குதலுக்கு ஆளான ஒரு பெண்ணை நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு முன்னால், மனமொடிந்து குறுகிப் போயிருக்கும் அத்தகைய பெண்களுக்கு ஆறுதல் கூறி, உளவியல் சிகிச்சை அளித்து அதன் பின்னர் விசாரணை செயும்போதுதான் அப்பெண்ணால் பேசவே இயலும். ஆனால், பாதிக்கப்படும் பெண்களின் மீது அத்தகைய அனுதாபத்தை போலீசோ நீதித்துறையோ காட்டியதே கிடையாது என்பதே நாம் அனுபவத்தில் கண்ட உண்மை. எத்தகைய நுட்பமான இதயமுள்ள சட்டத்தை உருவாக்கினாலும், அவை இந்த இதயமற்ற நிறுவனங்களில் கையில்தான் ஒப்படைக்கப்படும். இந்த நிறுவனங்களைத் தீண்டுகின்ற வகையில் வர்மா கமிசன் பரிந்துரைத்த சட்டத்திருத்தங்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டுவிட்டன. எஞ்சியிருப்பது இந்த அவசரச் சட்டத்தின் மூலம் போலீசு பெறவிருக்கும் அதிகாரம் மட்டும்தான்.
சட்டங்களின் மூலமும், சட்டத்திருத்தங்களின் மூலமும் பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒருக்காலும் தடுக்கவியலாது என்ற உண்மையை வர்மா கமிசனின் உறுப்பினர்களான முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி வர்மா, முன்னாள் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி லீலா சேத், முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்பிரமணியம் ஆகியோர் அதிர்ச்சியூட்டத்தக்க தமது சோந்த அனுபவத்திலிருந்தே நிரூபிக்கிறார்கள்.
வர்மா கமிசனின் அறிக்கையுடன் கொடுக்கப்பட்ட இணைப்புகளில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான வீடற்ற சிறார்கள் சிலரின் வாக்குமூலத்தையும் அவர்கள் இணைத்திருக்கிறார்கள்.
டில்லி போலீசின் இரவுக் காவல் படை போலீசார், ஒரு கோயிலுக்கு அருகாமையில் நின்றிருந்த இளம்பெண்ணைக் கதறக் கதறத் தூக்கிச் சென்றதாகவும், மரங்களடர்ந்த ஒரு பகுதியில் வைத்து அந்தப் பெண்ணை கும்பல் வல்லுறவுக்கு ஆளாக்கி வீசிவிட்டுச் சென்றதைத் தம் கண்ணால் கண்டதாகவும் அந்தச் சிறார்கள் வாக்குமூலம் அளித்திருந்தனர். “வெளியில் சொன்னால் போலீசார் தங்களைக் கொன்றுவிடுவார்கள் என்ற அச்சத்தின் காரணமாக, இதனை யாரிடமும் சோல்லவில்லை” என்றும் அவர்கள் தம் வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தனர்.
வர்மா அறிக்கையுடன் இணைக்கப்பட்டிருந்த இந்த வாக்குமூலத்தைப் படித்த “இந்து” நாளேட்டின் நிருபர், உடனே கோபால் சுப்பிரமணியத்தை தொடர்பு கொண்டு “இந்தப் போலீசார் குறித்துப் புகார் செய்தீர்களா, அது உங்கள் கடமையல்லவா?” என்று அவரிடம் கேட்டிருக்கிறார்.
இதற்கு கோபால் சுப்பிரமணியம் அளித்த பதில் மிகவும் முக்கியமானது. “அந்தச் சிறார்கள் அளித்த வாக்குமூலம் அனைத்தும் கலப்படமற்ற உண்மை. டெல்லி போலீசின் கொடூர முகம் முதல் சிறுவர் இல்லங்களில் நடக்கும் முறைகேடுகள் வரை பலவற்றைப் பற்றியும் அவர்கள் கூறினார்கள். கமிசன் உறுப்பினர்கள் மூவருமே இதுபற்றி விவாதித்தோம். இந்தக் குழந்தைகள் ஏற்கெனவே பலவிதமான வன்முறைகளை அனுபவித்திருக்கிறார்கள். இவர்களுடைய வாக்குமூலத்தின் அடிப்படையில் நாங்கள் புகாரைப் பதிவு செது போலீசின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரினால், இந்தக் குழந்தைகளை போலீசு பழிவாங்கிவிடும் என்று நாங்கள் அஞ்சினோம். அவர்களுடைய வாழ்க்கையை மேலும் துன்பமானதாக ஆக்க நாங்கள் விரும்பவில்லை. இந்த அமைப்பிடமிருந்து அந்தச் சிறார்களைப் பாதுகாக்க நாங்கள் விரும்பினோம். எனவேதான் புகார் கொடுக்க வேண்டாம் என்று ஒருமனதாக முடிவு செதோம்”
“எங்கள் அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகிவிட்டது. அறிக்கையில் கண்டுள்ள போலீசின் கும்பல் வல்லுறவைப் பற்றியோ, வேறு பல குற்றங்களைப் பற்றியோ இதுவரை போலீசுத்துறை கண்டுகொள்ளவில்லை. உள்துறை அமைச்சகமும் கண்டுகொள்ளவில்லை” என்று பேட்டியளித்திருக்கிறார் வர்மா கமிசன் உறுப்பினர் கோபால் சுப்பிரமணியம். (தி இந்து, பிப். 20, 2013)
வன்கொடுமைகளிலிருந்து பெண்களைக் காப்பாற்றும் பொருட்டு 631 பக்கங்களில் தங்களது பரிந்துரைகளை வழங்கியிருக்கும் வர்மா கமிசன் உறுப்பினர்கள், அந்த 631 பக்கங்களும் பயனற்றவை என்ற உண்மையை தமது சொந்த அனுபவத்திலிருந்து, ஒரே வரியில் கூறிவிட்டார்கள்.
– சூரியன்
____________________________________________________________________________________________________
____________________________________________________________________________________________________
யாரை ஏமாற்றுவதற்காக வர்மா கமிசன் அமைக்கப்பட்டது?
இந்தியா மனசாட்சி அற்ற மனிதர்கள் வாழும் நாடு; யாரிடமும் ஒழுக்கமில்லை மனித பண்பும் இல்லை மனித மாண்புகளும் இல்லை, ஆன்மிக பூமி கலாச்சார நாடு என உலகையும் தன்னைத் தானேயும் எமாற்றி வாழும் கோழை மக்கள் கூட்டம். வளரும் வல்லரசு,உலகின் மிக பெரிய ஜனநாயக நாடு என்ற வெற்று உளறல்கள் வேறு.
சந்திக்கு ஒரு கோயில், தெருவுக்கு ஒரு பள்ளிவாசல், நான்கு வீட்டுக்கு ஒரு தேவாலயம் இருக்கும் இந்தியாவில் தான் ஆண்டுக்கு 2லட்சம் சிறார்கள் பாலியல் தொழிலுக்காக கடத்தப்படுகிறார்கள். பம்பாய் சிகப்பு விளக்கு பகுதியில் வீட்டு முற்றத்தில் வாடிக்கையாளருக்காக காத்திருக்கும் சிறுமிகளை இது வரை எந்த ஒரு இந்தியனும் பார்த்ததில்லையா? வாடிக்கையாளர்கள் அன்டார்டிகா, அயர்லாந்தில் இருந்தா வருகிறார்கள் ? இல்லை! “பக்தியும் ஒழுக்கமும்” நிறைந்த ஒரு இந்தியனாக தானே இருக்கிறான். அரசாங்கம் தான் ஒரு தற்குறி என்றால் உங்கள் தனிமனித பண்புகள் எங்கே?
மனிதர்கள் என சொல்லி கொள்ளவே தகுதி இல்லாத இந்தியா வல்லரசாகி சாதிக்க போவது என்ன?
v need students n womens protest in huge numbers and de guts to identify such brutes to the society.what gives such power over women???
கமிசன், கமிட்டி என்பதெல்லாம் அப்போதைக்கு சமாளிப்பதற்குத்தான்! பொதுவாக கமிசன் என்றால் வருடக்கணக்கில் இழுது கடசியில் வழ வ்ழ என்று அறிக்கை கொடுப்பார்கள்! முதலில் தஙகள் தரப்பு யோசனைகளை குறித்த காலத்தில் தரவில்லை என அரசியல் கட்சிகளை சாடினார் ! பின்பு பொதுமக்களிடமிருந்து பெற்ற கருத்துக்களை கணினி உதவியுடன் ஆராய்ந்து , இறுதி அறிக்கையை உடனுக்குடன் கொடுத்துவிட்டார்! அரசு இயந்திரமும் பெயருக்கு ஒரு சட்டம் இயற்றிவிட்டது! சட்டத்தை நடைமுறைபடுத்துவது அவ்வளவு எளிதல்லவே! அதுவும் கிராமபுறஙளில் சட்டம் பற்றிய விழிப்புணர்வு சென்றடைய வருடக்கண்க்கில் ஆகலாம்!