ஈழத்தமிழரின் தன்னுரிமைக்கான மாணவர் முன்னணி
மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலைய மறியல்
பல்வேறு கல்லூரி மாணவர்களையும் ஒருங்கிணைத்து அமைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழரின் தன்னுரிமைக்கான மாணவர் முன்னணி, அதன் ஒருங்கிணைப்பாளர் தோழர் கணேசன் தலைமையில், இன்று 18.3.2013, திங்கள் காலை, மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையத்தை முற்றுகையிடும் போராட்டத்தை அறிவித்திருந்தது.
இன்று காலை 11.30 மணி அளவில் திரிசூலம் ரியல் நிலையத்தின் முன் திரண்ட நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஜி.எஸ்.டி சாலைக்கு குறுக்கே பேரணியாக விமான நிலையத்தின் வாயிலை நோக்கிச் சென்றனர். சென்னைக்கு உள்ளேயும் வெளியேயும் செல்லும் சாலைப்போக்குவரத்து முற்றிலுமாகத் தடைபட்டு நின்றது.
“ஈழத்தமிழரின் படுகொலைக்கு நீதி கேட்டு
ராஜபக்சேவின் கூட்டாளி டெல்லிக்கும்
பங்காளி ஐ.நாவுக்கும் காவடி தூக்குவதை நிராகரிப்போம்!
நூரம்பர்க் போன்ற போர்க்குற்ற விசாரணைக்கு
குறைவான எதையும் ஏற்க மறுப்போம்!
ஈழத்தமிழின மக்களின் சுயநிர்ணய உரிமைக்காக
பொதுவாக்கெடுப்பு நடத்தப் போராடுவோம்!
தமிழகத்தின் வீதிகளில் 80 களின் மக்கள் எழுச்சியை
மீண்டும் வெடிக்கச் செய்வோம்! “
என்ற முழக்கங்களுடன், இனப்படுகொலைக் குற்றத்தின் கூட்டாளிகளான இந்தியா மற்றும் அமெரிக்காவின் ஜெனிவா நாடகத்தை அம்பலப்படுத்தியும் முழக்கங்களை எழுப்பியபடியே, பன்னாட்டு விமானநிலையத்தின் முன் மாணவர்கள் திரண்டனர்.
விமான நிலையத்தின் வாயிலை அடைத்தவாறு நிறுத்தப்பட்டிருந்த போலீசு படை உள்ளே நுழைய முயன்ற மாணவர்களை பிடித்து வெளியே தள்ள, தடையை மீறி மாணவர்கள் உள்ளே நுழைவதற்கு ஆங்காங்கே முயற்சிக்க, இந்த தள்ளுமுள்ளு சிறிது நேரம் நீடித்தது. உடனே மாணவர்கள் ஜி.எஸ்.டி சாலையை மறித்து அமர்ந்து தமது போராட்டத்தை தொடர்ந்தனர். சுமார் அரை மணி நேரத்துக்கும் மேல் மறியல் நீடிக்கவே, போக்குவரத்து முற்றிலுமாகத் தடைபட்டது.மறியலில் ஈடுபட்ட மாணவர்களை அனைவரும் கைது செய்யப்பட்டு போலீசு ஊர்திகளில் கொண்டு செல்லப்பட்டனர்.
பச்சையப்பன் கல்லூரி, கந்தசாமி நாயுடு கல்லூரி, செயின்ட் தாமஸ் ஆர்ட் அண்டு சயின்ஸ் காலேஜ், கோயம்பேடு, ஜெயின் கல்லூரி, மீனம்பாக்கம், எல்.என் அரசு கல்லூரி, பொன்னேரி, சென்னை கிறித்தவக் கல்லூரி, ராணி மேரிக் கல்லூரி, அம்பேத்கர் சட்டக் கல்லூரி, மார்க் கிரிகோரியஸ் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த சுமார் 500 மாணவர்களும் மாணவிகளும் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.
கல்லூரிகளுக்கு விடுமுறை, கல்லூரி நிர்வாகம் மற்றும் பேராசிரியர்களுக்கு மிரட்டல் போன்ற கேடுகெட்ட வழிமுறைகள் மூலம் போலீசை வைத்து மாணவர் போராட்டங்களை பிசுபிசுக்க செய்ய ஜெயலலிதா அரசு முயன்ற போதிலும், அதனை மீறித் தமிழகமெங்கும் பரவி வருகிறது மாணவர் போராட்டம்.
_____________________________________________________________________
– செய்தி: ஈழத்தமிழரின் தன்னுரிமைக்கான மாணவர் முன்னணி
______________________________________________________________
ஈழத்தமிழின மக்களின் சுயநிர்ணய உரிமைக்காக
பொதுவாக்கெடுப்பு நடத்தப் போராடுவோம்!
தமிழகத்தின் வீதிகளில் 80 களின் மக்கள் எழுச்சியை
மீண்டும் வெடிக்கச் செய்வோம்! “
கேடுகெட்ட உண்ணாவிரத போராட்டத்தை விடுத்து திரன்மிகு போராட்ட பாதையில் அணிவகுத்து போராடும் மாணவர் போராளிகளுக்கு புரட்சிகர வாழ்த்துக்கள்.