privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.க"மாணவர்களுக்கு அரசியல் கூடாது" - தினமணியின் நரிக் கவலை!

“மாணவர்களுக்கு அரசியல் கூடாது” – தினமணியின் நரிக் கவலை!

-

ழத்தில் நடந்த இனப்படுகொலைக்கு மக்களிடம் எழுந்த எதிர்ப்பு அனுதாப அலையாக இருந்த வரை அதில் “காகிதக் கப்பல்’ விட்டு தானும் காலம் தள்ளிய தினமணி மாணவர்களிடம் போராட்ட அலையாகப் புறப்பட்டு இருக்கும் தருணத்தில் வழக்கம் போல தர்ப்பையைக் கொண்டு வந்து குறுக்கே விடுகிறது. ஜெயலலிதாவின் சீலைப்பேனாகி சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் கருணாநிதியைப் பழிதீர்க்க பழ.நெடுமாறனை களமாடவிடும் தினமணி, இந்த முறை இரா.சோமசுந்தரம் மூலமாக (திங்கள் கிழமை, 18-3-2013) “நிமிர்ந்த நன்னடையோடு தனது வெறிகொண்ட பார்வையை” நடுப்பக்கத்தில் பற்றவைத்திருக்கிறது. தன்னெழுச்சியான மாணவர்கள் போராட்டத்தை தி.மு.கவும், நல்லகண்ணு போன்றோரும் அரசியல் லாபத்திற்க்காக பயன்படுத்துவதை கண்டிப்பது போல ஆரம்பிக்கும் கட்டுரை கடைசியில் போராட்டத்தின் தீவிரத்தால் கல்லூரி மூடல் – தேர்வு பாதிப்பு – பெற்றோர்கள் மனது என்ன நிலையில் இருக்கும் – ஈழப்போராட்டத்திற்கே எதிராகப் போகும் என்று எங்கப்பன் ஜெயலலிதா வீட்ல இல்ல என தன் அரசியல் பிழைப்புவாதத்தால் தானும் அம்பலப்பட்டிருக்கிறது  சோமா அண்ட் தினமணி கம்பெனி.

dinamaniதான்தான் சோத்துக்கு தெண்டமாய், பூமிக்கு பாரமாய் தினமணி நடுப்பக்கத்தில் வைத்தி மாமாவோடு வரவு செலவு பண்ணுமளவுக்கு படித்துபாழாய் போய்விட்டோமே என்பதை உணர வேண்டிய வயதில், தன்னலம் மறுத்து சமூக உணர்வோடு போராடும் மாணவர்களைப் பார்த்து போராட்ட உணர்வுக்கு லீவு விட்டுவிட்டு இவரைப் போல தன் வயிற்றை மட்டும் பார்த்துக் கொண்டு “உணர்வு பூர்வமாகவும், அறிவு பூர்வமாகவும்” மாணவர்கள் போராட வேண்டுமாம்! அநீதிகளுக்கெதிராக தமக்குத் தெரிந்தவரை முன்னின்று போராடும் மாணவர்களை ஒடுக்கி போராட்ட அரங்கை விட்டே வெளியேற்ற கல்லூரியை இழுத்து மூடும் ஜெயா அரசின் அரசியல் எந்த இடத்திலும் சோமாவுக்கு இடறவில்லை. இதில் ஆச்சரியமும் இல்லை. அன்றைய இந்தி எதிர்ப்பு போராட்டம் முதல் மாணவர்களுக்கு அரசியல் கூடாது என்ற அர்ச்சனை அவாளிடமிருந்தும் ஆளும் வர்க்கத்திடமிருந்தும் பின் தொடர்ந்து வருவது திட்டமிட்ட நோக்கில் தான். பிழைப்புவாத அரசியலுக்கு மாணவர்கள் பலியாகிவிடக்கூடாது என்பது போல தோற்றமளித்து கருத்து சொல்லும் இவர்களின் உள்நோக்கமே மாணவர்களுக்கு உண்மையிலேயே அரசியல் அறிவு வந்து விடக்கூடாது என்ற எச்சரிக்கை தான்.

கட்சிகளற்ற காரியவாத அரசியலுக்கு மாணவர்களை மடைமாற்றவும், ஆளும் வர்க்க அரசியலுக்கு எதிராக குவியும் மாணவர்களின் கோபத்தை குறிமாற்றவும் “தம்பி நமக்கு அரசியல் வேண்டாம்: ஆனா புத்திசாலித்தனமா போராடுங்க” என்று நைச்சியங்கள் மாணவர்களை சுற்றி வளைப்பது புதிதல்ல. போராட்டமே வேண்டாம் என்றால் இன்றைய இளைஞர்கள் சோமசுந்தரத்தின் முகத்தில் காறி துப்பி விடுவார்கள். அதனால் தான் தினமணியும் சோமசுந்தரங்களும் அரசியல் தான் போராட்டத்தை தீர்மானிக்கிறது என்ற விவரம் தெரிந்திருந்தும் மாணவர்களிடம் போய் அரசியல் வேறு போராட்டம் வேறு என்பது போல புத்திசொல்லி மயங்க வைக்கப் பார்க்கிறார்கள். போராட்டம் சமூகத்தை மட்டும் அல்ல மாணவர்களையும் அரசியல் மறுவார்ப்பு செய்யும் தேவைக்கு உட்படுத்தும் என்பது தெரிந்ததனால் பதறிப்போகும் இந்த ஆளும் வர்க்க அடிப்பொடிகள் கேவலத்தின் சுவை குன்றாமல் போராடாத மாணவப் பிரிவுகளை உச்சி மோர்ந்து உதாரணம் காட்டுகிறார்கள். “ஏன்? பொறியியல் கல்லூரி – மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தன்னிச்சையாக போராடவில்லை?” என்று போராடுபவர்களிடம் வந்து, போராடாதவர்களிடம் கேட்க வேண்டிய கேள்வியை புத்திசாலி போல கேட்டு அசத்துகிறார். சுருங்கச் சொன்னால் சமூக நலனின் பேருணர்ச்சியை சுயநலத்தின் சவக்கலையில் சரிக்கப் பார்க்கிறார்கள். எதார்த்தத்திலோ, தினமணி சோமசுந்தரங்களின் ஞானசூன்யங்கள் உடைபட, பாளையங்கோட்டை தொடங்கி சித்த மருத்துவ மாணவர்களும் இனப்படுகொலைக்கு எதிரான போராட்டக்களத்தில் முழங்குகிறார்கள்.

உளுத்துப் போன ஓட்டுக்கட்சிகளின் பிழைப்புவாதத்தை அடையாளம் காட்டி, போகிற போக்கில் எந்த அரசியலுமே வேண்டாம் என்று மாணவர்களை சமூக நீக்கம் செய்யவிரும்பும் ஆளும் வர்க்க அறிவு பிழைப்புவாதிகள் தான் மிகவும் அபாயகரமானவர்கள் என்பதற்கு தினமணி சோமசுந்தரம் இலக்கண சுத்தமாக இருக்கிறார். அமைப்புகள், கட்சிகளிடமிருந்து மாணவர்கள் விலகி இருக்க வேண்டும் என்று புத்தி சொல்வது போல புறப்படும் இந்தக் கயவரின் கடைசிப் புகலிடம் பொய்யின் அரசியல் என்பதை புலப்படுத்துவதாக உள்ளது அவரது கண்டுபிடிப்பு, அதாவது “இலங்கை இராணுவம் இந்திய எல்லைக்குள் புகுந்து தாக்கிய சம்பவங்களே இல்லை” எனும் அளவுக்கு துணிந்து எழுதி இராஜபக்சேவையே “நடுங்க” வைத்துவிட்டார் சோமசுந்தரம்! சில தமிழின அமைப்புகள் சிங்களப் பயணிகளைத் தாக்குவதையும், ஓட்டுக்கட்சி அரசியல் பிழைப்புவாதிகளிடம் மாணவர்கள் சிக்குவதையும் திருத்தி ஏதோ போராட்டத்திற்கு நல்வழி காட்ட வந்ததாய் எழுதிச் செல்லும் இந்தப் பிழைப்புவாதியின் யோக்கியதை மாணவர்கள் அரசியல் தலைமை ஏற்க வந்தவுடனேயே போராடுபவர்களை போராட்டக் குற்றவாளி எனப் பிரகடனப்படுத்தவும் துணிந்துவிட்டது. ஈழப்பிரச்சினையில் மாணவர் – இளைஞர்களுக்கு அரசியல் தெளிவு வேண்டும் என்பது போராட்டக்களத்திலேயே அவர்களோடு இணைந்திருக்கும் புரட்சிகர அமைப்புகளின் தொடர்ச்சியான விவாதப் பொருளாகும். ஆனால் அதை தினமணியும் சோமசுந்தரங்ளும் சொல்வதற்கு அருகதையும், அறிவும் கிடையாது என்பதற்கு அவர்களுடைய நயவஞ்சகக் கட்டுரையேச் சான்று! சுயநலத்தின் தர்க்கத்தைக் காட்டிலும் பயங்கரமானது வேறு எதுவும் இல்லை என்று ஒரு சந்தர்ப்பத்தில் காரல் மார்க்ஸ் கூறியிருந்தார். தினமணி சோமசுந்தரத்தின் தர்க்கத்தைப் பார்க்கையில் அது இன்னும் பயங்கரமாக இருக்கிறது.

– துரை.சண்முகம்