privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஈழம்சென்னை ஐ.ஐ.டி.யில் மாணவர் போராட்டம்!

சென்னை ஐ.ஐ.டி.யில் மாணவர் போராட்டம்!

-

சென்னை ஐஐடி மாணவர்கள் ஈழப்படுகொலையைக் கண்டித்து கடந்த ஞாயிறன்று (மார்ச் 17, 2013) ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம், விவாதம் மற்றும் பேரணி நடத்தினர். காலை 8 மணிக்கு ஆசிரியர்கள், முத்தமிழ் மன்றம், அலுவலர்கள் போன்ற பல்வேறு தரப்பினரின் ஆதரவோடு சுமார் 20 மாணவர்கள் ஆய்வு மாணவர் இராஜ்மோகன் தலைமையில் இப்போராட்டத்தில் ஈடுபட்டனர். மாலை வரை நீடித்த போராட்டத்தில் இராஜபக்சே அரசு நடத்திய பச்சை படுகொலையை அம்பலப்படுத்தி சானல் 4 வெளியிட்ட ஆவணப்படம் திரையிடப்பட்டது.

ஐஐடி மாணவர் போராட்டத்தை வாழ்த்தி பேசிய புமாஇமு மாநிலத்தலைவர் தோழர். கணேசன், ஈழத்தமிழர் படுகொலையில் சிங்கள இனவெறியன் இராஜபக்சேவுக்கு இணையான குற்றவாளியான இந்திய அரசையும் அமெரிக்காவையும் அம்பலப்படுத்திப் பேசியது மாணவர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றதோடு விவாதத்தையும் கிளப்பியது. போராட்டத்தின் போது தமிழீழப் படுகொலையில் இந்தியா மற்றும் அமெரிக்காவின் பங்கை அம்பலப்படுத்தியதோடு இப்பிரச்சனைக்காக போராடும் தேசிய மற்றும் மாநிலக் கட்சிகளான காங்கிரஸ், பாஜக, போலி கம்யூனிஸ்டுகள், திமுக, அதிமுக போன்றவற்றின் கருங்காலித்தனத்தை அம்பலப்படுத்தியும், இப்பிரச்சனைக்கான தீர்வை ஒரு மக்கள் போராட்டத்தின் மூலம் கட்டமைக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தி துண்டுப் பிரசுரம் வினியோகிக்கப்பட்டது. அப்போது போலி கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவாளரான ஒரு மாணவர் துண்டுப் பிரசுரம் வினியோகிப்பதைத் தடுக்க முயன்று முடியாததால் பின் வாங்கினார்.

பொதுவாக, இந்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை அம்பலப்படுத்தி நாம் வினியோகித்த துண்டுப் பிரசுரம் ‘ரொம்ப தீவிரமாக இருக்கு. இது எம்எல் கட்சியோட முழக்கம் போல இருக்கு’ என்று ஒரு சில மாணவர்களால் பேசப்பட்டது. மாலையில் நடந்த விவாதத்தில் கலந்து கொண்ட டாக்டர் எழிலன், பியுசில் சுரேஷ், தேவசகாயம் ஐஏஎஸ், டெக்கான் குரோனிக்கில் பத்திரிகையாளர் பகவான் சிங் போன்றோர் தமிழீழ இனப்படுகொலையில் இந்திய அரசின் பங்கை அம்பலப்படுத்தி பேசினர்.

  • ஈழத்தமிழினப் படுகொலைக்கு நீதிகேட்டு ராஜபக்சேவின் கூட்டாளி டெல்லிக்கும் பங்காளி ஐநாவுக்கும் காவடிதூக்குவதை நிராகரிப்போம்!
  • நூரம்பர்க் போன்ற போர்க்குற்ற விசாரணைக்குக் குறைவான எதையும் ஏற்க மறுப்போம்!
  • தமிழகத்தில் மீண்டும் மக்கள் எழுச்சியைத் தோற்றுவிப்போம்!
  • இனப்படுகொலை குற்றவாளி ராஜபக்சே கும்பலை தண்டிக்க, சிங்கள குடியேற்றம், இராணுவ ஆக்கிரமிப்பு உள்ளிட்ட இன அழிப்பு நடவடிக்கைகளை முறியடிக்க, ஈழத் தமிழின மக்களின் சுய நிர்ணய உரிமையை நிலைநாட்ட – குறுக்கு வழித் தீர்வு ஏதுமில்லை. தமிழகத்தின் வீதிகளில் 80 களின் மக்கள் எழுச்சியை மீண்டும் வெடிக்கச் செய்வோம்!

போன்ற முழக்கங்களை தமிழிலும், ஆங்கிலத்திலும், இந்தியிலும், தெலுங்கிலும், துளு உட்பட இன்னுபிற இந்திய மொழிகளிலும் கையிலேந்தி பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 200 க்கும் அதிகமான மாணவர்களும் ஆசிரியர்களும், அலுவலர்களும் மாலையில் கஜேந்திரா சர்கிளிலிருந்து கிளம்பி பேரணியாக மெயின் கேட் வரை சென்று திரும்பினர்.

தேசிய நிறுவனமான ஐஐடி யில் தமிழீழ இனப்படுகொலைக்கு கண்டனம் தெரிவித்து நடந்த இப்போராட்டத்தில் ஆரம்பம் முதல் கடைசி வரை தமிழக மாணவர்களோடு பிற மாநில மாணவர்களும் கலந்து கொண்டது இலங்கைப் பிரச்சனையை இனியும் தமிழர்களுடையது மட்டுமாக சுருக்கிப்பார்க்க முடியாது என்பதை நிறுவியது. ஐஐடி வரலாற்றில் ஒரு பொதுப் பிரச்சனைக்காக மாணவர்கள் ஒருங்கிணைந்து போராடுவது இதுவே முதல் முறை என்பதால் வளாகத்தை அரசியல் படுத்துவதன் முதற்படியாக இப்போராட்டம் அமைந்தது எனலாம்.

தகவல் : பு.மா.இ.மு.