Sunday, August 14, 2022
முகப்பு போலி ஜனநாயகம் இராணுவம் இராணுவ அலுவலகம் முற்றுகை : 200 மாணவர் கைது!

இராணுவ அலுவலகம் முற்றுகை : 200 மாணவர் கைது!

-

சென்னை மத்திய இரயில் நிலையத்திலிருந்து தில்லி செல்லும் இரயிலை மறித்துப் போராட்டம்; சென்னை பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து இலங்கை செல்லும் விமானங்களை முற்றுகையிடும் போராட்டம்; காங்கிரசு கயவாளிகளின் கூடாரமான சத்தியமூர்த்திபவனை முற்றுகையிட்டுப் போராட்டம் என தொடர்ச்சியாக மாணவர்களை அணிதிரட்டி எழுச்சிமிகுப் போராட்டங்களை நடத்திவருகிறது, ஈழத்தமிழரின் தன்னுரிமைக்கான மாணவர் முன்னணி.

இதன் ஒரு பகுதியாக, ஏ.எம்.ஜெயின் கல்லூரி மாணவர்களை அணிதிரட்டி 20.03.2013 காலை 11 மணியளவில் பரங்கிமலை இராணுவ பயிற்சி முகாமை முற்றுகையிட்டும், ஜி.எஸ்.டி. சாலையை மறித்தும் போராட்டத்தை நடத்தியது.

இராணுவப் பயிற்சி முகாமை முற்றுகையிடப் போவதாக முன்னரே அறிவித்திருந்ததால், கல்லூரியில் குழுமிய 50-க்கும் மேற்பட்ட மாணவர்களை கல்லூரி வளாகத்திலேயே சிறைபிடித்தது போலீசு. மாணவர்களின் போராட்டத்தை முடக்க நினைத்த போலீசின் நடவடிக்கைகளை முறியடிக்கும் விதமாக, பழவந்தாங்கல் இரயில் நிலையத்தில் ஒன்று கூடிய மாணவர்கள் அங்கிருந்து முழக்க பதாகையை உயர்த்திப் பிடித்தவாறே மக்கள் நெருக்கமாக வசிக்கும் குடியிருப்புப் பகுதியின் வழியே ஊர்வலமாகப் புறப்பட்டுச்சென்றனர்.

போக்குவரத்து நெரிசல் மிகுந்த ஜி.எஸ்.டி.சாலையில் விரைந்து சென்றுகொண்டிருந்த வாகனங்களின் இயக்கத்தை நிறுத்தி முடக்கியது, மாணவர்களின் பேரணி. மாணவர்களைத் தடுத்து நிறுத்த முயன்ற போலீசை, தள்ளிவிட்டு சீறிப்பாய்ந்தனர் மாணவர்கள்.

ஈழப்போரை முன்னின்று நடத்திய இந்திய அரசுக்கு எதிராகவும், ஈழப்போரின் களத்துக்கே சென்று போரை வழிநடத்திய இந்திய இராணுவத்தைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பிய படியே முன்னேறி சென்ற மாணவர்கள், இராணுவ பயிற்சி மையத்தை முற்றுகையிட்டனர்.

ஈழத்தமிழரின் தன்னுரிமைக்கான மாணவர் முன்னணியின் சென்னை மாவட்டப் பொறுப்பாளர்களுள் ஒருவரும், சென்னை சட்டக்கல்லூரி மாணவருமான மருது தலைமையில் நடைபெற்ற இம்முற்றுகைப் போராட்டத்தில், ஏ.எம்.ஜெயின் கல்லூரி மாணவர்கள் உச்சி வெயிலையும் பொருட்படுத்தாது உணர்ச்சிப் பெருக்கோடு முழக்கமிட்டனர்.

ஜெனிவாவில் அமெரிக்கா கொண்டுவரும் மோசடியானத் தீர்மானத்தைக் கண்டித்தும்; ஈழப்போரை முன்னின்று நடத்திய, போர்க்குற்றவாளி இராஜபக்சேவின் பங்காளியான காங்கிரசு கும்பலிடமே இராஜபக்சேவுக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்கக்கோருவது அயோக்கியத்தனமானது என்றும்; இராஜபக்சேவை சர்வதேசப் போர்க்குற்றவாளியாக அறிவித்து, ஹிட்லரின் படைகள் உள்ளிட்ட இரண்டாம் உலகப் போர்க்குற்றவாளிகளைத் தண்டித்த நூரம்பர்க் விசாரணை போன்ற சுதந்திரமான பொதுவிசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்றும், மாணவர்கள் எழுப்பிய முழக்கங்கள் இந்திய இராணுவ மையத்தை பீரங்கிக் குண்டுகளாய் துளைத்தெடுத்தன.

மாணவர்களின் கொந்தளிப்பையும் தமக்கெதிராய் வந்து விழும் குத்தீட்டி முழக்கங்களையும் கண்டு, இந்திய இராணுவமும் போலீசும், உணர்ச்சியற்ற உருப்படிகளாய் உறைந்து நின்றன.

மாணவர்களின் போராட்டத்தையறிந்து, ஆலந்தூர் நீதிமன்ற வளாகத்தில் உண்ணாநிலைப் போராட்டத்தை நடத்திக்கொண்டிருந்த வழக்குரைஞர்கள் திரளாக வந்து, மாணவர்களின் முற்றுகைப்போராட்டத்தில் தாங்களும் பங்கேற்று கண்டன முழக்கமிட்டனர். மாணவர்களின் முன்முயற்சியை பாராட்டிச்சென்றனர். மாணவர்களின் போராட்டத்திற்கு சட்டரீதியான உதவியை வழங்க முன்வருவதாகவும் மாணவர்களின் பெருத்த கரவொலிகளுக்கிடையே அறிவித்தார், ஆலந்தூர் நீதிமன்ற வழக்குரைஞர் கணேசன்.

வழக்குரைஞர்கள் மட்டுமின்றி, மாணவர்களின் போராட்டத்தால் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் மாணவர்களின் போராட்டத்தை ஆதரித்து சென்றனர்.

கொளுத்தும் வெயிலில் வெட்டவெளியில் அமர்ந்திருந்த போதிலும், மாணவர்களின் முழக்கங்கள் தொடர்ந்தன. முன்னணியாளர்கள் கண்டன உரை நிகழ்த்தினர். ஊடகங்களின் கேமிரா வெளிச்சம் பட்டதும் கூட்டம் கலைந்துவிடும் என எதிர்பார்த்த போலீசுக்கோ வியர்த்துக்கொட்டியது.

போராட்டத்தை முடித்துக்கொள்ளுமாறு மிரட்டிப்பார்த்தது; தனித்தனியே மாணவர்களை கலைத்துப் பார்த்தது; இறுதியில் கெஞ்சியும் பார்த்தது, போலீசு. போலீசுக்குப் போக்கு காட்டிவிட்டு, ஜி.எஸ்.டி. சாலையில் அமர்ந்து தமது போராட்டத்தைத் தொடர்ந்தனர் மாணவர்கள். முற்றுகைப் போராட்டம் இப்போது மறியல் போராட்டமாக மாறியிருந்தது.

மாணவர்களின் போராட்டத்தால் நகரின் வாகனப் போக்குவரத்து முடங்கிப்போனது. நூற்றுக்கணக்கான ஊர்திகள் வெகு தூரத்துக்கு அணிவகுத்து நின்றன.

பழவந்தாங்கல் இரயில் நிலையத்திலிருந்து பேரணியாக வந்தது; இராணுவ முகாமை முற்றுகையிட்டது; சாலையை மறித்து போராடியது என மாணவர்களின் தொடர் போராட்டங்களைக் கண்டு பீதியடைந்த போலீசு, மாணவர்களை உடனடியாக அப்புறப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டது.

ஒரு கிலோமீட்டர் தூரம் பேரணியாக நடந்து வந்தும்; ஒரு மணிநேரத்திற்கும் மேலாக முழக்கமிட்டுச் சோர்ந்திருந்த போதிலும் தம் உடலில் வலு உள்ள மட்டும் போலீசுடன் மல்லுக்கட்டினர் மாணவர்கள். வலுக்கட்டாயமாக வேனுக்குள் மாணவர்களை திணித்தது போலீசு. இருபதுக்கும் மேற்பட்ட மாணவிகள் உள்ளிட்ட இருநூறுக்கும் மேற்பட்ட மாணவர்களைக் கைது செய்தது போலீசு.

பழவந்தாங்கல் சமுதாய நலக்கூடத்தில், சிறை வைக்கப்பட்டிருந்த மாணவர்களைச் சந்தித்து, போராடிய ஜெயின் கல்லூரி மாணவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தார், ஈழத்தமிழரின் தன்னுரிமைக்கான மாணவர் முன்னணியின் ஒருங்கிணைப்பாளர், கணேசன்.

ஒருநாள் அடையாள போராட்டமாகவும், உயிரற்றப் போராட்டங்களாகவும் முடங்கி விடாமல், 80-களின் மாணவர் எழுச்சியை தமிழகத்தில் உருவாக்க தொடர்ந்து பல்வேறு வடிவங்களிலான போர்க்குணமான போராட்டங்களை முன்னெடுக்கப் போவதாக, அறிவித்திருக்கிறது ஈழத்தமிழரின் தன்னுரிமைக்கான மாணவர் முன்னணி.

தகவல்:
ஈழத்தமிழரின் தன்னுரிமைக்கான மாணவர் முன்னணி.

  1. ஈழத்தமிழர்களின் இலங்கை அரசு இன ஒழிப்புக்கு எதிரான தமிழகத்தில் திராவிட கட்சிகலின் போலித்தனமாக சந்தற்பவாத நிலைஎடுத்து போராடும் திராவிட கட்சிகலுக்கு இடையில் கல்லுரி மாணவர்களின் எழுச்சிமிகு போராட்டம் இராணுவ பயிற்ச்சி மையங்கள். இரயில் நிலையங்கள் .விமான நிலையங்கல் தாபால் நிலையங்கல் தேசிய நெடுஞ்சாலைகள் என மத்திய அரின் நிற்வாக கட்டமைப்புளை முடக்கும் விதமாக அமைந்த மாணவர்கலின் போராட்டம் சரியான துனிச்சல் மிக வழிகாட்டும் விதமாக அமைந்தது மிக சரியானதே. தமிழகமட்டுமல்ல இந்தியா முலுவதும் இழங்கை இந்தியா அரசு கட்டமைப்புகலை இயங்க விடாமல் அனைத்து கல்லுரி மாணவர்கலும் ஒற்றை திசை வழியை நோக்கி போராடினால் மட்டுமே இப் போராட்டம் வெற்றி பெரும். மாணவர்கலுக்கு வழ்த்துக்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க