Saturday, April 17, 2021
முகப்பு உலகம் அமெரிக்கா மாலி ஆக்கிரமிப்பு: நொண்டிக் குதிரைக்குச் சறுக்கியதே சாக்கு!

மாலி ஆக்கிரமிப்பு: நொண்டிக் குதிரைக்குச் சறுக்கியதே சாக்கு!

-

டந்த ஈராண்டுகளில் ஆப்பிரிக்கக் கண்டத்திலுள்ள லிபியா, ஐவரி கோஸ்ட் – என அடுத்தடுத்து இரு நாடுகளின் மீது போர் தொடுத்து தமது முன்னாள் காலனிகளை மேற்கத்திய ஏகாதிபத்தியங்கள் மீண்டும் கைப்பற்றியுள்ளன. தனது ஆதிக்க வளையத்தை விரிவாக்கி, அடுத்த கட்டமாக இப்போது மாலியின் மீது ஆக்கிரமிப்புப் போரைத் தொடுத்துள்ளன.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், பிரெஞ்சு காலனியாதிக்கத்திலிருந்து பெயரளவிலான சுதந்திரமடைந்த வட ஆப்பிரிக்காவிலுள்ள மாலியை பிரெஞ்சுப் படைகளும், பீரங்கிகளும், போர் விமானங்களும் சூறையாடிக் கொண்டிருக்கின்றன. ஐவரி கோஸ்ட், நைஜீரியா, டோகோ, பெனின், சாட் முதலான நாடுகளிலிருந்தும் இந்த காலனியாதிக்கப் போருக்காகப் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. இக்கொடிய போரினால் இதுவரை 4இலட்சம் மக்கள் அண்டை நாடுகளில் அகதிகளாகக் குவிந்துள்ளனர். பிரான்சின் ஆக்கிரமிப்பை ஆதரிக்கும் ஜெர்மனி, மேற்கு ஆப்பிரிக்க பொருளாதாரக் கூட்டமைப்புக்கு (ஈகோவாஸ்) ஆயுத உதவிகளோடு 7000 படைகளையும் அளித்துள்ளது. அமெரிக்காவோ, குண்டு வீச்சுத் தாக்குதலை நடத்தும் ஆளில்லா விமானங்களை நைஜர் நாட்டில் தயாராக நிறுத்தி வைத்துள்ளது.

04-1-africa-mapவடக்கே அல்ஜீரியாவும், கிழக்கே நைஜரும், தெற்கே பர்கினா பாசோ மற்றும் ஐவரி கோஸ்ட் ஆகிய நாடுகளும், மேற்கே மோரிடானா, செனகல் ஆகிய நாடுகளும் சூழ்ந்த மாலி, பருத்தி பெருமளவில் விளையும் நாடு. தங்கமும் யுரேனியமும் பாஸ்பேட்டும் கனிம வளங்களும் நிறைந்த நாடு. ஆனால், நாட்டின் பாதிக்கும் மேற்பட்ட மக்களோ வறுமையில் தவிக்கின்றனர்.

ஒரு தேசிய இனமாக வளரும் போக்கு நிறைவுறாத போதிலும், மாலியின் வடபகுதியிலுள்ள அசாவத் பிராந்தியத்தின் நாடோடிகளான துவாரக் இனக்குழுவினர் மாலி அரசிடமிருந்து விடுதலை கோரி “அசாவத் தேசிய விடுதலை இயக்க’’த்தின் (எம்.என்.எல்.ஏ.) தலைமையில் 1990-களிலிருந்து போராடி வருகின்றனர். மாலி அரசின் பயங்கரவாத அடக்குமுறையால் அசாவத் இயக்கப் போராளிகள் அண்டை நாடான லிபியாவில் தஞ்சமடைந்து, அன்றைய கடாஃபியின் இராணுவத்தில் முறைசாரா சிப்பாய்களாகச் செயல்பட்டனர். கடாஃபி ஆட்சி வீழ்ந்ததும், ஆயுதங்களைக் கைப்பற்றிக் கொண்டு மாலிக்குத் திரும்பிய அவர்கள், மாலியின் இராணுவ ஆட்சியாளர்களுக்கு எதிரான போரைத் தொடர்ந்தனர். அல்கய்தாவுடன் தொடர்புடைய இப்பகுதியிலுள்ள இஸ்லாமியத் தீவிரவாதிகள் இவர்களோடு இணைந்து கொண்டு போராட்டத்தைத் தீவிரப்படுத்தினர். மாலியின் வடபகுதியில் முன்னேறிய இப்போராட்டங்களை ஒடுக்க முடியாமல் மாலியின் இராணுவம் திணறிய நிலையில், கடந்த ஆண்டில் அசாவத் தேசிய விடுதலை இயக்கத்தினர் அசாவத் பிராந்தியத்தைத் தனிநாடாக அறிவித்தனர்.

1960-இல் பெயரளவில் சுதந்திரமடைந்து, பொதுத் தேர்தலும் அதிபராட்சியும் மாலியில் நிறுவப்பட்ட போதிலும், 1968-இலும், 1991-இலும் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்புகள் நடந்து, இராணுவக் கும்பலின் தலைமையிலான ‘சட்டவாத’ ஆட்சியே நீண்டகாலமாக நிலவியது. இந்நிலையில், கடந்த 2012 மார்ச்சில், வடபகுதி துவாரக் கிளர்ச்சியாளர்களை ஒடுக்கத் தவறிவிட்டதாகக் குற்றம் சாட்டி, அமெரிக்காவினால் பயிற்றுவிக்கப்பட்ட இராணுவத் தளபதியான சனோகோ தலைமையிலான ஒரு பிரிவு இராணுவக் கும்பல் ஆட்சியைக் கைப்பற்றி, இச்சட்டவாத ஆட்சியையும் ரத்து செய்து அப்பட்டமான இராணுவ சர்வாதிகார ஆட்சியை நிறுவியுள்ளது. இருப்பினும், இந்த ஆட்சிக் கவிழ்ப்பை இராணுவத்தின் ஒரு பிரிவு எதிர்ப்பதாலும், ஆளும் கும்பல்களுக்கிடையே பிளவும் அதிருப்தியும் நீடிப்பதாலும், தற்போது ஆட்சிக்கு வந்துள்ள இராணுவக் கும்பலாலும் வடபகுதி மக்களின் போராட்டத்தை ஒடுக்க முடியவில்லை.

இதற்கிடையில், 2012 ஜூன் மாதத்தில் அசாவத் தேசிய விடுதலை இயக்கத்துக்கும் இஸ்லாமியத் தீவிரவாதக் குழுக்களுக்குமிடையே முரண்பாடு முற்றி ஆயுத மோதல்களாக மாறியது. இஸ்லாமியத் தீவிரவாதிகள் அசாவத் இயக்கப் போராளிகளை விரட்டியடித்துவிட்டு, தமது கட்டுப்பாட்டில் அசாவத் பிராந்தியத்தைப் பிடித்துக் கொண்டு, இஸ்லாமிய ஷாரியத் சட்டத்தைக் கடுமையாக நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.

இஸ்லாமிய மெஹ்ரப் அல்கதா குழு (ஏ.கியூ.ஐ.எம்.) , அன்சார் அல் டின் என்ற துவாரக் இனக்குழுவைச் சேர்ந்த இஸ்லாமியத் தீவிரவாதக் குழு, மேற்கு ஆப்பிரிக்காவின் ஜிகாத் குழு முதலான இஸ்லாமிய தீவிரவாதக் குழுக்கள் இப்பகுதியில் செயல்படுகின்றன. மாலி அரசு மற்றும் இராணுவத்தின் பலவீனத்தையும் பிளவையும் சாதகமாக்கிக் கொண்டு, அடுத்தடுத்து பல முக்கிய நகரங்களைக் கைப்பற்றிய இத்தீவிரவாதக் குழுக்கள் தெற்கு நோக்கி முன்னேறியதும், பிரான்ஸ் நேரடியாக இராணுவத் தாக்குதலைத் தொடங்கியது. இஸ்லாமியத் தீவிரவாதிகளால் விரட்டியடிக்கப்பட்டு பிரான்சுக்குத் தப்பியோடிய அசாவத் தேசிய விடுதலை இயக்கத்தின் தலைவர்களோ, இப்போரில் பிரான்சை ஆதரிப்பதன் மூலம் இஸ்லாமியத் தீவிரவாதிகளை விரட்டிவிட்டு தமது கட்டுப்பாட்டில் அசாவத் பிராந்தியத்தைக் கொண்டுவர முயற்சிக்கின்றனர்.

மாலி மக்கள்
பிரான்சின் ஆக்கிரமிப்பு போரினால் அகதிகளாக்கப்பட்டு அவலத்தில் உழலும் மாலி நாட்டு மக்கள்

சுஃபி மார்க்கத்தைப் பின்பற்றும் துவாரக் இனக்குழுவினர் நிறைந்துள்ள வடபகுதியில், வஹாபி மார்க்கத்தைத் திணித்து தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ள இஸ்லாமிய தீவிரவாதிகள், சுஃபி மரபிலான பண்பாட்டுச் சின்னங்களையும், டிம்புக்டு பிராந்தியத்திலுள்ள யுனெஸ்கோவின் பாரம்பரிய வரலாற்று சின்னமாகவுள்ள மசூதியையும், சுஃபி ஞானியின் நினைவுச் சின்னத்தையும் சிதைத்து நாசமாக்கி எரித்துள்ளனர். மாலி நாட்டு இசை ஆப்பிரிக்க நாடுகளில் பிரபலமானது. ஆனால், இஸ்லாமியத் தீவிரவாதிகளோ யாரும் வாயைத் திறந்து பாடவோ, பாடல்களைக் கேட்கவோ கூடாது என்று காட்டுமிராண்டித்தனமாகத் தடை விதித்துள்ளனர்.

மாலியின் இஸ்லாமிய தீவிரவாதக் குழுக்கள் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிரான போரை நடத்துவதாக ஒரு தவறான கருத்து நிலவுகிறது. ஆனால் இந்த இஸ்லாமியத் தீவிரவாதிகள், அமெரிக்கக் கைக்கூலியான சவூதி அரேபியாவின் பணத்தில் வளர்ந்தவர்கள். லிபியாவில் கடாஃபியை வீழ்த்த நேற்றுவரை அமெரிக்காவின் கொலைகார உளவு நிறுவனமான சி.ஐ.ஏ.வினாலும் மேற்கத்திய ஏகாதிபத்தியங்களாலும் நேரடியாகவும் மறைமுகமாகவும் வளர்த்துவிடப்பட்ட கூலிப்படையினர்தான் இவர்கள். பிரான்சின் மறைமுக ஆதரவோடு இயங்கும் சிரியா மற்றும் அல்ஜீரிய இஸ்லாமியப் பயங்கரவாதிகளின் பங்காளிகள்தான் இவர்கள்.

ஆப்பிரிக்கக் கண்டத்தின் மூலவளங்களைக் கைப்பற்றிக் கொள்ளையிடுவதும், வர்த்தக – பொருளாதாரக் கூட்டுகள் மூலம் செல்வாக்கு செலுத்திவரும் சீனாவை ஆப்பிரிக்காவிலிருந்து வெளியேற்றி தமது இரும்புப் பிடியை உறுதிப்படுத்துவதும்தான் அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய ஏகாதிபத்தியங்களின் ஆப்பிரிக்கப் போர்த்தந்திரத் திட்டம். அதன்படியே, லிபியா தொடங்கி அடுத்தடுத்து பல நாடுகளில் ஏகாதிபத்தியவாதிகள் தமது காலனியாதிக்கப் பிடியை இறுக்கி வருகின்றனர். எனவேதான், மாலியின் ஆக்கிரமிப்புப் போர் மாலியைப் பற்றியது மட்டுமல்ல. அது ஆப்பிரிக்கா முழுவதையும் ஆக்கிரமிக்கும் திட்டத்துடன் ஏகாதிபத்தியங்கள் நடத்தும் காலனியாதிக்கப் போராகும்.

நேற்றுவரை இஸ்லாமியத் தீவிரவாதத்தை ஆப்பிரிக்கக் கண்டத்தில் வளர்த்துவிட்டுப் பகடைக்காயாகப் பயன்படுத்திக் கொண்டதும் அமெரிக்கா தலைமையிலான மேற்கத்திய ஏகாதிபத்தியங்கள்தான். இப்போது இஸ்லாமியத் தீவிரவாதத்தை முறியடிப்பது என்ற பெயரில் மாலியின் கனிம வளங்களைச் சூறையாடப் போர் தொடுப்பதும் அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்கள்தான். ஏகாதிபத்தியங்கள் உள்ளவரை காலனியாதிக்கமும் ஆக்கிரமிப்புப் போர்களும் ஓயாது; உலகெங்குமுள்ள புரட்சிகர-ஜனநாயக சக்திகள் அணிதிரண்டு காலனியாதிக்க ஓநாய்களை விரட்டியடிக்காதவரை எந்த நாடும் சுதந்திரக் காற்றை சுவாசிக்க முடியாது என்ற உண்மையை உலகுக்கு உணர்த்திவிட்டு நொறுங்கி விழுந்து கொண்டிருக்கிறது மாலி.

– தனபால்.

____________________________________________________________________________________________________
புதிய ஜனநாயகம் – மார்ச் 2013
____________________________________________________________________________________________________

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க