Sunday, January 16, 2022
முகப்பு உலகம் ஈழம் ஈழம் : புரட்சிகர அமைப்புகளின் போராட்டங்கள்!

ஈழம் : புரட்சிகர அமைப்புகளின் போராட்டங்கள்!

-

ழத் தமிழின படுகொலைக்கு நீதி கேட்டு ராஜபக்சேவின் கூட்டாளி டெல்லிக்கும், பங்காளி அய்.நா-வுக்கும் காவடி தூக்குவதை நிராகரிப்போம்!
நூரம்பர்க்போன்ற போர்க்குற்ற விசாரணைக்கு குறைவான எதையும் ஏற்க மறுப்போம்!
தமிழகத்தில் மீண்டும் மக்கள் எழுச்சியைத் தோற்றுவிப்போம்!

என்ற மைய முழக்கத்தின் கீழ் புரட்சிகர அமைப்புகள்  நடத்திய போராட்டங்கள் பற்றிய விபரங்கள்.

1. திருச்சி

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் சிந்தாமணி அண்ணாசிலை அருகில் 20.3.2013 காலை 10மணிக்கு தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இவ்வார்ப்பாட்டத்தை ம.க.இ.க, பு.ஜ.தொ.மு அமைப்புகள் ஒருங்கிணைந்து நடத்தின. திருச்சி மாவட்டசெயலர் தோழர்.சீனிவாசன் தலைமை வகித்தார்.

ஈழத்தமிழர்களை கொன்றொழித்த
இலங்கை அதிபர் ராஜபக்சே,
இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கையும்
தூக்கில் போடு! தூக்கில் போடு!

நம்பாதிங்க! நம்பாதிங்க!
ஜ.நா. தீர்மானத்தை நம்பாதிங்க!

என்ற எழுச்சி மிகு முழக்கத்துடன் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சிங்கள இன வெறியன் ராஜபக்சே அப்பாவி ஈழத்தமிழ் மக்களை கொத்து குண்டுகளை போட்டு கொடூரமாக கொலை செய்ததை அம்பலப்படுத்தி பெண்கள் விடுதலை முன்னணித் தோழர்.பவானியும், அடுத்து இளம் பெண்களை துப்பாக்கி முனையில் பாலியல் ரீதியில் துன்புறுத்தி நிர்வாணமாக்கி கொன்ற இழி செயலை சாடி உணர்ச்சியூட்டும் விதமாக பெண்கள் விடுதலை முன்னணி அமைப்பின் தலைவர் தோழர்.நிர்மலாவும் பேசினர். அடுத்தபடியாக சிறுவன் என்று கூட பாராமல் பிரபாகரன் அவர்களின் மகன் பாலச்சந்திரனுக்கு பிஸ்கட் கொடுத்து தின்ன வைத்து துப்பாக்கி குண்டுகளால் கொன்ற கொடுஞ்செயலை அம்பலப்படுத்தி பெண்கள் விடுதலை முன்னணி தோழர்.கலா உரை நிகழ்த்தினார். ஆட்டோ ஒட்டுனர் பாதுகாப்பு சங்கத்தின் செயலர் தோழர்.மணலிதாஸ் ஈழப் போராட்ட வரலாற்றில் இந்திய அரசின் சதி திட்டத்தை விளக்கி பேசினார். அடுத்து அனைத்து தரைக் கடை வியாபாரிகள் பாதுகாப்புச் சங்கத்தின் சிறப்புத் தலைவர் தோழர்.சேகர் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானம் என்பதே மோசடி பித்தலாட்டம் என்றும் ஈழத்தமிழ் மக்களுக்கு எந்த நன்மையும் ஏற்படுத்தி தராது என்றும் அம்பலப்படுத்தி பேசினார்.

இறுதியாக சிறப்புரை நிகழ்த்திய மக்கள் கலை இலக்கிய கழக மாநில செயற்குழு உறுப்பினர் தோழர். கோவன் ஈழ மக்களுக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டம் தமிழகத்தையே உலுக்கி எடுக்கிறது. எங்கு, எப்படி, எந்த நேரத்தில் மாணவர்கள் போராடுவார்கள் அதை எப்படி சமாளிப்பது என்பதே தெரியாது. காவல் துறையினர் திகைத்து நிற்கின்றனர். அது மட்டுமல்ல எதற்கும் போராட முன் வராத அன்னை தெரசா என்ற மகளிர் அமைப்பினர் கூட கொலை வெறியன் ராஜபக்சே, மன்மோகன் சிங் ஆகியோரது உருவப் பொம்மையை எரித்து போராட வேண்டிய அளவுக்கு நிலைமை உணர்ச்சி பூர்வமாக உள்ளது என்றார்.

ஆனால், ஐ.நா.சபை மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தின் சாரம் 2009ல் நடந்த ஈழப் போரில் மனித உரிமை மீறல் நடந்துள்ளதா என இலங்கை அரசே விசாரித்து நீதி வழங்க வேண்டும் என்பதேயாகும் என்றும், அதாவது, குற்றவாளியே தனது குற்றத்தை விசாரித்து தண்டனை வழங்கி கொள்ள வேண்டும் என்பதாகும். இந்த தீர்மானம் ஈழத் தமிழர்களை கொன்றொழித்த ராஜபக்சேவை தண்டிக்கவோ, ஈழத்தமிழர்கள் நலனை நிலைநாட்டவோ கொண்டு வரப்படவில்லை. தெற்கு ஆசிய பிராந்தியத்தில் அமெரிக்காவின் ஆதிக்கத்தை நிலை நிறுத்தும் நோக்கில் இலங்கை அரசை மிரட்டிப் பணிய வைக்கும் சூழ்ச்சியே என்று தீர்மானத்தை சாடி பேசினார்.

இன்று ஈழத் தமிழர் நலனுக்காக அமைச்சர் பதவிகளைத் துறந்து கூட்டணியிலிருந்து விலகியதாக நீலிக் கண்ணீர் வடிக்கும் தி.மு.க 2014ல் வரப் போகும் நாடாளுமன்றத் தேர்தலை குறிவைத்தே நாடகமாடுகின்றனர். உண்மையிலேயே ஈழத்தமிழர் நலனில் அக்கரையிருந்தால் 2009ல் மாநிலத்திலும், மத்தியிலும் அதிகாரத்திலிருந்த போதே போராடி இருக்கலாம். ஆனால் பதவி சுகத்தில் திளைத்தனர் போராட முன்வரவில்லை என்றார். ‘ ஆக எந்த ஒட்டுக் கட்சியும் ஈழத்தமிழர் நலனுக்காக செயல்படவில்லை என்றார்.

ஈழத் தமிழர்களை கொன்றொழித்த ராஜபக்சே கும்பலையும் அதற்கு துணைபோன இந்திய பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோரையும் தண்டிக்க 2வது உலகப் போரில் போர் குற்றவாளிகளை நூரம்பர்க் என்ற இடத்தில் விசாரித்து தண்டனை வழங்கியதை போல தண்டனை வழங்க போராட வேண்டும் என்றும், பொது ஜன வாக்கெடுப்பு நடத்தி சுய நிர்ணய உரிமை பெற போராட வேண்டும் என்றும், அதற்கு ஈழத் தமிழ் மக்கள் சிங்கள உழைக்கும் மக்களோடும, ஜனநாயக சக்திகளோடும் இணைந்து போராட முன் வர வேண்டும் என்றும் தனது உரையை நிறைவு செய்தார்.

ஆர்ப்பாட்டத்தில் சிங்கள ராணுவம் செய்த கோரக் கொலைகளை பிணக்குவியல்களை விளக்கும் படக்காட்சிகளும், இளம் பெண்களை பாலியல் ரீதியில் துன்புறுத்தி கொலை செய்ததோடு நிர்வாணப்படுத்தி அவமானப்படுத்தியதை விளக்கும் படக்காட்சிகளும் வைக்கப்பட்டிருந்தன. இவை கல் நெஞ்சக்காரர்களையும் கலங்க வைக்கும் விதமாக இருந்தன.

இவை ஈழத்தமிழ் மக்களின் விடுதலைக்கு தீர்வு சொல்வதாகவும் ஈழத்தமிழர்களின் நண்பர்கள், எதிரிகள், துரோகிகளை அடையாளம் காட்டுவதாக அமைந்து இருந்தது. இவ்வார்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தகவல் : ஒருங்கிணைப்பாளர், மக்கள் கலை இலக்கிய கழகம், திருச்சி.

2. சேத்துப்பட்டு

தகவல் : மக்கள் கலை இலக்கிய கழகம், சேத்துப்பட்டு

3. உசிலை

ஆர்ப்பாட்டம்: உசிலம்பட்டியில் 20.03.2013 புதன்கிழமை மாலை 5 மணியளவில் தாலுகா அலுவலகம் அருகில்

தமிழக உழைக்கும் மக்களே! தீரமிக்க மாணவர்களே!

ஈழத்தமிழனப் படுகொலைக்கு நீதி கேட்டு
ராஜபக்சேவின் கூட்டாளி டெல்லிக்கும் பங்காளி
ஜ.நா.வுக்கும் காவடி தூக்குவதை நிராகரிப்போம்!

நூரம்பர்க் (ஜெர்மன் பாசிஸ்டுகளுக்கு எதிரான)
போன்ற போர்ககுற்ற விசாரணைக்கு
குறைவான எதையும் ஏற்க மறுப்போம்!

தமிழகத்தில் மீண்டும் மக்கள் எழுச்சியைத் தோற்றுவிப்போம்!

– என்ற முழக்கத்தின் அடிப்படையில் விவசாயிகள் விடுதலை முன்னனியின் சார்பாக மக்களின் பார்வையில் படும்படியாக ராஜபக்சேவின் உருவப்படத்திற்கு செருப்புமாலை அணிவித்தும் தூக்கிலேற்றியும் எழுச்சியுடன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தோழர் சந்திரபோஸ் வி.வி.மு தலைமை தாங்கி உரையாற்றினார். அடுத்து தோழர் கோட்டை வி.வி.மு உரையாற்றினார். அதனைத்தொடர்ந்து காய்கறி சங்கத்தைச் சேர்ந்த வியாபாரி நாகராசன் காங்கிரசின் பித்தலாட்டத்தைப் பற்றி பேசினார்.

உசிலைஅடுத்து வழக்கறிஞர் ரெட் காசி அவர்கள் ஓட்டுக்கட்சி அல்லாத புரட்சிகர அமைப்பான வி.வி.மு சரியான நேரத்தில் சரியான பிரச்சனையை கையில் எடுத்து மக்களிடம் கொண்டுசெல்வதால் இதுதான் மக்களுக்கான இயக்கம் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் நடப்பதாகவும் போர்க்குற்றவாளியான ராஜபக்சேவை தூக்கிலிடக்கூடிய சர்வதேசிய நீதிமன்ற விசாரணை வேண்டும் எனப் பேசினார்.

நிறைவு உரையாக தோழர் குருசாமி வி.வி.மு வட்ட செயலாளர் அவர்கள் சிறப்புரையாற்றினார். இறுதியாக நிறைவுசெய்கையில் மக்களுக்குத் தேவையான அரசு வேண்டும் என்றால் நாம் நமக்கான அதிகாரம் உள்ள அரசை அமைக்க வேண்டும் எனவும் அப்படி அமைக்கப்படாத அரசு நமக்கு சேவை செய்யும் என்று எதிர்பாhப்பது தவறு என்பதை அருமையாக எல்லோருக்கும் புரியும் வகையில் “நாய் நமக்கு சேவை செய்ய வேண்டுமானால் நாம்தான் நல்ல நாயை தேர்ந்தெடுத்து நாய்க்கு உணவு அளித்து வளர்க்க வேண்டும் அப்படி இல்லாமல் ஆளும் வர்க்த்தால் ஊட்டி வளர்க்கப்பட்ட சீமை சரக்கு நாயான இந்திய அரசு உழைக்கம் மக்களாகிய நமக்கு எப்படி சேவை செய்யும்? மாறாக அந்த நாய் அதன் எஜமானனான ஆளும் வர்க்கத்திர்க்குத்தான் சேவை செய்யும்” என்ற உதாரணம் மிகவும் பொருத்தமாக இருந்தது.

ஆர்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அமைப்பினர்கள் சிலர் கலந்துகொண்டனர்.

தகவல் : பு.ஜ.செய்தியாளர், உசிலை.

4. மதுரை வழக்கறிஞர்களின் விமான நிலைய முற்றுகை போராட்டம்

தகவல் : மனித உரிமைகள் பாதுகாப்பு மையம்

4. பென்னாகரத்தில் பெண் தோழர்கள் போராட்டம்

ஈழத்தமிழின படுகொலைக்கு நீதிகேட்டும், ராஜபக்சேவை சர்வதேச போர்க்குற்றவாளியாக அறிவிக்கக் கோரியும் வி.வி.மு. பெண் தோழர்களும் – ஆதரவான பெண்களும் போலீசின் அனுமதியின்றி உண்ணாவிரதப் போராட்டம்!
பென்னாகரம் நீதிமன்ற வழக்கறிஞர்கள் வாழ்த்து!

ஈழப்பகுதியில் ஈழத்தமிழ் மக்களை படுகொலை செய்த சிங்கள இனவெறியன் ராஜபக்சே – கோத்தபயா – பொன்சேகா கும்பலை சர்வதேச போர்க்குற்றவாளியாக அறிவிக்க உலகநாடுகள் ஐ.நா.வை நிர்ப்பந்தப்படுத்த வேண்டும் எனில் இந்த இனப்படுகொலைக்கு நீதி கேட்டும் வி.வி.மு.வைச் சேர்ந்த பெண் தோழர்கள் கைக்குழந்தைகளுடன், பெண்கள், மாணவர்கள், மாணவிகள், சிறுவர்கள் என்ற 50க்கும் மேற்பட்டோர் 21.3.2013 அன்று வியாழக்கிழமை காலை 10 மணிக்கு போலீசின் அனுமதியின்றி பென்னாகரம் பேருந்து நிலையத்திற்குள் உண்ணாவிரதப் போராட்டம் என்று பேனரைக் கட்டி ஆர்ப்பாட்டத்தை நடத்த ஆரம்பித்தனர்.

பேருந்து நிலையத்திற்குள் பெண்கள் – சிறுவர்கள் திடீரென்று முழக்கமிட்டதும் சுற்றி நின்றிருந்த பொது மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். பெண்கள் முழக்கமிட்ட கால் மண இநேரத்தில் காவல்துறையினர் உதவி ஆய்வாளர் உட்பட 5 பேர் வந்து ‘யாரைக் கேட்டு இங்கு வந்து உட்கார்ந்து இருக்கீங்க, அனுமதி பெறாமல் உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் என்று செய்யக் கூடாது, கிளம்புங்கள்’ என்று பேசினார். அதற்கு பெண் தோழர்கள் எழுந்து வந்து, “சார் உண்ணாவிரதத்திற்கு அனுமதி வாங்கணும்னு எங்களுக்கு தெரியாது என்றும் அனுமதி வாங்கித்தான் உண்ணாவிரதம் இருக்கணும்னா அனுமதி கொடுங்கள் என்றும் பேசினர். அனுமதி கேட்காமல் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளீர்கள் அதனால் உங்களை கைது செய்றோம் என்று ஒரு போலீஸ்காரர் எஸ்.ஐ. அந்த பஸ்ஸை கூப்பிடுங்க என்று கூறினார். அவ்வாறு மிரட்டிப் பார்த்தால் தோழர்கள் கலைந்து போய் விடுவார்கள் என்று பேசியும் தோழர்கள் அச்சப்பட்டு கலையாமல் போராட்டத்தில் ஈடுபட்டு முழக்கமிட்டக் கொண்டே இருந்தனர்.

இதனைப் பார்த்த போலீஸ் கலைந்து செல்ல மாட்டார்கள் என்பதை உணர்ந்து கொண்டு அருகில் நின்று கொண்டு இருந்த வட்டச் செயலாளர் தோழர் கோபிநாத்தை பார்த்து உங்க நல்ல பெயரை (வி.வி.மு.ன் பெயரை) நீங்களே கெடுத்துக் கொள்கிறீர்கள் என்று தலையாட்டிக் கொண்டு கோபமாக பேசினார். அதற்கு கோபிநாத் பெண்கள் செய்கிறார்கள் சார், நாங்க என்ன செய்ய முடியும், உண்ணாவிரதம்தானே செய்யட்டும் விடுங்க என்று தோழர்களுக்கு ஆதரவாக பேசினார். ஒரு புறம் எஸ்.ஐ. தனது மேலதிகாரிகளுக்கு போனில் தகவல் தெரிவித்துக் கொண்டு இருக்கிறார். தோழர்கள் முழக்கமிட்டுக் கொண்டு இருக்கின்றனர் மறுபுறம். போலீஸ் வந்து தோழர்களிடம் பேசியதிலிருந்து பொதுமக்கள், கடைக்காரர்கள் அனைவரும் அடுத்து என்ன நடகும் என்ற எதிர்பார்ப்போடும் பரபரப்போடும் கூட்டமாக இருந்து ஆவலாக கவனித்துக் கொண்டு இருந்தனர்.

பின்னர் தனது மேலதிகாரிகளிடன் தொலைபேசியில் உண்ணாவிரதப் போராட்டம் பற்றி தகவல் தெரிவித்து விட்டு வந்த எஸ்.ஐ. தோழர்களிடம் உண்ணாவிரதப் போராட்டம் என்று பேனரில் போட்டிருக்கிறீர்கள். உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அனுமதி கொடுக்கிறேன், முழக்கம் போடக் கூடாது. முழக்கம் போட்டால் அது ஆர்ப்பாட்டம் போல் உள்ளது என்று கூறி விட்டு, பொதுமக்களுக்கு தொந்தரவு என்று எங்களுக்கு கம்ப்ளைன்ட் வரக்கூடாது. யாரையும் விருப்பமின்றி அழைத்து உட்கார வைக்கக் கூடாது என்று கூறி விட்டுச் சென்றார். பின்னர் மாலை 4 மணிக்கு உண்ணாவிரதப் போராட்டம் முடித்து வைக்கும் வரை எட்டிக் கூடப் பார்க்கவில்லை.

தோழ்ரக்ள போராட்டத்தின் உறுதியைப் பார்த்த டீக்கடைக்காரர்கள் குழந்தைகளுக்கு பால் வாங்க என்ற போது காசு வாங்க மறுத்து இலவசமாக கொடுத்தனர். மாங்காய் கடைக்காரர் ஒருவர் தட்டில் உள்ள அனைத்து மாங்காயையும் கொடுத்து ஆதரித்தார். ஒரு பெட்டிக் கடைக்காரர் பெண்கள் உறுதியாக போராடி ஜெயிச்சுட்டாங்க, இப்படித்தான் இருக்கணும், பரவாயில்லீங்க என்று பெருமையாக பேசினார்.

போலீசின் அனுமதியின்றி ஆரம்பித்து நடத்திய பராட்டம் போலீசை தன் இடத்திற்கு வரவழைத்து அனுமதியை கொடுக்க வைத்தது. போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களுக்கும் பொதுமக்களுக்கும் போராட்ட உணர்வை ஊட்டுவதாக அமைந்தது. போலீஸ் தோழ்ரகளையும் வாக்குவாதத்தின் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது வி.வி.மு. ஆதரவாளர் ஒருவர் என் உயிரே போனாலும் பெண்களை போலீஸ் அப்புறப்படுத்த விட மாட்டேன் என்று கூறியது உறுதியை மேலும் அதிகரித்தது.

தகவல் : செய்தியாளர், புதிய ஜனநாயகம், பென்னாகரம் 23.03.2013.

5. பென்னாகரம் முடி திருத்தும் தொழிலாளர்கள்

பென்னாகரம் முடி திருத்தும் தொழிலாளர்கள்ஜெனிவா மாநாட்டில் இனப்படுகொலை – போர்க்குற்றம் என்று தீர்மானத்தில் குறிப்பிடாததைக் கண்டித்து பென்னாகரத்தில் முடிதிருத்தும் தொழிலாளர்கள் கடைகளை அடைத்து கண்டன ஆர்ப்பாட்டம்.

இலங்கையின் தமிழ்ஈழப்பகுதியில் 2009-ன் இறுதிப் போரில் இலங்கை அரசு தமிழ் ஈழ மக்களை இனப்படுகொலை செய்தது. அது பற்றி சமீபத்தில் நடந்த ஜெனீவாவின் மனித உரிமை கவுன்சிலின் மாநாட்டில் இலங்கையின் போரில் இனப்படுகொலை – போர்க்குற்றம் நடந்துள்ளது என்று குறிப்பிடாததைக் கண்டித்து பென்னாகரத்தில் உள்ள முடிதிருத்தும் தொழிலாளர்கள் தங்களின் கடைகளை அடைத்து 22.3.2013 அன்று வெள்ளிக்கிழமை காலை 11 மணி அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இக்கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு சத்தியமூர்த்தி தலைமைதாங்கி நடத்தினார். இக்கண்டன ஆர்ப்பாட்டத்தை வரவேற்று – வாழ்த்தி பென்னாகரம் வழக்கறிஞர்கள் ஜானகிராமன், ரமேஷ்வர்மா, மகாலிங்கம், தேவேந்திரன் ஆகியோர் உரையாற்றினார்கள்.

ராஜபக்சேவிற்கு எதிராகவும், ஜெனீவா மாநாட்டுத் தீர்மானத்திற்கு எதிராகவும் முழக்கங்கள் இடப்பட்டன. இறுதியில் தோழர் மணி நன்றி உரை கூறினார்.  இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் முடிதிருத்தும் தொழிலாளர்கள் முருகன், கிருஷ்ணன், வெங்கடேசன், குமார் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

தகவல் : செய்தியாளர், புதிய ஜனநாயகம், பென்னாகரம்

6.  புதுச்சேரியில் பு.ஜ.தொ.மு சார்பாக ” ஈழ மக்களின் படுகொலைக்கு துணைப்போன இந்திய அரசைக் கண்டித்து ” தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் மற்றும் இருசக்கர வாகன பிரச்சாரம்.

பு.ஜ.தொ.மு சார்பாகவும் அதன் இணைப்பு சங்கங்கள் கோத்ரேஜ் சாராலி ஒருங்கிணைந்த தொழிலாளர் சங்கம், இந்துஸ்தான் யுனிலீவர் ஒர்கர்ஸ் யூனியன், ரானெ பிரேக் தொழிலாளர் சங்கம், மதர் பிளாஸ்டிக் தொழிலாளர் சங்கம்  சார்பாகவும் நான்கு இடங்களில் நகர பகுதியில் ”தொடர் முழக்க கண்டன ஆர்ப்பாட்டம்” மற்றும் கிராமங்களிலும் இப்பிரச்சாரத்தை விரிவுப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் 16 கிராமங்களில் சைக்கிள்  பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

தொடர் முழக்க கண்டன ஆர்ப்பட்டம் நடந்த அனைத்து இடங்களிலும் இனவெறியன் ராஜபக்சே உருவ பொம்மையை தூக்கிலிட்டும், செருப்பால் அடித்தும், எரித்தும் நடத்தப்பட்டது. குறிப்பாக ஈழத்தமிழனத்தின் படுகொலைக்கு ராஜபக்சே மட்டும் குற்றவாளியல்ல  இப்போருக்கு அடிப்படை காரணமானவர்கள்  இந்திய ஆளும் வர்க்கமான டாட்டா, பிர்லா, அம்பானி, மிட்டல் போன்ற கும்பலும் அதன் கைக்கூலி இந்திய அரசும் அதன் ஆட்சியாளர்களும்தான். இந்திய ஆளும் வர்க்கங்களின் ஆரம்பகால கைக்கூலியான இந்திராகாந்தி அரசு அன்றைக்கு ஈழ போராளி குழுக்களுக்கு ஆயுத உதவி செய்தது, ஆதரித்தது. அனைத்தும் இந்திய தரகு முதலாளிகளின் மூலதனத்தை இலங்கையில் கொட்டி கொள்ளையிடுவதற்கும், அதற்கு
இலங்கை அரசை அடிபணிய வைப்பதற்கும்தான். இன்றைக்கு சிங்கள அரசுக்கு உறுதுணையாக இருந்து இனப்படுகொலைக்கு துணைசென்று ஈழ விடுதலையை எதிர்ப்பதும், இலங்கையில் உள்ள இந்திய ஆளும் வர்க்க கும்பலின் மூலதனத்தை தக்க வைத்துக்கொள்ளவும் அதை மேலும் விரிவுபடுத்திக் கொள்ளவும்தான். எனவே இந்திய அரசு எப்போதும் ஈழ விடுதலையை ஆதரித்ததில்லை, எப்போதும் எதிரிதான். இந்த எதிரி  இந்திய அரசிடமே ஈழ விடுதலைக்கு கோரிக்கை வைப்பதும் அல்லது அவர்களது ஆதரவோடு விடுதலை பெற்றுக்கொள்ளலாம் என்ற நோக்கில் போராட்டம் தொடர்ந்ததும், இதே நோக்கில் தமிழகத்தில் ஈழ ஆதரவு அமைப்புக்கள் செயல்பட்டதும்தான், 30 ஆண்டுகால ஈழ விடுதலை போராட்டம் இப்படி ஒரு கசப்பான நிலைக்கு வந்து முடிந்ததும், லட்சகணக்கான மக்கள் ஆனாதைகளாக நிற்பதற்கும் காரணம். இத்தவறான நிலைப்பாட்டுக்கு சென்றது வர்க்கப்பார்வையற்ற அரசியல் கொள்கைதான். இந்திய மேலாதிக்க அரசை எதிர்க்காமல், சுரண்டலை எதிர்க்காமல்,ஏகாதிபத்திய ஒடுக்குமுறைகளை எதிர்க்காமல் எந்த ஒரு தேசிய இனமும் விடுதலை பெற முடியாது என்கிற வகையில் இப்பிரச்சாரம் கொண்டு செல்லப்பட்டது.

தகவல் : பு.ஜ.தொ.மு., புதுச்சேரி

7. ரெட்ஹில்ஸ்

திருவள்ளூர் மாவட்ட புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் சார்பில் 21.3.2013 அன்று மாலை 4.30 மணி அளவில் செங்குன்றனம் பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. திருவள்ளூர் மாவட்டக் குழு உறுப்பினர் தோழர் செல்வகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில இணைச்செயலாளர் தோழர் ம.சி.சுதேஷ்குமார் கண்டன உரையாற்றினார்.

இணைப்பு சங்கத் தோழர்களும் உழைக்கும் மக்களும் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டம், நடைபாதை கடை வியாபாரிகளிடமும், பாதசாரிகளிடமும், ஆட்டோ, வேன் ஓட்டுனர்களிடமும் ஒரு பதிவை ஏற்படுத்துவதாக அமைந்தது.

தகவல் : பு.ஜ.தொ.மு., திருவள்ளூர் மாவட்டம்

8. திருச்சி புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி

திருச்சியில் பு.மா.இ.மு சார்பாக சட்டக்கல்லூரியிலும் பெரியார் ஈ.வெ.ரா கல்லூரியிலும் உள்ளிருப்பு போராட்டம், ரயில் மறியல், கலெக்டர் அலுவலக முற்றுகை, கொடும்பாவி எரிப்பு போன்ற போராட்டங்களை முன்னெடுத்து செய்தோம். இதில் 20.3.2013 அன்று அனைத்து கல்லூரி மாணவர்களும் போராட வேண்டும் என ஒருங்கிணைந்தனர். நம்மை தொடர்பு கொண்டு அழைத்தனர். நாம் அவர்களை பேரணியாக அழைத்து சென்று மறியல் மற்றும் காங்கிரசு அலுவலகம் முற்றுகை என போராட்டங்களில் ஈடுபட்டோம். அறிமுகமான மாணவர்களைக் கொண்டு திருச்சி மாவட்ட அனைத்து மாணவர் போராட்டக் குழு ஒன்றை உருவாக்கி அதன் மூலம் போராட்டங்களை முன்னெடுக்கத் திட்டமிட்டோம். இதனடிப்படையில் 23.3.2013 அன்று பேரணி நடத்த திட்டமிட்டதில் 15 கல்லூரி மாணவர்கள் சுமார் 120 பேர் கலந்து கொண்டனர். கல்லூரி விடுமுறை விடப்பட்டுள்ள நாட்களில் மாணவர்கள் போராட முன்வந்தது பாராட்டுக்குரியதாகும்.

இந்த அடிப்படையில் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து சத்திரம் பேருந்து நிலையம் வரை நகரின் முக்கியமான சாலைகளின் வழியே பேரணியாக சென்றோம். பேரணியின் முதல் வரிசையில் ஈழத்தமிழ் மக்களை ஒபாமாää மன்மோகன்சிங், ராஜபக்சே மூவரும் கூட்டுசேர்ந்து சித்ரவதை செய்வது போல காட்சிப்படிவம் செய்யப்பட்டது. இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மக்கள் அதிகமாக கூடியிருந்த பகுதிகளில் மாணவர்கள் இருபுறமும் நின்று விளக்கி பேசியதை மக்கள் கைதட்டி வரவேற்றனர். பேரணி செல்லும் வழிகளில் துண்டு பிரசுரம் கொடுக்கப்பட்டது.

பேரணி துவங்கும் முன்பே காவல் துறையினர் “இன்று எதை உடைக்க போகிறீர்கள்” என்று கேட்டனர். “சார் எங்க நோக்கம் அது இல்ல நாங்க பிரச்சாரம் தான் செய்யப்போறோம்” என்று விளக்கி பேசியதும் “இப்படியே எல்லாரும் செஞ்சா எப்படி பா எங்க பொழப்பு என்ன ஆகுறது” என்று சலித்துக்கொண்டு இறுதிவரை போக்குவரத்தை சரி செய்து கொடுத்தனர்.

போகும் வழிநெடுக தலைமை தபால் நிலையம், காங்கிரஸ் அலுவலகம் போன்ற இடங்களில் போலீஸ் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் மாணவர்கள் அதை பொருட்டாக கருதாமல் விண்ணதிர முழக்கமிட்டு கம்பீரமாக நடந்து சென்றனர். இறுதியாக பேரணி முடியும் போது அனைத்து கல்லூரிகளின் மாணவர் தலைவர்கள் பொதுமக்களிடம் மாணவர் போராட்டங்களுடன் தங்களையும் இணைத்துக் கொண்டு போராட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி பேசி பொதுமக்களுக்கு  அழைப்பு விடுத்தனர்.

 1. தமிழ் நாட்டில் தமிழ் அமைப்புக்களா இருக்கட்டும், அல்லது வினவு போன்ற பத்திரிக்கை ஆகட்டும், இலங்கையில் வடகிழக்கில் இருந்து 1990 ம் ஆண்டு தமிழ் பேசும் முஸ்லிம் மக்களை கூன்றோடு வெளியற்றிய பொது எங்கே இருந்தார்கள். காலை தொழுகையில் ஈடுபட்டு இருக்கும் பொது முதியவர்கள், சிறுவர்கள் என்று பாராமல் நுற்று கணக்கான மக்களை சுட்டுக்கொன்றர்கள். பின்னர் யாரும் உயிருடன் இருக்கிறர்களா என்று புரடிப்பர்த்து வாளால் வெட்டினார்கள். உண்மையான தமிழ் பற்று என்றால் அப்போதும் பேசியிருக்க வேண்டும். இதெல்லாம் பம்மாத்து. இதுதான் வடிகட்டிய துவேசம் என்பது. துணிவிருந்தால் யாரவது இதற்கு பத்தி அளிக்கவும். சுத்த அரசியல்

 2. // இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கையும் தூக்கில் போடு! தூக்கில் போடு! //

  சீனாவையும் அதன் அதிபரையும் என்ன செய்யலாம்? இலங்கைக்கு அமெரிக்கா அளித்த நிதி உதவி $10 மில்லியன் (2005), $4 மில்லியன் (2006), $3 மில்லியன் (2007). அதன் பிறகு மனித உரிமை மீறல்களை காரணம் காட்டி நிதி உதவியை முழுதும் நிறுத்திக்கொண்டது. சீனா 2007 இல் இலங்கைக்கு அளித்த நிதி உதவி $1 பில்லியன். ராணுவ ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் சீனா இலங்கைக்கு செய்த உதவிகள் பற்றிய சில கட்டுரைகள் கீழே (எழுதப்பட்ட ஆண்டு அடைப்புக்குறிக்குள்). மேலே சொன்ன நிதி உதவி கணக்குகள் இந்தக் கட்டுரைகளில் இருந்து எடுக்கப்பட்டவை

  (2011) http://www.asiantribune.com/news/2011/07/23/us-aid-sri-lanka-drastically-declined-2005-now-halted-no-strategic-interests-sri-lan

  (2008) http://www.nytimes.com/2008/03/09/weekinreview/09sengupta.html?_r=0

  (2009) http://www.thenational.ae/news/world/south-asia/chinas-aid-revealed-in-sri-lankas-victory-parade

  (2013) http://www.independent.co.uk/news/world/asia/how-beijing-won-sri-lankas-civil-war-1980492.html

  2012 இல் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த மொக்கை ஐநா தீர்மானத்தையும் எதிர்த்து வாக்களித்தது சீனா. தற்போது ஐநா மனித உரிமை கவுன்சிலில் சீனா அங்கத்தினராக இல்லாததால், சமீபத்தில் நிறைவேறிய வெட்டித் தீர்மானத்தை எதிர்த்து வாக்களிக்க வாய்ப்பில்லாமல் போனது. இலங்கைக்கு எதிராக பொருளாதார தடை கொண்டு வர ஐநா முயன்றால் சீனா நிச்சயம் எதிர்க்கும். தனது வீடோ அதிகாரத்தை பயன்படத்தும் (ரஷ்யாவும் இவ்வாறே செய்யும்). மால்டிவிஸ், பாகிஸ்தான், பங்களாதேஷ், மியான்மார் என ராணுவ துறைமுகங்களை அமைத்துள்ள சீனா, தற்போது இலங்கையிலும் அத்தகைய ஒரு துறைமுகத்தை கட்டிக்கொண்டுள்ளது (கீழே பார்க்கவும்). மொத்தத்தில் இஸ்ரேலின் கூட்டாளி அமேரிக்கா என்றால், இலங்கையின் கூட்டாளி சீனா.

  http://en.wikipedia.org/wiki/String_of_Pearls_%28China%29#cite_note-12

  இந்தப் படித்தறியா முட்டாளின் புரிதலின் படி, இந்தியா இலங்கைக்கு உதவியது விடுதலைப் புலிகளை அழிக்க மட்டுமே. ஈழத் தமிழரை அழிக்க அன்று. பக்கத்து வீட்டில் புகுந்த கருநாகத்தை கொல்ல கழி கொடுத்து உதவுவது போல் தான். அதுவும் இது இந்தியாவுக்குள் புகுந்து அதன் முன்னாள் பிரதமரை தீண்டிய பாம்பு. அதை அழிக்க ஒரு வாய்ப்பு கிடைக்கும் பொது எந்த நாடும் இதையே தான் செய்யும்.

  உங்களது மூன்று முகமூடிகளில் ராஜபக்சே மட்டுமே சரியானது. அவனுக்கு அடுத்து இருக்க வேண்டியது சீன அதிபரின் முகமூடியே. இந்திய பிரதமர், அமெரிக்க அதிபர் முகமூடிகள் அன்று.

  இலங்கை பிரச்சனையில் தீவிர படிப்போ, ஆழ்ந்த புரிதலோ எதுவுமின்றி கூகுளே சரணம் என்று எழுதிய மறுமொழி இது. தவறு இருந்தால் திருத்திக் கொள்கிறேன்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க