1. திருச்சி
திருச்சியில் ஈழ மக்களுக்கான ஆதரவு குரல், மாணவர்கள் தொழிலாளர்கள், உழைக்கும் மக்களிடம் பெருகி திருச்சி நகரமே ஸ்தம்பித்து போகும் வண்ணம் போராட்டம் தொடர்கிறது.
இதன் ஒரு பகுதியாக மக்களிடம் ஐ.நா தீர்மானத்தின் போலித்தனத்தையும், மன்மோகனின் கபட நாடகத்தையும் தோலுரிக்கும் வண்ணம் திருச்சி பெண்கள் விடுதலை முன்னணி சார்பாக 3 பெண் தோழர்களுக்கு மன்மோகன், ராஜபக்சே, ஒபாமா போன்றோரின் முகமூடியை அணிவித்து, நிற்கவைத்து, தமிழினவாதிகளும், அரசியல்வாதிகளும் ஈழமக்களின் கொடுமைக்கு நியாயம் கேட்கும் வண்ணம் மன்மோகனிடம் கையேந்தி கெஞ்சி நீதிகேட்கின்றனர்.
பஞ்சாபில் கருவாகி…
உலகவங்கியில் உருவாகி…
கான்வென்டில் கல்விகற்ற…
எங்கள் இந்திய மேதையே போற்றி போற்றி!
தங்கமே தலைவா வாழ்க!
எங்கள் பிரதமரே போற்றி போற்றி!
ஆட்சியில் உள்ள நாள் மட்டும் போற்றி போற்றி!
பூ தூவி சாம்பிராணி புகை போட்டு, மன்மோகனை…
வாயத் தொறந்து பதில் சொல்லுகள் என கெஞ்சி கேட்கின்றனர்,
இதை கெஞ்சி மன்மோகனிடம் மன்றாடுகின்றனர்,
இந்தக் காட்சியை அம்பலப்படுத்தி ஈழக் கொலையாளிகளில் மன்மோகனும் ஒருவன் ஆக மன்மோகன், ராஜபக்சே ஒபாமாவின் கூட்டுக் கலவாணித் தனத்தை அமைப்பு அரசியல் கருத்துடன் பேசி மக்கள் முன் நடித்து காண்பித்தனர்.
15 பெண் தோழர்கள், 7 குழந்தைகள், சிவப்பு வெள்ளை சீருடையுடன், பறை அடிப்பதும், ஈழத்தின் கொடுமையை விளக்கும் பாடல்களும் என, பேச்சு என பெண்களே செய்தனர், திருச்சி நகர் முழுவதும் காலை முதல் இரவு வரை நடத்தினர், ஒவ்வொரு இடத்திலும் மக்கள் 50 முதல் 100 பேர் கூடி நின்று ஆதரவு கொடுத்தனர்.
இவ்வகையான பிரச்சாரம் மக்களிடையே எளிமையாக கருத்துக்களை எடுத்துச்செல்லவும் நமது நிலைபாட்டை விளக்கவும் ஏதுவாக அமைந்தது.
[படங்களை பெரிதாக பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]
தகவல் : பெண்கள் விடுதலை முன்னணி, திருச்சி கிளை
2. புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி – சத்தியபாமா கிளை
ஈழ மக்களுக்கு ஆதரவாக சோழிங்கநல்லூரில் புஜதொமு ஆர்ப்பாட்டம்.
[படங்களை பெரிதாக பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]
தகவல் : பு.ஜ.தொ.மு.
3. உசிலை ஆர்ப்பாட்டம்
உசிலம்பட்டி வட்டம்; முல்லைப் பெரியாறு அணைப் பாதுகாப்புக் குழு சார்பாக உசிலை தாலுகா அலுவலகம் அருகில்
குற்றவாளி ராஜபக்சேவோடு துணைநின்ற இந்திய அரசையும் விசாரணைக் கூண்டில் ஏற்றுவோம்!
முல்லைப் பெரியாறு அணைiயை உடைக்க 50 கோடி ஒதுக்கியுள்ள கேரள அரசின் அடாவடித்தனத்தைக் கண்டு கொள்ளாத மத்திய அரசின் மௌனத்தைக் கலைப்போம்!
என்ற தலைப்பின் கீழ் இலங்கையின் சிங்கள இனவெறியன் ராஜபக்சேவின் உருவ பொம்மைக்கு செருப்பு மாலை போட்டு அதனை மக்களின் பார்வைக்கு வைத்து எழுச்சிமிகு ஆர்ப்பாட்டத்தை 22.03.2013 மாலை 5 மணியளவில் நடத்தியது.
2009 முள்ளிவாய்க்கால் இறுதி நாள் இனப்படுகொலையாளி ராஜபக்சேவோடு துணை நின்ற இந்திய அரசையும் குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம்!
அமெரிக்கா தலைமையிலான விசாரணையை ஏற்க மறுப்போம்!
நூரம்பர்க் போன்ற நீதி விசாரணை கோருவோம்!
என்ற கோரிக்கையோடு முல்லைப் பெரியாறு அணையை உடைத்து புதிய அணை கட்ட கேரள அரசு சென்ற வாரம் பட்ஜெட்டில் 50 கோடி நிதி ஒதுக்கி அடாவடித்தனம் செய்வதையும் இ அதனைக் கண்டுகொள்ளாத காங்கிரஸ் மத்திய அரசின் மௌனத்தைக் கலைப்போம் என்றும் தேசிய நீர்க்கொள்கை மக்கள் விரோதமானது என்றும் அது விவசாயத்தை அளிப்பதற்கான திட்டம் என்றும் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் முல்லைப் பெரியாறு அணைப்பாதுகாப்புக் குழு ஆர்வளர் திரு ஜோதிபாசு தலைமை தாங்கினார். கண்டன உரையாக பொறியாளர் திரு மாயத்தேவர் (வல்லரசு பார்வர்டு பிளாக்) மற்றும் வழக்கறிஞர் ரெட் காசி (தேவர் தேசியப் பேரவை), தங்கப்பாண்டி, மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்ட துணைச் செயலாளர் தென்னரசு மற்றம் வழக்கறிஞர் விநோத்குமார் மற்றும் வி.வி.மு செயலாளரும் முல்லைப் பெரியாறு அணைப் பாதுகாப்புக் குழு ஒருங்கிணைப்பாளருமான தோழர் குருசாமி இறுதியல் சிறப்புரையாற்றினார்.
ஆப்பாட்டத்தின் பேசிய அனைவரும் பெரும்பாலும் காங்கிரசை ஒழித்தால்தான் நமக்கும் ஈழத்திற்கும் உண்மையான நீதி கிடைக்கும் என்று பேசினார்கள்.
தோழர் குருசாமி அமெரிக்கா என்றால் என்ன? அதன் நோக்கம் என்ன? ஏன் அது தமிழர்களுக்கு எதிராக உள்ளது. இந்திய முதலாளிகளின் நலன்தான் தமிழர்களின் நலனை விட இந்திய அரசிற்கு முக்கியமாகப் படுகிறது. இதன் பின்னனியைப் புரிந்து கொண்டு நமது போராட்டம் இருக்க வேண்டும் என்று விளக்கினார்.
இறுதியில் ராஜபக்சே கொடும்பாவி எரிக்கப்பட்டது. சுமார் 300 பேர்கள் வரை பார்வையாளர்களாக கலந்து கொண்டு ஆதரவு தந்தார்கள்.
காங்கிரசை ஒழிப்பதில் முதல் கவணம் இருப்பது அவசியம் என்று ஏகமனதாக பேசி முடிக்கப்பட்டது. சுய நிர்ணய உரிமைதான் உண்மையான தீர்வு தரும் அதற்கு 80 களின் எழுச்சியைபோல் மீண்டும் தமிழகத்தை உருவாக்குவோம் என பேசி முடிக்கப்பட்டது.
தகவல் : பு ஜ செய்தியாளர், உசிலை.
4. வலையங்குளம் தெருமுனைக் கூட்டம்
மனித உரிமை பாதுகாப்பு மையம் மதுரை மாவட்டக்கிளை, வலையங்குளம் பகுதி சார்பாக ஈழத் தமிழினப் படுகொலைக்குக் காரணமான சிங்கள இனவெறியன் ராஜபக்சேவைத் தண்டிக்கவும், ஈழமக்களிடையே தன்னுரிமைக்கான வாக்கெடுப்பு நடத் தவும் கோரி 27.03.13 அன்று மாலை 6.00 மணியளவில் தெருமுனைக் கூட்டம் நடை பெற்றது.
இக்கூட்டத்திற்கு வலையங்குளம் பகுதி ம.உ.பா.மைய உறுப்பினர் பெ.ரா.பெருமாள் தலைமை தாங்கினார். வலையங்குளம் ஊராட்சித் தலைவரும், ம.உ.பா.மைய உறுப்பினருமான வெ.பிச்சை, திருக்குறள் வளர்ச்சிக் கழக அமைப்பாளர் ஐயா கூ.கிருஷ்ணன், ம.உ.பா.மைய உறுப்பினர் செ.கணேஷ் ம.க.இ.க.மதுரை அமைப்பாளர் தோழர் ப.ராமலிங்கம் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
இலங்கையில் 2009ல் நடைபெற்றது இனப் படுகொலை. அதற்குப் பின்பு தமிழர்கள் வதைமுகாம்களில் அடிமைகளாக வைக்கப் பட்டுள்ளனர். அவர்களுக்கு விடுதலை வழங்கும் முகமாக அங்கே பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும். அதற்காகத் தமிழ் மக்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்ற கருத்துக்களை அனைவரும் வலியுறுத்திப் பேசினர்.
சிறப்புரையாற்றிய ம.உ.பா.மையத்தின் மதுரை மாவட்ட செயலாளர் லயனல் அந்தோணிராஜ், ராஜபக்சே ஈழத் தமிழர்களைப் படுகொலை செய்த இனப்படுகொலையாளன், சிங்கள இனவெறியைத் தூண்டிவிட்டு ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி ஈழத் தமிழர்களின் குருதிக் கடலில் குளித்துக் கொண்டிருப்பவன். அதற்குத் துணை நின்று படு கொலை நடத்தியது இந்திய ராணுவம். இந்திராகாந்தி, ராஜிவ் காந்தி ஆகியோர் ஈழ விடுதலைப் போராளிக் குழுக்களை ஆதரித்து, ஆயுதம். நிதி வழங்கி, பயிற்சியும் கொடுத்து தங்களது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்க முயற்சி செய்தனர். தனி ஈழம் கோரிக்கையை நிராகரித்தனர். இலங்கை அரசோடு சேர்ந்து ஈழ மக்களுக்கு துரோகம் இழைத்தனர். அமெரிக்காவும் விடுதலைப் புலிகளை ஆதரித்து ஆயுதம் வழங்கியது. ஆனால் விடுதலையை விரும்பவில்லை. இலங்கையில் தங்களது மேலாதிக்கம் மட்டுமே இவர்களது குறிக்கோளாக இருந்தது. முள்ளிவாய்க்கால் படுகொலையின் போது மவுனமாகப் பார்த்துக் கொண்டிருந்த அமெரிக்கா இன்று தனது மேலாதிக்கத்தை இலங்கையில் உறுதி செய்து கொள்வதற்காகவும் இந்திய முதலாளிகளின் முதலீடுகளைக் காப்பாற்று வதற்காகவும் ஐ.நா.வில் இலங்கைக்கு எதிராகத் தீர்மானம் கொண்டு வந்தது.
அந்தத் தீர்மானம் உப்புச்சப்பில்லாத மொன்னையான தீர்மானம். அந்த தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று கோரி தான் தமிழகத்தின் அனைத்து ஓட்டுக் கட்சிகளும் ஈழ ஆதரவு மற்றும் தமிழ் தேசியக் கட்சிகளும் இயக்கங்களும் போராட்டம் நடத்துகின்றனர். ஐ.நா.சபை அமெரிக்காவின் கைக்கூலி. அது அமெரிக்காவின் நலனுக்கு செயல்படுகிறது. ஐ.நா.விடமும் கோரிக்கை வைப்பது பயனளிக்காது.
27.03.13 அன்று சட்டசபையில் ஜெயலலிதா தான் நிறைவேற்றிய தீர்மானங்களுக் காகத்தான் மாணவர்கள் போராடுகிறார்கள். ஒருமனதாக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுவிட்டதால் இனி மாணவர்கள் போராடத் தேவை இல்லை என்று ஜெயலலிதா அறிவிக்கிறார். ஏற்கனவே மாணவர்களின் போராட்டத்தை வரம்புக்குட்பட்டு ஜெயா போலீசு அனுமதித்தது. கட்டுப்பாட்டுக்குள் வைத்தது மட்டும் அல்லாமல், மாணவர்களது கோரிக்கை இவர்களையும் தாண்டி ராஜபக்சே இனப் படுகொலையாளி, தண்டிக்கப்பட வேண்டும். ஈழமக்களின் தன்னுரிமைக்கான வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தை தொடர்ந்து வருகின் றனர். அனைத்து கல்லூரிகளையும் காலவரையின்றி மூடிவிட்டு மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும் என்று இப்பொழுது கோரிக்கை விடுக்கின்றார் ஜெயலலிதா. இது மாணவர் போராட்டத்தை நேரடியாக ஒடுக்குவதற்கான ஆரம்பம்.
ஈழ விடுதலையை எவ்வாறு சாதிப்பது என்பதில் தெளிவற்ற நிலை உள்ளது. ஆனால் முள்வேலி வதைமுகாம்களுக்குள் கடுமையான ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாகி வரும் ஈழத் தமிழர்களை விடுவிக்க வேண்டுமென்றால் ஒட்டு மொத்த தமிழகமும் கொதித்து எழுந்து போராட வேண்டும். 80 களின் எழுச்சியைத் தமிழகத்தின் வீதிகளில் மக்கள் உருவாக்க வேண்டும். அதுவே ஆட்சியாளர்களுக்கு நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தும், இந்தி எதிர்ப்பு போராட்டம், முல்லைப் பெரியாறு போராட்டம், ராஜிவ் காந்தி படுகொலையில் மூவர் தூக்குத் தண்டனைக்கு எதிரான போராட்டங்கள் எழுச்சி பெற்ற தைப் போல ஓட்டுக்கட்சிகளுக்கு அப்பாற்பட்ட ஒருமித்த மக்கள் எழுச்சியே தீர்வாகும் என்று பேசினார்.
வழக்கறிஞர் சி.மன்மதன் நன்றி கூறினார். மக்கள் இறுதி வரை இருந்து ஆதரவளித்தனர்.
தகவல்:- மனித உரிமை பாதுகாப்பு மையம், மதுரை மாவட்டக்கிளை
பொறியியல் கல்லூரிகள் திங்களிலிருந்து துவங்கிவிட்டன. இன்றிலிருந்து அனைத்து இதர கல்லூரிகளும் செயல்பட துவங்கிவிட்டன. மாணவர்களுக்கு சனி ஞாயிறன்றும் வகுப்புகள் நடக்க இருக்கின்றன. தேர்வுத் தேதிகள் தள்ளி வைக்கப்படவில்லை.