Tuesday, March 2, 2021
முகப்பு கட்சிகள் அ.தி.மு.க காவிரி: சிக்கல் தீரவில்லை!

காவிரி: சிக்கல் தீரவில்லை!

-

மிழக மக்களின் தொடர்ச்சியான போராட்டங்கள், ஆட்சியாளர்களின் துரோகங்கள், வறட்சி, விவசாயிகளின் தற்கொலைகள் – இவற்றுக்குப் பின்னர் காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை இந்திய அரசு கடந்த பிப்ரவரியில் அரசிதழில் வெளியிட்டுள்ளது.

ஆறாண்டுகளுக்கு முன்பு 2007-இல் நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு வெளியானபோது, “இத்தீர்ப்பு தமிழகத்துக்குப் பாதகமானது, மைனாரிட்டி தி.மு.க. துரோக அரசு பதவி விலக வேண்டும்” என்று கூப்பாடு போட்டார் பாசிச ஜெயலலிதா. அப்படிக் கூறியவர்தான் இப்போது, “எனது 30 ஆண்டுகால அரசியல் வாழ்வில் கிடைத்த மகத்தான வெற்றி, இது எனக்குக் கிடைத்த பிறந்தநாள் பரிசு, இறுதித் தீர்ப்பு அரசிதழில் வெளியாவதற்கு நானே காரணம்” என்று தனக்குத் தானே பெருமை கொண்டாடுகிறார்.

காவிரியில் நீரின்றி சம்பா பயிர்கள் கருகி, அடுத்தடுத்து விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட போதிலும், தமிழகத்தில் விவசாயிகளின் தற்கொலைச் சாவுகளே கிடையாது என்று திமிராக அறிவித்ததோடு, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் கூட தராமல் அலட்சியப்படுத்தியது ஜெயா அரசு. விவசாயிகளின் போராட்டங்களுக்குப் பின்னரே, 50 சதவீதத்துக்கு மேல் பயிர் இழப்பு ஏற்பட்டுள்ள விவசாயிகளுக்கு மட்டும், ஒரு ஏக்கருக்கு ரூ. 15,000 வீதம் இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. இதிலும் பயிர் காப்பீடு நிறுவனம் வழங்கும் இழப்பீட்டை அரசே எடுத்துக் கொண்டு மீதமுள்ள ரூ. 5,808 தான் விவசாயிகளுக்குத் தரப்படும். தஞ்சையில் இந்த அற்ப இழப்பீடு வழங்கும் நிகழ்ச்சியில், ஜெயாவின் அடிமை அமைச்சர் வைத்தியலிங்கம், விவசாயிகள் கைதட்டாததைக் கண்டு ஆத்திரமடைந்து “உங்களுக்கு அறிவு இல்லையா? நீங்கள் எல்லாம் உணர்ச்சியற்ற பிண்டங்களா?” என்று விவசாயிகளை இழிவுபடுத்தி ஆத்திரத்தை வெளிப்படுத்தியுள்ளார். இப்படி விவசாயிகளின் நலனில் மயிரளவும் அக்கறையில்லாத இந்த கும்பல்தான் பாசிச ஜெயாவை “காவிரித் தாய்” என்று துதிபாடிக் கொண்டு அவருக்கு ஒளிவட்டம் போட்டுக் கொண்டு திரிகிறது.

காவிரி போராட்டம்
நிபந்தனைகளின்றி அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மறியல் போராட்டம் நடத்திய விவசாயிகளைக் கைது செய்ததைக் கண்டித்தும், அவர்களை விடுவிக்கக் கோரியும் திருவாரூர் ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு முன் ஆர்ப்பாட்டம் நடத்தும் விவசாயிகள்.

கடந்த பிப்ரவரி 2007-ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட இந்த நடுவர் மன்றத் தீர்ப்பு 6 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது மிகத் தாமதமாக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளதன் மூலம், காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு நாட்டின் சட்டங்களில் ஒன்றாகியுள்ளது. இருப்பினும், அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள முடிவின்படி கர்நாடகம் இச்சட்டத்தை மதித்து செயல்படுமா என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. “காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க அனுமதிக்க மாட்டோம்; காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அமல்படுத்தவும் விடமாட்டோம்” என்கிறது கர்நாடக பா.ஜ.க. “காவிரி மேலாண்மை வாரியத்தை இப்போது அமைக்க முடியாது” என்று அடாவடியாகப் பேசுகிறார், மத்திய நீர்வளத்துறை அமைச்சர் ஹரீஷ் ராவத். தற்போது இறுதித் தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்ட பின்னரும், தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்துவிட முடியாது என்று கர்நாடக முதல்வர் ஷெட்டர் பகிரங்கமாகக் கொக்கரிக்கிறார்.

எனவே, காவிரி நடுவர் மன்றத் இறுதி தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளவாறு, தன்னாட்சி அதிகாரமுள்ள காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து அதன் கட்டுப்பாட்டில், கர்நாடகத்திலுள்ள நான்கு அணைகளையும் நீர்ப்பாசன நிர்வாகத்துக்கு உட்படுத்தி கண்காணித்தால்தான், இந்த இறுதித் தீர்ப்பு நடைமுறைக்கு வருவதற்கான வாப்பு இருக்கிறது. ஆனால், இதற்கு எவ்வித காலக்கெடுவையும் நிர்ணயிக்காத உச்ச நீதிமன்றம், கடந்த பிப்ரவரி 25 அன்று காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பது மைய அரசின் கடமை என்று கூறி எவ்வித உத்தரவும் பிறப்பிக்காமல் நழுவிக் கொண்டுள்ளது. கர்நாடக முதல்வர் ஷெட்டர் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உள்ளிட்டு, தமிழ்நாடு, கர்நாடகம் ஆகிய மாநிலங்களின் சார்பில் தாக்கல் செயப்பட்ட துணை மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்துள்ளது.

இவையும் போதாதென்று, தமிழகத்தின் குறுவை சாகுபடிக்கு ஜூன் மாதத்தில் தண்ணீர் வேண்டும் என்பது கூடத் தெரியாமல், விவசாயத்தைப் பற்றிய பொதுஅறிவுகூட இல்லாமல், இறுதித் தீர்ப்பு குறித்த வழக்கின் இறுதி விசாரணையை ஆகஸ்ட் 6-ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. காவிரி நீரில் தமிழகத்தின் நியாயவுரிமையை அலட்சியப்படுத்தி, தமிழக விவசாயிகளின் உயிராதமான இப்பிரச்சினையைத் தட்டிக்கழிக்கும் வகையில்தான் உச்ச நீதிமன்றம் அதிகாரவர்க்கத் தோரணையில் அணுகி வருகிறது.

காவிரி போராட்டம்
காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்கக் கோரி, திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலத்தில் உள்ள ஓ.என்.ஜி.சி. பெட்ரோலிய கிணறுகளை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தும் காவிரி மீட்புக் குழுவினர்.

உச்ச நீதிமன்றம் தனது பொறுப்பைத் தட்டிக்கழித்து நழுவிக் கொள்வதையும், அடாவடித்தனமான கர்நாடக அரசு மீது தனது அதிகாரத்தை ஏவி கட்டுப்படுத்த இந்திய அரசு தொடர்ந்து மறுப்பதையும் இவையனைத்தும் மீண்டும் நிரூபித்துக் காட்டுகின்றன. எனவே, அரசிதழில் இறுதித் தீர்ப்பு வெளியிடப்படுள்ளதால் அதிசயம் ஏதும் நடந்துவிடப் போவதில்லை. ஏற்கெனவே1991-இல் நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்டபோது, கர்நாடக அரசு அதைச் செயல்படுத்த மறுத்தது. மைய அரசோ கைகட்டி நின்றது. கன்னட இனவெறியர்களோ, தமிழர்களுக்கு எதிராக மிகக் கொடிய கலவரத்தை அரங்கேற்றினர்.

இந்நிலையில், வன்கொடுமைத் தடுப்புச் சட்டம், வரதட்சணை தடுப்புச் சட்டம் போலவே காவிரி இறுதித் தீர்ப்பானது இன்னுமொரு காகிதச் சட்டமாகவே இருக்கும். தமிழகத்தின் நியாயவுரிமையை நிலைநாட்ட வேண்டிய உச்ச நீதிமன்றமும், கர்நாடகத்துக்கு உத்தரவிட்டு செயல்படுத்த வேண்டிய அதிகாரத்தைக் கொண்டுள்ள மைய அரசும் எந்த நடவடிக்கையுமின்றி நழுவிக் கொள்ளும் தற்போதைய அரசியலமைப்பு முறையில், இந்தச் சட்டம் ஒரு அங்குலம் கூட நகராது. ஆனாலும் கருணாநிதியும் ஜெயலலிதாவும் இந்த அநீதிக்கும், கர்நாடகத்தின் அடாவடிக்கும், மைய அரசின் செயலற்ற நிலைக்கும் எதிராக வாய் திறக்காமல், தங்களால்தான் காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளதாகக் காட்டி மலிவான அரசியல் நாடகத்தை நடத்துகின்றனர்.

எல்லாவற்றுக்கும் மேலாக, ஓட்டுக்குத்தான் விவசாயிகள் தேவையாக உள்ளனரே தவிர, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு விவசாயமும் விவசாயிகளும் தேவையில்லை என்பதுதான் ஆளும் கும்பலின் மறுகாலனியாதிக்கக் கொள்கையாக உள்ளது. ஏற்கெனவே காவிரி கடைமடைப் பகுதிகளில் இறால் பண்ணைகளை அமைத்து விவசாயத்தை நாசமாக்கிய இக்கும்பல், இப்போது விவசாயிகள் மாற்றுப் பயிர்களுக்கும், நவீன விவசாயத்துக்கும் மாற வேண்டுமென உபதேசிக்கிறது. விவசாயத்தையும் விளைநிலங்களையும் அழித்து வீட்டுமனைகளாக மாற்றுவதையும், கிழக்குக் கடற்கரைப் பகுதி முழுவதிலும் கார்ப்பரேட் கொள்ளைக்கான மின்நிலையங்களையும் அணு மின் நிலையங்களையும் அமைப்பதையும் ஆளும் கும்பல் நோக்கமாகக் கொண்டுள்ளது. இவற்றின் நடுவே நிலத்தடி நீரையும் உறிஞ்சி டெல்டா மாவட்டங்களைப் பாலைவனமாக்கிவரும் தண்ணீர் வியாபாரிகள் பெருகி வருவதோடு, உலகவங்கி – உலக வர்த்தகக் கழகத்தின் கட்டளைப்படி தண்ணீரை வர்த்தகப் பொருளாக்கும் வகையில் மைய அரசு தேசிய நீர்க் கொள்கையை வகுத்துக் கொண்டுள்ளது. மொத்தத்தில் விவசாயிகளை விவசாயத்திலிருந்தே விரட்டியடிப்பதும், இனி விவசாயமே செய முடியாத நிலையை உருவாக்குவதுமான மறுகாலனியாதிக்கக் கொள்கைகள் வேகமாகத் திணிக்கப்பட்டு வருகின்றன.

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு அரசிதழில் வெளியாகியுள்ளதைக் காட்டி, தமிழகத்துக்கு நியாயம் கிடைத்துவிட்டதைப் போன்றதொரு தோற்றத்தை ஓட்டுப் பொறுக்கி பிழைப்புவாதிகள் ஏற்படுத்திவரும் இன்றைய நிலையில், இதனை அம்பலப்படுத்தி காவிரியில் தமிழகத்தின் நியாயவுரிமைக்காகவும், தீவிரமாகிவரும் மறுகாலனியத் தாக்குதலுக்கு எதிராகவும் தமிழக உழைக்கும் மக்கள் விடாப்பிடியான தொடர் போராட்டங்களை நடத்துவதே இன்றைய முதன்மைத் தேவையாக உள்ளது.

– கதிர்

____________________________________________________________________________________________________
புதிய ஜனநாயகம் – மார்ச் 2013
____________________________________________________________________________________________________

  1. சர்வதேசிய வாதம் பேசும் வினவு இப்படி குறுகிய கண்ணோட்டத்தில் கர்நாடகா தமிழ்நாடுன்னு பேசலாமோ?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க