Thursday, April 15, 2021
முகப்பு கட்சிகள் அ.தி.மு.க விவசாயிகளை விரட்டியடிக்கும் 'வளர்ச்சி'!

விவசாயிகளை விரட்டியடிக்கும் ‘வளர்ச்சி’!

-

கேரள மாநிலம் கொச்சியிலிருந்து தமிழகத்தின் வழியாக கர்நாடகா மாநிலம் பெங்களூருக்கு இயற்கை எரிவாயுவைத் தரைவழியாகக் கொண்டு செல்லும் திட்டமொன்றை அறிவித்து நடைமுறைப்படுத்தி வருகிறது, பொதுத்துறை நிறுவனமான இந்திய எரிவாயு ஆணையம் (கெய்ல்). தமிழகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய ஏழு மாவட்டங்களிலுள்ள 138 கிராமங்களின் வயல்வெளிகளில் இக்குழாய்களைப் பதித்து எரிவாயுவைக் கொண்டு செல்லும் வண்ணம் இத்திட்டம் தீட்டப்பட்டுள்ளது.

10-farm-landவிளைநிலங்களில் வெறும் 20 மீட்டர் அகலத்திற்கு மட்டுமே இடத்தை எடுத்துக் கொள்ளப் போகிறோம் என கெய்ல் சாதாரணமாகக் கூறுகிறது. சிறு விவசாயிகளுக்குச் சொந்தமாயுள்ள ஒரு ஏக்கர், அரை ஏக்கர் நிலத்தை எடுத்துக் கொண்ட பிறகு அவர்களுக்குப் பயிர் செய்வதற்கு என்ன மிஞ்சியிருக்கும்? அந்தத் துண்டு நிலம் இரண்டு துண்டாகிப் பயிர் செய்வதற்கு வாட்டமில்லாமல் போகும்.

“குழாய் பதிக்கப்பட்ட விவசாய நிலத்தின் அருகே வண்டிப் பாதை அமைக்கக் கூடாது; பாசனக் குழாய்களை அமைக்கக் கூடாது; மரம் வளர்க்கக் கூடாது; பாசனக் குழாய்களை அமைக்கக் கூடாது; மரம் வளர்க்கக் கூடாது” என ஏகப்பட்ட நிபந்தனைகளையும்; “பதிக்கப்படும் குழாய்களுக்கு ஏதேனும் சேதம் ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட நிலத்தின் விவசாயியைக் கைது செய்யவும், மூன்றாண்டுகள் வரை சிறையில் தள்ளுவதற்கும்” வகை செய்யும் அநியாயமான சட்டங்களையும் இயற்றி வைத்திருக்கிறது, கெய்ல்.

“வெறும் 20 மீட்டர் அகலத்துக்கு மட்டுமே நிலத்தை எடுத்துப் பயன்படுத்துவதால், நிலத்தின் சந்தை மதிப்பில் 10 சதவீதம் மட்டுமே இழப்பீடாக கம்பெனி வழங்கும்” என அறிவித்திருக்கிறது, கெய்ல். இந்த அற்பத்தனமான கணக்கின்படி, கிருஷ்ணகிரியைச் சேர்ந்த ராஜி என்ற விவசாயிக்குக் கிடைத்துள்ள இழப்பீடு 13 ரூபாய்!

அம்மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடந்த ஆண்டு தொடங்கியே நிலம் கையகப்படுத்துவதற்கு எதிராகப் போராடி வருகின்றனர். இப்போராட்டத்தையடுத்து நிலம் கையகப்படுத்துவதைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்த கெய்ல் நிறுவனம், “நிலத்தைக் கையகப்படுத்த போலீசு பாதுகாப்பு அளிக்க வேண்டும்” என்று கோரி கடந்த ஆண்டு வழக்குத் தொடுத்தது.

இவ்வழக்கில், “விவசாய நிலங்களின் வழியாகக் குழாய் அமைப்பதற்குப் பதிலாக தேசிய நெடுஞ்சாலைகளின் வழியே எரிவாயுவைக் கொண்டு செல்வது உள்ளிட்ட மாற்று வழிமுறைகள் குறித்து விவசாயிகள், கெய்ல நிறுவனம், தமிழக அரசு ஆகிய முத்தரப்பும் கலந்து பேச வேண்டும்; கெய்ல் நிறுவனம் நிலத்தைக் கையகப்படுத்துவதற்கு உதவியாக போலீசைப் பயன்படுத்தக் கூடாது” என உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பை எதிர்த்து கெய்ல் நிறுவனம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கிலும் சென்னை உயர்நீதிமன்றம் தனது முந்தைய தீர்ப்பையே உறுதி செய்தது.

கெய்ல் நிறுவனமோ இத்தீர்ப்பை மயிரளவுக்குக் கூட மதிக்காமல் நிலப்பறிப்பு நடவடிக்கைகளை மீண்டும் எடுத்தது. தமிழகத்தின் உரிமைகளுக்காக மைய அரசோடு தினமும் மோதுவதாகக் கூறும் அம்மா அரசு, இந்த விசயத்திலோ உயர்நீதிமன்றத்தின் உத்தரவை மீறி, கெய்ல் நிறுவனத்தின் நிலப்பறிப்புக்கு உதவியாகத் தனது போலீசு பட்டாளத்தை அனுப்பி வைத்தது. நீதிமன்றத்தின் உத்தரவை மீறி நிலம் கையகப்படுத்தப்படுவதை எதிர்த்து விவசாயிகள் பிப்ரவரி மாத இறுதியில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததையடுத்து நிலம் கையகப்படுத்துவதற்கு 3 வாரம் இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் வளர்ச்சிக்காக விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவது தவிர்க்க முடியாதது என ஆட்சியாளர்கள் நியாயப்படுத்துகிறார்கள். ஆனால், சொல்லிக் கொள்ளப்படும் இந்த வளர்ச்சி நிலத்தைப் பறி கொடுத்த விவசாயிகளுக்குத் திருப்பித் தருவதென்ன? வேலைக்காக நகரங்களை நோக்கி ஓடும் அகதி வாழ்க்கையைத் தவிர!

____________________________________________________________________________________________________
புதிய ஜனநாயகம் – மார்ச் 2013
____________________________________________________________________________________________________

  1. விவசாயிகளின் முதுகுத்தண்டை முறித்துவிட்டுத்தான் மேட்டுக்குடிகளின் நலனுக்கான வளர்ச்சித்திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. எத்தனை நாளைக்குத்தான் இதை எல்லாம் நாம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பது? ஓட்டுச்சீட்டு சாதி மத அரசியலைக் கடந்து விவசாயிகள் ஒன்றுபட்டாலொழிய இக்கொடுமைகள் தொடர்வதை தடுக்க முடியாது!

  2. புறவழி சாலைக்காக இன்னமும் நிறைய விவசாய நிலங்கள் அரசால் திரும்ப எடுதுக்கொல்லப்படுகிறது. கெயில் நிறுவனம் மட்டும் அல்ல நம்மில் எத்தனை பேர் விவசாய நிலத்தை பிளாட்டாக வாங்கியோ அல்லது வாங்க முனைப்பாகவோ இருக்கிறோம் ?.

  3. பக்கத்து மானிலமான கேரளாவில் விவசாயநிலஙளின் ஊடே வாயு குழாய் அமைக்க அந்த மானில அரசு ஆரம்பத்திலேயே அனுமதிக்கவில்லை! தும்பை விட்டு வாலை பிடிப்பது போல, தற்பொது தமிழக அரசு தலையிட்டிருக்கிறது! கூடஙகுளம் பிரச்சினையிலும் இப்போது புதிய பூதம் கிளம்பியிருக்கிறது, ரஷிய அணு உலையின் பாதுகாப்பு அமைப்புகள் தரமானது அல்ல என்று முன்னால் அணு சக்தி கமிசன் தலைவர் கூறுகிரார்! இது உண்மையான கூற்றா ? அல்லது ரஷியாவிற்கு எதிரான அயல்னாட்டு சதியா?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க