Thursday, August 11, 2022
முகப்பு போலி ஜனநாயகம் அதிகார வர்க்கம் கொலைகாரன் யார்? இந்திய அரசா, புல்லரா?

கொலைகாரன் யார்? இந்திய அரசா, புல்லரா?

-

“சட்டத்தின் மாண்பு ஆட்சி செய்யும் நாட்டில் நாம் வாழ்கிறோம். ஒருவர் குற்றவாளி என்று நிரூபிக்கப்படும் வரை அவரை நிரபராதி என்று கருத வேண்டும். மரண தண்டனைக்கு உரிய குற்றங்களில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, குற்றப் பத்திரிகை தாக்கல் செய்து, அரசுத் தரப்பு, எதிர் தரப்பு வழக்கறிஞர்கள் சாட்சியங்களையும் தடயங்களையும் சட்டப்பிரிவுகளையும் அடிப்படையாகக் கொண்டு வாதிடுவதை சீர் தூக்கி கீழமை நீதிமன்றத்ததில் தீர்ப்பு வழங்கப்படும். அதைத் தொடர்ந்து உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு, உச்ச நீதிமன்றத்தில் முறையீடு, இறுதியாக குடியரசுத் தலைவரிடம் கருணை மனு என்று பல கட்டங்களைத் தாண்டித்தான் ஒரு குற்றவாளியின் உயிரை எடுக்கும் முடிவை இந்த அரசு எடுக்கிறது.”

killer-handகோட்பாட்டளவில் இது கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், நடைமுறையில் ஒருவர் ஏழை, சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர், தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர் என்றால் அவருக்கு கிடைக்கும் நீதி ஒரு வகையினதாகவும், பணக்கார, பார்ப்பனிய இந்துத்துவ ஆதிக்க சாதி பின்னணி கொண்டவருக்கு நீதி இன்னொரு வகையினதாகவும் இருக்கிறது என்று பல முறை நிரூபிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் அப்சல் குருவை தூக்கில் இட்டு கொலை அரசு என்று தன்னை நிலை நாட்டிக் கொண்ட இந்திய அரசு இப்போது தேவேந்தர் பால் சிங் புல்லர் என்ற சீக்கியரை அலட்சியமாகவும், அரசியல் ஆதாயங்களுக்காகவும் தூக்கில் போட முடிவு செய்திருக்கிறது.

1993-ம் ஆண்டு டெல்லி இளைஞர் காங்கிரஸ் அலுவலகத்தின் அருகில் நடந்த குண்டு வெடிப்பில் தொடர்புடையவராக குற்றம் சாட்டப்பட்டு புல்லர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அப்போது ஜெர்மனியில் இருந்த புல்லரை ஜெர்மனியின் நீதித் துறைக்கு விண்ணப்பித்து இந்தியாவுக்கு கொண்டு வந்தனர். ஜெர்மனியின் மேல் முறையீட்டு நீதிமன்றம் ஒன்று புல்லரை இந்திய அரசிடம் ஒப்படைத்திருக்கக் கூடாது என்று கூறியுள்ளது. மரண தண்டனைக்கு எதிரான சட்டங்களை ஏற்படுத்தியுள்ள ஐரோப்பிய ஒன்றியம், ‘புல்லருக்கு மரண தண்டனை விதிக்கப்படக் கூடாது’ என்று வாக்குறுதி வாங்கிக் கொண்டு அனுப்பியிருக்கிறது.

இரண்டாவதாக, புல்லருக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை தடா சட்டத்தின் கீழ் அவரிடமிருந்து போலீஸ் பெற்ற வாக்குமூலத்தை மட்டுமே ஆதாரமாகக் கொண்டது. நீதிமன்றத்தில் போலீஸ் சித்திரவதையினால் வாக்குமூலம் அளித்ததாக தனது வாக்குமூலத்தை புல்லர் மறுத்திருக்கிறார். புல்லரை குண்டு வெடிப்புடன் தொடர்புபடுத்துவதற்கான ஏற்கத்தக்க வேறு எந்த சாட்சியங்களும், தடயங்களும் அரசு தரப்பினால் நீதிமன்றத்தின் முன் வைக்கப்படவில்லை. அவரது வாக்குமூலத்தில் முக்கிய குற்றவாளியாக குறிப்பிடப்பட்டிருந்த தயாசிங் லகோரியா நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்.

மூன்றாவதாக, உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்ட போது, மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வின் தீர்ப்பில் 2 நீதிபதிகள் புல்லருக்கு தூக்குத் தண்டனையை உறுதி செய்தனர். அமர்வின் தலைமை நீதிபதி எம்.பி.ஷா தனது மாற்றுத் தீர்ப்பில், ‘புல்லர் மீதான குற்றம் நிரூபிக்கப்படவில்லை, எனவே அவர் நிரபராதி’ என்பதையும் ‘அவரது வாக்குமூலம் போலீஸ் பாதுகாப்பில் சித்திரவதை மூலம் பெறப்பட்டது’ என்பதையும் ‘அவரது வாக்குமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மற்றவர்கள் மீது வழக்கு தொடர்ந்து தண்டனை வழங்கப்படவில்லை’ என்பதையும், ‘புல்லரின் ஒப்புதல் வாக்குமூலத்தை உறுதி செய்வதற்கான எந்த ஆதாரங்களும் இல்லை’ என்பதையும் அவர் குறிப்பிட்டார்.

புல்லருக்கு தூக்குத் தண்டனையை உறுதி செய்த மற்ற இரண்டு நீதிபதிகள், ‘குடியரசுத் தலைவர் புல்லரின் கருணை மனுவை பரிசீலிக்கும் போது, குற்றவியல் சட்டத்தின் 432(2)ம் பிரிவின் கீழ், மாற்றுத் தீர்ப்பை எழுதிய நீதிபதியின் கருத்தைக் கேட்டு முடிவெடுக்க வேண்டும்’ என்று பரிந்துரை செய்திருந்தனர். அதாவது தூக்குத் தண்டனையை உறுதி செய்த நீதிபதிகளும் அந்தத் தண்டனை குடியரசுத் தலைவரால் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட வேண்டும் என்று கருதியிருக்கின்றனர்.

பிரிவு 432(2)ன்படி தண்டனையை குறைப்பதற்காக சம்பந்தப்பட்ட அரசாங்க அதிகாரிக்கு மனு வரும் போது, தண்டனையை உறுதி செய்த நீதிமன்றத்தின் நீதிபதியிடம் மனுவை ஏற்றுக் கொள்ளலாமா என்று கருத்து கேட்கலாம்.

நான்காவதாக, புல்லரின் கருணை மனுவை கையாண்டதில் மத்திய அரசின் அலட்சியமும், கவனமின்மையும்.

புல்லரின் மேல் முறையீட்டு மனுவை உச்சநீதிமன்ற அமர்வு 2002-ம் ஆண்டு பெரும்பான்மை முடிவின்படி தள்ளுபடி செய்தது. புல்லர் தனது கருணை மனுவை 2003-ம் ஆண்டு ஜனவரி மாதம் 14-ம் தேதி குடியரசுத் தலைவருக்கு அனுப்பினார். நீதிபதி ஷா அந்த ஆண்டு செப்டம்பர் 24 வரை உச்ச நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றினார். உள் துறை அமைச்சகம் உச்சநீதிமன்ற தீர்ப்பின் பரிந்துரையின் படி அப்போது பணியில் இருந்த நீதிபதி ஷாவிடம் கருத்து கேட்டிருந்தால், அவர் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கச் சொல்லி பரிந்துரைத்திருப்பார். அதைச் செய்ய அரசு தவறியது.

இப்போது ஓய்வு பெற்று அகமதாபாத்தில் வசிக்கும் நீதிபதி ஷா, “மாற்றுத் தீர்ப்பு வழங்கப்பட்ட வழக்குகளில் தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்படுவதுதான் நடைமுறை. ஆனால், இந்த வழக்கில் அந்த நடைமுறை ஏன் பின்பற்றப்படவில்லை என்பது புரியவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

புல்லரின் கருணை மனு மீதான பரிந்துரையை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்த அப்போதைய உள்துறை அமைச்சர் ப சிதம்பரம், “இது பயங்கரவாதத்துடன் தொடர்புடைய வழக்கு. குற்றம் தடா சட்டத்தின் கீழ் உறுதி செய்யப்பட்டது. குற்றவாளி விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும் குறைந்த பட்சம் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட வேண்டும் என்றும் ஒரு நீதிபதி தீர்ப்பளித்திருக்கிறார். என்னுடைய கருத்துப்படி பயங்கரவாத வழக்குகளைப் பொறுத்த வரை எந்த கருணையும் காட்டப்படக் கூடாது. எனவே, மரண தண்டனையை உறுதி செய்யும்படி நான் பரிந்துரைக்கிறேன்” என்று எழுதியிருக்கிறார்.

இதே கருத்தை எதிரொலித்து கருணை மனுவை தீர்மானிப்பதில் தாமதம் ஏற்படுவதால் தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்ற வழக்கை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்ற நீதிபதிகளும் தீர்ப்பளித்துள்ளனர்.

அரிதினும் அரிதான வழக்குகளில் மட்டுமே மரண தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற வழிகாட்டலுக்கு மாறாக, நீதிபதிகளின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள், போலி தேசபக்தியின் கூட்டு மனசாட்சியை திருப்திப் படுத்தும் முயற்சிகள் என்று முற்றிலும் ஜனநாயகமற்ற, சட்ட விரோதமான முறைகளில் மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது.

இதுதான் இந்திய ஜனநாயகத்தின் லட்சணம்.

மேலும் படிக்க
Judges wanterd Bhullar sentence commuted
Akalis seek Germany’s intervention in Bhullar’s death sentence
There is case for commuting Bhullar sentence – M B Shah

  1. புல்லருக்கு மரணதண்டனையை பரிந்துரை மன்மோகன் அரசு இந்து பயங்கரவாதிகளில் கொடிய குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர இயலாமல், ஒவ்வொரு நாளும் அடங்கி போவது வெட்கக்கேடானது. மனநோய்க்கு ஆட்பட்ட அந்த மனிதரை இரத்தவெறியுடன் தண்டிக்க முயல்வது கொடூரம்.

    சமீபத்தில் தமிழ்த்தேச பொதுவுடைமைக் கட்சி சார்பாக ஒட்டப்பட்ட சுவரொட்டி ஓன்று கண்ணில் பட்டது. அதில், புல்லர் மீதான தீர்ப்பு மூவர் தூக்கு வழக்கை பாதிக்குமாம். அதனால், அரசமைப்புச் சட்டம் விதி 161-ஐ பயன்படுத்தி பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை பாதுகாக்க சட்டம் இயற்ற முயற்சிகள் எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர். ஒரு வரி கூட புல்லர் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று அந்த நிரபராதிக்காக வைக்கவில்லை.

    இந்த தமிழினவாதிகள் இந்து–இந்திய தேசியத்தை எதிர்ப்பவர்கள் அல்லர்; தமக்கு சாதகமாக இந்து–இந்திய தேசியம் இருந்தால் அதற்கு கூட்டாளியாகவே இருக்க விரும்புபவர்கள் என்று பலமுறை நிரூபித்துள்ளனர். இந்தியாவில் இருக்கும் ஒரு முற்போக்கு தேசிய இனம், சீக்கியர்கள். அவர்களில் ஒருவருக்கு வழங்கப்படும் அநீதியை எதிர்ப்பதில் நாம் முன்நிற்போம்.

  2. // …..இந்தியாவில் இருக்கும் ஒரு முற்போக்கு தேசிய இனம், சீக்கியர்கள். அவர்களில் ஒருவருக்கு வழங்கப்படும் அநீதியை எதிர்ப்பதில் நாம் முன்நிற்போம்…..//

    மக்களுக்கு தகுந்த அரசு தான் அமையும். சட்டபடியும் நியாயப்படியும் என்ன செய்யவேண்டுமோ அதை செய்ய வேண்டும். எல்லா மனிதர்க்கும் நியாயமான வாழ்வுர்மைக்கு வழி காணவேண்டும் அதை விடுத்து இப்படி இனம் , மொழின்னு பேசிக்கொண்டிருந்தால் ஒன்றும் வேலைக்ககாது.

  3. இத்தாலி ஆத்தாளுக்கு காவடி தூக்கிய நம்ம தன்மான சிங்கம் தலைவர் கலைஜர் அவர்களை எதில் போடலாம்?

  4. எல்லாம் நீங்கள் ஆடி இறக்கிவைத்த காவடிதானே பதி! இப்பொது ஆத்தாளை விட்டு அனுமாரை பிடித்துக்கொண்டாலும் மக்கள் மறந்துவிடவில்லையே!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க