Wednesday, October 9, 2024
முகப்புகட்சிகள்அ.தி.மு.கஅக்னியில் பிறந்தவர்கள் வெயிலுக்கு பயப்படுவது ஏன் ?

அக்னியில் பிறந்தவர்கள் வெயிலுக்கு பயப்படுவது ஏன் ?

-

கூடங்குளம் வழக்கு, மதுரை ரஜினி ரசிகர்களை தாக்கிய வழக்கு உட்பட பழைய வழக்குகளெல்லாம் தூசி தட்டப்பட்டு ராமதாஸ் மீது போடப்படுவது, விழுப்புரம் நீதிமன்றம் வழங்கிய பிணையை எதிர்த்து தமிழக அரசு உயர்நீதிமன்றம் சென்றது குறித்தெல்லம் பலருக்கும் பல கேள்விகள் இருக்கின்றன. பாமக கும்பல் கூடிய சீக்கிரத்தில் வெளியே வரக்கூடாது என்று ஜெயலலிதா இவ்வளவு தீவிரமாக இருப்பதற்கு காரணம் என்ன?

மாமல்லபுரம் வன்னியர் சங்க கூட்டத்தில் நடந்த நாடகமொன்றில் ஜெயா, சசிகலா வேடமிட்டவர்கள் பேசிய பேச்சுதான் ஜெயாவின் கோபத்திற்கு முக்கிய காரணம் என்று சில ஊடகங்கள் எழுதுகின்றன. அப்படி கோபப்படும்படி அந்த நாடகத்தில் ஏதுமில்லை என்பதே உண்மை. அரசியலிலும், அறிக்கையிலும் கூட ஜெயலலிதாவை நேரடியாக கண்டிக்க முடியாதவர்கள் நாடகத்தில் மட்டும் விசுவரூபமெடுப்பார்களா என்ன? எனில் வேறு என்ன காரணம்?

ஜெயலலிதாவின் ஈகோவை யாராவது சீண்டிவிட்டால் அவரது கோபத்தை யாரும் அது அவாளாகவோ இல்லை ‘ஆண்டவ’னாவாகவோ இருந்தால் கூட தடுக்க முடியாது. அதுவும் அவர் முதலமைச்சராக இருப்பதாலும், போலீஸ், நீதிமன்றம், அதிகார வர்க்கம் என்று பல்வேறு அதிகார அமைப்புகள் அவருக்கு சேவை செய்யக் காத்திருக்கும் போது அந்த கோபத்தின் அளவையும், வீச்சையும் நாம் புரிந்து கொள்ளலாம்.

2016-இல் ஆட்சியைப் பிடிப்போம், சின்னைய்யாதான் முதலமைச்சர் என்று பல்வேறு ‘அனாமதேயங்கள்’ மாமல்லபுரத்தில் முழங்கிய ஒன்று போதாதா, ஜெயாவின் ஈகோவை கிண்டி விட? சவால் விடும் அரசியல் ஆண்களை ஜெயலலிதாவுக்கு சுத்தமாக பிடிக்காது. அதுவும் போயஸ் தோட்டத்தில் ஐந்து, பத்து சீட்டுகளுக்காக தவம் கிடந்தவர்கள் வீரம் பேசினால் அவரால் பொறுத்துக் கொள்ளவே முடியாது.

மேலும் ஒரு காரணமாக இருப்பதற்கு தகுதி இல்லாத ஒரு சிறு விசயம் கூட ஜெயாவின் நடவடிக்கைக்கு அடிப்படையாக இருக்கலாம். மாமல்லபுரத்தில் ஜெயாவாக நடித்தவர் அழகாக இல்லை என்ற ஒரு விசயம் கூட அம்மாவின் சீற்றத்தை தூண்டி விட போதும். எனவே இறைந்திருக்கும் இத்தகைய காரண முத்துக்களை நாம் என்னதான் கோர்த்துப் பார்த்தாலும் அது அவரது ஈகோவே சீண்டி விட்டதன் விளைவே என்பது மட்டும் உண்மை.

ராமதாஸ் அரசியல்
ராமதாஸ் எத்தனை ராமதாஸடி!

அதனால்தான் ஜெயலலிதா தனது நடவடிக்கை ஏற்படுத்தும் விளைவுகளைக் கூட கவலைப்படாமல் உறுதியாக இருக்கிறார். ராமதாஸ் விசயத்திலும் அதுவே உண்மை. கருணாநிதியாகி இருந்தால் இந்தப் பிரச்சினை பூசி மெழுகி நீர்த்துப் போயிருக்கும். அதனால் ராமதாஸின் வெற்று சவுடால் நாடகத்தின் கிளைமேக்சாக கூட வரும். ஆனால் இங்கே அந்த வாய்ப்பு ராமதாஸுக்கு இல்லை.

ஆட்சியைப் பிடிப்போம் என்று சபதம் விட்டு சவுண்டு விட்டவர்களை தொடர்ந்து சிறையில் வைத்திருந்தால் ஒளிரும் விளக்குகளுக்கு விரைவிலேயே ஃபீஸ் போய்விடும் என்பது ஜெயாவுக்கு மட்டுமல்ல, பலருக்கும் தெரிந்த உண்மைதான்.

ஏற்கனவே வினவு கட்டுரையில் சொன்னது போல இந்த பிரச்சினையில் ராமதாஸின் மீது வன்கொடுமை, இதர கடுமையான பிரிவுகளில் வழக்குப் போடாமல் சாதாரணமான போண்டா பிரிவுகளிலேயே வழக்கு போடப்பட்டுள்ளதால் இது ஜெயாவின் நாடகம் என்பதுதான் உண்மை. அதாவது ராமதாஸை வழிக்கு கொண்டு வரவேண்டும் என்பதைத் தாண்டி தாழ்த்தப்பட்ட மக்கள் மீது வன்மம் கக்கிய அவரை தண்டிக்க வேண்டுமென்பதல்ல. அதனால் இது ஒரு வகை அரசியலற்ற பழிவாங்கல்தான்.

நடவடிக்கையில் அரசியல் இல்லை என்பதால் விளைவுகளிலும் இல்லை என்பதல்ல. தற்போது வடதமிழக தலித் வாக்குகள் அனைத்தும் அதிமுகவிற்குத்தான் என்பது ராமதாஸ் கைதினால் விளைந்த உடனடிப் பயன் எனலாம். எனவே விடுதலைச் சிறுத்தைகள் கூட இந்த விளைவை புரிந்து கொண்டால்தான் அடுத்த தேர்தலில் ஏதோ கொஞ்சம் பிழைப்பைப் பார்க்கலாம். இல்லையெனில் அவர்களுக்கு எதுவும் தேறாது.

பொதுவான நடுத்தர வர்க்கம், மற்ற சாதி மக்களைப் பொறுத்த வரை ராமதாஸ் கைதை வரவேற்கவே செய்கிறார்கள். பேருந்துகளை தொடர்ந்து தாக்கிய பாமகவின் அடாவடியை அவர்கள் விரும்பவில்லை. வன்னியர்களைப் பொறுத்தவரையிலும் கூட ராமதாஸ் கைது எந்த வகையான அணிதிரட்சியையும் ஏற்படுத்தவில்லை, முடியாது. பாமகவிற்கு இதற்கு முன்பும் சரி, இனிமேலும் சரி வன்னியர்களின் மொத்த ஒட்டு மட்டுமல்ல, பத்து சதவீத வாக்குகள் கூட கிடைப்பது கடினம்.

பாமகவின் பிழைப்பு வாத அரசியல், கூட்டணி மாறும் பச்சோந்தித்தனம், ராமதாஸின் குடும்ப அரசியல், என்று வன்னியர்கள் கடந்த காலத்திலேயே பாமகவிலிருந்து பிரித்து விட்டார்கள். இருப்பவர்களும் கட்டைப்பஞ்சாயத்து, ரியல் எஸ்டெட், சுயநிதிக் கல்லூரி, வட்டித் தொழில் என்று கட்சி அடையாளத்தை வைத்து தொழில் செய்பவர்கள்தான். இவர்களது காசில்தான் மாமல்லபுரத்திற்கு கூட்டம் கூட்டிவரப்பட்டது. ஆகவே ஜெயாவின் நடவடிக்கையால் வன்னியர்கள் அணிதிரண்டு ராமதாஸின் பின்னால் செல்வார்கள் என்பது கனவிலும் சாத்தியமில்லை. அதனால் ஜெயாவுக்கும், அதிமுகவிற்கும் வன்னியர் வாக்குகள் கிடைக்காது என்று யாரும் கூறமுடியாது. இது ஜெயாவுக்கும் தெரியுமென்பதால்தான் அவர் ராமதாஸை சிறையில் முடக்க நினைக்கிறார்.

எனவேதான் இந்த கைது நடவடிக்கைகளால் மொத்த பாமக கும்பலும் மிரண்டு போய் இருக்கிறது. 90-களில் ராமதாஸின் சிறை வாசத்தில் இருந்து விடுதலை கோரி மனைவி சரஸ்வதி மனமுருகி, முழு அடிமைத்தனத்தோடு ஜெயாவுக்கு எழுதிய கடிதத்தை அம்மா அவ்வளவு சீக்கிரத்தில் மறந்திருக்க மாட்டார். ஆக பாமக இன்று என்றில்லை அன்றிலிருந்தே முழு கோழைத்தனத்தில் குடியிருந்த ஒரு பிழைப்புவாத கும்பல்தான். ராமதாஸ் மட்டுமல்ல, ஆதிக்க சாதிவெறியால் ஆதாயம் அடைய நினைக்கும் பல்வேறு சாதி சங்கங்களின் கதியும் இதுதான். அந்த வகையில் தமிழகத்தின் பெரும்பான்மை உழைக்கும் மக்கள் இத்தகைய சாதிவெறியர்களுக்கு பெரிய அங்கீகாரம் கொடுத்ததில்லை.

மேட்டுக்குடி அன்புமணி
சிறைக்கு செல்லும் போதும் உதவியாளர் தேவைப்படும் ‘சின்னய்ய்யா’ !

மாமல்லபுரம் கூட்டத்தில் பேசிய காடுவெட்டி குரு, “நாங்கள் அக்னியில் பிறந்தவர்கள், யாராவது மறுக்க முடியுமா?” என்று சவால் விட்டு பேசினார். இறுதியில் இதை யார் மறுத்தார்கள்? அவர்களே மறுத்துக் கொண்டார்கள். திருச்சி எனும் கந்தக பூமியில் போட்டு உச்சி வெயிலில் வாட்டி எடுக்கிறார்கள் என்று பிலாக்கணம் வைத்து அழுவது யார்? நாமா இல்லை அவர்களா?

ராமதாஸ் கைது குறித்த பத்திரிகைச் செய்திகளைப் படித்தாலே பாமகவின் யோக்கியதையைப் புரிந்து கொள்ளலாம். ராமதாஸ் கைது குறித்து ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்த சின்னைய்யா ரொம்ப பணிவாகத்தான் அதாவது அம்மாவை சீண்டாமல் வி.சி கட்சியை திட்டித்தான் பேசினார். ஆனால் அம்மா மாமல்லபுரத்தில் சின்னதின் வீர முழக்கத்தை பார்த்திருப்பார் போல, தூக்கு சின்னைய்யாவை என்றிருக்கிறார். இதுவரை சிறை என்றால் என்ன என்று கூட தெரியாத ஒரு மேட்டுக்குடி நபர் முதன்முறையாக புழலுக்கு சென்றிருக்கிறார்.

அதுவும் இரண்டு சூட்கேசில் துணிமணிகள், இரண்டு பைகளில் பழங்கள், பிஸ்கெட்டு மற்றும் ஒரு உதவியாளருடன் கைதாகியிருக்கிறார் சின்னைய்யா. உலகிலேயே உதவியாளருடன் கைது செய்யப்பட்ட முதல் தமிழக அரசியல்வாதி அன்புமணியாகத்தான் இருக்கும். அன்புமணியின் காங்கிரசு மாமனார் கிருஷ்ணசாமியை சிறையில் அனுமதிக்கவில்லை என்று மக்கள் டி.வி சோக கீதம் வாசித்தது. இப்படி ராஜ உபசாரத்துடன்தான் சிறைவாசம் செல்ல முடியும் எனும் போது இவர்களை எந்த முட்டாள் கொள்கை பூர்வமாக ஆதரிப்பான்?

விழுப்புரம் மண்டபத்தில் ராமதாஸ் இருக்கும் போது அவருக்கு தைலாபுரம் தோட்டத்தில் விளைந்த ஆர்கானிக் காய்கறியுடன் சாப்பாடு காரில் வந்ததாம். அவரும், தன்ராஜும் மண்டபத்தின் மணமகன் அறைக்கு சென்று பூட்டிக் கொண்டு சாப்பிட்டிருக்கின்றனர். ஏனைய தொண்டர்கள் வெளியே போலீஸ் கொடுத்த சாம்பார் சாதத்தோடு ஏப்பம் விட்டனர். தொண்டன் சாப்பிடும் உணவைக் கூட சாப்பிட முடியாத இவரெல்லாம் எப்படி மக்கள் தலைவராக இருக்க முடியும்? அதுவும் வீட்டுச் சாப்பாட்டை திருட்டுத்தனமாக சாப்பிடும் அளவுக்குத்தான் இங்கே வெளிப்படையான கொள்கை இருக்கிறது.

தலைவர் எவ்வழியோ அவ்வழிதான் தொண்டர்கள் என்பதால் விழுப்புரம் மண்டபத்தில் மதிய நேரவாக்கில் அனைவரும் ரிமாண்ட் செய்யப்படுவார்கள் என்ற செய்தி பரவியிருக்கிறது. ராமாதஸின் முகம் இருண்டுவிட்டது. தலைவர் முகம் இருண்டதின் காரணத்தை தொண்டர்கள் கேட்டறிய கிட்டத்தட்ட 400 தொண்டர்கள் சுவரேறிக் குதித்து ஓடிவிட்டார்கள். மீதி 300-த்தி சொச்சம்பேர்தான் தலைவருடன் சிறைக்குச் சென்றார்கள். ஆக சிறைவாசத்தை அனுபவிப்பதற்கு தலைவனும் தயாரில்லை, தொண்டனும் தயாரில்லை. உண்மையில் பாமகவில் தொண்டர்கள் யாருமில்லை என்பது வேறு விசயம்.

ஒரு அரசியல் போராட்டத்தில் கைது செய்யப்படுவதும், சிறை வைக்கப்படுவதும் சாதாரண நிகழ்வு என்றாலும் அதைக்கூட சந்திக்க வக்கில்லாத கும்பலாகத்தான் ராமதாஸ் கட்சி இருக்கிறது. அடுத்து தமிழகத்தின் கந்தக பூமியான திருச்சியில் கடும் வெயிலில் ராமதாஸை அடைத்திருக்கிறார்கள் என்று புலம்புகிறார்கள். இது உண்மையில் திருச்சி மக்களையும், திருச்சி சிறையில் இருக்கும் மற்ற சிறையாளர்களையும் இழிவுபடுத்துவதாகும். மேலும் சிறையில் மின்விசிறியில்லை, மின்சாரமில்லை என்பதெல்லாம் ராமதாஸை துன்புறுத்தும் விசயம் என்று பாமகவின் இணைய அடிமைகள் பட்டியலிடுகிறார்கள்.

சொகுசு ராமதாஸ்
அன்று திருகுவலிக்காக கடிதம் எழுதிய சரஸ்வதி அம்மாள் இன்று என்ன எழுதுவார்?

ஆக இதிலிருந்து தெரிவது என்ன? தைலாபுரம் தோட்ட மாளிகையில் ஜெனரேட்டர், ஏசியோடு வாழ்ந்தவருக்கு திருச்சி சிறை சென்ற பிறகுதான் தமிழ்நாட்டில் மின்வெட்டு அமலில் இருப்பதும், அதனால் மக்கள் படும் துன்பமும் கொஞ்சமாக தெரிய வந்திருக்கிறது. அதைக்கூட தனது கஷ்டங்கள் வழியாகத்தான் புரிந்து கொள்கிறார் என்றால் இவர் எவ்வ்வளவு பெரிய தியாகி?

விழுப்புரத்திலிருந்து மற்ற ‘தொண்டர்களெல்லாம்’ குலுக்கல் அதிகமுள்ள டப்பா போலிஸ் வண்டிகளில் பயணிக்கும் போது ராமதாஸுக்கு மட்டும் முதுகுவலி காரணமாக நீதிபதி அம்மா அவர்கள் சொந்தக் காரில் போக அனுமதித்தார்கள். தைலாபுரத்திலிருந்து வந்த அந்த சொந்த கார் எது தெரியுமா? பென்ஸ் கார். பென்ஸ் காரின் குறைந்த பட்ச விலை என்ன என்பது ஏழை வன்னியர்களுக்கு மட்டுமல்ல, நடுத்தர வர்க்க வன்னியர்களுக்கு கூட தெரியாது.

ஆனால் பல இலட்சம் மதிப்புள்ள பென்ஸ் காரிலிருந்து இன்ன பிற சொத்து பத்துக்களெல்லாம் ராமதாஸ் ஐயா எப்படி ‘சம்பாதித்தார்’ என்பது நமக்கு தெரிகிறதோ இல்லையோ வன்னிய மக்கள் அனைவருக்கும் தெரியும்.

சிறையில் வெஸ்டர்ன் டாய்லட் இல்லை என்பதால் இந்தியன் டாய்லட்டில் போகமாட்டேன் என்று தமிழர் ராமதாஸ் மறுத்த உடனேயே சிறை அதிகாரிகள் அதிகாலையிலேயே பஜாருக்குச் சென்று பூட்டிய கடையை திறக்க வைத்து மொபைல் டாய்லெட்டெல்லாம் வாங்கி வந்திருக்கிறார்கள். அவருக்கு பிடிக்கும் விதமாக சப்பாத்தி, இட்லி என்று நன்றாகவே கவனிக்கிறார்கள். திருக்கழுங்குன்றம் நீதிமன்றத்திற்கு ராமதாஸ் செல்ல முடியாது என்று அறிவித்த உடனேயே நீதிபதியே அங்கிருந்து திருச்சி சென்று வழக்கை பதிவு செய்து ரிமாண்ட் செய்திருக்கிறார். இப்படி ஒரு கைதி இருக்கும் சிறைக்கு எந்த வெளியூரிலிருந்து நீதிபதி வந்து வேலை செய்வார்? தற்போது ராமதாஸுக்கு முதல் வகுப்பு வசதிகள் வழங்கப்பட்டிருக்கிறது.

ஆக இவையெல்லாம் கூறுவது என்ன? ஒரு பத்து நாள் சிறையில் அடைத்தாலே போதும், பாமகவின் அலட்டல் முடிவுக்கு வரும். இதனால்தான் அம்மாவின் கைது நடவடிக்கைகளை எதிர்கொள்ள முடியாமல் பாமக அழுது புலம்புகிறது. சிறைக்குள்ளே மட்டுமல்ல சிறைக்கு வெளியேயும் அவர்கள் போராட பயப்படுகிறார்கள்.

பேருந்துகளை அடிப்பது என்பது ஓரிருவர் செய்யும் இரவுப்பணி என்பதால் ஆரம்பத்தில் அதிகம் செய்தனர். தற்போது அவர்களையும் தேடிப்பிடித்து போலிஸ் கைது செய்து சிறையில் அடைப்பதால் அந்த ஒளிந்து செய்யும் வீரம் குறைந்திருக்கிறது. மட்டுமல்ல ஆரம்பம் முதலே இந்த வன்முறைகளெல்லாம் நாங்கள் செய்யவில்லை என்று பாமகவின் தலை முதல் வால் வரை மக்கள் தொலைக்காட்சியில் அழாத குறையாக சத்தியம் செய்கிறார்கள். தற்போது விடுதலைச் சிறுத்தைகள்தான் பேருந்துகளை அடித்து எரித்தார்கள் என்று கரடியாக கத்தி வருகிறார்கள்.

இதைத் தவிர்த்த அறப்போராட்டங்களின் கதி என்ன? கைது என்பதால் யாரும் வர மறுக்கிறார்கள். பல மாவட்டங்களில் ஆஃப்ட்டரால் உண்ணாவிரதத்திற்கு கூட ஆளில்லை. உண்ணாவிரதம் நடக்கும் அன்று காலையில் போலீஸ்தான் பெரும் எண்ணிக்கையில் காவல் காக்கிறதே அன்றி பல இடங்களில் ஒரு காக்காய் கூட வரவில்லை. சில இடங்களில் மாவட்டச் செயலாளர் மட்டும் உண்ணாவிரதம் இருந்து கைதாகியிருக்கிறார். இறுதியில் வீடுகளில் கருப்புக் கொடியாவது ஏற்றுங்கள் என்றார்கள். அப்படிக் கருப்புக் கொடி ஏற்றியவர்கள், பிளக்ஸ் பேனர் வைத்தவர்கள் கூட கைது செய்யப்படும் அபாயம் இருப்பதால் தற்போது அதற்கும் யாரும் தயாரில்லை. பிளக்ஸ் பேனர் வைத்து வன்னிய வீரம் முழங்கியவர்களெல்லாம் அதை இரவோடு இரவாக கழட்டி அடையாளம் தெரியாமல் எரித்திருக்கிறார்கள்.

இப்படியாக பாமக எனும் கோமாளிக் கூட்டத்தின் பாசிசக் கனவு காமடி அவலத்தில் முடிந்திருக்கிறது.

இந்நிலையில் நாம் ஜெயா அரசின் கைது நடவடிக்கைகள் ஒரு பழிவாங்கல் நாடகம் என்பதை அம்பலப்படுத்துவதோடு பிசிஆர் சட்டப்படி பாமக, வன்னியர் சங்கம், இன்ன பிற ஆதிக்க சாதி வெறி சங்க தலைவர்களை கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்கும் படி போராட வேண்டும். பொதுவான அரசியல் கட்சிகள், தமிழினவாத இயக்கங்கள் எல்லாம் ராமதாஸை விடுதலை செய்யும்படி கோருகின்றனவே அன்றி ஆதிக்க சாதிவெறிக்காக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரவில்லை. இது ஒரு வகையில் தலித் மக்களுக்கு எதிராக ஆதிக்க சாதிவெறியிடம் மண்டியிடும் போக்கே அன்றி வேறல்ல. ஆனால் ஆதிக்க சாதிவெறி என்பது எல்லா வகை சாதி மக்களுக்கும் எதிரானது என்பதே உண்மை.

உழைக்கும் வன்னிய மக்கள் குறிப்பாக இளைஞர்கள் பாமக மற்றும் வன்னியர் சாதி சங்க கும்பல்களை தமது பகுதிகளிலிருந்து வெளியேற்ற வேண்டும். சாதிவெறியை தூண்டி விட்டு இவர்கள் செய்யும் பிழைப்புவாத அரசியல் தலித் மக்களுக்கு மட்டுமல்ல, வன்னிய மக்களுக்கும் சேர்த்தே தீங்கிழைக்கிறது. ஆதலால் பிறப்பினால் வன்னியராக உள்ள நண்பர்கள் பொதுவெளியில் ராமதாஸைக் கண்டிப்பதற்கு முன் வரவேண்டும்.

பல்வேறு சமூக, அரசியல், பொருளாதார பிரச்சினைகளுக்கு போராட வேண்டிய நேரத்தில் நமது ஆற்றலெல்லாம் இத்தகைய சாதிவெறியர்களை அம்பலப்படுத்துவதற்கு சென்று விடுகிறது. ஆகவே சாதி அரசியல் நம்மை மேலும் புதைகுழிக்குள் கொண்டு விடும் என்ற உண்மையை புரிந்து கொள்வதோடு அதை நிறுத்துவதற்கும் நாம் பாடுபட முன்வரவேண்டும்.

  1. //மாமல்லபுரத்தில் ஜெயாவாக நடித்தவர் அழகாக இல்லை என்ற ஒரு விசயம் கூட அம்மாவின் சீற்றத்தை தூண்டி விட போதும். //

    இது தேவையா தோழர்

    • இது தேவையா என்றால்… என்ன சொல்ல வருகிறீர்கள் மகிழ்நன் புரியவில்லை.

    • மகிழ்நன், ஜெயாவின் பேரகம் குறித்த மதிப்பீட்டை நீங்கள் குறைத்து மதிப்பிடுகிறீர்கள் என்று நினைக்கிறோம்.

  2. ஒருவர் அழகாக இல்லை என்று நாமே முடிவு கட்டுவது அந்த சம்பந்தப்பட்ட நபருக்கு நாம் செய்யும் அவமதிப்புதானே? இது நம் குணக்கேடு ஆகாதா?

    • இது நாம் முடிவு செய்யவில்லையே ரிஷி ? ஜெயலலிதாவின் ஈகோவை இப்படிப்பட்ட ஒரு அற்ப விசயமும் கிளற முடியும் என்றுதானே கட்டுரை குறிப்பிடுகிறது! ஜெயலலிதா குறித்த ஒரு ஆவணப்படமோ இல்லை திரைப்படமோ தயாராகிறது என்றால் அதில் ஜெயாவின் பாத்திரத்தை நடிக்கும் நடிகையை உண்மையான ஜெயாவே தெரிவு செய்தால் அதில் ‘அழகு’ முக்கிய பங்கு வகிக்கும் இல்லையா?

      • அந்த சொற்றொடர் அப்படியான அர்த்தத்தைத்தான் தருகிறது… மற்றபடி நல்ல கட்டுரை.

      • புரிந்தது வினவு. நன்றி. சற்று வேகமாய் வாசிக்கும்போது சரியான பொருளை உள்வாங்குவதில் பிறழ்வு ஏற்பட்டது எனக் கருதுகிறேன்.

        • போதுமடா சாமி உங்க நடிப்பு … ரீல் அந்துபோச்சு நிறுத்துங்க …. நீ அடிக்கற மாதிரி அடி … நான் அழற மாதரி அழறேன் …. அப்பிடின்னு பேசி வச்சி பின்னூட்டம் போடுவிங்கலோ …

  3. ‘புதிய கலாச்சாரத்தில்’ முன்பு வெளியான ‘ஜெயலலிதேந்திர சரஸ்வதி’ கட்டுரையில் காணப்படும் ஜெயலலிதா பற்றிய பாத்திர ஆய்வின் சாயலில் இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது. ஜெ.வின் கடந்த ஆட்சியில் சங்கராச்சாரிக்கு ஏற்பட்ட நிலைமை இந்த ஆட்சியில் ராமதாஸுக்கு ஏற்பட்டுள்ளது.

    ஆனால், பாவம் ராமதாஸ். சங்கரனுக்கு பார்ப்பன பரிவாரம் களத்தில் குதித்தது; ஆதிக்கசாதியினர் எங்கோ ஓட்டம் பிடித்துள்ளனர்.

    • ஆர்கானிக் காய்கறியுடன் சாப்பிடுவதற்கு கொடுஞ்சிறையில் இன்று 11 நாள் இன்று 12 நாள் என போஸ்டர் போடும் பாமக கட்சி அல்லக்கைகள்,

      சாதி ஆதிக்க வெறியர்கள் நீதிக்காகவும் சாதிவெறிக்கு எதிராகம் போராடுவதாக உதார் விடும் பொறுக்கி அரசியல் வியாதிகள்…

      இவர்களுக்கான கொள்கைவீர பதிவர் அருளுக்கு என்ன அரசியல் இருக்க முடியும். அதனை தாண்டி இந்த பதிவை படித்து பதில் அளிக்க வேண்டும் என நேர்மையாக முயற்சித்தால் அப்போது பாமக விலிருந்து அருள் விலக நேரிடும். அதாவது மனிதனாக மாறுவதற்கு முதல் படி எடுத்து வைத்து விடுவார் என்று சொல்கிறேன்.

      • மருத்துவர் கைது செய்ததற்கு எதிர்ப்பு பசுமை தாயகம் சார்பாக மரங்களை வெட்டிகொண்டிருக்கிறார்., அவரு எப்படி இங்கே எல்லாம் வந்து “தலித் ஜாதிவெறி, இடஒதுக்கீடு (தலித்திற்கு மட்டும்) குறித்து கவலை தெரிவப்பதற்கு, நாடக காதல் (தலித் மட்டும்), வன்கொடுமை சட்டத்திற்கான எதிர்ப்பு, வினவு தளத்தின் மேல் கடும் எதிர்ப்பு” போன்ற (ஆதிக்க ஜாதி மனப்பான்மை உள்ள மற்றும் ஓரு விஷம் , இன்னொரு விஷம் யார் என்று உங்களுக்கே தெரியும்) சமூக அக்கறை உள்ள (என்று நினைத்து) பதிவுகளை செய்ய முடியும்.

  4. இதை படித்தாவது வன்னிய இன இளைஞர்கள் தங்களின் உண்மையான எதிரியை அடையாளம் கண்டு கொள்ளட்டும்.

  5. வைகோவை ஒன்ற்றை ஆண்டுகாலம் சிறை வைத்திருந்தபோது அவர் கட்சிக் கூடாரம் காலியானது. அதுமாதிரி ராமதாசை நீண்ட நாள்கள் சிறை வைத்தால் பா மா க என்ற கட்சியே காணாமல் போய்விடும்!

  6. கடைசி வரியில் #அதை நிறுத்துவதற்கும் நாம் பாடுபட முன்வரவேண்டும்.# என்று வருகிறது.
    அதை என்பதற்கு பிறகு தடுத்து என்ற வார்த்தை விடுபட்டுள்ளதா?

  7. பாமாக ஒரு காமெடி பீஸ் கூட்டம் என்று ஜெயலலிதாவுக்கு தெரியும் இருந்தாலும் நாளைக்கு கூட்டணி வைக்கவேண்டிய நிலை ஏற்பட்டால் இந்த கூட்டத்தை வைத்து இரண்டு சீட்டு அதிகமாக கேட்கலாம் அதற்காக இப்பவே ஒரு தட்டி தட்டி வைக்க நினைத்திற்கலாம் மற்றப்படி இது ஜெயலலிதாவின் ஈகோ தான். அவர் விட்ட அறிக்கையில் ”ராமதாஸ், ‘11.1/2 மணிக்கு பேசுரேன் முடிஞ்ச கேஸ் போட்டுக்கோ…. ‘ என்ற அவரின் கோரிக்கையை ஏற்று அவர் மீது இந்த வழக்கு போடப்படுகிறது” என்று கூறினார் இது அவரின் ஈகோவிற்கு உதாரணம். இதைக் கேட்டு ராமதாஸ் இன்னேரம் தூக்கில் தொங்கியிருக்கவேண்டும் பாவம் ஆண்டபரம்பரை வீரம் இப்படி ………. பரம்பரை ஆகிடுச்சு. 😀

    • நீங்கள் இந்த அளவிற்கு கூவரீங்களே …… பாமக மதுவிற்கு எதிராக போராடிய அளவிற்கு … நீங்கள் என்னத்த கிழிச்சிட்டீங்க …. இதற்கும் மதுவால் சீரழிவது நீங்கள் அதிகம் விரும்பும் உழைக்கும் வர்க்கம்தான் ….. அதைபற்றி ஒரு கட்டுரை எழுதலாமே ……

      • மதுவைப் பற்றியும் கட்டுரைகள் எழுதப்பட்டிருக்கின்றன. தேடி வாசிக்கலாம். மது என்பது ஒருவருடைய விருப்பத் தெரிவாக இருக்கலாம் என நானும் கருத்திட்டிருக்கிறேன். சிறுவன், வளருங்கள்!

        • தம்பி முதல்ல நீங்க வளருங்க ….. சிறுவன் ன்னு பேரு வச்சிருந்தா … சின்ன பையன்னு அர்த்தமா … அப்ப நீங்க கூடத்தான் ரிஷின்னு பேரு வச்சிருக்கீங்க அப்போ நீக்க சாமியாரா இல்ல போலி சாமியாரா …
          இந்த கருத்தை நீக்காமல் வெளியிடவும்

          • சரிங்க அண்ணா.. புதிதாய் வந்திருக்கற வாசகருக்கு வழி காட்டுவோமேன்னு ஒரு சிறு அளவு உதவி செய்தேன். அடடா.. இவ்ளோ பெரிய சத்திய சோதனையா.. 🙂

      • //பாமக மதுவிற்கு எதிராக போராடிய அளவிற்கு //
        பாமக குடிகாரக் குரங்குகளின் கூடாரம். அதை மாமல்லபுரம் நிரூபிக்கவில்லையா?

        பசுமைத்தாயகம் சுற்றுச் சூழல்னு சீன் போட்டுட்டு அப்புறம் ஊரிலிருக்கிற மரத்தையெல்லாம் வெட்டித் தள்ளவில்லையா, டையர் கொழுத்தலையா?

        • சொல்வதையெல்லாம் செய்துவிட்டால் அவனுக்கு பெயர் அரசியல்வாதி இல்லையே. பா.ம.க வின் எழுதப்படாத கோட்பாடுகளில் முக்கியமானவை – ரோட்டில் இருக்கும் மரங்களை வெட்டுவதும், பஸ்களை எரிப்பதும் தானே!!

          • நாடக காதல் என்று பினாத்துவது, ஆண்ட (!) பரம்பரை (பல்லவர் இனமா, சோழ இனமா என்று தெரிய வில்லை தெரிந்த ஆண்ட பரம்பரை யாராவது இருந்தால் விளக்குமாறு தயவு செய்து கேட்டு கொள்கிறேன் ப்ளீஸ் ப்ளீஸ்), நாலாம் ஜாதி என உளறுவது, அவன் ஊர்ல தண்ணி வரவில்லை என்றாலும் இதற்கு கரணம் தலித் என்று பரப்புவது, குடிசையை கொளுத்துவது போன்ற வீர (!) தீரமான செயல் அனைத்தையும் விட்டு விட்டீர்கள்.
            இதற்கு எனது கடுமையான கண்டனத்தை பதிவு செய்கிறேன்

  8. ராமதாசர் வன்னிய சங்க தலைவராகவே பொது வாழ்க்கைக்கு வந்தவர்! அவ்ரை பாட்டாளி மக்களுக்கு எல்லாம் தலைவராக, கருணானிதிக்கு மாற்று சக்தியாக அக்ரகார வர்க்கமே வளர்த்தது! பெட்டி அரசியலில் வைகொவைவிட அதிகம் சம்பாதிததும்,மகனுக்கு டெல்லி தர்பார் உத்தியொகம் கிடைத்ததும் அண்ணன் கொன்சம் தள்ளாட ஆரம்பித்துவிட்டார்! மத்திய மருத்துவ துறை சார்ந்த ஊழல் வழக்குகளிருந்து தப்ப மீண்டும் அக்ரகாரத்தைநாடினார்! மூன்றாம்பிரை கமல் போல, இந்துத்வா சிவசெனா போல குட்டிகரணம் போட்டார்! கொன்சம் ஒவெராகிவிட்டது! இருந்தாலும் அடுத்த தேர்தலில் , அடித்த கை அணைக்காதா?

    • கேளுங்க மக்களே, மருத்துவர் ஓரு பொதுநலவாதி, பொதுநலவாதி, பொதுநலவாதி , பொதுநலவாதி , பொதுநலவாதி
      பேருந்தை கொளுத்த சொன்ன பொதுநலவாதி
      சேரிகளை கொளுத்த சொன்ன பொதுநலவாதி
      தரம் தாழ்த்தி பேசும் பொதுநலவாதி
      மரம் வெட்ட சொன்ன பொதுநலவாதி

  9. ஏளனம் வேண்டாம் நாளை நீங்களும் அந்த லிஸ்டில் சேரலாம் … ஏனென்றால் நீங்களும் அரசை மறும் ஜெயலலிதாவை குறை கூறும் பழக்கம் உடையவர்கள்

    • ஜெயலலிதாவால் அன்று முதல் இன்று வரை அதிகம் அடக்குமுறைக்கு ஆட்பட்டதும், படுவதும் நாங்கள்தான். மேலும் ராமதாஸை விமரிசிக்கும்போது ஜெயலலிதாவையும் சேர்ந்துதான் விமரிசிக்கிறோம். எதிரிக்கு எதிரிக்கு நண்பன் என்ற ‘தத்துவம்’எங்களுடையதல்ல. நீங்கள் சொல்வது போல எங்கள் மீது அடக்குமுறை என்னதான் வந்தாலும் ராமதாஸை விமரிசப்பதில் இருந்து பின்வாங்க மாட்டோம். அதே போல அடக்குமறைக்கு பணியாமல் எதிர்த்து போராடுவோம். பாமக போல ஓடி ஒளியமாட்டோம்.

      • வினவு பாசு …… ஓடி ஒளிந்திருந்தால் எப்படி ஆயிரக்கணக்கான பாமகா -வினர் கைது செய்யப்பட்டிருக்க முடியும் …. கோபம் வந்தால் நிதானம் இழப்பார்கள் என்பது இதுதானோ …..

  10. ராமதாசை தூக்கி உள்ளே வைத்த ஜெ-வுக்கு கட்டுரைகள், மறுமொழிகள் என அர்ச்சனை. வெளியே உடுன்னு சொன்ன கலைஞர் பேச்சுக்கு வஞ்சப் புகழ்ச்சி, உயர்வு நவிற்சி, இல்பொருள் உவமை அப்படின்னு சப்பைக்கட்டு! நடத்துங்க, நடத்துங்க!

  11. ஆச்சரியிக்கத்தக்க கண்ணோட்டங்கள் கிடைக்கும்போது அனுபவிக்கனும்.. ஆராயக்கூடாது வெங்கடேசன்.

  12. இது உண்மையில் திருச்சி மக்களையும் xxxxx இழிவுபடுத்துவதாகும்.

    உண்மை; திருச்சி தன் வேலையை காட்டும் நேரம் இது

  13. __________vinavu what is problem for u if he goes in benz car or if he eats home food..? he is a doctor he deserve for that.. he is not like other politicians explicitly depend on politics for his livelihood. even he can earn more money by his profession but still he suffers for us..we know about anbumani very well.. your picture wont run in vanniyars theatre..

    • u mean to say that “as on date the money earned by him is from his profession i.e., Doctor (please don’t misunderstand the current profession cutting tress and burning dalith houses)

  14. ‘காசு கொடுத்து கல் எறிய சொல்லும் வீரர்கள்’

    எனது நண்பர் வேலூர் அருகில் பஸ்ஸில் வந்து கொண்டிருக்கும் போது அவரது பேருந்து முன்பாக சென்ற சில பேருந்துகள் மீது சிலர் கல்லெறிந்து உள்ளனர். அப்போது கல்லெறியும் ஒரு நபர்.. நண்பரை நீங்கள் குழந்தைகளுடன் இருக்குகிறீர்கள். இறங்கி போய் விடுங்கள், எங்களுக்கு காசு கொடுத்து கல்லெறிய சொல்லி உள்ளனர். அதனால் தான் எறிகிறோம் என கூறிவிட்டு போய் உள்ளார்.

    இப்படி ‘காசு கொடுத்து கல் எறிய சொல்லும் இந்த வீரர்கள்’ சொல்கின்ரனர் நாங்கள் ஒரு கோடி வன்னிய ஆதரவு கொண்ட சாதி கட்சி என….

    • இதுக்கு கதை திரைகதை வசனம் எல்லாம் நீங்கள்தானா ….. அல்லது உங்கள் நண்பரா …… கல்லால அடிகறவன் … இவங்க நண்பரை பார்த்து நான் காசு வாங்கிகிட்டு கல்லால அடிக்கிறேன் அப்படின்னு சொன்னானாம் …… அந்த அளவிற்கு நல்லவனா இருக்கறவன் கண்டிப்பா பொது சொத்துக்கு சேதம் விளைவிக்க மாட்டான் …. இது சுத்த கட்டுக்கதை

  15. 1. இந்த அக்னி குஞ்சு காடு வெட்டி குரு அவர்களது மூதாதையர்கள் சிவன் மற்றும் பார்வதி உடன் விவாதித்து பேருந்து (மகிழுந்து) மேல் கல் எரிந்து உள்ளார்கள் என சந்தேகிக்க படுகிறது.
    2. சின்ன ஐயா திரு.அன்புமணி, தனது நண்பர்களான திரு. கிளிண்டன், திருமதி. கிளிண்டன், திரு. பாண் கீ மூன், மற்றும் அமெரிக்க ஜனாதிபதி திரு.ஒபாமா அவர்களிடம் கலந்தாலோசித்து பேருந்து மீது கல் எரிய பணம் குடுத்து ஏவி விட்டார் என சந்தேகிக்க படுகிறது.
    3. பங்களாதேஷ் இல் நடந்த விபத்திற்கு திரு. திருமாவளவன் காரணம் என்று பரபரப்பு செய்து வெளியிட்டு உள்ளது மக்கள் தொலைகாட்சி.

    • ம்ம் என்ன செய்வது …. ராஜபக்ஸெவை கொழும்பில் வைத்து வாங்கு , வாங்கு என்று வாங்கிய குருமா சாரி திருமா அளவிற்கு பாமகா தலைவர்களுக்கு துணிச்சல் இல்லையே …..நீ யார் , நீ ஏண் இப்படி கொந்தளிக்கிர அப்படின்னு எல்லொருக்கும் தெரியும் பாஸ் ……

  16. அக்கினியில் பொறந்த இவனுங்க கந்தக சிறையில் தாங்க முடியிலன்னா இவங் க புகையில் பிறந்தாங்க பொல. சொந்த சாதி மக்கள நிம்மதியா வாழவிடலயே ,இ வங்க சொல்றங்க வன்னியன் வாழவேண்டும் என்றாள் வன்னியன் ஆளவேண்டும்.என்று. இயற்க்கையும் மக்களையும் அழித்து அதில் ஆட்சி பிடிக்க துடிக்கும் இந்த ப.ம.க பச்சோந்திகல மக்கள் வழும் பகுதியில் சேர்க்கவேக் கூடாது.

    • ம்ம் என்ன செய்வது …. ராஜபக்ஸெவை கொழும்பில் வைத்து வாங்கு , வாங்கு என்று வாங்கிய குருமா சாரி திருமா அளவிற்கு பாமகா தலைவர்களுக்கு துணிச்சல் இல்லையே

  17. அட பாவிகலா இப்பொவெ மலை இல்ல இன்னும் மரத்த வெட்டிடா என்ன ஆகும்னு தெரியாதா????
    மரத்த வெட்டுரத விட்டு உன்னொட விட்டுல இருக்க டிவி கட்டில் எடுத்து கொலுத்தலாமே…. பேருந்து ரைஇல் என்னாடா தமிலா சோர தான் தின்ரிய இல்ல வேர எதாவது …..????

  18. தமிழ்நாட்டில் இருக்கும் வன்னியர்கள் மட்டும் சோத்துக்கு கூட வழி இல்லாமல், படிப்பு இல்லாமல் கஷ்டப்படுவதாகவும், அதற்கு காரணம் இந்த நாட்டிற்கு ஒரு வன்னியர் முதலமைச்சர் வராததே காரணம் – அந்த முதல்வராகவும் நம்ம அன்புமணி ராமதாஸ் அவர்கள் வந்தால் மட்டுமே, வன்னியர்கள் வீடுகள் செல்வம் கொழிக்கும் என்பதே மகாபலிபுரம் மாநாடு முதல் பாமக கட்சி கொள்கை வரை அனைத்திலும் நீக்க மற நிறைந்து உள்ளது. இந்த “ஃபார்முலாவுக்கு எதுக்கு பெரியார் படம், மார்க்ஸ் படம் என தெரியவில்லை.

    சரி இந்த பார்முலா குறித்து பார்ப்போம்:

    முதலில் இந்த பார்முலாபடி பார்த்தால் இதுவரை பதவியில் இருந்தவர்கள் சாதியை சார்ந்தவர்கள் அனைவரும் செல்வம் செழித்து, படிப்பு & வேலை என செட்டில் ஆக இருக்க வேண்டும். அப்படி யோசிக்க கூட வாய்ப்பு இல்லை ஏனா அப்படி அந்த சாதிக்காரர்கள் வாழ்வில் எந்த விடியலும் வரவில்லை என்பதே நிதர்சனம். ஏன்னா கல்லூரி, மருத்துவனை என நடத்துபவர்கள் எவரும் அவர்கள் சாதிக்காரர்களுக்கு இலவசமாக படிப்போ, மருத்துவமோ கொடுப்பது இல்லை எனபதே நிதர்சன உண்மை. இதுல பதவியில் இருக்கின்ற, இருந்தவர்கள் கையில் தான் ஆகப்பெரும்பாண்மையான கல்லூரிகள் இருக்கின்றன.

    அப்ப குறிப்பிட்ட சாதிக்காரன் ஆட்சிக்கு வந்தால் அந்த சாதிக்காரன் பலன் அடைவான் என்பதே கடைந்தெடுத்த மோசடி.

    அதுலையும் அந்த சாதியில (வன்னியர்) அன்புமணி ஐயா முதல்வராக வந்தால் தான் வன்னியர் சாதிக்காரர்கள் பலன் அடைவார்கள் முன்னேற முடியும் என பேசினால், பேசுவர்கள் மனநிலை குறித்து நாம் என்ன முடிவுக்கு வர வேண்டும்.

    ஆக எவன் ஆட்சிக்கு வந்தாலும் ஏழை, எளிய உழைக்கும் மக்களுக்கு எதுவும் நடக்காது. எல்லாம் காசு இருக்கின்றவனுக்கு தான் என ஆக்கிபுட்டானுங்க. காசு இருந்தா தான் படிப்பு, மருத்துவம் எல்லாமே. அது ரெளத்திரம் பழகு பச்சமுத்து கல்லூரியாக இருந்தாலும் சரி, வன்னியர் கல்வி நிலையம் என கொட்ட எழுத்தில் போர்டு வைத்துள்ள சரஸ்வதி கல்லூரியாக இருந்தாலும் சரி இது தான் பட்டவர்த்தனமான உண்மை.

    யார் முதலமைச்சராக வந்தாலும் அரசு பள்ளியில் எத்தனை முட்டை போடலாம் எனத்தான் முடிவு செய்ய முடியும். மீறி தனியார் பள்ளி, கல்லூரிகளை அரசுடைமையாக்கவோ, தனியார் மருத்துவமனைகளை அரசுடைமையாக்கவோ முடியாது. அப்படி ஆக்குவேன் என்று கூட மருத்துவர் ராமதாஸ் மட்டுமல்ல, தம்பி சீமான் முதல் அண்ணன் திருமா வரை எவரும் சொல்ல முடியாது.

    ஆக நாம் அனைவரும் உழைக்கும் மக்களாக ஒன்றிணைந்து போராடும்போது தான் நமது பிரச்சனைகளை தீர்த்து கொள்ள முடியும். அதன் மூலமே உழைக்கும் வர்க்கமே ஆளத்தகுதி படைத்தது என்பதையும், உழைக்காமல் இருப்பவனுக்கு சோறு கிடையாது என்பதையும் நிறுவ முடியும். அதை விட்டுவிட்டு அவரு வந்தா தீர்ந்திடும், எங்க சாதிக்காரர் வந்தா தீர்ந்திடும் , இந்த நடிகர் வந்தா தீர்ந்திடும் என நம்பி மீண்டும் மீண்டும் வாக்குபெட்டிக்கு முன் வரசொல்லி யாராவது அழைத்தால் – “ எப்படி? “ என அவர்களை நாம் கேட்க வேண்டும். 60 ஆண்டு காலம் நாம் செய்த தவறை எப்போது திருத்தி கொள்ள போகிறோம்?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க