முகப்புமறுகாலனியாக்கம்ஊழல்நிலக்கரி ஊழல் : மன்மோகனின் தகிடுதத்தங்கள் !

நிலக்கரி ஊழல் : மன்மோகனின் தகிடுதத்தங்கள் !

-

நிலக்கரிச் சுரங்க வயல் ஒதுக்கீட்டில் நடந்துள்ள முறைகேடுகள் பற்றி விசாரணை நடத்திவரும் மையப் புலனாய்வுத் துறை, கடந்த மார்ச் 8 அன்று அவ்விசாரணை குறித்த அறிக்கையொன்றை உச்ச நீதிமன்றத்திடம் அளித்தது. அப்பொழுதே, “சட்ட அமைச்சரிடம் விசாரணை அறிக்கையின் வரைவு காட்டப்பட்டுத் திருத்தப்பட்டுள்ளது” என இவ்வூழல் குறித்து வழக்கு தொடர்ந்திருக்கும் பொதுநல அமைப்புகள் உச்ச நீதிமன்றத்திடம் முறையிட்டன. அச்சமயத்தில் சி.பி.ஐ.-யின் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் வாதிட்ட கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஹரேன் ராவல், “அரசைச் சேர்ந்த யாரிடமும் வரைவு அறிக்கை காட்டப்படவில்லை” என அடித்துக் கூறினார். இக்குற்றச்சாட்டு தொடர்பாக பிரமாண பத்திரமொன்றை தாக்கல் செய்யுமாறு சி.பி.ஐ.க்கு உத்தரவிட்டது, உச்ச நீதிமன்றம்.

பிரதமர் மன்மோகன் சிங் - சட்ட அமைச்சர் அஸ்வனி குமார்
அம்பை எய்த குற்றவாளிகள் : பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் சட்ட அமைச்சர் அஸ்வனி குமார் .

இந்தச் சதியை மூடிமறைத்துவிட காங்கிரசு செய்த முயற்சிகள் மண்ணைக் கவ்விவிட்ட நிலையில், நிலக்கரிச் சுரங்க வயல் ஒதுக்கீட்டில் நடந்துள்ள முறைகேடுகள் பற்றிய விசாரணை நிலை அறிக்கையைக் கடந்த மார்ச் 8-ஆம் தேதி உச்ச நீதிமன்றத்திடம் அளிப்பதற்கு முன்பாகவே, அந்த அறிக்கையின் வரைவை மைய சட்ட அமைச்சர் அஸ்வனி குமாரின் விருப்பத்தின் பேரில், அவருடன் சி.பி.ஐ. பகிர்ந்து கொண்டது; “சட்ட அமைச்சர் மட்டுமின்றி, பிரதமர் அலுவலகம் மற்றும் மத்திய நிலக்கரி அமைச்சகத்தைச் சேர்ந்த இரண்டு உயர் அதிகாரிகளுடனும் வரைவு விசாரணை அறிக்கை அந்த அதிகாரிகளின் விருப்பத்தின் பேரில் பகிர்ந்து கொள்ளப்பட்டது” என வெளிப்படையாக ஒப்புக்கொண்டு, சி.பி.ஐ. இயக்குநர் ரஞ்சித் சின்ஹா கடந்த ஏப்ரல் 26 அன்று உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரமொன்றைத் தாக்கல் செய்தார்.

வரைவு விசாரணை அறிக்கையைச் சட்ட அமைச்சரிடமும், மற்ற இரு அதிகாரிகளிடமும் காட்டியதை ஒப்புக் கொண்டுள்ள சி.பி.ஐ., “அவர்களிடம் காட்டிய பிறகு அறிக்கையில் ஏதாவது திருத்தம் செயப்பட்டுள்ளதா?” என்பது குறித்துத் தனது பிரமாணப் பத்திரத்தில் எதுவும் தெரிவிக்கவில்லை. முழுக்க நனைந்த பிறகும் முக்காடு போட்டுக் கொள்ளும் சி.பி.ஐ.-யின் இந்த அசட்டுத் துணிச்சல் நம்மை விக்கித்துப் போக வைக்கிறது.

இதுவொருபுறமிருக்க, “விசாரணை அறிக்கைகளை இனி மேற்கொண்டு அரசைச் சேர்ந்த யாரிடமும் காட்டமாட்டோம்; ஏப்ரல் 26 அன்று நீதிமன்றத்திடம் அளித்துள்ள விசாரணை அறிக்கை அரசைச் சேர்ந்த யாருடனும் எந்தவிதத்திலும் பகிர்ந்துகொள்ளப்படவில்லை” என்றும் தனது வாக்குமூலத்தில் கூறியிருக்கிறது, சி.பி.ஐ

ஒரேயொரு அறிக்கையின் மூலம் மகாகனம் பொருந்திய கோர்ட்டார் அவர்களைக் கேலிப்பொருளாக்கிவிட்ட சி.பி.ஐ.-க்கு எதிராக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நெற்றிக்கண்ணைத் திறக்கவும் இல்லை; சி.பி.ஐ.யின் பெயரால் தாக்கல் செய்யப்பட்ட காங்கிரசின் அறிக்கையை அவர்கள் உடனடியாகத் தள்ளுபடி செயவுமில்லை. மாறாக, மைய அரசு, சி.பி.ஐ.-க்கு எதிராக வழக்கமான கண்டனங்களைத் தெரிவித்துவிட்டு, சில கேள்விகளை எழுப்பி, அதற்குப் பதில் அளிக்குமாறு கூறிவிட்டு, இந்த விசாரணையை மே 6-ந் தேதிக்கு ஒத்திவைத்துவிட்டனர்.

சி.பி.ஐ., விசாரித்து வரும் இந்த நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடுகள் அனைத்தும் 1993-க்குப் பிறகு, அதாவது தனியார்மயம்-தாராளமயத்தின் பிறகு ஆரம்பித்து 2010 வரை, தொடர்ந்து 17 ஆண்டுகளாக நடந்துள்ளன. இந்தப் பதினேழு ஆண்டுகளில், பிரதமர் மன்மோகன் சிங் நிலக்கரித் துறை அமைச்சராகவும் இருந்த 2004-2008 காலக்கட்டத்தில்தான் முறைகேடுகள் முழு வேகத்தில் நடந்தன. கடந்த பதினேழு ஆண்டுகளில் ஒதுக்கீடு செயப்பட்ட 195 சுரங்க வயல்களுள், 160 வயல்கள் அந்த நான்கு ஆண்டுகளில்தான் ஒதுக்கப்பட்டன.

“அலைக்கற்றைகளை ஏலத்தில் விட வேண்டும் என நான் அறிவுறுத்தியதை ஆ.ராசா ஏற்றுக் கொள்ளவில்லை” எனப் புளுகி வரும் மன்மோகன் சிங், நிலக்கரி வயல்களை ஏலத்தில் விட வாய்ப்பிருந்தும் அதனைத் திட்டமிட்டே புறக்கணித்துவிட்டு, விருப்பத்தின் அடிப்படையில் ஒதுக்கீடு செய்யும் முறையை நடைமுறைப்படுத்தினார். முதலில் வந்தவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் வழங்கப்பட்ட அலைக்கற்றைகளைப் பெறுவதற்கு கார்ப்பரேட் முதலாளிகள் வரிசையில் நிற்கவாவது வேண்டியிருந்தது. நிலக்கரி வயல்களைப் பெற அந்தச் சிரமம்கூட இல்லை. அமைச்சர்கள்-அதிகாரிகள் அடங்கிய ஒரு குழுவை நியமித்து, அந்தக் குழு யார்யாருக்கெல்லாம் வயல்களை ஒதுக்கலாம் என விரும்பியதோ, அவற்றுக்கெல்லாம் நிலக்கரி வயல்களை மலிவு விலையில் வாரிக் கொடுத்தார், மன்மோகன் சிங்.

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல்நிலக்கரிச் சுரங்க வயல்களை இந்தியச் சந்தை மதிப்பின்படி ஒதுக்கீடு செய்யாததால், அரசிற்கு ஏற்பட்டுள்ள இழப்பு 10.67 இலட்சம் கோடி ரூபாய் என்கிறது, கணக்குத் தணிக்கையாளர் அறிக்கை. ஏறத்தாழ 1,700 கோடி டன் கொண்ட நிலக்கரி வயல்கள் தனியாருக்குத் தரப்பட்டிருப்பதாகவும், அதன் மதிப்பு 42,50,000 கோடி ரூபாய் என சி.பி.ஐ. மதிப்பிட்டுள்ளது. இந்த ஊழலோடு ஒப்பிட்டால் அலைக்கற்றை ஊழல் சுண்டைக்காய்தான்.

2 ஜி ஊழல் வழக்கில் பலியிடுவதற்கு ஆ.ராசா கிடைத்ததைப் போல, நிலக்கரி ஊழல் வழக்கில் சிக்கியுள்ள மன்மோகனைக் காப்பாற்றுவதற்கு யாரும் கிடைக்காததால், விசாரணை அறிக்கையைத் தனக்குச் சாதகமாகத் திருத்தியிருக்கிறது, காங்கிரசு கும்பல். தலைமைக் கணக்கு அதிகாரி இந்த முறைகேடு தொடர்பாக கடந்த ஆண்டு பிரதமருக்கு எழுதிய கடிதத்தின் ஒரு பகுதியை மட்டும் வெட்டி வெளியிட்டு மாட்டிக் கொண்ட சம்பவத்தின் நினைவு மறைவதற்கு முன்னதாகவே, அடுத்த மோசடி வேலையில் கூச்சநாச்சமின்றி இறங்கி மாட்டிக் கொண்டுள்ளார், பிரதமர் மன்மோகன் சிங். அதிகாரம் கையில் இருக்கும் துணிவில், “அறிக்கையில் இருந்த இலக்கணப் பிழைகளைத்தான் சட்ட அமைச்சர் சரி செய்தார்” என மிதமிஞ்சிய கொழுப்போடு அறிவித்து, இந்தச் சதியை நியாயப்படுத்துகிறார், நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கமல் நாத். இப்பொழுது இம்மோசடிக் குற்றச்சாட்டிலிருந்து மன்மோகனைக் காப்பாற்றுவதற்காகக் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஹரேன் ராவல் முதல் களப்பலியாக்கப்பட்டுள்ளார்.

ஹரேன் ராவல் தான் பதவி விலகிய கையோடு அட்வகேட் ஜெனரல் கூலம் வாகன்வாதிக்கு எழுதியுள்ள கடிதத்தில், “தான் வாகன்வாதி சொல்லித்தான் சி.பி.ஐ.யின் அறிக்கையைப் பார்த்து அதில் திருத்தங்களைச் சொன்னதையும்; வாகன்வாதி சொல்லித்தான் உச்ச நீதிமன்றத்தில் அரசைச் சேர்ந்த யாரும் அறிக்கையைப் பார்க்கவில்ல என வாதாடியதையும்” குறிப்பிட்டிருக்கிறார். அட்வகேட் ஜெனரல் வாகன்வாதி அடுத்தவர்களை மாட்டிவிடும் வேலையைக் கூச்சமின்றிச் செயக்கூடியவர்தான் என்பது 2 ஜி ஊழல் வழக்கிலேயே அம்பலமாகியிருக்கிறது. இது மட்டுமல்ல, காங்கிரசு தலைமைக்காக அவர் எதையும் செய்யத் துணிந்தவர். மன்மோகன் சிங் அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்ட பொழுது, முலாயம் சிங் அவரது அரசைக் காப்பாற்றினார் என்பதற்காகவே, முலாயமுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் அவருக்கு ஆதரவாக நடந்து கொண்டவர்தான் அட்வகேட் ஜெனரல் வாகன்வாதி.

சோனியா, மன்மோகன் சிங், ப.சிதம்பரம், பிரணாப் முகர்ஜி, கூலம் வாகன்வாதி ஆகியோரைக் கொண்ட ஆளும் கும்பல் நீதி, நேர்மை, நாணயம், அறம், சட்டம், மக்கள் நலன் என எந்த விழுமியங்களையும் ஒரு பொருட்டாக மதிக்காத, கார்ப்பரேட் முதலாளிகளுக்குத் தரகு வேலை பார்ப்பதையே முழுமூச்சாகக் கொண்ட, அதற்காக எப்படிபட்ட கிரிமினல் வேலைகளிலும் இறங்கத் தயங்காதவர்கள் என்பதைத்தான் இந்த இரண்டு ஊழல் விவகாரங்களும் எடுத்துக்காட்டுகின்றன. மற்றொரு ஆளும் வர்க்கக் கட்சியான பா.ஜ.க.வும் காங்கிரசுக்குச் சற்றும் சளைத்தது அல்ல என்பதை கர்நாடகாவில் நடந்துள்ள சுரங்க ஊழல் அம்பலப்படுத்தியிருக்கிறது.

– குப்பன்
________________________________________________________________________________
புதிய ஜனநாயகம் – மே 2013
________________________________________________________________________________

 1. நேர்மையின் சின்னமான , தனக்னெக சொத்து எதுவும் சேர்க்கத தானை தலைவன் பிரதமர் அவர்களுக்கு இப்படியெல்லாம் அவர் பெயர் ஏற்படுத்துவதை கண்டிக்கிறேன்.

  • EB ஆபிஸில் கரண்ட் கட்ட லைனில் இருக்கும் போது… நிலக்கரி நாட்டில் குறைவாக இருக்கிறது. மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துங்கள் என அரசு விளம்பரத்தை படிக்கும் நம்மை பார்த்து 160 நிலக்கரி வயல்களை தனியார் முதலாளிகளுக்கு 4 ஆண்டுகளில் தூக்கி கொடுத்த மன்மோகன் சிரிக்கும் அருவருப்பை எதனுடன் ஒப்பிடுவது.

   வயலை வாங்கி ஒருத்தனும் நிலக்கரி இன்னும் வெட்ட ஆரம்பிக்கவில்லையாம். 2ஜி வாங்கி அதனை கைமாற்றி லாபம் பார்த்தது போல காத்துக்கிட்டு இருப்பானுஙக் போல….

   இப்படி நமக்கு மின்வெட்டையும் அம்பானிக்கு நிலக்கரி வயலையும் தூக்கி கொடுக்கும் ஒரு சிறந்த ‘ தானைத்தலைவன்’ தேடினால் கிடைக்கமாட்டான் என்பது உன்மை தான் வினோத்.

 2. நிலக்கரியை இதைவிட அதிக அளவில் கருப்பாக்கியவர் யாருமே இருக்க முடியாது. அதன் முழுப்பெருமையும், பொருளாதார வல்லுனர், நேர்மைச்சிகாமணி மன்மோஹன் சிங்கையே சாரும். யார் என்ன சொன்னாலும், யார் என்ன எழுதினாலும், தன் தோலுக்குக்கூட உரைக்காது என்று சொல்லக்கூடிய அளவில் உணர்வுகளன்றி, வெட்கநிலையின்றி இந்த அளவுக்கு எந்த ஒரு அரசியல்வாதியும் இதுவரை ஆட்சி செய்ததில்லை. தன்மானமற்ற நிலையின் ஒரு உன்னதத் தோற்றம். இதுதான் இந்திய ஆளுரிமை என்றால் அது செத்து ஒழியட்டும். இதுதான் ஜன நாயகம் என்றால் அது அடியோடு அழியட்டும். இதற்கு ஒப்பானவர்கள் தான் பார்லிமெண்டில் அமர்வார்களேன்றால், பார்லிமெண்ட் என்னும் வார்த்தை அமங்கலமான், மற்றும் அசிங்கமான வார்த்தையாகக் கருதப்படட்டும்.

 3. //….தன்மானமற்ற நிலையின் ஒரு உன்னதத் தோற்றம். இதுதான் இந்திய ஆளுரிமை என்றால் அது செத்து ஒழியட்டும். இதுதான் ஜன நாயகம் என்றால் அது அடியோடு அழியட்டும். இதற்கு ஒப்பானவர்கள் தான் பார்லிமெண்டில் அமர்வார்களேன்றால், பார்லிமெண்ட் என்னும் வார்த்தை அமங்கலமான், மற்றும் அசிங்கமான வார்த்தையாகக் கருதப்படட்டும்….//

  இப்படி உணர்ச்சியை தூண்டும் வசனம் எழுதுவது கலிஞரின் மனோகரா பாணி.. அவரே அதை பின்னாளில் கைவிட்டு விட்டர்…

  IN DEMOCRACY, PEOPLE GETS WHAT THEY DESERVED

  ஆர்… வியாபரத்தின் அடிப்படை விதி..கொடுக்கும் விலைக்கு தகுந்த பொருள் தான் கிடைக்கும்..

  அரசியலின் அடிப்படை விதி… மக்களுக்கு தகுந்த அரசு தான் கிடைக்கும்.

  அரசன் ஆண்டபோது அரசன் எவ்வழி மக்கள் அவ்வழி.. இப்போது மக்கள் எவ்வழி அரசு அவ்வழி.

  இதை அரசியல் மட்டுமல்ல .. எல்லாத்துறையிலும் பார்க்கலம்.
  தவறு நம் பக்கம் தான். இதில் 1% கூட சந்தேகம் வேண்டாம் உங்களுக்கு..

  நம் பக்கம் தவற்றை வைத்து கொண்டு சாபம் விடுவாதல் கிடைப்பது என்ன ?
  சாபம் வாங்கியவர்கள் , அவர்களின் வாரிசுகள் எல்லாரும் தொடமுடியாத உயரத்தில் சட்டப்பாதுகாப்புடன் வலம் வருகையில்..

  இதற்கு முந்தைய கான்கிரஸில் நரசிம்ம ரவ் மகன் மீது கூறப்பட உர இரக்குமதி புகாரில் 1993ம் ஆன்டு கணக்குபடி 140 கோடி கைமாறி ஒரு பிடி உரம் கூட இந்தியா வரவில்லை.

  அன்றைய 140 கோடி இன்றைய மதிப்பில் 1500 கோடிக்கு மேல். அதை அப்போது கொள்ளையடித்தவர்கள் சரியான முதலீடி செய்து இருப்பரிகள் என்றால் இன்றைக்கு அது 50000 கோடியாக் கூட இருக்கலாம்.

  அதே கிழிந்த சட்டையுடன் இன்னம் சாபம் விட்டபடி தான் நாம் உள்ளோம்…

  சாபம் விட்டு உணர்ச்சியை சக்தியை செலவழித்துவிட்டு இயல்பு வாழ்க்கை திரும்புவதை விட…
  இங்கே சிந்தியுங்கள்…

 4. உணர்ச்சிகளின் வடிவம் எழுத்துக்கள். நான் சாபமளிக்க சன்யாசியுமல்ல. மெய்ஞானப் புலவருமல்ல. சிறு வயதிலிருந்து சீரான,தொடர்ந்து நிகழும் சீரழிவகளைக் கண்டு எழும் மென்மையான கோபம். கோபத்தின் காரணம் பல நேரங்களில் இயலாமை. நீங்கள் சொன்னது போல் In a democracy People get what they Deserve. மற்ற படி என் எழுத்துக்களில் வேகம் இருக்கலாம், காரம் இருக்கலாம். யாரையும் இழிவு படுத்தும் எண்ணம் சிறிதுமில்லை. அதுபோன்ற எண்ணம் யாருக்குமிருந்தால் எனது மன்னிப்பு வேண்டுதலை வைக்கிறேன்.

  உங்கள் வார்த்தைகளில் உண்மை இருக்கிறது. உரம் இருக்கிறது. இன்றைய நிலைக்கு ஒவ்வொரு இந்தியனும் காரணம். என்னால் இதற்கு என்ன செய்ய முடியும் என்று எண்ணி செயல்படுவதே சரியான நிலை. நன்றி!

 5. The whole ruling set up is corrupt to the marrow. There is no hope for the election of a better persons to rule. I think the Chinese intervention is the best alternative. They have changed a lot and can change India too.

   • அதற்க்கு நீண்ட தூரம் நாம் பயணிக்க வேண்டும். அது அவ்வளவு சுலபமில்லை. ஆனால் அது தானாக நடக்கும், நமது பயணம் சரியாக இருந்தால்.

     • மூச்சுக்கு முன்னூறு தடவை அவா அவா என்கிறீர்களே…எவா? கேள்வியை படித்துவிட்டு பதிலை படித்தால் நன்றாக புரியும். வேள்வி செய்யும் உமக்கு இது தெரியவில்லையோ?

 6. சி.பி.ஐ.,க்கு தன்னாட்சி கொடுங்க.. என உச்சநீதிமன்றம் கேட்பதும் ‘ சட்டம் போட சிதம்பரம் தலைமையில் எம்.பிக்கள் குழுவை மத்திய அரசு அமைப்பதும் என உலகின் மிகப் ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பெரிய ஜனநாயகம் புழுத்து நாறுவதை தாங்க முடியவில்லை.

  திருடர்கள் தங்களை தாங்களே தண்டித்து கொள்ள முடியும் என நம்பச்சொல்கிறார்கள்…

 7. தன் கட்டுப்பாட்டில் உள்ள சிபிஐ-யை சட்ட அமைச்சரிடம் அனுப்பி அறிக்கையில் தான் மாட்டிக் கொள்ளாத வகையில் திருத்தம் செய்த மமோசி-க்கு, சட்ட அமைச்சர் அஸ்வினி குமாரை பதவியிலிருந்து இறக்கி பலிகடாவாக்க ’நேர்மையின் சிகரம்’ சோனியா முடிவு எடுத்தவுடன், அடுத்தது தான் என்ற ஞானம் வந்து விட்டது.. தன்னுடைய எதிர்ப்பை பல்லைக் கடித்து வெளிக்காட்டினாலும் யாரும் கண்டுகொள்ளவில்லை.. கூடிய விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் வரும்.. அல்லது அதற்கு முன் ராகுல் பிரதமர் பதவியேற்று மமோசியை கூண்டிலேற்றுவார்கள்..
  ஊழலலுக்கு எதிரான கர்நாடக தேர்தல் முடிவுகள் காங்கிரசுக்கு மமோசி-யைவிட பொருத்தமான, சிறந்த பலிகடா இருக்கமுடியாது என்ற எண்ணத்தை தந்திருக்கிறது போல..

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க