privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஅரசியல்ஊடகம்கொள்ளையில் கொள்ளை : ஊழலுக்குள் ஊழல் !

கொள்ளையில் கொள்ளை : ஊழலுக்குள் ஊழல் !

-

நாட்டின் மிகப்பெரிய ஊழல்கள் என்று அறியப்பட்டிருக்கும் 2 ஜி அலைக்கற்றை மற்றும் நிலக்கரி ஒதுக்கீடு வழக்குகளில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மீளமுடியாது கடும் அரசியல் நெருக்கடியில் சிக்கிக் கொண்டுவிட்டதாக எதிர்க்கட்சிகள் குதூகலிக்கின்றன. பெரும்பாலான செய்தி ஊடங்களும் அவ்வாறுதான் சித்தரிக்கின்றன. மீளமுடியாத கடும் அரசியல் நெருக்கடியில் சிக்கிக் கொண்டிருப்பது ஆளும் கூட்டணி மட்டுமல்ல; நாட்டின் ஒட்டுமொத்த அரசியல், பொருளாதார அமைப்பும்தான்.

சி.பி.ஐ. நாய் வால்
திருத்த முடியாத சி.பி.ஐ. (அரசு அமைப்பு)

இவ்விரு வழக்குகளிலும் பொதிந்துள்ள அடிப்படை உண்மைகள் மூடிமறைக்கப்பட்டு, பரபரப்பூட்டும் அரசியல் மற்றும் சட்டநுட்ப விவரங்கள் முன்னிறுத்தப்படுகின்றன. 2 ஜி அலைக்கற்றை மற்றும் நிலக்கரி ஒதுக்கீடுகளில் நடந்த ஊழல் முறைகேடுகளால் மூன்றரை இலட்சம் கோடி ரூபாய்கள் அரசுக்கு இழப்பீடு ஏற்பட்டுவிட்டதாக இந்தியப் பொதுத் தணிக்கையாளர் கூறுகிறார். இருபது ஆண்டுகளுக்கு முன்பு, தனியார்மயம்-தாராளமயம்-உலகமயம் என்ற புதிய பொருளாதாரக் கொள்கை நமது நாட்டில் புகுத்தப்பட்டபோது அரசு பொதுத்துறைத் தொழில்களும் பொதுத்துறை அடிப்படைக் கட்டமைப்புகளும்தாம் அனைத்து அரசு இழப்பீடுகள், ஊழல்கள், திறமைக் குறைவு, பின்னடைவு, தேக்க நிலை, பொருளாதார நெருக்கடிகளுக்கும் காரணம் என்று கூறப்பட்டது. இதற்குத் தீர்வாக, பலப்பல இலட்சம் கோடி ரூபாய்கள் மதிப்புடைய அரசு பொதுத்துறைத் தொழில்களும் பொதுத்துறை அடிப்படைக் கட்டமைப்புகளும் அடிமாட்டு விலைக்குத் தனியாருக்குத் தாரை வார்க்கப்பட்டன. கார்ப்பரேட் நிறுவனங்கள் என்ற பெயரில் பழைய, புதிய தரகுமுதலாளிகளும் அனைத்து ஓட்டுக் கட்சி அரசியல் தலைவர்களும் அரசுப் பொதுச்சொத்துகளைச் சூறையாடினார்கள். நிலபுலன்களை வளைத்துப் போட்டு வீடு- வீட்டுமனைத் தொழில்களில் பணத்தைக் குவித்தார்கள்.

இரண்டாவது சுற்றில், காடுகள்-மலைகள், விவசாய விளைநிலங்கள், ஆறுகள்-நீர்நிலைகள், கல்-பாறை-மணல், ஆகாயம்-பூமி, இரும்பு-நிலக்கரி, செம்பு-அலுமினியம் முதலிய தாதுப்பொருட்கள், மின்சாரம்-தொலைத்தொடர்பு மற்றும் மக்கள் வாழ்வாதாரங்கள் எல்லாம் தனியாருக்குத் தாரைவார்க்கப்பட்டன. இவற்றைக் கொண்டு மக்களுக்கு வாக்களித்தபடி உற்பத்தி, வேலை வாய்ப்பைப் பெருக்கும் தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, முக்கியமாக அந்நிய நாடுகளுக்கு விற்றுச் செல்வத்தைக் குவிப்பதிலேயே அவர்கள் குறியாக இருந்தனர். ஒவ்வொரு நாளும் புதுப்புது ஊழல், மோசடி, அதிகார முறைகேடுகள் வெளியே வந்து நாறுகின்றன. பொதுச்சொத்துக்களைச் சூறையாடுவதில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் அரசியல் கொள்ளையர்களுக்கும் வெறிபிடித்துப்போய், ஊழல் தலைவிரித்தாடுகிறது.

இயற்கை வளங்களையும், அரசுப் பொதுச்சொத்துக்களையும் கொள்ளையடிப்பது, அவர்களுக்கிடையே கூறுபோட்டுக் கொள்வது என்பது எழுதப்படாத, அறிவிக்கப்படாத அரசுப் பொதுக்கொள்கையாக ஆகிவிட்டது. அதுவே ஊழல், கொள்ளைதான். அதை எப்படிச் செய்வது, யார்யாருக்கு என்னென்ன பங்கு என்பதில்தான் நாய்ச் சண்டை. ஆகவே, நடந்தது, நடப்பது வெறுமனே ஊழல் அல்ல, ஊழலுக்குள் ஊழல், கொள்ளையில் கொள்ளை.

எப்போதெல்லாம் மிகப் பெருமளவிலான மோசடிகள், பாரிய அதிகார முறைகேடுகள், மிகக்கொடூரமான அநீதிகள், மிக மோசமான குற்றங்கள் நடந்திருப்பதாகக் கருதப்படுகிறதோ, எப்போதெல்லாம் அதிகாரபலமும் பணபலமும் மிக்கவர்களுக்கெதிராக சாதாரணமான முறைகளினால், முயற்சிகளினால் உண்மைவெளிவராது என்று நம்பப்படுகிறதோ அப்போதெல்லாம் முறைமையான, வரிசைக்கிரமமான அதிகார அமைப்புகளின் வழக்கமான விசாரணை போதாது; சி.பி.ஐ. விசாரணை வேண்டும்; ஓய்வுபெற்ற அல்லது பதவியிலுள்ள உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் நேரடி மேற்பார்வையில் விசாரணை நடக்க வேண்டும் என்ற கோரிக்கை இப்போதெல்லாம் அடிக்கடி எழுப்பப்படுகின்றது.

இதற்குக் காரணம், வேறெல்லாக் கீழ்நிலை அதிகார அமைப்புகளிடமும் நேர்மையான, உண்மையான, சரியான நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை அறவே அற்றுப்போய்விட்டது. ஆனால், சி.பி.ஐ. மற்றும் உச்சநீதி மன்றம் ஆகிய இரண்டு அமைப்புகளின் மீதும் கூட அவ்வாறான நம்பிக்கை கொள்ளமுடியாது. இதற்கு ஆதாரமாக, குஜராத்தில் ஆயிரக்கணக்கான இசுலாமியர் களைப் படுகொலை செய்த இந்துமதவெறி பாசிச பயங்கரவாதி மோடியிடம் அவை காட்டும் பாசம், உ.பி., பீகார் முன்னாள் முதல்வர்கள் முலாயம், மாயாவதி, லல்லு முதலானோர் வழக்குகளில் மத்திய அரசு அரசியல் நிலைப்பாட்டிற்கேற்பவும் ஆணைக்கேற்பவும் சி.பி.ஐ. நடந்துகொள்வது, அந்நிய-உள்நாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களின் நலன்களுக்குச் சாதகமாவே உச்சநீதிமன்றம் தீர்ப்புகள் வழங்குவது போன்ற எடுத்துக்காட்டுக்கள் பலவும் வந்துகொண்டுதான் இருக்கின்றன. ஆகவே, தமது சரிந்துகொண்டிருக்கும் நம்பகத் தன்மைக்கு முட்டுக் கொடுக்கும் முகமாக, 2 ஜி அலைக்கற்றை மற்றும் நிலக்கரி ஒதுக்கீடு ஊழல் வழக்குகளை எடுத்துக்கொண்டு, தமது நேரடி மேற்பார்வையில் கறாராகவும், நடுநிலையாகவும் நடத்துவதாகக் காட்டச் சில சவடால் நாடகங்களை அரங்கேற்றியது, உச்சநீதி மன்றம்.

சி.பி.ஐ.-யை நோக்கி அது ஏதோ தன்னதிகாரம்கொண்ட, சுயேட்சையான அமைப்பாகக் காட்டிக்கொண்டு, சி.பி.ஐ. விசாரணையில் வேறுயாரும் தலையிடக்கூடாது; விசாரணை விவரத்தை அரசிடம் கூடக்காட்டக் கூடாது என்பது போன்ற சில நிபந்தனைகளைப் போட்டு, சாட்டையைச் சுழற்றியது. அதையெல்லாம் கால்தூசாகவே மதித்த சி.பி.ஐ., தனது விசாரணை விவரங்களை மைய அரசின் சட்ட அமைச்சர், அரசுத் தலைமை வழக்கறிஞர், நிலக்கரி அமைச்சக மற்றும் பிரதமர் அலுவலக அமைச்சக அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து, அவர்கள் திருத்தம் போட்ட இடைக்கால விசாரணை அறிக்கையாக, நடந்த உண்மைகளையும் மூடிமறைத்து உச்சநீதி மன்றத்தில் சமர்ப்பித்தது. சி.பி.ஐ. நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டதாவும், அந்நிய, அரசியல் சக்திகளின் பிடியிலிருந்து அதை விடுதலை செய்யப் போவதாகவும், சி.பி.ஐ.யின் சார்பற்ற நிலையை மீண்டும் நிறுவப்போவதாகவும் “பெருங்கூச்சல்” போட்டது, உச்சநீதி மன்றம்.

உச்சநீதி மன்றத்தின் நீதிவழுவா மாட்சிமையை வியந்த ஊடகங்கள் அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டு விட்டதாகவும் அரசியல் சுயநலமிகளின் பிடியிலிருந்து சி.பி.ஐ. யை மீட்டே தீரும்மென்றும் பரபரப்புக் காட்டின. என்ன நடக்குமோவென்று அரசியல் விமர்சகர்கள் திகைத்து நின்றனர். “ஆம், அப்படித்தான் செய்தேன்; அதற்கென்ன, இப்போது?” என்று சிலுப்பிக்கொண்டு நிற்கும் தறுதலைப் பிள்ளையைப்போல, சி.பி.ஐ. நிற்கிறது. “சி.பி.ஐ. தனித்து நிற்கும் அமைப்பு அல்ல; நாங்கள் ஒரு(அரசுக்) கட்டமைப்பின் அங்கம். சில சமயங்களில் (அதனுடன்) கலந்தாலோசித்து கருத்துப்பெற வேண்டும்தான். நாட்டின் சட்ட அமைச்சருக்குத் தானே காட்டினோம்; வேறு வெளியாள் யாருக்கும் காட்டவில்லையே” என்று நேரடியாக முகத்திலடித்தாற்போல சொல்லிவிட்டார், சி.பி.ஐ. இயக்குநர். அதாவது ஊழலில் முதன்மைக் குற்றவாளிகளான பிரதமர் மற்றும் அவரது அதிகாரிகளிடம் கலந்தாலோசித்து, அவர்களின் வழிகாட்டுதலின்படிதான் வழக்கை நடத்துவோம் என்கிறது, சி.பி.ஐ. சி.பி.ஐ. க்குப் பதிலாக சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து விசாரணை நாடகத்தை உச்சநீதிமன்றம் நடத்தும். சிறப்புப் புலனாய்வுக் குழுவின் யோக்கியதையைக் குஜராத் மதவெறிப் படுகொலைகள் விவகாரத்தில் கண்டோம்.

இனி, இதுதான் பகிரங்கமான அரசு நியதியாகிவிடும். குற்றவாளிகளே விசாரணையாளர்களாகவும் நீதிபதிகளாகவும் இருப்பார்கள். (போர்க்குற்றவாளி இராஜபக்சேவுக்கும்கூட இது பொருந்தும்) தேர்தல் ஆணையம், உச்ச, உயர் நீதிமன்றங்கள், மையக் கண்காணிப்பு ஆணையர் போன்ற அரசியல் சட்டப்படியான சுயஆட்சி அமைப்புகள் என்று இதுவரைப் பம்மாத்துக் காட்டப்பட்டவை கூட அரசுக் கட்டமைப்பின் அங்கங்கள்தாம் என்பதைப் பகிரங்கமாக ஒப்புக்கொண்டு செயல் படும். இனி, ஜனநாயகப் பம்மாத்துக்கள் எல்லாம் கலைந்து, அரசின் ஆளும் வர்க்க பாசிசம் பகிரங்கமாகவே கோலோச்சும்.
________________________________________________________________________________
புதிய ஜனநாயகம் – மே 2013
________________________________________________________________________________

  1. இன்று இந்தியாவில் பொதுத்துறை என்று எதுவும் இல்லை.ஒன்று அரசு முதலாளித்துவம் மற்றொன்று தனியார் முதலாளித்துவம்தான் இருக்கிறது. இதில் அரசின் சம்பளம் பெறும் அரசு ஊழியர்கள் மற்றும் பொதுத்துறை ஊழியர்கள் அனைவரையும் அரசு முதலாளிகள் என்றுதான் கூற வேண்டும் .இவர்கள் 10 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை சம்பளமாக மக்களின் வரிப்பணத்தை பெறுகின்றனர்.இந்த வடிப்பணத்தை மக்களிடமிருந்து பிடுங்குவதற்கு போலீஸ்,ராணுவம்,வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை வைத்துள்ளது.இவர்களை பயன்படுத்தி மக்களை மிரட்டி வரி மூலம் பணம் வசூல் செய்கின்றனர்.இந்த பணத்தில் பெரும் பகுதி அரசு முதலாளிகள்[ஊழியர்கள்]சம்பளமாக பெறுகின்றனர்.இவர்கள் மக்களிடமிருந்து வரியாக பெறும் பணத்திற்கு உழைப்பை கணக்கிட்டு அதே அளவிற்கு உழைப்பை மீண்டும் மக்களுக்கு கொடுக்க வேண்டிய கட்டாயம் இல்லை. சமீபத்தில் அரசு நர்ஸ் முதலாளி பிரசவம் பார்ப்பதற்கு பணம் கேட்டுள்ளார்;பணம் கொடுக்க முடியாமல் அந்தப்பெண் ரோட்டிலேயே குழந்தை பெற்றுள்ளார்.வரி கொடுத்த மக்கள் நேரடியாக ஊழியர்களை நீக்கும் அதிகாரம் இருப்பது மட்டும்தான் பொதுத்துறையாகும்.[அல்லது]மக்களுக்கான அரசுத் துறையாகும்.நீங்கள் அரசு முதலாளிகளை[ஊழியர்களை]பாதுகாக்க போராடுகிறீர்கள்.மன்மோகன் சிங் தனியார் முதலாளிகளை பாதுகாக்க போராடுகிறார்.இரண்டுக்கும் இடையில் மக்கள்தான் படாதபாடு படுகின்றனர்.அரசு முதலாளிகளுக்கு [ஊழியர்களுக்கு]ஏதோ கடவுள் பணம் அனுப்புவது போல்தான் கம்யூனிஸ்டுகள் என்று சொல்லிக் கொள்பவர்கள் கூறி வருகின்றனர்.

    • நன்றி முருகேசன் அவர்களே! நானும் ஒரு ஓய்பெற்ற பொதுதுறை ஊழியன் என்ற முறையில், உஙகள் கருத்து நூறு சதவீதம் உண்மை என்று வழி மொழிகிறேன்! அரசு ஊழியர்கள் மற்றும் பொதுதுறை ஊழியர்கள் அதிக சம்பளமும், சலுகைகளும் பெருவது அவர்களை ஒரு குட்டி முதலாளி வர்க்கமாக ஆக்குகிறது! விலைவாசி உயர்வுகளிலிருந்து பாதுகாப்பு பெற்றுள்ள இவர்கள், மற்ற தனியார் துறை உழைக்கும் வர்க்கத்துடன் ஒப்பிட முடியாது! கொடுமை என்ன வென்றால், தாலுக்கா ஆபீசு கடைனிலை ஊழியரிடமிருந்து தாசில்தார்கள் வரை லன்சம் பெறாமல் எந்தக்காரிய்மும் செய்வதில்லை!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க