முகப்புபோலி ஜனநாயகம்இராணுவம்கம்பெனி காத்தாடும் இந்திய இராணுவம் !

கம்பெனி காத்தாடும் இந்திய இராணுவம் !

-

ந்திய ராணுவம் வரலாறு காணாத நெருக்கடியில் சிக்கித் தவிப்பதாக முதலாளித்துவ ஊடகங்கள் கவலைப்படுகின்றன. சுமார் 11 லட்சம் வீரர்களைக் கொண்டுள்ள இந்திய ராணுவத்தில் வேலைக்குச் சேர இளைஞர்கள் தயங்குவதாகச் சொல்கிறார்கள். இராணுவத்தில் சுமார் 10,500 அதிகாரிகள் மட்ட பணியிடங்களும், 32,500 கீழ்மட்ட வீரர்கள் பணியிடங்களும் காலியாக உள்ளன. கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 25,000 வீரர்கள் விருப்ப ஓய்வு பெற்று விலகி விட்டனர். இளைஞர்களிடையே இராணுவப் பணி மதிப்பிழந்து போயிருப்பதாகவும் பத்திரிகைச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இராணுவ விளம்பரம்
இராணுவத்திற்கு ஆளெடுக்கும் விளம்பரம்

சரிந்து போயிருக்கும் இராணுவத்தின் பிம்பத்தை தூக்கி நிறுத்துவதற்காக ஐந்து அம்ச திட்டம் ஒன்றை பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே அந்தோனி 2009ம் ஆண்டு முன்வைத்துள்ளார். ‘பணிக்கால மற்றும் ஓய்வுகால சலுகைகளைக் கூட்டுவது, புதிய இராணுவ பயிற்சி நிலையங்களைத் துவக்குவது, இராணுவம் பற்றிய நல்லெண்ணத்தை உருவாக்கும் பிரச்சாரத்தை முன்னெடுப்பது‘ உள்ளிட்ட இந்த திட்டங்கள் இன்று வரை நடைமுறைக்கே வரவில்லை என்று ப்ரன்ட்லைன் பத்திரிகை தெரிவிக்கிறது. ‘படை வீரர்களுக்கும் அதிகாரிகளுக்கும் வழங்கப்படும் சம்பளத்தை உயர்த்த வேண்டும்‘ என்று ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகள் சிலர் தெரிவிக்கின்றனர்.

ஆள் பற்றாக்குறை தவிர தற்போது இராணுவ அதிகாரிகள் மற்றும் படையணியினரிடையே தற்கொலைகளும் கலகங்களும் அதிகரித்து வருகின்றன. காஷ்மீரில் மட்டும் 2009-2011 க்கு இடையில் 2000 சிப்பாய்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்று கூறுகிறது காஷ்மீர் பல்கலைக்கழகத்தின் ஆய்வு. இராணுவம் தற்கொலை குறித்த விவரங்களை எப்போதுமே வெளியிடுவதில்லை. கடந்த இருபது ஆண்டுகளில் 20,000 பேர் காஷ்மீரில் மட்டும் தற்கொலை செய்து கொண்டிருப்பர் என்பது காஷ்மீர் பல்கலைக்கழக பேராசிரியர் பஷீர் அகமது தப்லாவின் மதிப்பீடு. வட கிழக்கு இந்தியாவுக்கும் மற்ற பகுதிகளுக்குமான தற்கொலைக் கணக்கு தனி.

மேலும் பல்வேறு முகாம்களில் இராணுவ அதிகாரிகள் வழங்கும் கட்டளைகளுக்குக் கீழ்ப் படிய மறுத்து படைச் சிப்பாய்கள் கலகம் புரிந்து வரும் செய்திகளும் அதிகரித்துள்ளன. ஜம்முவில் நிலை கொண்டிருக்கும் 16ம் படைப்பிரிவில் கடந்த ஆண்டு தோன்றிய கலகத்தைக் குறிப்பிடலாம்.

1772-ம் ஆண்டு அங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனியால் தோற்றுவிக்கப்பட்ட இந்தப் படையணியில் பல்வேறு உயரதிகாரிகள் பணிபுரிந்துள்ளனர். போர்காலங்களில் எண்ணற்ற தியாகங்களையும் வீரதீரங்களையும் வெளிப்படுத்தி பெருமைக்குரிய அணியாக கருதப்படும் இந்தப் பிரிவின் வீரர்களிடையே கலகம் மூண்டது இராணுவ உயரதிகாரிகள் மட்டத்திலும் ஓய்வு பெற்ற அதிகாரிகள் மத்தியிலும் திகைப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிகாரிகளுக்கும் வீரர்களுக்கும் இடையே அதிகரித்து வரும் முரண்பாடுகளுக்கும் கூட ஆள்பற்றாக்குறையே காரணம் என்று ஊடகங்கள் எழுதுகின்றன. விரையில் இந்தப் பணியிடங்களை நிரப்பா விட்டால் மீள முடியாத பெரும் சிக்கலில் இந்திய இராணுவம் சிக்கிக் கொள்ளும் என்று இவர்கள் கவலைப்படுகிறார்கள்.

படையினருக்குக் கூடுதலாக சில சலுகைகளை அளிப்பது, சம்பளத்தை உயர்த்துவது, இராணுவம் பற்றிய விளம்பரம் உள்ளிட்ட நடவடிக்கைகளின் மூலமே இந்தச் சிக்கலைத் தீர்த்து விட முடியும் என்று அரசு நம்புகிறது. ஆனால் எதார்த்தம் அத்தனை எளிமையாக இல்லை.

இராணுவத்தில் கீழ்மட்டப் படைவீரர்களாகச் சேரும் பெரும்பான்மையினர் சிறுநகரங்கள் அல்லது கிராமப்புறங்களைச் சார்ந்தவர்கள். நிலத்தோடும் விவசாயத்தோடும் பிணைக்கப்பட்டவர்கள். கிராமப் பொருளாதாரக் கட்டமைப்பைச் சார்ந்து வாழ்பவர்கள். தொண்ணூறுகளின் துவக்கத்திலிருந்து ஆளும் வர்க்கத்தால் அமுலாக்கப்பட்டு வரும் புதிய பொருளாதாரக் கொள்கைகளின் விளைவால் திட்டமிட்ட ரீதியில் துரிதப்படுத்தப்பட்டிருக்கும் விவசாயத்தின் அழிவும் கிராமப் பொருளாதாரக் கட்டமைப்பு தகர்ந்து போயிருப்பதும் இரண்டு விதமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.

முதலாவதாக விவசாயம், நெசவு மற்றும் விவசாயம் சார்ந்த பிற தொழில்களைப் பிரதான பொருளாதார உற்பத்தியாகக் கொண்டிருக்கும் மாநிலங்களில், கிராமப்புற மக்கள் மத்தியில் கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாடு காணப்படுவது பல்வேறு ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. இந்தக் காரணத்துடன் நூற்றாண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வரும் சாதிவாரியான அகமண முறையின் விளைவான பூஞ்சையான இந்திய உடலமைப்பும் சேர்ந்து கொள்கிறது. விளைவு – சமீபத்தில் நடந்த இராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் வேலைக்காக விண்ணப்பித்திருந்த 40,000 பேரில் நாற்பதுக்கும் குறைவானவர்களே தேர்வாகியிருக்கிறார்கள். இராணுவ வேலைக்குத் தேவைப்படும் குறைந்தபட்ச உடல் திறனைக் கூட இவர்களால் வெளிப்படுத்த இயலவில்லை.

இராணுவ வீரர்
ரியல் ஹீரோக்கள் சாகசம் செய்கிறார்களோ இல்லையோ, தற்கொலை செய்கிறார்கள்.

இரண்டாவதாக, படையில் கீழ்மட்ட சிப்பாய்களாகச் சேர்பவர்களில் சுமார் 80 சதவீதம் பேர் 35லிருந்து 40 வயதுக்குள் விருப்ப ஓய்வு பெற்றுச் செல்கிறார்கள். தேசபக்தி கொழுந்து விட்டு எரிவதாலோ லட்சிய ஆவேசத்தாலோ இவர்கள் இராணுவத்தில் சேர்வதில்லை – நடுத்தர வயது வரை ஒரு அரசாங்க வேலை, வயதான பின் ஓய்வூதியம் என்பதே படைவீரர்களாகச் சேர்பவர்களின் அதிகபட்ச லட்சியம். பட்டாளத்தில் சேர்ந்து பத்துப் பதினைந்து ஆண்டுகள் கஷ்டப்பட்டாலும் பிறகு கிடைக்கும் ஓய்வூதியத்தை வைத்துக் கொண்டு விவசாயம் செய்து பிழைத்துக் கொள்ளலாம் என்பதே அநேகமாக பலரது திட்டமாக உள்ளது.

ஏற்கனவே விவசாயம் அழிக்கப்பட்டு, விளைநிலங்கள் நகரங்களால் விழுங்கப்பட்டு வருகின்றன. ஆக, வாழ்வின் மத்தியப் பகுதியில் இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்று வரும் போது சொற்ப ஓய்வூதியத்தையும் செத்துப் போன விவசாயத்தையும் வைத்துக் கொண்டு பிழைக்க முடியாது என்கிற எதார்த்தமே இவர்களை இராணுவ வேலையிலிருந்து விலக்கி வைக்கிறது. இராணுவப் படைவீரர்கள் மத்தியில் எடுக்கப் பட்ட ஆய்வு ஒன்றின் படி, பெரும்பான்மையான தற்கொலைகள் விடுப்புக்காக தமது கிராமங்களுக்குச் சென்று திரும்பிய சில நாட்களிலேயே நடப்பதாகத் தெரியவந்துள்ளது.

இராணுவத்தில் அதிகாரிகள் மட்டத்திலான வேலைகளுக்கு பெரும்பாலும் படித்த நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த இளைஞர்களே முன்வருகிறார்கள். ஏற்கனவே இராணுவத்தில் அதிகாரிகளாக இருப்பவர்களின் வாரிசுகளோ அரசின் காசில் தின்று விட்டு அமெரிக்க வேலைகளைத் துரத்திச் சென்றுவிடுகின்றனர். இவர்கள் பெரும்பாலும் இராணுவம் சார்ந்த வேலைகளுக்கு அதிக ஆர்வம் காட்டுவதில்லை. இதற்கு முதலாளித்துவ ஊடகங்களும், ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகளும் சொல்வதைப் போல் சம்பளம் ஒரு பிரதான காரணம் இல்லை.

ஏனெனில், கடந்த ஆண்டு மட்டும் சுமார் ரூ 3 லட்சம் கோடிகளை விழுங்கி ஏப்பம் விட்டிருக்கும் இந்திய ராணுவம் உலகிலேயே ஏழாவது பணக்கார ராணுவம் என்று மதிப்பிடப்படுகிறது. இதில் அந்நிய நாடுகளில் இருந்து ஆயுதங்கள் கொள்முதல் செய்யவும், உள்கட்டமைப்பு வசதிகளுக்கும் ஊழலுக்கும் செலவானது போக, கணிசமான தொகை அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களின் சம்பளத்துக்காகவும் பிற சலுகைகளுக்காகவும் செலவிடப்படுகிறது. சம்பளம் தவிர்த்து ஒரு இராணுவ அதிகாரிக்குக் கிடைக்கும் சலுகை எண்ணிலடங்காதவை. பயிற்சிக்காலத்திலேயே 21,000 ரூபாய் வரை சம்பளமாகப் பெரும் ஒரு அதிகாரி அவரது தகுதிக்கேற்ப சுமார் ரூ 39,000 வரை துவக்கச் சம்பளமாகப் பெறுகிறார்.

மாதச் சம்பளம் தவிர்த்து பல்வேறு படிகள், சலுகைகள், குறைந்த வட்டிக் கடன், இலவச பயணச் சீட்டுகள், மலிவு விலையில் பொருட்கள் வாங்குவதற்கான கேண்டீன், குடியிருப்பு வசதிகள், உயர் கல்வி பெறுவதற்கு இரண்டு ஆண்டுகள் வரை சம்பளம் மற்றும் சலுகைகளுடன் கூடிய விடுப்பு என்று ஏராளமான சலுகைகளை இராணுவ அதிகாரிகள் அனுபவித்து வருகின்றனர். இத்தனை சலுகைகளையும் வருமான வாய்ப்புகளையும் தாண்டி இராணுவத்தில் அதிகாரிகளாகச் சேர நடுத்தர வர்க்க இளைஞர்கள் முன்வருவதில்லை.

நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த படித்த இளைஞர்களுக்கு வெளியே இராணுவ சம்பளத்துக்கு இணையாகவோ அதைவிட அதிகமாகவோ சம்பளம் கிடைக்கிறது. புதிய பொருளாதாரக் கொள்கைகளின் விளைவாய் ஏற்பட்டிருக்கும் ஐ.டி மற்றும் ஐ.டி சார்ந்த சேவைத்துறை ஒரு சிறிய பிரிவினருக்கு வளமான வாய்ப்புகளைத் திறந்து விட்டுள்ளது. நகர்ப்புற நடுத்தரவர்க்கம் மட்டுமின்றி கிராமப்புறங்களைச் சேர்ந்த நடுத்தர விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்தவர்களையும் இது கவர்ந்திழுக்கிறது. இராணுவத்தோடு ஒப்பிடும் போது இந்த விதமான வேலைகளே, தற்போதைய நவீன கலாச்சாரத்துக்கும் அதைச் சார்ந்த தீவிர நுகர்வியத்துக்கும் ஏதுவானதாக இருக்கிறது.

நினைத்த நேரத்தில் நினைத்தபடி அனுபவிப்பது, வார இறுதியில் குடித்துக் கும்மாளமிடும் பப் கலாச்சாரம்,  விதவிதமான பைக்குகள், செல்போன்கள், உடைகள், என்று நீளும் இந்த ‘வண்ணமயமான’ வாழ்க்கையை இராணுவ  முகாம்களில் கற்பனை செய்து பார்க்க முடியாது. நாளையைப் பற்றியோ, எதிர்காலத்தைப் பற்றியோ கவலைப்படாமல், எந்த இலட்சியத்துக்காகவும் கேளிக்கைகளைத் தியாகம் செய்யாமல், இளமையைக் கொண்டாடவேண்டும் என்கிறது பரவி வரும் மறுகாலனியாக்க நுகர்விய கலாச்சாரம்.  தொடர்ச்சியான முனைப்பையும், உழைப்பையும், அர்ப்பணிப்பு உணர்வையும் கோரும் எந்த வேலையும் இந்தப் பிரிவினரிடையே செல்வாக்கிழந்துள்ளது. இதற்கு இராணுவம் மட்டும் விதிவிலக்காகி விட முடியாது.

காஷ்மீர் தாய்
காணமல் போனவர்களின் படத் தொகுப்பில் தன் மகனை முத்தமிடும் காஷ்மீர் தாய்.

மேலும் இந்திய இராணுவம் எதிரி நாட்டோடு நேரடியான யுத்தத்தில் பங்கேற்று பல ஆண்டுகளாகி விட்ட நிலையில், தேசத்தின் நிகழ்ச்சி நிரலில் எல்லையில்லா தேசபக்தி கரைபுரண்டு ஓடச் செய்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. அவ்வப்போது எல்லையில் நிகழ்ந்து வரும் சில்லறைச் சண்டைகளும் அமெரிக்காவின் மனம் கோணாத வகையில் சில ‘ஷெல்’ வீச்சுக்களோடு முடித்துக் கொள்ளப்படுகிறது. மற்றபடி, இன்றைய நிலையில் இராணுவம் அதன் முழு பலத்தோடு உள்நாட்டு மக்களின் மேல் தான் திருப்பி விடப்பட்டுள்ளது. காஷ்மீர், வடகிழக்கு மற்றும் மத்திய இந்தியாவில் குவிக்கப்பட்டுள்ள இராணுவ மற்றும் துணை இராணுவப் படைகளை மக்கள் வெறுப்பதால், மக்களிடமிருந்து தனிமைப்பட்டிருப்பது, மக்களால் வெறுக்கப்படுவது, அதிகாரிகளால் நிர்ப்பந்திக்கப் படுவது ஆகிய அனைத்தும் சேர்ந்து சிப்பாய்களை தற்கொலை எனும் மனநிலைக்கு தள்ளுகின்றன.

அதிகாரிகள் பற்றாக்குறை தான் படைவீரர்களின் தற்கொலைகளுக்குக் காரணம் என்பதாக முதலாளித்துவ ஊடகங்கள் எழுதுகின்றன. ஆனால் மக்களுக்கோ ஜனநாயகப் பூர்வமான வேறு எந்த நிறுவனங்களோ பதிலளிக்கத் தேவையற்ற ஒரு வெட்டிப் புனிதம் இராணுவத்தின் மேல் சுமத்தப்பட்டுள்ளதன் விளைவாக அதன் உள்ளடுக்குகளில் உயரதிகாரிகள் மட்டத்தில் எதேச்சாதிகாரப் போக்கு தோன்றியுள்ளது. இதோடு சேர்த்து, முடிவற்ற தாழ்நிலைப் போர்களில் சொந்த நாட்டு மக்களின் மேல் பாய்ந்து குதறும் கூலி கும்பலாகச் செயல் படுவதன் உளவியல் அழுத்தங்களும் பணி ஓய்வுக்குப் பின் சொந்த கிராமத்தில் காத்திருக்கும் மரித்துப் போன பொருளாதார வாய்ப்புகள் ஏற்படுத்தும் விரக்தியுமே படையினரிடையே தற்கொலைகளாகவும் உத்தரவுகளுக்குக் கட்டுபட மறுக்கும் கலகங்களாகவும் வெளிப்பட்டுக் கொண்டுள்ளன.

தரகு அதிகார வர்க்கத்தினரின் அடியாள் படையான இராணுவம் பற்றி ஊடகங்களும் திரைப்படங்களும் தொடர்ச்சியாகச் செய்து வரும் பிரச்சாரங்களும், அர்ஜூன் விஜயகாந்த் படங்களும், தேசியப் பெருமிதத்தை உருவாக்குவதற்கு செய்யப்படும் செயற்கையான முனைப்புகளும் எதையும் ஏற்படுத்தாது என்பதைத் தான் இந்த நெருக்கடிகள் உணர்த்துகின்றன.

வடகோடி காஷ்மீரிலிருந்து தென்கோடி கூடங்குளம் வரை அன்றாடம் நிகழும் போராட்டங்கள் அறிவிக்கும் செய்தி இது தான் –  தேசத்தின் பெரும்பான்மையான மக்களான ஏதுமற்றவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தேசமே வர்க்க ரீதியில் பிளவுண்டு வருகிறது. இதில் ஆளும் கும்பலின் அடியாள் படையாக தலையிடும் இராணுவம் சொந்தமுறையில் மதிப்பிழந்து போகிறது. இன்னொரு புறம், ஒரு வேலை என்கிற அளவிலும் இராணுவத்தை மக்கள் அண்டி விடாதவாறு அரசின் பொருளாதாரக் கொள்கைகளே நேரடியாக அடித்தட்டு வர்க்கத்து மக்களையும், மறுகாலனியாக்க கலாச்சாரம் என்கிற வகையில் நடுத்தர வர்க்கத்தினரையும் அந்நியப்படுத்தி நிறுத்துகின்றன.

தேசம், இறையாண்மை போன்ற சொற்களையே மறுகாலனியாக்க கொள்கைகள் பொருளிழக்கும்படி செய்து கொண்டிருக்க, பன்னாட்டு மூலதனத்தின் கூலிப்படையாகவே நாடுகளின் இராணுவங்கள் மாறிக் கொண்டு வருகின்றன. ஆளும் வர்க்கத்தின் புனிதக் குண்டாந்தடியான இராணுவத்திடமிருந்து, அதன் சொல்லிக் கொள்ளப்படும் புனிதத்தன்மையும் உதிர்ந்து வருகிறது. தேசம், தியாகம் என்ற பரவச உணர்ச்சியை இனிமேலும் இராணுவம் சந்தைப்படுத்த முடியாது.

– வெற்றிவேல்
________________________________________________________________________________
புதிய கலாச்சாரம் – மார்ச் 2013
________________________________________________________________________________

 1. சீனா, ரஷ்யான்னு அடுத்த நாட்டு ராணுவத்துக்கு முந்தி விரிக்கிற உம்மை மாதிரி அட்டைகளுக்கு இந்திய ராணுவத்தை பத்தி என்னய்யா கவலை. நீ பொய்யன்கிறதுக்கு இந்த தகவலுக்கு மேல என்னய்யா அத்தாட்சி.
  http://www.maalaimalar.com/2013/05/06161944/Recruiting-for-the-army-starte.html

  உம்மை மாதிரி ஆட்கள் இருக்கிற வரை இந்த நாடு இப்படிதாய்யா இருக்கும். கட்டாய ராணுவ சேவைக்கு வழி இருக்கு, ராணுவத்துக்கு ஆள் சேரலன்னு குதிக்காதே.

  • //மதுரையில் ராணுவத்துக்கு ஆள் எடுப்பு முகாம் தொடங்கியது: 3 ஆயிரம் இளைஞர்கள் குவிந்தனர்

   பதிவு செய்த நாள் :திங்கட்கிழமை, மே 06, 4:19 PM IST

   மதுரை, மே 6-

   இந்திய ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு முகாம் மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் இன்று (6-ந்தேதி) தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி முகாம் இன்று காலை தொடங்கியது.

   முகாமில் 11 மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் பங்கேற்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி மதுரை, கோவை, நீலகிரி, தேனி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி உள்ளிட்ட 11 மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் நேற்றிரவே மதுரை வந்து மைதானத்தில் தங்கியிருந்தனர்.

   இன்றைய முகாமில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்றனர். முகாமில் பங்கேற்ற இளைஞர்களுக்கு இன்று சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி நடைபெற்றது. நாளை உடற்திறன், தகுதித்தேர்வு நடைபெறுகிறது. இந்த முகாம் வரும் 11-ம் தேதி வரை நடைபெறுகிறது.//

   மெய்யப்பன்!இதுதானே நீங்கள் சொன்ன செய்தி.

   11 மாவட்ட இளைஞ்சர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டும் வெறும் 3000 பேர் மட்டுமே கலந்துகொண்டுள்ளனர்.

   நீங்கள் சொல்லுவதுபோல் இந்த வேலையை இளைஞ்சர்கள் விரும்பினால் ஒரு தாலுக்காவிர்க்கு மட்டுமே 3000இக்கும் மேற்ப்பட்ட இளைஞ்சர்கள் கலந்துகொள்வார்கள். அதுவும் இல்லாமல் கலந்த்துகொள்பவர்கள் அனைவரும் தேர்வாகுவது இல்லை.

   கட்டுரையை சரியாக படியுங்கள்.

   //முதலாவதாக விவசாயம், நெசவு மற்றும் விவசாயம் சார்ந்த பிற தொழில்களைப் பிரதான பொருளாதார உற்பத்தியாகக் கொண்டிருக்கும் மாநிலங்களில், கிராமப்புற மக்கள் மத்தியில் கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாடு காணப்படுவது பல்வேறு ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. இந்தக் காரணத்துடன் நூற்றாண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வரும் சாதிவாரியான அகமண முறையின் விளைவான பூஞ்சையான இந்திய உடலமைப்பும் சேர்ந்து கொள்கிறது. விளைவு – சமீபத்தில் நடந்த இராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் வேலைக்காக விண்ணப்பித்திருந்த 40,000 பேரில் நாற்பதுக்கும் குறைவானவர்களே தேர்வாகியிருக்கிறார்கள். இராணுவ வேலைக்குத் தேவைப்படும் குறைந்தபட்ச உடல் திறனைக் கூட இவர்களால் வெளிப்படுத்த இயலவில்லை.//

  • //11 மாவட்ட இளைஞ்சர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டும் வெறும் 3000 பேர் மட்டுமே கலந்துகொண்டுள்ளனர்.//

   வெறும் 45 பேர் எழுத்துத் தேர்வில் வெற்றி…. பார்க்க: தினத்தந்தி 15/05/2013.

  • மெய்யி,
   முந்தி,பிந்தி ன்னு அசிங்கமா பேசாத.உன்னோட இந்திய ராணுவம்தான் மானம் கெட்டு போய் கிடக்குது.அப்பப்போ பொண்டாட்டிய மாத்திககிற பார்ட்டி நடத்துதாம் நேவி.பொண்டாட்டிய கூட்டிக் கொடுத்து இப்படி பொழைக்கிரதுக்கு நாண்டுக்கிட்டு சாவலாம்.அதுகளுக்கு வக்காலத்து வாங்குற நீ எப்பேர்ப்பட்ட மானங்கெட்டவனா இருக்கணும்.

 2. இரவு சோறு இல்லாமல் ஆகப்பெரும்பாண்மையான மக்கள் பட்டினியில் படுக்க செல்லும் நாட்டில் 4 ஆயிரம் 5 ஆயிரம் தான் சராசரி சம்பளம் என நிச்சியக்கப்பட்டு இருக்கும் நாட்டில் ரானுவத்துக்கு ஆட்கள் சேரப்போவது யதார்த்தம்.

  ஆனால் போனபின் வேலையை விட்டு விலகுவது, சுட்டுக்கொண்டு தற்கொலை செய்வது, சகவீரர்களை சுடுவது எனவும், பெரும்பாலும் குடிக்கு அடிமையாக இருப்பது எனவும் மாறுவது தான் பெரும்பாலும் நடக்கிறது.

  சென்னை அரசு மருத்துவமனைக்குள் சென்று ஒரு நாள் மருத்துவம் பார்க்க வருபவர்களிடம் பேசிவிட்டு வந்து கூறவும், 2 லட்சம் கோடியினை இராணுவத்துக்கு ஒதுக்கி பாதுக்காக்கும் இந்தியா யாருக்கு என…?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க