Saturday, November 2, 2024
முகப்புசெய்திதிருப்பதி ஏழுமலை : கடவுள் பெயரில் ஒரு முதலாளி !

திருப்பதி ஏழுமலை : கடவுள் பெயரில் ஒரு முதலாளி !

-

tirupathi-4பிட்டுக்கு மண் சுமந்தார், ஏழை குசேலனின் பிடி அவலை தின்றார் என்று ஏழைப் பங்களனாக, படத்துக்குப் படம் கெட்டப்பை மாற்றும் கமல் போல புராணங்களில் அவதரித்த கடவுள் இன்று திருப்பதியில் மாபெரும் பணக்காரனாக, முதலாளியாக விசுவரூபமெடுத்து நிற்கிறார்.

தமிழ் சினிமா நடிகர்களில் அதிகம் சம்பளம் வாங்குபவர், மீடியம், சுமார், கடைசியில் மார்க்கெட் இல்லாதவர் என்று இருக்கும் நிலைமை இந்துமதக் கடவுளர்களிடத்திலும் உள்ளது. சமத்துவமும், சோசலிசமும் இங்கே நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று.

வவ்வால்களும், அவ்வப்போது வந்து போகும் அர்ச்சகர்களும் தவிர வேறு யாரையும் கண்டிராத கோவில்கள் பல தமிழகத்தில் இருக்கின்றன. இந்த பாலைவனக் கோவில்களில் குடியிருக்கும் சாமிகளுக்கு தமிழ்நாட்டில் 7 கோடிப்பேரும், இந்தியாவில் 100 கோடிப் பேரும் கொண்ட மக்கள் கூட்டம் இருக்கிறது என்பதே தெரியாது.

இது சாமிக்கு மட்டுமல்ல, ராமேஸ்வரம் கோவிலில் இருக்கும் யானைக்கு கூட தன்னைப் போன்ற யானை எனும் இனம் காட்டிலும், நாட்டிலும் ஏராளம் இருக்கின்றன என்பது தெரியாது. இதனாலேயே புரட்சித் தலைவியின் யானை புத்துணர்ச்சி முகாமிற்கு சென்ற அந்த யானை மற்ற யானைகளைப் பார்த்து குழப்பம் ஏற்பட்டு உளவியல் பாதிப்பு வந்து பின்பு உளவியல் மருத்துவர்களின் ஆலேசனைப்படி சிகிச்சை அளிக்கப்பட்டதாம்.

இப்படி போண்டியான கடவுள்களின் மத்தியில்தான் திருப்பதி வெங்கி போன்ற பணக்கார கடவுள்களும் இருக்கின்றனர். கடவுள்கள் மத்தியிலும் ஏழை, பணக்காரன் என்ற பேதம் வருவதற்கு நாமல்ல, பக்தர்களே காரணம். செலுத்தப்படும் பக்தி மூலதனத்திற்கு இலாப ரிடர்ன்ஸ் எங்கு அதிகமோ அங்கு செல்வது பக்தர்கள் வழக்கம். அதனால் இது பக்தியா இல்லை பங்குச் சந்தையா என்ற கேள்வி எழலாம். ஆனால் பங்குச் சந்தையின் துல்லியமான இலாப நட்டங்கள் இங்கு ஆன்மீகம் எனும் மேக மூட்டத்தினால் மூடப்பட்டு எப்போதும் ஒரு மயக்க நிலையிலேயே இருக்கின்றது.

அந்த வகையில் திருப்பதிக்கு சென்று மொட்டை போட்டால் ஏதோ நல்லது நடக்கும் என்று நம்பி பலர் போடுகிறார்கள். ஆனால் அவர்கள் தலையில் மட்டுமல்ல, வாழ்க்கையிலும் மொட்டையடிக்கப்பட்டார்களா என்ற தகவலெல்லாம் தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி அறிய முடியாது. திருப்பதி சென்று வெங்கட்டை சந்தித்தால் நல்லது நடக்கும், கெட்டது நடக்காது என்ற உத்தரவாதமெல்லாம் தரப்படாது. ஆனாலும் கூட்டம் குறையவில்லை, காணிக்கையும் நிற்கவில்லை.

திருப்பதி கோவிலுக்கு இருக்கும் அசையாச் சொத்தின் இன்றைய மதிப்பு ஒரு லட்சம் கோடியாம். பக்தர்கள் தரும் பணம், நகை தவிர நிலங்களும் கூட இந்தக் காணிக்கை பட்டியலில் உண்டு. 2009-ம் ஆண்டில் அந்த நிலங்கள் எவ்வளவு என்று ஒரு ஆண்டு கணக்குப் போட்டு இறுதியில் 4,143 ஏக்கர் உள்ளதாக கண்டுபிடித்தார்களாம். இந்த நிலங்கள் இந்தியா முழுவதும் உள்ளதோடு, நேபாள் போன்று வேறு நாடுகளிலும் இருக்கின்றனவாம். அந்த நிலங்களின் இன்றைய மதிப்புதான் ஒரு லட்சம் கோடி ரூபாய்.

லார்டு வெங்கடேஸ்வரா இப்படி ரியல் எஸ்டேட் தொழிலில் சக்கை போடுவதைப் பார்த்து நிலங்களை பெறுவதற்கென்றே ஒரு அறக்கட்டளையை ஆரம்பிக்கும் முடிவில் தேவஸ்தானம் இருக்கிறதாம். அதற்கென்று ஒரு நல்ல பெயர் தேடிக் கொண்டிருக்கிறார்களாம். “லார்டு லபக்தாஸ் ரியல் எஸ்டேட் அறக்கட்டளை” என்று வைக்கலாமே?

நிலங்களின் மதிப்பே ஒரு இலட்சம் கோடி என்றால், இன்னும் பணம், நகை, எல்லாம் கூட்டிப்பார்த்தால் எவ்வளவு வரும்? நிச்சயம் அம்பானி, டாடா, பிர்லா வரிசையில் வெங்கட்டும் நிற்கிறார் என்பது மட்டும் நிச்சயம்.

வெங்கட்டுக்கு வந்த சொத்தில் கருப்பு எவ்வளவு, ஹவாலா எவ்வளவு என்று கணக்குப் போட்டுப் பார்த்தால் அது ஸ்விட்சர்லாந்தோடு போட்டி போடுவது உறுதி. பொதுத்துறை வங்கிகளிடம் கடன் வாங்கி நாமம் போட்ட மல்லையா கூட வெங்கட்டுக்கு தங்க கிரீடம் வழங்கியிருக்கிறார். இப்படி எல்லா கிரிமினல் முதலாளிகளும் அள்ளித் தந்திருக்கிறார்கள். ஆனாலும் வெங்கி இடத்துக்கு சிபிஐயோ இதர பிரிவுகளோ ரெய்டுக்கு போகாது. கொன்றால் பாவல் தின்றால் போச்சு போல திருடுன பாவம் உண்டியல்ல போட்டால் புண்ணியம் என்று ஒரு புதுமொழி சொல்லவேண்டியதுதான் பாக்கி.

கூட்டிக்கழித்துப் பார்த்தால் வெங்கிக்கு சாதாரண மக்கள் கொடுத்திருக்கும் காணிக்கை தலை முடிகளைத் தவிர வேறு அதிகமில்லை. ஆனால் கிரிமினல் முதலாளிகளும், வியாபாரிகளும் அள்ளி கொடுத்திருக்கும் சொத்துதான் அதிகமிருக்கும். ஆக அவை அனைத்தும் மக்களிடம் பிடுங்கி தரப்பட்டவை. அதை மீட்க வேண்டும்.

நிலமற்ற கூலி விவசாயிகளுக்கும், வீடுகளற்ற ஏழைகளுக்கும் அந்த 4,143 ஏக்கர் திருப்பி அளிக்கப்பட வேண்டும். “உழுபவனுக்கே நிலம் சொந்தம்” எனும் முழக்கத்தை நடைமுறைப்படுத்தும் புரட்சி வரும் போது அதில் திருப்பதி வெங்கட்டின் நிலங்களுக்கு விதிவிலக்கு இல்லை என்பதை பக்தர்கள் ஏற்றுத்தான் ஆக வேண்டும்.

  1. என்னது எனது ஏழுமலையான் எதிர் புரட்சியில் நிற்கிறாரா? இல்லை இல்லை. அவர் அவ்வாறு நிறுத்தப்பட்டிருக்கிறார். சோஷலிசம் வரும்போது மக்களுக்கு கொடுக்கத்தான் அவர் முதலாளிகளிடமிருந்து இப்போது கறந்துகொண்டிருக்கிறார்

  2. உழுபவனுக்கே நிலம் சொந்தம்” எனும் முழக்கத்தை நடைமுறைப்படுத்தும் புரட்சி வரும் போது அதில் திருப்பதி வெங்கட்டின் நிலங்களுக்கு விதிவிலக்கு இல்லை என்பதை பக்தர்கள் ஏற்றுத்தான் ஆக வேண்டும்.உழுபவனுக்கே நிலம் சொந்தம்” எனும் முழக்கத்தை நடைமுறைப்படுத்தும் புரட்சி வரும் போது அதில் திருப்பதி வெங்கட்டின் நிலங்களுக்கு மட்டும் விதிவிலக்கு இல்லை ஆனால் மிஸ்ஸனரிகளின் நிலங்களுக்கும் விதிவிலக்கு உண்டு. என்ன வினாவாரே ? சரிதானே?

  3. //கூட்டிக்கழித்துப் பார்த்தால் வெங்கிக்கு சாதாரண மக்கள் கொடுத்திருக்கும் காணிக்கை தலை முடிகளைத் தவிர வேறு அதிகமில்லை. ஆனால் கிரிமினல் முதலாளிகளும், வியாபாரிகளும் அள்ளி கொடுத்திருக்கும் சொத்துதான் அதிகமிருக்கும். ஆக அவை அனைத்தும் மக்களிடம் பிடுங்கி தரப்பட்டவை. அதை மீட்க வேண்டும்.//

    சரியான வாதம்….

  4. இனி தண்ணிருக்கு கூட ஏழுமலையான் வரி என புதிதாக போடப்போவதாக தேவஸ்தானம் முடிவு செய்து உள்ளதாக நேற்றைய தினமலரில் செய்தி வந்து உள்ளது.

    ஒரு லிட்டருக்கு ஒரு ரூபாய், குளிர்பானத்துக்கும் அது போல, கடைகள் நடத்த ரூ 1000 முதல் 5000 என சொல்கிறது அந்த செய்தி.

    இந்த வரியையும், மேற்கண்ட ஒரு லட்சம் கோடி சொத்தையும் சேர்த்தால் விரைவில் அம்பானியை என்ன பில்கேட்சை கூட முந்திவிடுவார் போல வெங்கி முதலாளி.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க