முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்உங்களைப் பற்றிய விவரங்கள் விற்பனைக்கு கிடைக்கும் !

உங்களைப் பற்றிய விவரங்கள் விற்பனைக்கு கிடைக்கும் !

-

உங்களைப் பற்றிய விபரங்கள், விரைவில் விற்பனைக்கு  – உஷா ராமநாதன்

கவல்களை பதிவு செயவதற்கும், தொகுப்பதற்கும், இணைப்பதற்கும், தேவைப்படும் போது எடுப்பதற்கும், அகழ்வதற்கும், பகிர்வதற்கும், ஒருவரை அடையாளம் குறிப்பதற்கும், இன்னும் வேறு வழிகளில் தகவல்களிலிருந்து மதிப்பை உருவாக்குவதற்கான சாத்தியங்களை நவீன தொழில் நுட்பம் உருவாக்கியிருக்கிறது.

இந்திய மக்கள் அனைவரையும் பட்டியலிடும் முயற்சியின் ஆரம்ப கட்டங்களில் நிதி ஆதாரங்களை வழங்குவதையும், தனது அதிகாரத்தை பயன்படுத்தி மக்களை தரவு தளத்தில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளையும் அரசு செய்கிறது. ஆனால், அது ஒரு திடமான செயல்படு நிலையை அடைந்த பின்னர் தகவல்களை தனியார் லாபத்துக்காக ஒப்படைக்கப் போவதன் அறிகுறிகள் வெளியாகியிருக்கின்றன.

தனியாரை அனுமதித்தல்

adhaar-1ஜனவரி 28, 2009 தேதியிட்ட நிர்வாக ஆணை ஒன்றின் மூலம் இந்திய தனித்துவ அடையாள எண் ஆணையம் அமைக்கப்பட்டது. அதற்குத் தேவையான “நடைமுறை வசதிகளையும், திட்டமிடுதலையும், நிதி ஆதாரங்களையும் வழங்கி, ஆரம்பத்தில் செயல்படுவதற்கான அலுவலகமும் நிதி ஆதரவும் வழங்கும்” பொறுப்பு மத்திய திட்ட கமிஷனிடம் தரப்பட்டது. அடையாள ஆணையம் தனது “பங்களிப்பு மற்றும் பொறுப்புகளின்” ஒரு பகுதியாக, “தகவல் தொகுப்புகளை உருவாக்கும் துறைகளுக்கு தேவையான வழிகாட்டுதல்கள் வழங்குதல், திரட்டப்பட்டு கணினி மயமாக்கப்படும் தகவல்களை தகுதரப்படுத்துதல், தனிப்பட்ட அடையாள எண்/ஆதார் தகவல்களை பிற தகவல் தொகுப்புகளுடன் இணைத்து ஒத்திசைவு செய்தல்” ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும். “தேசிய மக்கள்தொகை பதிவேட்டை தனித்துவ அடையாள எண் தகவல்களுடன் இணைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை அது எடுக்க வேண்டும். அடையாள எண் தகவல் தொகுப்பின் உரிமையாளர் என்ற முறையில் இதனை செயல்படுத்த வேண்டும்.”

குடிமக்களுடனான தனது பரிமாற்றங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களை பாதுகாவலர் என்ற முறையில்தான் ஒரு அரசு வைத்திருக்க வேண்டும். அவை அரசுக்கு சொந்தமானவை அல்ல.

நந்தன் நீலகேணி தலைமையிலான தனித்துவ திட்டங்களுக்கான தொழில்நுட்ப ஆலோசனை குழுவினால் தகவல்களின் உரிமை பற்றிய கோட்பாடு வரையறுக்கப்பட்டது. அந்த குழு ஜனவரி 2011-ல் தனது அறிக்கையை வழங்கியது. பொருட்கள் மற்றும் சேவைகள் வரிக்கான வலையமைப்பு, வரி தகவல்களுக்கான வலையமைப்பு, செலவுகள் பற்றிய தகவல்களுக்கான வலையமைப்பு, தேசிய கரூவூல மேலாண்மை ஆணையம், புதிய ஓய்வீதிய திட்டம் ஆகிய 5 திட்டங்களை மட்டும் நேரடியாக குறிப்பிட்டிருந்தாலும், “இந்திய பொது நிர்வாகத்தில் அதிகரித்துக் கொண்டு வரும் தகவல் தொழில்நுட்பம் விரிவாக பயன்படுத்தப்படும் அனைத்து அமைப்புகளுக்கும் தனது கோட்பாடு பொதுவாக செல்லுபடியாக வேண்டும்” என்று நீலகேணி குழு பரிந்துரைத்தது.

நீலகேணி குழுவின் புரிதலின்படி, அரசுக்கு கொள்கை வகுத்தல் செயல்படுத்தல் ஆகிய இரண்டு முக்கிய பணிகள் உள்ளன. செயல்படுத்தல் பலவீனமாக உள்ளது, அதை சரி செய்வதற்கான முறைகளை தேடாமல் அதில் தனியார் வணிக நலன்களுக்கான வாய்ப்பை அந்தக் குழு தேடியது. அதன் விளைவாக தேசிய தகவல் சேவையகங்களை உருவாக்கும்படி பரிந்துரைத்தது.

“தேசிய தகவல் சேவையகங்கள் பொது நோக்கத்துடனான தனியார் நிறுவனங்களாக இருக்கும். அவை லாபம் ஈட்டுபவையாக இருந்தாலும், அதிக பட்ச லாபம் தேடுபவையாக இருக்காது.” அவற்றின் மீது அரசிற்கு “நீண்டகால கட்டுப்பாடு” இருக்கும். அதாவது, அரசு தனது நோக்கங்களை அடைவதிலும், விளைவுகளிலும் மட்டும் கவனம் செலுத்துவதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். தகவல் சேவையகங்களை சுதந்திரமாக செயல்பட விட வேண்டும். அவற்றில் குறைந்தது 51 சதவீதம் பங்குகள் தனியார் வசம் இருக்க வேண்டும். அரசாங்கத்திடம் குறைந்தது 26 சதவீத பங்குகள் இருக்க வேண்டும். சேவையகம் திடமான நிலையை அடைந்த பிறகு அரசு அதன் பணம் கொடுக்கும் வாடிக்கையாளராக மாறி விடும். பணம் கொடுக்கும் வாடிக்கையாளராக “அரசாங்கம் தனது வணிகத்தை இன்னொரு தகவல் சேவையகத்துடன் நடத்திக் கொள்ளலாம்”; ஆனால், “பெருமளவிலான ஆரம்ப முதலீடு, பரந்த அளவில் செயல்படுவதன் ஆதாயங்கள், சூழலிலிருந்து கிடைக்கும் வலையமைப்பு ஆதாயங்கள் (இதன் பொருள் என்ன என்று மேலும் விளக்கப்படவில்லை) இவற்றின் காரணமாக தகவல் சேவையகங்கள் அடிப்படையில் இயற்கை ஏகபோகங்களாக உருவாக்கப்படும்”. அதிகார வர்க்கத்தின் ஒத்துழைப்பை உறுதி செய்வதற்கு, “அரசுப் பணியில் இருக்கும் அதிகாரிகள்” சேவையகங்களில் அமர்த்தப்படுவார்கள். சம்பளத்தில் 30 சதவீதம் அவர்களுக்கு கூடுதல் படியாக வழங்கப்படும்.

அரசு ஒரு வாடிக்கையாளராக

“செயல்பாடு ஆரம்பித்த பிறகு அரசின் பங்களிப்பு ஒரு வாடிக்கையாளராக உரு மாறும்,” என்று நீலகேணி குழு பெருமிதத்துடன் குறிப்பிடுகிறது.

aadhar-2மொத்தத்தில், நீலகேணி குழுவின் அறிக்கையிலிருந்து தெரிய வருவது இதுதான்: தேசிய தகவல் சேவையகங்களை உருவாக்குவதன் மூலம் அரசிடம் சேரும் தகவல்களும் தகவல் தொகுப்புகளும் தனியார்மயமாக்கப்படும். தகவல் சேவையகங்கள் தகவல்களின் உரிமையாளராக இருக்கும். அவை இயற்கையான ஏகபோகங்களாக விளங்கும். அவை தகவல்களையும் தகவல் தொகுப்பையும் லாபம் ஈட்ட பயன்படுததும், ஆனால் அதிகபட்ச லாபம் ஈட்ட பயன்படுத்த மாட்டா. (லாபம் ஈட்டுதல், அதிக பட்ச லாபம் ஈட்டுதல் ஆகியவற்றின் வரையறைகள் இதுவரை தெளிவாக இல்லை).

தகவல் சேவையகங்கள் திடமான செயல்பாட்டு நிலையை அடைவது வரை நிதி உதவி அளித்து அரசு அவற்றை ஆதரிக்கும். தகவல்களை திரட்டவும் தகவல் தொகுப்பை உருவாக்கவும் தேவையான நடவடிக்கைகளை அரசு தன் அதிகாரத்தை பயன்படுத்தி எடுக்கும். சேவையகங்களில் அரசு அதிகாரிகள் பணிக்கு அமர்த்தப்பட்டு சம்பளத்துக்கு மேல் 30 சதவீதம் கூடுதல் படியாக பெறுவார்கள். அறிக்கை வெளிப்படையாக குறிப்பிடா விட்டாலும், அதன் மூலம் அவர்களது விசுவாசமும், சேவையகத்தின் நலன்கள் மீதான பற்றுதலும் உறுதி செய்யப்படும். குடிமக்களின் தகவல்களை பாதுகாவலராக அரசு வைத்திருக்கும் கோட்பாடு கைவிடப்பட்டடு, அரசை வாடிக்கையாளராக கொண்ட ஒரு தனியார் அமைப்புக்கு குடிமக்களைப் பற்றிய தகவல்களின் உரிமை வழங்கப்படும்.

தனியார் நிறுவனங்கள் நமது தரவுகளை சொந்தமாக்கிக் கொள்வது பற்றிய அந்த கோட்பாடு மாநில அரசுகளுடனோ, தகவல்கள் திரட்டப்படும் மக்களுடனோ விவாதிக்கப்படவில்லை.

விளக்கம் இல்லாத கோட்பாடுகள்

நீலகேணி குழு அறிக்கையை எதிர்காலம் இல்லாத இன்னொரு அறிக்கை என்று நாம் ஒதுக்கி தள்ளியிருக்கலாம். ஆனால், மார்ச் 2012-ல் அப்போது நிதி அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி சமர்ப்பித்த நிதிநிலை அறிக்கையில், “பொருட்கள், சேவைகள் வரி வலையமைப்பு ஒரு தேசிய தகவல் சேவையகமாக” உருவாக்கப்படும் என்று அறிவித்தார். தகவல் சேவையகம் என்றால் என்ன என்பது நாடாளுமன்றத்தில் விளக்கப்படவில்லை, யாரும் அதைப் பற்றி கேள்வி எழுப்பியதாகவும் தெரியவில்லை.

தகவல் சேவையகங்களுக்கான அடிப்படையை இந்திய தனித்துவ அடையாளஎண் ஆணையம் வழங்கியது என்பதற்கு பல கவலை தரும் ஆதாரங்கள் உள்ளன. தகவல் சேவையகங்கள் பற்றிய அறிக்கையில் அடையாள ஆணையமும் அது எப்படி தகவல் சேவையகங்களுக்கு முன் மாதிரியாக செயல்படுகிறது என்பதும் பரவலாக குறிப்பிடப்படுகின்றன. செப்டம்பர் 2009-ல் அடையாள ஆணையம் உருவாக்கிய உயிரிஅளவீட்டு தகுதர குழு தனது அறிக்கையை டிசம்பரில் வழங்கியது. அடையாள ஆணையம், “குடிமக்களின் அடையாள விபரங்களை முதலில் திரட்டுவதற்கும்; அதைத் தொடர்ந்து அடையாளங்களை சரிபார்ப்பதற்கான் சேவையை அரசுக்கும் தனியார் நிறுவனங்களுக்கும் வழங்குவதற்கும் ஒரு தளத்தை உருவாக்கும்” என்று அது அறிவித்தது. ஏப்ரல் 2010-ல் வெளியிடப்பட்ட “அடையாள ஆணையத்தின் நீண்டகால திட்ட மேலோட்டத்தில்” ஆணையம் நிலையான செயல்பாட்டை எட்டியதும் ஆண்டுக்கு ரூ 288.15 கோடி வருமானத்தை ஈட்டும் என்று மதிப்பிடப்பட்டிருந்தது. புதிய தொலைபேசி இணைப்புகள், வருமான வரி கணக்கு அட்டைகள், சமையல் வாயு இணைப்புகள், கடவுச் சீட்டுகள், ஆயுள் காப்பீட்டு ஆவணங்கள், விமான பயண பதிவுகள் போன்றவற்றிற்கு முகவரி சரிபார்த்தலுக்கும் உயிரி அடையாள விபரங்களை சரிபார்த்தலுக்கும் வசூலிக்கும் கட்டணம் மூலம் அந்த வருமானம் ஈட்டப்படும். அப்படி வருமானம் வரும் காலம் வரை, அதற்கு அரசின் நிதி உதவி அளிக்கப்பட வேண்டும். அந்த நிலையை அடைந்த பிறகு, அது ஒரு தனியார் லாபம் ஈட்டும் அமைப்பாகவும், அரசு அதன் வாடிக்கையாளர்களில் ஒருவராகவும் மாறும்.

தகவல் விலைக்கு

திரு நீலகேணி தகவல் தொகுப்பை “வெளிப்படையான கட்டமைப்பு” அன்று அழைக்கிறார். அதாவது, வணிகம் வளர வளர அதிலிருந்து புதிய பயன்பாடுகளை உருவாக்கிக் கொள்ளலாம். அது பயன்படுத்தப்படுவதற்கு எந்த ஒரு வரைமுறையும் எல்லைகளும் இல்லை. ஆதார் எண்ணை சகலமும் தழுவிய, எங்கெங்கும் பயன்படுத்தப்பட வேண்டிய தனித்துவ எண்ணாக அவர் மீண்டும் மீண்டும் விளக்கியிருக்கிறார். விருப்பத்தின் அடிப்படையிலானது என்று சொல்லப்பட்டாலும் எல்லோருக்கும் எல்லா சேவைகளும் நடவடிக்கைகளும் தனிப்பட்ட அடையாள எண்ணை சார்ந்தே இருப்பதாக உருவாக்கும் நோக்கம் அரசுக்கு உள்ளது. அதன் மூலம் தகவல் நிறுவனத்திற்கு தொடர்ச்சியான வருமானம் வருவது உறுதி செய்யப்படும். அடையாள எண் சேர்ப்பு படிவத்தில், “தகவல் பகிர்வுக்கான ஒப்புதல்” என்ற ஒரு கட்டம் உள்ளது. அடையாள ஆணையம் வாழ்நிலை தகவல்களையும் உயிர்அளவீட்டு தகவல்களையும் விலைக்கு விற்பதை அது அனுமதிக்கிறது. இது தொடர்பான சட்டம் ஒன்றை உருவாக்குவதில் மிகக் குறைவான ஆர்வமே இருப்பது ஏன் என்பதை இது விளக்குகிறது. இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு ஏறத்தாழ இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நாடாளுமன்றத்தில் ஒரு மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது. டிசம்பர் 2011-ல் நாடாளுமன்ற நிலைக்குழு அந்த மசோதாவையும் திட்டத்தையும் நிராகரித்த பிறகு சட்டம் குப்பைத் தொட்டிக்குள் போய் விட்டது.

தேசிய தனித்துவ அடையாள ஆணையம், நிறுவனங்கள் சட்டத்தின் படி நடத்தப்படும் ஒரு வணிக நிறுவனம். அடையாள ஆவணம் அல்லது எண் இல்லாத ஒரு குடிமகனை தண்டிக்காமல் அவருக்கு வாய்ப்பு அளிப்பதான அரசின் பாதுகாவலர் பங்களிப்பை அங்கீகரிக்கும் சட்டத்தால் நடத்தப்படப் போவதில்லை.

இந்திய தனித்துவ அடையாள எண் ஆணையத்தை உருவாக்குவதற்கான 2009-ம் ஆண்டு அரசாணையில் அந்த ஆணையம் “தேசிய மக்கள்தொகை பதிவேட்டையும் தனித்துவ அடையாள எண்ணையும் இணைப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. குடிமக்கள் சட்டம் மற்றும் குடிமக்கள் விதிகள் 2003-ன் கீழ் தேசிய மக்கள்தொகை பதிவேட்டில் பதிவு செய்து கொள்வது கட்டாயமானதாகும். உயிரிஅளவீடுகளை திரட்டுவது தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் பொறுப்பாக இல்லா விட்டாலும் நடைமுறையில் மக்கள் தொகை கணக்கீட்டின் போது போது அவையும் சேகரிக்கப்பட்டன. தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்காக வாங்கப்பட்ட தகவல்கள் அடையாள ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டு அதன் சொத்தாக மாறுவது குறித்து அந்த தகவல்களுக்கு சொந்தக்காரர்களான மக்களுக்கு தெரிவிக்கப்படக் கூட செய்யவில்லை.

(உஷா ராமநாதன் ஒரு சுதந்திரமான சட்ட ஆய்வாளர். இந்திய அடையாள அட்டை ஆணையத்தின் கொள்கைகளையும் நடவடிக்கைகளையும் 2009 முதலாகவே கண்காணித்து வருபவர்.)

இந்து நாளிதழில் வெளியான கட்டுரையின் மொழிபெயர்ப்பு.
தமிழாக்கம்: அப்துல்
படங்கள் :
நன்றி இந்து நாளிதழ்

  1. //இந்திய மக்கள் அனைவரையும் பட்டியலிடும் முயற்சியின் ஆரம்ப கட்டங்களில் நிதி ஆதாரங்களை வழங்குவதையும், தனது அதிகாரத்தை பயன்படுத்தி மக்களை தரவு தளத்தில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளையும் அரசு செய்கிறது. ஆனால், அது ஒரு திடமான செயல்படு நிலையை அடைந்த பின்னர் தகவல்களை தனியார் லாபத்துக்காக ஒப்படைக்கப் போவதன் அறிகுறிகள் வெளியாகியிருக்கின்றன.//

    இந்த சூழ்ச்சி தெரியாததால் மக்கள் விவரங்களை கொடுத்து வருகின்றனர். இது இருந்தால் தான் ரேஷன் முதல் அரசின் எந்த உதவியும் கிடைக்கும் என எனக்கு தெரிந்த ஒருவர் வெளியூரில் இருந்து சிரமப்பட்டு சொந்த ஊர் போய் கொடுத்து வந்தார்.

    ஆனால் மேட்டுக்குடி வர்க்க அரசு ஊழியர் ஒருவர் தனது அடையாளங்களை கொடுத்து விட்டு இதன் மூலம் தீவிரவாதியை அரசு பிடிக்க உதவும், என்னை இரவில் ஒரு போலீசுகாரர் நிறுத்தி கேட்டால் உடனே ஆதார் கார்டை காண்பித்து விட்டு வீட்டுக்கு வந்து விடுவேன் என்று பெருமையாக பேசியதோடு, அதனை மற்றவர்களிடம் பிரச்சாரமும் செய்வதை பார்க்க முடிந்தது.

  2. முக்கியமான கட்டுரை. நல்ல தமிழில் மொழிபெயர்த்திருந்தாலும் படிப்பதற்கு ஏற்ற வகையில் இல்லை. அதிக வாசகர்களைச் சென்றடைவது கடினம்.
    மூலதனம் தன் எதிரிகளை ஒழித்துக் கட்ட தயாரித்து வரும் ஆயுதங்களில் ஒன்றை பற்றி விவரிக்கும் கட்டுரை. எனவே இக்கட்டுரையை சரி செய்து மீண்டும் வெளியிடவும்.
    மொழிபெயர்ப்பிற்கு நன்றி!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க