privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஐரோப்பாகிரீஸ் ஆசிரியர்கள் போராட்டம் !

கிரீஸ் ஆசிரியர்கள் போராட்டம் !

-

லகமயமாக்கத்தின் பலிகடாவாக கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் கிரீஸ் நாட்டு மக்கள் வீதிகளில் இறங்கி போராட, அரசு அவர்களை அடக்கி ஒடுக்க முனைகிறது. இரு வாரங்களுக்கு முன் கிரீஸ் நாட்டில் உள்ள ஆசிரியர்கள் சங்கம் வேலை நிறுத்தப் போராட்டம் ஒன்றை அறிவித்திருந்தது. சம்பள உயர்வில்லை, ஓய்வூதியம் வெட்டப்பட்டது, தினமும் 2 மணி நேரம் அதிகமாக வேலை செய்ய வேண்டிய கட்டாயம், சுமார் 10 ஆயிரம் ஒப்பந்த ஆசிரியர்கள் ஒப்பந்தம் நீட்டிக்கப்படாமல் வேலை இழக்க நிர்ப்பந்திப்பது, சுமார் 4 ஆயிரம் ஆசிரியர்களை காரணமின்றி பணி மாற்றம் செய்ய திட்டமிடுவது என அவ்ர்களின் புகார் பட்டியல் நீளமானது.

கிரீஸ் ஆசிரியர் போராட்டம்
கடந்த மார்ச் 2-ம் தேதி கிரீஸ் நாட்டு ஆசிரியர்களும் மாணவர்களும் அரசின் சிக்கன நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக கல்விக்கான ஒதுக்கீடு வெட்டப்பட்டதை எதிர்த்து தலைநகர் ஏதென்சில் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்.

ஆனால் கிரீஸ் அரசோ ஆசிரியர்கள் வேலை நிறுத்தம் அறிவித்திருப்பது சட்டப்படி குற்றம் என்றும் அவர்களை கைது செய்து சிறையில் அடைக்கப் போவதாகவும் எச்சரித்திருக்கிறது. கிரீஸின் குடிமை இடமாற்ற சட்டத்தின் கீழ், அரசு ஊழியர்கள் இடமாற்றம் செய்யப்படுவதோ, நீக்கப்படுவதோ சரியானது தான் என்கிறது.

கிரீஸ் நாட்டின் குடிமை இடமாற்றச் சட்டம் என்பது போர்க் காலங்களில், இயற்கை பேரழிவு காலங்களில் மக்களை காப்பாற்ற அவர்களை இடமாற்றம் செய்வதையும், மக்கள் நலப் பணிகளில் அரசு ஊழிர்களை அதிக நேரம் ஈடுபடுத்துவதையும் அனுமதிக்கிறது. இப்போது கிரீஸில் எந்த வித போரும் நடக்கவில்லை, இயற்கை பேரழிவும் எதுவும் இல்லை. ஆனால், அரசு குடிமை இடமாற்ற சட்டத்தை மக்கள் மீது திணிக்கிறது. அதன் அடிப்படையில் ஆசிரியர்கள் போராட்டத்திற்கு தடைபோடுகிறது. போராட வீதியில் இறங்கும் பிற தரப்பு மக்களுக்கும் இதே நிலைமை தான்.

ஐரோப்பிய யூனியனின் ஒரு பகுதியும், வரலாற்றுப் புகழ் கொண்டதுமான கிரீஸ் நாடு 2008-ம் ஆண்டு முதலே கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. ஐரோப்பிய யூனியனில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடியை சரி செய்ய எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்று தெரியாமல் என்று கைபிசைந்து புலம்பி வருகின்றனர் முதலாளித்துவ பொருளாதார அறிஞர்கள்.

மக்கள் போராடக் கூடாது, தொழிலாளர்கள் கோபம் கொள்ளக் கூடாது என்று அவர்களுக்கு சில நலத் திட்டங்களை செயல்படுத்தி வந்த முதலாளித்துவ அரசுகள் உலகளாவிய பொருளாதார நெருக்கடிக்கு பிறகு பன்னாட்டு நிதி நிறுவனங்கள் மூழ்கி விடாமல் நிதி அளித்து ஆதரித்தன; மக்களுக்கு கொடுக்கப்பட்டு வந்த நலத் திட்டங்களை நிறுத்தின.

கிரீஸ் அரசிடமும் கையிருப்பு பணம் முழுவதும் தீர்ந்துவிட்டது. அரசு ஊழியர்களுக்கும், மக்கள் நலத் திட்டங்களுக்கும் கொடுக்க பணம் இல்லை. அரசோ நிதிச் சுமையை தீர்க்க ஐரோப்பிய யூனியனின் ஒற்றை நாணயமான யூரோவை விட்டுவிடலாமா அல்லது ஜெர்மனி கடன் தந்து காக்குமா அல்லது உலக வங்கி ஏதாவது பணம் தருமா அல்லது பன்னாட்டு நிதியம் உதவுமா என கையேந்தி நிற்கிறது.

பொதுவாக மக்களுக்கு பண நெருக்கடி வந்தால் கந்து வட்டிக்காரனுக்கு கொண்டாட்டமாக இருக்கும், அவன் இஷ்டத்துக்கு டீலக்ஸ் வட்டி, மீட்டர் வட்டி, ராக்கெட் வட்டி என்று வட்டியை நிர்ணயித்து மக்களிடம் கொள்ளையடிப்பான். சொத்தையும், பொருட்களையும் அடமானமாக வாங்கி விழுங்கி விடுவான். உலகின் மிகப் பெரிய டிப்டாப் கந்துவட்டிகாரர்கள் உலக வங்கியும், பன்னாட்டு நிதியமும்.

2010-ம் ஆண்டு 240 பில்லியன் யூரோ மீட்பு திட்டத்துக்கான ஒப்பந்தத்தை போட்டுக் கொண்ட முதலாளிகளால் அவர்களின் நலனுக்காக நடத்தப்படும் உலக வங்கியும் பன்னாட்டு நிதியமும், கிரீஸ் நிலையை எப்படி லாபமாக்கலாம் என யோசித்து கடன் கொடுக்க சில நிபந்தனைகளை கட்டளைகளாக பிறப்பித்திருக்கின்றன.

கிரீஸ் அரசு பொதுத்துறை நிறுவனக்களை தனியார் மையமாக்க வேண்டும். 15 ஆயிரம் அரசு ஊழியர்களை வேலையை விட்டு நீக்க வேண்டும், பென்ஷ்ன், கல்வி சலுகைகள், இலவசங்கள் என்று அனைத்தையும் நிறுத்த வேண்டும். பட்ஜெட்டில் மக்கள் நலத் திட்டங்களுக்கு வெட்டு கொடுக்க வேண்டும். இந்த கட்டளைகளை நிறைவேற்றும் வேகத்தை பொறுத்து கடன் அளிக்கப்படும். சாரமாகச் சொன்னால் முதலாளிகளின் சூதாட்டப் பொருளாதார நெருக்கடிகளை மக்களை ஏற்கவேண்டும்.

கிரீஸ் அரசு கடன் பெற தன்னால் இயன்ற அனைத்தையும் செய்துக்கொண்டிருக்கிறது. அந்த நடவடிக்கைகளின் விளைவாக வேலையில்லா திண்டாட்டம் 27 சதவீதத்தை தொட்டுவிட்டது. மக்கள் உணவும் அத்தியாவசிய மருந்துகளும் கூட கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். அதன் ஒரு பகுதியாக 4,000 ஆசிரியர்களை நாட்டின் கடைக்கோடி பகுதிகளுக்கு இடமாற்றம் செய்யவும், ஒவ்வொரு வாரமும் வேலை நேரத்தை 2 மணி நேரம் நீடிக்கவும், சுமார் 10,000 பகுதி நேர ஆசிரியர்களின் ஒப்பந்தங்களை புதுப்பிக்காமல் வேலை நீக்கம் செய்யவும் அரசு திட்டமிட்டுள்ளது. 15,000 பொதுத்துறை ஊழியர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட உள்ளனர். இவற்றை எதிர்த்து தான் ஆசிரியர்கள் யூனியன் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்திருந்தது.

தினமும் போராட்டங்கள், அரசுக்கு எதிரான பேரணிகள், வேலை நிறுத்தம் என நிலைமை அரசின் கட்டுப்பாட்டில் இல்லை. கடன ஒப்பந்தத்தின் கீழ் அடுத்த தவணையான 7.5 பில்லியன் யூரோ இப்போது வர வேண்டியிருக்கிறது. கடன் கொடுப்பவர்களின் மனம் கோணாமல் இருக்க அரசு போராட்டங்களை ஒடுக்குகிறது. ஆசிரியர்களின் வேலை நிறுத்தம் மாணவர்களின் படிப்பை பாதிக்கும் என கல்வி அமைச்சர் கான்ஸ்டான்டின் ஆர்வந்திபோலோஸ் கவலைப்படுகிறார். மாணவர்கள் படிப்பு மேல் அவ்வளவு அக்கறை இருந்தால, கல்விக்கு ஒதுக்கிய நிதியை ஏன் வெட்ட வேண்டும், ஆசிரியர்களை ஏன் வேலை நீக்கம் செய்ய வேண்டும்?

1991-ல் கம்யூனிஸம் வீழ்ந்து விட்டது, முதலாளித்துவ பாதைதான் உலகிற்கு ஒரே தீர்வு என்று பிதற்றித் திரிந்தவர்கள், இப்பொழுது இரண்டு பத்து ஆண்டுகள் கூட நிற்க முடியாமல் முதலாளித்துவம் தள்ளாடி வீழ்ந்து கொண்டிருப்பதற்கு, புது வியாக்கியானம் பேசுகிறார்கள். இது முதலாளித்துவமே இல்லை என்கிறார்கள். சரி எது முதலாளித்துவம் என்று கேட்டால் அது வேறு, அது தூத்துக்குடி பக்கமோ, திருநெல்வேலி பக்கமோ இருக்கிறது என்று பூசி மொழுகுகிறார்கள்.

வீதியில் நின்று போராடும் கிரீஸ் மக்களுக்கும், பாதிக்கப்பட்டிருக்கும் ஆசிரியர்களுக்கும் நாம் ஒன்றை சுட்டிக் காட்ட வேண்டும், ஆசிரியர்களின் சம்பள வெட்டிற்கும், வேலை நீக்கத்திற்கும் காரணமாக இது போர்க்கால நடவடிக்கை, என்று கிரீஸ் அரசு கூறியுள்ளது. நாமும் அதைத் தான் கூறுகிறோம். கிரீஸ் நாட்டில் போர்ச் சூழல் தான் நிலவுகிறது, முதலாளித்துவ வர்க்கம் உழைக்கும் மக்கள் மீதான தன் போரை கடுமையாக்கியிருக்கிறது. ஒன்றுபட்டு திட்டம், தீட்டி, அரசு அதிகாரத்தை கைப்பற்றுவதுதான் கிரீஸ் நாட்டு உழைக்கும் மக்களின் விடுதலைக்கான ஒரே வழி.

– ஆதவன்

மேலும் படிக்க
Austerity measure – teachers strike

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க