privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்ஊழல்ஐபிஎல்லை உருவாக்கிய லலித் மோடியின் திருவிளையாடல்கள் !

ஐபிஎல்லை உருவாக்கிய லலித் மோடியின் திருவிளையாடல்கள் !

-

ஐபிஎல் : முதலாளிகளின் மங்காத்தா – 1

21-ம் நூற்றாண்டில் சாதனை இந்தியர்களின் “படைப்பு” ஐபிஎல். தமக்கென ஒரு முத்திரையை (பிராண்ட்) உருவாக்கி, அதை வெற்றிகரமாக சந்தைப்படுத்தி, உலகெங்கிலுமிருந்து கிரிக்கெட் ஆட்டக்காரர்களை ஏலம் எடுத்து, கோடிக்கணக்கான ரசிகர்களை கட்டிப் போட்ட ஐபிஎல்லின் பொருளாதார வெற்றி ‘புதிய இந்தியா’வின் எழுச்சியை குறிக்கிறது. அந்த எழுச்சியின் ‘சிற்பி’ லலித் மோடி.

கடந்த ஞாயிற்றுக் கிழமை ஐபிஎல் 2013 முடிவுக்கு வந்ததும் ஐபிஎல்லை ஆரம்பித்து உருக் கொடுத்த சிற்பி லலித் மோடி, “போட்டி முடிந்து விட்டதாக சொல்கிறார்கள். மும்பை இந்தியன் ஜெயித்து விட்டதாம். கடவுளுக்கு நன்றி. அண்ணிக்கும் (மும்பை இந்தியன்ஸ் முதலாளி நீத்தா அம்பானி) அணிக்கும் வாழ்த்துக்கள். அரக்கன் ஒரு வழியாக மண்ணை கவ்வியதற்காக கடவுளுக்கு நன்றி. கடவுள் இருக்கார்” என்று டுவீட்டினார்.

குருநாத் சொகுசு படகுஅரக்கன் என்பது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியையும் அதன் சொந்தக்காரரான இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தையும், நிறுவனத்தின் உரிமையாளரும் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவருமான சீனிவாசனையும் குறிக்கிறது. சீனிவாசனின் மருமகன் குருநாதன் மெய்யப்பன் மும்பை காவல் துறையால் கைது செய்யப்பட்டு கம்பி எண்ணிக் கொண்டிருப்பதற்கும் சேர்த்துதான் லலித் மோடி கடவுளுக்கு நன்றி சொல்கிறார். லலித் மோடி இந்தியாவில் கம்பி எண்ணுவதிலிருந்து தப்பித்து லண்டனில் ஸ்லோன் வீதியிலுள்ள தனது மாளிகையில் தலை மறைவாகியிருக்கிறார்.

குருநாத் மெய்யப்பன் ரூ 5 கோடி மதிப்பிலான ‘ரிவேரா என்க்ளோஸ்ட் ஃப்ளைபிரிட்ஜ்’ என்ற சொகுசு படகை வாங்கியிருக்கிறார். அதற்கு ரூ 3 கோடி சுங்க வரி கட்டியிருக்கிறார். ஆஸ்திரேலியாவில் உள்ள ரிவேராவின் கோல்ட் கோஸ்ட் தொழிற்சாலையில் செய்யப்பட்டு, இறக்குமதி செய்யப்பட்டிருக்கிறது அந்தப் படகு. கோல்ட் கோஸ்ட்டிலிருந்து ஹாங்காங்குக்கு அனுப்பப்பட்டு 4 மாதங்களுக்குப் பிறகு சென்னை வந்து சேர்ந்திருக்கிறது. அதன் முதலாளி (குருநாத் மெய்யப்பன்) ஒரு வாரம் படகில் தங்கியிருந்து அதன் வசதிகளை உள்வாங்கிக் கொண்டார் என்று ரிவேராவின் செய்தி அறிக்கை தெரிவிக்கிறது.

லலித் மோடி, குருநாத் மெய்யப்பன் இருவரையும் பிரிப்பது 3 ஆண்டு இடைவெளி மட்டுமே. ஐபிஎல் போட்டித் தொடர்கள் ஆரம்பிப்பதற்கு முன்பு வரை உருப்படியாக எதுவும் சம்பாதித்திராத லலித் மோடி ஐபிஎல் ஆரம்பித்த 3 ஆண்டுகளுக்குள் ஒரு தனியார் ஜெட் விமானம், ஒரு சொகுசுக் கப்பல், மெர்சிடஸ் எஸ் மற்றும் பிஎம்டபிள்யூ கார்கள் அணிவகுப்பை சொந்தமாக்கியிருந்தார்.

2010-ம் ஆண்டு ஐபிஎல் மூன்றாவது பருவம் முடிந்ததும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் ஷஷாங்க் மனோகர் கிரிக்கெட் வாரியம், ஐபிஎல், அல்லது வாரியத்தின் செயற்குழு தொடர்பான அனைத்து நடவடிக்கைகளிலிருந்தும் லலித் மோடியை ஒதுக்கி வைக்கும் அறிவிப்பை வெளியிட்டார். “ஐபிஎல் தலைவராகவும் கிரிக்கெட் வாரிய துணைத் தலைவராகவும் செயல்பட்ட மோடியின் மோசடிகளைப் பற்றிய தகவல்கள் பல நாட்களாகவே வெளி வந்து கொண்டிருந்த போதும், ஐபிஎல் போட்டிகள் எந்த விதத்திலும் பாதிக்கப்படக் கூடாது என்ற நோக்கத்தில் இறுதிப் போட்டி முடிவது வரை காத்திருந்ததாக” அவர் குறிப்பிட்டார். அதாவது கச்சேரியின் பாதியில் அபஸ்வரம் கூடாதாம்.

லலித் மோடி2009-ம் ஆண்டில் உள்துறை அமைச்சர் ப சிதம்பரத்திடம் கொஞ்சம் தெனாவெட்டாக நடந்து கொண்ட லலித் மோடிக்கு ஒரு பாடம் கற்பிக்க இந்திய வருமான வரித் துறையின் விசாரணை நடத்தப்பட்டது. அறிக்கை தயாராகி 6 மாதங்கள் வரை அதன் மீது நடவடிக்கை எடுப்பதற்கான அரசியல் ஒப்புதல் கிடைக்காமல் தூங்கிக் கொண்டிருந்தது. ஐபிஎல் கொச்சி அணியை சந்தைப்படுத்திய காங்கிரஸ் அமைச்சர் சசி தாரூரின் பெண் தோழி சுனந்தா புஷ்கருக்கு கொச்சி அணியின் உரிமையாளராக சொல்லப்பட்ட ராண்டவோ ஸ்போர்ட்ஸ் வேர்ல்ட் நிறுவனத்தில் பங்குகள் இருந்ததை லலித் மோடி அம்பலப்படுத்தியதைத் தொடர்ந்து அவரை பழி வாங்க விசாரணை அறிக்கையை கசிய விட்டது காங்கிரசு அரசு.

வருமான வரித் துறை அறிக்கை பிபிஓ நிறுவனங்கள், பன்னாட்டு விளையாட்டு நிர்வாக நிறுவனங்கள், தொலைக்காட்சி நிறுவனங்கள், பாலிவுட் நடிகர்கள், முன்னணி இந்திய முதலாளிகள் என்று அனைத்தும் தழுவிய குற்றவாளிகள் பட்டியல் ஒன்றை முன் வைக்கிறது.

லலித் மோடியின் மின்னஞ்சல் கணக்கு, இங்கிலாந்தில் வாங்கப்பட்ட செல்பேசி எண்ணில் பதிவான ரகசிய தொலைபேசி உரையாடல்கள், மௌரிஷியசிலிருந்து அயர்லாந்து முதல் அமெரிக்கா வரை பல நாடுகளில் பதிவு செய்யப்பட்ட நிதி நிர்வாக அறிக்கைகள், மோடி அடிக்கடி மாற்றிக் கொண்டிருந்த பல இந்திய செல்பேசி எண்கள் ஆகியவற்றை வருமான வரித் துறை ஆய்வு செய்திருக்கிறது.

  • டெல்லியைச் சேர்ந்த சமீர் தக்ரால் என்ற பேஜ்-3 பெரிய மனிதர் மூலமாக மோடி பந்தயம் கட்டி சூதாடுதலை செய்து வந்திருக்கிறார். வேறு எந்த வருமானமும் இல்லாத சமீர் தக்ரால் ஆடம்பர வாழ்க்கை வாழ்பவர். எல்லா ஐபிஎல் போட்டிகளிலும் அவர் விஐபி அனுமதியுடன் கலந்து கொண்டார்.

லலித் மோடி ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கிங்ஸ் XI பஞ்சாப் ஆகிய அணிகளில் மறைமுகமாக முதலீடு செய்திருந்தார்.

  • ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளர் – எமர்ஜிங் மீடியா. அதற்கு சொந்தக்காரர்கள் மும்பை கல்வி அறக்கட்டளையைச் சேர்ந்த மனோஜ் பதாலேவும் முன்னாள் ஐடிசி ஊழியர் ரஞ்சித் தாக்கரேவும். வருமான வரித் துறை அறிக்கையின்படி 25% உரிமை நைஜீரியாவில் தொழில் செய்யும் லலித் மோடியின் உறவினர் சுரேஷ் செல்லாராமிடம் இருக்கிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிதான் ஐபிஎல் முதல் பருவத்தில் கோப்பையை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

    ipl
    இந்தியன் புவர் லீக் – இந்தியன் பிரீமியர் லீக்
  • கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கூட்டு உரிமையாளர் ஜே மேத்தா மோடியின் பினாமி என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது. ஜே மேத்தா இந்தி நடிகை ஜூஹி சாவ்லாவின் கணவர். அணியின் இன்னொரு முதலாளி இந்திய நடிகர் ஷாரூக் கான்.
  • டெல்லியைச் சேர்ந்த தகவல் தொடர்பு நிறுவனம் நெட்லிங்க் புளூவின் முதலாளி ஆகாஷ் அரோரா பெயரில் லலித் மோடி கிங்ஸ் XI பஞ்சாப் அணியில் முதலீடு செய்திருக்கிறார். அந்த அணியில் மோகித் பர்மன், நெஸ் வாடியா, பிரீத்தி ஜிந்தா, கரன் பால் ஆகியோருக்கு பங்குகள் இருப்பதாக வெளியில் சொல்லப்பட்டது. மோகித்தின் தம்பி கௌரவ் பர்மனும் பஞ்சாப் அணியில் முதலீடு செய்திருந்தார். கௌரவ் பர்மன் லலித் மோடியின் மகளை திருமணம் செய்திருக்கிறார்.
  • இவற்றைத் தவிர இங்கிலாந்தைச் சேர்ந்த பெட்ஃபேர் சூதாட்ட நிறுவனம் இந்தியாவில் நுழைவதற்கு லலித் மோடி உதவி செய்வதாகவும், அதற்கு கைமாறாக அவரது பினாமி கௌரவ் பர்மனுக்கு பங்குகள் கொடுக்கப்பட வேண்டும் என்றும் மின்னஞ்சல்கள் பரிமாறப்பட்டிருக்கின்றன.
  • ஐஎம்ஜி என்ற நிறுவனம் ஐபிஎல் போட்டிகளை நிர்வாகிப்பதற்கான ஒப்பந்தத்தை வென்றது. இந்தியாவில் மோடி என்டெர்டெயின்மெனடால் நடத்தப்படும் ஃபேஷன் டிவியுடன் நெருங்கிய தொடர்புடையது ஐஎம்ஜி. ஐபிஎல் வருமானத்தில் 10% கட்டணமாக ஐஎம்ஜிக்கு கொடுப்பதாக ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது. முறைகேடு பற்றிய குற்றச்சாட்டுகளை தொடர்ந்து ஜூலை 2008-ல் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.
  • ஐபிஎல்லின் வெளிநாட்டு உரிமைகளை பெற்ற டபிள்யூஎஸ்ஜி என்ற நிறுவனத்துக்கு லலித் மோடியின் மோடி என்டர்டெயின்மென்ட் நெட்வொர்க் $2.5 மில்லியன் கொடுக்க வேண்டியிருந்தது. ஐபில் உரிமைகளை கொடுத்து தனது தனிப்பட்ட கடன் தொகையை தள்ளுபடி செய்து கொண்டார் மோடி.
  • கிங்ஸ் XI பஞ்சாப் அணியின் முதலாளி ஆகாஷ் அரோரா என்ற லலித் மோடியின் பினாமிக்கும் பல கான்டிராக்டுகள் வழங்கப்பட்டன.

லலித் மோடி மீதான குற்றச்சாட்டுகள் வெளியான பிறகு எதிர் தரப்பினரான இந்தியா சிமென்ட்சின் சீனிவாசன் கை ஓங்கியது. அப்போது கிரிக்கெட் வாரியத்தின் செயலாளராக இருந்த இந்தியா சிமென்ட்சின் சீனிவாசன் லலித் மோடியின் மீது ஒழுங்கு நடவடிக்கை நோட்டீஸ் அனுப்பினார். லலித் மோடி மீது சென்னை காவல் துறை மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டது. எல்லா குற்றங்களுக்கும் பலியாடாக லலித் மோடி இந்திய கிரிக்கெட்டிலிருந்து நாடு கடத்தப்பட்டார். சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப அவர் தன்னைத் தானே இந்தியாவிலிருந்தே நாடு கடத்திக் கொண்டார். இந்திய கிரிக்கெட் புனிதமடைந்து விட்டதாக ரசிகர்கள் பெருமூச்சு விட்டார்கள்.

மூன்று ஆண்டுகளுக்கு பிறகு 2013 ஐபிஎல் இறுதிப் போட்டி நடைபெறும் போது சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன் சூதாடியதாக குற்றம் சாட்டப்பட்டு மும்பை காவல் துறையின் பிடியில் இருக்கிறார்.

ஐபிஎல் சீசன் IV, V, VI என்று முதலாளிகளின் மங்காத்தா தொடர்கிறது.

(தொடரும்)
____________________
– அப்துல்
____________________